Showing posts with label கோயில். Show all posts
Showing posts with label கோயில். Show all posts

Tuesday, July 29, 2014

நவதிருப்பதி

இந்த மாதம் திருச்செந்தூர் போக வேண்டும் என்று முடிவு செய்ததும் நவதிருப்பதியும் போக வேண்டும் என்று முடிவானது.நெல்லையிலிருந்து மதியம் 1 மணிக்கு காரில் புறப்பட்டோம். நேராக நத்தம் - சந்திரன்,திருப்புளியங்குடி-புதன்,இரட்டைதிருப்பதி - ராகு,கேது, கடைசியில் பெருங்குளம் - சனி ஸ்தலம் தரிசனம் செய்தோம்.  இந்த கோயில்கள் மதிய நேரத்திலும் திறந்து இருக்கும் என்ற தகவலே நாங்கள் மதியம் நெல்லையிலிருந்து கிளம்ப காரணம்.இக்கோயில்கள் மாலை 6 மணியளவில் மூடப்படுகின்றன.

 நாங்கள் மாலை 6 மணியளவில் திருச்செந்தூர் சென்றடைந்தோம். அங்கே ஏற்கனவே ஃபோனில் புக் செய்து இருந்த சிவமுருகன் லாட்ஜில் தங்கினோம். மிகப்பெரிய 4 பெட் ரூமிற்கு Rs.1,200 ஒரு நாள் வாடகை. ரூம் நன்கு பெரியதாக விசாலமாக,சுத்தமாக இருந்தது.

அங்கேயிருந்து கோயிலிற்கும்,மணி ஐயர் ஹோட்டலுக்கும் நடந்தே போயிடலாம். கோயிலில் அதிக கூட்டம் இல்லை. 10 ரூபாய் டிக்கெட் எடுத்து தரிசனம் செய்துட்டு வெளியில் வந்தால் தங்கத்தேர் தரிசனமும் கிடைத்தது. அப்படியே கொஞ்ச நேரம் பீச்சில் உட்கார்ந்து விட்டு ரூமிற்கு வந்தோம். மறுநாள் காலை 5.30 மணிக்கெல்லாம் கடலில் குளிக்க போனோம். ஒரு மணிநேரம் நன்றாக குளித்து விட்டு ரூமிற்கு வந்து ட்ரஸ் மாத்திக்கொண்டு திரும்ப கோயில் போனோம். ஒரு மணிநேரத்தில் தரிசனம் செய்துட்டு மணி ஐயரில் காலை சாப்பாடு முடித்து கரெக்டா 9.30க்கு ரூமை காலி செய்துட்டு நேற்று பார்க்காத மிச்ச திருப்பதிகளை தரிசிக்க சென்றோம்.

தென் திருப்பேரை-சுக்ரன்,திருக்கோளூர் -செவ்வாய்,ஆழ்வார்திருநகரி-குரு,கடைசியாக ஸ்ரீவைகுண்டம்-சூரியன் தரிசனம் செய்து முடித்த போது மதியம் 12.30 மணியாகி இருந்தது. இந்த கோயில்கள் மதிய நேரத்தில் மூடப்பட்டு மாலை 4-8.30 வரை திறந்திருக்கும். தென் திருப்பேரைக்கு அடுத்து வழியில் நவக்கைலாசத்தில் ஒன்றான தென்காளகஸ்தி எனப்படும் ராஜாபதியில் கேதுவுக்கு ஒரு கும்பிடு.
ஒரே நாளில் 9 கோயில்கள் பார்க்காமல் இப்படி பிரித்து பார்த்தது நன்றாக இருந்தது.

மறுநாள் 1.30 மணியளவில் நெல்லை வந்தடைந்தோம். டவேரா கார் புக் செய்து இருந்தோம். RS.2700 ஆனது.

ஸ்ரீவைகுண்டத்தில் காலை 9.30க்கு சூரியன் ஸ்தலத்தை தரிசித்து விட்டு அங்கேயிருந்து ஆட்டோவில் (Rs.500)மதியம் 2 மணிக்குள் ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்திடலாம். ஒரு முறை இப்படியும் நான் சென்றேன்.

அனைத்தும் அழகிய கோயில்கள்+பழமையான கோயில்கள், ஸ்ரீவைகுண்டம் தவிர்த்து அனைத்து கோயில்களிலும் பெருமாள் பிரமாண்டமாக இருக்கிறார். அனைத்து கோயில்களிலும் பூனைகள் நடமாடி கொண்டிருந்தன. எல்லா கோயில்களிலும் பூவோ,துளசி மாலையோ ரூபாய் பத்திற்கு கிடைத்தது. கோயிலில் ஐயர்களும் கோயில் பற்றி நன்கு விளக்கம் கொடுத்து பிறகு அர்ச்சனையும் செய்து தருகிறார்கள்.சுக்ரன் ஸ்தல அர்ச்சகர் ரிடையர்டு பி.டி மாஸ்டர் அல்லது ஹெட்மாஸ்டர் போல வந்திருந்த பக்தர்களை ரொம்பவும் மிரட்டி கொண்டே இருந்தார்.




Monday, February 21, 2011

உத்திரகோசமங்கை

புறப்படும் போதே நகுல் சொன்னான் இந்தியா மேப்பிலேயே இல்லாத ஊருக்கு அவ்வாவும், நீங்களும் கிளம்பிடுவீங்களே என்று. என் அம்மா பார்க்க ஆசைப்பட்ட அந்த கோயிலுக்கு போகணுமே என்று கிளம்பியாச்சு.

இந்த மாதம் 14-ல் மதுரையில் கார் எடுத்துக் கொண்டு காலை 7 மணிக்கு உத்திரகோசமங்கை கிளம்பினோம்.
மதுரை-திருபுவனம்-மானாமதுரை-பரமக்குடி-வழியாக இராமநாதபுரம் காலை 9.30க்கு போயாச்சு.அங்கு ஒரு ஆட்டோ ட்ரைவரிடம் உத்திரகோசை மங்கைக்கு எப்படி போகணும் என்று விசாரித்தால் அவர் ட்ரைவரிடம் ஏம்பா ராமநாதபுரம் வந்த? 20 கி.மீ திரும்பி போ விளக்கு ரோடு வழியே லெஃப்ட்டில் ரயில்வே லைன் க்ராஸ் செய்து 10 கி.மீ போகணும் என்று ரொம்ப அன்பா(!) வழி சொன்னார். சரியென்று வந்த வழியே திரும்பினோம். எனக்கு எதுக்கும் இன்னொரு ஆளிடம் கேட்கலாம் என்று தோன்றவே கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு ஆட்டோக்காரரிடம் கேட்க அவர் ராமநாதபுரத்திலிருந்து போகலாமே ஏன் திரும்பி போறீங்க இப்படியே கீழக்கரை ரோடுல ஒரு 8 கி.மீ போனீங்கன்னா திருப்புலானி வரும், அங்கிருந்து 8 கி.மீட்டரில் உத்திரகோசமங்கை வரும் என்று சொல்லவும் வண்டியினை திருப்பினோம்.


திருப்புலானியில் பெருமாளுக்கு ஹலோ சொல்லிட்டு உத்திரகோசமங்கை நோக்கி பயணம். நாங்கள் மட்டும் தான் போய் கொண்டிருந்தோம் அந்த ரோட்டில். ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மற்றும் யாரேனும் சைக்கிளில் போய் கொண்டு இருந்தார்கள். நடுவில் களரி என்று ஓர் ஊர் மட்டும் வந்தது. அதன் பிறகு உத்திரகோசமங்கை வந்தது. தனி தனி சன்னதிகள் மங்களநாதர்(லிங்கம்), மற்றும் மங்களேஷ்வரிக்கு. மரகத நடராஜருக்கு தனி சன்னதி. சிதம்பர கோயிலுக்கு முன்பே தோன்றியது. எனவே, ஆதி சிதம்பரம் என்கின்றனர். 

அம்மனுக்கு பிரணவம்(வேதம்) ரகசியமாய் உபதேசித்த இடமாம்.உத்திரம் எனில் உபதேசம்,ஓசம் எனில் ரகசியம்.மங்கைக்கு ரகசியமாய் உபதேசித்த இடமானதால் உத்திரகோசமங்கை எனப்பெயராம். ஈசன் உமையவளுக்கு மட்டும் ஆடி காட்டியதும் இங்கு தான். மாணிக்கவாசகர் இந்த ஸ்தலம் பற்றி 9 பாடல்கள் பாடி இருக்கிறார்.
.
                                          வெளி கோபுரம்


 பெரிய தெப்பகுளம். வருடம் முழுவதும் வற்றாத தண்ணீர் சிறிது உப்பாக இருந்தது.



          கோயில் கோபுரங்கள் இப்படி பளிச்சென்று இருந்தன.இது உள்ளே உள்ள கோபுரம்.                                                           



  போனவருடம் கும்பாஷேகம் நடந்துள்ளது. மார்கழி திருவாதிரை நாளில் இங்கு இருக்கும் மரகத நடராஜர் ஆருத்ர தரிசனம் மிகவும் ஃபேமஸ். அச்சமயம் இங்கு லட்சகணக்கில் மக்கள் வருவார்களாம். நாங்கள் போன போது நாங்கள் மட்டுமே.


வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டு இருக்கும் நடராஜருக்கு மார்கழி திருவாதிரை அன்று மட்டும் சந்தனம் கழையப்பட்டு அபிஷேகம் நடக்கும். ஐந்தரை அடி உயரமுள்ள மரகத நடராஜர் சிரித்த முகமாய் இருந்தார்.எப்பவும் சந்தனம் பூசப்பட்டு இருந்ததால் தான் ஆங்கிலேயர்கள் அது மரகதம் என்று தெரியாமல் தங்கள் ஊருக்கு கடத்தாமல் இருந்தார்கள் போலும். இல்லையெனில் கோஹினூர் வைரம் போல் இப்போது லண்டன் மியூசியத்திற்கு இந்த சிலையும் பறந்து இருக்கும். உலகத்திலேயே பெரிய மரகத கல் இதுவாக தான் இருக்கும்.


இராவணன் மனைவி மண்டோதரி இங்கு வந்து வழிப்பட்டதாய் சொல்கிறார்கள்.3000 ஆண்டுகள் பழமையான இலந்த மரம் இங்கு .மரத்தின் அடி இப்படி உள்ளது. சகஸ்ரலிங்கத்திற்கு ஒரு சன்னதி.
                                           இலந்த மரம்



ஒரு மணிநேரம் அங்கு இருந்து விட்டு அங்கிருந்து இராமநாதபுரம் வராமல் 10 கி.மிட்டரில் இருக்கும் சத்திரக்குடி என்ற ஊரின் வழியே பரமகுடி வந்து மதுரை வந்தடைந்தோம்.வரும் வழியில் உப்பளங்கள் நிறைய இருந்தன. 


கோயில் வெளியில் இருந்த ஓர் போர்டு.



இதோ கோயிலுக்கு மேப் இருக்குடா என்று நக்கல் செய்யும் நகுலுக்காக எடுத்தேன் இந்த படத்தை.  


Sunday, February 28, 2010

ஹயக்ரீவரிடம் சொல்லியாச்சு அவர் பார்த்துப்பார்..


திங்கள் கிழமையிலிருந்து +2 பரீட்சைகள் ஆரம்பம். என் அம்மா கேட்டு கொண்டதை அடுத்து சிங்கம்பெருமாள் அருகில் இருக்கும் செட்டிபுண்ணியம் கோயிலுக்கு +2 எழுத போகும் என் பையன் ரிஷியை கூட்டிக் கொண்டு இன்று காலையில் 6 மணிக்கே போனோம்.பேனா, பென்சில், ஹால் டிக்கெட் என்று கையில் வைத்துக் கொண்டு கோயிலில் ஒரே பசங்க கூட்ட்ம்.பெரிரிரிய கியூ.காரை விட்டு இறங்கியதுமே தெரிந்து விட்டது.2 மணிநேரமாவது ஆகும் தரிசனத்திற்கு என்று. நாங்கள் சீக்கிரம் வந்து விட்டதாய் நினைத்து இருந்தால். எங்களுக்கு முன்னாடி இவ்ளோ பேரா.

ஸ்பெஷல் (10 ரூபாய்) டிக்கெட் எடுத்து போனதால் அரைமணி நேரத்தில் அர்ச்சனை முடித்து வெளியில் வர முடிந்தது. கோயில் பிரகார சுவற்றில் எல்லாம் பரீட்சை நம்பரும், பெயரும் எழுதப் பட்டுள்ளது. இங்கு எழுதக் கூடாது என்று பெரிய எழுத்தில் எழுதி இருப்பதை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. குமுதம் ஜோதிடம் இதழில் இந்த கோயிலை பற்றி எழுதியதிலிருந்து இங்கு நல்ல கூட்டம். பரீட்சை சமயத்தில் கோயிலை சுத்தி இருக்கும் செட்டி புண்ணியம் கிராமம் ஜே ஜே என்று இருக்கிறது. கோயிலில் பெண்களை விட பையனகள் தான் அதிகம் இருந்தார்கள்.

சிங்கம் பெருமாள் கோயிலிருந்து 3 கிமீ மேற்கில் இந்த தேவனந்தஸ்வாமி கோயில் அமைந்து உள்ளது. 60சி தாம்பரத்திலிருந்து போகும் ஒரே பஸ் ஆகும். சிங்கம் பெருமாள் கோயில் பஸ் ஸ்டாண்டிலிருந்து போக வர ஆட்டோ கிடைக்கிறது. 350 வருட பழைமையான இந்த கோயிலின் கருவரையில் வரதராஜ பெருமாள் இருக்கிறார். ஹயக்ரீவரின் சிலை கடலூர் திருவஹிந்தபுரத்திலிருந்து எடுத்து வரப்பட்டுள்ளது. ஏலக்காய் மாலை இங்கு ஹயக்ரீவருக்கு சூடப்படுகிறது. லஷ்மி இல்லாமல் தனியே இங்கு இருக்கிறார் யோக ஹயக்ரீவர் என்பதால் இந்த கோயில் மிக விஷேசமாம். பிரம்மனிடம் இருந்து வேதங்களை பறித்து போன அரக்கர்களிடமிருந்து வேதங்களை மீட்க விஷணு இப்படி யோக ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தாராம்.