Thursday, August 28, 2014

இனிமே யாருக்காச்சும் உதவி செய்வியா?

அடராமா இப்படியும் யாராச்சும் இருப்பாங்களான்னு ரெண்டு நாளா யோசிச்சு யோசிச்சு ஆமா இருக்காங்களேன்னு யோசிக்கறதை விட்டுட்டேன்.

ஃப்ரெண்ட் ஒருவரின் மனைவி அவ்வப்போது  ஃபோனில் பேசுவார். நேரில் ஒரு முறை கூட பார்த்ததில்லை. ஃப்ரெண்ட் தண்ணீ பார்ட்டி புரொஃப்சர். அதனால் கணவன் மனைவி சண்டை. மகன் படிப்பு கெடகூடாதுன்னு போன வருடம் தனியே வீடு எடுத்து இருக்கிறாள். மகன் இந்த வருடம்  +2 எழுதினான்.

 சென்னை சிட்டியில் இருக்கும் ஒரு காலேஜில் சீட் கிடைச்சு இருக்கு. நாளைக்கு சென்னை வர்றோம் உங்க அட்ரஸ் சொல்லுங்க நாங்க இரண்டு பேரும் வர்ரோம்னு சொன்னாங்க. சரின்னு அட்ரஸ் கொடுத்து வழியும் சொல்லி பஸ்-ஸ்டாண்டில் காத்திருந்து கூப்பிட்டு வந்தேன். அன்று தான் முதல் முதலாக தாயையும்,மகனையும் பார்க்கிறேன்.

மறுநாள் அந்த காலேஜுக்கு கொண்டு விட துணைக்கு வாங்கன்னு சொல்லவும் சரின்னு கூட போய் ஹாஸ்டலில் விட தேவையான சாமான்களை காலேஜ் பக்கத்தில் பர்சேஸ் செய்தோம். ஹாஸ்டலில் அந்த சாமான்களை வைக்கப்போகும் போது தான் மிக மோசமான நிலையில் ரூம்கள் இருந்ததை பார்த்தோம். ரொம்ப மோசமா இருந்துச்சு. புலம்பிட்டே ரூமில் வச்சுட்டு வெளியே வந்தோம்.

அந்த பையனுக்கு மதியம் ஒரு மணிநேரம் காலேஜ் இருக்குன்னு சொல்லவும் இரண்டு பேரையும் காலேஜில் விட்டுட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன். அவள் மாலை கோயம்பேடு போய் ஊருக்கு போவதாய் சொல்லவும் சரின்னு சொல்லிட்டேன்.


நான் வீட்டிற்கு வந்த ஒரு மணிநேரத்தில் அவளிடமிருந்து ஃபோன் அக்கா பாத்ரூம் படு மோசமா இருக்கு,ரூம் எல்லாம் குண்டும் குழியுமா இருக்கு என் பையனை எப்படி விட்டுட்டு போறதுன்னே தெரியலை வெளியே தங்க எங்காச்சும் ரூம் இருந்தா உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கன்னு அழுகுற மாதிரி சொல்லவும். நான் விசாரித்து சொல்கிறேன்னு சொல்லிட்டு என் கணவரிடம், மகனிடம் அவனுக்கு வேறு ரூம் கிடைக்கும் வரை ஒரு வாரமோ,பத்து நாட்களோ நம் வீட்டுல இருக்கட்டும்மான்னு கேட்டதும் ரெண்டு பேரும் ஓக்கே இதை ஏன் கேட்டுட்டு இருக்க, இருக்கட்டும் கொஞ்ச நாள் தானேன்னு சொல்லிட்டாங்க. நானும் அவளுக்கு ஃபோன் செய்து ஒரு ஆட்டோ வைத்து சாமான்களை எடுத்துட்டு இங்கே வந்துடு. ஒரு வாரம் இங்கே இருக்கட்டும். இங்கே இருந்து ட்ரையினில் காலேஜ் போய் வரட்டும்னு சொல்லவும் ஐயோ அக்கா நீங்க நிஜமாவே ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவுங்க உடனே வர்ரேன்னு சொல்லி  வந்துட்டாங்க. டெரசில் இருக்கும் புத்தம் புது தனி ரூம் அட்டாச் பாத்ரூம் கீயை கொடுத்தேன்.

காலை 6.45 க்கு வீட்டிலிருந்து தினம் காலேஜுக்கு போகணும் எனவே காலை, மாலை மட்டும் இங்கே சாப்பிடட்டும், மதியம் காலேஜ் கேண்டின்ல சாப்பிட சொல்லிக்கோன்னு சொல்லிட்டேன். அவளும் மிக சந்தோஷமாக ஒத்துக்கொண்டு சரிக்கா நான் அடுத்த 2 ஆம் தேதி சனிக்கிழமை வருகிறேன். அதற்குள்ளாக ரூமிற்கு சொல்லி வையுங்கள் இல்லாட்டா சின்னதா வீடு கிடைச்சாலும் ஓக்கேன்னு சொல்லிட்டு மறுநாள் காலையில் ஊருக்கு போய்விட்டாள்.

இரண்டு நாளில் அந்த பெண்ணிடமிருந்து ஃபோன்.என் மகன் ரொம்ப சந்தோஷமா இருக்கான்க்கா,நல்லா சாப்பாடு தர்றீங்கன்னு சொல்றான். அவன் ”தன்” ரூமை ஃபோட்டோ எடுத்து தன் மாமா,சித்திக்கு எல்லாம் அனுப்பி இருக்கான். சொர்க்கம் மாதிரி இருக்குன்னு சொல்றான். ரொம்ப நன்றிக்கான்னு சொன்னா.(என் தலை கொஞ்சம் வெயிட்டா தோணுச்சு) என் பையனை விட்டுட்டு நான் இருந்ததே இல்லை இது தான் முதல் தடவை. தூக்கமே வரலைன்னு புலம்பினா. என் தலையினை கொஞ்சம் தட்டிட்டே அதுனால என்ன எல்லாம் கொஞ்ச நாளுக்குதானேன்னு சொல்லிவச்சேன்.


என் பெரிய மகன் படிக்க யூஸ் செய்யும் ரூம் ஒரு பக்கம் முழுவதும்  ஃப்ரென்ஞ் விண்டோ வைத்து புளூ டைல்ஸ்,ப்ளூ ஃபேன்,ப்ளூ ஸ்க்ரீன்,ப்ளூ கப்போர்ட், கீழே பெட் போட்டு ப்ளூ பில்லோஸ்,ப்ளூ பெட்கவர்ன்னு ஒரு ரகமாய் இருக்கும். நோ டிவி,நோ ம்யூசிக் சிஸ்டம். இரவில் மாடிக்கு போய் என் மகன் அவனுடைய புக்ஸ் எல்லாம் அள்ளிட்டு வந்து கீழே ரூமில் வச்சுக்கிட்டான்.

நான் லூசான்னு யோசிச்ச மொமண்ட்:

2ஆம் தேதி வர்ரேன்னு வரலை,அப்புறம் 9-ல் வர்ரேன்னு வரலை.14 நைட் வர்ரேன்னு சொல்லிட்டு 14த் காலை ஃபோன் வந்துச்சு அக்கா அக்கா என் பையன் லீவுக்கு இங்கே வர்ரணும்னு ஆசைப்படுறான் அதனாலே அவன் இங்கே வரட்டும் 17 காலை அவனுடன் சேர்ந்து நான் அங்கே வர்ரேன்னு சொன்னா..நான் சரிப்பான்னு சொல்லிட்டேன்..


16த் நைட் ஃபோன் வந்துச்சு. எனக்கு இங்கே ஒரு முக்கியமான வேலையிருக்கு!!! என் மகனை இப்ப அனுப்பிட்டு 23 சனியன்று நான் அங்கே வர்ரேன்னேன்னு சொன்னா அதுக்கும் சரின்னு சொல்லிட்டேன்.(கோவப்படாதே அமுதான்னு சொல்லிகிட்டேன்) தனியே கணவருடன் வாழாமல் மகனும் இங்கே இருக்க, வீட்டிலிருக்கும் இவளுக்கு என்ன முக்கிய வேலைன்னு தெரியலை

17 காலை 3 மணிக்கு எனக்கு ஃபோன் அந்த பையனிடமிருந்து வீட்டிற்கு வெளியில் நிற்கிறேன். கதவை திறங்கன்னு.தூக்க கலக்கத்தில் எழுந்து சாவியை கொடுத்தேன்.எப்படிடா அந்த நேரத்துக்கு வந்தன்னு கேட்டா லிஃப்ட் கிடைச்சுதுன்னு சொன்னான். சரின்னு விட்டாச்சு.

கன்ஃபார்மா நான் லூசுன்னு தோணின மொமண்ட்:

நடுவில என் ஃப்ரெண்ட் அம்மா ( 75 வயது) என்கிட்ட பேசினாங்க.  இங்க பாரும்மா எம்மகனை கவனிக்காம இப்ப அவனை நான் தான் கவனிச்சுட்டு இருக்கேன். நீ எங்களுக்காக என் பேரனை வீட்டில் வச்சது சந்தோசம்னு உனக்கு ஏன்ம்மா கஷ்டம்னு சொல்லிட்டு அவளை பத்தி தன் மகனை பத்தி புலம்பினாங்க. இது தெரிஞ்சு கிட்டு அவ எனக்கு ஃபோன் செய்து அக்கா எங்க மாமியார் உங்க மனசை கலைப்பாங்க.எனக்கு மூணாவது மகன் மாதிரி இவன்,இவனை வச்சு இருப்பது எனக்கு ஒரு கஷ்டமும் இல்லைன்னு சொல்லிடுங்கக்கா..அப்பதான் அந்த பொம்பளை!!! வாயை மூடும்னு எனக்கு செம அட்வைஸ்.(என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தோணலை..சுறுக்குன்னு கோபம் வந்துச்சு) 25 வருஷமா அந்தம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன். நீ தான் எனக்கு புதுசுன்னு மட்டும் சொல்லி வச்சேன்.

பொறுத்தது போதும்னு யோச்சிச்ச மொமண்ட்:

22 வெள்ளி நைட் அந்த பையனிடம் உங்கம்மா நாளைக்கு வர்ராங்களான்னு கேட்டா தெரிலன்னு சொல்றான்.உடனே ஜெர்க்காகி போனேன். நைட்டே நெட்டில் Sulekha.com..ல் என் நம்பரை போட்டு ரிஜிஸ்டர் செய்தாக்கா..இந்த ஏரியாவில் ரூம் இருக்குன்னு வரிசையா என் ஃபோனுக்கு SMS-ம்,ஃபோனும் வந்துட்டே இருந்துச்சு. அவன் காலேஜ் கிட்ட உள்ள ரூமில் இடமும் கிடைச்சது.  தொகையும் பெரிசா இல்லை. உடனே அவளுக்கு ஃபோன் செய்து இப்படி இங்கே நிறைய ரூம் இருக்கு உன் பையன் நாளைக்கு காலேஜ் போகும் போது ரெண்டு ரூம் பார்த்துட்டு வர்ரட்டும் நீ வந்து சண்டே ரூமில் விட்டுடுன்னு  சொன்னா...அக்காக்கா அவன் சின்ன பையன்(நைட் 3.30க்கு தனியா வருவானாம்) அவனை தனியே அனுப்பாதீங்க...அவனுக்கு ஒன்னுமே தெரியாது..ஹேய் இந்த ஹாஸ்ட்டல் காலேஜ் பக்கம்ப்பான்னு சொன்னா காதுலேயே வாங்கலை. சரிஅப்படின்னா நீ வா வந்து ரூம் தேடுன்னு சொல்லிட்டேன். (கோபமா சொல்லலை ஆனா கோபம் வந்துச்சு)

சனியன்று காலையில் அந்த பையனிடம் அட்ரஸ் கொடுத்து மாலை ரூம் பார்த்துட்டு வாடான்னு சொல்லிட்டேன்.ஆனா அவன் அந்த பக்கமே போகலை.இவளும் வரலை.


சனியன்று மாலை என் அருமை ஃப்ரெண்ட் மிஸ்டர். @#$ எனக்கு ஃபோன் செய்றார். என் மகன் எப்படி இருக்கான். அவன் சின்ன பையன்ப்பா அவனை ட்ரையின்ல அனுப்பாத,காலேஜ் பஸ் விசாரிச்சு அதுல அனுப்பு,ட்ரையின்ல தொங்கிட்டு போவான்!!!.எப்பூடி..காலேஜ் சேர்த்து 25 நாட்கள் கழிச்சு எப்படி  அனுப்பனும்னு ஃபோன்.

நான் ஒரு புரொஃபசர்ட்ட சொல்லி இருக்கேன். அவன் காலெஜுக்கு பக்கத்தில் டீசண்டா இடம் பார்த்து தர்றேன்னு சொல்லி இருக்கார். இன்னும் கொஞ்சநாள் உன் வீட்டுல இருக்கட்டும்னு சொன்னான்.

என்ன எம்மவன் வந்துட்டானா? இல்லை எனக்கு தெரியாது நான்  மார்க்கெட்டில் இருக்கேன்னு பொறுமையா பதில் சொல்றேன். அய்யோ அவன் வீட்டுக்கு வரும்போது யாரு அவனுக்கு சாவி தருவான்னு கேட்டான்.எங்கம்மா இருக்காங்க அவுங்க தருவாங்கன்னு சொன்னேன். (பொறுமை பொறுமை அமுதான்னு சொல்லிட்டேன்). சரி அந்த ப்ரொஃபசர் நம்பர் கொடு நான் பேசிட்டு நாளைக்கு உன் மகனை அனுப்புறேன்னு சொன்னேன். அய்யோ அவன் சின்ன பையன்ப்பா (டேய் அடங்க மாட்டீங்களா) அவன் எப்படி தனியே போவான். நான் வர்ரேன்.வந்து செட்டில் செய்துடுறேன்னு சொன்னான்.சார், காலேஜ் அட்மிஷனுக்கே வர்லை.

நான் அவனின் மனைவிக்கு ஃபோனை போட்டேன். நாளைக்கு எப்ப வர்ரப்பான்னு கேட்டேன். நான் நினைச்சது இவன் ஃபோன் செய்தது அவளுக்கு தெரியாதுன்னு. அக்கா நாளைக்கு நான் வர்லக்கா ஃப்ரொஃப்சர் ஃபோன் செய்வாங்க அப்ப தான் நான் வருவேன்னு கூலா சொன்னா...உன் கணவர் பேச்சை நான் நம்பமாட்டேன்.இத்தனை நாட்கள் இல்லாத அக்கறை நானே ரூம் பார்த்ததும் தான் அவனுக்கு வந்ததா. இல்லை நீ வா நேர்ல நான் சொல்ற ரூமை பாரு, அந்த ஃப்ரொஃபசரையும் பாரு.

அடுத்த மாதம் நான் நிறைய ஊருக்கு டிக்கெட் போட்டிருக்கேன்.என் அம்மா என் தம்பி வீட்டிற்கு போய்டுவாங்க.அப்புறமா என் சித்தி பெண்ணிற்கு நிச்சயம் வீட்டில் செய்ய போறோம். வீட்ல 20 பேருக்கு மேல் தங்குவாங்கன்னு சொன்னேன். இந்த விளக்கம் தேவையில்லாதது. ஆனாலும் சொன்னேன்.

ரத்தக்கண்ணீர் மொமண்ட்:

அக்கா நீங்க எங்க வேணா போங்கக்கா என் பையனுக்கு சாப்பாடு கூட வேண்டாம். ஆனா அவன் பாட்டுக்கு மாடியில் இருந்துக்கட்டும்னு சொன்னா???? ஓ நான் ஊருக்கு போக மேடமே பெர்மிஷன் கொடுத்துட்டாங்கன்னு என் மகனிடம் என்னடா இந்த பொண்ணு இப்படி சொல்லுதுன்னு புலம்பினேன்.

ஒரு மாசமா பொறுமையா அனைத்தையும் பார்த்துட்டு இருந்த என் மகன் அம்மா லூசாம்மா நீ இப்பவே திரும்ப ,ஃபோன் செய்யுங்க நாளைக்கே வர சொல்லுங்க..இல்லாட்டி நான் நாளைக்கு அந்த பையனை நீங்க பார்த்த ரூமில் கொண்டு விட்டுட்டு வந்துடுறேன்னு சொன்னான்.


கோபமே பட்டுட கூடாதுன்னு மனசுல நினைச்சுட்டே நீ நாளைக்கு வா, இங்கே வந்து ரூம் தேடாம எப்படி ரூம் கிடைக்கும்னு கேட்டேன். சரி நாளைக்கு வர்ரேன்னு சொன்னா.

மறுநாள் என் தங்கை வீட்டிற்கு நான் போற வேலை இருந்துச்சு நானும் என் கணவரும் அங்கே காலையிலேயே போயிட்டோம்.24th இவ 10 மணிக்கு வந்திருக்கா வந்தவ நேரா மாடிக்கு போய் மகனை பார்த்துட்டு லக்கேஜ் எல்லாம் பேக் செய்துட்டு கீழே வந்து நான் வந்து அரை மணிநேரம் ஆச்சு எனக்கு கால் டாக்ஸி நம்பர் கொடுங்கன்னு கேட்டு இருக்கா. அம்மா கொடுக்கவும் திரும்ப மாடிக்கு போனவ டாக்ஸி வந்ததும் அம்மாகிட்ட சொல்லாம கீழே போய் கார் ஏறி போயாச்சு.

கொழுப்பான மொமெண்ட்:

அம்மா சொல்றாங்க தினம் ஒரு ஜூஸ்,சத்துமாவு கஞ்சி, பால், நெய் ரோஸ்ட், முட்டை தோசை,நான் - வெஜ்ஜூ, நைட் சாதம்,குழம்பு,காய்ன்னு செய்து கொடுத்தேல்ல சின்னப்பையனுக்கு கொழுப்பு ஜாஸ்தியா போயிருக்கும் அதான் அவளுக்கு கோபமாய் இருக்கும்னு சொல்றாங்க. அனுபவப்பட்டவுங்க சொன்னா சரியாதானே இருக்கும்.


 என் வீட்டிலிருந்த 30 நாட்களும் அந்த பையன் என்னை எந்த முறை சொல்லியும் கூப்பிடவேயில்லை.நான் போறேன்,சாவி வேணும்,வர்ரேன்னு இப்படி மொட்டையா பேசுவான். கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தை பதில் சொல்வான்.அவசர அவசரமா சாப்பிடுவான்,மேலேப்போறேன்னு ஓடிடுவான். கொஞ்ச நேரம் டீவியில்,பேப்பர்,புத்தகத்தில் உட்கார மாட்டான். என் மகன்களை வம்படியாக பேசினாலும் பேச விரும்பவே மாட்டான். ஆமா,இல்லைன்னு விட்டேத்தியா பதில் பேசுவான்.என்னம்மா இந்த பையன் இப்படி இருக்கான்னு அதிசயபடுங்க. மாடியில் துணி காயப்போகும் போது அவன் மனசு வச்சால் தான் கதவை திறப்பான். ஒவ்வொரு முறை சாப்பிடவும் நான் மிஸ்ட் கால் கொடுத்தாதான் வருவான். ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும் போதும் நாயை வெளியில் விட்டுடுவான்.

ரூமை கூட்டுடான்னு சொன்னா ஒரு நாளும் செய்ததில்லை. நான் மூன்று நாட்களுக்கொருமுறை நம் வீடு தானே நாசமா போகும்னு டாய்லெட் முதற்கொண்டு சுத்தம் செய்துட்டு வருவேன். இருந்த நாட்கள் மொத்தமும் ஒரு நாளும் குப்பையை எடுத்து வந்து கீழே போடவில்லை. வாஷிங் மெஷினில் ட்ரஸ் துவைத்து கொடுத்தேன்.போன ஜென்மத்துக் கடன் பாக்கின்னு நினைத்துக் கொண்டேன்.

கொசுவர்த்தி:

சென்னை வந்த 24 வருடத்தில் இது மாதிரி எங்க வீட்டுக்கு ஃபாரின் போறேன்,எம்ப்ளாய்மெண்ட் ரிஜிஸ்ட்ரேஷன்,வேலைக்கு இண்டர்வியூ,அண்ணா யுனிவர்சிட்டி கவுன்சலிங்க்,மெடிக்கல் கவுன்சலிங்,ஒரு நாள் விஷேஷம் குளிச்சுட்டு காலை சாப்பட்டு போறவுங்க, சாப்பிடாம போறவுங்க, நைட்  ஸ்டேயிங்,அமெரிக்க விசா இண்டர்வியூக்கு இரண்டு நாளைக்கு வந்தவுங்கன்னு, எண்ட்ரன்ஸ் எக்சாம் எழுத வந்தவுங்க அப்படி இப்படின்னு யாராச்சும் இவரின் அண்ணா பசங்க, தம்பி பசங்க,அக்கா பசங்க..அவுங்க ஃப்ரெண்ட்ஸ்.ஃப்ரெண்ட்சுக்கு ஃப்ரெண்ட்ஸுன்னு வருவாங்க சில பேரெல்லாம் 3 மாதம் 6 மாதம் கூட தங்கி இருக்குதுங்க...இப்படி ஒரு அனுபவம் எனக்கு இல்லை. அடி ஆத்தி இது புதுசால இருக்கு.


இப்ப வரைக்கும் நான் வீட்டுக்கு வந்தேன். நீங்க இல்லை பையனை கூட்டிப்போனேன். ஒரு மாதம் வச்சுருந்தீங்க அதுக்கு நன்றி(எனக்கு ஓவர் நினைப்பு தான் எப்பவும்) அப்படி இப்படின்னு ஒரு ஃபோன் கிடையாது. அந்த ஃப்ரெண்ட் என்னோடு PG இரண்டே இரண்டு வருடங்கள் கூட படிச்சவர்.



Monday, August 25, 2014

அம்மாவும் ஃப்ளைட்டும்



2011-ல் அம்மா பிறந்தநாள் அன்னைக்கு அம்மாவை ஃப்ளைட்டில் காசி கூப்பிட்டு போலாம் என்று ஜெட்-ஏர்வேஸில் டிக்கெட் போட்டு இருந்தேன். அம்மாக்கு முதல் ஃப்ளைட் பிரயாணம். எனக்கு அம்மாவை ஃப்ளைட்டில் கூட்டிப்போற பெருமை.

என் அம்மா எங்காச்சும் ட்ரையினில் பஸ்ஸில் போனால் ஹோட்டலில் வாங்கி சாப்பிட விரும்பவே மாட்டாங்க.எங்களையும் விடமாட்டாங்க.

அவர்கள் வராமல் நாம் மட்டும் போனால் கூட கடலை வறுத்து போட்ட சூப்பரான  புளியோதரை(முதல் நாளே காய்ச்சி வச்சது) அல்லது எலுமிச்சை சாதம்,வடகத்துவையல்,உருளைக்கிழங்கு ரோஸ்ட்,கொஞ்சம் வத்தல் என்றும் என் பசங்க வந்தா சுருங்க சுருங்க வறுத்த மட்டன்...காலைக்கு வெண்பொங்கல் அல்லது + சிறுபருப்பு சாம்பார்(நெய் பாட்டிலில் ஊத்தி வச்சுடுவாங்க)+வறுத்த தேங்காயில் கெட்டி சட்னி அல்லது குட்டி குட்டியாய் தோசை+ நல்லெண்ணெயில் மிதக்கும் தக்காளி சட்னி என்று வகைத்தொகையாய் செய்து பேக்கிங் ஆரம்பிச்சுவாங்க.வேணாம்மான்னு சொன்னாலும் கம்முன்னு இரும்மான்னு சொல்லிட்டு சத்தமில்லாமல் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.

சில சமயம் கோயம்புத்தூர் என் பசங்க கூட காலை 6.30 மணி ட்ரையினிற்கு தாம்பரத்திலிருந்து செண்ட்ரல் போகும் போது அம்மா சத்தமில்லாமல் செய்து வச்சிருந்த மட்டன் பிரியாணி எடுத்துட்டு போவோம். முத நாள் நைட்டே பிரியாணிக்கு தாளிச்சு கறியை வேக வச்சுடுவாங்க.அது நெய்யில் ஊறிட்டு இருக்கும். காலையில் நாங்க குளிச்சு கிளம்பும் போது அதில் தண்ணீர் ஊத்தி கொதிச்சதும் அரிசி போட்டு இரண்டு விசிலில் பிரியாணி ரெடி.

இப்படி பார்த்து பார்த்து செய்து தரும் அம்மாவை முதல் முறையாக ஃப்ளைட்டில் கூப்பிட்டு போகும் போது என் பசங்க இன்னைக்கு வேலை எதுவும் செய்யாமல் அவ்வாவை கூட்டி போங்கம்மான்னு ஆர்டர் போட்டுடாங்க...

அவ்வா 6.30 மணி ஃப்ளைட்..அதில் சாப்பாடு தருவாங்க..அது பிடிக்கலைன்னா கூட 9 மணிக்கு டில்லியில் நீங்க சாப்பிடலாம்னு ஐடியா கொடுத்து கட்டாயம் எதுவும் செய்ய கூடாதுன்னு சொல்லிடுச்சுங்க..என் அம்மாவும் மனசேயில்லாம சரின்னு சொல்லிட்டாங்க.சரின்னு காஃபி மட்டும் வீட்டில் குடிச்சுட்டு 10 நிமிஷத்தில் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஏர்ப்போர்ட்டிக்கு காலை 5க்கு போயாச்சு.பாவம் அம்மா அப்பவே பசியிருக்கும் போல ஆனா ஒன்னுமே சொல்லலை.காலையில் சீக்கிரம் எழுந்து குளிச்சதால் பசி கட்டாயம் வந்திருக்கும்.

6.30க்கு ப்ளைட் கிளம்பியாச்சு.ஏர் ஹோஸ்டஸ் அங்கேயும் இங்கேயும் போறாங்க வராங்க ஒன்னுமே சாப்பிட தரலை.கொஞ்ச நேரம் கழிச்சு ப்ரெட்.பன்,பட்டர்,ஜாம்,வித்தாங்க.எங்க அம்மாக்கு அது பிடிக்காது. அதனால் 9 மணிக்கு டில்லியில் சாப்பிட்டுக்கலாம்னு சொல்லிடாங்க.நானும் சரின்னு விட்டுட்டேன்.  ரெண்டு நாய் பிஸ்கெட்டும் ஒரு தண்ணீ டீயும் ஃப்ரீயா கொடுத்தாங்க.கடனேன்னு அதை வாங்கி வேறு வழியில்லாமல் சாப்பிட்டோம். 9 மணிக்கு டில்லியில் ஃப்ளைட் இறங்காமல் டில்லி மேலேயே சுத்து சுத்துன்னு சுத்திட்டே இருக்கு. செம பனி அதனால் இறங்க முடியாதுன்னு ஒரு மணிநேரம் சுத்திட்டு FUEL தீர்ந்துடும்னு சொல்லிட்டு ஃப்ளைட் ஜெய்ப்பூர் போயிடுச்சு.

ஜெய்பூர் போனதும் நம்ம ஃப்ளைட் வெயிட்டிங்கில் 14ஆவது ஃப்ளைட்.13 ஃப்ளைட் டில்லி போனதும் நம்ம ஃப்ளைட் கிளம்பும்னு சொல்லிடாங்க.சரி ஒரு மணிநேரத்தில் போயிடலாம்னு நாங்க நினைச்சோம். எங்களுக்கு 11 மணிக்கு கனெக்டிங் ஃப்ளைட் காசிக்கு டில்லியிலிருந்து புறப்படும். ஒரே கம்பெனி ஃப்ளைட் அதனால் நமக்கு வெயிட் செய்வான்னு நம்பிக்கை. மெல்ல பசியெடுக்க ஆரம்பிச்சது. ஃப்ளைட்டில் எல்லோரும் கத்த ஆரம்பிச்சாங்க.ஏர் ஹோஸ்டஸ் ஒரு கலர் தண்ணிய எல்லோருக்கும் கொடுத்துச்சு.அப்புறமும் கத்த ஆரம்பிக்கவும் வெளியே போய் கொஞ்சம் நாய் பிஸ்கெட் வாங்கி வந்து ஆளுக்கு இரண்டு.கொலைப்பசி.என் அம்மாவை நான் நிமிந்தே பார்க்கலை. அம்மா பாவம் கண்ணை மூடிட்டு உட்கார்ந்து இருந்தாங்க. வெளியே விடுங்கடா நாங்க போய் சாப்பிட்டு வர்ரோம்னு சொல்லி பார்த்தா அது முடியாதுன்னு சொல்லிட்டாங்க. .என் சீட்டிற்கு முன்னாடி இருந்த ஒரு தமிழ்க்காரர் தன் ஃப்ரெண்டிற்கு மதியம் 1 மணிக்கு ஃபோன் செய்தார். அந்த பக்கம் ஃபோன் எடுத்ததும் என்னடா சாப்பிட்டாச்சான்னு கேள்வி கேட்டார்,அவர் ஆமாம்னு சொல்லவும் இவர் என்னடா சாப்பிட்டன்னு கேட்டார். அவர் சொல்ல சொல்ல இவர் சத்தமாக..என்னது மட்டன் பிரியாணியா,சிக்கன் சுக்காவா,என்ன ப்ரான் ரோஸ்ட்டா,அப்புறம் முட்டை ஆம்லெட்டான்னு சத்தமா எல்லோருக்கும் கேக்குற மாதிரி சொல்லிட்டு சரிடா நான் ஃபோனை வைக்கிறேன். நல்லாயிருப்படா நீன்னு சத்தமா சொல்லிட்டு ஃபோனை வச்சார். இதையெல்லாம் கேக்கவும் எல்லோரும் பசியை மறந்து சிரிச்சோம். ஆனா இதை கேக்கவும் எனக்கு ரொம்ப பசி வந்திடுச்சு.ஒரு ஏர் ஹோஸ்ட்டஸும் எங்க பக்கத்துல வர்லை. ஜன்னல் வழியா நான் ஒவ்வொரு ஃப்ளைட்டா எண்ணி கொண்டிருந்தேன். 13 ஃப்ளைட்டிற்கு அப்புறமா எங்க ஃப்ளைட் கிளம்பி மதியம் 3 மணிக்கு டில்லி வந்தோம். . . டில்லிக்கு வந்தா காசி ஃப்ளைட் எங்களை விட்டுட்டு போயிடுச்சு


காசி போறவுங்க நாளை காலை 9 மணிக்கு அனுப்பபடுவார்கள்னு சொல்லி கூட்டமா ஒரு இடத்தில் வெயிட் செய்ய சொல்லவும் கூட்டத்தை விட்டு அங்கேயிங்கே போக முடியலை.நாம் சாப்பிட போனா எங்க நம்மை விட்டுட்டு போயிடுவாங்கன்னு அவர்கள் சொன்ன இடத்தில் காத்துகிடந்தோம்.டில்லி ஏர்ப்போர்ட் வெளியே மாலை வேலையில் அப்படி ஒரு குளிர்.பனி மூஞ்சியில் அடிக்குது. அதை வேற சாமாளித்து அப்புறமா ஒரு பஸ்சில் ஏத்தி ஒரு 3 ஸ்டார் ஹோட்டலுக்கு அனுப்பினார்கள்.  6 மணிக்கு ஹோட்டல் வந்ததும் ரிஷப்ஷனில் மாலை 7 மணிக்கு டின்னர்ன்னு சொன்னாங்க..தேவுடான்னு இருந்துச்சு.ரூமிற்கு போய் ரிஃப்ரெஷ் செய்துட்டு டைனிங் ஹாலுக்கு ஓடி போய் .6.30 மணிக்கே உட்கார்ந்து கொண்டோம்.


அங்க பார்த்தா பஃபே.....ஆவி பறக்க எண்ணெய் ஒட்டாத பூரி,சப்ஜி,ஃப்ரைட் ரைஸ்,பனீர் மசாலா,சீஸ் பரோட்டா,குலோப் ஜாமூன்,கேரட் அல்வா, பட்டர் நான், பாயாசம்,ஐஸ்கிரீம்,ஃப்ரூட் சாலட் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமல் ஒரு வெட்டு வெட்டிட்டு நிமிர்ந்தோம். காலை 5 மணியிலிருந்து பசி பசின்னு இருந்து மாலை 7 மணிக்கு அப்படி ஒரு சாப்பாடு. சாப்பாட்டின் அருமை புரிந்தது. என் அம்மாவை ஓட்டும் என் பசங்கக்கிட்ட ஃபோனில் ஜெய்பூரிலிருந்து  விஷயத்தை சொன்னா விழுந்து விழுந்து சிரிக்குதுங்க. அச்சச்சோ பாவம்மா அவ்வான்னு அப்புறம் சாரி சொல்லிச்சுங்க.விதவிதமா சமைத்து தரும் அம்மாவை ஃப்ளைட்டுல போறோம்னு ஒரு நாள் முழுசும் பட்டினி போட்ட கொடுமைக்காரி நான்.


Thursday, August 07, 2014

1965-75-ல் பிறந்தவர்கள்

1965 – 75-ல் பிறந்தவர்களும் சமூகமும்:

நார்மலா பிறக்காமல் சிசேரியன் மூலம் பிறக்க ஆரம்பித்தவர்கள்.

அதிகம் கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில் பிறந்தவர்கள்.

3,4 பேருடன் கூடப்பிறந்தவர்கள்.

சித்தப்பா,சித்தி,பெரியப்பா,பெரியம்மா,அத்தை,மாமா,தாத்தா,பாட்டி என்று 
கூட்டு குடும்பத்தில் கொஞ்சகாலம் வாழ்ந்தவர்கள். அதில் கஷ்டத்தை அனுபவித்தவர்கள்.

அப்பாவிற்கு பயந்தவர்கள்.

குச்சி ஐஸ்,பால் ஐஸ், தேன் மிட்டாய்,தொக்கு 
உருண்டை,  நெல்லிக்காய்,கொடுக்காபுளி சாப்பிட்டவர்கள்.

பல்லாங்குழி,பரமப்பதம் என வீட்டிலேயும் கோலி,குச்சிக்கம்பு,கல்லா மண்ணா என்று தெருவிலே விளையாடி தீர்த்தவர்கள்.

சின்ன வயதில் டூர்ன்னா திருச்செந்தூர்,பழனி, கன்யாகுமரி, மாமல்லபுரம்,ஸ்ரீரங்கம் என அவர் அவர் ஊருக்கு பக்கத்து ஊருக்கு மட்டும் புளியோதரை கட்டி போனவர்கள்.

பெண்களுடன்/ஆண்களுடன் பேச கூச்சப்பட்டவர்கள்.

எம்.ஜி.ஆர்,இந்திராகாந்தி போன்றவர்களை சின்ன வயசில் நேரில் பார்த்தவர்கள்.

ஹை ஹிந்தி வேண்டாம் என்று எதிர்த்தவர்கள்.ஹிந்தி தெரியாம போச்சே என்று இப்ப புலம்புபவர்கள்.

எங்கே போனாலும் சைக்கிள்,நடை,டவுண் பஸ்,மாட்டு வண்டின்னு கிடைச்சதில் சலிக்காமல் போனவர்கள்.முதலில் லூனா ஓட்டியவர்கள்.

ரொம்ப இங்கிலிஷ் கலக்காமல் பேசுபவர்கள்.கலக்கும் இங்கிலிஷையும் சரியாக உச்சரிக்க முடியாமல் திண்டாடுபவர்கள்.

அதிகம் தமிழ் மீடியத்தில் படித்த கடைசி தலைமுறை.

தமிழை கொஞ்சம் நேசித்த,தமிழில் ஒரு பக்கமாவது ஒழுங்கா எழுத தெரிஞ்சவர்கள்.

எண்ட்ரன்ஸ் எக்சாம் புண்ணியத்தில் டாக்டர்,எஞ்சினியர் என்று மிடில் க்ளாஸ் மக்களும் படிக்க ஆரம்பித்தவர்கள்.

சுஜாதா, பாலக்குமாரன் போன்ற சூப்பர் எழுத்தாளர்களின் எழுத்தை உடனுக்குடன் ஸ்வாசித்தவர்கள்.

டீச்சர்களிடம் அடி வாங்கிய கடைசி தலைமுறை.

அவளை பாரு இவனை பாருன்னு அடுத்தவர்களுடன் படிப்பிற்கோ மற்றவற்றிற்கோ ஒப்பிடாமல் இருந்த டென்ஷன் ஏற்றாத கடைசி தலைமுறை பெற்றோருக்கு பிறந்தவர்கள்.

ரேங்க் கார்டில் அட்லீஸ்ட் ஒரு ரெட் கோடு இருக்க பிறந்தவர்கள்.

ஊரில் ஒன்றிரண்டு ஓடும் அம்பாசிடர் காரை ஆன்னு பார்த்தவர்கள்.

தந்தியின் உபயோகத்தையும், காதலுக்கு லெட்டரும் எழுதிய கடைசி தலைமுறை.

காதலை சொல்ல ரொம்ப ரொம்ப யோசித்து யோசிச்சு….இன்னமும் அப்ப சொல்லியிருக்கலாமோன்னு யோசிப்பவர்கள்.


1965 – 75-ல் பிறந்தவர்களும் டிவியும்:

முதல் முதலாக மங்கலாக தெரியும் இலங்கையின் ரூபவாஹிணியை ஆண்டனாவை அண்ணா மொட்டை மாடி ஏறி அட்ஜஸ்ட் செய்ய இப்ப சரி, இப்ப இல்லைன்னு சொல்லி அப்படியும் விடாமல் டி.வி பார்த்தவர்கள்.

அதன் பிறகு ஷோபனா ரவி என்னம்மா நியூஸ் வாசிக்கிறார்கள் என்று வாயை திறந்து  டி.டி பார்த்தவர்கள்.

ஊரே ஒன்று கூடி வெள்ளிக்கிழமை “ஒலியும் ஓளியும்” ப்ளாக் அண்ட் ஒயிட் டிவியிலும், அதில் ஒரு கலர் க்ளாஸ் ஒட்டி வைத்தும்  அப்புறம் நிஜ கலர் டி.வியிலும் பார்த்தவர்கள். திங்கள்கிழமை சித்ரஹார்,அவ்வப்போது வரும் ராஜீவ் பத்திய நியூஸ் கிளிப்பை ஆன்னு பார்த்தவர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் போடோ மொழி படமானாலும் அதையும் ரசித்த கலாரசிகர்கள்.

காதில் கரகரன்னு வச்சு கேட்ட ட்ரான்ஸிஸ்டரை கடாசிட்டு கிரிக்கெட்டை டிவியில் பார்த்து ரசித்தவுங்க.

பெரிய பெரிய ரேடியோவில் டைப்ரைட்டிங்க் கீ மாதிரி இருக்கும் கீயை அமுக்கி அமுக்கி ஸ்டேஷன் மாத்தி கஷ்டப்பட்டவர்கள்.

சினிமாவும் 1965-75-ல் பிறந்தவர்களும்.

கமல் மட்டும் தான் நடிக்க,ஆட தெரிந்தவர்,அவர் மட்டும் தான் சிவப்பு, அழகு என்பதை நம்பியவர்கள்.

ஜினியை வெறியாக ரசித்தவர்கள்.
சிவாஜியை ஸ்ரீப்ரியா,அம்பிகா,ஸ்ரீதேவியுடன் கோட்டும் தொப்பையுமாய் பார்த்து நொந்தவர்கள், பிறகு முதல் மரியாதையில் சிவாஜி மீது ப்ரியம் கொண்டவர்கள்.

சினிமா பார்ப்பதை மட்டுமே பொழுதுப்போக்காக கொண்டவர்கள். ஒரே படத்தை இரண்டு மூன்று முறை பார்த்து 100 நாட்கள் ஓட்டியவர்கள்.

”அதுக்காக” பாக்யராஜ், இசைக்காக டி.ராஜேந்தர், ஸ்டைலுக்கு ரஜினி, டான்சுக்கு கமல், அடாவடிக்கு பார்த்திபன்,வில்லனுக்கு சத்யராஜ்,மைக்குக்கு மோகன்,பசுவுக்கு ராமராஜன்,அடிதடிக்கு விஜயகாந்த்,காலேஜ்னா முரளி, சுறுசுறுப்புக்கு கார்த்திக் இந்தனைக்கும் நடுவில் சில்க்,ஜெயமாலினி கட்டாயம் வேண்டும் என்று கேட்டு ரசித்தவர்கள்.

அம்பிகா,ராதா சம்பாதிக்க உதவினவர்கள்.ரேவதியின் நடிப்பை ரசித்தவர்கள்.

நதியாவை பார்த்து அவரை போலவே இருக்க ஆசைப்பட்டவர்கள்.

இளையராஜா,வைரமுத்து,எஸ்.பி.பி,ஜானகி,சித்ரா,ஜேஜுதாஸுடன் சேர்ந்தே வளர்ந்தவர்கள்.

கவுண்டமணி,செந்தில் ப்ரியர்கள். அய்யோடா என்று ஒய்.ஜி.மகேந்திரனை பார்த்து நொந்தவர்கள்.

பாலச்சந்தர்,பாரதிராஜா,பாக்யராஜ் என்று டைரக்டர்களை மதித்தவர்கள்.
நடிகர்,நடிகைக்கு லட்டர் போட்டு அவர்கள் அனுப்பும் ஃபோட்டோவை புத்தகத்தின் நடுவில் வைத்து ரசித்து மகிழ்ந்த கடைசி தலைமுறை.
.

 இன்னமும் நிறைய இருக்கு..உங்களுக்கு பாக்கி வைக்கிறேன்.

இதை படிச்சதும் இதை எழுத தோணுச்சு.