Thursday, February 03, 2011

எகிப்தில் என்ன நடக்கிறது?

புரட்சியாளர்கள் யார்?

ஏப்ரல் 6 யூத் மூவ்மெண்ட் என்ற அமைப்பினை சேர்ந்தவர்கள் முஸ்லீம் சகோதரத்துவ கட்சியுடன் சேர்ந்து புரட்சியினை ஜனவரி 25, 2011-ல் ஆரம்பித்தனர். இந்த அமைப்பு எல் மஹாரா-எல் குப்ரா என்ற மிக பெரிய தொழில் நகரில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 2008, ஏப்ரல் 6-ல் ஸ்ட்ரைக் செய்வதற்காக ஏற்படுத்த பட்டது.

புரட்சியாளர்களை பற்றிய ஒரு முன்னுரை:

அகம்மது மஹர், அகம்மது சலா என்ற இருவர் ஃபேஸ் புக்கில் இந்த யூத் மூவ்மெண்டினை ஆரம்பித்தனர். ஏப்ரல் 6 அன்று கருப்பு ஆடை அணிந்து வீட்டிலேயே இருக்கும் படி பணிநிறுத்தம் செய்பவர்களிடம் ப்ளாக், facebook, ட்விட்டர், ஃப்லிக்கர் போன்ற சமுதாய வலைதளங்களில் அறிவித்துக் கொண்டனர்.
இதற்கு முன் அரசியலில் ஈடுபடாத சுமார் 70,000 படித்த மக்கள் இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.பேச்சு சுதந்திரம், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி பற்றி எழுச்சி மிகு கட்டுரையினை எழுதினர்.  செர்பியாவில் 2000த்தில் நடந்த புரட்சியினை தங்களுக்கு முன்னுதாரணமாய் கொண்டனர்.  2008-ல் அஹம்மது மஹர் கைது செய்ய பட்டார். சமுதாய வலைதளங்கள் தடை செய்யப் பட்டன. ப்ளாக்கர்களும்,கவிஞர்களும், பத்திரிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஏப்ரல் -6 அமைப்பினரே இப்போது புரட்சியினை எகிப்தில் ஏற்படுத்தி உள்ளனர். எகிப்தில் ஏற்பட்டுள்ள இந்த புரட்சிக்கு லோட்டஸ் புரட்சி என்று பெயர்.டுனிஷியாவில் நடந்த ஜாஸ்மின் புரட்சி தான் இந்த லோட்டஸ் புரட்சிக்கு முன் உதாரணம்.

காலித் சைத் (28) என்ற இளைஞன் போலீஸ் அத்து மீறலை, ஊழலை இணையத்தில் வெளியிட்டதால் ஒரு மாதம் முன்பு அவன் போலீசாரால் கொல்ல பட்டான்.அவன் போதை மருந்து சாப்பிட்டு இறந்தான் என்று போலீஸ் சொல்வதை மக்கள் நம்பவில்லை. காலித்தின் மரணத்தினை எகிப்து மக்கள் மன்னிக்க, மறக்க தயாராக இல்லை. காலித் சைத்தின் இணையம்

தற்சமயம் நீதிபதிகளும், இராணுவத்தினரும் இப்போராட்டத்தில் பங்கு பெற்று வருகின்றனர். இராணுவத்தினர் இது வரை எந்த நாட்டிலும் புரட்சியாளர்களுடன் கைகோர்த்தது இல்லை. பொது மக்களும் புரட்சியில் பங்கேற்று வருகின்றனர்.

புரட்சிக்கு காரணம் என்ன?

எந்த நேரத்திலும் யாரையும் விசாரணையின்றி கைது செய்யும் போலீசின் அடக்கு முறை, குறைந்த சம்பளம், ஊழல், வேலையின்மை இவைகளை எதிர்த்தும்,பொதுத் தேர்தலை நடத்தக் கோரியும்,பேச்சு சுதந்திரம் கேட்டும் இந்த விலைவாசி ஏற்றத்தினை எதிர்த்தும் புரட்சி வெடித்து உள்ளது. எமர்ஜென்சி சட்டத்தினை எதிர்த்தும் இந்த புரட்சி. தலைநகர் கெய்ரோவிலும், சூயஸ்,அலெக்ஸாண்டிரியா என்ற நகரத்திலும் புரட்சி ஏற்பட்டுள்ளது.

முக்கியமாய் அதிபர் ஹோஸினி முபாரக்கினை பதவி விலக கோரியே இந்த புரட்சி ஏற்பட்டுள்ளது.


யாரை எதிர்த்து புரட்சி? இதோ இவரை தான்.



முகமது ஹோஸினி சையது முபாரக்(82) எகிப்தில் 1981-லிருந்து 2011 வரை 30 வருடங்கள் ஜனாதிபதியாக இருக்கிறார்.அதற்கு முன்னால் எகிப்தின் ஏர்ஃபோர்சில் பணியாற்றியவர். ஜனாதிபதியான இவர் 6 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியவர். நம் இந்தியா போல் அல்லாது இங்கு ஜனாதிபதிக்கு தான் அதிக பவர்.பாராளுமன்ற ஜனநாயகம் போல் இந்த அரசு இல்லை. தான் ஆட்சிக்கு வந்ததும் 1958-ன் எமர்ஜென்சி சட்டத்தினை தவிர்க்காமல் அதை இன்னும் இறுக்கமாக்கினார். இவருடைய இளைய மகன் கேமல் முபாரக்(47)லண்டனுக்கு பறந்து விட்டார் என்று செய்தி.அப்பா மண்டையை போட்டால் அடுத்த ஜனாதிபதி ஆகலாம் என்ற கனவுடன் இருந்தவர். மூத்த மகன் ஆலா முபாரக் அரசியலில் விருப்பம் இல்லாதவர். 

புரட்சியின் விளைவுகள்:

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் அதனை அங்குள்ள இராணுவத்தினர் நடை முறை படுத்தவில்லை. 
இந்த புரட்சியில் ஜனவரி 30 வரை 150 பேர் இறந்ததும், 1500 மனிதர்கள் காயமடைந்தும், 750 போலீசார் காயமடைந்தும் உள்ளனர்.

ஹாசினி முபாரக், உளவு துறை தலைவர் ஓமர் சுலைமான்(74 வயது) என்பவரை ஜனவரி 29-ல் துணை ஜனாதிபதியாக்கி உள்ளார்.இந்த தாத்தா இதற்கு முன்னால் இலாகா இல்லாத மந்திரியாகவும், உளவுத்துறை டைரக்டராய் இருந்தவர்.  பவர்ஃபுல் ஸ்பை என்று பெயர் வாங்கியவர்.

ஹோசினி முபாரக், அஹம்மது சாபிக்(69) என்பவரை அரசு அமைக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். சஃபிக் பிரதம மந்திரியாக ஜனவரி 31-ல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் எகிப்தின் ஏர்ஃபோர்ஸ் கமாண்டராக இருந்தவர். பிறகு ஏவியேஷன் மந்திரியாக இருந்தவர்.எகிப்தின் ஏர்போர்ட்டுகளை மிகவும் மாடர்னாக மாற்றியவர்.

இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை எகிப்தில் இருந்து திரும்பி அழைத்துக் கொண்டு உள்ளன. யாரும் எகிப்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டன.

எகிப்து அரசு இணையத்தினையும், செல்ஃபோன் பயன்பாட்டினையும் சரியாக பயன்படுத்த முடியாத படி முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஆனால்
Hacktivism மூலமாக எகிப்தியர்கள் இவை இரண்டினையும் உபயோகப்படுத்த முடிகிறது. 

முபாரக் அடுத்த செப்டம்பர்,2011 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும், அரசியலமைப்பில் சில மாறுதல்கள் செய்ய இருப்பதாகவும் பிப்ரவரி 1-ல் அறிவித்து உள்ளார். இந்த எகிப்தின் மண்ணில் தான் தான் சாக விரும்புவதாகவும்,இந்த நாட்டை விட்டு செல்ல மாட்டேன் என்றும் அறிவித்து உள்ளார். ஆனால், புரட்சியாளர்கள் உடனே முபாரக் பதவி விலக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பிப்ரவரி 2 மதியம் முபாரக்கின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதில் 13 பேர் இறந்தும், 600 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர். 9 நாட்களாக புரட்சி நடந்து வருகிறது. பிப்ரவரி 2-ல் புது திருப்பமாக முபாரக்கின் ஆதரவாளர்கள் 20 ஆயிரம் பேர் களத்தில்.

லிபியா,அல்ஜீரியா,ஏமன் முதலிய நாடுகளில் புரட்சி வெடிக்கலாம் என தெரிகிறது. பெட்ரோலின் விலை இன்னும் ஏறுவதற்கு சாத்தியங்கள் உள்ளன.தினம் 2.4 மில்லியன் பேரல் ஆயில் எகிப்தில் இருக்கும் சூயஸ் கால்வாய் வழியாக வருவதால் புரட்சி நீடித்தால் இன்னும் விலையேற்றம் ஏற்படும்.

வெள்ளிக் கிழமைக்குள் பிப்ரவரி 4,அதிபர் பதவி விலக வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள். நேற்று ஏற்பட்ட மோதல் காரணமாக ராணுவம் போராட்டக்காரர்களை போராட்டத்தினை கைவிட கோரி அழைப்பு விடுத்துள்ளது. 

அடுத்த தலைவர் யார்?

முகம்மது முஸ்தஃபா எல்பராடி(68):

ஜனவரி 27-ல் தஹ்ரிர் ஸ்கொயரில் நடந்த புரட்சியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றி உள்ளார். பிப்ரவரி 1-ல் ஒரு மில்லியன் மக்கள் இந்த ஸ்கொயரிலும், அடுத்து உள்ள தெருக்களிலும் கூடி உள்ளனர். அடுத்து அமைய போகும் புதிய அரசிற்கு மக்கள் விரும்பினால் தலைமை தாங்குவதாய் அறிவித்து உள்ளார்.முஸ்தஃபா எல்பராடி ஒரு வக்கீல் ஆவார். இவர் 2005 அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.அனாதை இல்லங்களுக்கு தான் பெற்ற தொகையினை கொடுத்து விட்டார்.

ஐக்கிய நாட்டு சபையின் இண்டர்நேஷனல் அட்டாமிக் எனர்ஜி ஏஜன்சியின்(IAEA) டைரக்டராய் பணி புரிந்தவர்.மூன்று முறை இந்த பதவியினை வகித்தார். (1997-2009).உலக அளவில் நோபல் பரிசினை தவிர உலக அளவில் 18 பரிசுகளை வாங்கி உள்ளார்.இவரின் மகள் லண்டனில் வக்கீலாகவும், மகன் கெய்ரோவில் ஐடி மேனஜராகவும் இருக்கிறார்கள். வியன்னாவில் வசித்து வந்தார். பெரும்பான்மையான வருடங்கள் இவர் கெய்ரோவில் இருக்கவில்லை என்பது இவரது பலகீனம்.நேஷனல் அசோஷியேசன் ஃபார் சேன்ஞ் என்ற அமைப்பினை ஏற்படுத்தி உள்ளனர்.தடை செய்யப்பட்ட இயக்கமான முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி, அராப் லீக் இயக்கிதனரினை இவர் சந்தித்து இருக்கலாம் என்று செய்தி.இவர் ஜனவரி 30-லிருந்து இப்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

அமெரிக்கா ஒரு பக்கம் முபாரக்கினை ஆதரித்துக் கொண்டே புரட்சியாளர்களை ஊக்குவிப்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் ஆதாரங்களை வெளியிட்டு உள்ளது.செப்டம்பர் தேர்தலுக்கு முன்பாகவே முபாரக்கினை பதவி விலகிட செய்யுமாறு அமெரிக்கா நினைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டு உள்ளது.எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகம் புரட்சியாளர்களுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்பு வைத்துள்ளதாக கூறுகிறது.
 20 முதல் 35 வயதுடைய ஏறத்தாழ 1,60,000 எகிப்து ப்ளாகர்கள் அரேபிய மற்றும் ஆங்கிலத்தில் முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக எழுதி வந்துள்ளனர்.

இந்தியாவும், எகிப்தும்:  நாசர்-நேரு காலத்தில் இருந்தே இரு நாட்களும் நட்புறவுடன் பொருளாதார மேம்பாட்டுக்காக உடன்படிக்கை செய்த வண்ணமே உள்ளன. 2008 நவம்பரில் ஹோஸ்னி முபாரக் இந்தியாவிற்கு வருகை தந்து மன்மோகன் சிங்கினை சந்தித்து பேசினார். அணிசேரா நாடுகளின் அமைப்பில் இரு நாடுகளும் உறுப்பினர்கள். எகிப்தில் நடந்த அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் கலந்துக் கொள்ள 2009-ல் மன்மோகன் சிங் எகிப்திற்கு சென்றார்.எகிப்து இந்தியாவிற்கு 3.30 மணிநேரம் பின்னால் இருக்கிறது. சர்க்கரை,பருத்தி ஆடைகள், பருத்தி நூல்களை,சணல்,பிளாஸ்டிக், ரப்பர், கெமிக்கல்ஸ் முதலியன இந்தியா எகிப்திற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் ஓபராய் ஹோட்டல் கெய்ரோவில் உள்ளது.ஏசியன் பெயிண்ட்ஸ்,ரான்பாக்ஸி,டாட்டா மோட்டார்ஸ், அசோக் லேய்லாண்ட்,யூனிட் ட்ரஸ்ட் ஆப் இந்தியா,டாபர் இந்தியா போன்ற கம்பெனிகள் எகிப்தில் உள்ளன.

நம் பதிவர் துபாய் ராஜாவிடம், அவர் எகிப்தில் இன்னும் இருந்தால் மற்ற செய்திகளை எதிர்ப்பார்க்கலாம்.

12 comments:

Anonymous said...

அண்ணன் வசமா மாட்டிகிட்டாரு ராசா மாதிரியே அடம்பிடிக்கிறாரு

MANO நாஞ்சில் மனோ said...

என்னமோய்யா நல்லது நடந்தா சரிதான்....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

விளக்கமாய் குறிப்பிட்டீர்கள், எகிப்து லோட்டஸ் புரட்சியை!
விரைவில் நல்லதே நடக்கும் என்பதே எம் எதிர்பார்ப்பு!

அமுதா கிருஷ்ணா said...

அண்ணன் இல்லை சதீஷ்குமார்..தாத்தா..

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம்,புரட்சி முடிந்து நல்லாட்சி வரட்டும் நாஞ்சில் மனோ

அமுதா கிருஷ்ணா said...

புரட்சிக்கு பிறகாவது நல்லாட்சி வரட்டும் நிசாமுதீன்.

தீபிகா said...

எகிப்த உடுங்க நம்ம நாடு.???

இங்கும் வாங்க,
http://avanidamnaan.blogspot.com/

Chitra said...

விரிவான அலசல்.

Vidhya Chandrasekaran said...

ரொம்ப டீடெய்லான கட்டுரை. பகிர்விற்கு நன்றி.

ஆதி மனிதன் said...

எகிப்பது போய் வந்தா மாதிரி இருந்தது. பொறுத்திருந்து பார்ப்போம்.

அமுதா கிருஷ்ணா said...

நம்ம நாட்டிற்கும் எப்ப இப்படி புரட்சி வரும் தீபிகா?

நன்றி சித்ரா..

நன்றி ஆதி மனிதன்..

நன்றி வித்யா..

Anonymous said...

முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தடை செய்யப்பட்ட கட்சி அல்ல.எகிப்தின் இரண்டாவது பெரிய கட்சி.தற்போது எதிர் கட்சி.இது ஆரம்பிக்கப்பட்டது.புரட்சியில் ஈடுபட்டதால் தடை செய்யப்பட்டு பின்னர் தடை நீக்கப்பட்டது.இஸ்லாமிய கொள்கைகள் அடிப்படயில் அரசியல் செய்ய வேண்டும் என்பதே இவர்கள் கொள்கை....இனியவன்