Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Thursday, July 18, 2013

டிசைனர் குழந்தை

டெஸ்ட் டியூப் குழந்தைகள் ஒரு தம்பதிக்கு முதல் டெஸ்டிலேயே  கிடைத்து விடுவது இல்லை. சில சமயம் 5 முதல் 6 முறை முயற்சி செய்தே கிடைக்கிறது. உடலும் மனமும் வெறுத்து போய் கைகாசு எல்லாம் கரைந்து போய் விடுகிறது. அதற்கெல்லாம் ஒரு முடிவு வந்துள்ளது.

டெஸ்ட் டியூபில் உண்டாக்கப்படும் கருக்களை Genetic Engineering மூலம் ஆராய்ந்து நல்ல கருவினை மட்டும் பெண்ணின் கருப்பையில் வைக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. முதல்  குழந்தை இந்த வருடம் மேயில் அமெரிக்காவில் பிறந்து இருக்கிறது.
                                                   
                                                      முதல் டிசைனர் குழந்தை Connor Levy

இது தேவையில்லாத வேலை அது இது என்று புலம்பினாலும் குழந்தை இல்லாத ஏற்கனவே டெஸ்ட் டியூப் செய்தும் குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிக்கு இந்த முறை ஒரு வரப்பிரசாதமே.

80%  டெஸ்ட் டியூப் கருக்கள் பெண்ணின் கருப்பையில் வைத்த பிறகு குழந்தையாக மாறாமல் அழிந்தே விடுகின்றன. எனவே குரோமோசோம் அப்நார்மலாக இருக்கும் கருக்களை Genetic testing மூலம் கண்டறிந்து அதை விட்டு விட்டு நல்ல கருவினை மட்டும் கருப்பையில் வைப்பதால் அது குழந்தையாக வளரும் வாய்ப்பு அதிகம்.

தாயின் 40 வயதிற்கு மேலே பிறக்கும் குழந்தைகள்  Down's Syndrome, Turner Syndrome நோய்களுடன் பிறக்க அதிக சான்ஸ் உள்ளது. குழந்தை இல்லாதவர்கள் இந்த வயதில் தான் டெஸ்-டியூப் குழந்தைக்கு ட்ரை செய்கிறார்கள். எனவே, இந்த நோய் இல்லாத குழந்தைகளை இந்த புதிய முறை மூலம் பெற்று கொள்ள முடியும்.

அது மட்டும் இல்லாமல் டெஸ்ட் செய்ய பட்டதில் நல்லதாக உள்ள ஒரே ஒரு  கருவை மட்டும் வைப்பதால்  டெஸ்ட்-டியூப் மூலம் இரண்டு,மூன்று, நான்கு குழந்தைகளை வயதான காலத்தில் பெற்று அவஸ்தை படவும் தேவையில்லை.


டெஸ்ட்-டியூப் முறையை நம்பி வரும் அனைத்து தம்பதிக்கும் குழந்தை கிடைக்க இந்த முறையில் அதிக சான்ஸ் உள்ளது.
எந்த வயதில் உள்ள தம்பதிகளுக்கு இந்த முறை ஏற்றது என்பது அதிக அளவில் இந்த முறையை பயன்படுத்தும் போது தான் தெரிய வருமாம்.

ராமாயணத்தில் ராமர் அவர் சகோதரர்களும் டிசைனர் பேபிகள் தானே. மகாபாரதத்தில் கர்ணன் ஒரு டிசைனர் பேபி தான்.

 நல்ல குண நலத்துடன் இருக்கும் டிசைனர் விந்துக்களை மக்கள் தேடுவார்களா, நல்ல கலர்,நல்ல கண்கள்,நல்ல உயரம் என்று தேடுவார்களா இரண்டும் கலந்து இருந்தாலும் நல்லது தானே.

ஆனால் சில  குறிப்பிட்ட டோனர்களே அதிகம் டொனேட்  செய்யும் நிலையும் வரும்.  ஏற்கனவே அமெரிக்காவில் ஒரு டோனர் 150 குழந்தைகளுக்கு தகப்பன் என்று படித்தது தான் நினைவிற்கு வருகிறது.

விந்து டோனர்கள் ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர்களாக வேண்டும் என்று இந்தியாவில் ஏற்கனவே விளம்பரம் வந்துள்ளதாம். எல்லா புது கண்டுபிடிப்பிற்கும் நல்லது கெட்டது என்று இரண்டு பக்கம் இருக்க தானே செய்யும்.

ஒரு Designer Sari எடுக்கவே கடை கடையாக ஏறி இறங்கும் அம்மணிகள் கிடைத்தது சான்ஸ் என்று ஏகத்தும் அலட்டுவார்களே ராமா எல்லோரையும் நீ தான் காப்பாத்தனும்.

Monday, August 22, 2011

ஆண்களின் எந்த ஜீனெல்லாம் காணாமல் போகணும்?

X,Y,குரோமோசோம்கள் பற்றி கொஞ்சமா தெரியும். பள்ளியில் என்னவென்றே தெரியாம புரியாம கடம் அடித்து படித்தது. அதை கொஞ்சமா தூசி தட்டி இருக்கிறேன்.


குரோமோசோம்களில் தான் மரபணுக்கள்(Genes) இருக்கின்றன. பரம்பரையாக நமக்கு வருகின்ற குணம்,நிறம்,உயரம்,நோய்கள் இவைகள் இந்த மரபணுக்கள் மூலமே நமக்கு வருகின்றன. 23 ஜோடி குரோமோசோம்கள் மனித உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கின்றன.குரோமோசோம் 1,குரோமோசோம் 2,குரோமோசோம் 3, இப்படியாக குரோமோசோம் 22 வரை ஜோடி ஜோடியாக இருக்கின்றன. தாயிடமிருந்து ஒன்றும், தகப்பனிடமிருந்து ஒன்றும் ஒவ்வொரு ஜோடியில் இருக்கிறது. 23ஆவது குரோமோசோம் செக்ஸ் குரோமோசோம் ஆகும். ஒரு ஜோடி செக்ஸ் குரோமோசோம்கள் ஒவ்வொரு செல்லிலும் இருக்கின்றன. இந்த ஜோடியில்

XX-குரோமோசோம்கள் இருந்தால் பெண்.
XY-குரோமோசோம்கள் இருந்தால் ஆண்.

குரோமோசோம் 1-ல் இருக்கும் ஜீன்களின் எண்ணிக்கை - 4220.இதில் ஒரே ஒரு ஜீனில் ஏதேனும் கோளாறு என்றாலும் அதற்குரிய நோய் தாக்கும். குரோமோசோம் 21-ல் 300 -400 ஜீன்கள் இருக்கின்றன. இரண்டு 21 குரோமோசோம்களுக்கு பதிலாய் மூன்று இருந்தால் வரும் நோய் தான் Down Sydrome.

தொடக்கத்தில் இந்த X,Y குரோமோசோம்களிலும் ஒரே அளவில் தான் மரபணுக்கள் இருந்தனவாம்.இன்று X-குரோமோசோமில் இருப்பதோ 2000 மரபணுக்கள்.ஆனால்,Y-குரோமோசோமில் இருப்பதோ 78 மரபணுக்களே.  SRY GENE தான் Y-குரோசோமில் உள்ள முக்கியமான ஒரு ஜீன் ஆகும்.XX என இரண்டும் ஒன்றாக இருக்கும் போது ஒரு மரபணுவில் எதேனும் பிரச்சனை எனில் கூடவே இருக்கும் இன்னொரு மரபணு அதனை சரி செய்து விடுகிறது. ஆனால், Y-குரோமோச்சோம் தனித்து வருவதால் ஒவ்வொரு முறையும் அதன் மரபணுவில் ஒன்றை அது இழந்து விடுகிறதாம். X-குரோசோம்கள் அளவில் Y-ஐ விட பெரியதாகவும்,நல்ல சுறுசுறுப்பான DNA,RNA,PROTEIN பெற்று இருக்கின்றன.

அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளுக்குள் Y-குரோமோசோம்கள் தங்களிடம் உள்ள 78 மரபணுக்களையும் இழக்க நேரிடும்.எல்லா மரபணுக்களும் காணாமா போச்சுன்னா எப்படி ஆண் குழந்தைகள் பிறக்கும்?ஆணே இல்லையெனில் எப்படி குழந்தைகள் பிறக்கும்? அதெல்லாம் கண்டு பிடித்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு சந்தோஷம் என்னவெனில், Y-குரோசோம்கள் ரகசியமாக தன் மரபணுவில் முக்கியமானவைகளுக்கு ஒரு பிரதி எடுத்து வருகிறதாம். MADAM-I 'M ADAM இந்த சொல்லை எப்படி முன்னாடி, பின்னாடி வாசித்தால் ஒரே மாதிரி வருகிறதோ அப்படி பிரதி எடுத்து வருகிறதாம்.
எனவே,அவ்வளவு சீக்கிரம் Y-யில் இருக்கும் 78 மரபணுக்களும் காணாப்போகாது.

ஆனாலும்,வரும் நாட்களில் என்னென்ன மரபணுக்கள் ஆண்களை விட்டு காணாமல் போகணும் என்று என்னை கேட்டால்,

1.இந்த டி.வி ரிமோட்டை தன் கையில் வைத்து கொண்டு என்ன பார்ப்பது என்று குறிக்கோள் இல்லாமல் அடிக்கடி சேனல் மாற்ற செய்யும் அந்த குறிப்பிட்ட மரபணு.

2.புடவை கடைக்கு வரமாட்டேன் என்று தைரியமா மனைவியிடம் சொல்ல முடியாமல் கடனே என்று கடை வாசலில் தேவுடு காக்க வைக்கும் அந்த மரபணு.

3. காய்,பழக் கடைக்கு தனியே போனால் அழுகியதும்,பழையதையும் பார்த்து வாங்கி வரும் அந்த மரபணு.

4. குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாட்கள் போன்ற முக்கியமான நாட்களை மறந்து போகும் அந்த மரபணு.

5. பாட்டிலை பார்த்தாலே நாக்கை சப்புக் கொட்டும் அந்த மரபணு.

6. மனைவி வந்ததும் தன் கூட பிறந்தவர்களையும்,பெற்றவர்களையும் மறக்க வைக்கும் அந்த மரபணு.

7. தலையில் வழுக்கை விழ வைக்கும் அந்த குறிப்பிட்ட மரபணு.

இப்படியே என்ன என்ன மரபணுக்கள் காணாமா போகணும்னு பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்களேன்