Sunday, December 12, 2010

இதை விதி என்பதா?

இந்த மாதத்துடன் 10 வருடங்கள் ஓடி போச்சு. பிரீஷியஸ் அவர்ஸ் என்று சொல்லப்படும் அந்த 3 மணி நேரத்திலேயே என் மாமா டாக்டரிடம் போய் தனக்கு உடலில் ஏதோ வித்தியாசம் உணர்வதாய் சொன்னார். மாமா பார்க்க சென்ற அந்த டாக்டரோ செக் செய்து விட்டு ஒன்றும் இல்லை முரளி நீங்கள் வீட்டிற்கு போகலாம் என்று அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் டி.வி பார்த்து விட்டு படுக்கை அறைக்கு சென்று லுங்கி மாற்றும் போது தடாலென்று கீழே விழுந்து விட்டார் மாமா.உடனே டாக்டரிடம் தூக்கி சென்றால் பராலிஸிஸ் என்று சொல்லி விட்டார்கள். மூன்று மணி நேரத்திற்கு முன்னே சென்ற போதே சரியாக செக் செய்து இருந்தால் இப்படி 10 வருடமாக நரக வாழ்க்கை என் மாமாவுக்கு இல்லை.உடனே மதுரைக்கு அழைத்து சென்றோம். அங்கே 2 மாதங்கள் ஹாஸ்பிட்டல் கதி என்று இருந்தார். பிறகு வேலூரில் ஒரு மாதம். இடது பக்கம் முழுவதும் இயங்காமல் 10 வருடங்களாய் வீட்டில் பொழுதினை கழித்து வருகிறார். அவர் நன்றாக இருந்து இருந்தால் வாழ்க்கை எப்படி எல்லாமோ மாறி இருக்கும்.

படிக்கும் போது அவர் படித்த பள்ளியில் முதலாவதாக வந்தவர்.முனிசிபல் பள்ளியில் படித்தவர்.பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியருக்கு இவரை மிகவும் பிடிக்கும்.இப்பொழுதும் தன் முதல் வகுப்பு ஆசிரியரை பற்றி கூட சொல்வார்.எப்பொழுதும் சுத்தமாக டிப்டாப்பாக உடைகள் அணிவதில் பெரும் விருப்பம் உள்ளவர்.எங்களையும் சின்ன வயதில் மாடர்னாக இருக்க செய்தவர். சிறு வயதில் நாங்கள் பார்த்த நல்ல சினிமாக்கள் அவருடன் தான்.

முதலில் நான் பைக்கில் சென்றது அவருடன் தான்.முதலில் ஃப்ர்ஸ்ட் க்ளாசில் அமர்ந்து சினிமா பார்த்தது அவருடன் தான். வாழ்க்கையில் முதலில் கோன் ஐஸ்கிரீம், ஃபலூடா,பாசந்தி,ஜிகிர்தண்டா சாப்பிட்டது இவருடன் தான். மதுரையில் இங்கிலீஷ் படம் பார்த்தது,. அவரின் கல்லூரி நாட்கள்,பள்ளி நாட்கள் பற்றி கதை மாதிரி சொல்வதை எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.நிறைய ஃப்ரெண்ட்ஸ் முரளி மாமாக்கு.

என்னுடைய மாமா குழந்தைகள் நல மருத்துவராக அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். இந்த நோய் தாக்கியதும் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தற்சமயம் புத்தகம் படிப்பது, டி.வி பார்ப்பது என்று பொழுதினை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.நிறைய படிக்கிறார். எப்போதும் படிப்பில் மிகுந்த ஆர்வம் உடையவர்.தெரிந்தவர்கள், சொந்தக்காரர்களின்
குழந்தைக்கு மருத்துவம் சொல்கிறார்.மிக கரெக்டாக நோயினை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பார்.என் மகன்கள் சிறுவயதில் கஷ்டப்பட்ட போது இவரின் ஆலோசனை பேரில் தான் பிழைத்தார்கள். குழந்தைகள் என்றால் மிக பிரியமுள்ளவர்.எனவே தான் குழந்தை நல மருத்துவர் ஆனார்.அவர் டாக்டர் ஆனதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.

என் அம்மாவிற்கு எனக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்து, பிறந்த 6 மாதத்திலேயே ஹெர்னியா வந்து அதற்கு ஆபரேஷன் செய்தது.ஆனால், அடுத்த மாதத்தில்அக்குழந்தை இறந்து விட்டது.எனது அம்மாவும், தாத்தாவும் மாதக்கணக்கில் மதுரை ஆஸ்பத்திரிகளில் அந்த குழந்தை உடல்நலத்திற்காக அலைந்து இருக்கின்றனர். நம் வீட்டிலேயே ஒரு டாக்டர் அவசியம் வேண்டும் என அப்போது முடிவு எடுத்து உள்ளார்கள். அப்போது பி.யூ.சி படித்துக் கொண்டிருந்த என் மாமாவினை டாக்டர் ஆக்க வேண்டும் என்று என் அம்மாவின், தாத்தாவின் ஆசைப்படி டாக்டர் ஆனவர்.

ஒரு டாக்டருக்கே இந்த கதி என்றால். அவருக்கு இப்படி ஆனதை விதி என்பதா? மாமாவிற்கு சுகர் உண்டு. அதற்கு தகுந்த மருத்துவம் செய்து கொண்டு தான் இருந்தார். செக்-அப் சென்ற அந்த டாக்டரை நாங்கள் எல்லாம் இன்றும் திட்டுவோம்.ஆனால், மாமா எங்களை திட்டவே விட மாட்டார். விடுங்கம்மா என்ன செய்றது என்பார்.அவரை மாதம் ஒரு முறை பார்த்து வருவேன். அவருடைய ஃப்ரெண்ட்ஸ் யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பது அவருக்கு கவலை தரும் ஒரு விஷயம். சின்ன வயதில் என் மாமா மாமா என்று நான் படித்த பள்ளி, கல்லூரிகளில் பெருமைக் கொண்டதும் அவரால் தான்.ஏனெனில், என்னுடன் படித்தவர்களில் யாருக்கும் உறவுகளில் அப்போது
டாக்டர் இருந்தது கிடையாது.
தன் மகனுக்கு சுசுருதன் என்று பெயர் வைத்து அவனையும் டாக்டர் ஆக்கிவிட்டார். இந்தியாவில் முதல் மருத்துவர் ஹர்சவர்த்தனர் காலத்தில் சுசுருதர் என்பவர் ஆவார்.

7 comments:

Prabu M said...

தான் விளைவிக்கப் போகும் வலியைத் தாங்கும் பக்குவம் இவருக்கு இருக்கிறது என்று தெரிந்துகொண்டு எழமுடியாத அளவுக்கு இடித்துத் தள்ளிவிட்ட விதியை நாம் திட்டினாலும் உங்கள் மாமா "அது என்ன செய்யும்" என்றுதான் தடுப்பார் என்று நினைக்கிறேன்... "நம் தவறுகள் இறைவனால் தண்டிக்கப்படும்" என்று சின்னவயதில் காதுகுத்துவார்கள் இல்லையா.... அந்தக் கடவுள் தன் தொழிலான படைத்தல் காத்தல் அழித்தலில் செய்திருக்கும் எண்ணற்ற பிழைகளைக் கண்டபின்தான் புரிந்துகொண்டேன்.... தப்பு, சரி, மன்னிப்பு, பரிகாரம் என‌ எதுவும் இல்லை உலகில் என்று.... என்ன சொல்வது??? ஒரு திரைப்படத்தில் நல்லவன் வீழ்ந்தால் திரைக்கதை ஆசிரியரைக் கிழித்து எடுத்துவிடுகிறோம்.... விமர்சன பயம் இல்லாமல் திரைக்கதை எழுதுபவன் ஆண்டவன் ஒருவன்தானே....

இருந்தாலும் உணர்ச்சிகளைத் தூரத்தள்ளிவிட்டுப் பார்த்தால்.... நம்ம தானே எமோஷனலி உடைஞ்சுபோறோம் நிலைகுலையுறோம்... உங்க மாமா தடுமாறவேயில்லையே... அர்த்தமுள்ள வாழ்க்கையை வேறு ஓர் அலைவரிசையில் தொடர்ந்து தன் மகனையும் டாக்டர் ஆக்கியிருக்கிறாரே..... அவர் நனவாக்கிய பெருங்கனவு அது என்பதற்கு லட்சியமாய் மகனுக்கு அவர் வைத்திருக்கும் பெயரே சாட்சி சொல்கிறது...

ஏங்க‌.... இந்தியாவுல‌ டாக்ட‌ர் ஸீட் கிடைக்கிற‌து என்ன இவ்வ‌ள‌வு சாதார‌ண‌மான‌ விஷ‌ய‌மாங்க‌??? அந்த‌க் க‌ஷ்ட‌த்தைப் புரிஞ்ச‌தால‌தான் இதை எழுதியிருக்கேன்..... விதியின் பிழையைக் க‌ருத்தில் கொண்டு திட்டித் தீர்க்க‌லாம்.... ஆனாலும் அதை எழுதிய‌ அதே கையால்தான் இன்றும் என் குழ‌ந்தையை நான் தாங்கிக்கொண்டு இருக்கிறேன் என்று மேலிருந்து ப‌தில் வ‌ந்தாலும் ம‌றுமொழி கூற நம்மிடம் வார்த்தை ஏது???

தன் இடியையும் தாங்கி வென்ற‌வ‌ர் என்று விதி உங்க‌ மாமாவைக் கௌர‌வ‌ப்ப‌டுத்தியிருக்கிற‌து...

அவ‌ரிடமும் அவ‌ர் பைய‌னிட‌மும் என‌க்கொரு ஆட்டோகிராஃப் வாங்கித் த‌ர‌முடியுமா அக்கா??

வார்த்தை said...

:(

அமுதா கிருஷ்ணா said...

பிரபு நீண்ட பதிலுக்கு நன்றி.
என் மாமா பள்ளியில் முதல் மார்க் எடுத்தார்.மகனோ மாவட்டத்தில் முதலாக வந்து மருத்துவம் இலவசமாய் அரசு கல்லூரியில் படித்தான்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி வார்த்தை:))

Chitra said...

மனதுக்கு கஷ்டமாக இருக்கிறதுங்க.

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி சித்ரா..

அவர் இப்பொழுது 4 வருடங்களாய் தான் வீட்டிலேயே இருக்கிறார். இந்நோய் தாக்கிய் பின்னும் ப்ராக்டிஸ் சொந்த ஊரில் செய்துக் கொண்டு தான் இருந்தார். இப்பொழுது சென்னைக்கு வந்த பின் வீட்டிலேயே இருக்கிறார்.

Vidhya Chandrasekaran said...

:(