Showing posts with label வெரைட்டி. Show all posts
Showing posts with label வெரைட்டி. Show all posts

Wednesday, August 21, 2013

வெரைட்டி ஆகஸ்ட்- 2013

இந்தியன் பேங்க் டெபிட் கார்ட்+ 100 ரூபாய் எடுத்து கொண்டு தி.நகர் ஷாப்பிங் போனேன். முதல் மூன்று ஏ.டி.எம்மில் க்யூவில் இருந்த யாருக்குமே பணம் எடுக்க முடியவில்லை. சரி என்று அடுத்த ஏ.டி.எம் போனால் அங்கேயும் அதே கதை.இந்தியன் பேங்க் ஏ.டி.எம் போனதும் தான் தெரிந்தது பேங்கில் தான் ஏதோ ப்ராப்ளம் என்று. தி.நகர் போயிட்டு 10 ரூபாய்க்கு மூன்று கட்டு கொத்தமல்லியும்,20 ரூபாய்க்கு 2 கவர் பூவும் வாங்கிட்டு வீட்டிற்கு அசுர பசியோடு வந்தேன். எப்பவும் இந்த ஏ.டி.எம் கார்டை நம்பி நான் பணம் இல்லாமல் எங்கேயும் போகவே மாட்டேன். அன்னைக்கு என்ன ராசியோ.


மாம்பலம் ரயிலடியில் அடுத்து எடுத்து வைக்கும் அடியே சரவணாதான் என்று சமந்தா விளம்பரம் பார்க்கும்/கேட்டும் போதெல்லாம் எரிச்சலாய் வரும். எரிச்சல் சமந்தா மேல் அல்ல. அந்த கடைக்காரர் மேல். மார்க்கெட் பகுதியில் அந்த புதுக்கடைக்கு சைடாய் இருந்த 30 காய்,பழக்கடைகளை எடுக்க சொல்லி கட்டாய படுத்தி எடுத்தும் விட்டார்கள். கடைக்கு சைடாய் இருக்கும் கேட் வழியாக கடைக்கு சரக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று சொல்லி இந்த அநியாயம் நடந்து உள்ளது. 40 வருடங்களாய் கடை வைத்து இருந்தவர்கள் யாரிடம் முறையிட்டும் பயனின்றி புலம்பி கொண்டு இருக்கிறார்கள். அந்த மார்க்கெட் ரோடு யார் வீட்டு சொத்து என்று தெரியவில்லை.நான் மாம்பலம் போகும் போதெல்லாம் பட்டர் பீன்ஸ் வாங்கும் கடைக்காரம்மா எதிரில் இருக்கும் அவரின் மச்சினர் கடையின் வாசலிலேயே தன் கடையினை தொடங்கி விட்டார். நாசமாதான் போவாங்க என்று வாழ்த்தி கொண்டே வியாபாரம் பார்த்து கொண்டு இருந்தார்.


பஸ்ஸில் வரும் போது பல்லாவரம் பஸ்-ஸ்டாண்டில் எங்கள் பஸ்ஸில் இருந்து இறங்கியவர்களிடம் வெடு வெடு என இருவர் டிக்கெட் செக் செய்தனர். அப்போது பஸ்ஸில் ஒருவர் ஏறிவிட்டார். இறங்கியவர்களிடம் செக்கிங் முடிந்ததும் ஏற போனவர்களை யாரும் ஏறவேண்டாம் என்று கொஞ்சம் லேட்டாக சொல்லி விட்டு அவர் ஏறி படி அருகில் இருப்பர்களை செக்கிங் செய்ய பல்லாவரத்தில் ஏறியவர் இப்ப தான் ஏறினேன் என்று சொல்ல சொல்ல கேட்காமல் செமையாக திட்ட ஆரம்பித்தார்.அவர் ஏறியதை  நிறைய பேர் பார்த்தும் யாரும் அவருக்கு சப்போர்ட் செய்யவில்லை. நான் அவர் இங்கே ஏறியதை நான் பார்த்தேன் என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருந்தவர்களுக்கு டோஸும் விட்டேன்.அதன் பின் செக்கிங் ஆள் கீழே இறங்கினார். நம் மக்கள் ஏனோ நியாயம் பேச கூட ரொம்ப தான் யோசிக்கிறார்கள்.

கடந்த 5 வருடங்களாக எனக்கு ஒரு பழக்கம். மெயில் பாஸ்வேர்ட்களை நான் என் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்று ஆசை படுகிறேனோ (நியாயமான ஆசை) அதையே வைத்து விடுவேன். நல்லதை நினைத்தால் அது நடக்கும் என்பார் என் அம்மா.

எனவே நல்லதை  நினைத்து கொண்டே டைப்பினாலும் நல்லதே நடக்கும் இல்லையா. ஒரு அக்கவுண்டிற்கு பாஸ்வேர்ட் காசி என்று வைத்தேன். கடந்த 5 வருடங்களில் 4 முறை காசி போயிட்டு வந்தாச்சு. இன்னொரு அக்கவுண்டிற்கு Own House என்பதே பாஸ்வேர்ட். கடந்த 3 வருடங்களாக வைத்து இருந்தேன். போன வருடம் புது வீடு கட்டி விட்டேன். அப்புறம் எப்பூடி?

Thursday, September 27, 2012

வெரைட்டி (2012 செப்டம்பர்)

விமானத்தில் பயணம் செய்து  கொண்டு இருக்கும் போது குழந்தை பிறந்தால் பிறப்பு சான்றிதழில் பிறந்த இடம் என்ன போடுவது? 30,000 அடி உயரம் என்றா? குழந்தையின் சிட்டிசன்ஷிப்? இதற்கு தீர்வாக UNO பறந்து கொண்டிருக்கும் ஃப்ளைட் எந்த நாட்டுடையதோ அந்த நாட்டின் பெயரை குழந்தையின் சிட்டிசன்ஷிப்பாக குறிப்பிட சொல்கிறது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது பணிபெண்களுக்கு பிரசவம் பார்க்க ட்ரையினிங்கே கொடுத்து வருகிறதாம். ஏனெனில் வருடம் ஒரு முறை அவர்களின் ஃப்ளைட்டில் பிரசவம் நடக்கிறதாம். இந்த குழந்தைகளுக்கு பிறக்கும் போதே அவசரம் தான்.அப்பெல்லாம் அம்மாக்கள்,பாட்டிகள் வீட்டிலேயே இந்த ரூமில் அவன் பிறந்தான், அந்த ரூமில் இவன் பிறந்தான் என்று காண்பிப்பார்கள்.

அமெரிக்காவில் தன் அப்பாவையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி இருக்கிறார் வலாரி என்ற 60 வயது பெண். கணவர் இறந்த பிறகே அவருக்கு இந்த உண்மை தெரிந்து உள்ளது. என்ன கொடுமை இது.


"Feeling cool. Today Dumped My ex-girlfriend.Happy independence Day" அப்படிங்கிற தன் காதலனின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் பார்த்துட்டு  ஜார்கண்ட்டை சேர்ந்த பெங்களூரு ஐ.ஐ.எம்மில் படித்த மாலினி என்ற பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார்.ஸ்டேட்டஸ் போட்ட அறிவாளி ரூர்க்கி ஐ.ஐ.டி மாணவராம்.என்ன படிச்சு என்ன யூஸ்?

புரூனே சுல்தானின் பெண் கல்யாணம் செப்டம்பர் 22-ல் நடந்ததாய் பேப்பரில் படித்தேன்.சரி நகை விற்கிற விலையிலே 11 குழந்தைகளை பெற்ற சுல்தான் நகை நட்டுன்னு தன் பெண்ணிற்கு என்ன போட்டார்னு கொஞ்சம் நெட்ல ஆராய்ந்ததில் இந்த சுல்தானுக்கு சுக்கிரன் செம உச்சம். நம்ம திருப்பதி வெங்கியையே முந்திடுவார் போல இந்த புரூனே நாட்டு சுல்தான்.அந்த நாட்டில் 167,000 பேரல் ஆயில் ஒரு நாளைக்கு எடுக்கப்படுகிறதாம்.மலாய் மொழியும்,இஸ்லாமும் தான் பெரும்பான்மையினரின் மொழியாக,மதமாகவும் உள்ளது. அங்கு அரசு ஆஸ்பத்திரியில்  கிடைக்காத ட்ரீட்மெண்டிற்கு மக்களை மேல் நாடுகளுக்கு அரசே தன் செலவில் அனுப்பி வைக்குமாம். அங்கு இரண்டு பேர்களுக்கு ஒரு கார் இருக்குதாம். இருக்காதா பின்ன பெட்ரோல் இப்படி சல்லிசா கிடைச்சா?சுல்தானின் அரண்மனையில் 1788 அறைகளாம்.சுல்தான் 3000 கார்கள் வைத்திருக்கிறாராம்.சரி சரி சொர்க்கமே என்றாலும் அது நம்மை ஊரை போல வருமா?



Wednesday, June 06, 2012

வெரைட்டி - 2012 (ஜூன்)

எங்களுக்கு தெரிந்த பெண் டூவீலரில் சோழிங்கநல்லூரிலிருந்து நாவலூர் போய் கொண்டு இருந்த போது சோழிங்க நல்லூர் தாண்டியதும் இருவர் தங்கள் வண்டியினை இவரின் டூவீலருக்கு முன்னால் க்ராஸ் செய்து  உள்ளார்கள்.இவர் வண்டியினை வேகம் குறைக்கும் முன்பு முன்னால் சென்ற வண்டியில் இருந்து ஏதோ ஒழுகி உள்ளது.அதில் இவர் வண்டி ஸ்லிப் ஆகி வண்டியினை நிறுத்தி என்னவென்று முன்னால் எட்டி பார்க்கவும் முன்னால் வண்டியில் சென்றவர்கள் மிக அருகாமையில் அவர்களின் வண்டியினை நிறுத்தி ஒருவன் கத்தியினை காட்டி கத்தாதே குத்திடுவேன் என மிரட்ட இன்னொருவன் தன் கையில் இருந்த கட்டிங் ப்ளேயரில் அவரின் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை கட் செய்து கொண்டு பறந்து விட்டார்கள்.

மிக தைரியமான அந்த பெண் ஓரமாய் நின்று கொஞ்ச நேரம் அழுது விட்டு தன் வீட்டிற்கு ஃபோனில் விபரத்தினை சொல்லி விட்டு கொஞ்ச தூரம் தள்ளி உள்ள கடையில் அமர்ந்து இருந்தாராம்.தாம்பரத்திலிருந்து அவரின் அப்பா அங்கு வரும் வரை அவர் உடல் நடுங்கி கொண்டே இருந்ததாம். எவ்வளவோ சொல்லியும் போலீசில் சொல்லவில்லை. தினமும் அந்த வழியில் செல்ல வேண்டி இருப்பதால் பயமாக இருக்கிறது என்று சொல்கிறார்.பழைய மகாபலிபுரம் சாலையில் நிறைய போலீசுகள் சுற்றி கொண்டே தான் இருக்கிறார்கள். இப்படி கம்ப்ளெயிண்ட் செய்யாதது தான் அந்த திருடர்களுக்கு சாதகமாய் போய் விடுகிறது. அந்த திருடர்கள் டிப் டாப்பாய் இருந்தார்களாம். கழுத்துக்கு அருகில் கத்தி வந்தால் நம் தைரியம் அவ்வளவு தான் போலிருக்கிறது.

+2,10த் ரிசல்ட் வந்தால் நான் தெரிந்தவர்கள் யாரும் எழுதி இருந்தாலும் ரிசல்ட் கேட்கவே மாட்டேன். ஆனாலும், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விபரம் அதுவா காத்து வாக்கில் நமக்கு வந்து சேரும்.
ஒருவர் தன் மகனுக்கு கோயம்புத்தூர் புகழ் பெற்ற காலேஜில் 12 லட்சம் கொடுத்து ஆட்டோமொபைல் கோர்ஸ் விலைக்கு வாங்கி உள்ளதை ஏதோ சாதித்து விட்டது போல் கூறினார்.அரசாங்கத்தில் 21 வருடம் வேலை பார்த்து கடைசியில் வரும் செட்டில்மெண்ட் கூட அவ்வளவு இருக்காதே.
ஒருவர் தன் மகனுக்கு ஒன்றரை லட்சம் கொடுத்து முகப்பேரில் ஒரு இண்டர்நேஷனல் பள்ளியில் ப்ரீ.கே.ஜி சீட் வாங்கி விட்டாராம். இந்த இரண்டில் எது பரவாயில்லை என்று “ஙே” முழி முழித்து கொண்டு நான்.சில பல வருடங்கள் கழித்து இவர்கள் என்னாவானார்கள் என்று மட்டும் விசாரிக்க வேண்டும்.

எப்பவும் குடும்பத்துடன் போகும் சம்மர் டூர் இந்த முறை போகவில்லை.புதியாதாய் வீடு கட்டி குடி புகுந்து 4 மாதங்கள் தான் ஆகிறது.நோ டப்பு. எனவே ஏற்கனவே போய் வந்த காஷ்மீர்,ஊட்டி டூர் ஃபோட்டாக்களை பார்த்து கொண்டு பொழுது போகிறது.



எல்லா வருடமும் போலவே இந்த வருடமும் வெயில் சென்னையில் வறுத்து எடுக்கிறது. எல்லா வருடமும் போலவே நாங்களும் ஆஹா என்ன அருமையான வெயில், எங்கே தொட்டாலும் எப்படி சுடுகிறது, கண்ணெல்லாம் எப்படி எரிகிறது,பாத்ரூம்,கிச்சன் குழாயில் எல்லாம் வெந்நீர் எப்படி அதுவா வருகிறது என்று அணு அணுவாய் ரசித்து கொண்டு இருக்கிறோம்.

போன மே மாதத்தில் வீட்டிற்கு வந்த ரியோ


இப்போ ரியோ

டெர்ரரா இருக்கான்.சேர்ந்த இடம் அப்படி.நகுல்,ரிஷி,விஷால் வரிசையில் இப்போ ரியோவுடன் பொழுது போகுது.




Sunday, August 28, 2011

வெரைட்டி-ஆவணி 2011

ஹாங்காங்கில் நாய்களுக்கு அமைதியாய் இருக்க யோகா சொல்லி தருகிறார்களாம்.அதற்கு டோகா என்று பெயராம்.அப்படியே அவைகள் அந்தரத்தில் மிதக்க நித்தியானந்தரிடம் அனுப்பலாம்.

அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ ஏன் ஐ மட்டும் ஒன்றே ஒன்று இருக்கு.ஒண்ணாப்பு படிக்கும் விஷால் என்னிடம் கேட்ட கேள்வி. அது அப்படி தான் என சமாளிச்சிங்.

நேற்று ஒரு வயதான அம்மா என்னுடன் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தார்கள்.மகன் வீட்டிற்கு வந்துட்டு என் வீட்டிற்கு போறேன்மா என்று அவர்களாகவே சொன்னார்கள்.தனியாவா இருக்கிறீங்க என்று கேட்டேன்.ஆமாம்மா,என் வீட்டுக்காரருடன் இருக்கிறேன். சொந்த வீட்டில் என் மூன்று மகன்களும் அவர் அவர் மனைவி குழந்தைகளுடன் இருக்கிறார்கள். நாங்க வாடகை வீட்டில் இருக்கிறோம். மருமகள்கள் பேர குழந்தைகள் படிக்கலை என்று தினம் அடிப்பதை பார்க்க சகிக்கலைம்மா.ஏன் இப்படி அடிக்கிறீங்க என்று கேட்டால் உங்களால் தான் இந்த குழந்தைகள் கெடுகிறார்கள் என்று சொல்றாங்கம்மா அதான் வாரம் ஒரு முறை மட்டும் பேரப்பிள்ளைகளை பார்த்து போவேன் என்றார். நான் இப்போது வீடு கட்டி கொண்டிருக்கும் ஏரியாவிற்கு போய்விட்டு மதியம் வீடு திரும்பி கொண்டு இருக்கும் போது அவர்களை சந்தித்தேன். அவர்கள் சொன்னதை கேட்டதும் இவ்வளவு கஷ்டப்பட்டு வீடு கட்டணுமா என்று தோன்றியது.

உலகிலேயே நீளமான பாலம் 36 கி.மீட்டருக்கு சைனாவில் இருக்கிறது.

ரயில்வே காலனியில் குடியிருந்த போது போது டிரைவர்,கார்டு.டி.டி.ஆர் வீடுகளில் லைனுக்கு போறேன் என்று சொல்லி வேலைக்கு போவார்கள். யாராவது வீட்டுக்காரர் எங்கே என்று கேட்டால் வீட்டில் இருக்கும் பெண்கள் அவரா ஆன் லைன்ல இருக்கிறார் என்று சொல்வார்கள்.இப்ப நெட் வந்த பிறகு தான் நாமெல்லாம் ஆன் - லைனில் இருக்கிறோம். அவர்கள் முன்பே ஆன் - லைனில் இருந்து இருக்கிறார்கள்!!!.

Monday, July 04, 2011

வெரைட்டி-ஆனி 2011

ஒல்லியாவே இருக்கிறேன் கொஞ்சமா குண்டாக என்ன செய்றது என்ற ரிஷியிடம் என் அம்மா தினம் காலையில் பழைய சாதம் அல்லது தயிர் சாதம் சாப்பிடு உடம்பு போடும் என்று சொல்லவும் ரிஷி 10 நாட்களாக காலையில் சாதம் சாப்பிடுகிறான்.என் தம்பி மகன் விஷால் ரிஷியிடம் அச்சச்சோ ஏன் நாய் புவ்வா(சாதம்) சாப்பிடுறீங்க? என்று கேட்கவும் ரிஷி முகத்தினை பார்க்கணுமே.விஷாலுக்கு தயிர் அலர்ஜி.

புதியதாய் ஹைதையில் இருந்து என் வீட்டின் பக்கத்தில் குடிவந்திருக்கும் ஃப்ரெண்ட் ஒருவரின் சகோதரிக்கு ஒரு வாரமாய் தமிழ் ட்யூஷன் நான் தான். அப்படியே என் சுந்தர தெலுங்கையும் டிங்கரிங் செய்து கொண்டு இருக்கிறேன்.

முன்பெல்லாம் தியேட்டர்,ட்ரையினில் மூட்டை பூச்சிகள் அதிகம் இருக்கும். இப்ப இல்லையே எங்கே போச்சு என்று நினைப்பேன். அமெரிக்கவில் மூட்டை பூச்சி அதிகமாம். எல்லா மூட்டை பூச்சிக்கும் யாருப்பா விசா கொடுத்தது?இறப்பதற்கு முன் ஒசாமா செய்த சதியா இருக்குமோ.


2009-ல் நான் மலேஷியா போன போது 13-ஆம் வாய்பாடு தெரியாமல் ஷாப்பிங் செய்ய மிக கஷ்டப்பட்டேன்.இனி தெரிந்து நோ யூஸ்.இப்போ போனா 14-ஆம் வாய்ப்பாடு தான் தெரியணுமாம்.ஏன்னா,ஒரு ரிங்கிட் இப்ப 14 ரூபாயாம்.



இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 
நன்னயம் செய்து விடல்..

திருவள்ளுவர் சொல்லி சென்றது. இதன் படி நடக்கலாம் என்று பார்த்தால் இப்பெல்லாம் இன்னா செய்பவர்களுக்கு நாணமே வராது போல.பிறகு அவருக்கு நன்னயம் செய்து என்ன பயன்? விடல் என்றால் பயன் இருக்காது,ஆனாலும் நல்லது செய் என்கிறார் போல.



படித்த ஜோக்:

சில வருடங்கள் முன்பு ஒரு வடை 50 காசு.ஒரு ஃபோன் கால் ஐந்து ரூபாய்.

இப்போது ஒரு வடை ஐந்து ரூபாய்.ஒரு ஃபோன் கால் 50 காசு.

டெக்னாலஜி ரொம்ப வளர்ந்து என்ன? வடை போச்சே???

Thursday, January 27, 2011

வெரைட்டி-தை-2011

பொங்கல் அன்று எதிர் வீட்டில் 3 மாதம் முன்பு புதியதாய் குடி வந்து இருக்கும் ஒரு குடும்பத்திற்கு பொங்கல் கொடுத்து வாடா என்று நகுலிடம் கேட்ட போது, போங்கம்மா அந்த வீட்டில் யாரும் முகம் கூட பார்க்க மாட்டாங்க, பேசவே மாட்டாங்க நான் போக மாட்டேன் என்றான், நீங்களும் பேசி நான் பார்த்தது இல்லை என்ன திடீரென்று பொங்கல்,பாயாசம் என்று பார்சல் என்றான். அதற்கு ரிஷி நகுலிடம் சொன்ன பதில் கடைசி பத்தியில்.


போன வாரம் தம்பி மகன் விஷால் ஸ்கூல் டே ஃப்ங்ஷன். சார் டான்ஸ் ஆடுகிறேன் என்று 10 நாளா தினம் ஃபோனில் சொல்லிட்டே இருந்தான்.சரி என்று ஸ்கூலுக்கு போனேன். உன் கூட ஆடப்போகும் பெண் பெயர் என்னடா கேட்டால் ஒரே வெட்கம் சாருக்கு. அப்புறம் ரொம்ப அலட்டிக் கொண்டு ஒரு குட்டிப் பெண்ணை காண்பித்தான். பெயர் எல்லாம் தெரியாது என்று சொல்லிட்டான்.சரியென்று அந்த பெண்ணிடம் பெயர் கேட்டேன். அது அதிபயங்கர வெட்கத்தில் ப்ரியா என்று சொல்லிச்சு. உடனே இவன் மம்மி நீங்க யார் கிட்டேயும் இதை சொல்ல கூடாது என்று சொல்லிட்டான்.இது ஏன்னுதெரியலை. வெட்கமாம்.மூன்றாவதாக அவனின் ப்ரோக்ராம் வந்தது. நல்லாதான் ஆடினார்கள். ஆனால் குழந்தைகள் போட்டிருந்த ட்ரெஸ் கலர் தான் சகிக்கலை. மண் கலர், மரக்கலர்,இட்லி பொடிக்கலர்,மூக்குப்பொடி கலர் என்ன ரசனையோ அந்த டீச்சருக்கு. வேறு டான்ஸ் ஆடினவர்கள் எல்லாம்   
கலர்ஃபுல்லாய் இருக்க இவர்கள் ட்ரெஸ் கொடுமையாய் இருந்தது. ஆனால், குழந்தைகள் முகத்தில் இருந்த வெட்கம் கலந்த சிரிப்பு பார்க்க பார்க்க சூப்பர்.



போன வீக் எண்டில் ஒரு சூறாவளி சுற்றுப்பயணம். திண்டுக்கல், சோழவந்தான், சுல்தான்பேட்டை, கோயமுத்தூர் என பஸ்ஸிலேயே சுற்றி விட்டு வந்தோம்.சோழவந்தான் ஒரு குட்டி கேரளா.திண்டுக்கல் டூ வாடிப்பட்டி தனியார் பஸ்ஸில் இளையராஜா ராஜ்ஜியம் தான்.பாட்டு கேட்டுக் கொண்டே பசுமையில் பயணம் அருமையாக இருந்தது.

அப்புறமா சுல்தான்பேட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மாமா பெண் வீட்டிற்கு ஒரு விசிட்.மேடம் அலுவலகமும், வீடும் ஒரே காம்ப்பவுண்டினில்.காலை டீ,மதிய சாப்பாடு, மாலை டிபன் என வீட்டிற்கு அடிக்கடி விசிட் செய்கிறார். ஆனால், லீவு போட்டால் கூட வேலை செய்ய வேண்டி இருக்கும் சில சமயங்களில் என சலித்துக் கொண்டார்.

கோயம்புத்தூரில் என் கணவரின் ஃப்ரெண்ட் கேன்சருக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டு இருக்கிறார். அவரை பார்க்க சென்றோம். நானெல்லாம் தண்ணீ அடிச்சேன், ஸ்மோக் செய்தேன்.இப்ப அனுபவிக்கிறேன் , ஆனால் எந்த தப்பும் செய்யாத குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். கீமோவிற்கு செல்லும் போது அங்கு ட்ரீட்மெண்ட் செய்ய வரும் 5 வயது குழந்தைகளை நினைத்து தான் அவர் புலம்பினார். இந்த கேள்விக்கு பதில் தெரியலை.

போன மாதம் ஒரு நாள் மதியம் வீட்டில் நான் இல்லாத போத பூட்டி இருந்த வீட்டு வாசலில் எனக்கு ஃபோன் செய்துட்டு ரிஷி காத்து இருந்த போது அந்த எதிர் வீட்டு பெண் உன் அக்கா காலையில் 11 மணிக்கு போனாங்க, நீ வேணா என் வீட்டில் வெயிட் செய் என்று சொல்லி இருக்கிறார்.  ஆண்ட்டி அவுங்க என் அக்கா இல்லை, என் அம்மா, ஃபோன் செய்துட்டேன் இப்ப வந்துடுவாங்க என்று சொல்லி இருக்கிறான்.அன்று நான் வந்ததும் உங்களை அக்கா என்று நினைச்சுட்டாங்கம்மா என்று சிரித்தான்.அன்றுஅக்கான்னு அவுங்க சொன்னதுக்கு தான் நான் பொங்கல் கொடுக்கிறேனாம்.இல்லையே! ஒரு நட்பு உணர்வுடன் கொடுத்தால் இந்த காலத்து பசங்க இருக்காங்களே !!!


Sunday, November 14, 2010

வெரைட்டி-15/11/10

ஒரு ஓல்ட் மேனை பற்றி பேசும் போது அந்த பழையவர் என்றார் என் மகனின் நண்பி. சிரித்ததற்கு ஓல்ட் என்றால் பழையது தானே அர்த்தம் என்கிறார்.. பக்கத்து வீட்டில் அவரைக்காய் அவுத்தாங்க (பறித்தாங்க) அதான் எங்க வீட்டில் இன்று அவரைக்காய் செய்தோம் இதுவும் அந்த நண்பியின் பொன்மொழிதான்.தமிழ் பேச நாம் தயங்கும் போது வட இந்திய நண்பர்கள் தான் தமிழை இது போல் வளர்க்கிறார்கள்.


இனி கொஞ்சம் சீரியஸ்:
ஆங்சான் சூகி மியான்மரில் 15 வருடங்களாக வீட்டுக்காவலில் இருந்த இந்த இரும்பு பெண்மணி சனியன்று (13 நவம்பர்) விடுதலை ஆனார். இவரது விடுதலையினை உலகமே எதிர்ப்பார்த்து இருந்தது.. ஆங்சான் சூகி பற்றி.
நம்ம ஊரு அரசியல்வாதிகளும் இருக்காங்களே.

இந்தியாவில் குழந்தைகள் தினம் இந்த மாதம் 14 கொண்டாடப்படுவது போல உலகம் முழுவதும் குழந்தைகள் தினம் நவம்பர் 20-ல் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கியநாட்டு சபை அறிவித்த தினம் ஆகும்.1959-ல் குழந்தைகளின் உரிமைகளை அறிவித்த தினமே குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
மிர்சி ரேடியோவில் குழந்தைகள் தினம் கொண்டாட குழந்தைகளை அழைத்து  ”எந்திரன்” தினம் கொண்டாடினார்கள். அனைத்துக் குழந்தைகளும் எந்திரன் பாட்டு, எந்திரன் வசனம் மனப்பாடமாய் சொன்னார்கள்.

ஹாம் ரேடியோ பயன்பாட்டாளர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்வதை ஒரு பொழுது போக்காக வைத்து இருக்கிறார்கள். ஒர் ஹாம்ஸ் FM ரேடியோவில் இண்டர்வியூ கொடுத்தார். ஜில் புயல் ஞாயிறு காலையிலேயே நம் சென்னையினை கடந்து விட்டதாகவும் எதற்கு மீட்டரலாஜிக்கல் டிபார்ண்மெண்ட் திங்கள் அன்று ஜில் கரையினை கடக்கும் என்று சொல்லியது என்பது தெரியவில்லை. அதனை நம்பி திங்கள் அன்று அரசு விடுமுறை விட்டது வேஸ்ட் என்றும் தெரிவித்தார். ஒரு சின்ன கருவியினை ( நாலயிரம் ரூபாய் தான் ஆகுமாம்) வைத்துக் கொண்டு அவர்கள் இப்படி நிச்சயமாக இயற்கையினை கணிக்கிறார்கள். மிஸ்டர் ரமணன் வேலை பார்க்கும் துறையில் எவ்வளவு பெரிய கருவிகள் இருக்கும். ஏன் இப்படி கணிப்பு தப்புகிறது. ரமணனுக்கு ஸ்கூல் படிக்கும் சின்ன பசங்க இருப்பாங்கம்மா, அந்த பசங்களுக்கு லீவு வேணும்னா ரமணன் சார் இப்படி செய்வார் போல இது என் மகன் நகுலின் கணிப்பு.

புதுக்கோட்டையில் இறந்து போனவரை வைத்திருக்கும் ஐஸ்பெட்டியினை தொட்டு அழுத இரண்டு பேருக்கு ஷாக் அடித்து இப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அட ராமா....


Tuesday, August 17, 2010

வெரைட்டி

சுதந்திர தின விழாவினை கொண்டாட எங்கள் வீட்டின் பின்னால் இருக்கும் க்ரவுண்ட் மாதிரி ஒரு இடத்தினை எங்கள் தெருவினை சேர்ந்த ரிட்டயர்ட் பெரிசுகள் சிலர் தேர்ந்தெடுத்து 14 தேதி மாலையில் சுத்தம் செய்தனர். ஆனால், நின்று கொண்டு இருந்த மரத்தின் கிளைகளை அகற்றியது எனக்கு பெரும் கோபத்தினை ஏற்படுத்தியது. அந்த கிளைகளின் அடியில் நின்று தான் ஒரு தாத்தா பாட்டி தினம் துணி அயர்ன் செய்கின்றனர். வேண்டும் என்றே அதனை மொட்டை அடித்து விழா கொண்டாடினர். இப்படி கொண்டாட விட்டால் என்ன மோசம் என்று தோன்றியது. சும்மாவே நட்புடன் ஒரு சிரிப்பு கூட சிர்க்காத அந்த பெரிசுகளுடன் நான் எதுவும் பேசவில்லை. நான் இருப்பது வாடகை வீடு. பெரிசுகள் அனைவரும் வசிப்பது சொந்த வீடு.

தி.நகரில் இருந்து கிழக்கு தாம்பரத்திற்கு 5A ஏஸி பஸ் புதியதாய் விடப்பட்டுள்ளது. அதில் போன வாரம் ஒரு நாள் பகல் வேளையில் வேளச்சேரியில் இருந்து தாம்பரம் வரை நான் மட்டுமே பயணம் செய்தேன்.
பகல் பொழுதில் அந்த பஸ் அவசியமா??

கொஞ்ச நாட்கள் முன்னாடி என்னுடன் பணியாற்றிய ஒரு ஆசிரியையை 5 வருடங்கள் கழித்துப் பார்த்தேன். பேசிக் கொண்டு இருந்த 2 மணிநேரமும் தன் ஒரே பெண்ணை பற்றி தான் பேசினார். பெண் இஞ்சினியரியங் முடித்து, சாப்ட்வேரில் பணியில் இருக்கிறார். திருமணம் முடித்து ஒரு குழந்தை இருக்கிறது. வேறு எதை பற்றியும் பேசவே இல்லை அந்த பெண்.பாப்பா, பாப்பா என்று ஒரே பாப்பா (25 வய்து) புராணம் தான். வீட்டிற்கு வந்து என் இரண்டு மகன்களிடம் கூறினேன் உங்களை பற்றி என்னால் ஒரு 10 நிமிடம் கூட தொடர்ந்து பேச முடியாதுடா என்று. ஒரே பெண் என்பதால் அவர் அப்படியா அல்லது எனக்கு பாசம் பத்தலையா என்று ஒரே கில்டியாய் போச்சு.

கோத்தகிரியில் இருக்கும் அம்மாவின் கொடநாடு வீட்டிற்கு அம்மா வரும் போதெல்லாம் அங்கு இருக்கும் அரசாங்க ஆஸ்பத்திரியின் டாக்டர் குழுமம் ஆம்புலன்சில் அவரின் வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டுமாம். ஆனால், அவர்களை எதோ காவல்காரன் மாதிரிதான் அந்த வீட்டில் இருப்பவர்கள் மதிப்பார்களாம். கூடவே ஒரு டாக்டர்கள் குழு சென்னையிலிருந்து அம்மாவுடன் வருமாம். ஆனாலும், இவர்கள் தேமே என்று காத்து இருப்பார்களாம்.

காஞ்சிபுரம் ஏ.எஸ்.பாபுஸா என்ற பட்டுப்புடனை கடை மிக ஃபேமசானது. போன மாதம் அந்த கடைக்கு போன போது கர்நாடகாவில் இருந்து வந்திருந்த ஒரு குடும்பம் 6 பெண்கள் துணைக்கு இரண்டு ஆண்கள் பில் போட்ட புடவைகளின் எண்ணிக்கை 80 இருக்கும். குடும்பத்தில் கல்யாணமாம். காலையில் இருந்து எடுத்துக் கொண்டு இருந்தனர். நாங்கள் இரவு 8 மணிக்கு அந்த கடையில் இருந்தோம்.எடுத்து வைத்த மொத்த புடவையையும் கீழே வைத்து சுத்தி அமர்ந்து பில் போட்டதால் எண்ணிக்கை தெரிந்தது. கர்நாடகா, ஆந்திரா மக்கள் வேன், கார் என்று வந்து இங்கு அள்ளுகிறார்கள். நாம் தான் தி.நகர் மட்டும் போகிறோம்.மொத்தமாய் எடுத்தால் விலை குறைகிறது இங்கு.

என் மகன் ரிஷியும் ஆக்டோபசும் ஒன்று. மெரி ப்ரவுனிற்கு உலக கோப்பை கால்பந்தாட்டம் நடந்துக் கொண்டு இருக்கும் போது போய் இருக்கிறான். அப்போது ஸ்பெயின் தான் ஜெயிக்கும் என்று கூப்பன் எழுதிப் போட்டு வந்து உள்ளான். அதற்கு பரிசாக 500 ரூபாய் மதிப்புள்ள ஃபுட் கூப்பனும், MGM நுழைவு டிக்கெட்டும் கூரியரில் அனுப்பி உள்ளார்கள்.

Tuesday, June 08, 2010

வெரைட்டி

அங்காடி தெரு பார்த்து விட்டு மிக சோகமாய் அழுகை அழுகையாய் வந்தது. இதற்கு எல்லாம் ஒரு முடிவே இல்லையா என்று ஒரு இயலாமையாய் இருந்தது.ஆனாலும், ஒரு வேலையும் இல்லாமல் சும்மா திருநெல்வேலியில் இருக்கும் +2,10 படித்த மாணவர்கள் வேறு என்ன தான் செய்ய முடியும்? இந்த வேலையாவது கிடைத்ததே என்று சந்தோஷமாக தான் நிறைய பேர் அந்த மாதிரி கடைகளில் வேலையில் சேருகிறார்கள். சமீபத்தில் சரவணா, ஜெயசந்திரன் கடைகளுக்கு சென்றிருந்தேன். எப்பவும் அந்த பணியாளர்களிடம் நான் எதாவது பேசி விட்டு வருவேன் சொந்த ஊர் பாசம். என்ன சாப்பாடு, எத்தனை நாட்கள் விடுமுறை, எப்ப கடைசியாக ஊருக்கு போனீங்க என்று விசாரிப்பேன்.சில சேல்ஸ் கேர்ள்ஸ் என்னக்கா ரொம்ப நாளா ஆளை காணோம் என்று விசாரிப்பார்கள். இந்த முறை அங்காடி தெரு பார்த்தாச்சா என்று கேட்டேன். ஆமாக்கா, ஹாஸ்டலில் போட்டாங்க பார்த்தாச்சு, நீங்க பார்த்தாச்சா என்று மிக சந்தோஷமாய் கூறினார்கள். வசந்த பாலன் மிகை படுத்தி எடுத்து விட்டாரோ என்று தோன்றியது.


டில்லியில் மெட்ரோ ரயில் திட்டம் அழகோ அழகு.அவ்வளவு சுத்தம்.அவ்வளவு ஒழுங்கு.ஆனால்,ஸ்டேஷனில் வயசானவுங்க போனால் உட்கார ஒரு சீட் கிடையாது.ஸ்டேஷன் உள்ளே போனால் ஏதோ வெளிநாட்டில் இருப்பது போல ஒரு பிரமை.காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நாம் இந்த ட்ரைன்களில் பயணம் செய்யலாம். மக்கள் எல்லோரும் ஒழுங்காய் வரிசையில் நின்று ட்ரையினில் ஏறுகிறார்கள்.புது டில்லி ஸ்டேஷனுக்கு அடுத்த ஸ்டேஷன் ராஜிவ் செளக் ஸ்டேஷனில் (அண்டர்கிரவுண்ட்)இறங்கி எஸ்கலேட்டரில் ஏறி மேலே வந்தால் பாலிக்கா பஜாரின் நம்பர் 1 கேட்டிற்கு வந்து விடுகிறது. முழு பஜாரும் அண்டர்கிரவுண்டில். டில்லி போனால் மெட்ரோ மிஸ் செய்யாதீர்கள்.

இரண்டு நாளாக மாலையில் கரண்ட் போவதும் ஒரு மணிநேரத்தில் ஒரு 10 நிமிஷம் வருவதுமாய் ராத்திரி வரை ஆட்டம் காட்டிக் கொண்டு இருந்தது. எத்தனை முறை ஃபோன் செய்தாலும் ஈ.பியில் எடுக்கவேயில்லை. ராத்திரி 10 மணிக்கு பிறகு நிலைமை சரியானது.என் மகன் கரண்ட் வந்ததும் ஃபோன் செய்தான்.உடனே எடுத்தார்கள். ஏன் அங்கிள் கரண்ட் வந்தா மட்டும் ஃபோனை எடுக்கிறீங்க என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்து விட்டான். அவர் அன்று இரவு நிம்மதியாக இருந்து இருக்கமாட்டார் என்பதில் அவனுக்கு அப்படி ஒரு அல்ப சந்தோஷம்.இன்னொரு நாள் முழு நாள் கரண்ட் இல்லை.அப்படி போனால் மாலை 5 மணிக்கு மேல் தான் வரும். ஆனால், போனவாரம் 4 மணிக்கே வந்தது. உடனே ஃபோன் செய்தவன் இன்னும் ஒரு மணிநேரம் இருக்கே என்ன அவசரம் கரண்டிற்கு என்று சொல்லி விட்டு ஃபோனை கட் செய்து விட்டான். என்னைக்கு ஆட்டோ வரப்போகுதோ தெரியலை.

முன்பெல்லாம் என் இரண்டு பசங்களுக்காக எல்லா விஜய் படங்களும் பார்த்து விடுவேன். கட்டாயம் கூட்டி போகணும். இப்ப என பசங்க பெரிசாகி விட்டார்கள் தப்பித்தோம் என்று நினைத்தால். மேலே ஃபோட்டோவில் இருக்கும் என் தம்பி மகன் விஷால் விஜயின் பெரிய ரசிகனாக உள்ளான். சுறா சூப்பராய் இருக்கும் என்று சொல்லி ஒரே அடம்.சரி என்று கூட்டிப் போனேன். சுறா கிட்ட கடி வாங்கி வந்தேன்.ஆனால் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.


Thursday, December 17, 2009

வெரைட்டி

இதுவும் தமிழ் தான்: டேய், எங்கேடா போன? பக பக-னு வானம் வெறிச்சிடுச்சு, நீ டக் டக்-னு வந்தால், மட மட-னு வேலையை ஆரம்பித்து சட்டு,புட்டுனு அடுத்த வேலையை பார்க்கலாம். ஒருவர் செல்ஃபோனில் இப்படி டெல்லிட்டு இருந்தார் .

என்ன நடக்கும்: அழகி படம் கேடிவியில் சமீபத்தில் அழுதுக் கொண்டே பார்த்தேன். பழைய காதலி கஷ்டப்பட்டால் ஆண்கள் மனது மிக கஷ்டப் படுகிறது பார்த்திபன் போல. பழைய காதலி நல்ல பணக்காரியாக இருந்தால் பொறாமைப் படுவார்களா??? .

பஸ்ஸா நரகமா: மாயவரம் போனேன் ...சிதம்பரம்,சீர்காழி,மாயவரம் என்று பாவம்பா இந்த பஸ் கண்டக்டர்களும்,டிரைவர்களும்,என்ன ரோடு, என்ன பஸ், ஐயோ பாவம் பஸ்ஸில் பயணிப்பவர்களும் இந்த மழைக் காலத்தில் படும் பாடு. மழை பெய்யும் போது ஜன்னல் கதவுகள் மூடி இருப்பதால் காற்று இல்லை, மேலே இருந்து ஓட்டைகள் வழியே தண்ணீர் கொட்டுவதாலும் பஸ்ஸெல்லாம் தண்ணீர்...கவர்கள்,பழத் தோல்கள், பாட்டில்கள், மண் என்று கடவுளே, இந்தியர்கள் மட்டும் குப்பையை பொது இடத்தில் போடுவதை விடமாட்டார்களா??? பஸ்ஸில் வந்த 7மணி நேரமும் நரகம் மாதிரி இருந்தது.

என்ன காரணம்:பதிவர் சந்தனமுல்லையின் ப்ளாக்கை திறந்தாலே என் சிஸ்டம் நின்று விடுகிறது..என்ன காரணம்?

நல்லவரா கெட்டவரா: என் மாமா பெண்ணின் மாமியார் போன வாரம் இறந்துவிட்டார். எங்கள் யாருக்கும் கவலையாகவே இல்லை. இம்சை போனது அவளுக்கு இனிமேலாவது நிம்மதி என நினைத்தோம். நாம் மருமகளுக்கு இம்சை கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று சபதமே எடுக்க தோன்றியது. ஒருத்தர் சாகும் போது தான் தெரிகிறது அவர் நல்லவரா கெட்டவரா என்று.

ஆசிரியருக்கு கல்யாணம்: தூத்துக்குடி ஸ்பிக்கில் இருக்கும் என்.டி.டி.ஃப்-ல் டிரைனிங் ஆபிசராக பணிபுரியும் என் அத்தை பையன் மதன் கல்யாணத்திற்கு போனேன்.மண்டபம் முழுவதும் ஸ்டூண்ட்ஸ்தான். பேட்ச் பேட்சாக வந்து கலக்கிவிட்டார்கள். காலேஜும் ஹாஸ்டலும், கல்யாண மண்டபமும் ஒரே கேம்பஸில் எனவே அனைத்து மாணவர்களும் வந்து கலக்கினார்கள். மிக சந்தோஷம் அனைத்து முகத்திலும். மதன் போலியோவால் இடது கால் சிறிது பாதிக்கப்பட்டவர். மிக அன்பான ஒரு ஆசிரியர்.

ஃப்ளாட்பார்மில் ஏமாந்தோம்: தூத்துக்குடி திருமணம் முடித்து அப்படியே திருச்செந்தூர் சென்றேன். இரவு 740க்கு ட்ரைன் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு. திருச்செந்தூரில் இருந்து வரும் வழியில் தேர்தல் பிரச்சாரம் என்பதால் சுற்றி சுற்றி பஸ் வந்து ரொம்ப நேரம் ஆகி விட்டது. தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ எடுத்து பறந்து வந்தோம். 738க்கு ட்ரைனில் ஏறினோம். ஃப்ளாட்பாமில் சாப்பிட ஒன்றுமே கிடைக்கவில்லை. ஸ்டேஷன் வரும் வழி எல்லாம் நிறைய பேக்கரி. ஏக்கமாய் பார்த்துக் கொண்டே வந்தேன் மெக்க்ரோனை. என் தம்பி நேரம் ஆகிவிடும் என்று என்னை ஒன்றும் வாங்க விடவில்லை.

Monday, November 09, 2009

வெரைட்டி

பணம் என்னடா பணம், பணம்: கிங்ஃபிஷரின் பைலட்டான 28 வயதான மனிதர் அவரின் திருவான்மியூர் ஃப்ளாட்டில் இறந்து கிடந்தாராம். காரணம் சொந்த பந்தங்கள் யாரும் இல்லாமல் தனிமைதானாம். அம்மா கிடையாதாம். அப்பாவும் பெரிய பிசினஸ் மேன். போன மாதம் 22ஆம் தேதி இறந்து கிடந்த்வரை 4ஆம் தேதி இந்த மாதம் வாடை வந்ததால் வீட்டை உடைத்து பார்த்து உள்ளார்கள். என்ன கொடுமை இது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று சம்மட்டியால் அடித்த மாதிரி இருந்தது.

பாவம் இந்த குழந்தைகள்: பெங்களூருவில் ஐ.டியில் பணி செய்யும் ஒரு தம்பதி தங்கள் குழந்தையை பார்த்து கொள்ள ஒரு பெண்மணியை நியமித்து உள்ளார்கள். ஒரு நாள் குழந்தையின் தாய் காலை 11மணியளவில் உடல்நிலை சரியில்லை என்று வீட்டிற்கு திரும்பி உள்ளார். வேலை செய்யும் பெண்மணி டிவி பார்த்துக் கொண்டு இருக்க குழந்தையை காணோம். எங்கே என்று விசாரித்ததில் குழந்தையை அந்த வேலைபார்க்கும் பெண் தினமும் 100ரூபாய்க்கு பிச்சைக்காரருக்கு வாடகை விட்டு சம்பாதித்து இருக்கிறாள் ஆறு மாதங்களாக.......போலீசில் சொல்லாமல் குழந்தையினை மட்டும் காப்பாற்றி இருக்கிறார்கள்.

செகந்தராபாத் ஆர்மி காலனியில் வீட்டு வேலை பார்க்கும் பெண் தான் பார்த்து கொண்ட குழந்தையிடம் இருந்து மாதம் இரண்டு முறை ரத்தம் எடுத்து விற்று இருக்கிறாள்.

கோவில்பட்டியில் சண்முகா என்ற தியேட்டரில் எந்த படமானாலும் பெண்களுக்கு 10 ரூபாய் டிக்கெட். ஆண்களுக்கு 50 ரூபாய். பையனுக்கு 30 ரூபாய். கார்க்கி உங்களுக்கு ஸ்பெஷல் நியூஸ் விஜய் படம் என்றால் அந்த தியேட்டரில் பெண்களுக்கு நோ பைசா..ஃப்ரீயாம்பா......

Thursday, October 08, 2009

வெரைட்டி

நோபல் பரிசு : எழுத்தாளர் சுஜாதா இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவர் மட்டும் இருந்தால் திரு.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் எதற்கு நோபல் பரிசு வாங்கினார் என்று மிக எளிமையாக விளக்கி இருப்பார். நாம் ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை.கொஞ்சம் மெனக்கெட்டதில் எனக்கு புரிஞ்சது இன்னானா...

நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் ஆயிரக்கணக்கான ரிபோசோம்கள் இருக்கிறது.அவை புரோட்டினை உற்பத்தி செய்யும் ஃபாக்டரி ஆகும்.இந்த ரிபோசோமில் இருக்கும் ஆயிரக்கணக்கான அணுக்களின் ஸ்டரக்சரையும்,அதன் அமைப்பையும் ஆராய்ச்சி செய்ததில் திரு.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

நாம் நோய் தாக்கினால் எடுத்துக் கொள்ளும் ஆண்டிபயாடிக், நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவில் இருக்கும் ரிபோசோமை கொல்லும். எனவே பாக்டீரியா அழிகிறது. பென்சிலின், அமாக்சலின் போன்றவை ஆண்டிபயாடிக் ஆகும்.
இன்னும் நிறைய ஆண்டிபயாடிக்கினை கண்டுபிடிக்க உதவுமாம் திரு.ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சி. அப்பாடா.....


தீபாவளி: தி.நகர் கடைகளில் தீபாவளிக்கு கூட்டம் அள்ளுகிறது. போத்தீஸில் நல்ல கூட்டம்.
புடவை எடுக்க ஏன் ஆண்களும் வருகிறார்கள் என்று புரியவில்லை. அந்த கூட்டத்தில்
மனைவிகளுடன் சேர்ந்து நின்று கொண்டு ஏங்க இந்த கலர் எடுக்கவா, அதை எடுக்கவா என்று பெரிய டிஸ்கஸன் வேறு...மற்ற பெண்களுக்கும் கஷ்டம் கொடுத்துக் கொண்டு.
சில பெண்கள் கட்டாயம் ஆண்கள் தங்களுடன் கடைகளுக்கு வர வேண்டும் என்று இருக்கிறார்கள். எனக்கு மனைவிகளுடன் துணிக்கடைகளுக்கு துணைக்கு வரும் ஆண்களை பார்த்தால் பாவமாக இருக்கும்.

பெரிய காலேஜ்: போன வாரம் என் மகனுடன் அவன் பெரியப்பா வீட்டிற்கு (வளசரவாக்கம்) போய் இருந்தேன். கிளம்பும் போது அவனுடைய பெரியப்பா மகன் நாளைக்கு லீவு போடுடா,
இப்ப வீட்டிற்கு போக வேண்டாம் என்று சொன்னான். இவனோ போங்கண்ணா காலேஜுக்கு
போகணும் என்றான்.என்னடா ரொம்ப அலட்டிகிறே,,பெரிய இந்த காலேஜ் என்று கூறினான்.
உடனே என் பையன் ஆமாண்ணா எங்கள் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் உண்மையிலேயே பெரிய காலேஜ் தான் 365 ஏக்கர், ஏசியாவிலேயே இரண்டாவது பெரிய scrub forest என்று சொல்லவும் சரிடா தம்பி ஒத்துக்கிறேன் பெரிய காலேஜ் தான் என்று கூறிவிட்டான்.

Wednesday, August 26, 2009

வெரைட்டி..

தானம்:
கண் தானம் பற்றி டாக்டர் அகர்வால் சன் சேனலில் கூறியது..
இறந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும். நெருங்கிய உறவினர்கள் கண் மருத்தவமனைக்கு தகவல் சொல்லியதும் உடனே வந்து ஒரு மணி நேரத்திற்குள் இறந்தவரிடம் இருந்து கண்களை எடுத்து விடுவார்கள். எடுத்த பின் மிக சிலருக்கு கொஞ்சம் வீக்கம் தெரியும். மேக்ஸிமம் ஒரு வித்தியாசமும் தெரியாது. இரு கண்கள் நான்கு பேருக்கு உதவுமாம். கார்னியா(கண்ணின் முன் பகுதி) தான் கார்னியா ட்ரான்ஸ்ப்ளாட்டேஷனுக்கு உதவுகிறது. கண்ணின் வெள்ளை பகுதி சில சமயங்களில் மட்டுமே பயன்படுத்தப் படும்.மீதி பகுதிகள் ரிசர்ச்சிற்கு பயன்படும். கார்னியாவில் பாதிப்பு உள்ள கண்பார்வை அற்றவர்கள் மட்டுமே இதில் பயன் பெறுவார்கள். கண்ணில் கேன்சர், இரத்த புற்று நோய், எய்ட்ஸ்,ஹெப்பாடைடிஸ், பாம்பு கடித்து இறந்தவர்கள் தானம் செய்ய முடியாது. கண்ணாடி அணிந்தவர்கள், கண்ணில் ஆபரேஷன் செய்தவர்கள், ப்ளட் பிரஷர் இருப்பவர்கள், டயாபடிஸ் உள்ளவர்கள் கூட தானம் செய்யலாம்.வயது வரம்பெல்லாம் கிடையாது.நாமும் கண் தானத்திற்கு பதிவு செய்யலாமே. எரிய அல்லது புதைய போகும் கண்கள் நமக்கு பின்னும் உலகை பார்க்கும் என்பதே நல்லது தானே. சங்கர நேத்ராலயா போன்ற பெரிய கிளினிக்கில் இதற்கு என்றே தனி பிரிவு உள்ளது. பதிவு செய்ததை நம் நெருங்கிய உறவினருக்கு சொல்லி வைக்க வேண்டும்.

மாயாண்டி குடும்பத்தார் தீபா

தீபாவின் பேட்டி ராஜ் சேனலில் வந்தது. எனக்கு இந்த பெண்ணை ரொம்ப பிடிக்கும். வடிவேலு, கோவை சரளா மாதிரி ஊரின் நேட்டிவிடியுடன் பேசும். வடிவேலு மதுரை என்றால், கோவை சரளா கோவை என்றால் இந்த பெண் நெல்லை. சொந்த ஊர் தூத்துகுடியாம். கணவர் மளிகைக் கடை வைத்து இருக்கிறாராம். ஒரு குழந்தை இருக்கிறதாம். வெடிகுண்டு முருகேசன் என்ற படத்திலும் மன நலம் குன்றிய பெண்ணாக வரும். மேகலா என்ற சீரியல் இந்த பெண்ணிற்காகவே பார்ப்பேன். மிக பெரிய ரவுண்ட் வருவார். கமலுடன் ஒரு படத்தில் ஜோடியாக வர வேண்டும். பார்க்கலாம்.