Tuesday, January 28, 2014

பொழுது போணும்ல!!!

சீரியல் பார்த்து பார்த்து டயர்டாகி,  இந்த சீரியல்ல நேத்து இந்த பெண்  எதிர் வீட்டு மகேஷுடன் ஓடி போனாளே இப்ப எதுக்கு பக்கத்து வீட்டு சுரேஷுடன் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கான்னு குழப்பமா யோசிச்சுட்டே ரெஸ்ட் எடுக்கும் போது தான் கரெக்டா நம்ம ஃபோனுக்கு கால் வரும் இந்த நம்பருக்கு நாம மிஸ்ட் கால் கொடுக்கலையேன்னு யோசிச்சுகிட்டே ஃபோனை எடுத்தா நாங்க ரிலையன்ஸ்,ஐசிஐசி,பிபிசி,இன்னும் என்ன என்னவோ சிசியில் இருந்து பேசுறோம் மேடம்னு பேசுவாங்க.சரி பேசு நா உம் கொட்டுறேன்னு ரெண்டு ம்ம் சொல்லும் போதே நீங்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தாக்கா (அடகொக்கமக்கா இங்கே முழுநேரமும் வெட்டியாதாண்டா இருக்கோம்) நாங்க வீட்டிற்கு வந்து எங்க பாலிசி பத்தி பேசுறோம்பாங்க.

வாடி வா நீயா வந்து மாட்டுனாக்க அது உன் தலையெழுத்துன்னு நினைச்சுகிட்டே ஆனா எடுத்தவுடன் சரி வா நான் வெட்டின்னு சொன்னா மருவாதை இல்லைன்னு இல்லைப்பா நேரமே இல்லைன்னோ என்கிட்ட பணமே இல்லைன்னு கொஞ்சமா பிகு செய்தாலும் விடுவதேயில்லை. உங்க பாலிசியே எடுக்க போறதில்லைன்னாலும் மேடம் நாங்க வர்றோம். ஜஸ்ட் விளக்கம் மட்டும் கொடுக்க போறோம் எங்க டார்கெட்ட்ன்னு சொன்னதும் தினம் பொழுதே போகாம என்னடா செய்றதுன்னு இருக்குற நம்ம மேலே நாமே  பாவப்பட்டு நமக்கு ஒரு நா பொழுதும் போகுமேன்னு சரி வா ராசான்னு சொல்லிடுவதுண்டு.

வர பலியாட்டுக்கு வீட்டுக்கு வழி சொல்லி சொல்லியே எஞ்கூட்டுக்கு மெயின் ரோடிலிருந்து எத்தனை லெஃப்ட்,எத்தனை ரைட்டுன்னு மனப்பாடமாகி போச்சு.

வரும் தம்பிக்கு சில்லுன்னு ஃபேன் போட்டு அதை விட சில்லுன்னு குடிக்க தண்ணீர் கொடுத்துட்டு  நாம் பேட்டிக்கு தயாராகி உட்கார்ந்த கொஞ்ச நிமிஷத்தில் அவர்கள் வாயை திறப்பதற்குள் ஏன்ப்பா நீ என்ன படிச்சு இருக்க,எங்க வீடு, உங்க குடும்பத்தில் எத்தனை பேர்,எதுக்கு இந்த வேலைக்கு வந்த,இப்ப எங்கேயிருந்து வரன்னு சில பல முக்கியமான கேள்விகளை கேட்டதும் வந்த வேலையினை மறந்து விட்டு சொந்த கதை சோக கதைகளை கக்கிகொண்டே இருக்கும் போது இருப்பா வரேன்னு சொல்லிட்டு உள்ளே போய் போன தீவாளிக்கு செய்து இன்னும் தீராமலேயே இருக்கும் பலகாரங்களை ஒரு தட்டில் வச்சு சாப்பிட்டுடே பேசுப்பா என்னும்  போது சில பேர் நமக்கு தெரியாம கண்ணீரை தொடச்சுக்கிட்டே தொடருவாங்க ஓ நீ திநெவேலி தானா சரி சரி மேலமாடவீதியா இல்லை தெக்குப்பு தெருவான்னு கேட்டா தூத்துக்குடிக்கு பக்கத்திலோ, திருச்செந்தூர் பக்கத்திலோ கேள்வியே படாத ஒரு ஊரு பேரை சொல்லுங்க. நமக்கு ஊரா முக்கியம் சரிப்பான்னு இன்னொரு முறை நாம் எழுந்திருக்கும் முன்னாடி வரேன்க்கா என்று ஹெல்மெட்டை கையில் எடுக்குங்க
( அக்காவா??நுழையும் போது மேடமா இருந்த நான் இப்ப அக்கா!!!). அடுத்தவாட்டி இன்னொரு முறை வந்து எங்க பாலிசி பத்தி விளக்குறேன் எங்க ஆஃபிசிலிருந்து உங்களுக்கு கால் வந்தா ஆமா இப்படி நான் வந்து போனேன்ன்னு மட்டும் சொல்லுங்கக்கா என்று சில பேர் ஓடி போவதுண்டு. சில பேர் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன் என்கிற மாதிரி நான் போட்டு தரும்  ஒரு மொக்க டீ குடிச்சுட்டு பாலிசிய பத்தி பேசி நம்மள பலியாடாக்குவாங்க. சரிப்பா வீட்டில கலந்து பேசி (சும்மா) நாளைக்கு நீ கால் செய்யும் போது சொல்றேன்னு சொல்லி எஸ் ஆவதுண்டு.

 எது எப்படி என்றாலும் வாப்பா மொக்க மகாராசா நானே பொழுதே போகாமல்தான் உட்கார்ந்துட்டு இருக்கேன்.
வேணாம்னு சொன்னாலும் கேட்காம இந்த அக்காவ பார்க்க பெட்ரோல் விக்கிற விலையில எம்பூட்டு தூரத்தில இருந்து  பார்க்க வர உன்னை எப்படி வேணாம்னு சொல்றது.

இருங்க ஏதோ ஒரு கால் வருது.அட்டெண்ட் செய்துட்டு வரேன்....வரட்டாஆஆஆஆஆ......


Monday, January 13, 2014

2014 - புத்தகக் கண்காட்சி

ஒன்றுக்கும் உதவாதவன் படித்ததில் இருந்து அ.முத்துலிங்கம்  புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று மட்டும் முடிவு செய்திருந்தேன். மற்ற படி எந்த ஐடியாவும் இல்லை. நான், தங்கை குமுதா,தம்பி மது,மகன் ரிஷி மற்றும் என் கணவர் கிருஷ்ணா மிஸ்டர் முத்துலிங்கத்தை தேடி தேடி கடைசியில் காலச்சுவடு பதிப்பகத்தில் இந்த மூன்று புத்தகங்களும் வாங்கினோம்.

புதுமைப்பித்தன் அவ்ளோவா படிச்சதில்லை. இந்த புத்தகத்தில் 103 சிறுகதைகள் இருக்கு.விலை 315ரூபாய்.
எப்பவும் வா.மணிகண்டனின் நிசப்தம் படிக்க பிடிக்கும். எனவே அவருடைய சிறுகதைகள் லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் வாங்கியாச்சு.
ஆறாம் திணை விகடனில் வந்த தொடர். இதை படிச்சா மட்டும் போதாது. ஏதேனும் இரண்டு விஷயங்களை இந்த ஆறாம் திணையில் சொல்லியிருக்கும் படி தொடர வேண்டும்.  நம் பாரம்பரிய உணவை பற்றிய இந்த புத்தகம் எழுதியவர் சித்த மருத்துவர் சிவராமன். பாவண்ணன், நாஞ்சில் நாடன் புத்தகங்கள் மற்ற இரண்டும்.
கீழே இருப்பவை  வழக்கம் போல் என் வூட்டுக்காரர் கிருஷ்ணமூர்த்தி வாங்கியது.  எப்பவாச்சும் தூக்கம் வரலைன்னா நான் வூட்டுக்காரர் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் இங்கிலிபிஷ் புத்தகத்தை எடுத்து ஒரு பக்கம் வாசிக்க ஆரம்பிப்பேன் ஆஹா என்ன ஒரு அருமையான தூக்கம் வரும் தெரியுமா!!!!இரண்டாவது பக்கம் புரட்ட கூட முடியாது அதுக்குள்ளே இரண்டாம் உலகத்திற்கு போயிடுவேன். இந்த வருஷமாவது அட்லீஸ்ட் ஒரு புக்காவது பகலில் உட்கார்ந்து கொண்டே படித்து முடிக்க வேண்டும்.

இவை தவிர மாயவலை,இன்னும்  மூன்று பாவண்ணன் புத்தகங்கள் என் தம்பி வாங்கி இருக்கிறார். ஒரு மூன்று மாதத்திற்கு பொழுது போகும்.

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு போனோம். சின்னத்திரை நடிகையும் பாடகியுமான அனுராதா கிருஷ்ணமூர்த்தி என்பவரை பார்த்தோம். டிவியில் வருவதை விட மிக இளமையாக இருந்தார். சிவாஜி சார் மகன் ராம்குமாரையும் பார்த்தோம். நேரில் அவ்ளோவா குண்டாக இல்லை.
அகநாழிகை ஸ்டாலில் மணிஜியை பார்த்தேன்.பேசினேன். இன்னும் சிலரை பார்த்த மாதிரி இருந்துச்சு.ஆனால் பேசலை.

ஒரு மிகப்பெரிய கலரிங் புக் என் தம்பியின் மகனுக்கு வாங்கினேன். விலை 50 ரூபாய் மட்டுமே. சின்னவன் சித்தார்த் அத்தை இதுக்கு கலர் போட்டா என் கையே வலிச்சுடும்னு சொல்லிட்டான். பெரிசு விஷால் கலர் போட ஆரம்பிச்சு இருக்கு. இனிமேல் என்கிட்ட கலரிங் புக் கேக்கவே மாட்டார்கள் என நினைக்கிறேன்.




Wednesday, January 08, 2014

ஒளவையார் கொழுக்கட்டை

ஆடி,தை,மாசி மாதம் செவ்வாய் கிழமைகளில் ராத்திரி 10 மணிக்கு எங்கள் பாட்டியின் பெரிய வீட்டிற்கு தெரிந்த பெண்கள்,அருகில் இருக்கும் சொந்தகார பெண்கள் என்று ஒவ்வொருவராக வருவார்கள்.எனக்கு தூக்கம் தூக்கமாய் வந்தாலும் என் சித்திகளுடன் சேர்ந்து அந்த விரதத்திற்கு நானும் ரெடியாவேன்.

கிச்சனை இரவு 8 மணிக்கே சுத்தமாய் கழுவி, விறகு அடுப்பில் கோலம் போட்டு சும்மா பளிச்சென்று இருக்கும். வரும் பெண்கள் பச்சரிசி மாவு கொண்டு வருவார்கள். அனைவரின் மாவையையும் ஒன்றாக போட்டு உப்பு சேர்க்காமல் வெந்நீரில் பிசைந்து ஆளுக்கு கொஞ்சம் மாவு + கிண்ணத்தில் நல்லெண்ணெய் வைத்து கொண்டு எதோ கதைகள் பேசி கொண்டு அவர் அவர் விரும்பும் சைசில் உருண்டை,கிண்ணம் மாதிரி,சின்ன சின்ன துண்டுகள் மாதிரி,கூடை மாதிரி எண்ணெய் தொட்டு தொட்டு அழகாய் செய்வோம். நான் செய்வது எப்பவும் கோணிக் கொண்டே தான் இருக்கும். போட்டி போட்டி கொண்டு செய்வோம். என் சித்தி மாட்டு வண்டி மாதிரி, பூக்கூடை மாதிரி எல்லாம் செய்வார். அவ்வா அத்தனை கொழுக்கட்டைகளையும் கொதிக்கும் தண்ணீரில் போட்டு போட்டு வெந்ததும் எடுத்து அழகாய் ஒரு பெரிய பாத்திரத்தில் நிரப்புவார்.

வெள்ளை வெள்ளயென்று அப்பவே சாப்பிட தோன்றும் ஆனாலும் சாமி கண்ணை குத்தும் என்று பொறுமை காப்போம்.எல்லா கொழுக்கட்டையும் ரெடி ஆனதும் வயதான ஒரு பெண்மணி எல்லா வருடமும் எல்லா செவ்வாய்கிழமையும் சொன்ன ஒரு கதையினை ரகசியமாய் சொல்ல ஆரம்பிப்பார். அதற்கு உம், உம்,உம் என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டும். நான் அந்த கொழுக்கட்டையினை எப்போ சாப்பிடுவோம் என்று அதையே பார்த்துக் கொண்டு கதையே கேட்காமல் ம்,ம்,ம், என்று சாமியாடிக் கொண்டு இருப்பேன். கதை முடிந்ததும் எல்லா பெண்களும் அவர் அவர் கொண்டு வந்த தேங்காயை சாமிக்கு உடைத்து தீப ஆராதனை செய்வர். அதன் பின் உடைத்த தேங்காய் துண்டுகளை வைத்து கொண்டு ராத்திரி 12 - 1 மணிக்கு கொழுக்கட்டைகளை சாப்பிடுவோம்.கோணலாய் இருப்பதை எல்லாம் நீ செய்தது என்று என் சித்தி என்னை கிண்டல் செய்வார். தூக்கம் கண்களை சொக்க மீதமுள்ள கொழுக்கட்டைகளை அவர் அவர் வீட்டிற்கு எடுத்து போவர். மறுநாள் காலையில் சாப்பிடவும் நல்லாயிருக்கும்.அந்த கொழுக்கட்டைகளை ஆண்கள் சாப்பிட கூடாதாம்.பொதுவாய் மீதம் வைக்காமல் இரவே சாப்பிட வேண்டும் என்பது கட்டுப்பாடு. கதை ரகசியமாம். எனக்கு நினைவு இருக்கு. ஆனால் ஏரியாக்கு ஏரியா கதை மாறும் என்று நினைக்கிறேன்.

இப்பொழுதெல்லாம் எங்க வீட்டில் அந்த கதை சொல்ல ஆளும் இல்லை,அந்த விரதம் இருப்பதுமில்லை. ஆனால், ஆண்கள் பங்கு பெறாமல் அவர்களுக்கு கொடுக்காமல் எதோ ரகசியமாய் பெண்கள் மட்டும் ஸ்பெஷல் என்பது போல் செய்வது பயங்கர த்ரில்லிங்கா இருக்கும்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள்,உறவு பெண்களின் நட்பு வலுபட இப்படி விரதம் என்ற பெயரில் ஒன்று கூடி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். பேசாதவர்கள் கூட அன்று ஒருவருடன் ஒருவர் பேசி கொள்ள சான்ஸ் கிடைக்கும்.

செல்வத்தை அள்ளித்தரும்  என்ற நம்பிக்கை.

அப்படியே இதை பார்த்துட்டு போங்க.

ஆண்கள் மட்டும் இப்படி ராத்திரி ஒன்று கூடினால் என்ன செய்வார்கள் என்பதை நான் இங்கு சொல்ல வேண்டியதில்லை.

டிஸ்கி: அந்த பாட்டிற்கும் கொழுக்கட்டைக்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு நல்ல பாட்டு ரொம்ப நாளைக்கு அப்புறமா பார்த்தீங்க..இல்லையா.. அனுபவிக்கணும், ஆராய கூடாது ஆமா சொல்லிட்டேன்.