Monday, October 10, 2011

பாப்பா is safe.....

பிறந்த (செப்டம்பர் 7) அன்றே சூர்யா ஹாஸ்ப்பிட்டலில் சேர்க்கப்பட்ட என் தம்பி மகள் அக்டோபர் ஒன்றில் நலமுடன் வீடு திரும்பினாள். ஐம்பது ஆயிரம் சம்பாதிக்க வேண்டும் என்றே அவசரமாக குழந்தையினை பிரீமெச்சூராக தாம்பரம் ஆஸ்பத்திரியில் சிசேரியன் செய்துள்ளார்கள்.செப்டம்பர் 10-ல் குழந்தையின் அம்மாவை டிஸ்சார்ஜ் செய்து வடபழனி சூர்யாவிற்கு அனுப்பிய தாம்பரம் லேடி டாக்டர் தன் சொந்த ஊருக்கு அன்று இரவே ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த ட்ரையினில்(நர்ஸ் கொடுத்த தகவல்) நலமுடன் போய் சேர்ந்தார். ஊரிலிருந்து திரும்பி வர 6 நாட்கள் ஆகும் அதற்குள் என் தம்பி வேறு டாக்டரிம் போய் விட்டால் என்ன செய்வது என்ற நல்லெண்ணத்தில் சீக்கிரமாக சிசேரியன் செய்துவிட்ட அந்த லேடி டாக்டருக்கு குழந்தை கிடையாதாம்.யாருக்கு சொத்து சேர்க்கிறாரோ தெரியவில்லை.  சூரியா ஆஸ்பத்திரிக்கு ஒரு லட்சம் மொய் எழுதிவிட்டு தப்பித்தோம்,பிழைத்தோம் என்று தன் அருமை மகளுடன் வீடு திரும்பினான் என் தம்பி.

தாம்பரம் ஹாஸ்பிட்டல் லட்சணம் இப்ப தான் தெரியுது.

சூரியா ஹாஸ்பிட்டல் லட்சணம். ஒரு லட்சணம் தன் குணமுள்ள இன்னொரு லட்சணத்திடம் தானே நம்மை அனுப்பும். டாக்டர் சொல்வதை அப்படியே உண்மை என்று எடுத்து கொண்டு யோசிக்க முடியாமல் இரண்டு ஹாஸ்பிட்டலுக்கும் போய் மாட்டி கொண்டு தப்பித்து வந்தார்கள்.இனிமேல் பிரசவத்திற்கும் செகண்ட் ஒப்பினியன் கட்டாயம் கேட்க வேண்டுமோ?


Wednesday, September 21, 2011

ராயல் நகைகள்


 டயானா - சார்லஸ் மகன் வில்லியம் தன் தாய் டயானாவின் இந்த நிச்சயதார்த்த மோதிரத்தை தான் தன் மனைவி கேதரினிற்கு அணிவித்தார்.



சிலோன் சஃபையர் என்ற அந்த புளூ நிற மோதிரம் சுற்றிலும் 14 மிக சிறிய வைரத்திற்கு நடுவில் சும்மா பளிச்சென்று இருக்குல்ல. அப்பொழுதைய பொதுமக்களும் வாங்கும் விலையில் ஒரு மோதிரத்தை டயானா செலக்ட் செய்தது மக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.


கேட் கேதரின் தலையில் வைத்திருக்கும் அந்த சிறிய க்ரீடம்(halo tiara). இந்த tiara வில்லியமின் பாட்டி இரண்டாம் எலிசபெத்துடையது.இரண்டாம் எலிசபெத்தின் 18 ஆவது பிறந்த நாளிற்கு அன்பளிப்பாக அவரது தாய் எலிசபெத்(1) கொடுக்கப்பட்ட இந்த க்ரீடம் 1936-ல் செய்யப்பட்டதாம்.

 எலிசபெத் halo tiara-வுடன் சின்ன வயதில்


கேட் கேதரின் திருமணத்தில் அணிந்திருந்த தோடுகள் அவரின் பெற்றோர் அந்த(halo-tiara) கிரிட டிசைனில் செய்து கொடுத்ததாம்.



டயானாவின் மகன்கள் வில்லியம்,ஹாரி இருவரும் யாருக்கு முதலில் திருமணம் நடைபெறுகிறதோ அவர்களின் மனைவிக்கு நிச்சய மோதிரமாய் இந்த மோதிரத்தை அணிவிக்க பேசி கொண்டார்களாம்.வில்லியம் முந்திக் கொண்டார்.இத்திருமணம் நடந்ததில் இருந்து இந்த புளூ கல் மோதிர விற்பனை இங்கிலாந்தில் அதிகரித்துள்ளதாம்.

டயானா அவர் திருமணத்தின் போது அணிந்திருந்த இந்த (spencer family tiara) க்ரீடத்தினால் மாலையில் தலைவலியினால் மிகவும் அவஸ்தை அடைந்தாராம்.


அதனால் தான் கேதரின் மிக எளிமையான க்ரீடத்தை செலக்ட் செய்து கொண்டாரோ? (cartier halo tiara).

குயின் மேரி

ஜார்ஜ் V 1911-ல் டில்லியில் ஸ்பெஷல் தர்பாரில் கலந்து கொள்ள வந்த போது அவருடைய மனைவி குயின் மேரி அணிந்துள்ள இந்த க்ரீடம் டெல்லி தர்பார் tiara என்றழைக்கப்பட்டது. இந்த க்ரீடம் மேரியின் மருமகள் எலிசபெத்திற்கு(1) அளிக்கப்பட்டது. 1947-ல் எலிசபெத் டெல்லி தர்பார் கிரீடத்தை தன் தென் ஆப்பிரிக்கா விஜயத்தின் போது அணிந்திருந்தார். 60 வருடங்களுக்கு பிறகு 2005 சார்லஸின் இரண்டாவது மனைவி கமீலா ஒரு பார்ட்டியில் அணிந்து வந்தார். மேடம் பெரிய கிரீடத்தை தான் செலக்ட் செய்துள்ளார்.

கமீலா

இந்த டெல்லி தர்பார் கிரீடத்தின் மேலே இருந்த எமரால்ட் நீக்கப்பட்டிருக்கிறது.

நல்ல வேளை நம் திருமணத்தில் இப்படி க்ரீடம் வைக்கும் பழக்கம் இல்லை.இப்ப நகை விற்கும் விலையில் யாரால் முடியும்?


1911-ல் டெல்லி வந்த குயின் மேரிக்கு இந்த டெல்லி தர்பார் நெக்லஸ் பாட்டியாலா மகாராணியால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதன் பிறகு இந்த நெக்லஸ் குயின் மேரி தன் மருமகள் எலிசபெத்திற்கு கொடுத்து விட எலிசபெத் ராணிக்கு மிகவும் பிடித்த ஒரு நெக்லஸ் ஆகியது.


\
இது குயின் மேரி உள்ளங்கழுத்தில் அணிந்துள்ள நகையாகும்.
இந்த எமரால்ட் சோக்கர் டயானாவால் விரும்பி அணிய பட்டது. கழுத்தில் போட வேண்டிய இதை நெற்றியில் சில சமயம் மிக ஸ்டைலாக டயானா அணிந்து கொண்டார். 





கேதரின் தன் மாமியார் டயானாவின் சஃபையர் தோடை சிறுது மாறுதல் செய்து தொங்குவது போல் செய்துள்ளார். நகை விற்கும் விலையில் இப்படி தான் ராணிகளே ஓசியில் காலம் தள்ளுகிறார்களோ!!!! திருமணம் மற்றும் பார்ட்டிகளுக்கு போட கொடுக்கப்படும் இந்த நகைகளை யாருக்கும் கடனாக கொடுக்கவோ அல்லது விற்கவோ ராஜ பரம்பரையில் பெண்களுக்கு உரிமை கிடையாதாம்.டயானா தன் டைவர்சிற்கு பிறகு அனைத்து நகைகளையும் தன் மாமியாரிடமே திரும்ப கொடுத்து விட்டாராம். 

Friday, September 09, 2011

பாப்பா

போன மாதம் செக்கப் சென்ற போது செப்டம்பர் 10-ற்கு பிறகு நல்ல நாள் பார்த்துட்டு வாங்க c-section செய்து குழந்தையினை எடுத்து விடலாம் என்று சொல்லவும்.செப்டம்பர் பத்தே நல்ல நாள் தான் அன்றே செய்து விடலாமா என்று செப்டம்பர் 4-ல் டாக்டரிடம் சொல்ல சென்ற போது இல்லை இல்லை இரண்டு நாட்களில் செய்து விடலாம் இல்லைனா அனெஸ்தடிஸ்ட் கிடைப்பது கடினம் என்று சொல்லி இருக்கிறார் டாக்டர்.

10 வரை நல்ல நாள் இல்லையெனினும் டாக்டர் சொல்படி கேட்பது தான் நல்லது என்று 6 ஆம் தேதி ஹாஸ்பிட்டல்லில் சேர்ந்து 7 ஆம் தேதி காலையில் ஆபரேஷன் செய்து குழந்தையும் எடுத்தாச்சு. பெண் குழந்தை ஆஹா எவ்ளோ நாளாச்சு எங்கள் வீட்டில் என் தங்கைக்கு பிறகு வந்திருக்கும் பெண் குழந்தை என்று எல்லோரும் மிக சந்தோஷமாய் இருந்தோம்.மதியம் இடி போல் ஒரு செய்தி. குழந்தையினை ஆம்புலன்சில் இரண்டு நர்ஸ்கள் உதவியுடன் வடபழனி சூர்யா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு செல்கிறோம் என்ற தகவல். குழந்தை மூச்சு விட சிரமப்படுவதால் அங்கு கொண்டு செல்லும்படி பிரசவம் பார்த்த டாக்டர் என் தம்பியிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

பிறந்த குழந்தை தனியே NICU-வில் இருக்கிறது.அம்மாவோ இங்கே ஒரு ஹாஸ்பிட்டலில்.அங்கோ கண்டிஷனாய் தந்தைக்கு மட்டுமே அனுமதி.இன்ஃப்க்‌ஷன் ஆகி விடும் என்பதால் மற்ற யாரும் உள்ளே அனுமதிக்கவில்லை.நேற்று மூன்று கிலோவில் இருந்த குழந்தை இன்று 100 கிராம் குறைந்துள்ளது. எங்கேயெல்லாம் டியூப் சொருக முடியுமோ சொருகியாச்சு.

பிரிமெச்சூர் பேபிக்கு பிறந்தவுடன் மூச்சு பிரச்சனை வராமல் இருக்க டெலிவரிக்கு முன்பு தாய்க்கு போடப்படும் ஒரு வகையான ஹார்மோன் இன்ஜெக்‌ஷனை ஏன் அந்த தாய்க்கு போடவில்லை. இது குழந்தையினை அட்மிட் செய்த ஹாஸ்பிட்டலில் கேட்டார்கள்.

10 தேதிக்கு பிறகு சிசேரியன் செய்யலாம் என்ற டாக்டர் திடீரென்று இரண்டு நாளில் ஆபரேஷன் என்றால் அதற்கு தாயின் உடல்நிலை காரணம் என்றால் ஓகே.அனஸ்தெடிஸ்ட் கிடைக்கமாட்டார் என்பது ஒரு ஒத்துக் கொள்ள கூடிய காரணமா?வேறு ஆட்களே கிடைக்க மாட்டார்களா?

நார்மலா பிறந்தாலே 1000 பிரச்சனைகள் வரக்கூடிய இந்த காலத்தில் எதற்கு அவசரமாய் ஒரு மாதம் முன்பாகவே பிரிமெச்சூர் பேபியினை எடுக்கும் போது செய்ய வேண்டிய முன்னேற்பாட்டினை ஏன் செய்யவில்லை.?

குழந்தையினை சேர்த்திருக்கும் ஹாஸ்பிட்டலில் வேறு ஒருத்தரும் போக கூடாது என்றால் படிப்பறிவு இல்லாத தகப்பன் என்றால் குழந்தை நிலைமை பற்றி எப்படி புரிந்துக் கொள்வார்.படித்தே இருந்தாலும் மெடிக்கல் டெர்ம்ஸ் எப்படி எல்லோருக்கும் புரியும். இல்லையெனில் அந்த ரிப்போர்ட்டை ஒரு ஜெராக்ஸ் எடுத்தாவது கொடுக்கலாம் இல்லையா? இன்னொரு தெரிந்த டாக்டரிடம் செகண்ட் ஒப்பினியன் கேட்போம் இல்லையா?

செகண்ட் ஒப்பினியன் கேட்காமல் டெலிவரி செய்து இப்போ கஷ்டப்படுகிறோம்.

குழந்தை வெயிட் நல்லாயிருப்பதால் நம்பிக்கையுடன் கடவுள் இந்த முறையும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் எங்கள் குடும்பம் இருக்கிறது. என் மகன்கள் குழந்தைக்கு பெயர் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.ஒன்றும் ஆகாதும்மா பாப்பா வீட்டிற்கு வந்திடும் என்று எங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.என் தம்பி அந்த ஹாஸ்பிட்டலில் தனியே இரண்டு நாளாய் குழந்தையினை தினம் மூன்று முறை மட்டும் பார்த்து விட்டு ரிஷப்ஷனில் காத்து இருக்கிறான்.

என் தம்பிக்கு இரு முறை 8 மாதத்தில், 6 மாதத்தில் குழந்தை இறந்தே பிறந்தது. இது மூன்றாவது குழந்தை. எங்கே முட்டி கொள்வது,யாரை குறை சொல்வது,என்ன பாவம் செய்தோம் என்று புலம்பி கொண்டு இருக்கிறோம். சொந்தத்திலும் திருமணம் செய்யவில்லை.9 மாதமும் பெட் ரெஸ்ட்டில் இருந்தார் என் தம்பியின் மனைவி.

இன்னும் ஒரு முறை கூட நாங்கள் பார்க்காத அந்த பாப்பா எங்களை எல்லாம் பார்க்க வீட்டிற்கு முழுதாய் குணமடைந்து வந்திடும் என்ற நம்பிக்கையில்.

Sunday, August 28, 2011

வெரைட்டி-ஆவணி 2011

ஹாங்காங்கில் நாய்களுக்கு அமைதியாய் இருக்க யோகா சொல்லி தருகிறார்களாம்.அதற்கு டோகா என்று பெயராம்.அப்படியே அவைகள் அந்தரத்தில் மிதக்க நித்தியானந்தரிடம் அனுப்பலாம்.

அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ ஏன் ஐ மட்டும் ஒன்றே ஒன்று இருக்கு.ஒண்ணாப்பு படிக்கும் விஷால் என்னிடம் கேட்ட கேள்வி. அது அப்படி தான் என சமாளிச்சிங்.

நேற்று ஒரு வயதான அம்மா என்னுடன் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தார்கள்.மகன் வீட்டிற்கு வந்துட்டு என் வீட்டிற்கு போறேன்மா என்று அவர்களாகவே சொன்னார்கள்.தனியாவா இருக்கிறீங்க என்று கேட்டேன்.ஆமாம்மா,என் வீட்டுக்காரருடன் இருக்கிறேன். சொந்த வீட்டில் என் மூன்று மகன்களும் அவர் அவர் மனைவி குழந்தைகளுடன் இருக்கிறார்கள். நாங்க வாடகை வீட்டில் இருக்கிறோம். மருமகள்கள் பேர குழந்தைகள் படிக்கலை என்று தினம் அடிப்பதை பார்க்க சகிக்கலைம்மா.ஏன் இப்படி அடிக்கிறீங்க என்று கேட்டால் உங்களால் தான் இந்த குழந்தைகள் கெடுகிறார்கள் என்று சொல்றாங்கம்மா அதான் வாரம் ஒரு முறை மட்டும் பேரப்பிள்ளைகளை பார்த்து போவேன் என்றார். நான் இப்போது வீடு கட்டி கொண்டிருக்கும் ஏரியாவிற்கு போய்விட்டு மதியம் வீடு திரும்பி கொண்டு இருக்கும் போது அவர்களை சந்தித்தேன். அவர்கள் சொன்னதை கேட்டதும் இவ்வளவு கஷ்டப்பட்டு வீடு கட்டணுமா என்று தோன்றியது.

உலகிலேயே நீளமான பாலம் 36 கி.மீட்டருக்கு சைனாவில் இருக்கிறது.

ரயில்வே காலனியில் குடியிருந்த போது போது டிரைவர்,கார்டு.டி.டி.ஆர் வீடுகளில் லைனுக்கு போறேன் என்று சொல்லி வேலைக்கு போவார்கள். யாராவது வீட்டுக்காரர் எங்கே என்று கேட்டால் வீட்டில் இருக்கும் பெண்கள் அவரா ஆன் லைன்ல இருக்கிறார் என்று சொல்வார்கள்.இப்ப நெட் வந்த பிறகு தான் நாமெல்லாம் ஆன் - லைனில் இருக்கிறோம். அவர்கள் முன்பே ஆன் - லைனில் இருந்து இருக்கிறார்கள்!!!.

Saturday, August 27, 2011

பிடித்தவர்கள் - 1

ராஜீவ் காந்தி

இந்தியாவின் ஆறாவது பிரதமராக இருந்து இந்தியாவை ஸ்டைலான பாதையில் அழைத்து செல்ல முற்பட்டவர்.இவரின் இழப்பு எப்பவும் மறக்க முடியாத ஒன்று. நம் வீட்டில் ஒருவரை இழந்தது போன்று ஒரு துக்கத்தினை தர கூடியது. இவரின் வாரிசுகள் ராகுல்,பிரியங்காவினை பார்க்கும் போது எல்லாம் பரிதாபமாக இருக்கும். மிக அருமையான ஒரு தந்தையை கொடுமையாக பறிகொடுத்தவர்கள்.

தீதி மம்தா பானர்ஜி

1955-ல் கல்கத்தாவில் பிறந்த இவரின் எளிமை என்னை கவர்ந்தது. வரலாற்றில் முதுகலையும்,சட்டமும் பயின்றவர். மிக எளிமையான உடையும், நகை இன்றியும்,காட்டன் புடவையும், ஒரு துணி பையினை தோளில் தொங்க விட்டப்படி இருப்பதுமே இவரின் ஸ்டைல்.
                காங்கிரசில் 1970-ல் சேர்ந்து படிபடியாக முன்னேறியவர். 1997-ல் காங்கிரசில் இருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரசை தோற்றுவித்தார். 1999-ல் NDA வில் சேர்ந்து மத்தியில் ஆட்சியினை பிடித்து ரயில்வே மந்திரி ஆனார். 2009-லும் ரயில்வே மந்திரியாக இருந்தார். துரந்தோ என்னும் அதிவேக ரயில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது இவர் காலத்தில் தான்.2011 மே மாத தேர்தலில் ஜெயித்து தற்போது மேற்கு வங்கத்தின் முதல் அமைச்சராக இருக்கிறார். முதல் அமைச்சரானதும் அவர் செய்த முதல் காரியம் சிங்கூர் விவசாயிகளுக்கு தொழிற்சாலைக்காக பெறப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை திருப்பி கொடுத்தது தான். தீதி மேலும் நல்லது செய்ய வணங்குகிறேன்.

நதியா

பூவே பூச்சூடவா,சின்ன தம்பி பெரிய தம்பி,பூக்களை பறிக்காதீர்கள்,உயிரே உனக்காக போன்ற படங்களில் நடித்து தன் டீசண்டான உடையால் அனைவரையும் கவர்ந்தவர் என்னை மிக கவர்ந்தார்.



மாதவி


ராஜபார்வை,டிக்,டிக்,டிக்,சட்டம்,தில்லு முல்லு,தம்பிக்கு எந்த ஊரு,உன் கண்ணில் நீர் வழிந்தால்,விடுதலை போன்ற படங்களில் வந்த மாதவி பிறகு ஹிந்தியில் அதிகம் நடிக்க போனதால் தமிழ் படங்களில் காணாமல் போனார்.ஏன் ஹிந்திக்கு போனார் என்று தோன்றும்?இங்கே இருந்து இருந்தால் இன்னும் அதிக படங்களில் நடித்து இருந்திருக்கலாம்.அசத்தலான கண்களுக்கு சொந்தகாரர்.அருமையாக நடனமும் ஆடுவார்.

  மேடம் ரால்ஃப் சர்மா என்பவரை திருமணம் செய்து மூன்று பெண் குழந்தைகளுடன் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் வசிக்கிறார் என்ற செய்தி படித்து சந்தோஷமாக இருந்தது.

சரிதா

                                     என்ன இரு கண்கள்
மரோசரித்ரா,சுஜாதா,நூல்வேலி,அக்னி சாட்சி,நெற்றி கண்,அச்சமில்லை அச்சமில்லை,கல்யாண அகதிகள்,புதுகவிதை போன்ற படங்களில் நம் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் வருவார். மிக அருமையான குரல்வளம்.

சிம்ரன்


மாடர்ன் கேர்ள், குடும்ப பாங்கான கேரக்டர் இரண்டும் பொருந்த கூடியவர். அருமையாக நடனம் ஆட கூடியவர். நேருக்கு நேர்,அவள் வருவாளா,கண்ணெதிரே தோன்றினாள்,வாலி,பார்த்தேன் ரசித்தேன்,12B,
கன்னத்தில் முத்தமிட்டால்,பஞ்ச தந்திரம் போன்ற படங்களில் நன்கு நடித்தும் இருப்பார்.

S.P.பாலசுப்ரமணியம்
மன்றம் வந்த தென்றலுக்கு -- மெளன ராகப் பாடல் யாருக்கு தான் பிடிக்காமல் போகும். மிக அருமையான மனிதர் என்பது அவரின் இண்டர்வியூக்களில் தோணும். என்ன ஒரு குரல். என்ன ஒரு சாதனை.  ஏக் துஜே கேலியே, Hum Aapke Hain Kaun ஹிந்தி படப் பாடல்கள்.60+ வயதிலேயும் 25 வயது கதாநாயகனுக்கு அட்டகாசமாய் பொருந்தும் குரல்.
காதலின் தீபம் ஒன்று(தம்பிக்கு எந்த ஊரு)
காதல் ரோஜாவே(ரோஜா),பனிவிழும் மலர் வனம்(நினைவெல்லாம் நித்யா),தங்க தாமரை மலரே(மின்சார கனவு), என்ன சத்தம் இந்த நேரம் (புன்னகை மன்னன்).....சொல்லி கொண்டே போகலாம்.தனியே பதிவிடணும்.

பிரகாஷ் ராஜ்

டூயட் படத்தில் பாலசந்தர் டைரக்‌ஷன் என்பதால் ஓவர் ஆக்ட் செய்திருப்பார். இருவரிலும் ஓவர் ஆக்ட் தான். கில்லியிலும் ஓவர் ஆக்ட் தான்.மொழியில் சூப்பர் ஆக்‌ஷன்.அபியும் நானும்,வசூல்ராஜா சொல்லி கொண்டே போகலாம்.சில சீன்களில் அட்டகாசமாய் நடித்து பெயர் வாங்கி விடுவார்.

JOHN TRAVOLTA

PULP FICTION,FACE OFF இந்த இரண்டு படங்களும் தான் முதலில் பார்த்தது. அட்டகாசமான ஸ்டைலில் அலட்சியமாய் வருவார். அதன் பிறகு Broken Arrow,Domestic Disturbance பார்த்து இன்னும் ஒவ்வொரு படமாக பார்க்கும் ஐடியாவில் இருக்கிறேன். இரண்டு வருடங்கள் முன்பு இவரின் 16 வயது மகன் இறந்துவிட்டார். அவருக்கு KAWASAKI SYNDROME என்ற நோய் தாக்கி அதனால் வரும் வலிப்பு நோயால் பாத்-டப்பில் தலை மோதி இறந்திருக்கிறார்.Travolta-க்கு போன வருடம் பெஞ்சமின் என்று ஒரு மகன் பிறந்திருக்கிறார். அவரின் மகளின் வயது 10.


லிஸ்டில் பெயர்கள் இன்னும் இருக்கு.இன்றைக்கு இது போதுமே.

Friday, August 26, 2011

காஷ்மீர்

”1846-ல் பிரிட்டிஷ் சர்க்கார் காஷ்மீரினை குலாப் சிங்கிற்கு எழுதிக் கொடுத்தனர். பதிலுக்கு 72 லட்சம் ரூபாய் பணம்,ஆண்டுக் கப்பமாய் ஒரு குதிரை, 12 செம்மறி ஆடு, மூன்று செட் காஷ்மீர் சால்வைகள் கொடுக்க வேண்டும்.குலாப் சிங்கின் கொள்ளு பேரன் தான் விடுதலை அடைந்த போது காஷ்மீரில் மன்னராக இருந்த ஹரி சிங்.”

இதை கிழக்கு பதிப்பகம் பா.ராகவனின் காஷ்மீர் புத்தகத்தில் படித்தது.

இன்னும் புத்தகத்தினுள்

1.5000 வருட பாரம்பரியமிக்க பண்டிட்டுகள் கிறிஸ்த்துவின் பிறப்பிற்கு 250 ஆண்டுகள் முன்பே காஷ்மீரில் செல்வ செழிப்போடு வாழ்ந்து இருக்கிறார்கள்.

2.புத்த மதம் செழிக்க ஆரம்பிக்கவும் மன்னர் சுகதேவர் இந்து மதத்தின் செல்வாக்கை குறைக்க ஆப்கானில் இருந்து முஸ்லீம் அறிஞர்களை வரவழைத்து தலா ஒரு கிராமத்தினை கொடுத்து குழுவாக தங்க அனுமதிக்கிறார்.

3.துலுச்சா என்ற செங்கிஸ்கான் வழி வந்தவன் காஷ்மீர் மீது படையெடுத்து அதன் அமைதி அழிய ஆரம்பிக்கிறது.

4.பிறகு முகலாயர்கள் காலத்தில் அக்பர் 1588-ல் படையெடுத்து அடுத்து வந்த முகலாயர்கள் அனைவருக்கும் காஷ்மீர் ஒரு போக பொருளாயிற்று.

5.19 ஆம் நூற்றாண்டில் காஷ்மீர் சீக்கியர் வசமாகியது. பிரிட்டிஷார் பஞ்சாப்பினை கைப்பற்றிய போது காஷ்மீரில் டோக்ரா இனத்தை சேர்ந்த தளபதி(பஞ்சாப் மன்னரால் நியமிக்கப்பட்டவன்) குலாப்சிங் பிரிட்டிஷாரிடம் ஒரு ஒப்பந்தம் போட்டு கொண்டார். அது தான் முதல் பத்தியில் சொன்னது.


6.இப்ப காஷ்மீர் குலாப்சிங்கின் வசமாகியது.ரன்பீர் சிங்,பிரதாப் சிங், ஹரி சிங் என டோக்ரா இனத்தை சேர்ந்த இந்து மன்னர்கள் காஷ்மீரினை ஆண்டனர்.

7. இவர்கள் காலத்தில் முஸ்லீம்கள் கொடுமையினை அனுபவித்தனர். எனவே, ஷேக் முகம்மது அப்துல்லா போராட துவங்கினார்.

8.ஹரி சிங் தன் பாட்டன் சொத்தாக காஷ்மீரை நினைத்தார். ஷேக் அப்துல்லாவை சிறையில் அடைத்தார். நேருவிற்கு ஷேக் அப்துல்லா நெருங்கிய நண்பர்.எனவே ஹரி சிங்கிற்கு காங்கிரஸ் பிடிக்காது. ஹிந்து என்பதால் முஸ்லீம்கள் பிடிக்காது. எனவெ, சுதந்திரம் அடைந்ததும் தனி நாடாகவே இருக்க விரும்பினார்.

9. இந்திய பாகிஸ்தான் சுதந்திரத்திற்கு பிறகு ரெஸ்ட் எடுக்க ஜின்னா காஷ்மீர் செல்ல விரும்பினார். அதற்கும் அனுமதிக்கவில்லை ஹரிசிங். அதன் பிறகு தான் பாகிஸ்தான் தன் வேலையினை ஆரம்பித்தது. மவுண்ட்பேட்டன் இந்தியாவுடன் சேர்ந்து விடும்படி பேச சென்றார்.அவரை உடல்நிலை சரியில்லை என்று பார்க்காமல் இருந்தார் ஹரிசிங். காந்தி போய் பேசி பார்த்தார். ஷேக் அப்துல்லாவை மட்டும் விடுதலை செய்ய ஒப்புக் கொண்டார். காந்தியிடமும் இந்தியாவுடன் சேர முடியாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

10.ஜின்னாவை காஷ்மீருக்குள் அனுமதிக்க மறுத்ததை பாகிஸ்தானால் ஜீரணிக்கவே முடியவில்லை. வடமேற்கு எல்லைப்புற பதான் ஆதிவாசி இனமக்களை ஆயுதங்களுடன் காஷ்மீருக்குள் அனுப்பி வைத்தனர். புனித போர் என்று அதற்கு பெயரிடப்பட்டது. இதை எதிர்ப்பார்க்காத ஹரிசிங் நேருவின் உதவியினை நாடினார். சர்தார் படேல் தனது செயலாளரான வி.பி. மேனனை அனுப்பி ஹரிசிங்குடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்தியாவுடன் காஷ்மீர் இணைவதற்கான ஒப்பந்தம் அது. மவுண்ட்பேட்டன் பாகிஸ்தான் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். ஜின்னா இந்தியாவின் தந்திரம் என்று சொன்னார். ஆனால், அவர் தான் ஆதிவாசிகளுக்கு உதவியதை ஒத்துக் கொள்வாரா என்ன? நேரு ஐக்கிய நாட்டு சபைக்கு பிரச்சனையினை கொண்டு சென்றார்.

11.மக்கள் எந்த நாட்டுடன் சேர வேண்டும் என்று வாக்கெடுப்பிற்கு இந்தியாவும் ஒப்புக் கொண்டது. ஆனால், ஆதிவாசிகளை முற்றிலும் திரும்ப அழைக்க பாகிஸ்தான் மறுத்தது. இந்திய ராணுவம் காஷ்மீரில் இருக்கும் வரை வாக்கெடுப்பு நடக்க கூடாது என்பது பாகிஸ்தானின் வாதம். ஹரிசிங் தேசிய மாநாட்டு கட்சியின் ஷேக் அப்துல்லாவை பிரதமராக நியமித்தார். இவரை பார்த்து பாகிஸ்தான் பயந்தது. இவர் வாக்கெடுப்பை தமக்கு சாதகமாக்கி கொள்வார் என பாகிஸ்தான் நினைத்தது.

12.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நிர்ணயித்தது. இதில் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவது பற்றி ஒரு அறிவிப்பும் அதில் இல்லை. அதாவது இந்தியாவின் ஒரு மாநிலம் காஷ்மீர்.கொதித்து போனார்கள் காஷ்மீர் மக்கள்.
ஜம்மு பிரஜா பரிஷத் என்ற அமைப்பிற்கு மன்னர் வேறு உதவினார். அவர்கள் இந்துக்களை மீட்டு எடுக்க வந்தவர்களாக நடந்து கொண்டனர்.

13.ஷேக் அப்துல்லா நேருவால் கைது செய்ய பட்டார். பக்க்ஷி குலாம் முகம்மது காஷ்மீரின் பிரதமனார்.இவர் காலத்தில் தான் பிரதமர் என்பது மாற்றம் பெற்று முதல் அமைச்சர் என அழைக்கப்பட்டார்.இப்படி நிறைய விஷயங்கள்....

14.ஷேக் அப்துல்லாவின் பேரன் உமர் அப்துல்லா தான் இப்பொழுது அங்கு முதலமைச்சர்.

இந்த புத்தகத்தை படித்து முடித்ததும் காஷ்மீர் தனி நாடாகவே இருந்து இருக்கலாமோ என்று தான் தோன்றியது.போன வருடம் ஏப்ரலில் காஷ்மீருக்கு குடும்பத்துடன் போய் வந்த போது தெரியாத பயம், ஆஹா இந்த புத்தகத்தினை படித்த பின் இவ்வளவு பிரச்சனையுள்ள ஒரு இடத்திற்கு எப்படி தில்லாக குழந்தைகளுடன் போய் வந்தோம் என்று இப்போது திகிலாக இருக்கிறது.நாங்கள் போன போது சந்தித்த முஸ்லீம் நண்பர்கள் உங்கள் ஊருக்கு போய் நிறைய நண்பர்களிடம் சொல்லி காஷ்மீருக்கு டூர் வரும்படி சொல்ல சொன்னார்கள். ஏறத்தாழ 15 வருடங்களாக டூரிசத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள்,வருமானம் இல்லாமல் இருப்பதால் இப்பொழுது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்றே சொன்னார்கள்.
எங்கேயும் எப்போதும் பாதுகாப்பிற்கு நம் மிலிட்டரி ஆட்கள்.ஆனால், அவர்களை பார்க்கும் போது தான் ஒரு பயம் வருகிறது.


காஷ்மீர்-1,  காஷ்மீர்-2,  காஷ்மீர்-3காஷ்மீர்-4

போக விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.முடிந்த உதவி செய்து தரப்படும்.போக வர பணம் எல்லாம் தரமுடியாது!!!

Thursday, August 25, 2011

பாபநாசம்+குற்றாலம்

இந்த மாதம் முதல் வாரத்தில் குடும்பத்துடன் போன டூர்.பாபநாசத்தில் நாங்கள் தங்கியிருந்த காரையார் லோயர் கேம்ப் கெஸ்ட் ஹவுஸின் முன்னால் இருந்த காடு.

மாலை 6.45-ல் அகஸ்தியர் அருவியில் எங்கள் குடும்பம் மட்டும் இருந்தோம்.


பானதீர்த்தம்
 பானதீர்த்தம் படகில் போய் இறங்கியதும் ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்டில் பெற்ற அனுமதியில் ஒத்தையடி பாதையில் எங்கள் குடும்பம் மட்டும் போன இடம்.
                                     
                            அங்கே தனியே ஒரு சின்ன அருவியும்,ஒரு நதியும்


       
                   குற்றாலத்தில் தங்கிய 1903-ல் கட்டப்பட்ட ஒரு பழமையான வீடு.

                                                         
             குஷியாக விஷால்

                                                       
                 இலஞ்சி கோயில் போகும் வழி

                     
திருமலை கோயில் மேலிருந்து ஒரு க்ளிக்

                மெயின் அருவி

 செங்கோட்டை போகும் வழியில் இருந்த குண்டலாறு நீர்தேக்கம்


                     புலி தேடி ஒரு பயணம்




Unknown Reasons (கடவுளுக்கு மட்டும் தெரியுமோ?)

சமீபத்தில் ஆந்திராவின் இருந்து இங்கு எங்கள் வீட்டு பக்கத்தில் குடி வந்திருக்கும் ஒரு பெண்ணிற்கு உடல்நிலை சரியில்லை.திருமணம் முடித்து 10 வருடங்களில் 3 முறை அபார்ஷன் ஆகி,3 முறை லேப்ராஸ்கோப்பி முறையில் கருப்பை கட்டியினை எடுத்தும் உள்ளார்கள்.

இந்த ஊருக்கு அவர் புதுசு.தமிழ் சுத்தமாய் தெரியாது. ஒரு நாள் கடுமையான வயிற்று வலியில் அவஸ்தை பட்டவரை பக்கத்தில் இருக்கும் டாக்டரிடம் கூட்டி சென்றேன். அவர் உடனே ஸ்கேன் செய்து பார்த்து விட்டு கருப்பையில் பிரச்சனை இருப்பதால் வேறு பெரிய மருத்துவமனையில் பார்த்து விடுங்கள் என்று வலி குறைய மட்டும் மருந்தும் கொடுத்தார்.

எங்கள் ஏரியாவிலேயே இன்னொரு ஸ்பெஷல் மருத்துவரை இரண்டு நாளில் சந்தித்தோம்.அவரும் ஒரு ஸ்கேன் செய்து பார்த்து விட்டு நீங்கள் சேத்பட்டில் இருக்கும் ஒரு டாக்டரை உடனே சந்தித்து விடுவது நல்லது என்று கூறி விட்டார். ஆனால், 20 நாட்களாக சேத்பட் டாக்டரின் அப்பாயிண்மெண்ட் கிடைக்கவேயில்லை. எனவே, எங்க ஏரியா ஸ்பெஷல் டாக்டரையே திரும்ப வலி பொறுக்காமல் பார்க்க சென்றோம். இப்படி சேத்பட் டாக்டரிடம் அப்பாயிண்மெண்ட் கிடைக்கவில்லை அடுத்த மாதம் தான் கிடைக்கும் என்றும் இப்பொழுது வலி நிற்க மருந்து தரும்படி கேட்டோம்.

எங்க உள்ளூர் ஸ்பெஷலிஸ்ட் என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை, ஏம்மா இந்த பெண்ணை கூட்டிட்டு நீ அலஞ்சுட்டு இருக்க,பேசாமா அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பிட்டு உன் வேலையை பார் என்று கடுமையாக என்னிடம் கூறினார். சூப்பர் டாக்டர்.சொந்த ஊரில் மருத்துவம் செய்ய வசதியில்லாததால் தானே, சென்னை பெரிய ஊர் இங்கே நல்ல மருத்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே வந்து இருக்கிறார் என்றும் இவருடன் அலைவதில் எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை, சேத்துபட் டாக்டர் இல்லையெனில் வேறு டாக்டர் ரெஃபர் செய்யுங்கள் என்றும் கேட்டேன்.

இல்லை நீங்கள் வேறு டாக்டரை பாருங்கள் என்று விட்டேத்தியாக சொன்னார். பிறகு என் கஸின் (டாக்டர்) அட்வைஸ் படி ராமசந்திராவிற்கு அந்த பெண் அவர் கணவருடன் போய் வருகிறார்.ஆனாலும்,அவர் பிரச்சனை என்னவென்று இது வரை கண்டு அறியப்படவில்லை. அங்கு இவர் பார்க்க போன டாக்டர் இரண்டு நாட்கள் கழித்து அங்கேயே இன்னொரு டாக்டரை பார்க்க சொல்லி விட்டார். இந்த இரண்டு மாதத்தில் அந்த பெண் பார்க்கும் 4 ஆவது டாக்டர் இவர்.

2 மாத்தில் அவர் எடுத்தது 4 முறை ஸ்கேனும், ஒரு முறை MRI  ஸ்கேனும் ஆனாலும் இன்னும் சுத்தலில் தான் இருக்கிறார்.
கருப்பையால் தானே இவ்வளவு பிரச்ச்னை என்று அவரின் கணவர் அதை எடுத்து விடலாம் என்கிறார். ஆனால் 33 வயதில், குழந்தையும் இல்லாததால் கருப்பையினை எடுக்க எந்த டாக்டரும் தயாராயில்லை.  ஆனால் அதனால் அந்த பெண் படும் பாடு. என்ன பிரச்சனை என்று தெரிந்து தக்க சிகிச்சை எடுக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு இருக்கிறோம்.

கருப்பையில் கட்டி திரும்ப திரும்ப வர காரணம் என்னவென்று தெரியாது?
ஓவரியில் கட்டி வர காரணம் என்னவென்று தெரியாது?
கருப்பையின் அளவு பெரிதாக காரணம் என்னவென்று தெரியாது?
சில பெண்களுக்கு மூன்றாவது மாதத்தில குழந்தை அபார்ஷன் ஆக சரியான காரணம் என்னவென்று தெரியாது?

பரம்பரையில் யாருக்கேணும் இருந்தால் இந்த பிரச்சனைகள் பெண்களை தாக்குமாம்.எதுவும் நம் கையில் இல்லை என்று மட்டும் புரிகிறது.
இத்தூண்டு 3 க்கு 2 இன்ச் சைசில் ஒரு வெற்று பை போல பெண்களுக்குள்ளே இருந்து கொண்டு அது பெண்களை படுத்தும் பாடு.

Wednesday, August 24, 2011

கட்டைல போறவங்க..

நேற்று மதியம் பேங்கில் வீட்டு லோன் விஷயமா தேவுடு காத்து இருந்த போது அந்த பேங்க் அருகில் இருக்கும் கல்லூரியில் பெண்கள் அங்கிட்டும் இங்கிட்டும் போறது வித்யாசமாய் இருந்துச்சு.என்னன்னு உத்து பார்த்ததில் அட அவர்கள் கட்டைல போறது தெரிஞ்சுச்சு. இப்ப தான் இப்படி அதிகமா கட்டைல போறாங்களா இல்லை ஆதி காலத்துல இருந்தே இப்படி தானா? பெண்கள் மட்டும் தான் இப்படியா நம்ம ”குடி மகன்கள் ” எப்புடி என்று கூகுளிடம் கேட்டதில்


இப்படி ஒரு படம் கிடைத்தது. ஆஹா உண்மையிலேயே கட்டையில ஆதிகாலத்திலேயே போனார்கள் என்ற உண்மையும் விளங்கிச்சு.Chopine எனப்படும் இந்த செருப்பினை அணிய இரண்டு பேரின் உதவி தேவை. நடக்கும் போதும் யாராவது பிடித்து கொள்ள வேண்டுமாம். ஆனாலும் இதை அணிந்து கொண்டு டான்ஸ் கூட ஆடிய பெண்களும் உண்டாம். 7லிலிருந்து 30 இன்ச் உயரம் வரை இருக்குமாம். 15 ஆம் நூற்றாண்டில் பெண்கள் பயன்படுத்தியது.
இது ப்ளாட்ஃபார்ம் ஷூ எனப்படுகிறது. 
பொதுவா பெண்கள் தங்கள் ஸ்டேடசிற்காக இது போல் உயரமான செருப்புகளை அணிந்து இருக்கிறார்கள்.அணிகிறார்கள். வசதி என்பதை விட அலட்டல் தான் இதில் அதிகம். 

Stiletto Heel - கத்தி போல் மிக கூர்மையான் முனைகள் கொண்டது. 


பெண் குழந்தைகளுக்கு கண்டிப்பா ஹை ஹீல்ஸ் செருப்புகளை வாங்கி தர வேண்டாம்.சிறிய வயதிலேயே அதன் பாதகங்களை சொல்லி விட்டால் நல்லது.இடுப்பில்,காலில்,பாதத்தில், முதுகில் வலி ஏற்படுத்தும். வலியினை பொறுத்துக் கொண்டு இளம் வயதில் இத்தகைய செருப்புகளை அணிவதால் கட்டாயம் கால் வலி,முதுகு வலியால் வாழ்க்கையின் பிற்பகுதியில் கஷ்டப்பட நேரிடும்.லிகமெண்ட் எனப்படும் மெல்லிய ஜவ்வு கிழிந்து போவது,கால் மூட்டுகள் திரும்பி பாதிப்படைவது, டிஸ்க் ப்ரோலாப்ஸ் போன்ற பாதிப்புகள் ஏற்பட கூடும். உடலில் இரத்த ஓட்டம் கூட பாதிக்கப்படுமாம். ஸ்லிப் ஆகி கீழே விழும் போது கை மணிக்கட்டு பாதிக்க படுமாம். செருப்பு கடைக்கு போனால் இத்தகைய செருப்புகளை பார்க்க மட்டும் செய்யுங்கள். வாங்க வேண்டாம்.




பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ்கள் வெளி ஆட்களுக்கு தெரிந்து விடுகிறது.எனவே,இப்படி கட்டைல போறவ என்று கிண்டல் செய்ய முடிகிறது. ஆண்களுக்கு இருக்கும் Elevator Shoes - Secret Shoes என்றே அழைக்கப்படுகிறது. காரணம் ஷூக்களின் உள்ளே உயரமாக்க பட்டிருக்கும். வெளியில் இருந்து பார்த்தால் பெண்கள் ஹை ஹீல்ஸ் போல தெரியாது. ஆகவே,கட்டைல போறவனும் இருக்கிறார்கள்.