தேவி தியேட்டரில் எந்திரன் முதல் நாள் 11 மணி காட்சிக்கு என் மகன் ரிஷி காலேஜ் கட் அடித்து விட்டு சென்றான்.ஓசி டிக்கெட். அவன் இருந்த வரிசையில் அமர்ந்து படம் பார்த்தது ரஜினியினை தவிர அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்.பொல்லாதவன் அங்கிளை பார்த்ததாய் என் தம்பி மகன் விஷால்(4 வயது) தனுஷை குறிப்பிட்டான். ரஜினி வரும் போதெல்லாம் செளந்தர்யா எழுந்து நின்று கத்திக் கொண்டே இருந்தாராம். ரஜினி குடும்பதிற்கு தேவி தியேட்டர் தான் ரொம்ப பிடித்த தியேட்டரோ???
என் பெரிய மகன் நகுல் மாயாஜாலில் முதல் நாள் முதல் ஷோ எந்திரன் முடித்துவிட்டு அப்படியே ஆபிசிற்கு காலை 11.30க்கு சென்று விட்டான். டிக்கெட் புக் செய்தது ராத்திரி 2.30 க்கு.அவன் அந்த நேரத்தில் ACS பரிட்சைக்கு கூட முழித்தது இல்லை. டிக்கெட் விலை 300 ரூபாய்.நான் டிக்கெட் 100 ரூபாய்க்கு குறைவாகும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். என் கணவரோ டிவியில் போடும் போது தான் பார்ப்பாராம்.தம்பிக்கு எந்த ஊரு நான் திண்டுக்கல்லில் முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். அதன் பிறகு முதல் நாள் எந்த படமும் பார்த்தது இல்லை.
சமீபத்தில் விஷாகப்பட்டிணம் போய் வந்தேன். ட்ரையினில் அரவாணிகள் தொல்லை தாங்க முடியவில்லை. கோச்சில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் அரண்டு போய் இருந்தார்கள். பணம் கொடுக்காத ஆண்களுக்கு முன்னாடி நின்று தங்கள் சேலையினையும், பாவாடையும் எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தி தொடையெல்லாம் தெரிய பணம் கேட்டனர். ட்ரையினில் யாரும் எதுவும் செய்ய முடியாது பணம் கொடுத்து கொண்டு இருந்தனர். என்ன அசிங்கம் இது...இவர்களை கண்டிக்க ஏன் யாருக்கும் தைரியம் இல்லை..
விஷாகப்பட்டிணத்தில் பீம்லிப்பட்டிணம் என்ற இடத்தில் கடலோரம் இருக்கும் நரசிம்மர் கோயிலுக்கு காலை 11 மணியளவில் பஸ்ஸில் போனேன். பஸ் ஸ்டாண்டில் இறங்கி ஆட்டோவில் கோயில் இருக்கும் மலையடிவாரத்திற்கு போனேன்.போகும் போதே ஆட்டோ டிரைவரை பார்க்கவே பிடிக்கவில்லை. தான் யாதவா ஜாதியினை சேர்ந்தவர் என்று தேவையில்லாமல் பெருமையாக சொல்லி கொண்டான். தலை மட்டும் ஆட்டி வைத்தேன். 150 படிகள் கொண்ட மலையது. கூட்டமே இல்லை. ஆனால் மலையுச்சியில் பெண்கள் தெரிந்தார்கள். மலையடிவாரம் வந்ததும் நானும் உங்கள் துணைக்கு மலை ஏறட்டுமா என்று கேட்டான். நான் தேவையில்லை என்று சொல்லி மலை ஏற ஆரம்பித்தேன். ஆனால், அவன் ஆட்டோவினை ஓரம் கட்டிவிட்டு என்னுடன் ஏற ஆரம்பித்தான். தெலுங்கு பட வில்லன் போலவே இருந்தான். நான் ஏறுவதை நிறுத்தி விட்டு ஒரு படியில் உட்கார்ந்து கொண்டேன். அவன் விறு விறு என்று திரும்பி திரும்பி என்னை பார்த்துக் கொண்டே எறினான். அவன் மலையுச்சிக்கு சென்றதும் நான் ஏற ஆரம்பித்தேன். மலை ஏறியதும் அங்கிருந்த பெண்களுடன் சேர்ந்து நின்று கொண்டேன். சாமி தரிசனம் முடித்து அவன் இறங்கவே இல்லை. நானும் இறங்கவே இல்லை. ரொம்ப நேரம் கழித்து அவன் இறங்கி போய் ஆட்டோவில் ஏறி வண்டியினை எடுத்ததும் தான் நான் இறங்கினேன். பஸ் ஸ்டாண்டிற்கு நடந்தே வந்து விசாகப்பட்டிணத்திற்கு பஸ் ஏறினேன். பகலிலேயே ஒரு பெண்ணால் தனியே போக முடியவில்லையே என்று எரிச்சலாகி போனேன். இன்னும் ஒரு 100 வருடம் ஆகும் இரவில் பெண் தனியே போக.ஹே ராம்!!!
குருவாயூரில் இருக்கும் யானைக் கோட்டையில் 65 யானைகளும் பக்தர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டதாம். மேடம் ஜெயலலிதா கொடுத்த யானைக்கு போன மாதம் மதம் பிடித்து இருந்ததாம். நான் ஒரு யானைக்கு பக்கத்தில் தும்பிக்கை பிடித்து போட்டோக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கும் போது யானைப்பாகன் இந்த செய்தினை சொல்லி, மேலும் எல்லா யானைக்கும் மதம் பிடிக்கும் என்று கூறி என்னை பதற வைத்தார்.
65 யானைகளில் 6 மட்டுமே பெண் யானைகளாம், இரண்டு யானைக்கு பால் தெரியாதாம்.. மீதி இருந்த யானைகள் எல்லாம் பெரிய தந்தங்களுடன் கம்பீரமாய் இருந்தன. 6 பெண் யானைகள் மட்டும் இருந்தால் ஏன் மற்ற ஆண் யானைகளுக்கு மதம் பிடிக்காது??
2 comments:
வெரைட்டி நல்லாருக்கு:)
சிஸ்டர் உங்க பதிவுகள் எதுவும் என் டாஷ்போர்டில் தெரியமாட்டேங்குது:(
தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_08.html
Post a Comment