Saturday, June 19, 2010

ஆங்சான் சூகி - பிறந்தநாள் வாழ்த்துக்கள்

                               சூகிக்கு இன்று 65 ஆவது பிறந்தநாள்.

என்ன செய்தார்?: பர்மாவில் ஜனநாயகத்தினை கொண்டு வருவதற்கும் இப்பொழுது அங்கு நிலவி வரும் ராணுவ ஆட்சியினை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் 20 ஆண்டுளாக போராடி வருபவர் சூகி. பல உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பர்மா ராணுவ ஆட்சியாளர்கள் இவரை 14 வருடங்களாக வீட்டுக்காவலில் வைத்து உள்ளார்கள்.

யார் இவர்?: 1945-ல் ரங்கூனில் சூகி பிறந்தார்.இவரின் தந்தை ஆங்சான் 1947-ல் கொலை செய்யப்பட்டார்.தற்கால பர்மாவின் தந்தை எனப்படுவார் இவரின் தந்தை. இவருக்கு இரண்டு சகோதரர்கள்.ஒருவர் இளவயதில் இறந்து விட்டார்.இன்னொரு மூத்த சகோதரர் அரசியலில் ஆர்வம் இன்றி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

என்ன படித்தார்?: சூகியின் அம்மா பர்மாவின் வெளிநாட்டு தூதராக இந்தியாவில் வேலை செய்த போது சூகி நம் டில்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் தன் இளங்கலை பட்டம் அரசியல் துறையில் பெற்றார். பின் ஆக்ஸ்ஃபோர்டில் முதுகலை பெற்று மூன்று வருடம் ஐக்கிய நாட்டு சபையில் வேலை செய்தார். அதன் பிறகு லண்டனில் டாக்டர் பட்டமும் பெற்றார்.

யாருடன் திருமணம்?: 1972-ல் கியூபா நாட்டை சேர்ந்த மைக்கேல் ஆரிஸ் என்பவரை மணம் செய்துக் கொண்டார். சூகிக்கு இரண்டு மகன்கள்.இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார்.

எப்படி வாழ்க்கையில் திருப்பம்?: 1988-ல் தன் தாயாரை பார்க்க பர்மா வந்த போது அப்போதைய பர்மாவில் அதன் ஆட்சியாளரை விலக்கி விட்டு ஆட்சியினை பிடித்தது ராணுவம்.அதை எதிர்த்து ஒரு புதியக் கட்சியினை ஆரம்பித்து சூகி செய்த பிரச்சாரம் அவருக்கு பெரும் ஆதரவாளர்களை தந்தது. உடனே அவரை கைது செய்தது பர்மா ராணுவ அரசு.1990-ல் நடந்த தேர்தலை பெரும் வெற்றி பெற்றது சூகியின் கட்சி.ஆனால், பிரதமர் ஆக விடாமல் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவரின் குடும்பம் லண்டனில் இருந்தது. கணவர் கேன்சரில் கஷ்டப்பட்டபோது அவருக்கு பர்மா வருவதற்கு பர்மா அரசு விசா வழங்க மறுத்தது. கணவர் 1999-ல் இறக்கும் வரை தன் மனைவியை 5 முறை மட்டுமே சந்திக்க முடிந்தது. தற்காலிகமாக அவரை 5 முறையும் வீட்டுக்காவலில் இருந்து பர்மா அரசு விடுதலை செய்தது.

திரும்ப பர்மாவிற்கு திரும்ப கூடாது அப்படி செய்தால் முழுவிடுதலை அளிக்கப்படும் என்ற ராணுவத்தின் நிபந்தனையினை மறுத்து இன்றும் வீட்டுக்காவலில் உள்ளார் சூகி.


 
இப்போது சூகி?: 2008-ல் பர்மாவினை தாக்கிய நர்கீஸ் புயலால் அவரின் வீட்டுக் கூறை இடிந்து விழுந்தது. மின்சாரம் இல்லாத அந்த வீட்டில் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு வருடம் வாழ்க்கை நடத்தினார். 2009-ல் தான் அரசு அவர் வீட்டினை புணரமைத்தது. காந்தியின் கொள்கைகளில் பெரும் பிடிப்பு உள்ளவர் சூகி. இரண்டு வேலையாட்கள் மற்றும் மருத்துவர் ஒருவர் அவ்வப்போது அந்த வீட்டிற்கு சென்று வர அனுமதி உண்டு. அவரின் மகன்கள் கூட அவரை தொடர்பு கொள்ளகூடாது. அடிக்கடி நோய்வாய் பட்டாலும் வீட்டுக்காவலில் தான் இருக்கின்றார். 2003-ல் அவரின் கர்ப்பபை நோய் காரணமாக அகற்றப்பட்டது. அதன் பின்னரும் அவரை சிறையில் தான் அடைத்தது.

புத்தகங்கள் படித்து தன் பெரும்பான்மையான நேரத்தை கழித்து வருகிறார். உலக நாடுகள் ஏகப்பட்ட பரிசுகள் கொடுத்து அவரை கெளரவித்து உள்ளது. 1991-ல் நோபல் பரிசு பெற்றார். அவர் சார்பாக அவரின் மகன்கள் பரிசினை பெற்றனர். அந்த பணத்தினை மேல் படிப்பு படிக்கும் எளிய பர்மிய மாணவர்களுக்கு கொடுத்து விட்டார்.

காந்திய கொள்கைகளில் மிக பிடிப்பு உள்ள சூகி காந்திய வழியில் போராடி வருகிறார். ஐக்கிய நாட்டு சபையும் தன்னாலான முயற்சிகளை அவரை விடுவிக்க எடுத்து வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பர்மாவில் பொது தேர்தல் வர இருக்கிறது. எனவே, சூகி இப்போது விடுதலை ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். அடுத்த ஆண்டு இந்த தினம் அவர் விடுதலை பெற்ற ஒரு தலைவராக உலா வர கடவுளை பிராத்திப்போம்.


Friday, June 18, 2010

சொந்த கதை சந்தோஷ கதை...

முதல் முதலில் என் மகனை ஸ்கூலில் சேர்க்கும் போது அவன் அழுகவேயில்லை.3 வயது மகனை ஸ்கூலில் விட்டு வரும் போது நான் தான் கண்ணில் கண்ணீர் விழுந்துடுவேன் என்று இருந்தேன்.தெரிந்த தலைமை ஆசிரியை போங்க அமுதா நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று என் முதுகில் தட்டி அனுப்பினார். ஒரே அழுகாச்சியாய் வந்தது. அவன் சமத்தாய் ஸ்கூல் போய் வந்தான். 12 மணிக்கு வீட்டிற்கு வந்ததும் தினம் ஸ்கூலில் நடந்தது அனைத்தையும் என்னிடம் ஒப்பித்து விட்டு தான் மதியம் சாப்பிடவே செய்வான்.

எனக்கு அவனை இஞ்சினியரிங் சேர்க்க ஆசை.உன் ஆசைக்கு நீ தான் படித்து இருக்க வேண்டும் என்று அவனின் அப்பா சொல்லி விட்டார். அவன் விரும்பி காமர்ஸ் குரூப் எடுத்தான்.அவன் அப்பாவுடன் வேலை பார்த்த 14 பேரின் பிள்ளைகள் அப்போது +2 முடித்தார்கள். இவனை தவிர 12 பேர் சேர்ந்தது இஞ்சினியரிங் ஒரு பெண் சேர்ந்தது மருத்துவம். இவன் மட்டுமே அவன் விரும்பிய சென்னை கிருத்துவ கல்லூரியில் பி.காம் சேர்ந்தான். நான் தான் காலேஜுக்கும் அட்மிஷனுக்கு போனேன். அப்ப அழுகாச்சி எல்லாம் வரவில்லை.

எப்பவும் கல கலவென்று இருக்கும் என் பையனிடம் இரண்டு கண்டிஷன் மட்டும் போட்டேன். காலெஜில் கட்டாயம் 70% மார்க் எடுக்கணும், லவ் வேணா பண்ணிக்கோ ஆனால் வேறு மதம் வேண்டாம். மதம் மாறுவது என்பது அம்மாவை மாற்றுவது மாதிரி எனக்கு தோணும். இதற்கு நீ லவ் செய்ய அனுமதியே தந்திருக்கவே வேண்டாம் என்றான்.வீட்டிற்கு வந்ததும் காலேஜ் கதை எல்ல்லாம் சொல்லி விடுவான்.கட் அடிச்சுட்டு சினிமா போனால் கூட என்னிடம் ஃபோனில் சொல்லிட்டு தான் போவான்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் காலேஜ் கேம்பஸ் இண்டர்வூயூவில் 3 கம்பெனிகளில் செலக்ட் ஆகி இங்கி பிங்கி பாங்கி போட்டு இப்ப நோக்கியாவில் சேர்ந்து உள்ளான். ஸ்கூல் மற்றும் காலேஜ் சேரும் போது என்னை கூட்டி போன படுவா இப்ப ஆஃபிசிக்கு என்னை கூட்டிப் போகவே இல்லை.

காலேஜில் நான் கேட்ட மார்க்கிற்கும் அதிகமாக வாங்கி விட்டான். +1 -ல் காமர்ஸ் சேருகிறாயே நல்லா படிக்கிறவன் ஏண்டா இப்படி செய்ற என்ற போது என்னை பார்த்து நிறைய பேர் காமர்ஸ் படிக்க வரும் அளவிற்கு முன்னேறி காட்டுறேன் என்று கூறி விட்டான். ஒரு நாளும் காலையில் 6 மணிக்கு முன்னாடி, இரவு 10 மணிக்கு பின்னாடி இந்த உலகம் எப்படி இருக்கும் என்று அவனுக்கு தெரியாது. முழிச்சு இருக்கும் நேரம் படித்தால் போதும் என்பது அவன் சித்தாந்தம்.நாட்கள் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.இப்ப தான் ஸ்கூலில் சேர்த்துவிட்டு வந்தது போல் இருக்கிறது.

Thursday, June 17, 2010

நன்றின்னா ஹாச்சிகோ!!!

டோக்கியோ யுனிவர்சிட்டி புரெஃபசரின் செல்ல நாய் தான் ஹாச்சிகோ.1924-ல் யுனொ என்ற அந்த புரெஃபசர் ஹாச்சிகோவினை எடுத்து வளர்க்க தொடங்கினார். காலையில் அந்த புரஃபெஸரை தினம் வீட்டு வாசல் வரை சென்று வழி அனுப்பும் ஹாச்சிகோ மாலை வேளைகளில் ரயில்வே ஸ்டேஷன் வாசலுக்கு சென்று வீட்டிற்கு அவரை அழைத்து வருவதை வழக்கமாக கொண்டு இருந்தது. மே மாதம் 1925-ல் மூளையில் ரத்தக்கசிவால் திடீரென்று வேலை பார்க்கும் இடத்திலேயே புரெஃபசர் இறந்து விட்டார்.ஆனால், ஹாச்சிகோ அவருக்காக தினம் காத்து இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் மாலையில் காத்து இருக்கிறது. ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல 9 வருடங்கள் தினம் மாலையில் காத்து இருந்ததாம்.

அந்த புரஃபெஸருடன் ஹாச்சியினை பார்த்த மற்றவர்கள் போகும் போது அதற்கு சாப்பாடு வாங்கி போட்டு சென்று உள்ளனர். புரெஃபசரின் வீட்டினை அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் காலி செய்து போய் விடுகிறார்கள். ஆனாலும் அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளது.

புரஃபெசரின் மாணவர்களில் ஒருவர் ஹாச்சியினை பற்றி பத்திரிக்கையில் 1932-ல் எழுதியது மக்களிடையே ஹாச்சி பெரிய அளவில் புகழ்பெற ஆரம்பித்தது.

1935 மார்ச் 8-ல் அந்த ஊரின் தெரு ஒன்றில் ஹாச்சி இறந்து கிடந்தது. அதன் இருதயம் இன்ஃப்க்‌ஷன் ஆகி இருந்ததாம். ஹாச்சிகோவை பதப்படுத்தி டோக்கியோ அறிவியல் மியூசியத்தில் வைத்து உள்ளார்கள்.அதன்பின் ஷிபுயா ரயில்வே ஸ்டேஷனில் ஹாச்சிகோவிற்கு ஒரு வெண்கல சிலை வைத்து உள்ளார்கள். அந்த சிலை உள்ள வழிக்கு ஹாச்சிக்கோ குச்சி(எக்ஸிட்) என்றே பெயர். மொத்தம் 5 வழிகள் அந்த ஸ்டேஷனுக்கு உண்டு. ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி டோக்கியோவின் நாய் பிரியர்கள் அங்கு கூடி ஹாச்சிக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.


1987-ல் ஜப்பானில் இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாச்சிகோ என்ற படம் பெரும் வெற்றி பெற்றது. 2009-ல் ரிச்சர்ட் கிர் நடித்த ஹாச்சி தி டாக்’ஸ் ஸ்டோரி என்ற படமும் வெற்றி பெற்றது.


இந்த ஆங்கில படத்தினை பார்த்து விட்டு தான் ஹாச்சி பற்றி இணையத்தில் படித்தேன். மிக அருமையான படம். ரிச்சர்ட் திரும்பி வர மாட்டரா என்று நமக்குள் ஒரு ஏக்கம் வருகிறது. ஹாச்சி தன் எஜமானுக்கு காத்து இருக்கும் போது நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது. அந்த எஜமான் இறந்து விட்டார் என்று யார் ஹாச்சிக்கு புரிய வைப்பது. அருமையான படம். நிஜமாக நடந்த கதை என்னும் போது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.

Wednesday, June 16, 2010

யோச்சி யோகாய்...

இரண்டாம் உலகப்போரின் போது 1944ல் அமெரிக்க படைகள் பசிபிக்கடலில் இருக்கும் தங்களுக்கு சொந்தமான குவாம் தீவினை ஜப்பானிடமிருந்து கைப்பற்றியது. அப்போது ஜப்பான் நாட்டினை சேர்ந்த நிறைய வீரர்கள் குவாம் தீவின் அடர்ந்த காடுகளில் மறைந்து கொண்டனர். இரண்டாம் உலகப்போரும் முடிவிற்கு வந்தது.

1972-ல் ஒரு விசித்திர மனிதனை குவாம் தீவின் டெலஃபோஃபோ என்ற கிராமத்தினை சேர்ந்த இருவர் நதிக் கரையோரமாக பிடித்து போலீசில் கொடுத்த போது அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். யோச்சியோகாய் என்ற அந்த ஜப்பானியர் 1944-ல் காட்டில் அமெரிக்க படைகளுக்கு பயந்து ஒளிந்துக் கொண்டவர் என்று தெரிய வந்தது.28 வருடங்கள் காட்டில் வாழ்ந்து உள்ளார். 18 வருடங்களாய் இவருடன் இன்னும் இரண்டு வீரர்களும் வாழ்ந்து உள்ளனர்.ஒவ்வருவராக இறந்து விட்டனர்.பசியால் அவர்கள் இறந்து இருக்கக்கூடும் என்று தெரிவித்தார். கடைசி 8 வருடங்கள் தனியாக வாழ்ந்து உள்ளார். ஜப்பான் படையில் சேரும் முன்னர் டெய்லராக இருந்து உள்ளார். மரப்பட்டைகளை கொண்டு உடைகளை செய்து உள்ளார்.

ஒரு குகையில் வாழ்ந்து உள்ளார்.மூங்கில் கம்புகளை கொண்டு தன் குகையினை மூடி வைத்துக் கொள்வாராம். பக்கத்தில் இருந்த ஓர் நீரோடையில் குளித்து, அந்த தண்ணீரினை குடித்தும் வாழ்ந்து உள்ளார். தன் தாய் எம்பிராய்ட் செய்து தந்த ஒரு துணியும்,ஜப்பான் நாட்டு கொடியும் அவரின் குகையிலிருந்தது. அத்தனை வருடங்களும் உப்பு சேர்க்காத உணவினை உண்டு வாழ்ந்து உள்ளார். எலி,மான்களை பிடித்து வேகவைத்து உணவாக சாப்பிட்டு உள்ளார். கனிகள்,தேங்காய் முக்கிய உணவாக சாப்பிட்டு உள்ளார். போர் முடிவிற்கு வந்து விட்டது என்று தெரிந்து இருந்தும் வெளியில் வர பயமாய் இருந்ததாய் தெரிவித்தார்.

ஜப்பானுக்கு அழைத்துக் கொள்ளப்பட்டார். இரத்த சோகையினை தவிர எந்த நோயும் அவருக்கு இல்லை. அந்த ஆண்டே மிஹோகோ என்ற 44 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இயற்கையுடன் வாழ்வது எப்படி என்று தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகள் நடத்தினார். 1991-ல் அப்போதைய ஜப்பான் மன்னரால் கெளரவிக்கப்பட்டார். அவருக்கு அரசு பென்ஷன் வழங்கியது.இறக்கும் முன் அடிக்கடி குவாம் தீவிற்கு போய் வந்தார்.
1997-ல் தனது 82ஆவது வயதில் ஹார்ட் அட்டாக்கில் மருத்துவமனையில் இறந்தார்.விசித்திரமான மனிதர் தான்.


Tuesday, June 15, 2010

தமிழ்நாட்டு அம்மாக்கள் (1950,60களில்)

அம்மிக்கல்,ஆட்டுக்கல்,அருவாமனை,அண்டா,குண்டா,விளக்குமாறு...பயப்படாதீங்க மக்களே! அப்போ அம்மாக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் வீட்டில் பயன்படுத்திய கருவிகளை தான் ஒரு லிஸ்ட் போட்டேன். காலையில் எழுந்து வீட்டு வாசலினை சுத்தப்படுத்தி கோலம் போடுவதில் ஆரம்பிக்கும் உழைப்பு அய்யோடா எழுதவே மலைப்பாய் இருக்கே.

நாத்தனார்கள்,ஓர்படிகள்,மதினிகள்,அண்ணி,பெரிய பாட்டி,சின்னப்பாட்டி, மாமியார்,மாமனார் கொழுந்தனார்,மச்சினர்,கணவனின் ஒண்ணுவிட்ட சித்தப்பா,அந்த அம்மா பெத்த மகராசன்கள்,மகராசிகள்..வயக்காடு வேலைக்கு வரும் ஆட்கள் அல்லது அப்பாவின் கடையில் வேலை பார்க்கும் ஆட்கள் என்று அப்படி இப்படி என்று தினம் தினம் 25 பேருக்கு வடித்துக் கொட்டணும். ஒவ்வொருவரும் அன்று தான் புதியதாய் சாப்பாட்டை பார்த்ததை போல் சாப்பிடுவார்கள்.

வீடு என்று ஒன்று இருக்கும். ஆனால்,வசதி என்று ஒன்றும் இருக்காது.பெரிய திண்ணையும்,பெரியதாய் ஹாலும், எலி பொறி மாதிரி ஒன்று இரண்டு ரூம்களும் சாமான்கள் அடைத்து இருக்கும். பெட்ரூமா அப்படினா? அப்புறம் எப்படி இத்தனை பிள்ளைகள்? கடவுள் தந்தது மூச்..குறைந்தது ஐந்து முதல் 10 வரை பிள்ளைகள் இருக்கும்.அப்புறம் குறை பிரசவம், பிறந்து ஜன்னியால் இறந்தது, அம்மையால் போனது என ஒரு நான்கு வேறு தனியாய் லிஸ்ட் போடலாம்.

காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணிவரை ஓய்வு இல்லாமல் பம்பரமாய் சுத்துவார்கள்.எது சமைத்தாலும் அப்பாக்கு என்று எடுத்து வைப்பார்கள். நாத்தனார்களை தன் மகள் மாதிரி பார்த்து கொள்வார்கள். வாய்க்கு ருசியாய் சமைக்கவே பிறந்தவர்கள் மாதிரி மாய்ந்து மாய்ந்து சமைப்பார்கள்.எண்ணெய் வைத்த தலை முடியினை சாட்டை மாதிரி சடை பின்னி நிறைய பூ வைத்து,மஞ்சள் பூசிய முகமும்,குங்குமம் வச்ச நெத்தியும், மூக்கு குத்தாத அம்மாக்கள் குறைவு.கொழுந்தனார்,மாமானார்களை நேரில் பர்த்து பேச மாட்டார்கள். மாமானார் வீட்டில் நடக்கும் போது உட்காரமாட்டார்கள்.

கீழே உட்கார்ந்து மோர் கடைவது,வடாம் இடுவது,பூக் கட்டுவது,பெண்களுக்கு தலை பின்னுவது,எப்பவும் கை எதாவது வேலை செய்து கொண்டே இருக்கும். கருப்பு உளுந்து ஊறவைத்து அதை தினம் அரை மணிநேரம் கழுவி பின் அதை ஆட்டுரலில் ஆட்டி வைப்பது மதிய நேரத்தில் வேலை. எப்பவாவது ரேடியோவில் தொடர் நாடகம் கேட்பது உண்டு வீட்டு ஆம்பிளைகள் இல்லாத நேரத்தில். நல்ல நாட்களுக்கு குடும்பத்துடன் கோயில் போவது தான் ஒரே ஒரு அவுட்டிங். அடுத்த வீட்டு அம்மாக்களுடன் அரட்டை அதுவும் ஆண் பிள்ளைகள் இல்லாத நேரத்தில் தான். அதிகம் படிக்கவில்லை ஐந்தாவது அல்லது எட்டாவது உடன் படிப்பினை நிறுத்தி இருப்பர்.(அப்போது வயதுக்கு வந்ததால்). .

எம்.ஜி.ஆர், பிடித்தாலும் வெளியில் சொல்ல முடியாது.சிவாஜி ரொம்ப பிடிக்கும் என சொல்லி கொள்ளலாம்.சாவித்ரி,சரோஜா தேவி,அஞ்சலி தேவி பிடிக்கும்.ஆனால், அவர்கள் போல் மெல்லிய சேலைகள் கட்ட முடியாது.வாத்து,தாமரை பூ,அன்னம் டாலர் செயினும்,காதில் பெரிய தோடும்,காசு மாலையும்,ரெட்டை வட செயினும் அம்மாக்கள் போடுவார்கள்.எப்பவும் சேலை மட்டும் தான் உடை.

தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட கைவைத்தியம் செய்து கொள்வார்.தன் தேவைகளை கணவரிடம் கேட்க தெரியாது.கணவர்களோ அதை விட மோசம்.சின்ன வயதில் கல்யாணம் செய்து இருப்பார். தன் மனைவி மற்றவர்கள் முன்னாடி தன்னுடன் பேசுவதையே விரும்ப மாட்டார்.பேசவே பேசாத அப்பா செயலில் மட்டும் கருத்து இல்லைனா எப்படி 10 பிள்ளைகள்!!!தன் அப்பா அம்மா பேச்சு தான் தாரக மந்திரம்.வாங்கும் சம்பளத்தினை அப்படியே தங்கள் அப்பாக்களிடம் கொடுத்து விட்டு தினம் 1 ரூபாய் தன் கைசெலவிற்கு வாங்கி போகும் அசடுகள்.

ஆனாலும் அம்மாக்கள் சந்தோஷமாய் இருந்தார்கள்.எப்படி என்று தான் தெரியவில்லை. வீட்டு வேலை செய்வதை கஷ்டமாய் நினைக்கவில்லை. அடிமை போல் வாழ்கிறோம் என்று நினைத்தது இல்லை. இப்படி தான் இது தான் வாழ்க்கை என்று இருந்தார்கள். இந்த 50’,60’ க்களின் அம்மாக்கள் இப்பொழுது சில வீடுகளில் ஃபோட்டோக்களிலும், பல வீடுகளில் பாட்டிகள் ஆகவும் மாறி இருப்பார்கள்.முதியோர் இல்லத்திலும் இருப்பார்கள். அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தவர்கள் தங்களுக்கும் ஒரு இல்லத்தினை இப்போதே ரிசர்வ் செய்து வைக்கவும்.பின்னாடி தேவை படும்..

Tuesday, June 08, 2010

வெரைட்டி

அங்காடி தெரு பார்த்து விட்டு மிக சோகமாய் அழுகை அழுகையாய் வந்தது. இதற்கு எல்லாம் ஒரு முடிவே இல்லையா என்று ஒரு இயலாமையாய் இருந்தது.ஆனாலும், ஒரு வேலையும் இல்லாமல் சும்மா திருநெல்வேலியில் இருக்கும் +2,10 படித்த மாணவர்கள் வேறு என்ன தான் செய்ய முடியும்? இந்த வேலையாவது கிடைத்ததே என்று சந்தோஷமாக தான் நிறைய பேர் அந்த மாதிரி கடைகளில் வேலையில் சேருகிறார்கள். சமீபத்தில் சரவணா, ஜெயசந்திரன் கடைகளுக்கு சென்றிருந்தேன். எப்பவும் அந்த பணியாளர்களிடம் நான் எதாவது பேசி விட்டு வருவேன் சொந்த ஊர் பாசம். என்ன சாப்பாடு, எத்தனை நாட்கள் விடுமுறை, எப்ப கடைசியாக ஊருக்கு போனீங்க என்று விசாரிப்பேன்.சில சேல்ஸ் கேர்ள்ஸ் என்னக்கா ரொம்ப நாளா ஆளை காணோம் என்று விசாரிப்பார்கள். இந்த முறை அங்காடி தெரு பார்த்தாச்சா என்று கேட்டேன். ஆமாக்கா, ஹாஸ்டலில் போட்டாங்க பார்த்தாச்சு, நீங்க பார்த்தாச்சா என்று மிக சந்தோஷமாய் கூறினார்கள். வசந்த பாலன் மிகை படுத்தி எடுத்து விட்டாரோ என்று தோன்றியது.


டில்லியில் மெட்ரோ ரயில் திட்டம் அழகோ அழகு.அவ்வளவு சுத்தம்.அவ்வளவு ஒழுங்கு.ஆனால்,ஸ்டேஷனில் வயசானவுங்க போனால் உட்கார ஒரு சீட் கிடையாது.ஸ்டேஷன் உள்ளே போனால் ஏதோ வெளிநாட்டில் இருப்பது போல ஒரு பிரமை.காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நாம் இந்த ட்ரைன்களில் பயணம் செய்யலாம். மக்கள் எல்லோரும் ஒழுங்காய் வரிசையில் நின்று ட்ரையினில் ஏறுகிறார்கள்.புது டில்லி ஸ்டேஷனுக்கு அடுத்த ஸ்டேஷன் ராஜிவ் செளக் ஸ்டேஷனில் (அண்டர்கிரவுண்ட்)இறங்கி எஸ்கலேட்டரில் ஏறி மேலே வந்தால் பாலிக்கா பஜாரின் நம்பர் 1 கேட்டிற்கு வந்து விடுகிறது. முழு பஜாரும் அண்டர்கிரவுண்டில். டில்லி போனால் மெட்ரோ மிஸ் செய்யாதீர்கள்.

இரண்டு நாளாக மாலையில் கரண்ட் போவதும் ஒரு மணிநேரத்தில் ஒரு 10 நிமிஷம் வருவதுமாய் ராத்திரி வரை ஆட்டம் காட்டிக் கொண்டு இருந்தது. எத்தனை முறை ஃபோன் செய்தாலும் ஈ.பியில் எடுக்கவேயில்லை. ராத்திரி 10 மணிக்கு பிறகு நிலைமை சரியானது.என் மகன் கரண்ட் வந்ததும் ஃபோன் செய்தான்.உடனே எடுத்தார்கள். ஏன் அங்கிள் கரண்ட் வந்தா மட்டும் ஃபோனை எடுக்கிறீங்க என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்து விட்டான். அவர் அன்று இரவு நிம்மதியாக இருந்து இருக்கமாட்டார் என்பதில் அவனுக்கு அப்படி ஒரு அல்ப சந்தோஷம்.இன்னொரு நாள் முழு நாள் கரண்ட் இல்லை.அப்படி போனால் மாலை 5 மணிக்கு மேல் தான் வரும். ஆனால், போனவாரம் 4 மணிக்கே வந்தது. உடனே ஃபோன் செய்தவன் இன்னும் ஒரு மணிநேரம் இருக்கே என்ன அவசரம் கரண்டிற்கு என்று சொல்லி விட்டு ஃபோனை கட் செய்து விட்டான். என்னைக்கு ஆட்டோ வரப்போகுதோ தெரியலை.

முன்பெல்லாம் என் இரண்டு பசங்களுக்காக எல்லா விஜய் படங்களும் பார்த்து விடுவேன். கட்டாயம் கூட்டி போகணும். இப்ப என பசங்க பெரிசாகி விட்டார்கள் தப்பித்தோம் என்று நினைத்தால். மேலே ஃபோட்டோவில் இருக்கும் என் தம்பி மகன் விஷால் விஜயின் பெரிய ரசிகனாக உள்ளான். சுறா சூப்பராய் இருக்கும் என்று சொல்லி ஒரே அடம்.சரி என்று கூட்டிப் போனேன். சுறா கிட்ட கடி வாங்கி வந்தேன்.ஆனால் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.


Monday, June 07, 2010

பிஃபோர் சன்ரைஸ்



ஜெஸ்ஸி தனது ஐரோப்பா பயணத்தினை முடித்து விட்டு வியன்னாவில் மறுநாள் அமெரிக்காவிற்கு விமானம் ஏறுவதற்காக டிரையினில் புடாபெஸ்டிலிருந்து வந்து கொண்டு இருக்கிறான்.அதே டிரைனில் எதிர் சீட்டில் அமர்ந்து இருக்கும் செலீன் தன் பாட்டியினை பார்த்துவிட்டு பாரிஸிற்கு தான் படிக்கும் யுனிவர்சிட்டிக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறாள். வியன்னா ஸ்டேஷன் வருவதற்கு முன்னால் இருவரும் பேச ஆரம்பிக்கிறார்கள்.

அவன் பேச்சால் கவரப்பட்ட செலீனும் அவனுடன் நன்கு பேச ஆரம்பிக்கறாள். வியன்னா வந்ததும் ஜெஸ்ஸி செலீனை தன்னுடன் அந்த ஊரில் இறங்கும்படி அழைக்கிறான்.அடுத்த நாள் டிரைனில் பாரீஸ் செல்லும் படி சொல்கிறான். முதலில் தயங்கும் செலீன் பின் ஒத்துக் கொண்டு வியன்னாவில் இருவரும் இறங்குகிறார்கள். ல்க்கேஜை க்ளோக் ரூமில் போட்டுவிட்டு இருவரும் ஊர் சுற்ற ஆரம்பிக்கறார்கள். இருவரிடமும் நிறைய பணம் இல்லாததால் அன்று முழுவதும் ரூம் எதுவும் போடாமல் ஊர் சுற்றுகிறார்கள்.

காதலை பற்றி, மதத்தினை பற்றி, வியன்னாவினை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
செலீனின் பழைய ஆண் நண்பன் அவளை விட்டு விலகி விடுகிறான் அதற்கு காரணம் செலீன் அவனை ரொம்ப விரும்பியது தான் என்று செலீன் சொல்கிறாள். ஜெஸ்ஸி ஐரோப்பியா வந்ததே அவனின் காதலியை சந்திக்கவே, ஆனால் அவள் ஜெஸ்ஸியை தவிர்த்து விடுகிறாள் எனவே ட்ரைனில் ஐரோப்பா முழுவதும் சுற்றிவிட்டு சீப்பான ஒரு ஃப்ளைட்டில் வியன்னாவில் இருந்து அமெரிக்காவிற்கு மறு நாள் 9.30 செல்ல போவதாக கூறுகிறான். இருவரும் ஒருவரை ஒருவர் முத்தமிடுகிறார்கள்.

ஒரு ரெஸ்ட்டாரண்டில் அமர்ந்து இருவரும் தமது ஃப்ரெண்டிற்கு ஃபோன் செய்வது போல் பாவனை செய்து ஒருவரை பற்றி ஒருவர் சொல்லிக் கொள்வது மிக சிறப்பாக இருக்கிறது. ஏன் ஒருவருக்கு ஒருவர் பிடித்தது ஏன் வியன்னாவில் ஒன்றாய் இறங்கினோம் என்று பொய்யாக ஃப்ரெண்டிற்கு ஃபோன் செய்வது போல் பாவனை செய்து பேசி கொள்வது நன்றாக இருக்கிறது.

இரவில் ஒரு பார்க்கில் படுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு இரவு அது தான். இனிமேல் ஒருவரை ஒருவர் பார்க்க முடியுமா என்று தெரியாத சூழ்நிலை.
மறுநாள் டிரையினில் செலீனை ஏற்றிவிட ஸ்டேஷன் போகிறான் ஜெஸ்ஸி. ஃப்ளாட்ஃபார்மில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு இதே நாள் ஒருவருடம் இல்லை ஆறுமாதம் கழித்து இதே ஸ்டெஷனில் சந்தித்து கொள்வதாய் சொல்லி இருவரும் ஒத்துக் கொள்ள செலீன் ட்ரைனில் ஏறிவிட ஜெஸ்ஸி பஸ்ஸில் ஏர்போர்ட் திரும்புகிறான்.

கடைசி இரண்டு நிமிடம் காமிரா அவர்கள் வியன்னாவில் சுற்றிய் இடங்களில் அமைதியாக பயணம் செய்கிறது. அவள் டிரையினிலும், ஜெஸ்ஸி பஸ்ஸிலும் மிக்க வருத்தத்துடன் செல்கிறார்கள். அத்துடன் படம் நிறைவு அடைகிறது. திரும்ப ஆறு மாதம் கழித்து அவர்கள் சந்திக்க வேண்டும் என்று நம் மனம் ஏங்குகிறது.ஒரு சூர்ய உதயத்திற்கு முன்னாடி, சந்தித்த 14 மணிநேரத்தில் இருவருக்கும் மலரும் காதலை மிக அழகாக சொல்லி இருக்கிறார் டைரக்டர் ரிச்சர்ட் லிங்க்லேட்டர்.ஒரே நாளில் கதை நடப்பதை போல் தான் இவரின் திரைப்படங்கள் இருக்குமாம். ஈத்தன் ஹாக்,ஜுலி டெல்ஃபி ஜெஸ்ஸியாக செலீனாக நடித்து உள்ளனர்.
utv world movies-ல் இந்த மாதம் திரும்ப திரும்ப இந்த படம் ஒலிப்பரப்பாகும் மிஸ் செய்யாதீர்கள். மிக எளிமையாக மிக குறைந்த நடிகர்களுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.

எப்படி இருக்க என் அருமை மனைவியே???

காவ்யா பத்தாவது படிக்கும் போது துரத்த ஆரம்பித்தது,காலேஜ் முதல் வருடம் படிக்கும் போது தான் என்னுடைய லவ்வை ஓகே சொன்னாள் காவ்யா.ஆனால், என் அம்மா என்னுடைய காதலுக்கு மறுப்பு தெரிவிக்கவே அவர்கள் சம்மததிற்கு அடுத்த 4 வருடங்கள் காத்து இருக்க வேண்டி இருந்தது. அதற்குள் காவ்யா முதுகலை பட்டமும் பெற்று ஒரு வருடமும் ஓடி விட்டது. காதலிக்க ஆரம்பித்து 10 வருடங்கள் கழித்து தான் காவ்யாவினை திருமணம் முடிக்க முடிந்தது.

மிக மிக அருமையாக எங்கள் திருமண வாழ்க்கை சென்றது. அடுத்த வருடமே எனக்கு ஒரு மகள் பிறந்தாள். மகளின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது என் மனைவி இரண்டாவது முறையாக கருவுற்று இருந்தது தெரிந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியினை கொடுத்தது. நான் செய்து வந்த பிஸினெஸூம் ஓகோ என்று இருக்க என் மனைவி அவள் உள்ளூரில் இருக்கும் தன் தாய் வீட்டிற்கு சென்று வர ஒரு விலை உயர்ந்த கார் பரிசளித்தேன். வீட்டில் அவளுக்கு ஒத்தாசையாக இருக்க இரண்டு வேலையாட்கள் நியமித்தேன். மிக பெரிய வீட்டினை அவள் இஷ்டத்திற்கு உள் அலங்காரம் செய்து தருவித்தேன். பட்டும், நகையும் போதும் போதும் என்று வாங்கி கொடுத்தேன். அவளுடைய தேவை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தேன்.

பிஸினெஸ் விஷயமாக ஊருக்கு செல்லும் போதெல்லாம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை போனில் பேச வேண்டும் என் மனைவிக்கு. அப்படியே பகல் பொழுதில் செய்தேன்.
என் அம்மாவிற்கு தனி வீடு, என் மனைவிற்கு தனி வீடு என்று தனி தனியே அனைத்து வசதிகளும் செய்து தந்தேன். என் மனைவி இரண்டாவது குழந்தை வயிற்றில் 4 மாதமாக இருக்கும் போது என் ஃப்ரெண்டு ஒருவர் கார் ஓட்ட சென்னையில் இருந்து பிஸினெஸை முடித்து விட்டு இரவு 9 மணிக்கு என் சொந்த ஊரினை நோக்கி பயணம் செய்துக் கொண்டு இருந்தேன்.

கார் நன்கு தான் போய் கொண்டு இருந்தது. தாம்பரம் வரும் போது என் காவ்யாவிற்கு ஒரு முறை போன் செய்து மகள் தூங்கி விட்டாளா? காலையில் 4 அல்லது 5 மணிக்கு வந்து விடுவேன் என்று சொன்னேன். மதுராந்தகம் செல்லும் போது திடீரென்று கார் ரோடை விட்டு ஓரத்தில் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. கார் போன ஸ்பீடில் ஒரு மூன்று முறை பல்டி அடித்தது தான் தெரியும். 32 வயதான என்னை எமன் வந்து அழைத்த போது வர மாட்டேன் என்று தான் சொன்னேன். ஆனால், கட்டாயம் வர வேண்டும் என்று என்னை அழைத்துக் கொண்டான் நான் மறுக்க மறுக்க அப்படியே என்னை அள்ளிக் கொண்டான். கார் ஓட்டி கொண்டு வந்த என் நண்பனை சில நிமிடங்களில் காணவில்லை.

என் உடம்பை காரை உடைத்து எடுத்த போலீஸ்காரர்கள் ஒரு காயமும் இல்லாமல் இருந்த என் உடம்பை பார்த்து அசந்து போனார்கள். என் நண்பனுக்கு காலில் பலத்த அடி என்றும் செங்கற்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்து வந்த ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினார்கள். என் உடம்பில் ஒரு காயமோ, இரத்தமோ இல்லை. எமனிடம் என்னை திரும்ப என் உடம்பிற்குள் புக அனுமதி கேட்டு மன்றாடினேன். ஒத்துக் கொள்ளவில்லை. என் சட்டையிலிருந்து இருந்து செல் போனையும், மற்றும் பணத்தினையும் எடுத்த போலீஸ் சென்னையில் இருக்கும் என் மாமவினை அழைத்து விஷயம் சொன்னார்கள். என்னை அப்படியே மதுராந்தகம் அரசு மருத்தவமனை மார்ச்சுவரியில் போட்டு விட்டார்கள். அப்போது இரவு 1 மணி.

என் மாமா வந்து யார் யாரையோ பிடித்து காலையில் என் மார்பில் மட்டும் ஒரு கட் செய்து கொஞ்சம் தையல் போட்டு விட்டு என் சொந்தம் வரும் வரையில் வெறும் தரையில் என் உடலை போட்டு விட்டார்கள்.பணத்தினை போலீசார் என் மாமாவிடம் ஒப்படைத்த போது அவர் பெரும் குரல் எடுத்து அழுது விட்டார். காலையில் என் சொந்த ஊருக்கு என்னை கொண்டு செல்ல சரியான ஆம்புலன்ஸ் அன்று ஞாயிறு என்பதால் கிடைக்காமல் மார்ச்சுவரியில் கிடந்தேன். காலை ஒரு 11 மணிக்கு என் அருமை மனைவியும் என் அம்மாவும் ஓடி வந்தார்கள். என் மனைவியிடம் நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உள்ளேன் என்று சொல்லி கூட்டி வந்தார்கள் போல. அழுது வீங்கிய கண்களுடன் ராத்திரி சரியாக தூங்காத கண்களுடன், தொந்தரவு செய்துக் கொண்டு இருந்த என் ஒரு வயது மகளை அணைத்த படி,வயிற்றில் 4 மாத கருவுடன் அப்படியே வாசல் படியில் அமர்ந்து இருந்தாள். என்னை தூக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றும் போது தான் நான் இறந்து விட்டேன் என்று உணர்ந்து அழக்கூட தெரியாமல் வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வேண்டாம் வேறு சாதி என்று மறுத்தவளை நான் தான் துரத்தி துரத்தி காதலித்து இப்படி இந்த நிலமைக்கு கொண்டு வந்தேன். கடவுள் இருக்கிறாரா? யாருக்கும் ஒரு தீங்கும் செய்யவில்லையே. என்னிடம் பணிசெய்த ஒரு 100 பணியாட்களுக்கும் ஒரு நண்பன் போலவே தான் நான் இருந்தேன். என் அம்மாவிற்கு நான் ஒரே பையன். இரண்டு சகோதரிகளுக்கு ஊரே மெச்ச திருமணம் செய்வித்தேன். அம்மாவிற்கு நல்ல பையனாய், சகோதரிகளுக்கு நல்ல சகோதரனாய் இருந்தேன்.

என் அருமை மனைவியே நான் உன்னை விட்டு போன 6 மாததில் இன்னொரு பெண்ணையும் பெற்று எடுத்து உன் 27 வயதில் தனியே இரண்டு பெண் குழந்தைகளுடன் எப்படி இருக்கிறாய்???