Showing posts with label உறவுகள்... Show all posts
Showing posts with label உறவுகள்... Show all posts

Monday, September 01, 2014

வீட்டிலே இந்தியா பாகிஸ்தான்..

என் அம்மாவின் அம்மா (எனக்குஅவ்வா) அவரின் 15 ஆவது வயதில் திருமணம் முடித்து என் தாத்தாவின் வீட்டில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் தனது 59 வயது வரை உழைத்து கொண்டே இருந்தார்.அவரை ஏனோ என் தாத்தாவின் தம்பி,தங்கை,அக்கா,அம்மா,அப்பா என யாருக்கும் பிடிக்காது.எப்பவும் வேலை செய்து கொண்டிருந்தாலும் ஏதாவது குறை சொல்லி கொண்டே இருப்பார்களாம். அதிலும் தாத்தாவின் தம்பி என் அவ்வா வரும் போதும் போகும் போதும் தொண்டையை செருமி செருமி எச்சில் துப்புற மாதிரி பாவ்லா செய்வாராம். எதையும் கண்டு கொள்ளாமல் என் அவ்வா வேலை செய்வது மட்டும் நிறுத்தாமல் கடமையாய் செய்து கொண்டிருப்பராம். என் தாத்தாவின் தம்பி அவரின் அக்கா மகளை கட்டி கொண்டார்.என் அவ்வாவின் தம்பி என் தாத்தாவின் தங்கையை மணமுடித்தார். அதன் பின் அவரும் என் அவ்வாவிற்கு எதிரி ஆகிவிட்டார்.

தாத்தாவின் அப்பா சொத்து எதுவும் வாங்க சென்றால் இவர்கள் கூட்டமாக தடுத்து விடுவார்களாம். பணம் கொத்து கொத்தாக இரும்பு பெட்டியில் எண்ணி எண்ணி வைத்து விடுவார்களாம். அதை இந்த கூட்டம் அவ்வப்போது திருடி கொண்டிருக்கும். என் தாத்தா தான் 10ஆவதுடன் நிறுத்தி விட்டதால் தன் தம்பி படிக்க வேண்டும் என்று மிக ஆசை பட்டு 10ஆவது ஃபெயில் ஆன தன் தம்பியினை டூடோரியல் சேர்த்து அதன் பின் தன் முயற்சியால் பி.டி மாஸ்டருக்கும் படிக்க வைத்து(என் தாத்தா ஃபுட்பால் ப்ளேயர்) தன் செல்வாக்கால் லோக்கல் பள்ளியில் வேலையும் வாங்கி வைத்து வீட்டோடு வைத்து கொண்டார். தனது 15ஆவது வயதில் இருந்து தன் தந்தையின் ஹோட்டலில் உழைக்க ஆரம்பித்தார். ஒரு பெரிய வீட்டை வாங்கிய என் தாத்தா அதை தன் அப்பாவின் பெயரில் வாங்கினார். ஒரு ஹோட்டல் தன் சொந்த பெயரில் வாங்கினார். தாத்தாவின் அப்பாவின்  மரணத்திற்கு பிறகு இருந்த வீட்டின் மாடியில் தாத்தாவின் தம்பி குடும்பம் தனி குடித்தனம் சென்று விட்டனர். ஒரு நாள் என் தாத்தா யாரிடமும் சொல்லாமல் தன் பெயரில் இருந்த ஹோட்டலை தன் தம்பியின் பெயருக்கு மாற்றி கொடுத்து விட்டார். பாவம் வாத்யார் தொழிலில் தன் தம்பி கஷ்டப்படுவதாய் நினைத்து அவர் பஞ்சம் பாடவும் இப்படி ஒரு காரியத்தினை செய்து விட்டார். அது சொந்த இடமாகும் அதன் பிறகு ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து அதில் தான் சாகும் வரை என் தாத்தா ஹோட்டல் நடத்தி வந்தார்.

தாத்தாவின் தம்பியால் என் தாத்தாவும் அவ்வாவும் மிகவும் கஷ்டப்பட்டனர்.ஆனாலும் பாசத்தால் என் தாத்தா அவரின் தம்பியை எதுவும் சொன்னதில்லை. ஆனால் காலப்போக்கில் தன் தம்பியுடன்  பேச்சை நிறுத்தி கொண்டார்.தான் சாகும் வரை தன் தம்பியுடன் பேசினதில்லை.  ஆனால், நேருக்கு நேர் சண்டை எதுவும் போட்டதில்லை.

ஒரே வீட்டில் மாடியில் அவர்களும்,கீழே நாங்களும் 1960லிருந்து 2000 வரை 40 வருடங்கள் பேசாமல் குடியிருந்தோம். அவர்களுக்கு கீழே ஒரு ரூமும் அந்த ரூமிலிருந்து மாடிக்கு படி போகும்,கீழே கிச்சனும் உண்டு,எங்கள் வீட்டு ஹாலில் ஒரு பாதியை நடைபாதையாக்கி கிச்சனுக்கு போய் வருவார்கள். அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் ஒரு நாள் கூட பேசி கொண்டதில்லை. எங்கள் வீட்டு விஷேஷத்திற்கு அவர்களை அழைக்க மாட்டோம். அவர்களும் அப்படியே.அக்னிநட்சத்திரம் கார்த்திக்,பிரபு போல அவ்வப்போது  இரு வீட்டாரும் முறைத்து கொள்வார்கள்.என் தாத்தா பாட்டி இருவரும் இறந்து விட்டார்கள்.தன் சுய சம்பாத்யத்தில் என் தாத்தா அவரின் அப்பா பெயரில் வாங்கிய வீட்டை 2006-ல் விற்று  அவரின் தம்பி,தங்கைகளுக்கும் பங்கு கொடுத்தாச்சு.

தாத்தாவின் தம்பி குடும்பத்துடன் அதே ஊரில் இருக்கிறார். என் அவ்வா இறக்கும் வரை அவர்கள் அவ்வாவிற்கு செய்த கெடுதல்களை கண்ணீருடன் என்னிடமும் என் தங்கையிடமும் சொல்லி இருக்கிறார்கள். இப்பவும் என் அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதனால் இன்றும் கூட அந்த குடும்பத்தை எங்காவது பொது இடத்தில் பார்த்தால் எனக்கு அப்படி ஒரு கோவம் வரும். அப்படியே ஒதுங்கி விடுவேன். அவர்களுடன் நான் சாகும் வரை பேசாமல் இருப்பதே என் அவ்வாவிற்கு நான் செய்யும் நன்றியாக நினைத்து இருக்கிறேன். என் அவ்வா செய்த தப்பெல்லாம் என் தாத்தாவை திருமணம் செய்தது மட்டுமே.

Friday, April 11, 2014

அழிக்க நினைத்தவன் அசத்துகிறான் -3

அசத்துகிறான் -1
அசத்துகிறான் -2

டாக்டர் அங்கிட்டு இங்கிட்டு போகும் போது என்னப் பிள்ளை வலி வந்துச்சா இல்லையா..எங்க ட்ரிப் ஏத்தி ஏத்தி கைதான் வலிக்குதுன்னு சொல்வேன்.10 ஆம் தேதி இரவு எங்கூட்டு ஆளுங்க + டாக்டர்கள் சதி திட்டம் தீட்டி 11 ஆம் தேதி காலையில 4 மணிக்கு சிசேரியன் செய்தாங்க.என்ன சார் வெளியில வரவே இஷ்டம் இல்லையான்னு சொல்லிக்கிட்டே ஒரு தடிப்பயலை வெளியில் எடுத்தாங்க பாருங்க நான் அழுக ஆரம்பிச்சுட்டேன். ரூமில் வந்து என்னை போடவும் என் பையனை என் பக்கத்திலேயே தான் போடணும் நான் அவனை பார்த்துட்டே இருப்பேன்னு தூங்கவேயில்லை.கொட்ட கொட்ட முழிச்சுட்டே இருந்தேன்.பையனுக்கு ஃபிட்ஸ் வருதா வருதான்னு செக்கிங்.மயக்கமா இருந்துச்சு ஆனா முழிச்சே இருந்தேன்.ஹெவி டோஸ் தூக்கத்துக்கு மருந்து கொடுத்திருக்கு இப்படி கொட்ட கொட்ட முழிச்சுட்டு இருக்காளேன்னு கண்ணை மூடி தூங்கு இல்லைன்னா உனக்கு பிராந்தி தான் கொடுக்கணும் என்று சொல்லிட்டு டாக்டர் சிரிச்சுட்டே போயிட்டாங்க.

                                            
மாமாவே குழந்தை நல மருத்துவர் தான். அவர் பையனை செக் செய்துட்டு நார்மலா இருக்கான்னு சொல்லிட்டு போனார்.ராத்திரிதான் தூங்கினேன்.7ஆவது நாள் தையல் பிரிக்கணும் என்று டாக்டர் சொல்லிட்டு காலை 11 மணிக்கு வருவோம்னு சொன்னாங்க.தையல் பிரிச்சா வீட்டிற்கு ஓடிடலாம்னு இருக்கும் போது கரெக்டா காலை 7 மணிக்கு பையனுக்கு ஃபிட்ஸ் வந்திடுச்சு.போச்சா இப்ப நான் அழுகவேயில்லை. என்ன என்ன மாத்திரை எவ்ளோ டோஸ் கொடுக்கணும்,விட்டமின் டி-3,கால்ஷியம் இவைகள் தான் தேவை என்று எனக்கு தான் தெரியுமே.
ஹாஸ்பிட்டலுக்கு வந்த என் கணவரை உடனே ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் அன்றிரவு எந்த ட்ரையினில் டிக்கெட் கிடைக்குதோ அதற்கு சென்னைக்கு டிக்கெட் வாங்கி வர சொல்லி அவர் முத்துநகரில் எமர்ஜன்சி கோட்டாவில் வாங்கி வந்தார். இன்னைக்கே போகணுமா உன்னால் முடியுமா முடியுமா என்று பாவம் கேட்டு கொண்டே இருந்தார். எவ்வளவு சீக்கிரம் போறோமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியுமே.

மறுநாள் காலையில் 10 மணிக்கெல்லாம் எக்மூர் சில்ண்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டலில் அட்மிஷன் போட்டு வந்த டாக்டரிடம் என்ன என்ன ப்ளட் செக்கப் செய்ய வேண்டும் என்று நானே முந்திரிக் கொட்டையாய் சொல்லி பெரியவனின் கேஸ் ஹிஸ்டரி முழுவதும் ஒப்பித்து கால்ஷியம் லெவல், தைராய்டு லெவல் அடுத்த நான்கு நாட்களில் தெரிந்து கொண்டு 5 ஆவது நாளில் இன்று கட்டாயம் என்னை டிஸ்சார்ஜ் செய்து விடுங்கள் என்று நானே கேட்டு கொண்டு ஹாஸ்பிட்டலை விட்டு ஓடி வந்தேன்.பெரியவனுக்கு 23 நாட்கள் பட்ட துன்பத்தை இவனுக்காக 5 நாட்கள் மட்டும் அனுபவித்தேன். அதன் பிறகு ரொட்டீன் செக்கப் அது இது என தொடர்ந்த கவனிப்பால் இன்று இரண்டும் வளர்ந்து விட்டன.
                                           


பொறுமையாக வெளியில் வராமல் 20 நாட்கள் எக்ஸ்ட்ராவாக  வயிற்றிலேயே  இருந்த ரிஷி மிக பொறுமைசாலி.

அதிர்ந்தே பேசாது.வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிய என்னிடம் தான் மிக க்ளோஸ்.மிக பொறுமையாக பறவைகள்,விலங்குகள் என படம் எடுத்து அசத்துகிறான்.இன்று ரிஷிக்கு பிறந்த நாள்.சில மாதங்களாக கர்நாடகா காடுகளில் சுற்றி கொண்டிருக்கிறான்.இந்த துறையில் எவ்ளோ தூரம் சாதிக்க முடியும் என்று தெரியவில்லை. எனினும் சின்ன வயதில் ஒரு முயற்சி செய்யட்டுமே என்று அவன் விரும்பிய துறைக்கு செல்ல ஓக்கே சொல்லிட்டோம்.

அழிக்க நினைத்தவன் அசத்துகிறான் -2


அசத்துகிறான் - 1

முதலில் பையனா பிறந்ததால் தான் அவனுக்கு அப்படி ஆச்சு. இது பொண்ணா இருந்தா அந்த மாதிரி வரவே வராது.சயின்ஸ் படி அது சாத்தியமே இல்லை.xx,yy,xy,yx-ன்னு வரலாறு படித்த சயின்ஸ் பிடிக்கவே பிடிக்காத என்னை குழப்பினார்கள். அதுவுமில்லாமல் சமத்தா உன் பெரிய பையனை எப்படி வளர்த்து வர பாரு.அவன் தனியா இருப்பானா.நம்ம ஃபேமிலி எவ்ளோ பெரிசு பாரு.(என் கணவர் எட்டாவது குழந்தை) அவன் மட்டும் தனியாளா வளரணுமா அப்படி இப்படின்னு ப்ரையின் வாஷ் செய்து பயமுறுத்தி,போராடி என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.யாருமே என் கட்சியில் இல்லை.

                                                 
சரி நடப்பது நடக்கட்டும் என்று ஊருக்கும் ரிடர்ன் வந்துட்டேன். இங்கே வந்து 4வது மாதத்தில் ஸ்கேன் செய்தால் நீ அசையவே கூடாது..குழந்தை பொஸிஷன் சரியில்லை.நான் என் தம்பியுடன் ஸ்கேன் செண்டர் போயிருந்தேன். பெரியவுங்க யாரையும் அழைச்சுட்டு வரலையா என்று ஏகமா பயமுறுத்தினாங்க. ஆஹா அடுத்த யுத்தம் ஆரம்பமா போச்சுடான்னு வீட்டிற்கு எலக்ட்ரிக் ட்ரையின் ஏறி வந்தேன்.என்னோட அம்மா பயந்து போய் என்னை திண்டுக்கல்லிற்கே அனுப்பி விட்டார்கள்.அங்கே போய் ஸ்கேன் செய்து பார்த்தா அதே பல்லவி. சரியென்று வேலை எதும் செய்யாமல் ஜம்முன்னு டாக்டர் பார்ப்பது மட்டும் வேலைன்னு இருந்துக் கொண்டேன்.

                                     

மார்ச் 23 டேட் கொடுத்து இருந்தார்கள்.வலியே வராது ஆனாலும் ஹாஸ்பிட்டல் வந்துடுன்னு சொன்னதும் 22 தேதியே ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனேன். 23 சிசேரியன் செய்துடலாம் என்று ப்ளான். எதுக்கும் 22 ஆம் தேதி இரவு ஒரு ஸ்கேன் செய்யலாம் என்று பார்த்தால் 9 மாதமாக பொஸிஷன் சரியில்லை சரியில்லை என்று இருந்த குழந்தையின் பொஸிஷன் அன்னைக்கு திடீரென்று சரியாகி விட்டது. மறுநாள் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். வலி வரும் அப்ப வா.சிசேரியன் வேண்டாம்னு.சரின்னு வீட்டிற்கு வந்தாச்சு.வலி வந்துச்சா,வரலை,வந்துச்சா,வரலை.இது சரிபட்டு வராதுன்னு ஏப்ரல் 9 ஆம் தேதி என் அம்மா ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போயிட்டாங்க.ஏப்ரல் 14-ல் சித்திரை பிறக்குமே அவுங்க கவலை அவுங்களுக்கு. வலி வர 9,10 ஆம் தேதி ட்ரிப் ஏத்தினாங்க.      
                                        

வலி வந்துச்சா வரலியே..............


Thursday, April 10, 2014

அழிக்க நினைத்தவன் அசத்துகிறான் - 1

 பெரியவனுக்கு ஒரு வயதும் 3 மாதங்களும் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று ஒரு நாள் ஒரு டவுட்.என் அம்மா தன் கடைசி தம்பியின் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய திண்டுக்கல் ஒரு மாதம் முன்பே போய் இருந்தார்கள்.கல்யாண நெருக்கத்துக்கு போலாம் என்று நாங்க ப்ளான் செய்து இருந்தோம்.ஆனால், நான் எனக்கு அந்த டவுட் வந்தவுடனே திண்டுக்கல் போகணும் என்று சொல்லவும் என் கணவரும் என் கூடவே கிளம்பி விட்டார்.



அங்கே போனதும் காலை 9 மணிக்கெல்லாம் என் சித்தி டாக்டர் காஞ்சனாவை பார்க்க ஓடி விட்டேன். எஸ் என்னுடைய டவுட் கரெக்ட் தான். இரண்டாவது குழந்தை 50 நாட்கள் வயிற்றில். தெரிந்ததும் சந்தோஷம் வரலை. அழுகை தான் வந்தது. எனக்கு இந்த குழந்தை வேண்டவே வேண்டாம். வேண்டாம் என்றதற்கு காரணம் இது தான். எனக்கு அபார்ஷன் செய்துடுங்க என்று ஒரே அழுகை.அம்மா,கணவர் எல்லோரும் வேண்டாம் என்று சொல்ல சொல்ல  அழுகை.


 டாக்டர் சரி செய்துடலாம். இன்னும் 6 நாட்களில் வீட்டில் கல்யாணம் இருக்கும் போது நீ மட்டும் ஹாஸ்பிட்டலில் இருப்பியா.எல்லாம் என்ன எதுக்கு என்று கேப்பாங்க, கல்யாணம் முடியட்டும் செய்துடலாம் என்று சொல்லி கல்யாணத்துக்கு புது புடவை எல்லாம் எடுத்தியா?ப்ளவுஸ் எல்லாம் தைச்சாச்சா?ஊரிலிருந்து வரும் போது நகை எல்லாம் எடுத்து வந்தியா? இப்படி மிக முக்கியமான கேள்வி எல்லாம் கேட்டு,பெரியவன் இப்ப எப்படி இருக்கான் என்று பேசி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.
சரி இன்னும் 5 நாட்கள் தானே அதுக்கு அப்புறம் ஹாஸ்பிட்டல் வரலாம் என்று கல்யாண மூடில் வீட்டிற்கு போய் விட்டேன். கல்யாணமும் முடிந்தது. மறுநாள் டாணென்று ஹாஸ்பிட்டலுக்கு ஒரே ஓட்டம்.பார்த்தா என்னுடைய டாக்டர் மாமா,காஞ்சனா டாக்டர் அவர்களின் இன்னும் இரண்டு டாக்டர் ஃப்ரெண்ட்ஸ்.
ஒரு  டாக்டர் இருந்தாலே வயத்த கலக்கும். இதில் நான்கு டாக்டர்கள். இந்தோ பாரும்மா..அபார்ஷன் செய்தால் ரொம்ப ரத்தம் லாஸ் ஆகும்.நீ அண்டர் வெயிட்(44கிலோ) எனவே உன் உடம்பு தாங்காது. இல்லை நான் நல்லா சாப்பிட்டு உடம்ப பாத்துப்பேன். திண்டுக்கல்லிலே இருந்து தினம் பிரியாணி(தாத்தா ஹோட்டல் வைத்து இருந்தார்) மட்டன் அப்படி சாப்பிட்டு வெயிட் ஏத்திக்கிறேன். எனக்கு அபார்ஷன் வேண்டாம்னு சொல்லிடாதீங்கன்னு திரும்ப அழுவாச்சி.

அழுவாச்சி என்னாச்சு நாளைக்கு.....

Thursday, April 11, 2013

அம்மாவும், மூன்று லட்சமும், பின்னே நாங்களும் ----- 2

முதலில் என்ன நடந்துச்சுன்னா


சரின்னு ரிஷப்ஷனில் 20 ஆயிரம் கட்டினதும் ஐசியுவிற்கு உடனே அம்மாவை மாற்றினார்கள் அனெஸ்தட்டிஸ்டும்,சர்ஜனும் வந்து பார்த்துட்டு நாளை (மார்ச் 5) காலையிலேயே சர்ஜரி செய்து விடலாம் காலை 6.30க்கு சர்ஜரி என்று என்னிடம் சொல்லிவிட்டு போனார்கள்.ஓகே என்று என் கணவர்,தங்கையிடம் ஃபோனில் விஷயத்தை சொல்லி விட்டு ஐசியு வாசலில் காத்திருந்த போது ரிஷப்ஷனில் என் பெயரை ஏலம் விட்டு கொண்டு இருந்தார்கள்.

நான் தான் அமுதா அமுதா என்று அங்கு ஓடி போய் என்ன என்று கேட்ட போது நாளை காலை ஆபரேஷனுக்கு உடனடியாக 1.75 லட்சம் இப்போதே கட்டுங்கள் என்று சொன்னார்கள்.அவர்கள் சொன்ன போது இரவு 7.30 மணி.அந்நேரத்திற்கு அவ்வளவு பணத்திற்கு என்ன செய்றது உடனே சர்ஜனுக்கு திரும்ப கிச்சு கிச்சு தாம்பாளம்,,கீயா கீயா தாம்பாளம்.

சார் என்னது இப்ப நான் அவ்வளோ பணத்திற்கு எங்கே போவேன் காலை 10 மணிக்கு மேல் தான் பணம் கட்ட முடியும் என்று சொன்னதும் அவர் நோப்ராபளம்...நீங்க காலையிலேயே கட்டுங்கோ,,நான் ரிஷப்ஷனில் பேசி விடுகிறேன் என்று சொன்னார்.


சிறிது நேரத்தில் ரிஷப்ஷனில் திரும்ப என் பெயரை ஏலம் விடவும் என்னவென்று ஓடினால் காலை 10 மணிக்கு தான் சர்ஜரி நீங்க பணம் சீக்கிரம் கட்டி விடுங்க என்று சொன்னார்கள்.அட ராமா கையில காசு வாயில தோசை போல என்று சரியென்று கணவர், தங்கை, தம்பி ஹாஸ்பிட்டலுக்கு வந்ததும் வீட்டிற்கு இரவு 10 மணிக்கு வந்து விட்டோம்.


காலை 10 மணிக்கு பேங்கிற்கு போய் நகை அடகு வைத்து எடுத்து கொண்டு போறதுக்குள்ளே இன்னும் சர்ஜரிக்கு லேட் ஆக்குவார்கள் என்று இருக்கும் கிரடிட் கார்டு, டெபிட் கார்ட் கலெக்ட் செய்து தம்பி அவன் ஃப்ரெண்ட்களிடமும் பணம் வாங்கி கொண்டு காலை 9 மணிக்கு ரிஷப்ஷனில் பணம் கட்டிவிட்டான். பணம் கட்டும் முன்பாக எனக்கு ஃபோன் செய்து நீ மெதுவா பேங்க்கிற்கு போ நான் பணம் கட்ட போகிறேன் என்றான். சரியென்று நான் சொன்ன அடுத்த 10ஆவது நிமிடம் ஹாஸ்பிட்டலில் இருந்து எனக்கு ஃபோன் அம்மாவை தியேட்டருக்கு அழைத்து செல்கிறோம் பார்க்க வேண்டியவர்கள் வந்து பார்த்த்கோங்க என்று. என் ஃபோன் நம்பர் தான் ஹாஸ்பிட்டலில் கொடுத்து இருந்தேன். சரி 10 நிமிஷத்துல அட்டண்டர்ஸ் வருவாங்கன்னு சொல்லிட்டு என் தம்பி, தங்கைக்கு(இருவரும் ரிஷப்ஷனில் பணம் கட்டி விட்டு பில்லிற்கு காத்து இருந்தாங்க) ஃபோன் செய்தேன். உடனே மூணாவது மாடியில் இருக்கும் தியேட்டருக்கு ஓடுங்க அம்மா தியேட்டர் வாசலில் உங்களை பார்க்க காத்து இருக்காங்க என்றதும் பில் வந்து வாங்கிக்கிறோம் என்று இரண்டும் ஓடி இருக்காங்க. என்ன ஒரு பெர்பெக்‌ஷன்.. பணம் கட்டிய அடுத்த 8 நிமிடத்தில் அம்மா தியேட்டர் வாசலில்.

காலை 10 மணிக்கு ப்ளட் கொடுக்க வேண்டும் என்று நான், என் தங்கை, தம்பி, மகன் ரிஷி ப்ளட் பேங்கிற்கு போனோம். பெரிய மகனுக்கு காய்ச்சல் என்பதால் அவன் வரலை. என்னுடைய என் தங்கையுடைய ப்ளட் செக் செய்துட்டு ரிஜக்ட் செய்துட்டாங்க.(ஹீமோகுளோபின் கம்மியாம்) என் தம்பி மதுவும், ரிஷியும் ஓகே என்றார்கள். ரிஷி சின்னப்பையனா இருக்கானே என்றார்கள் இல்லை காலேஜ் ஃபைனல் இயர் சார் படிக்கிறார் என்றதும் வெயிட் பார்த்துட்டு ப்ளட் எடுக்க ரெடி செய்துட்டு எங்களை வெளியில் வெயிட் செய்ய சொன்னர்கள்.

ரிஷி வெற்றிகரமா ப்ளட் கொடுத்துட்டு ஜூஸெல்லாம் குடிச்சுட்டு காலேஜ் போறேன் என்று கிளம்பும் போது திடீரென்று என் தம்பி ப்ளட் கொடுத்து கொண்டு இருந்த ரூமிற்க்குள் 4 பேர் அவசர அவசரமாய் ஓடி போய் என் தம்பியை சுற்றி நின்று கொண்டார்கள் அனைவர் முகத்திலும் பதட்டம். என்னவென்று கேட்டதில் ப்ளட் கொடுத்து கொண்டிருந்த மது வேர்த்து லோ பிபி ஆகி மயக்கமாகி விட்டான். கொஞ்ச நேரத்தில் பயப்பட தேவையில்லை என்று சிரித்துக் கொண்டே வந்து சொன்னார்கள். சார் இரண்டு ஜூஸ் குடித்து, பிஸ்கெட் சாப்பிட்டு கொண்டே வெளியில் வந்தான். நாங்க எல்லாம் செம கிண்டல் அவனை. மதுவோ என் மகனிடம் மாப்ள உனக்கு ஒரு கையில் தானே ரத்தம் எடுத்தார்கள் எனக்கு இரண்டு கையிலும் ஒரே நேரத்துல எடுத்தார்கள் அதான் கொஞ்சம் கிர்ராகி போச்சு மாமாக்கு என்று சமாளித்தான்.

சரி சரி ஒத்துக்குறோம் நீ வீரன் தான் என்று சொல்லிட்டு மேல ரிஷப்ஷனுக்கு வந்தோம்.

காத்திருந்து காத்திருந்து மாலை 4.45 க்கு அம்மா பெயரை சொல்லி மைக்கில் ரிஷப்ஷனில் ஒருத்தர் மட்டும் ஐசியுவிற்கு வரலாம் என்று அழைக்கவும் இங்கி பிங்கி பாங்கி போட்டு நான் போனேன். எனக்கு வேற்று கிரகவாசி போல் ஒரு கோட்,ஒரு குல்லா, பிஞ்சுபோன ரப்பர் செருப்பு போட்டுட்டு உள்ளே போக சொன்னார்கள்.

போனா என் அம்மாவா மாதிரி தெரியுது ஆமாம் அம்மாவே தான் என்று பக்கத்தில் போனால் கன்னாபின்னாவென்று ட்யூப் மாயம்.இன்னும் 6 மணிநேரம் கழித்து தான் முழிப்பார்கள் இப்போ எல்லாம் மானிட்டர் செய்துட்டு இருக்கோம் எல்லாம் நார்மல் என்று கூறினார்கள். ஏதோ மிஷினில் கனெக்ட் செய்து வைத்திருந்தார்கள்.63...63... 63... நைசா அடுத்த பெட்களை பார்த்தேன்...சிலருக்கு 62, 65, 70 என்று  காண்பித்தது. சரி ஹார்ட் பீட்டாக இருக்கும் என்று நினைத்து கொண்டேன்.

சர்ஜன் கூப்பிடும் வரை காத்திருங்கள் என்றார்கள்.டாக்டர் சர்ஜரி சக்சஸ், 4 கிராஃப்ட் அம்மாக்கு செய்தாச்சு ஷி இஸ் ஆல்ரைட் என்று சந்தோஷமாய் சொல்லிட்டு போனார்.

மறுநாள் காலை 7 மணிக்கு தங்கை போய் பார்த்து வந்தாள். அம்மா முழித்து இருக்கிறார்கள் ரொம்ப டயர்டாக இருப்பதாய் சொன்னாள்.மூன்றாவது நாள் ரூமிற்கு மாற்றினார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் காயங்கள் ஆறியதும் 9 ஆம் நாள் டிஸ்சார்ஜ் செய்தார்கள்.எக்ஸ்ட்ரா  மெடிக்கல் பில் சேர்த்து மொத்தமாக 2,45,000 கட்டினோம்.

தினம் மூன்று வேளை இன்சுலின்,இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுகர் செக்கிங் என்று அம்மாவை குத்தி கொண்டு இருக்கிறேன். காலில் வெயின் எடுத்து ஹார்ட்டில் பைபாஸ் செய்து உள்ளார்கள்.வீட்டிற்கு வந்ததும் காலில் தையல் போட்ட இடத்தில் கொஞ்சம் வீக்கமும் கொஞ்சமாக நீரும் வந்து கொண்டு இருந்தது. டயபட்டாலஜிஸ்ட்டிற்கு ஃபோன் செய்து கேட்டதும் நீங்க அம்மாவை இங்கே கூப்பிட்டு வாங்க என்றார். இது சரி படாது என்று கிச்சு கிச்சு தாம்பாளம் என்று சர்ஜனை கூப்பிட்டு இப்படி அம்மாக்கு காலில் புண்ணாகிறது FUCID-ன்னு என்கிட்ட ஒரு ஆயிண்ட்மெண்ட் இருக்கு அதை அப்ளை செய்யவா என்று கேட்டதும் அவர் ஓகே குட் அந்த ஆயிண்மெண்டே போடுங்கள் பயப்பட வேண்டாம். இரண்டு நாளில் காய்ந்திடும்..இல்லைன்னா ஹாஸ்பிட்டல் வாங்களேன் என்றார். அதை அப்ளை செய்த இரண்டு நாளில் புண் சுத்தமாய் ஆறிடுச்சு.


மார்ச் 5-ல் சர்ஜரி செய்த அம்மா இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் ரெக்கவர் ஆகி பழைய AMMA-வாகி கொண்டே இருக்கிறார்கள்.  6 மணிநேரம் சர்ஜரி செய்த டாக்டர்களுக்கும் டென்ஷன் தான்.இல்லை என்று சொல்லவில்லை உடனே பணம் கட்டுங்க என்று சொல்லி படுத்தி வைத்ததில் ஹாஸ்பிட்டல் மேல் முதலில் கோபமாய் வந்தது. சந்தேகமாய் வந்தது. ஆனால், பணம் கொடுக்காமல் சிலர் படுத்தி வைப்பதாலும் சர்ஜரியில் இறந்து விட்டால் பணம் கொடுக்க பெரிய தகராறு செய்வதாயும் கேள்வி பட்ட போதும், அம்மாவின் இன்றைய நிலையினை பார்க்கும் போதும்  ஹாஸ்பிட்டல் மேல் இருந்த கோபம் காணாமல் போனது.

நிறைய சொத்து இருந்தும் நீ பாரு நான் பாரு என்று பெற்றோரை பார்த்து கொள்ள போட்டி போடும் இந்த உலகில் நான் நீ என்று நாங்கள் நால்வரும் எங்க அம்மாக்கு செய்ததில் சந்தோஷப்படுகிறோம்.


Wednesday, April 10, 2013

அம்மாவும்,மூன்று லட்சமும்,பின்னே நாங்களும்.........1

அம்மாவிற்கு செப்டம்பரில் ஒரு அட்டாக் வந்து ஆஞ்சியோ ப்ளாஸ்டி செய்து ஸ்டெண்ட் வைத்தார்கள்.இந்த மார்ச் 3-ல் திரும்ப ஒரு அட்டாக். இந்த முறை ரொம்ப வலியில்லை.  ஓடு ஓடுன்னு ரெகுலர் செக்கப் போகும் ஹாஸ்பிட்டலுக்கு போனா இசிஜி பார்த்து உடனே ஆஞ்சியோக்ராம் செய்ய சொல்லி அந்த ரிசல்ட் வந்ததும் பைபாஸ் சர்ஜரி செய்யணும் உடனே பெரிய ஹாஸ்பிட்டல் மூவ் ஆகணும் என்றதும் பைபாஸ் சர்ஜரிக்கு எவ்ளோ செலவு ஆகும் என்று கேட்க 1,60,000 ஆகும் என்று ஆஞ்சியோ செய்த டாக்டர் சொன்னார். உடனே, ஆம்புலன்சில் அம்மாவை காமாட்சி ஹாஸ்பிட்டலுக்கு ஷிஃப்ட் செய்தேன்.

சனி இரவு போய் திங்கள் மாலை அந்த ஹாஸ்பிட்டலுக்கு 36 ஆயிரம் கட்டி விட்டு காமாட்சிக்கு ஆம்புலன்சில் வந்தோம்.

இங்கே ஒரு முக்கிய தகவல்..சென்னையில் நான் பயணம் போகாதா வண்டி ஆம்புலன்ஸ் தான். அதிலும் பயணம் செய்தாச்சு!!!!

மார்ச் 4 ஆம் தேதி மாலை 5.30 க்கு காமாட்சி ஹாஸ்பிட்டலில் எமர்ஜென்சி வார்டில் அம்மாவை படுக்க வைச்சாச்சு. அங்கிருந்த டாக்டரிடம் சர்ஜனை மீட் செய்யணும் அவர் தான் இப்ப இங்க வரச் சொன்னார் என்று சொன்னதும், அவர் வருவார் நீங்க ரிஷப்ஷனில் கூப்பிடுறாங்க போய் பணம் கட்டிட்டு வாங்க என்றதும் போனேன். அங்கே உடனே 20 ஆயிரம் கட்டினால் தான் ஐசியுவில் அட்மிட் செய்ய முடியும் என்றார்கள்.சரி சர்ஜரிக்கு எவ்வளவு என்றதும் 3 பேக்கேஜ் இருக்கு 1,45,000 ன்னா ஜெனரல் வார்டு,1,75,000 ன்னா ரூம், 1,95,00 ன்னா ஏசிரூம்.9 நாட்கள் பேக்கேஜ் இதில் 30,000 வரை தான் மருந்து செலவு அடங்கும். இரண்டு நாள்கள் தான் ஐசியு வாடகை அடங்கும்...சர்ஜரிக்கு பிறகு டயாபடிஸ்,கிட்னி பிரச்சனை வந்தால் அந்த டாக்டருக்கு விசிட்டிங் சார்ஜ் தனி தனியே கொடுக்கணும் ஆக மொத்தம் 3 லட்சம் வந்திடும் என்று ரிஷப்ஷனில் இருப்பவர் சொன்னார். அப்புறம் எதற்கு பேக்கேஜ்??? உடனே சர்ஜனுக்கு ஃபோன் செய்தேன். (ரிங் டோன் -- கிச்சு கிச்சு தாம்பாளம் கீயா கீயா தாம்பாளம்) என்ன சாரே 1,60,000 ஆகும்னாங்க இப்ப இங்க டபுளா சொல்றாங்க என்றதும் இருங்கம்மா ரிஷப்ஷனுக்கு நான் பேசிட்டு உங்க லைன்னுக்கு வரேன் என்றார் சர்ஜன்.

பேசிட்டேன் 1,75 க்கு கூட 25 ஆயிரம் இல்லை 40 ஆயிரம் தான் வரும் அதற்கு மேலே வராது நான் பேச்சிட்டேன் நீங்க அம்மாவை ஐசியுவிற்கு மூவ் செய்யுங்கள் என்று சொன்னதும் ரிஷப்ஷன் ஆள் ஏம்மா உங்ககிட்ட தோராயமா 3 லட்சம் வரும் என்றேன்.ஏம்மா அந்த டாக்டர் கிட்ட என்னை போட்டு கொடுத்தீங்க நீங்க அப்போலோ போக போறதா அவர் என் கிட்ட கத்துகிறார் என்று வெடு வெடுன்னார்.நானும் பதிலுக்கு பாசமானேன்.
( நான் அப்போலோன்னு சொல்லவேயில்லையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்) .

ஓகோ அப்போலோவிலும் இந்த பணம் தான் வருமா ஓக்கேன்னு என் கஸினிற்கு (பெத்தாலஜிஸ்ட் இன் ராமசந்திரா) ஃபோன் செய்தேன்.ரிப்போர்ட்டை படித்து காண்பித்து அம்மாவின் நிலை இப்படி இருக்கு, இங்கேயோ பேரம் நடக்குதுடா என்ன செய்ய? அம்மாவை அப்படியே இன்னொரு ஆம்புலன்சில் ஏத்தி கொண்டு அப்போலோ இல்லைன்னா ராமசந்திரா வந்திடவா  என்று கேட்டேன். அவர் இல்லைக்கா நீங்க இருக்கும் ஹாஸ்பிட்டலில் அனெஸ்தடிஸ்ட் என் ஃப்ரெண்ட் தான் நான் பேசிட்டேன் சர்ஜன் நல்லா செய்றாராம் எனவே நீங்க ட்ராஃபிக்கில் இப்ப வேற ஹாஸ்பிட்டல் அலைந்தாலும் நேரம் தான் போய் கொண்டே இருக்கும் அதுவும் இல்லாமல் அங்கேயும் இந்த பணத்தை விட ஜாஸ்தி தான் ஆகும் நீங்க குழப்பிக்காம சர்ஜரிக்கு ஓக்கே சொல்லிடுங்க என்றான்.என் கணவருக்கு,தம்பிக்கு,தங்கைக்கு ஃபோனில் விஷயத்தை சொல்ல அவர்களும் குழம்ப வேண்டாம் ஓகே சொல்லிட்டு அம்மாவை ஐ.சி.யுவிற்கு மூவ் செய்திடு நாங்க எல்லோரும் வந்துட்டே இருக்கோம் என்றார்கள்.

                                                                                beating heart photo: beating heart lunapic-beating.gif
                       
                                                                                                   

Tuesday, January 22, 2013

விடிய விடிய பேசணும்

எப்ப மீட் செய்தாலும் பார்த்து பல வருஷம் ஆன மாதிரி விடிய விடிய பேசி விடிந்ததும் காலை 6 மணிக்கு நான் எழுந்து வழக்கம் போல் என் வேலையினை பார்க்க தொடங்க எழுந்திருக்கவே முடியலைக்கா இனிமேல் உங்க கூட பேசவே கூடாது என்று ஒவ்வொரு முறையும் சிரித்துட்டே சொல்லுவாள்.

ஏனெனில் காலையில் கன்னாபின்னாவென எல்லோரிடமும் திட்டு வாங்குவோம். நாங்க இருவரும் திண்டுக்கல்லில் சுத்தாத இடம் கிடையாது.ஹைனட்டிக் ஹோண்டாவிற்கு அவள் தான் எப்பவும் ட்ரைவர்.மதிய வேளைகளில் திடீரென்று வீட்டில் யாருக்கும் தெரியாமல் தியேட்டருக்கு எஸ்ஸாகி விடுவோம். அப்புறம் வந்து மண்டகப்படி தான்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு,சோழவந்தான் திருவிழா, மதுரை என்று திடீரென்று பக்தி ரசம் சொட்ட சொட்ட ஒரே கோயில் சுற்று தான். 4 வருடங்கள் தொடர்ச்சியாக திருப்பதிக்கு 10 நாட்கள் ஸ்ரீவாரி சேவாக்கு சென்று அங்கு தினம் சேவை செய்வதை இருவரும் மிக விரும்பி செய்தோம்.எதற்கு சிரிக்கிறோம் என்று தெரியாது சிரித்து கொண்டே இருப்போம்.அங்கு சேவாக்கு வந்திருந்த ஒருவர் உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்குது சுத்தி போடுங்க மேடம் என்று ஒரு நாள் சொல்லி சென்றார். எங்கள் குலதெய்வம் ஐயர்மலை எப்ப மலை ஏறினாலும் ஒரு துண்டின் ஒரு முனையினை பிடித்து கொண்டு அவள் முன்னேற நான் இன்னொரு முனையினை பிடித்து கொண்டு பின்னேறுவேன்.அப்பவும் பேசிக் கொண்டே.

 என் மாமா  இருவரில் ஒருவர் ஆணாக இருந்தால் கல்யாணம் செய்து கொடுத்து இருப்பேன் என்பார் கிண்டலாக.  குடும்பத்தில் எதாவது திருமணம் என்றால் ஒரு 10 பேரின்(கஸின்ஸ்) நகைகளை ஒன்றாக்கி நீ இதை ரிஷப்ஷனுக்கு போட்டுக்கோ, இதை திருமணத்திற்கு போட்டுக்கோ என்று ஒரு பேப்பரில் லிஸ்ட் எழுதி வைத்து கொண்டு எல்லோருக்கும் மேக்கப் செய்து விட்டு நாங்கள் இருவரும் கடைசியில் தான் பேசி கொண்டே ரெடியாவோம்.

அவளுக்கு திருமணம் ஆனது. இரண்டு குழந்தைகள். 6 வயதில் பையனும்,5 வயதில் பெண்ணும்.  நாங்க முன்பு மாதிரி சுத்த முடிவதில்லை. ஆனாலும், பார்க்கும் போதெல்லாம் விடிய விடிய பேசுவது மட்டும் இன்னும் தொடர்கிறது.

ஜனவரி 18 ஆம் தேதி இரவு கை,கால் மரத்து போன மாதிரி உணரவும் அவள் கணவருடன் டூவீலரில் ஹாஸ்பிட்டல் போயிருக்கிறாள். போய் என்ன ஏதுவென்று டாக்டர்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே ஸ்ட்ரோக் வந்து வலது பக்கம் செயல் இழந்து விட்டது.20 ஆம் தேதி திருச்சியில் அவளை ஹாஸ்பிட்டலில் பார்த்த போது முதன் முதலாக இருவரும் பேசாமல் 20 நிமிடங்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை.பொங்கி வந்த அழுகையினை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு என்ன வித்யா இந்த வருடம் திருப்பதிக்கு ஸ்ரீவாரி சேவாக்கு ஏப்ரலில் போலாமா, மேயில் போலாமா என்று கேட்கவும் சின்னதாய் ஒரு சிரிப்பு அவள் முகத்தில்.ரொம்ப வீக்கா இருக்க அதான் பேச முடியலை.சீக்கிரம் எழுந்திருக்கும் வழியினை பாரு அப்படி இப்படின்னு தனியா நான் மட்டும் அவள் பதிலையே எதிர்பார்க்காமல் பேசிட்டு வந்திருக்கேன். ஹாஸ்பிட்டலில் டிஸ்சார்ஜ் செய்ததும் கேரளாவிற்கு சிகிச்சைக்கு போகலாம் என்று அவளின் டாக்டர் தம்பி முடிவு செய்து இருக்கிறான். யாரை நொந்து கொள்வது? பரம்பரையாக ஒரு நோய் வரும் என்றாலும் கூட 35 வயதில் இப்படி எல்லாம் நடக்குமா? அந்த இரண்டு குழந்தைகளும் என்ன பாவம் செய்தனர்?என்ன செய்தால் அவள் குணமடைவாள் என்று தெரியாமல் விதியினை நொந்து கொண்டு நாங்கள் இருக்கிறோம்.

வித்யா என் மாமாவின் பெண். என் கணவருக்கு அண்ணா பெண். சிறிய வயதில் நாங்க இருவரும் திண்டுக்கலில் தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்ததால் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம். நான் அத்தை பெண்,சித்தப்பா மனைவி என்றாலும் என்னை அக்கா என்றே கூப்பிடுவாள்.

வரும் மார்ச் மாதம் அவளுக்கு மிகவும் பிடித்த தொழிலான பியூட்டி பார்லர் ஆரம்பிக்க போவதாய் மிக நம்பிக்கையாய் நியூஇயர் விஷ் செய்த போது கூறினாள்.அவளின் ரொம்ப நாள் கனவு அது.

அவளின் நியாயமான கனவு நிறைவேற வேண்டும். யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லை.


கட்டாயம் நாங்களிருவரும் விடிய விடிய பேசுவோம் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்.

Thursday, September 20, 2012

ஓ இது தான் ஹார்ட் அட்டாக்கா?

 போன வியாழக்கிழமை(13/09)வழக்கம் போல நான் காலை 6.30க்கு எழுந்து வரும் போது அம்மா விஜய் டிவி பார்த்துக் கொண்டே (அந்த டைமில் டீ கையில் இருக்கும்) நிறைய வெள்ளை பூண்டினை உரித்து கொண்டு இருந்தார்கள். சமையலுக்கு இப்பவே உரிக்கிறார்கள் போல என்று என்னம்மா இவ்ளோ பூண்டு காலங்காத்தால என்றதும் உடம்பு ரொம்ப வலிக்குதும்மா காலையில் பூண்டு சட்னியும், மதியத்திற்கு மிளகு குழம்பும் செய்யலாம் என்றார்கள்.

ஓகே என்று சொல்லிட்டு பேப்பர் படிச்சுட்டு,காஃபி குடிச்சிட்டு கிச்சனுக்கு போனேன். காயெல்லாம் கட் செய்துட்டு,மிக்சி போட்டுட்டு அம்மா குழம்பு வைக்க வாங்க என்றதும் அம்மா கிச்சனுக்கு வந்து மிளகு குழம்பு செய்தார்கள். கோஸ் தாளித்துக் கொண்டு இருக்கும் போது ரொம்ப வேர்க்கிறது கொஞ்ச நேரம் ஃபேனில் உட்கார்ந்துட்டு வரேன்மா என்று அவர்களின் ரூமிற்கு போனார்கள். போனவர்கள் இரண்டே நிமிடத்தில் வெளியில் வந்து மூர்த்தி எனக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு என்று என் கணவரிடத்தில் சொல்லவும் நான் உடனே அடுப்பை ஆஃப் செய்துட்டு ஓடி போய் அப்படியே சேரில் உட்கார வைக்க தொடுகிறேன் அப்படி வேர்த்து போய் இருந்தார்கள்.வாந்தி வர மாதிரி இருக்கு.நெஞ்சும் வலிக்குது என்று சொல்லவும் உடனே அடுத்த 20 நிமிடத்தில் ஆஸ்பத்திரிக்கு போய் விட்டோம்.

உடல் மொத்தமும் வேர்த்து போய் கையெல்லாம் சில்லென்று இருந்தார்கள். எமர்ஜென்சியில் உடனே ட்ரிப் ஏற்றி,பி.பி.இசிஜி பார்த்து கொண்டே இருக்கும் போது கார்டியாலஜிஸ்ட் வந்து உடனே ஆஞ்சியோகிராம் செய்ய அழைத்து போய்,அடைப்பு இருக்கிறது என்று ஆஞ்சியோ ப்ளாஸ்டியும் செய்து மேஜராய் அடைப்பிருந்த இடத்தில் ஸ்டெண்ட் பொறுத்தி விட்டார்கள். அரை மணிநேரத்தில் அம்மாவிற்கு மிக சுறுசுறுபாய் அனைத்தும் செய்து விட்டு டாக்டர் எங்களை அழைத்து அவர்கள் செய்த ப்ரொசீஜரை கம்ப்யூட்டரில் என்ன செய்தோம் என்று அருமையாக விளக்கினார்.

மூன்று நாட்கள் ஐ.சி.யூ வாசம்,மூன்று நாட்கள் ரூமில் இருந்து செவ்வாய் இரவு வீட்டிற்கு வந்து விட்டோம். ஹாஸ்பிட்டலில் தெரிந்து கொண்டது ஹார்ட் அட்டாக் வருவது ஒருவரது குடும்பத்து சொத்தல்ல அது யாருக்கு வேண்டுமானாலும் வரும் நமது தேசத்து சொத்து என்று.மிக சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு போனதால் காப்பாற்றி விட்டோம். அம்மாவிற்கு பி.பி கடந்த 15 வருடங்களாக உண்டு அதற்கு மருந்தும் எடுத்து கொள்கிறார்கள்.  சுறுசுறுப்பான அம்மா இப்ப படுக்க முடியாமல் தவிக்கிறார்கள். பத்ராசலம்,பண்டரிபுரம்,துவாரகா,இன்னொரு முறை காசி இவை அவர்கள் போக நினைத்த லிஸ்டில் பாக்கி இருக்கும் ஊர்கள். கட்டாயம் போய் வருவோம் என்ற நம்பிக்கையில்

Monday, October 10, 2011

பாப்பா is safe.....

பிறந்த (செப்டம்பர் 7) அன்றே சூர்யா ஹாஸ்ப்பிட்டலில் சேர்க்கப்பட்ட என் தம்பி மகள் அக்டோபர் ஒன்றில் நலமுடன் வீடு திரும்பினாள். ஐம்பது ஆயிரம் சம்பாதிக்க வேண்டும் என்றே அவசரமாக குழந்தையினை பிரீமெச்சூராக தாம்பரம் ஆஸ்பத்திரியில் சிசேரியன் செய்துள்ளார்கள்.செப்டம்பர் 10-ல் குழந்தையின் அம்மாவை டிஸ்சார்ஜ் செய்து வடபழனி சூர்யாவிற்கு அனுப்பிய தாம்பரம் லேடி டாக்டர் தன் சொந்த ஊருக்கு அன்று இரவே ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த ட்ரையினில்(நர்ஸ் கொடுத்த தகவல்) நலமுடன் போய் சேர்ந்தார். ஊரிலிருந்து திரும்பி வர 6 நாட்கள் ஆகும் அதற்குள் என் தம்பி வேறு டாக்டரிம் போய் விட்டால் என்ன செய்வது என்ற நல்லெண்ணத்தில் சீக்கிரமாக சிசேரியன் செய்துவிட்ட அந்த லேடி டாக்டருக்கு குழந்தை கிடையாதாம்.யாருக்கு சொத்து சேர்க்கிறாரோ தெரியவில்லை.  சூரியா ஆஸ்பத்திரிக்கு ஒரு லட்சம் மொய் எழுதிவிட்டு தப்பித்தோம்,பிழைத்தோம் என்று தன் அருமை மகளுடன் வீடு திரும்பினான் என் தம்பி.

தாம்பரம் ஹாஸ்பிட்டல் லட்சணம் இப்ப தான் தெரியுது.

சூரியா ஹாஸ்பிட்டல் லட்சணம். ஒரு லட்சணம் தன் குணமுள்ள இன்னொரு லட்சணத்திடம் தானே நம்மை அனுப்பும். டாக்டர் சொல்வதை அப்படியே உண்மை என்று எடுத்து கொண்டு யோசிக்க முடியாமல் இரண்டு ஹாஸ்பிட்டலுக்கும் போய் மாட்டி கொண்டு தப்பித்து வந்தார்கள்.இனிமேல் பிரசவத்திற்கும் செகண்ட் ஒப்பினியன் கட்டாயம் கேட்க வேண்டுமோ?


Friday, September 09, 2011

பாப்பா

போன மாதம் செக்கப் சென்ற போது செப்டம்பர் 10-ற்கு பிறகு நல்ல நாள் பார்த்துட்டு வாங்க c-section செய்து குழந்தையினை எடுத்து விடலாம் என்று சொல்லவும்.செப்டம்பர் பத்தே நல்ல நாள் தான் அன்றே செய்து விடலாமா என்று செப்டம்பர் 4-ல் டாக்டரிடம் சொல்ல சென்ற போது இல்லை இல்லை இரண்டு நாட்களில் செய்து விடலாம் இல்லைனா அனெஸ்தடிஸ்ட் கிடைப்பது கடினம் என்று சொல்லி இருக்கிறார் டாக்டர்.

10 வரை நல்ல நாள் இல்லையெனினும் டாக்டர் சொல்படி கேட்பது தான் நல்லது என்று 6 ஆம் தேதி ஹாஸ்பிட்டல்லில் சேர்ந்து 7 ஆம் தேதி காலையில் ஆபரேஷன் செய்து குழந்தையும் எடுத்தாச்சு. பெண் குழந்தை ஆஹா எவ்ளோ நாளாச்சு எங்கள் வீட்டில் என் தங்கைக்கு பிறகு வந்திருக்கும் பெண் குழந்தை என்று எல்லோரும் மிக சந்தோஷமாய் இருந்தோம்.மதியம் இடி போல் ஒரு செய்தி. குழந்தையினை ஆம்புலன்சில் இரண்டு நர்ஸ்கள் உதவியுடன் வடபழனி சூர்யா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு செல்கிறோம் என்ற தகவல். குழந்தை மூச்சு விட சிரமப்படுவதால் அங்கு கொண்டு செல்லும்படி பிரசவம் பார்த்த டாக்டர் என் தம்பியிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

பிறந்த குழந்தை தனியே NICU-வில் இருக்கிறது.அம்மாவோ இங்கே ஒரு ஹாஸ்பிட்டலில்.அங்கோ கண்டிஷனாய் தந்தைக்கு மட்டுமே அனுமதி.இன்ஃப்க்‌ஷன் ஆகி விடும் என்பதால் மற்ற யாரும் உள்ளே அனுமதிக்கவில்லை.நேற்று மூன்று கிலோவில் இருந்த குழந்தை இன்று 100 கிராம் குறைந்துள்ளது. எங்கேயெல்லாம் டியூப் சொருக முடியுமோ சொருகியாச்சு.

பிரிமெச்சூர் பேபிக்கு பிறந்தவுடன் மூச்சு பிரச்சனை வராமல் இருக்க டெலிவரிக்கு முன்பு தாய்க்கு போடப்படும் ஒரு வகையான ஹார்மோன் இன்ஜெக்‌ஷனை ஏன் அந்த தாய்க்கு போடவில்லை. இது குழந்தையினை அட்மிட் செய்த ஹாஸ்பிட்டலில் கேட்டார்கள்.

10 தேதிக்கு பிறகு சிசேரியன் செய்யலாம் என்ற டாக்டர் திடீரென்று இரண்டு நாளில் ஆபரேஷன் என்றால் அதற்கு தாயின் உடல்நிலை காரணம் என்றால் ஓகே.அனஸ்தெடிஸ்ட் கிடைக்கமாட்டார் என்பது ஒரு ஒத்துக் கொள்ள கூடிய காரணமா?வேறு ஆட்களே கிடைக்க மாட்டார்களா?

நார்மலா பிறந்தாலே 1000 பிரச்சனைகள் வரக்கூடிய இந்த காலத்தில் எதற்கு அவசரமாய் ஒரு மாதம் முன்பாகவே பிரிமெச்சூர் பேபியினை எடுக்கும் போது செய்ய வேண்டிய முன்னேற்பாட்டினை ஏன் செய்யவில்லை.?

குழந்தையினை சேர்த்திருக்கும் ஹாஸ்பிட்டலில் வேறு ஒருத்தரும் போக கூடாது என்றால் படிப்பறிவு இல்லாத தகப்பன் என்றால் குழந்தை நிலைமை பற்றி எப்படி புரிந்துக் கொள்வார்.படித்தே இருந்தாலும் மெடிக்கல் டெர்ம்ஸ் எப்படி எல்லோருக்கும் புரியும். இல்லையெனில் அந்த ரிப்போர்ட்டை ஒரு ஜெராக்ஸ் எடுத்தாவது கொடுக்கலாம் இல்லையா? இன்னொரு தெரிந்த டாக்டரிடம் செகண்ட் ஒப்பினியன் கேட்போம் இல்லையா?

செகண்ட் ஒப்பினியன் கேட்காமல் டெலிவரி செய்து இப்போ கஷ்டப்படுகிறோம்.

குழந்தை வெயிட் நல்லாயிருப்பதால் நம்பிக்கையுடன் கடவுள் இந்த முறையும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் எங்கள் குடும்பம் இருக்கிறது. என் மகன்கள் குழந்தைக்கு பெயர் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.ஒன்றும் ஆகாதும்மா பாப்பா வீட்டிற்கு வந்திடும் என்று எங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.என் தம்பி அந்த ஹாஸ்பிட்டலில் தனியே இரண்டு நாளாய் குழந்தையினை தினம் மூன்று முறை மட்டும் பார்த்து விட்டு ரிஷப்ஷனில் காத்து இருக்கிறான்.

என் தம்பிக்கு இரு முறை 8 மாதத்தில், 6 மாதத்தில் குழந்தை இறந்தே பிறந்தது. இது மூன்றாவது குழந்தை. எங்கே முட்டி கொள்வது,யாரை குறை சொல்வது,என்ன பாவம் செய்தோம் என்று புலம்பி கொண்டு இருக்கிறோம். சொந்தத்திலும் திருமணம் செய்யவில்லை.9 மாதமும் பெட் ரெஸ்ட்டில் இருந்தார் என் தம்பியின் மனைவி.

இன்னும் ஒரு முறை கூட நாங்கள் பார்க்காத அந்த பாப்பா எங்களை எல்லாம் பார்க்க வீட்டிற்கு முழுதாய் குணமடைந்து வந்திடும் என்ற நம்பிக்கையில்.

Tuesday, June 21, 2011

போன ஜென்மத்தில் காட்டுவாசி

இவனை என்ன செய்றதுன்னே தெரியலை.ஆறு மாதங்களாக சென்னை ட்ரக்கிங் கிளப்பில் சேர்ந்துட்டு இவன் செய்ற அலம்பல்களை பொறுத்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

வாரவாரம் ட்ரக்கிங் போறேன்னு இவன் செய்ற அலம்பல்கள். வெள்ளி காலையிலேயே போவதற்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு வேலைக்கு செல்கிறான். இல்லைன்னா வெள்ளி கிழமை மட்டும் வொர்க் ஃப்ரெம் ஹோம் என்கிறான்.காட்டில் படுத்துக் கொள்வதற்கு ஒரு ஸ்லீப்பிங் பேக்,சாப்பிடுவதற்கு ஒரு கிண்ணம்,ஒரு ஸ்பூன்,ஒரு செட் அழுக்கு ட்ரெஸ்.ரெடியாய் எந்நேரமும் தயாராக இருக்கிறது. ஆந்திராவில் நாகலாபுரம்,கர்நாடகாவில் ஷராவதி, ஊட்டி முதுமலை காட்டில் அனிமல் சென்சஸ்,கொடைக்கானல் டூ பழனி நடை,மூணாறு என்று வாரம் ஒரு இடம்.

கடந்த ஆறு மாதங்களில் இவன் போன இடங்கள் தான் மேலே சொன்னவை. எப்பவும் அதே பேச்சு. போகும் முன்னாடி எங்கே போகிறோம் என்று லொட லொட. போயிட்டு வந்த பிறகு என்ன பார்த்தோம் என்று லொட லொட. ஒவ்வொரு முறை போகும் போதும் அம்மா போகட்டுமா என்று ஒரு சம்பிரதாய கேள்வி.உன் அப்பாக்கிட்ட கேட்டுக்கோ என்பேன் வழக்கமாய். நான் நேற்றே டாடிக்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டேன் என்று போகிற போக்கில் எனக்கு ஒரு பல்பு. சும்மா நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று ஒரு மைக் டெஸ்டிங் என்று சொல்லி விட்டு என் கையில் அகப்படாமல் ஒரே ஓட்டம்.

எதாவது சொன்னால், சீக்கிரம் படித்து சீக்கிரம் வேலைக்கு போயாச்சு ஏன் இப்படி திட்டிக்கிட்டே இருக்கீங்க என்று கேள்வி கேட்கிறது.பொண்டாட்டி வந்தா விடமாட்டா நீங்க என் செல்லம்ல என்று ஒரே ஐஸ்.நகுல் இந்த வாரம் ஹிமாலயாவில் ரூப்கண்ட் போயிருக்கான்.

Friday, March 04, 2011

தூத்துக்குடி ஆயின

உறவுகள் நல்லது கெட்டதுன்னு ஒன்னு கூடும்போது அதற்கு வந்திருக்கும் சிலரை பெயர் இல்லாது நம் வீட்டு பெரியவர்கள் இப்படி மற்றவர்களிடம் சொல்வதுண்டு.எங்கள் வீட்டில் எப்படின்னா? தூத்துக்குடி ஆயின, வாங்கல் ஆயின,திருச்சி ஆயின,மதுரை ஆயின,மெட்ராஸ் ஆயின. ஆயின தெலுங்காம்!!. முறையே தூத்துக்குடிக்காரர், வாங்கல்காரர்,திருச்சிக்காரர்,மதுரைக்காரர், மெட்ராஸ்காரர்.

அவர்களுக்கு என்ன பெயர் என்றே தெரியாது. அந்த ரூமில திருச்சி ஆயின உட்கார்ந்து இருப்பார் அவரை கொஞ்சம் இங்க வர சொல்லு என்றதும் அவரிடம் சென்று எங்க தாத்தா கூப்பிடுறாங்க என்று சின்ன வயதில் சொல்லி சென்றதுண்டு.அவர் பெயர் என்ன என்று தெரிந்துக் கொள்ள முயன்றதில்லை. எப்பவும் அவர் திருச்சி ஆயின தான். திருச்சி மாமா என்று சின்னவர்களும், திருச்சி ஆயின என்று பெரியவர்களுக்கும் பழக்கம். என்னவோ அவர் ஒருவர் தான் திருச்சியில் இருப்பது மாதிரி.

அப்பொழுதெல்லாம் தெரியாத உறவுகளில் ஆண் என்றால் மாமா,பெண் என்றால் அத்தை என்று தான் சொல்றது வழக்கம். இப்ப ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

ஒரு முறை கருமாதி பத்திரிக்கை பார்த்து அதில் இருந்த ஃபோட்டோ பார்த்து தான் தூத்துக்குடிக்காரர் பெயர் ராமகிருஷ்ணன் என்றே எனக்கு தெரியும். அவர் செத்த பிறகு தான் அவரின் பெயர் தெரிந்துக் கொண்டோம்.

ஊரின் பெயரை தங்களுடன் விரும்பி இணைத்து கொண்டவர்கள் உண்டு.அரசியல்வாதிகள் தான் பெரும்பாலும் அப்படி செய்வார்கள். ஆனால், உறவுக்காரர்களால் ஒரு அடையாளத்திற்கு வைக்கப்பட்டு பிறகு அதுவே நிலைத்தும் விடுகிறது. திருச்சியில் இருந்து 4 உறவுக்காரர்கள் வந்தாலும் அது ஏனோ ஒருவருக்கு மட்டுமே திருச்சிக்காரர் என்ற பெயர் வைக்கப்படுகிறது.பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டும் தான் வைக்கப்படுகிறது.இன்னும் சிலர் அவர் வேலை செய்யும் இடத்தினை வைத்து அழைக்கப்படுவதும் உண்டு.ரயில்வேக்காரர், பேங்க்காரர்,மிலிட்டரிக்காரர் இப்படி.

உங்கள் உறவுகளில் இப்படி ஒருவர் நிச்சயம் இருப்பார் என்ற நம்பிக்கையுடன்.


Wednesday, February 16, 2011

நான் சாதித்தது(சும்மா ஒரு விளம்பரம் தான்)

விக்னேஷ் 10 ஆவது வகுப்பு 2009-ல் அவனின் ஊரில் ஒரு லூஸ் நடத்தும் ஸ்கூலில் படித்து வந்தான். 2008 டிசம்பர் மாதம் விக்னேஷுடன் சேர்த்து 20 மாணவர்களை டி.சி வாங்கி கொண்டு போகும் படி சொல்லியது பள்ளி நிர்வாகம். அனைவரும் one digit மார்க் எடுக்கும் கண்மணிகள். எனக்கு ஏனோ இந்த மாணவர்களை தான் மிகவும் பிடிக்கும்.

9 ஆவது படிக்கும் போது ஃபெயில் ஆக்கினால் அடுத்த வருட ஃபீஸ் வசூலிக்க முடியாது என்பதால் பெற்றோரிடம் என் மகனின் டிசியினை நான் விருப்பபட்டு வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த மாணவர்கள் 9 ஆவது படிக்கும் போதே கையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டார்கள். 10 ஆவது ஃபீஸினை மொத்தமாக வாங்கி கொண்டு பொது பரிட்சைக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் டிசி வாங்க சொல்லி வற்புறுத்தினார்கள். 2009 டிசம்பரில் விக்னேஷ் எனக்கு ஃபோன் செய்து என்னை ஸ்கூலிற்கு இனிமேல் வர வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கூறவும் அடித்து பதறி நான் ஸ்கூலிற்கு சென்று அந்த லூஸை சந்தித்தேன். கலெக்டரை கூட உடனே சந்திக்க முடியும் போல. அந்த லூசினை நான் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பிறகு சந்தித்தேன்.

விக்னேஷின் படிக்காத அம்மாவிடம் வாங்கி வைத்து இருந்த கடிதத்தினை என்னிடம் காண்பித்து டிசி வாங்கி கொண்டு செல்லுங்கள், அவனின் தாய் ஒத்துக் கொண்டதற்கு பிறகு நீங்கள் யார் என்று என்னை கேட்டார்கள். நான் தான் அவனுக்கு ஃபீஸ் கட்டுகிறேன் அந்த உரிமையில் கேட்கிறேன். அவனை இந்த மூன்று மாதத்தில் நான் படிக்க வைக்கிறேன்.ஸ்கூலில் வைத்து கொள்ளுங்கள் என்று கேட்டதற்கு முடியவே முடியாது என்று மறுக்கவும், தனி தேர்வர்கள் அப்ளை செய்வதற்கு 10 நாட்களே இருக்கும் நேரத்தில் என் குடும்பத்தினை விட்டு வேறு ஊரில் போய் இருந்து அந்த லூஸ்களிடம் போராட முடியாது என்ற நிலையில் வேறு வழியில்லாமல் டிசி வாங்கிக் கொண்டு அவனை 300 மார்க் வாங்க வைத்து காண்பிக்கிறேன் (என்ன என் தன்னம்பிக்கை) என்று சவால் விட்டு என் வீட்டிற்கு சென்னைக்கு கூட்டி வந்தேன். ஜனவரி 10-ல் என்னுடம் மவுனமாக வந்த அவனுக்கு அந்த வருட ஏப்ரல் 5-ல் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு.

சென்னை வந்த உடன் தமிழக அரசியல், ஜூனியர் விகடன் புத்தக அலுவலகத்திற்கு அந்த ஸ்கூல் பற்றி ஃபோனில் கூறினேன். அவர்களும் அந்த ஊர் நிருபர்கள் மூலமாய் ஒரு பக்கத்திற்கு அந்த ஸ்கூல் பற்றி அடுத்த மாதமே தங்கள் புத்தகத்தில் எழுதினார்கள்.எழுதி ஒரு வெங்காயமும் இல்லை. எதோ எனக்கு ஒரு திருப்தி.

அவனை திட்டாமல், கடிந்துக் கொள்ளாமல், ஒரேடியாய் படி படியென்று தொணத்தாமல், அவமானத்தால் பேசவே கூச்சப்பட்டு கொண்டிருந்த அவனை சிரிக்க வைத்து, நடு நடுவில் டிவி, சினிமா என பார்க்க வைத்து, கடைசி 20 நாட்கள் அவனின் ஊருக்கு கூடவே சென்று, எக்சாம் சமயம் கூடவே இருந்து, அவனை கூலாய் எக்சாம் எழுத வைத்து, அப்பாடி 248 மார்க் வாங்க வைத்தேன்.

இத்தனைக்கும் நான் பத்தாம் வகுப்பிற்கு ஆசிரியாராய் பணியாற்றியது இல்லை.எனக்கு அந்த சிலபஸ் புதிது. ஆனால் மிக எளிமையான அந்த ஸ்டெட் போர்ட் சிலபஸினை கூட பாஸ் செய்ய வைக்க முடியாமல் அந்த லூஸ்கள் எதற்கு ஸ்கூல் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.ஜெயில் வைத்து நடத்த தகுந்த நபர்கள்.அவன் ஸ்கூலில் இருந்த போது தினம் கீழே தான் உட்கார வேண்டுமாம்.பெரிய பிரம்பால் அடி அடிக்கடி வாங்கி இருக்கிறான். அவனே ஸ்கூலிற்கு வர மாட்டேன் என்று சொல்ல மாட்டானா என்னும் விதமாய் தினம் திட்டி இருக்கிறார்கள். 6 அடி உயரம் உள்ளவன் அவன். நான் பார்க்கும் போது அவமானத்தால் யாரிடமும் பேசுவதையே நிறுத்தி இருந்தான்.என்னிடம் சொல்ல வெட்க பட்டு கொண்டு அனைத்தையும் பொறுத்து உள்ளான்.நீ கட்டாயம் பாசாவே விக்கி என்று தினம் மந்திரம் ஓதி அவனை பாசாக வைத்தேன்.

ஊரில் படிக்க சென்ற கடைசி 20 நாட்கள் கூட டிசி வாங்கிய மற்ற மாணவர்களையும் அழைத்து வாடா படிக்கலாம் ஜஸ்ட் பாசாக்கலாம் என்றால் அந்த பசங்க வெட்க பட்டு கொண்டு படிக்க வரவில்லை.

என்னை மாதிரி திறமை(நிஜமா!!) உள்ள ஆசிரியர்களுக்கு இந்த அரசு ஆசிரியர் வேலை கொடுக்காமல் 20 வருடங்களாய் காக்க வைத்துள்ளது.தனியார் பள்ளிகளில் கொத்தடிமை வேலை பார்க்க பிடிக்காமல் என் திறமையினை வீணடித்து வருகிறேன்.


விக்னேஷின் அப்பா 12 வருடங்கள் முன்பு இறந்து விட்டார். அவர் என் கணவரின் தம்பி ஆவார். விக்னேஷ் இப்போது அரியர்ஸ் வைத்து இரண்டாவது வருடம் பாலிடெக்னிக் படித்து வருகிறான். ஒழுங்காய் டியூஷன் கிடைக்காமல் மேத்சில் அரியர்ஸ் வைத்துள்ளான்.அவன் அம்மாவிற்காக, கூட பிறந்த இரண்டு சகோதரிகளுக்காக எப்படியும் படிக்க வேண்டும் என்று வராத படிப்புடன் போராடிக் கொண்டு இருக்கிறான்.நிச்சயம் படிப்பான்,வேலைக்கு போவான் என்ற நம்பிக்கையுடன் நாங்களும் இருக்கிறோம். கஷ்டப்படுபவர்கள் எப்பவும் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட கடவுள் விடமாட்டார் என்ற நம்பிக்கையுடன். ஆனால் இந்த காலம் பணப்பேய்களான அந்த லூஸ்களுக்கான காலமாய் இருக்கிறது. அந்த ஸ்கூலில் படித்த காரணத்தால் சரளமாய் யாரிடமும் உரையாட முடியாமல் பயந்து போய் தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கிறான்.ஆனாலும், நம்பிக்கையுடன் இருக்கிறோம்



Tuesday, February 01, 2011

அம்மா

எப்பவும் ஏன் உன் கூடவே அம்மா இருக்காங்க உன் உடன் பிறந்தவர்களுக்கும் அவர்கள் அம்மா தானே? ஏன் அவர்கள் வீட்டிற்கு போனால் உடனே ஓரிரு நாட்களில் திரும்ப வந்து விடுகிறார்கள் என்று சமயங்களில் யாரேனும் என்னிடம் கேட்கிறார்கள்.கொஞ்சம் யோசித்ததில் அங்கெல்லாம் போனால் ஒரு விருந்தாளி போல் தான் அவர்களால் இருக்க முடிகிறது என்று புரிந்தது.

காலையில் சீக்கிரம் எழுந்து பாத்ரூம் போகும் போதே ஹீட்டர் போட்டு விட்டு வருவாங்க. பிறகு பால் காய்ச்சி அதை அப்படியே கொண்டு போய் சாமி ரூமில் வைத்து கும்பிட்டு வருவதில் ஆரம்பிக்கும் அம்மாவின் ஒரு நாள்.

குளித்து விட்டு வந்து சூடாக ஒரு காஃபி குடிச்சுட்டு அப்படியே தோட்டத்தில் துளசி மாடத்தில் பூ போட்டு, சுத்து சுத்திட்டு சாமி அறைக்குள் நுழைந்தால் ஒரு மணிநேரம் பொழுது போகும்.

வந்து காலை டிபன் சாப்பிட்டு விட்டு என் பசங்க, தன் தம்பியான என் கணவரிடம் பேசி கொண்டே தமிழ் பேப்பர் படித்து கொண்டு இருப்பார்கள்.

அப்புறம் கிச்சன் வந்து நான் நறுக்கி வைத்து இருக்கும் காய்கறிகளை செய்வார்கள் அல்லது ரசம் புளிப்பு கொஞ்சம் தூக்கலாய் வைப்பார்கள்.

காய்கறி சூப் செய்து ஒரு க்ளாஸ் குடித்து விட்டு என் பசங்களையும் குடிக்க செய்வார்கள்.

பின் காலை 11 மணிவரை ஏதேனும் புத்தகம் ஆன்மீகம், ஆலயம், பாலஜோதிடம், துக்ளக் என்று படிப்பார்கள். டாணென்று 11 மணிக்கு சன் சேனலில் சீரியல் ஆரம்பம்.

12.30 க்கு மதியம் காக்காவும், அம்மாவும் சாப்பிடுவார்கள்.சாப்பிட்டு விட்டு ஒரு மணிநேரம் படுக்கையில் படுத்துக் கொண்டே புத்தகம் வாசித்தல். பிறகு 2.30 மணிக்கு டி.வியில் திருப்பதி சேனல் பார்த்துக் கொண்டே,எதாவது எம்பிராய்டரி,தையல் வேலை, டைரியில் சாமி ஸ்தோத்திரம் எழுதுதல்.நடு நடுவே தன் சின்ன வயது நிகழ்வுகளை, தான் பட்ட கஷ்டங்களை, தன் அம்மாவின் கதையினை என்னிடம் கூறுதல். நிறைய முறை இது ரிப்பீட்டு கதையாக இருக்கும்.மதியம் வீட்டில் இருக்கும் எதாவது ஒரு பொருளை கணக்கு வைத்து வெயிலில் காய வைத்து எடுத்து வைப்பார்கள். தூள் வகைகள்,காய்ந்த பூக்கள்,தலையணை, பெட்ஷீட் உட்பட எதாவது வெயிலில் தினம் ஒன்றாய் காயும்.

மாலை 5 மணிக்கு ஒரு டீ குடித்து விட்டு கோயில். நடந்த மாதிரியும் இருக்கும்,சாமி கும்பிட்ட மாதிரியும் இருக்கும்.6 மணிக்கு வீட்டிற்குள் வருவார்கள்.திரும்ப சாமி ரூமில் கொஞ்ச நேரம்.7.30க்குள் ராத்திரி டிபன் முடித்து விடுவார்கள்.9 மணிவரை டி.வி இல்லையெனில் புத்தகம்.கீரை எதுவும் இருந்தால் அதை சுத்தம் செய்து வைத்து விடுவார்கள்.அவர்களின் காய்ந்த துணிகளை மடித்து வைப்பார்கள்.நடு நடுவில் மற்ற மகன், மகள்களுடன் ஃபோனில் பேச்சு.

டாண்ணு 9 மணிக்கு தூக்கம்.இது தான் அம்மாவின் ஒரு நாள்.

யாருக்கும் ஒரு தொந்தரவு இல்லாமல் தன் வேலையினை தானே முடித்து கொள்ளுதல்.வாரம் இரண்டு முறை பூண்டு,இஞ்சி தட்டிப்போட்டு காய்ச்சிய நல்ல எண்ணெய் குளியல், சீயக்காய் பொடியினை சோற்று கஞ்சியுடன் சேர்த்து தலைக்கு தேய்ப்பார்கள்.அரைத்த வெந்தயம், முட்டை, மருதாணி என்று எதாவது தலைக்கு வைத்து குளிப்பார்கள். உடலுக்கு தானே செய்து வைத்துள்ள வாசனை பொடி+பயத்தம் மாவு போட்டு குளியல்.

வரமிருமுறை இஞ்சி சாறு குடித்தல்.காய்கறி சூப் குடித்தல்.ஏதேனும் பழச்சாறு குடித்தல். சத்துமாவு கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி குடித்தல்.

வாரம் ஒரு முறை அடை,உளுந்து வடை,வெண்பொங்கல்,பணியாரம்,ஆப்பம், இடியாப்பம், புட்டு,அப்பம் கட்டாயம் செய்து விடுதல்.

வெள்ளிக்கிழமை, மற்ற நல்ல நாட்களில் வாசல் அடைத்து காவி கோலம் இடுதல்.சலிக்காமல் அம்மா செய்ற இந்த வேலைகளுக்கு என் வீடு தான் வசதி. அவர்களுக்கு வேண்டிய அனைத்து சாமான்களும் இங்கு தான் உள்ளன.50 வருடங்களாக அவர்கள் கும்பிடும் சாமி படங்கள் என் வீட்டில் தான் உள்ளன.

பழைய புத்தகங்கள், டைரிகள்,எம்பிராய்டரி துணிகள்,நூல்கள்,மருந்து பொடி,தேன்,காய்ச்சிய எண்ணெய்கள்(கீழாநல்லி,மருதாணி, அருகம்புல்,கடுக்காய்), வாசனை பொடிகள்,சாமி படங்கள்,தினம் பார்க்கும் காக்கா என்று அனைத்தும் இங்கு தான்.  இங்கு தான் அம்மா வசதிக்கு செய்வதை உபயோகப் படுத்த முடிகிறது. அதான் அம்மா இங்கேயே இருக்காங்க.பி.பி செக் செய்ய போகும் டாக்டர் இங்கு வீட்டு பக்கத்தில்.
இறந்து போன அப்பாவின் பெரிய ஃபோட்டோ இங்கு தான்.துளசி பறித்து பெரிய மாலை கட்டி பெருமாளின் பெரிய ஃபோட்டாக்கும், அப்பாவிற்கு ஒரு சிறிய பூ மாலையும் அவ்வப்போது பளிச்சுன்னு போடப்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக வேலைக்கு போகாத நான் அம்மாவின் துணைக்கு.

 நான் பிறந்ததில் இருந்து என் கூடவே இருக்கும் என் அம்மாவிற்கு இன்று பிறந்த நாள்.


Sunday, December 12, 2010

இதை விதி என்பதா?

இந்த மாதத்துடன் 10 வருடங்கள் ஓடி போச்சு. பிரீஷியஸ் அவர்ஸ் என்று சொல்லப்படும் அந்த 3 மணி நேரத்திலேயே என் மாமா டாக்டரிடம் போய் தனக்கு உடலில் ஏதோ வித்தியாசம் உணர்வதாய் சொன்னார். மாமா பார்க்க சென்ற அந்த டாக்டரோ செக் செய்து விட்டு ஒன்றும் இல்லை முரளி நீங்கள் வீட்டிற்கு போகலாம் என்று அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் டி.வி பார்த்து விட்டு படுக்கை அறைக்கு சென்று லுங்கி மாற்றும் போது தடாலென்று கீழே விழுந்து விட்டார் மாமா.உடனே டாக்டரிடம் தூக்கி சென்றால் பராலிஸிஸ் என்று சொல்லி விட்டார்கள். மூன்று மணி நேரத்திற்கு முன்னே சென்ற போதே சரியாக செக் செய்து இருந்தால் இப்படி 10 வருடமாக நரக வாழ்க்கை என் மாமாவுக்கு இல்லை.உடனே மதுரைக்கு அழைத்து சென்றோம். அங்கே 2 மாதங்கள் ஹாஸ்பிட்டல் கதி என்று இருந்தார். பிறகு வேலூரில் ஒரு மாதம். இடது பக்கம் முழுவதும் இயங்காமல் 10 வருடங்களாய் வீட்டில் பொழுதினை கழித்து வருகிறார். அவர் நன்றாக இருந்து இருந்தால் வாழ்க்கை எப்படி எல்லாமோ மாறி இருக்கும்.

படிக்கும் போது அவர் படித்த பள்ளியில் முதலாவதாக வந்தவர்.முனிசிபல் பள்ளியில் படித்தவர்.பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியருக்கு இவரை மிகவும் பிடிக்கும்.இப்பொழுதும் தன் முதல் வகுப்பு ஆசிரியரை பற்றி கூட சொல்வார்.எப்பொழுதும் சுத்தமாக டிப்டாப்பாக உடைகள் அணிவதில் பெரும் விருப்பம் உள்ளவர்.எங்களையும் சின்ன வயதில் மாடர்னாக இருக்க செய்தவர். சிறு வயதில் நாங்கள் பார்த்த நல்ல சினிமாக்கள் அவருடன் தான்.

முதலில் நான் பைக்கில் சென்றது அவருடன் தான்.முதலில் ஃப்ர்ஸ்ட் க்ளாசில் அமர்ந்து சினிமா பார்த்தது அவருடன் தான். வாழ்க்கையில் முதலில் கோன் ஐஸ்கிரீம், ஃபலூடா,பாசந்தி,ஜிகிர்தண்டா சாப்பிட்டது இவருடன் தான். மதுரையில் இங்கிலீஷ் படம் பார்த்தது,. அவரின் கல்லூரி நாட்கள்,பள்ளி நாட்கள் பற்றி கதை மாதிரி சொல்வதை எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.நிறைய ஃப்ரெண்ட்ஸ் முரளி மாமாக்கு.

என்னுடைய மாமா குழந்தைகள் நல மருத்துவராக அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். இந்த நோய் தாக்கியதும் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தற்சமயம் புத்தகம் படிப்பது, டி.வி பார்ப்பது என்று பொழுதினை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.நிறைய படிக்கிறார். எப்போதும் படிப்பில் மிகுந்த ஆர்வம் உடையவர்.தெரிந்தவர்கள், சொந்தக்காரர்களின்
குழந்தைக்கு மருத்துவம் சொல்கிறார்.மிக கரெக்டாக நோயினை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பார்.என் மகன்கள் சிறுவயதில் கஷ்டப்பட்ட போது இவரின் ஆலோசனை பேரில் தான் பிழைத்தார்கள். குழந்தைகள் என்றால் மிக பிரியமுள்ளவர்.எனவே தான் குழந்தை நல மருத்துவர் ஆனார்.அவர் டாக்டர் ஆனதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.

என் அம்மாவிற்கு எனக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்து, பிறந்த 6 மாதத்திலேயே ஹெர்னியா வந்து அதற்கு ஆபரேஷன் செய்தது.ஆனால், அடுத்த மாதத்தில்அக்குழந்தை இறந்து விட்டது.எனது அம்மாவும், தாத்தாவும் மாதக்கணக்கில் மதுரை ஆஸ்பத்திரிகளில் அந்த குழந்தை உடல்நலத்திற்காக அலைந்து இருக்கின்றனர். நம் வீட்டிலேயே ஒரு டாக்டர் அவசியம் வேண்டும் என அப்போது முடிவு எடுத்து உள்ளார்கள். அப்போது பி.யூ.சி படித்துக் கொண்டிருந்த என் மாமாவினை டாக்டர் ஆக்க வேண்டும் என்று என் அம்மாவின், தாத்தாவின் ஆசைப்படி டாக்டர் ஆனவர்.

ஒரு டாக்டருக்கே இந்த கதி என்றால். அவருக்கு இப்படி ஆனதை விதி என்பதா? மாமாவிற்கு சுகர் உண்டு. அதற்கு தகுந்த மருத்துவம் செய்து கொண்டு தான் இருந்தார். செக்-அப் சென்ற அந்த டாக்டரை நாங்கள் எல்லாம் இன்றும் திட்டுவோம்.ஆனால், மாமா எங்களை திட்டவே விட மாட்டார். விடுங்கம்மா என்ன செய்றது என்பார்.அவரை மாதம் ஒரு முறை பார்த்து வருவேன். அவருடைய ஃப்ரெண்ட்ஸ் யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பது அவருக்கு கவலை தரும் ஒரு விஷயம். சின்ன வயதில் என் மாமா மாமா என்று நான் படித்த பள்ளி, கல்லூரிகளில் பெருமைக் கொண்டதும் அவரால் தான்.ஏனெனில், என்னுடன் படித்தவர்களில் யாருக்கும் உறவுகளில் அப்போது
டாக்டர் இருந்தது கிடையாது.
தன் மகனுக்கு சுசுருதன் என்று பெயர் வைத்து அவனையும் டாக்டர் ஆக்கிவிட்டார். இந்தியாவில் முதல் மருத்துவர் ஹர்சவர்த்தனர் காலத்தில் சுசுருதர் என்பவர் ஆவார்.

Thursday, November 25, 2010

அப்பா...



உன் உடன் பிறந்தவர்கள் எல்லாம் 60+ வயதிலும் தெம்பாய் இருக்க..

நீ மட்டும் ஏன் 45 வயதிலேயே இந்த உலகத்தினை விட்டு போய் விட்டாய்?

சைக்கிள் மட்டுமே நீ ஓட்டி நான் பார்த்து இருக்கிறேன்..

இன்று கார் ஓட்டும் என் மகனை நீ பார்க்கவேயில்லையே?


உனக்கு உடல் நலமில்லை யாராவது வாருங்கள் என்று நம் வீட்டிற்கு வந்தார் உன் நண்பர்..

அவருடன் நானும் உன் மகனும் உடனே வந்தோம் நீ ஆசிரியராய் பணியாற்றிய பள்ளிக்கு..

நாங்கள் பள்ளியில் நுழைந்த போது உனக்கு மாலையிட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றினரே..

இப்பவும் அந்த நவம்பர் 26 சனிக்கிழமை கண்களிலே நிற்கிறது..

நீ எங்களை விட்டு போய் 22 வருடங்களா ஓடி விட்டன..


இப்பவும் நெல்லை சென்றால் நீ தினம் குளித்த குறுக்குத்துறை வட்ட பாறையினை பார்த்து வருகிறேன்..

ஆசிரியருக்கு ஒரு பிரச்சனை என்றால் அந்த பள்ளியினை ஒரு வழி செய்து விடுவாயே..

உன்னால் பிரச்சனை தீர்ந்த ஆசிரியர்கள் பிறகு எப்பவாது உன்னை நினைத்திருப்பார்களா?

உன் தங்கை, தம்பி என்று நீ வாழும் வரை அவர்கள் முன்னேற்றத்திற்காக உன்னை வருத்திக் கொண்டாய்..

இன்று நாங்கள் என்ன செய்கிறோம் என்று அவர்கள் யாரிடமும் விசாரிப்பது கூட இல்லையப்பா..

எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பது இல்லை

எனக்கு தாத்தா அவரின் 73 வயது வரை இருந்தார் என் பிள்ளைகளை கூட பார்த்துதான் மறைந்தார்..

ஆனால் என் பையன்களுக்கு தாத்தான்னு உன்னை ஃபோட்டோவில் தான் அறிமுகப்படுத்த முடிகிறது..

அம்மாவிற்காக சிறுது காலம் இருந்து இருக்கலாம் நீ..

என்ன தான் நாங்களெல்லாம் நன்றாக கவனித்தாலும் நீ இருந்தால் தானே அம்மாவிற்கு மகிழ்ச்சி..

நீ எங்காவது கூட்டத்தில் இருந்து வந்து விட மாட்டாயா என்று பெருங்கூட்டத்தில் உன்னை தேடி இருக்கிறேன்..

திடீரென்று வீட்டின் கதவினை தட்டுவது நீயாக இருக்க மாட்டீயா என்று கதவை திறக்கும் போதெல்லாம் நினைத்து இருக்கிறேன்..

தைரியம் விதைத்தாய்,பொறுப்பினை விதைத்தாய்,எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல படிப்பை தந்தாய்,உன்னை மறக்க மட்டும் சொல்லி தர மறந்தாய்..

நீ இறந்த போது வாழ்க்கையில் இனி சிரிக்கவே மாட்டோமோ என்று நினைத்தோம்..

ஆனால் உன் ஆசிர்வாதத்தால் சிரித்து வாழ்கிறோம்....