Thursday, November 25, 2010

அப்பா...



உன் உடன் பிறந்தவர்கள் எல்லாம் 60+ வயதிலும் தெம்பாய் இருக்க..

நீ மட்டும் ஏன் 45 வயதிலேயே இந்த உலகத்தினை விட்டு போய் விட்டாய்?

சைக்கிள் மட்டுமே நீ ஓட்டி நான் பார்த்து இருக்கிறேன்..

இன்று கார் ஓட்டும் என் மகனை நீ பார்க்கவேயில்லையே?


உனக்கு உடல் நலமில்லை யாராவது வாருங்கள் என்று நம் வீட்டிற்கு வந்தார் உன் நண்பர்..

அவருடன் நானும் உன் மகனும் உடனே வந்தோம் நீ ஆசிரியராய் பணியாற்றிய பள்ளிக்கு..

நாங்கள் பள்ளியில் நுழைந்த போது உனக்கு மாலையிட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றினரே..

இப்பவும் அந்த நவம்பர் 26 சனிக்கிழமை கண்களிலே நிற்கிறது..

நீ எங்களை விட்டு போய் 22 வருடங்களா ஓடி விட்டன..


இப்பவும் நெல்லை சென்றால் நீ தினம் குளித்த குறுக்குத்துறை வட்ட பாறையினை பார்த்து வருகிறேன்..

ஆசிரியருக்கு ஒரு பிரச்சனை என்றால் அந்த பள்ளியினை ஒரு வழி செய்து விடுவாயே..

உன்னால் பிரச்சனை தீர்ந்த ஆசிரியர்கள் பிறகு எப்பவாது உன்னை நினைத்திருப்பார்களா?

உன் தங்கை, தம்பி என்று நீ வாழும் வரை அவர்கள் முன்னேற்றத்திற்காக உன்னை வருத்திக் கொண்டாய்..

இன்று நாங்கள் என்ன செய்கிறோம் என்று அவர்கள் யாரிடமும் விசாரிப்பது கூட இல்லையப்பா..

எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பது இல்லை

எனக்கு தாத்தா அவரின் 73 வயது வரை இருந்தார் என் பிள்ளைகளை கூட பார்த்துதான் மறைந்தார்..

ஆனால் என் பையன்களுக்கு தாத்தான்னு உன்னை ஃபோட்டோவில் தான் அறிமுகப்படுத்த முடிகிறது..

அம்மாவிற்காக சிறுது காலம் இருந்து இருக்கலாம் நீ..

என்ன தான் நாங்களெல்லாம் நன்றாக கவனித்தாலும் நீ இருந்தால் தானே அம்மாவிற்கு மகிழ்ச்சி..

நீ எங்காவது கூட்டத்தில் இருந்து வந்து விட மாட்டாயா என்று பெருங்கூட்டத்தில் உன்னை தேடி இருக்கிறேன்..

திடீரென்று வீட்டின் கதவினை தட்டுவது நீயாக இருக்க மாட்டீயா என்று கதவை திறக்கும் போதெல்லாம் நினைத்து இருக்கிறேன்..

தைரியம் விதைத்தாய்,பொறுப்பினை விதைத்தாய்,எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல படிப்பை தந்தாய்,உன்னை மறக்க மட்டும் சொல்லி தர மறந்தாய்..

நீ இறந்த போது வாழ்க்கையில் இனி சிரிக்கவே மாட்டோமோ என்று நினைத்தோம்..

ஆனால் உன் ஆசிர்வாதத்தால் சிரித்து வாழ்கிறோம்....

16 comments:

ஹரிஸ் Harish said...

அனுபவம்....என் அப்பாவை நினைக்க வைத்தது..நன்றி

சே.வேங்கடசுப்ரமணியன் said...

அப்பா அப்பா தான்.தகப்பனை உட்கார வைத்து சோறுபோடும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.சில இழப்புகள் ஈடு செய்ய முடியாததுதான்.

Chitra said...

நீ இறந்த போது வாழ்க்கையில் இனி சிரிக்கவே மாட்டோமோ என்று நினைத்தோம்..

ஆனால் உன் ஆசிர்வாதத்தால் சிரித்து வாழ்கிறோம்....

.....நவம்பர் 28 , என் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நாள். கண்ணில் நீர் நிரம்பியதால், இந்த பதிவை முழுவதுமாக வாசிக்க முடியவில்லை.

பாலா said...

தந்தையின் அருமை இருக்கும்போது தெரிவதில்லை. இன்றைய இளைஞர்கள் இதை உணரவேண்டும்.

நன்றி

ஆமினா said...

:(

எங்க அப்பா ஞாபகம் வந்துடுச்சு :(

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..

Anonymous said...

"அப்பா அப்பா தான்.தகப்பனை உட்கார வைத்து சோறுபோடும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.சில இழப்புகள் ஈடு செய்ய முடியாததுதான்."

ENAKKU AMMA IRUNDUM உட்கார வைத்து சோறுபோடும் பாக்கியம் ILLAI.

KARUNAKARAN

சுசி said...

//ஆனால் உன் ஆசிர்வாதத்தால் சிரித்து வாழ்கிறோம்....//

இதை உங்க அப்பா பார்த்துட்டு இருப்பார் அமுதா.

அம்பிகா said...

\\நீ இறந்த போது வாழ்க்கையில் இனி சிரிக்கவே மாட்டோமோ என்று நினைத்தோம்..

ஆனால் உன் ஆசிர்வாதத்தால் சிரித்து வாழ்கிறோம்....\\

நெகிழ்வான நினைவலைகள்.
அஞ்சலிகள்.

Praveenkumar said...

படித்து முடித்ததும் நெஞ்சை கனக்க வைத்தது. தங்களது தந்தைக்கு எமது நினைவஞ்சலியை செலுத்துகிறேன். வேறு எதுவும் சொல்ல வார்த்தைகள் இல்லை..!

ஆனந்தி.. said...

அமுதா...படிச்சுட்டு நெஞ்சு கனத்திருச்சு...:(

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ஆனந்தி, சுசி,அம்பிகா, பிரவிண்குமார்.

Unknown said...

அப்பா இந்த மனிதர் இருக்காரே தனக்குள் எல்லாம் சோகத்தையும் புதைத்துக்கொண்டு வாழு ஒரு கடவுள் .

வார்த்தை said...

:(

(இது சோம்பலினால் இட்டதல்ல‌)

Ravichandran Somu said...

நெகிழ்ச்சி... தியாகத்தின் மறு உருவம்தான் தந்தை!

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி மணிவண்ணன் சார்.

நன்றி வார்த்தை சார்...

ஆமாம் ரவிச்சந்திரன் சார்.இப்ப என்னதான் சந்தோஷமய் இருந்தாலும் அப்பா சின்ன வயதில் இறந்தது கடவுள் மீது கோபம் வருகிறது.