Monday, April 19, 2010

தம்பி தங்க கம்பி!!

என் சின்ன தம்பி பிறந்த போது எனக்கு 6 வயது. குழந்தை பிறக்க குறித்த தேதியிலிருந்து 10 நாட்கள் சென்றும் குழந்தை பிறக்கவில்லை. அம்மா ஆஸ்பத்திரியில் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். வலி அடிக்கடி வந்தும் குழந்தை பிறக்கவேயில்லை. அப்போது ஆபரேஷன் செய்து குழந்தை எடுப்பது ரொம்ப அரிதான காலம். அதில் தேர்ந்த மருத்துவருக்கு காத்திருந்து ஒரு நாளில் எமர்ஜென்ஸியாக ஆபரேஷன் செய்து என் தம்பியை எமகண்டத்தில் எடுத்தார்கள். அம்மாவை பார்க்கவே பயமாக இருக்கும். மூக்கில்,வாயில்,கையில் என்று எங்கு பார்த்தாலும் டியூப்,ரத்தம் போதாமல் ரத்தம் வேறு ஏற்றினார்கள்.20 நாட்கள் கழித்து வீட்டிற்கு அவனுடன் வந்த போது ஹையா அம்மா வந்தாச்சு என்று குதியாட்டம் போட்டபோது நாங்கள் யாரும் உணரவில்லை அம்மா கூடவே ஒரு குட்டி டைனோசரை கூட்டி வந்து இருப்பதை.

ராத்திரியெல்லாம் முழித்து இருப்பான்.பகல் எல்லாம் தூங்குவான். எங்களை அம்மாகிட்ட விடவே மாட்டான். நடக்க ஆரம்பித்தவுடன் ஓடிக் கொண்டே இருப்பான். நடக்கவே தெரியாது. அவனுடைய ஒரு வயதிலேயே பேசவும் ஆரம்பித்தான். ஸ்கூலில் இருந்து நாங்கள் வரும் வரை காத்து இருப்பான். எங்களை படிக்கவே விடமாட்டான். என்னை அக்கா என்று ஒரு நாளும் கூப்பிட்டதில்லை. வீட்டை தலைகீழாக மாற்றினான். எந்த சாமானும் அதன் இடத்தில் இருந்தால் அவனுக்கு பிடிக்காது. தலையணையை எடுத்து பாத்ரூமில் நனைத்து வைப்பான். டம்ளர், கிண்ணம், கரண்டி எல்லாம் எப்பவும் சேரில் தான் இருக்கும். பேப்பர் கையில் கிடைக்கும் புத்தகம் எதுவும் முழுசாய் இருக்காது. எங்கள் புத்தகங்கள் எல்லாம் அவன் கையில் மாட்டினால் பீஸாகிடும்.

அவனின் மூன்று வயதிற்குள் 3 பூரான்,2 தேள் என அவன் கையிலேயே அடித்து கொன்றான். பூச்சி வந்தது அடிச்சேன் என்று எங்களை கூட்டி கொண்டு காண்பிப்பான். ஒரு முறை உள்ளங்கை புஸ்ஸென்று இட்லி மாதிரி வீங்கி போனது. இவன் செய்யும் சேட்டையை பார்த்த கணக்கு டீச்சரான என் அப்பா இவனை டவுண் ஸ்கூலில் சேர்த்தால் பஸ்ஸில் போய் வருவது சரி படாது என படிக்கிற பிள்ளை எந்த ஸ்கூலிலும் படிக்கும் என்று சொல்லி வீட்டருகே ஒரு பழைய பஞ்சாயத்து பள்ளியில் சேர்த்து விட்டார்.

அன்று ஆரம்பித்தான் அவன் என்ஜாய்மெண்டை. காலை 10 முதல் 4 வரை ஸ்கூல். 9.55க்கும் வண்டியினை எடுத்தால் அந்த வண்டி அடிக்கடி வீட்டிற்கு விசிட் செய்யும். பைக் ஓட்டும் பாவனையில் கையினை வைத்துக் கொண்டு வாயில் டுர் டுர் என்று சத்தம் விட்டுக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பான். 11 மணிக்கு டீ குடிக்க வீடு,12.30க்கு மதிய சாப்பாட்டிற்கு வீடு,3 மணிக்கு மறுபடியும் பால்,டிபன் சாப்பாட வீடு,யாரேனும் விருந்தினர் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு வீட்டினை காண்பிக்க வீடு என்று வீட்டிற்கும் ஸ்கூலிற்கும் அலைவது அவனுக்கு ரொம்ப பிடித்தது. அவன் ஸ்கூலில் ஒன்னாப்பு முதல் அஞ்சாப்பு வரை மொத்தமே 18 பேர் தான் இரண்டே இரண்டு ஆசிரியை தான். வீட்டில் இருக்கும் நேரத்தில் எதாவது மரத்தின் கிளையில் தான் இருப்பான்.

ஆனால், இவன் தான் க்ளாசில் எப்பவும் ஃப்ர்ஸ்ட் ரேங்க். இரண்டு பேர் தான் ஒரு க்ளாஸில். இவன் சேட்டை குறையணும் என்று அம்மா சொல்லி கொடுக்கும் சாமி பாடல், ஸ்லோகங்களை ஸ்கூல் ஆண்டுவிழாவில் சொல்லி பரிசாக வாங்குவான். கணக்கு சூப்பராக போடுவான். மற்ற சப்ஜெக்டிற்கு பெரிசாக அலட்டி கொண்டதேயில்லை.

அஞ்சாப்பு முடித்தவுடன் என் அப்பா ஸ்கூலிலே ஆறாவது முதல் +2 வரை படித்தான். அந்த ஸ்கூல் அந்த ஊரிலேயே இருக்கும் ஒழுங்காய் படிக்காத இரண்டாவது, மூன்றாவது வருடம் ஒரே க்ளாஸில் படிக்கும் மாணவர்களுக்கானது. எனவே, அங்கும் இவன் தான் நல்லா படிப்பான். படிக்கும் பிள்ளை எங்கும் படிக்கும் என்பார் என் அப்பா. அவரின் கனவு நிறைவேறியது.

ஆனால் அவன் நல்ல நிலைக்கு வருகையில் அதை பார்க்க என் தந்தை இல்லை. அவனின் 15வது வயதில் அவர் இறந்து விட்டார்.என் திருமணத்திற்கு பிறகும் என்கூடவே தான் இருந்தான். இன்று என்னுடைய தம்பி சாஃப்ட்வேர் கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறான்.

என்றாவது ஒரு நாள் என்னை அக்கா என்று அழைப்பான் என நினைத்தேன். ஆனால்,எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் சில வருடங்களாய் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை என புரிகிறது.முதலில் பேசாமல் இருந்தது மிக கஷ்டமாய் இருந்தது. இப்போது பழகிவிட்டது.


Saturday, April 17, 2010

தேவதையும் நானும்..

தேவதை என்ற பெண்களுக்கான மாதம் இருமுறை வரும் பத்திரிக்கையில் என் ஃப்ளாக் பற்றி வந்து உள்ளது. இந்த எப்ரல் மாதம் 16-30, தேதியிட்ட இதழில் 56,57 ஆம் பக்கங்களில் என்னுடைய ஃப்ளாக் பற்றி வந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

Monday, April 12, 2010

குடிச்சா என்ன?

மார்ச் 27லில் நானும், +2 முடித்த என் பையன் ரிஷியும் வைஷ்ணவிதேவி கோயிலுக்கு செல்ல டில்லி ரயில்வே ஸ்டெஷன் ஆறாவது ஃப்ளாட்ஃபார்மில் ஜீலம் ஜம்மு டிரையின் லேட் என்பதால் இரவு 8 மணியளவில் 3 மணிநேரமாக காத்து இருக்கும் போது, அந்த ட்ரைனில் செல்வதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் கூட்டம் கூட்டமாய் காத்து இருந்தனர். ஜம்மு செல்வதற்கு காத்து இருந்தவர்களில் நிறைய தமிழ் சகோதரர்களும் இருந்தனர்.

அதில் இரண்டு பேரிடம் பேசும் போது தன் வாழ்க்கையில் தான் செய்த பெரும் தவறு யூனிஃபார்ம் போட்டது தான் என்றார்.மற்றொருவர் பேசுகையில் ஒரு 7 ஆயிரம் ரூபாய் மாதம் வருமானம் இருந்தால் என் சொந்த ஊரில் இருக்கும் சொந்த வீட்டில் மிக சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவேன் என்னம்மா வாழ்க்கை இது என்று மிக சலித்துக் கொண்டார். இன்னொருவர் என் பையனிடம் ஆர்மி அது இது என்று சேர்ந்து விடாதே. உள்ளூரிலேயே ஏதோ ஒரு வேலைக்கு சென்றுவிடு என்றும் கூறினார். அனைவரும் மிக சோர்வாக இருந்தனர்.

அனைவரும் திடீரென்று அழைப்பு வந்ததால் உடனே ஜம்மு சென்று அங்கிருந்து பாகிஸ்தான் பார்டருக்கு செல்லவேண்டும் ட்ரையின் ரிசர்வ் செய்யாமல் வந்து இருந்தனர். சட்டீஸ்கரிலிருந்து வந்து இருந்தனர். ஒரு பெட்டி+ஒரு படுக்கை மடிப்பு. ஒரு பெரிய ப்ளாஸ்டிக் வாளியில் நிறைய தண்ணீர் பாட்டில்கள் வைத்து இருந்தனர். 11 மணியாகும் நாங்கள் செல்லும் ட்ரையின் டில்லி வர என்று அறிந்தோம். சில பேர் சாப்பாடு வாங்கி வர நாங்கள் அமர்ந்து இருந்த சீட்டிற்கு பக்கத்திலேயே வட்டமாக அவர்கள் லக்கேஜின் மீது அமர்ந்து சாப்பாட்டினை திறந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

மேலும் அவர்களின் நண்பர்கள் சிலரும் கூட்டமாக வர ஒரு தெலுங்கு நண்பர் என்னிடம் வந்து நீங்கள் உங்கள் பையனுடன் அடுத்து இருக்கும் சீட்டில் அமர்ந்து கொள்ளுங்கள் அவர்கள் எல்லோரும் மருந்து சாப்பிட போகிறார்கள் என்று சிரித்துக் கொண்டே கூறவும நானும் அடுத்த சீட்டில் இடம் இருக்கவே கொஞ்ச தூரத்தில் இருக்கும் சீட்டில் என் பையனுடன் சென்று அமர்ந்தேன். வாளியில் இருந்து ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை எடுத்து வெளியில் வைத்து அடியில் இருந்து மருந்து பாட்டில்களை எடுத்து மிக்ஸ் செய்து ப்ளாஸ்டிக் டம்ளர்களில் குடிக்க தொடங்கினர். என்ன ப்ளாட்ஃபார்ம்லியே குடியா என்று நான் எரிச்சல் பட்டேன் என் மகனிடம். கொஞ்சமாய் குடித்து விட்டு சாப்பிட்டனர். அந்த தமிழ் நண்பர் என்னம்மா தப்பா நினைக்காதீங்க எங்க பிழைப்பே இப்படி தான் என்று சமாதானம் வேறு சொல்லிவிட்டு சென்றார். நான் எதுவும் சொல்லாமல் அசடாய் சிரித்துக் கொண்டு இருந்து விட்டேன்.

போன வாரம் 76 ஜவான்கள் மாவோயிஸ்டுகளால் சட்டீஸ்கரில் கொல்லப் பட்ட நியூசை டி.வியில் பார்த்த போது அன்று டில்லியில் நான் பார்த்த அத்தனை வீரர்களையும் நினைத்துக் கொண்டேன். அனைவரும் 40 வயதிற்குள் உள்ளவர்கள். அவர்கள் வாழ்க்கையில் அவ்வப்போது இப்படி குடிப்பது மட்டுமே அவர்கள் அனுபவிக்கும் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு என்று எனக்கு புரிந்தது.
திடீரென்று அழைப்பு வரவே ஜம்மு சென்றதால் அந்த நண்பர்கள் உயிர் பிழைத்தார்களோ என்று நினைத்துக் கொண்டேன்.

எவ்வளவு சுகமாக நாம் தமிழ்நாட்டில் வசிக்கிறோம் என்று ஜம்மு போய் வந்ததில் இருந்து புரிகிறது.