Tuesday, July 29, 2014

நவதிருப்பதி

இந்த மாதம் திருச்செந்தூர் போக வேண்டும் என்று முடிவு செய்ததும் நவதிருப்பதியும் போக வேண்டும் என்று முடிவானது.நெல்லையிலிருந்து மதியம் 1 மணிக்கு காரில் புறப்பட்டோம். நேராக நத்தம் - சந்திரன்,திருப்புளியங்குடி-புதன்,இரட்டைதிருப்பதி - ராகு,கேது, கடைசியில் பெருங்குளம் - சனி ஸ்தலம் தரிசனம் செய்தோம்.  இந்த கோயில்கள் மதிய நேரத்திலும் திறந்து இருக்கும் என்ற தகவலே நாங்கள் மதியம் நெல்லையிலிருந்து கிளம்ப காரணம்.இக்கோயில்கள் மாலை 6 மணியளவில் மூடப்படுகின்றன.

 நாங்கள் மாலை 6 மணியளவில் திருச்செந்தூர் சென்றடைந்தோம். அங்கே ஏற்கனவே ஃபோனில் புக் செய்து இருந்த சிவமுருகன் லாட்ஜில் தங்கினோம். மிகப்பெரிய 4 பெட் ரூமிற்கு Rs.1,200 ஒரு நாள் வாடகை. ரூம் நன்கு பெரியதாக விசாலமாக,சுத்தமாக இருந்தது.

அங்கேயிருந்து கோயிலிற்கும்,மணி ஐயர் ஹோட்டலுக்கும் நடந்தே போயிடலாம். கோயிலில் அதிக கூட்டம் இல்லை. 10 ரூபாய் டிக்கெட் எடுத்து தரிசனம் செய்துட்டு வெளியில் வந்தால் தங்கத்தேர் தரிசனமும் கிடைத்தது. அப்படியே கொஞ்ச நேரம் பீச்சில் உட்கார்ந்து விட்டு ரூமிற்கு வந்தோம். மறுநாள் காலை 5.30 மணிக்கெல்லாம் கடலில் குளிக்க போனோம். ஒரு மணிநேரம் நன்றாக குளித்து விட்டு ரூமிற்கு வந்து ட்ரஸ் மாத்திக்கொண்டு திரும்ப கோயில் போனோம். ஒரு மணிநேரத்தில் தரிசனம் செய்துட்டு மணி ஐயரில் காலை சாப்பாடு முடித்து கரெக்டா 9.30க்கு ரூமை காலி செய்துட்டு நேற்று பார்க்காத மிச்ச திருப்பதிகளை தரிசிக்க சென்றோம்.

தென் திருப்பேரை-சுக்ரன்,திருக்கோளூர் -செவ்வாய்,ஆழ்வார்திருநகரி-குரு,கடைசியாக ஸ்ரீவைகுண்டம்-சூரியன் தரிசனம் செய்து முடித்த போது மதியம் 12.30 மணியாகி இருந்தது. இந்த கோயில்கள் மதிய நேரத்தில் மூடப்பட்டு மாலை 4-8.30 வரை திறந்திருக்கும். தென் திருப்பேரைக்கு அடுத்து வழியில் நவக்கைலாசத்தில் ஒன்றான தென்காளகஸ்தி எனப்படும் ராஜாபதியில் கேதுவுக்கு ஒரு கும்பிடு.
ஒரே நாளில் 9 கோயில்கள் பார்க்காமல் இப்படி பிரித்து பார்த்தது நன்றாக இருந்தது.

மறுநாள் 1.30 மணியளவில் நெல்லை வந்தடைந்தோம். டவேரா கார் புக் செய்து இருந்தோம். RS.2700 ஆனது.

ஸ்ரீவைகுண்டத்தில் காலை 9.30க்கு சூரியன் ஸ்தலத்தை தரிசித்து விட்டு அங்கேயிருந்து ஆட்டோவில் (Rs.500)மதியம் 2 மணிக்குள் ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்திடலாம். ஒரு முறை இப்படியும் நான் சென்றேன்.

அனைத்தும் அழகிய கோயில்கள்+பழமையான கோயில்கள், ஸ்ரீவைகுண்டம் தவிர்த்து அனைத்து கோயில்களிலும் பெருமாள் பிரமாண்டமாக இருக்கிறார். அனைத்து கோயில்களிலும் பூனைகள் நடமாடி கொண்டிருந்தன. எல்லா கோயில்களிலும் பூவோ,துளசி மாலையோ ரூபாய் பத்திற்கு கிடைத்தது. கோயிலில் ஐயர்களும் கோயில் பற்றி நன்கு விளக்கம் கொடுத்து பிறகு அர்ச்சனையும் செய்து தருகிறார்கள்.சுக்ரன் ஸ்தல அர்ச்சகர் ரிடையர்டு பி.டி மாஸ்டர் அல்லது ஹெட்மாஸ்டர் போல வந்திருந்த பக்தர்களை ரொம்பவும் மிரட்டி கொண்டே இருந்தார்.




Thursday, July 17, 2014

நானும் நதியா சைக்கிளும்

என் தம்பி மதுவிற்கு பிடித்த கிரகம்:

எட்டாப்பு படிக்கும் போது நான் சைக்கிள் ஓட்ட என் தம்பி எனக்கு கத்து கொடுத்தான். அப்ப அவனுக்கு கிரகம் சரியில்லை போல. என் அப்பாவின் சைக்கிளிலே கத்துக்கிட்டேன்.  ஓட்டும் போது கூடவே ஓடி வரும் என் தம்பி மீது சைக்கிள் விழும். அவன் எடுத்து நேராக்குவான்.  ஆனா ஒரு வாட்டி கூட நான் கீழே விழுந்தது இல்லை. சைக்கிளை கீழே போட்டுட்டு அப்படியே நேரா நிற்பேன். இது எப்படின்னு என் தம்பி குழம்பி போவான். ஆனாலும் கூடவே ஓடி வருவான்.அப்புறம் தனியே ஓட்டும் போது ஏதேனும் ஒரு மேட்டில் இடதுக்காலை வைத்துக் கொண்டே இருந்து விட்டு வலதுக்காலில் பெடல் செய்துதான் இடதுக்காலை எடுத்து அதன் பிறகு செமையா ஹேண்ட்பாரை ஆட்டி ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி வருதுன்னு அளப்பரை செய்துட்டு அதன் பிறகு ஒரு ஒழுங்காய் ஓட்ட வரும். எங்காச்சும் சைக்கிள் நின்று விட்டால் அட்லீஸ்ட் ஒரு கல் ஏதுவாக இடதுப்பக்கம் இருக்கும் பகுதிக்கு சைக்கிளை தள்ளிக் கொண்டே சென்று தான் ஓட்ட ஆரம்பிப்பேன். சொந்தமாக எனக்கே எனக்குன்னு ஒரு சைக்கிள் வாங்கி தரமாட்டாங்களான்னு ரொம்ப ஆசையாய் இருக்கும். ஆனா  ஓட்டுற லட்சணத்திற்கு அது ரொம்ப ஓவருனு கேட்டதே இல்லை. ஸ்கூலிங்  முடியும் வரை யாரோ ஒருவர் இருவரை பெண்களுக்கான சைக்கிளில் வயிறு எறிய பார்த்துட்டு போய்டுவேன்.

என் அப்பாவிற்கு பிடித்த கிரகம்:

காலேஜ் படிக்கும் போது நதியாவின் பூவே பூச்சூடவா படம் வந்தது. அப்பவே அந்த படத்தை மூணுவாட்டி எங்க ஊரு பூர்ணகலா தியேட்டரில் பார்த்தேன். சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதான்னு நதியா சைக்கிள் ஓட்டி வந்ததை பார்த்ததும் அது வரை தூங்கி கொண்டிருந்த சைக்கிள் ஆசை திரும்ப வந்தது. காலேஜிற்கு நிறைய பேர் சைக்கிளில் வருவதை பார்த்துட்டு அது வெறியா மாறிச்சு. என் க்ளாசில் ராஜி மற்றும் இந்திரா தினமும் லேடிஸ் சைக்கிளில் தான் காலேஜ் வருவார்கள்.  அவுங்க சைக்கிளை ஓசி அடிச்சு காலேஜ் கிரவுண்டில் நதியா கம்மல் போட்டு, சுடிதாரில்  லா லா லால்லாஆஆஆ . மாலையில் NGO - காலனியில் க்குக்குகூகூ கூ கூ. அப்புறமா வந்த பூக்களை பறிக்காதீர்களிலும் நதியா சைக்கிளில் வருவார். எனக்கு பைத்தியம் முத்திடுச்சு. ஓட்டி கொண்டிருக்கும் போது இரண்டு காலையும் அப்படியே லூசில் விட்டு சடாரென்று சைக்கிளை நிறுத்துவது,இடது காலுக்கு கல் இல்லாமலேயே அப்படியே பெடல் செய்து வண்டி ஸ்டார்ட் செய்வது, அப்படியே U-Turn போடுவதுன்னு கடைசி 2 வருடங்களில் நதியா ஸ்டைல் செய்ய இன்னும் சில பல ஓசி சைக்கிள்கள் கிடைத்தன.  அச்சோ,ஸ்பீடா போறப்போ அப்படியே வானத்தில் பறக்கிற மாதிரி இருக்கும்.அப்பா டீச்சரா இருந்ததால் சென்னைக்கு பேப்பர் கரெக்‌ஷன், மீட்டிங்குன்னு போறப்ப அந்த மொத்த காசுக்கும் நதியா கம்மல்,நெல்லையில் அப்ப கிடைக்காத சுடிதார் (சென்னையில் வாங்கி வர சொல்லி) என் அப்பா காசிற்கு வேட்டு வைத்தேன்.மிச்ச காசில் ஒவ்வொரு வருடமும் ரிலீசாகும் நதியா படங்களை இரண்டு மூணுவாட்டி பார்ப்பேன்.

எனக்கு பிடிச்ச கிரகம்:
அதன் பிறகு PG படித்த காலேஜில் கட்டாயம் Saree கட்ட வேண்டும் நதியா பைத்தியமும் ஓய்ந்தது. எனவே சைக்கிள் ஆசையினை மறந்து இருந்தேன். அப்புறம் கல்யாணம் ஆச்சு. எனக்கு பிடிச்ச கிரகத்தின் வேலை அப்படி. நெல்லையினை விட்டு தாம்பரம் ரயில்வே காலனியில் குடித்தனம். சைக்கிள் ஓட்ட நிறைய இடம் இருக்கும், ஆனா சைக்கிள் தான் இல்லை.


மகனுக்கு பிடித்த கிரகம்:

என் மகன் நகுலுக்கு மூன்று வயதானதும் அவனை LKG சேர்த்த ஸ்கூலில் நானும்  டீச்சராக வேலைக்கு சேர்ந்தேன். அப்ப தான் என் மகனுக்கு பிடிச்ச கிரகம் சைக்கிள் வாங்க வைத்தது. Neelam- கம்பெனி சைக்கிள் கொஞ்சம் உயரம் கம்மியாக இருந்தது. எனவே அந்த சைக்கிள் வாங்கலாம் என்று முடிவு செய்து அதையே 650 ரூபாய்க்கு என் முதல் மாத சம்பளத்தில் வாங்கினேன். மொத்த சம்பளமே அவ்ளோ தான்!!!.ஹை சொந்தமாக நமக்கே நமக்கான சைக்கிள் என்று அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. என் மகனை  பின் சீட்டில் வைத்துக் கொண்டு நதியா ஸ்டைல் எதுவும் செய்யாமல் பத்திரமாக ஸ்கூலிற்கு போய் வந்தேன்.

 சைக்கிள் வாங்கிய,ஓட்டிய சந்தோஷம் போல வீட்டில் டூவீலர் வாங்கிய போதோ, என் மகன் கார் வாங்கிய போதோ எனக்கு வரலை.


Monday, July 14, 2014

ரேஷன் கார்டை தொலைக்கப் போறீங்களா??

போன வருடம் ஜூலை மாதம் நான் காசி போனப்போது என் அம்மா சுகர் வாங்க பால்க்காரம்மாவிடம் கார்ட் கொடுத்து இருக்காங்க.முக்கிய குறிப்பு: கார்ட் கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டு தான் போயிருந்தேன்!!!!
நான் திரும்பி வந்து எதுக்கோ எங்கடா கார்ட் காணோம்னு தேடினா எங்கம்மா+அந்தம்மா ஙேன்னு முழிக்கிறாங்க.

வாங்கி வந்த பையில் சுகர் இருக்கு கார்ட் காணாமப் போச்சு - ரேஷன் கடையில் ரிப்போர்ட் செய்தால் மண்டல அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்ய சொன்னாங்க. ரேஷன் கடையில் இருக்கும் ஒரு பெரிய நோட்டில் எங்களுக்கான பக்கத்தில் கார்ட் மிஸ்ஸிங்ன்னு எழுதிக்கிட்டார்.
கார்ட் காணாம போனா 3 மாசத்துக்கப்புறமா தான் ரிப்போர்ட்டணும்னு மண்டல அலுவலகத்தில்  சொன்னாங்க.

இப்படி கார்டு காணோம்னு ஒரு பேப்பரில் எழுதி அதில் ரேஷன் கடைக்காரர் கையெழுத்து வாங்கி, மூணு மாதத்திற்கு அப்புறமா நவம்பர் மாதம் ஒரு நல்ல நாளில் ரிப்போர்ட்டினோம்

ஒரு மாதங்கழித்து வந்து டூப்ளிகேட் கார்ட் வாங்கிக்கோங்கன்னு ஒரு குட்டியூண்டு பேப்பரில் எழுதி தந்தாங்க.அதை ரொம்ப பத்திரமா யார் கண்ணிலும் படாமல் வச்சிருந்து ஒரு மாதம்  கழிச்சு டிசம்பர் கடைசியில் போனா உங்க டூப்ளிகேட் கார்டு ஆஃபிசில் டெலிட் ஆகிப்போச்சு!!! நம்ம நேரம்.

எனவே,  புது கார்ட் வேணும்னு அப்ளிகேஷன் போடுங்கன்னாங்க.
அதை ஜனவரியில் போட்டோம்.எப்ப வேணா வீட்டுக்கு செக்கிங் வருவோம்னாங்க.  பகலில் வீட்டை பூட்டாம பார்த்துக்கிட்டோம். யாருமே வரவேயில்லை.
பிப்ரவரியில் நேரே போய் கேட்டாக்கா எலக்‌ஷன் டேட் வந்தா எப்ப புதுக்கார்ட் தருவோம்னு எங்களுக்கே தெரியாது.சும்மா இங்க வராதீங்க ஃபோன் செய்தா இங்கே வாங்கன்னு ”அன்பா”சொன்னாங்க.எலக்‌ஷன் டேட்டும் வந்தது. சரி எப்ப ஃபோன் வருதோ அப்ப போலாம்ன்னு அந்த ஏரியா பக்கமே போகலை. எலக்‌ஷனும் வந்து அதன் ரிசல்ட்டும் வந்தது ஆனா எங்களுக்கு ஃபோன் கால் வரவேயில்லை.

சரி ஆனது ஆகட்டும்னு தைரியத்தோடு இந்த ஜூலை 7ஆம் தேதி போய் விசாரித்தா உங்க ஃபோன் எப்ப பார்த்தாலும் நாட் ரீச்சபிள்னு வருது. நீங்களா கார்ட் வாங்க வர மாட்டீங்களா? உங்க கார்ட் மார்ச் மாதமே ரெடியாகிடுச்சுன்னு திரும்ப “அன்பா” சொன்னாங்க.நீங்க தான் எலக்‌ஷன் முடியுற வரை இங்கே வராதீங்கன்னு சொன்னீங்க.ஃபோனும் வரலை,வீட்டிற்கு விசாரணைக்கும் யாரும் வரலை சரி இப்ப நான் என்ன செய்யட்டும்னு கேட்டேன். சனி,ஞாயிறு தவிர மத்த நாட்களில் மதியம் 3-5 வந்து கார்டை வாங்கிக்கோங்கன்னு சொன்னாங்க. அப்பாடா..ஜூலை 11 ஆம் தேதி எங்கள் புத்தம் புதிய ரேஷன் கார்டில் எங்க பேரெல்லாம் இருக்கா, அட்ரஸ் கரெக்டா இருக்கா, எங்க வீட்டுத்தலைவர் ஃபோட்டோவை கரெக்டா போட்டிருக்கான்னு செக் செய்து வாங்கி வந்தேன். காணாம போய் கரெக்டா ஒரு வருடம் கழித்து புது கார்ட் கிடைச்சுருக்கு.

பழைய கார்ட்டின் ஜெராக்ஸ் காப்பி,தற்சமயம் வசிக்கும் வீட்டின் முகவரிக்கு சிலிண்டர் பில் இரண்டையும் இணைத்து புது கார்ட் அப்ளை செய்தோம்.

இவையெல்லாத்தையும் விட முக்கியம்
அதிக பொறுமை,  போனாப்போகுதுங்குற மனப்பான்மை,நினைவு சக்தி,அலைவதற்கு ரெடியா இருந்தா நீங்களும் ரேஷன் கார்டை காணாப்போடலாம்.

அம்மாகிட்ட கண்டிஷனா சொல்லிடணும் சுகர் வாங்க யார்கிட்டேயும் கொடுக்காதீங்க நானே வாங்கி தரேன்னு.