Thursday, October 21, 2010

Corrs


ஷெரான்,ஆண்டிரியா,கரோலின் சகோதரிகள் அவர்களுடைய சகோதரர் ஜிம்முடன் சேர்ந்து வயலின்,பியானோ,கிடார்,ட்ரம்ஸ், கீபோர்ட் வாசித்துக் கொண்டே பாடுவது பார்க்க கேட்க அருமையாக உள்ளது. சில பாடல்களை அவர்களே எழுதியும் உள்ளனர். நான் ஐந்து வருடங்கள் முன்னாடி தான் இவர்களின் ஆல்பத்தினை முதல் முதலாக பார்த்தேன், கேட்டேன். அப்போதிலிருந்து அவ்வப்போது பார்ப்பதும், கேட்பதும் தொடர்கிறது. கரோலின் ட்ரம் வாசிக்கும் அழகே அழகு. ஆண்டிரியா மிக ஸ்டைலாக பாடுவார், மூத்த சகோதரி ஷெரான் வயலினும், ஜிம் கீபோர்ட் வாசிப்பதும் அசத்தல்.
மிக ஃபேமஸான Radio song..



It’s late at night, and I’m feeling down...
There are couples standing on the street
Sharing summer kisses and city sounds...

So I step inside, for a glass of wine.
With a full glass and an empty heart,
I search for something to occupy my mind...

But you are in my head, swimming forever in my head,
Tangled in my dreams, swimming forever...

So I listen to the radio (listen to the radio)
All the songs we used to know (listen to the radio)
So I listen to the radio (listen to the radio)
Remember where we used to go

Now its morning light, and it's cold outside,
Caught up in a distant dream I try
And think that you are by my side...

So I leave my bed, and I try to dress,
Wondering why my mind plays tricks
And fools me into thinking you are there

But you're just in my head,
Swimming forever in my head,
Not lying in my bed, just swimming forever...

So I listen to the radio (listen to the radio)
All the songs we used to know (listen to the radio)
So I listen to the radio (listen to the radio)
Remember where we used to go
I listen to the radio (listen to the radio)
All the songs we used to know (listen to the radio)
I listen to the radio (listen to the radio)
Remember how we used to go

You are in my head, swimming forever in my head
Tangled in my dreams, swimming forever (swimming forever)
Swimming forever...

So I listen to the radio (listen to the radio)
All the songs we used to know (listen to the radio)
So I listen to the radio (listen to the radio)
Remember where we used to go
I listen to the radio (listen to the radio)
All the songs we used to know (listen to the radio)
I listen to the radio (listen to the radio)


சில அசத்தலான பாடல்கள்...What can i do to make u love me, Runaway, Everybody hurts, Dreams, Forgiven Not Forgotten..

Tuesday, October 19, 2010

பழகிடுச்சு...

ஏண்டா ஸ்கூலுக்கு போற போது திட்டு வாங்கிய மாதிரியே இப்ப ஆபிசிற்கு போகும் போதும் உன் அப்பாக்கிட்ட தினம் திட்டு வாங்குறீயே, ஏண்டா இப்படி என்று என்னருமை மகனை இன்று காலையில் வழக்கம் போல் திட்டு வாங்கிக் கொண்டு இருக்கும் போது கேட்டேன். அவன் கூலாக சொன்னது...இதெல்லாம் பழகிடுச்சும்மா!!

எதெல்லாம் நமக்கு பழகிடுச்சு என்று யோசித்த போது...

1. தினம் மகன்களை காலை வேளைகளில் திட்டுவது..

2. வெள்ளி கிழமைகளில் கட்டாயம் சைவம் மட்டும் சாப்பிடுவது...

3.. சனி, ஞாயிறுகளில் காலையில் லேட்டாக எழுந்திருப்பது...

4. வீட்டில் இருக்கும் போதெல்லாம் டிவி பார்க்கும் கணவரை அவ்வப்போது திட்டுவது...

5. எப்ப பார்த்தாலும் நான் தான் இந்த வீட்டில் எல்லா வேலையும் பார்க்கணுமா என்று அவ்வப்போது முக்கியமா துவைத்த துணிகளை மடிக்கும் போதும்,வீட்டினை க்ளீன் செய்யும் போதும் சலித்துக் கொள்வது.

6. வாரத்திற்கு நான்கு நாட்களாவது ஃப்ரெண்ட்ஸ்களுடன் நீ எங்க போன, நான் எங்க போனேன், நீ என்ன செய்த, நான் என்ன செய்தேன் என்று நிகழ்ச்சி நிரல் ஃபோனில் ஒப்பிப்பது.

7. கணவரின் செல் ஃபோனில் ஐ.எஸ்.டி, எஸ்.டி.டி என்று ஃப்ரெண்ட்ஸ்களுக்கு பேசி ஃபோன் பில்லை ஏத்துவது..ஹி..ஹி..ஹி

8. அதிக அக்கறை என்ற பெயரில் அத்திபழம்,பேரீட்சை, கேரட் என்று பசஙகளுக்கு காலை வேளையில் கொடுத்து என் கண் முன்னாடி சாப்பிடு என்று கட்டாயப்படுத்துவது, தலையில் முட்டை,வெந்தயம்,செம்பருத்தி இலை என்றும், முகத்தில் முல்தானி மட்டி என்றும் ஏதாவது தடவி அவர்களை வீட்டில் பேய் போல் நடமாடவிடுவது. ஜூஸ் என்று எதாவது செய்து அவர்களை குடிக்க செய்வது.

9. நாங்க எல்லாம் சின்ன பிள்ளைகளாய் இருக்கும் போது எப்படி பெரியவர்கள் பேச்சு கேட்போம், எப்படி எல்லாம் படிப்போம் என்று டூப்பு டூப்பாய் விடுவது.

10. என்ன சினிமா என்றாலும் விமர்சனம் படித்தும் புத்தி வராமல் பிடிவாதமாய் சில தமிழ் படங்களை தியேட்டரில் பார்த்து தொலைப்பது.

11. நாம் எழுதுவதற்கு பின்னூட்டம் கிடைக்காட்டியும் நானும் எழுதுவேன் என்று இப்படி எதையாவது எழுதுவது.

இன்னும் இன்னும் நிறைய பழகிடுச்சு.....

Monday, October 11, 2010

சனா பற்றி ஒரு வினா?

இன்றைய குட்டி பசங்களையும் ரஜினி ரசிகர்களாக்க எடுக்கப்பட்ட படம்,முன்னாள் ரசிகர்களை பற்றி கவலை படவில்லை.அவர்கள் எப்படி எடுத்தாலும் ரஜினியை ரசித்துக் கொண்டேயிருப்பார்கள் என்று முடிவு செய்து விட்டார்கள்.

படம் குப்பை என்றால் என் பசங்கள் இருவருக்கும் என் மீது கோபம் வருகிறது.போம்மா உனக்கு ரசிக்க தெரியவில்லை என்று என் ரசிப்புத்தனத்தின் மீதே சந்தேகம் வர செய்கிறார்கள்.விளம்பர உலகம்.விளம்பரத்தாலேயே ஒன்றும் இல்லாத ஒரு பொருளை எதோ இருப்பதாக பெரிதுப் படுத்தலாம்.

ஐஸ் கழுத்திற்கும் எதாவது ஆபரேஷன் செய்திருக்கலாம். நிறைய காட்சிகளில் கழுத்தில் வயது ஏறிவிட்டது என்பதற்கான கோடுகள் மூன்று தெரிந்துக் கொண்டே இருக்கிறது.அதை மறைக்க சிகிச்சை எதுவும் இல்லையோ.ரஜினி ஸ்கார்ஃப் மாதிரி ஒரு துணியால் கழுத்தினை மூடியே தான் பாடல் காட்சிகளில் வருகிறார்.

Erin Brocckvich படத்தில் ஜூலியா ராபட்ஸ், குழந்தையினை ஒரு கையில் தூக்கிக் கொண்டும் இன்னொரு கையில் இன்னொரு குழந்தையினை இழுத்துக் கொண்டும் படம் முழுவதும் அவ்வளவு அம்சமாக வளைய வருவார். நம் நடிகைகள் எப்போது அப்படியெல்லாம் வருவார்கள்.மரத்தினை சுற்றுவதை விட்டுட்டு.குழந்தைக்கு அம்மா என்றால் பார்க்க மாட்டோம் என்று இந்த டைரக்டர்கள் ஏன் தான் முடிவு செய்கிறார்களோ.


லொகேஷன்கள் அருமை..பெருங்குடி குப்பை மேடு அப்பா எவ்வளோ பெரிசு..பக்கத்து வீட்டில் காட்டுக்கத்தமாக பாட்டை வைக்கும் ராகவ்(சின்னத்திரை நடிகர்) ஓவர் ஆக்ட் செய்து இருக்கிறார்.ரிட்டயர்ட் ஆகும் அல்லது இறந்து போகும் ஆர்மி ஆஃபிசர்களின் குடும்பம் சராசரி மத்திய தர குடும்பத்தினை விட நன்றாகவே வாழ முடியும் பணப்பிரச்சனை இன்றி.இப்படி ஒரு ஹோம் எதற்கு என்று தெரியவில்லை.

சின்ன வயதில் என்னை போல என் தம்பிகளை போல சங்கரும் நிறைய காமிக்ஸ் படித்து உள்ளார். அதை விஷுவலாக்கி இருக்கிறார்.

சனாவாக வரும் ஐஸ்வர்யாவின் முழுப் பெயர் படத்தில் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

1.சஹானா
2.சஞ்சனா
3.சப்னா

நான் கேட்ட யாருக்கும் தெரியவில்லை. ஒரு க்ளூ காதல் ரத்து பேப்பரில் அந்த பெயர் எழுதி இருந்தது.(என்ன ஒரு கவனிப்பு!)

படத்தினை பார்க்க வேண்டாம் என்றால் யாரும் கேட்கப்போவதில்லை.

Thursday, October 07, 2010

வெரைட்டி..

தேவி தியேட்டரில் எந்திரன் முதல் நாள் 11 மணி காட்சிக்கு என் மகன் ரிஷி காலேஜ் கட் அடித்து விட்டு சென்றான்.ஓசி டிக்கெட். அவன் இருந்த வரிசையில் அமர்ந்து படம் பார்த்தது ரஜினியினை தவிர அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்.பொல்லாதவன் அங்கிளை பார்த்ததாய் என் தம்பி மகன் விஷால்(4 வயது) தனுஷை குறிப்பிட்டான். ரஜினி வரும் போதெல்லாம் செளந்தர்யா எழுந்து நின்று கத்திக் கொண்டே இருந்தாராம். ரஜினி குடும்பதிற்கு தேவி தியேட்டர் தான் ரொம்ப பிடித்த தியேட்டரோ???

என் பெரிய மகன் நகுல் மாயாஜாலில் முதல் நாள் முதல் ஷோ எந்திரன் முடித்துவிட்டு அப்படியே ஆபிசிற்கு காலை 11.30க்கு சென்று விட்டான். டிக்கெட் புக் செய்தது ராத்திரி 2.30 க்கு.அவன் அந்த நேரத்தில் ACS பரிட்சைக்கு கூட முழித்தது இல்லை. டிக்கெட் விலை 300 ரூபாய்.நான் டிக்கெட் 100 ரூபாய்க்கு குறைவாகும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். என் கணவரோ டிவியில் போடும் போது தான் பார்ப்பாராம்.தம்பிக்கு எந்த ஊரு நான் திண்டுக்கல்லில் முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். அதன் பிறகு முதல் நாள் எந்த படமும் பார்த்தது இல்லை.

சமீபத்தில் விஷாகப்பட்டிணம் போய் வந்தேன். ட்ரையினில் அரவாணிகள் தொல்லை தாங்க முடியவில்லை. கோச்சில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் அரண்டு போய் இருந்தார்கள். பணம் கொடுக்காத ஆண்களுக்கு முன்னாடி நின்று தங்கள் சேலையினையும், பாவாடையும் எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தி தொடையெல்லாம் தெரிய பணம் கேட்டனர். ட்ரையினில் யாரும் எதுவும் செய்ய முடியாது பணம் கொடுத்து கொண்டு இருந்தனர். என்ன அசிங்கம் இது...இவர்களை கண்டிக்க ஏன் யாருக்கும் தைரியம் இல்லை..

விஷாகப்பட்டிணத்தில் பீம்லிப்பட்டிணம் என்ற இடத்தில் கடலோரம் இருக்கும் நரசிம்மர் கோயிலுக்கு காலை 11 மணியளவில் பஸ்ஸில் போனேன். பஸ் ஸ்டாண்டில் இறங்கி ஆட்டோவில் கோயில் இருக்கும் மலையடிவாரத்திற்கு போனேன்.போகும் போதே ஆட்டோ டிரைவரை பார்க்கவே பிடிக்கவில்லை. தான் யாதவா ஜாதியினை சேர்ந்தவர் என்று தேவையில்லாமல் பெருமையாக சொல்லி கொண்டான். தலை மட்டும் ஆட்டி வைத்தேன். 150 படிகள் கொண்ட மலையது. கூட்டமே இல்லை. ஆனால் மலையுச்சியில் பெண்கள் தெரிந்தார்கள். மலையடிவாரம் வந்ததும் நானும் உங்கள் துணைக்கு மலை ஏறட்டுமா என்று கேட்டான். நான் தேவையில்லை என்று சொல்லி மலை ஏற ஆரம்பித்தேன். ஆனால், அவன் ஆட்டோவினை ஓரம் கட்டிவிட்டு என்னுடன் ஏற ஆரம்பித்தான். தெலுங்கு பட வில்லன் போலவே இருந்தான். நான் ஏறுவதை நிறுத்தி விட்டு ஒரு படியில் உட்கார்ந்து கொண்டேன். அவன் விறு விறு என்று திரும்பி திரும்பி என்னை பார்த்துக் கொண்டே எறினான். அவன் மலையுச்சிக்கு சென்றதும் நான் ஏற ஆரம்பித்தேன். மலை ஏறியதும் அங்கிருந்த பெண்களுடன் சேர்ந்து நின்று கொண்டேன். சாமி தரிசனம் முடித்து அவன் இறங்கவே இல்லை. நானும் இறங்கவே இல்லை. ரொம்ப நேரம் கழித்து அவன் இறங்கி போய் ஆட்டோவில் ஏறி வண்டியினை எடுத்ததும் தான் நான் இறங்கினேன். பஸ் ஸ்டாண்டிற்கு நடந்தே வந்து விசாகப்பட்டிணத்திற்கு பஸ் ஏறினேன். பகலிலேயே ஒரு பெண்ணால் தனியே போக முடியவில்லையே என்று எரிச்சலாகி போனேன். இன்னும் ஒரு 100 வருடம் ஆகும் இரவில் பெண் தனியே போக.ஹே ராம்!!!

குருவாயூரில் இருக்கும் யானைக் கோட்டையில் 65 யானைகளும் பக்தர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டதாம். மேடம் ஜெயலலிதா கொடுத்த யானைக்கு போன மாதம் மதம் பிடித்து இருந்ததாம். நான் ஒரு யானைக்கு பக்கத்தில் தும்பிக்கை பிடித்து போட்டோக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கும் போது யானைப்பாகன் இந்த செய்தினை சொல்லி, மேலும் எல்லா யானைக்கும் மதம் பிடிக்கும் என்று கூறி என்னை பதற வைத்தார்.
65 யானைகளில் 6 மட்டுமே பெண் யானைகளாம், இரண்டு யானைக்கு பால் தெரியாதாம்.. மீதி இருந்த யானைகள் எல்லாம் பெரிய தந்தங்களுடன் கம்பீரமாய் இருந்தன. 6 பெண் யானைகள் மட்டும் இருந்தால் ஏன் மற்ற ஆண் யானைகளுக்கு மதம் பிடிக்காது??


Tuesday, October 05, 2010

ஒரு மாதமாக ஊரில் இல்லை...

ஆகஸ்டு கடைசியில் ஒரு வாரம் கரூர் சென்று அப்படியே திண்டுக்கல்,கிருஷ்ண ஜெயந்தி அன்று பழனி போய்விட்டு சென்னை திரும்பினால் அடுத்த நாளே சொந்தத்தில் ஒருவர் தாத்தையங்கார் பேட்டையில் இறந்து விட அதற்கு அம்மாவை அழைத்துக் கொண்டு வைகையில் திருச்சி போய் அங்கிருந்து பஸ்ஸில் தா.பேட்டை போய் விட்டு திரும்ப வரும் போது காரில் நாமக்கல்,சேலம்,வேலூர், காஞ்சிபுரம் வழியாக தாம்பரம் வந்தால் அடுத்த நாள் என் தங்கை பெங்களூரூவில் 15 நாட்கள் ட்ரைனிங்கில் இருக்கிறேன் வாரக்கடைசியில் 3 நாட்கள் வந்தால் ஷாப்பிங் செய்துட்டு, கோயில் போகலாம் என்று அழைக்கவும் அப்படியே பஸ்ஸில் பெங்களூருக்கு விசிட், அங்கிருந்து சென்னை வந்த மறுநாள் விசாகப்பட்டினம் 5 நாட்கள், +2 படிக்கும் என் மச்சினர் மகள் டேக்கோண்டோ என்னும் விளையாட்டில்
இண்டர் நேஷனல் லெவலில் கலந்துக் கொள்ள திண்டுக்கலில் இருந்து வந்து இருந்தாள் அவளை தனியே அனுப்ப மனமில்லாமல் நானும் தமிழ்நாட்டில் இருந்து வந்த 18 பெண் குழந்தைகளுடன் சென்று வந்தேன். விசாகப்பட்டினத்தில் இருந்து திரும்பி வந்த இரண்டு நாளில் கனடாவில் இருந்து வந்திருக்கும் தோழி கெளரி துணைக்கு அழைத்தத்தால் ஃப்ளைட்டில் கொச்சின் சென்று கார் எடுத்து குருவாயூர்,திருச்சூர்,சாலக்குடி போய்விட்டு 30 ஆம் தேதி இரவு இனிதே ஃப்ளைட்டில் சென்னை திரும்ப வந்தேன்.


விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாசலம்..

மரோசரித்திரா,புதுபுது அர்த்தங்கள் படத்தில் வரும் கடல்..


வைசாக்கில் சப்மெரைன் மியூசியம், காளிக் கோயில்...


வைசாக்கில் நாங்கள் தங்கி இருந்த ஆந்திரா யுனிவர்சிட்டி ஹாஸ்டல்..


குருவாயூரில் புன்னத்தூர் என்ற இடத்தில் இருக்கும் யானைக் கோட்டையில் 65 யானைகள் உள்ளன.சித்தார்த் என்ற இந்த யானை குளிக்கும் அழகே அழகு.


யானையுடன் தைரியமாக நாங்கள்..

அத்திரப்பள்ளி அருவியில் மிதமான தண்ணீர்..

இப்படியே ஊர் சுற்றிக் கொண்டு இருந்ததால் ஒரு மாதமாக இணையத்தினை விட்டு பிரிய வேண்டியதாகி விட்டது. ஒரு மாதத்தில் கர்நாடகா,ஆந்திரா,கேரளா, அப்பப்ப தமிழ்நாடு என்று சுற்றியாச்சு. இந்த மாதம் எங்கேயும் ப்ளான் இல்லை!!!..