Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Tuesday, November 20, 2012

துப்பாக்கி விஷாலுடன்

15 வருடங்களாக நான் பார்க்க வேண்டிய படங்களுக்கு துணையாக என் பசங்க நகுல்,ரிஷியும் பசங்க பார்க்க வேண்டிய படங்களுக்கு துணையாக நானும். பார்த்த படங்கள் குருதி புனல்,காதலுக்கு மரியாதை,மகாநதி,லவ் டுடே,முத்து,இந்தியன்,ஹேராம்,துள்ளாத மனமும் துள்ளும்,குஷி,விருமாண்டி,பத்ரி,ஷாஜஹான்,யூத்,திருமலை,படையப்பா,
சந்திரமுகி,கில்லி,போக்கிரி,காக்க காக்க என்று போய் கொண்டிருந்தோம்.

அப்புறம் சடாரென்று பசங்க இரண்டும் அவர் அவர் ஃப்ரெண்ட்ஸ்களுடன் முதல் நாள் முதல் ஷோ காலை 8 மணிக்கே(வெளங்கிடும்) போக ஆரம்பிக்க தமிழ் படம் பார்க்க துணைக்கு ஆள் கிடைக்காமல் ஞே என்று முழித்து கொண்டு இருந்த போது தான் தம்பி மகன் விஷாலும் யார் கூட படம் பார்க்க செல்வது என்று பலத்த யோசனையில் இருந்த போது இரண்டு பேரும் செட்டானோம்.வில்லு,வேட்டைக்காரன்,சுறா என்றும் தசாவதாரம்,சிவாஜி,எந்திரன்,வேலாயுதம் என்றும் செம செட்டானோம். ஆனாலும் நொந்து போகாமல் செம படம்,சூப்பர் ஃபைட் ,செம பாட்டு என்று விஷாலுடன் சேர்ந்து அவன் மனம் நோக கூடாதே என்று ராகம் பாடி கொண்டு இருந்தேன்.என் வீட்டுக்காரர் உங்களை நம்பி தான் தமிழ் திரையுலக தாயாரிப்பாளர்கள் பொழப்பு நடத்துறாங்கன்னு சொல்வார்.

ஆனாலும் என் பொறுமையினை சோதிக்கும் விதமாய் விஷாலின் கட்டாயத்தின் பேரில் வெடி,சிறுத்தை,ஒஸ்தி என்று நொந்து போனேன்.எனினும் தமிழ் படம் தியேட்டரில் போய் பார்ப்பதை நிறுத்த முடியாமல் நிச்சயம் ஒரு நல்ல படம் விஷாலுடன் சேர்ந்து பார்ப்போம் என்று நம்பினேன்.ஆனால் விதி யாரை விட்டது.ஒரு கல் ஒரு கண்ணாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள்,மசாலே கஃபே,சகுனி என்று பார்த்து தள்ளினோம்.

நண்பன்,பசங்க.வே.ஆடு விளையாடு, வானம்,கோ விஷாலுடன் தான் பார்த்தேன். அப்பாடா ரொம்ப நாள் கழித்து நல்ல படங்கள்.

சகுனி பார்க்கும் போது கார்த்தி ஜெயில் போகும் போது விஷால் தூங்கி விட்டது. படம் முடியும் போது எழுப்பி விட்டேன். வெளியில் வந்து என் மகனின் அப்பாச்சிக்கு காத்து இருக்கும் போது விஷால் சொன்னது.மம்மி, கொஞ்சம் சின்ன படமா எடுத்து இருக்கலாம்ல பாருங்க நான் தூங்கியே விட்டேன் என்றான்.நீ மட்டுமா தூங்கின செல்லம் நானும் கொஞ்சம் தூங்கிட்டேன் என்றேன்.

கடந்த புதனிலிருந்து துப்பாக்கி பார்க்க காத்திருந்து நேற்று மாலை காட்சிக்கு போனோம்.

ப்ளஸ்:

விஜய் விஜய் விஜய் விஜய் விஜய் விஜய்

தங்கையை மீட்டு கொண்டு காரில் வரும் போது காலியான ஜூஸ் டப்பாவில் அப்பாவியாய் முகம் வைத்து கொண்டு ஜூஸ் உறிஞ்சுவது,
சத்யனிடம் சஸ்பென்ஸ் சொல்லாமல் காஜலுடன் ஜூட் விடுவது,
ஐ ஆம் வெயிட்டிங் என்று வில்லனிடம் சொல்வது.இன்னும் இன்னும் விஜய் ராக்ஸ்.
காஜலுக்கு நடிக்க வருகிறது. ஆனால், அவருக்கு சீன்கள் கம்மி.
வில்லன் வித்யுத் ஜம்வால் ஸ்கிரீனில் வரும் போதெல்லாம் செம ஸ்டைலாய் இருக்கிறார். மாடலிங் செய்தவராம்.
நல்ல வேளை விஜய் அம்மா அப்பா,தங்கைகளை அழ வைக்கலை.
தப்பு செய்த அதிகாரிகள் செத்து போகும் விதம். கடைசியில் வில்லன் செய்யும் மாஸ்டர் ப்ளான் செம ட்விஸ்ட்.

மைனஸ்:

கடைசி கப்பல் சண்டை. எந்த டெரரிஸ்டும் அதற்கு ஒத்து கொள்ள மாட்டார்கள்.வேறு மாதிரி புத்திசாலிதனமாய் முடிவு இருந்திருக்கலாம்.
தேவையே இல்லாத பாடல்கள்.
வீட்டிற்குள் தீவிரவாதியினை ஒழித்து வைப்பது.
சத்யனுக்கு இன்னும் நகைச்சுவை சேர்த்திருக்கலாம்.


Wednesday, May 04, 2011

"வானம்" @ சிட்லபாக்கம்

எங்கள் ஏரியா பக்கத்தில் இருக்கும் சிட்லபாக்கம் என்னும் இடத்தில் வரதராஜா என்று ஒரு தியேட்டர் உண்டு.என்ன படம் போடுகிறார்கள், யார் பார்க்கிறார்கள் என்று அந்த தியேட்டரை கடக்கும் போதெல்லாம் நிமிர்ந்து பார்க்காமல் அவசரமாய் கடந்து விடுவேன். யாரோ ஒரு புண்ணியவான் கொடுத்த ஐடியாவால் + பணத்தால் இன்று அந்த தியேட்டர் ஜொலிக்கிறது. அட்டகாசமான சிட்டி தியேட்டர் மாதிரி மாற்றி விட்டார்கள். டிக்கெட் 100 ரூபாய்.ஞாயிறன்று அந்த தியேட்டரில் நாங்கள் 10 பேர் வானம் பார்த்து வந்தோம்.தியேட்டர் ஃபுல்லாகி இருந்தது. 80-களில் படம் பார்த்த மாதிரி ஒரு ஃபீலிங்.முன் வரிசையில் இருந்த கொஞ்சம் பசங்க சிம்புவை பார்க்கும் போதெல்லாம் செம சவுண்ட் விட்டு கொண்டு இருந்தனர். கொஞ்ச நேரத்தில் சத்தமே இல்லை. கதை என்று ஒன்று இருந்தால் மக்கள் அமைதியாகி விடுகின்றனர்.

பரத்,அனுஷ்கா,சரண்யா,பிரகாஷ்ராஜ்,சிம்பு-சந்தானம் என்று ஐந்து பேர்களை பற்றிய கதை.ஐவரையும் கடைசி காட்சியில் ஒன்றாக மீட் செய்ய வைத்து கதை முடிக்க பட்டுள்ளது. விமர்சனம் எதுவும் படிக்காமல் போனதால் கோ படம் மாதிரி இந்த படமும் எங்களுக்கு பிடித்து இருந்தது.

குட் சிம்பு. இந்த மாதிரி கதையில் நடித்தமைக்கு. சந்தானம் வரும் சீன்களில் மனம் விட்டு சிரிக்க முடிகிறது. பரத் ஸ்டைலிஷாக வருகிறார்.பசங்க படத்தில் வரும் பெண்ணும் அப்படியே.மற்ற அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர். எவண்டி உன்னை பெத்தான் பாட்டை அனுஷ்காவை பார்த்து சிம்பு பாடுவதாய் அமைத்து வேறு விதமாய் எடுத்து இருக்கலாம்.சிம்பு லவ் செய்யும் அந்த பெண்ணிற்கு இந்த பாட்டு வேஸ்ட்.

தெய்வம் வாழ்வது எங்கே, தவறுகளை உணரும் மனிதம் நெஞ்சில்---- யுவன் பாடல் அற்புதம்.அப்பாடல் படத்தில் வரும் சீன்களில் அப்படியே பொருந்துகிறது. படம் எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டே படத்திற்கு போனோம்.எங்களுக்கு இனிமையான ஷாக்.எல்லோரும் பார்க்கலாம்.வீட்டிற்கு பக்கத்தில் ஒரு அருமையான தியேட்டர் கிடைத்ததும் சந்தோஷமாய் இருக்கிறது.

Monday, April 25, 2011

பாருங் ”கோ” நான் பார்த்துட்டேன்

குட் ஃப்ரைடே அன்று காலையில் நகுல் மாயாஜாலில் மாலை காட்சிக்கு டிக்கெட் இருக்கு புக் செய்யட்டுமா யார் வரீங்க என்று கேட்டதும் நான் வரேன்,நான் வரேன் என்று 5 பேர் சேர்ந்து போனோம்.படம் வந்த முதல் நாளே எந்த விமர்சனமும் படிக்காமல் பார்த்ததால் படம் பார்க்க நல்லாயிருந்தது.

டைட்டிலில் வரும் ஃபோட்டாக்கள் அருமை.ராதா,அம்பிகாவிற்கு இடையில் இன்னொரு சகோதரி மல்லிகா என்று உண்டு அந்த பெண் தன் முகத்தினை எந்த பத்திரிக்கையிலும் காண்பித்தது இல்லை. கார்த்திகா அந்த பெரியம்மா போல் இருக்கிறார் போலும்.ராதா மாதிரி இல்லை.

டைரக்டருக்கு அழகான ஆண்கள் மேல் ஏதோ கோபம் போல் இருக்கிறது. கனாகண்டேன் பிரிதிவிராஜ் போல் இதில் அஜ்மல்.அஜ்மல் அசத்தி இருக்கிறார். என்னமோ ஏதோ பாட்டை இன்னும் நல்லா எடுத்து இருக்கலாம்.இந்த பாட்டில் வரும் குவியமில்லா,காட்சிப்பேழை என்றால் என்ன என்று என் அருமை புத்திரர்களுக்கு விளக்கினேன்.

ஸ்டேஜில் வெடி வெடிக்கும் போதே என் கணவர் யார் வில்லன் என்று சொல்லி விட்டார்.நான் நம்பவில்லை.ரிஷியோ அந்த ஸ்டேஜ் தன் காலேஜில்(SRM)போடப்பட்டதாய் சொல்லி பெருமைப் பட்டான்.

ப்யா சுறுசுறுன்னு இருக்காங்க.கார்த்திகா முழி முழின்னு முழிக்காங்க.

ஈ பார்த்துட்டு ஜீவா பிடித்து போச்சு.இதிலும் ஏமாற்றவில்லை.ப்யா ஜீவா நட்பு இந்த காலத்திய நட்பு.பிரகாஷ் ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் நச்.காரில் கார்த்திகா இண்டர்வியூ செய்யும் காட்சியில் நடக்கிறேன்,நடக்கிறேன், நான் நடந்தா என்னா ஆகும் என்று பார்க்கிறீயா என்று அழுத்தி சொல்வது அவருடைய ஸ்டைல்.

கடைசி சண்டை காட்சியினை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.சண்டை முடிந்ததும் தீபாவளி கொண்டாடி முடிச்ச மாதிரி இருந்தது அவ்வளவு டமால்,டுமீல்.காலேஜ் பாட்டு,முதல் கெட்-டு-கெதர் பாட்டு,வெண்பனி பாட்டை தவிர்த்து இருந்தால் படத்தின் நீளமும் கம்மியாகி இருக்கும்.அமளி துமளி பாட்டினை எடுத்தவிதம் மிக அருமை.மலை விளிம்பிலேயே ஜீவா,கார்த்திகாவினை நிறுத்தி எடுத்து இருக்கிறார்கள்.ஆடும் போது கீழே விழுந்து விடுவார்களோ என்று பக் பக்கென்று இருந்தது.லொகேஷன் நார்வேயாம். வெண்பனி பாட்டு சைனாவாம்.

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை போர் இல்லை.ஸோ, எல்லோரும் பாருங்”கோ”.


Wednesday, March 23, 2011

18 வருடமாய் ஏர்போர்ட்டில்

அரை மணிநேரம் ரயில்வே ஸ்டேஷனில் வெயிட் செய்யணும் என்றாலே லொள், லொள்ளுன்னு கூட இருப்பவர்கள் யாரிடமாவது எறிந்து விழுவோம். மேலே இருக்கும் இந்த மனிதர் பாரீஸில் இருக்கும் Charles de Gaulle  ஏர்போர்ட்டில் 1988-லிருந்து 2006 வரை வாழ்ந்து  இருக்கிறார். Mehran Karimi Nasseri என்ற இந்த மனிதர் லண்டனில் வாழ்வதற்காக ஃப்ரான்ஸ் வழியாக ஈரானிலிருந்து செல்லும் போது அவருடைய சூட்கேஸை தவறவிட்டார்.அதில் அவருடைய பாஸ்போர்ட்டும், ஐக்கிய நாட்டு சபை அளித்து இருந்த அகதிக்கான ஐடியும் இருந்தது.

பெல்ஜியத்தில் வாழ்வதற்காக அவருக்கு அகதி அட்டை வழங்கப்பட்டிருந்தது. அவருக்கு லண்டனில் வாழதான் விருப்பம். ஃப்ரான்ஸ் ரயில்வே ஸ்டேஷனில் பெட்டியினை தவற விட்ட இவர் இங்கிலாந்திற்கு எப்படியோ சென்றும் இருக்கிறார். ஆனால், பாஸ்போர்ட் இல்லாததால் ஃப்ரான்ஸிற்கு திரும்ப அனுப்பி உள்ளனர். முதலில் ஃப்ரென்ச் போலீஸ் இவரை கைது செய்தது. அதன்பிறகு இவர் ஏர்போர்ட்டிற்கு நுழைந்தது குற்றமில்லை என்று விடுவித்தது. ஈரானுக்கு திரும்பி செல்ல முடியாததால் ஏர்போர்ட்டிலேயே தங்கி விட்டார். கிட்டதட்ட 18 வருடங்கள். கோர்ட்டும் இவர் ஃப்ரான்ஸ் உள்ளே நுழைய தடை விதித்தது.

ஜூலை 2006-ல் அவர் உடல்நிலை சரியில்லாமல் போகவே ஒரு வருடம் ஃப்ரான்சில் ஹாஸ்பிட்டலில் இருந்து இருக்கிறார். அதன் பிறகு எம்மாஸ் என்ற ஃப்ரான்ஸின் சமூக அமைப்பில் இருந்து இருக்கிறார்.



ஏர்போர்ட்டில் இருந்த போது அவரது லக்கேஜ்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுதுவது, படிப்பது என்று பொழுது போக்கி உள்ளார். சாப்பாடு, புத்தகங்கள் ஏர்ப்போர்ட்டில் வேலை செய்பவர்கள் தந்து உள்ளனர்.
சர் ஆல்ஃப்ரெட் என்றும் அழைக்க படுகிறார்.
1999-ல் இவருக்கு ஃப்ரான்ஸில் தங்குவதற்கு அடையாள அட்டை வழங்க பட்டது.

Lost in transit என்ற ஃப்ரென்ச் படமும்(1993), The Terminal(2004) என்ற ஆங்கில படமும் இவரின் கதையினை போல எடுக்கப்பட்ட படங்கள். டெர்மினல் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் எடுத்து உள்ளார்.

The Terminal படத்தை z-studio சானலில் இந்த வாரம் பார்த்து விட்டு ஃபோட்டாவிற்க்காக நெட்டில் தேடிய போது இது உண்மை கதை என்று தெரிந்தது.



 Cast Away, Forrest Gump படங்களில் நடித்த Tom Hanks இதில் நடித்து உள்ளார். நகைச்சுவை கலந்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. க்ரோகோச்லேவியா (கற்பனை நாடு) என்ற ஐரோப்பிய நாட்டிலிருந்து நியூயார்க் JF Kennedy ஏர்போர்ட்டிற்கு வருகிறார் நாவோஸ்கி (டாம்). அவர் விமானத்தில் இருக்கும் போது அவரின் நாட்டில் கலவரம் ஏற்பட்டு அவரின் நாடு தனிமை படுத்தப்படுகிறது. அங்கிருந்து வருபவர்களை அமெரிக்கா உள்ளே நுழைய தடை விதிக்கிறது. ஆங்கிலம் தெரியாமல் அவர் கஷ்டப்படுவதை நகைச்சுவையாக காண்பித்து உள்ளனர். கேட் 64-ல் தங்கிக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்.  விமான பயணிகளுக்கு உதவி செய்து கிடைக்கும் சில்லறையில் உணவு வாங்கி உண்கிறார். தன் நாட்டினை பற்றி டிவி வாயிலாக அறிந்து கொள்கிறார். ஒரு காதல் ஜோடிக்கு காதல் தூதுவராய் பணிசெய்கிறார். அதில் பணமும் கிடைக்கிறது.

மேலதிகாரியாக Stanley Tucci அருமையான நடிப்பு. 
ஒரு விமான பணிபெண்ணின் கதையினை கேட்டு அவருக்கு காதலும் வருகிறது. பணியாளர்கள் இவரை CIA என்று சந்தேகப்படுகிறார்கள். ஏர்போர்ட்டின் மேலதிகாரியினை தவிர அனைவரிடமும் நண்பராகிறார். ஏர்போர்டினை விட்டு ஒரு முறையும் தப்பிக்க ஹீரோ நினைப்பதில்லை. இன்னும் அருமையான காட்சிகள் படம் முழுவதும். எதற்காக அமெரிக்கா வந்தார், வந்த வேலையினை அதன் பின் முடித்தாரா?

முடிவினை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

டாமின் அசத்தலான நடிப்பிற்க்காக இதை இன்னொரு முறை டிவியில் பார்க்கணும். திரும்ப ஒலிப்பரப்பாகும். நீங்களும் பாருங்கள். 9 மாதங்கள் இவர் ஒரு டெர்மினலில் காலம் தள்ளுவதாய் கதை.

ஆனால், ஒருவர் நிஜத்தில் எப்படி 18 வருடங்கள் ஏர்போர்டில் காலம் தள்ளினார் என்று நினைத்தாலே கலக்கமாய் உள்ளது.

Saturday, November 20, 2010

குzaரிஷ்..

புகழ் பெற்ற மேஜிக் நிபுணர் ஈதன்(ஹிரித்திக் ரோஷன்) ஒரு முறை மேஜிக் ஷோவின் போது எதிரி மேஜிக்காரரால் உயரத்திலிருந்து கீழே விழுந்து அடிப்பட்டு, முகத்தினை தவிர உடலின் அனைத்து பாகங்களும் இயங்காமல் 14 வருடங்களாய் படுத்த படுக்கை ஆகிறார். அவரை 12 வருடங்களாய் கவனித்துக் கொள்வது சோஃபியா.(ஐஸ்வர்யா ராய்).ரேடியோ ஜாக்கியாக ஈதன் தன் வீட்டிலிருந்தே ரேடியோவில் தன் நகைச்சுவை பேச்சினால் மக்களை கவர்ந்து வருகிறார்.

ஆனால், தேவயானி தத்தா என்ற வக்கீல் மூலம் ஈதன் தன்னை கொன்று விடுமாறு(மெர்சி கில்லிங்) கோர்ட்டில் மனு செய்கிறார். ஈத்னின் தாயாரும் இதற்கு சப்போர்ட் செய்கிறார்.இதற்கு நடுவில் ஓமர் என்ற இளைஞர் ஈதனிடம் மேஜிக் கத்துக் கொள்ள வருகிறார். ஒரு முறை ஈதனின் பழைய காதலியும் ஃபோனில் ஈதனுடன் பேசுகிறார்.

கோர்ட் ஈதனின் ரிக்வெஸ்ட்டை ஏற்றுக் கொண்டதா இல்லையா?? தெரியணுமா படத்தினை பார்க்கலாமே.

ரித்திக் ரோஷனுக்கு இப்ப அப்படியே அப்பா ராகேஷ் ரோஷன் ஜாடை தெரியுது.படத்தில் எல்லோரும் அருமையாக நடித்து உள்ளனர். இளம் மஞ்சள் நிறத்தில் அனைவரும் இருக்கிறார்கள். ஒரு வீட்டினுள் நடக்கிறது இந்த படம். உயரமான ஒரு மியூஸியம் மாதிரி இருக்கிறது வீடு.

ஒரு ராத்திரியில் மழைபெய்யும் போது ரித்திக் ரோஷனின் முகத்தில் சொட்டு சொட்டாக இரவு முழுவதும் கூரையிலிருந்து நீர் சொட்டுவதும், அவர் படும் அவஸ்த்தையும் டச்சிங்கா இருக்கு,

ஐஸ் ஹோட்டலில் ஆடும் ஊடி என்ற பாட்டிற்கு டான்ஸ் அசத்தல்.

ஒரு பெரிய ட்ரான்ஸ்பெரண்ட் பந்துடன் ரித்திக் ஆடும் ஒரு டான்ஸும் சூப்பர்.

நிஜமான தாடி வைத்துள்ளார் ரித்திக் ரோஷன்.கொஞ்சம் வளர்ந்த முடி.

ஐஸ்ஸின் ட்ரெஸ் வித்தியாசமாய் உள்ளது. ஒரு நீண்ட கவுன். அதன் மீது ஏப்ரான், நீண்ட கூந்தலில் ஒரு பெரிய மலர் சைடில் வைத்து வித்தியாச ஐஸ். எப்பவும் அடர்த்தியான சிவப்பான லிப்ஸ்டிக்.

லாயர் வெள்ளை காட்டன் சேலையில் முக்கால் கை ஜாக்கெட்டுடன் வளைய வருகிறார்.

படம் இந்தியாவில் நடப்பது போல் இருந்தாலும், உடைகள்,வீடு, மேஜிக் தியேட்டர் எல்லாம் அந்நியப்படுகின்றன.பழைய இங்கிலீஷ் படங்களில் வருவதனை போல் இருக்கின்றன.

ப்ளாக் என்ற அமிதாப் நடித்த படத்தினை டைரக்ட் செய்த சஞ்சய் லீலா பன்சாலி இந்த படத்தினை டைரக்ட் செய்து உள்ளார். ரொம்ப பொறுமைசாலி மனிதர் போல.

படம் கொஞ்சம் ஸ்லோ.ரித்திக், ஐஸ்ஸிற்கு பெயர் சொல்லும் படம்.

மிக அருமையான ஃபோட்டோகிராஃபி. ரித்திக் ரோஷனை நிறைய முறை பெரிய கண்ணாடியில் காண்பிக்கின்றனர்.

லொகேஷன்கள், செட்டுக்கள் அருமை.

Monday, October 11, 2010

சனா பற்றி ஒரு வினா?

இன்றைய குட்டி பசங்களையும் ரஜினி ரசிகர்களாக்க எடுக்கப்பட்ட படம்,முன்னாள் ரசிகர்களை பற்றி கவலை படவில்லை.அவர்கள் எப்படி எடுத்தாலும் ரஜினியை ரசித்துக் கொண்டேயிருப்பார்கள் என்று முடிவு செய்து விட்டார்கள்.

படம் குப்பை என்றால் என் பசங்கள் இருவருக்கும் என் மீது கோபம் வருகிறது.போம்மா உனக்கு ரசிக்க தெரியவில்லை என்று என் ரசிப்புத்தனத்தின் மீதே சந்தேகம் வர செய்கிறார்கள்.விளம்பர உலகம்.விளம்பரத்தாலேயே ஒன்றும் இல்லாத ஒரு பொருளை எதோ இருப்பதாக பெரிதுப் படுத்தலாம்.

ஐஸ் கழுத்திற்கும் எதாவது ஆபரேஷன் செய்திருக்கலாம். நிறைய காட்சிகளில் கழுத்தில் வயது ஏறிவிட்டது என்பதற்கான கோடுகள் மூன்று தெரிந்துக் கொண்டே இருக்கிறது.அதை மறைக்க சிகிச்சை எதுவும் இல்லையோ.ரஜினி ஸ்கார்ஃப் மாதிரி ஒரு துணியால் கழுத்தினை மூடியே தான் பாடல் காட்சிகளில் வருகிறார்.

Erin Brocckvich படத்தில் ஜூலியா ராபட்ஸ், குழந்தையினை ஒரு கையில் தூக்கிக் கொண்டும் இன்னொரு கையில் இன்னொரு குழந்தையினை இழுத்துக் கொண்டும் படம் முழுவதும் அவ்வளவு அம்சமாக வளைய வருவார். நம் நடிகைகள் எப்போது அப்படியெல்லாம் வருவார்கள்.மரத்தினை சுற்றுவதை விட்டுட்டு.குழந்தைக்கு அம்மா என்றால் பார்க்க மாட்டோம் என்று இந்த டைரக்டர்கள் ஏன் தான் முடிவு செய்கிறார்களோ.


லொகேஷன்கள் அருமை..பெருங்குடி குப்பை மேடு அப்பா எவ்வளோ பெரிசு..பக்கத்து வீட்டில் காட்டுக்கத்தமாக பாட்டை வைக்கும் ராகவ்(சின்னத்திரை நடிகர்) ஓவர் ஆக்ட் செய்து இருக்கிறார்.ரிட்டயர்ட் ஆகும் அல்லது இறந்து போகும் ஆர்மி ஆஃபிசர்களின் குடும்பம் சராசரி மத்திய தர குடும்பத்தினை விட நன்றாகவே வாழ முடியும் பணப்பிரச்சனை இன்றி.இப்படி ஒரு ஹோம் எதற்கு என்று தெரியவில்லை.

சின்ன வயதில் என்னை போல என் தம்பிகளை போல சங்கரும் நிறைய காமிக்ஸ் படித்து உள்ளார். அதை விஷுவலாக்கி இருக்கிறார்.

சனாவாக வரும் ஐஸ்வர்யாவின் முழுப் பெயர் படத்தில் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

1.சஹானா
2.சஞ்சனா
3.சப்னா

நான் கேட்ட யாருக்கும் தெரியவில்லை. ஒரு க்ளூ காதல் ரத்து பேப்பரில் அந்த பெயர் எழுதி இருந்தது.(என்ன ஒரு கவனிப்பு!)

படத்தினை பார்க்க வேண்டாம் என்றால் யாரும் கேட்கப்போவதில்லை.

Monday, August 16, 2010

சந்தோஷ் சிவனின் தஹான்..

தஹான் என்ற 8 வயது காஷ்மீர் சிறுவனின் கதை. அவன் வளர்க்கும் பீர்பாலா என்னும் கழுதை மீது தஹானுக்கு உயிர். அவன் தந்தை 3 வருடங்களாய் காணவில்லை. தாய், சகோதரி மற்றும் தாத்தாவுடன் காஷ்மீரில் ஒரு மலை கிராமத்தில் சிறிய வீட்டில் வசித்து வருகிறான்.
தாத்தா இறந்ததும் அவனின் அம்மா கடன் சுமையால் வீட்டில் இருக்கும் பொருட்களுடன் சேர்த்து கழுதையையும் வட்டிக்காக கொடுத்து விடுகிறார். அதை பெற்றுக் கொண்டவன் கழுதையை ஒரு வியாபாரியிடம் விற்று விடுகிறான் .
அந்த சிறிய வியாபாரியிடம் கழுதையை கேட்டு போராடும் தஹானுக்கு, நடுவில் இட்ரிஸ் எனப்படும் ஒரு டெரரிஸ்டிடம் பழக்கம் ஏற்படுகிறது. இட்ரிஸ் தனக்கு ஒரு உதவி செய்தால் தான் கழுதையினை பெற்று தருவதாக கூறவே அதற்கு தஹான் ஒத்துக் கொள்கிறான். தஹான் அவன் தரும் வெடியினை செக்பாய்ண்டில் தூக்கி எறிந்து வெடிக்கும் படி செய்ய ஒப்பு கொள்கிறான்.
அதை தூக்கி எறிய முற்படும் போது தன் தந்தையினை மிலிட்டரி ஆட்கள் கூட்டி செல்வதை பார்க்கிறான். வெடியினை தூக்கி எறியும் போது மனம் மாறி அதை மிக பயத்துடன் ஒரு ஆற்றில் எறிகிறான். அது தண்ணீருக்குள் வெடித்து சிதறுகிறது. தன் ஊமை தாயிடம் தான் மலையில் தந்தையினை பார்த்தாதாய் கூறுகிறான். வியாபாரியின் பேரனுடன் நட்பு ஏற்படுகிறது. அந்த பேரன் தன் தாத்தாவிடம் பீர்பாலை தஹானுக்கே திரும்ப தரும்படி கூறவே பீர்பால் தஹான் வீட்டிற்கு வந்து விடுகிறது. தஹான் பெரும் மகிழ்ச்சி அடைகிறான்.
தஹானாக பூரவ் பாந்தரே, வியாபாரியாக அனுபம் கெர், ஊமை தாயாக சரிகா, கடன் கொடுத்தவராக ராகுல் கன்னா வாழ்ந்து உள்ளார்கள்.
18 வருடங்களுக்கு பின் காஷ்மீரில் படபிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பஹல்காம் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடத்தும் போது அங்கிருந்த சிறுவர்கள் துப்பாக்கியினை பார்த்து ஆச்சரியப் படவில்லையாம். காஷ்மீரின் அமைதியான அழகு நமக்கு ஒரு பயத்தினை ஏற்படுத்துகிறது.
அந்த அமைதியினை கெடுக்கும் விதமான துப்பாக்கி சத்தம் காரணமாய் இருக்கலாம்.

காஷ்மீரின் பனிபடர்ந்த பிரதேசத்தினை மிக அருமையாய் சிவன் படம் பிடித்து உள்ளார். காஷ்மீர் போய் வந்தது போல் ஒரு எண்ணம் வருகிறது.

Thursday, June 17, 2010

நன்றின்னா ஹாச்சிகோ!!!

டோக்கியோ யுனிவர்சிட்டி புரெஃபசரின் செல்ல நாய் தான் ஹாச்சிகோ.1924-ல் யுனொ என்ற அந்த புரெஃபசர் ஹாச்சிகோவினை எடுத்து வளர்க்க தொடங்கினார். காலையில் அந்த புரஃபெஸரை தினம் வீட்டு வாசல் வரை சென்று வழி அனுப்பும் ஹாச்சிகோ மாலை வேளைகளில் ரயில்வே ஸ்டேஷன் வாசலுக்கு சென்று வீட்டிற்கு அவரை அழைத்து வருவதை வழக்கமாக கொண்டு இருந்தது. மே மாதம் 1925-ல் மூளையில் ரத்தக்கசிவால் திடீரென்று வேலை பார்க்கும் இடத்திலேயே புரெஃபசர் இறந்து விட்டார்.ஆனால், ஹாச்சிகோ அவருக்காக தினம் காத்து இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் மாலையில் காத்து இருக்கிறது. ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல 9 வருடங்கள் தினம் மாலையில் காத்து இருந்ததாம்.

அந்த புரஃபெஸருடன் ஹாச்சியினை பார்த்த மற்றவர்கள் போகும் போது அதற்கு சாப்பாடு வாங்கி போட்டு சென்று உள்ளனர். புரெஃபசரின் வீட்டினை அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் காலி செய்து போய் விடுகிறார்கள். ஆனாலும் அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளது.

புரஃபெசரின் மாணவர்களில் ஒருவர் ஹாச்சியினை பற்றி பத்திரிக்கையில் 1932-ல் எழுதியது மக்களிடையே ஹாச்சி பெரிய அளவில் புகழ்பெற ஆரம்பித்தது.

1935 மார்ச் 8-ல் அந்த ஊரின் தெரு ஒன்றில் ஹாச்சி இறந்து கிடந்தது. அதன் இருதயம் இன்ஃப்க்‌ஷன் ஆகி இருந்ததாம். ஹாச்சிகோவை பதப்படுத்தி டோக்கியோ அறிவியல் மியூசியத்தில் வைத்து உள்ளார்கள்.அதன்பின் ஷிபுயா ரயில்வே ஸ்டேஷனில் ஹாச்சிகோவிற்கு ஒரு வெண்கல சிலை வைத்து உள்ளார்கள். அந்த சிலை உள்ள வழிக்கு ஹாச்சிக்கோ குச்சி(எக்ஸிட்) என்றே பெயர். மொத்தம் 5 வழிகள் அந்த ஸ்டேஷனுக்கு உண்டு. ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி டோக்கியோவின் நாய் பிரியர்கள் அங்கு கூடி ஹாச்சிக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.


1987-ல் ஜப்பானில் இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாச்சிகோ என்ற படம் பெரும் வெற்றி பெற்றது. 2009-ல் ரிச்சர்ட் கிர் நடித்த ஹாச்சி தி டாக்’ஸ் ஸ்டோரி என்ற படமும் வெற்றி பெற்றது.


இந்த ஆங்கில படத்தினை பார்த்து விட்டு தான் ஹாச்சி பற்றி இணையத்தில் படித்தேன். மிக அருமையான படம். ரிச்சர்ட் திரும்பி வர மாட்டரா என்று நமக்குள் ஒரு ஏக்கம் வருகிறது. ஹாச்சி தன் எஜமானுக்கு காத்து இருக்கும் போது நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது. அந்த எஜமான் இறந்து விட்டார் என்று யார் ஹாச்சிக்கு புரிய வைப்பது. அருமையான படம். நிஜமாக நடந்த கதை என்னும் போது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.

Monday, December 21, 2009

சேட்டன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ்..



இன்று 21.12.09 மாலை 6.30க்கு லாயோலா காலேஜ் ஆடிட்டோரியத்தில் தன் மனைவி,குழந்தைகள்,மாமனார்,மாமியாருடனும் சேட்டன் பகத் ஸ்ருதி ஹாசன் தலைமையில் 2 ஸ்டேட்ஸின் வெற்றியை தமிழர்கள் முன்னால்( புத்தகத்தின் பெருபான்மையாக வருவது தமிழும் தமிழ் நாடும் தான்) கொண்டாட இருக்கிறார்கள்.

சேட்டன் பகத்தின் புது நாவல் 2 ஸ்டேட்ஸ்..ஆசிரியரின் உண்மை கதை போலவே உள்ளது. 267 பக்கங்கள்-6 மணிநேரம் ஆனது படித்து முடிக்க..சேட்டன் தன் மாமனார்,மாமியாருக்கு இந்த புத்தகத்தினை டெடிகேட் செய்து உள்ளார். ஏக் துஜே கேலியே தான். ஆனால், இதில் பெண் தென்னிந்தியா, பையன் பஞ்சாபி. 2009 மசாலா தடவி கொடுத்துள்ளார். சென்னைவாசிகளை கிண்டல் செய்து இருக்கிறார். கல்யாணத்திற்கு முன்னால் இரண்டு வருடம் ஒன்றாக ஒரு ரூமில் இருக்கும் ஜோடி,கல்யாணத்திற்கு எதற்கு பெற்றோர் சம்மதத்திற்கு காத்து இருக்கணும் தெரியவில்லை. அனன்யா பீர்குடிக்கும்,நான் - வெஜ் சாப்பிடும் இன்றைய மாடர்ன் பெண். கல்யாணத்திற்கு மட்டும் பெற்றோர் சம்மதம் நாடும் கலாச்சாரம் வந்து விடுகிறது. ஆனால், இப்பொழுது இப்படி தான் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அளவிற்கு மிஞ்சி சம்பாத்தியம்.

இன்றைய இளைய தலைமுறையினறை மனதில் வைத்து எழுதப் பட்டுள்ளது. திரும்ப திரும்ப பட்டுபுடவை,இலையில் சாப்பிடுவது, நகைப் போடுவது, தலையில் பூ வைப்பது என்று கிண்டல்.ஆனால், சென்னை பெண்களை எல்லாம் ஹேமாமாலினி,ஸ்ரீதேவியுடன் கதாநாயகன் கிருஷின் அம்மா ஒப்பிடுவது நகைச்சுவை. அனன்யா தென்னிந்திய பெண் என்பதால் இவர்களை போல் வட இந்திய பையனை மயக்கிட்டாள் என்பது கிருஷின் அம்மாவின் வாதம். அனன்யா உடுத்தும் உடைகளை ஒவ்வொரு முறை விளக்கும் போதும் சேட்டன் சரியான சாரி பைத்தியம் என்று தோன்றுகிறது. அப்புறம் பஞ்சாபிகள் சாப்பாடு பிரியர்கள் என்பது தெரிகிறது.

படிக்கும் போது கீழே வைக்காமல் படிக்க தோன்றுகிறது. ஆனால், படித்து முடித்தவுடன் ஒன்றுமே இல்லாத்து போல் உள்ளது. நகைச்சுவை சேட்டனுக்கு நல்லா வருகிறது. தமிழ் வார்த்தைகள் சரி, சரி, இல்ல, இல்ல என்று நிறைய இடங்களில் seri, seri, illa, illa,, கிருஷிற்கு புரியாத தமிழ் வார்த்தைகளுக்கு something,something என்று சொல்லிவிடுவது படிக்கும் போது ரொம்ப நல்லாயிருக்கிறது.

படிக்கலாம்...மிக எளிய ஆங்கிலத்தில் இவரால் எழுதப்பட்டுள்ள இவரின் நான்காவது நாவலாகும்.