Tuesday, November 26, 2013

நான் படிச்சா -3

          நான் படிச்சா --1 ...நான் படிச்சா-2

டிகிரி முடிச்சுட்டு PG படிக்க  யுனிவர்சிட்டி கேம்பஸிற்கு போன போதே தெரிஞ்சுடுச்சு இங்கேயும் கட்டாயம் வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்குவேன்னு.

என் கூட படிச்ச ராஜி கல்லிடைக்குறிச்சியிலிருந்து தினம் ட்ரையினில் வருவாள்.டிகிரி படிக்கும் போது முழு நாள் க்ளாஸ் முடித்து மாலையில் ட்ரையினில் போய் விடுவாள்.PGயில் முதல் வருடம் முழுவதும் பாதி நாள் தான் க்ளாஸ் இருக்கும்.மதியம் ட்ரையின் கிடையாது.

அதனால் மாலை நேர ட்ரையுனுக்காக  ஸ்டேஷனில் போய் ட்ரையினே வராத ப்ளாட்ஃபார்ம்களில் காத்து வாங்குவது,கடைகடையாய் ஒண்ணுமே வாங்காம சுத்துவது,லைப்ரரியில் போய் உட்கார்ந்து போறவரவுங்களை வேடிக்கை பார்ப்பது,ஒரு படம் விடாமல் மதிய வேளையில் தியேட்டர் போவது இல்லாட்டி எங்க வீட்டில் கொட்டம் அடிப்பது என்று சூப்பரா ஒரு இரண்டு மாதம் பொழுது அதுபாட்டுக்கு போய்கிட்டு இருந்துச்சு.

முதல் இண்டெர்னல் டெஸ்ட் எழுதி மார்க் வந்தது. எங்களுக்கு நான்கு மாஸ்டர்கள் க்ளாஸ் எடுத்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் கொஞ்சம் முரடாக இருப்பார். அவர் க்ளாசில் அனைவரிடமும் எல்லா பேப்பர் மார்க்கும் கேட்டு கொண்டே வந்தார். என்னையும் ராஜியையும் சேர்ந்து எழுந்து நிற்க சொன்னார். சரி நல்ல மார்க் தானே வாங்கி இருக்கோம் என்று சந்தோஷமாக எழுந்து நின்று எங்கள் மார்க்கை சொல்ல ஆரம்பிக்கோம். அவர் பாடத்து மார்க் கேக்கலை படத்து மார்க் கேக்கேன் என்று நக்கல் அடித்தார். முதல் நாள் மதியம் சினிமா போனதை எந்த சீனியர் பக்கியோ அவர்ட்ட போட்டு கொடுத்து இருக்கு. முதல் நாள் 5 சீனியர் பசங்களை தியேட்டரில் பார்த்து இருந்தோம்.

ராஜிக்கு கண்ணில் டேம் கட்டிடுச்சு. எனக்கோ பயங்கர கோபம்.சார்,,நாங்க வீட்டிற்கு தெரிந்து தான் சினிமாக்கு போனோம்,இனிமேலும் போவோம் என கொஞ்சம் ரஃப்பாக சொல்லிட்டு உட்கார்ந்து கொண்டேன்.  கன்னாபின்னான்னு அவமானம்+கோபம்.

வீட்டில் நைனாவிடம் போய் விஷயத்தை சொல்லி ராஜி அழுது விட்டதையும் சொல்லி நானும் கொஞ்சமா கண்ணை கசக்கினேன். அடுத்த INTERNAL டெஸ்ட்டில் நான் தான் அந்த பேப்பரில் கடைசி மார்க். எனக்கு முந்தைய மார்க் ராஜி. நாமெல்லாம் என்னைக்கு மார்க்குக்கு கலங்கி இருக்கோம். ஃபெயில் ஆகாம படித்தா போதுங்குற சங்கத்தை சேர்ந்தவுங்க.

ஆனா முதல் செமஸ்டருக்கு எக்சாம் எழுத ராஜி வரவேயில்லை. அத்தோடு காலேஜ் வருவதை நிறுத்தி கொண்டாள். நானும் ஒரு நல்ல ஃப்ரெண்டை இழந்தேன்.அந்த சார் அப்படி கேட்டதை மனசில் வச்சுகிட்டு க்ளாசில் ஒருத்தியும் இரண்டு வருடமும் சினிமாக்கே ஃப்ரெண்ட்ஸ்களுடன் போனதேயில்லை.

இரண்டு வருடமும் அவர் எடுக்கும் பேப்பரில் எழுதிய அனைத்து INTERNAL டெஸ்டிலும் நான் தான் கடைசி மார்க்.
ஆனால் வைச்சேன் பாருங்க ஆப்பு..EXTERNAL EXAM-ல் நான் தான் அந்த பேப்பரில் முதல் மார்க்.ஆனால் இரண்டையும் கூட்டும் போது என் மார்க் குறைஞ்சுடுச்சு.

என் நைனா நான் இரண்டாவது வருடம் படிக்கும் போது நவம்பர் 26-ல் இறந்து விட்டார். இரண்டு நாள் கழிச்சு காலேஜ் போன போது இன்னொரு ஆசிரியர் என்னிடம் வந்து என்னம்மா ஆச்சு என்று விசாரித்துவிட்டு ரொம்ப ஷார்ட் டெம்பரோ உங்கப்பா என்றும் கேட்டார். எப்படி சார் தெரியும் என்று கேட்ட போது உங்க அப்பா ஒரு நாள் மாலையில் நாங்க தங்கி இருந்த(4 ஆசிரியர்கள் ஒன்றாக தங்கி இருந்தார்கள்) வீட்டிற்கு வந்து பசங்களுக்கு முன்னாடி லேடிஸ் ஸ்டூண்ட்களிடம் எப்படி பேசுவது என்று ஒரு முறை இருக்கு அது தெரியாமல் நீங்க எல்லாம் எப்படி காலெஜிற்கு க்ளாஸ் எடுக்க வர்ரீங்க..அந்த பெண் பயந்து போய் தானே(ராஜி) காலேஜிற்கு வரலை.இனிமேல் எந்த பெண்ணிடமும் அப்படி பேசாதீங்க பேசினால் அப்புறம் நடப்பதே வேறு என்று மிரட்டி விட்டு இப்படி நான் வந்து பேசினதை என் மகளிடமும் சொல்ல கூடாது என்றும் சொல்லிட்டு வந்திருக்கார்.

அந்த நல்லாசிரியர் என்னிடம் இதை பற்றி எதுவும் கேக்கவேயில்லை. ஆனால் மார்க் குறைவாக போட்டு பழிவாங்கி உள்ளார்.


இன்று என் அப்பா இறந்து 25 வருடங்கள் ஆகிறது.

Thursday, November 21, 2013

நான் படிச்சா -2

நான் +2 படிச்ச போது திண்டுக்கல் போன என் அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்து அங்கேயே இரண்டு மாதங்கள் தங்க வேண்டியதாயிற்று. இதெல்லாம் +2 பாசாகுமா என்ற கவலை போல. ஹாஸ்ட்டல் இல்லாததால் நானும் என் தம்பிகளும் திநெவேலியிலிருந்து திண்டுக்கல் போனோம். என் தம்பிகள் இருவருக்கும் உடனே பள்ளியில் இடம் கிடைத்து விட +2 என்பதால் எனக்கு இடமே கிடைக்கவில்லை. அதுவும் நான் காமர்ஸ்,கெமிஸ்ட்ரி,பிஸிக்ஸ் மேக்ஸ் என்று  அவியல் மாதிரி ஒரு படிப்பை +1- ல் படித்து இருந்தேன்.திண்டுக்கல்லில் காமர்ஸ்க்கு பதிலாக பயாலஜி இருந்துச்சு. ஆனாலும் என் மாமாவின் ஃப்ரெண்ட் உதவியுடன் நானும் ஒரு ஸ்கூலில் செப்டப்மரில் +2 சேர்ந்தும் விட்டேன்.

சும்மாவே படிப்பில் புலியான நான் இப்போ சிங்கமாகி விட்டேன். சிங்கம் அமைதியா உட்கார்ந்து இருக்குமே அப்படி எடுத்தக்கணும். ஸ்கூல் போகவே பிடிக்கலை. முன்னெல்லாம் ஃப்ரெண்ட்ஸ் பார்க்க இண்ட்ரெஸ்ட்டாக..சினிமா கதை எல்லாம் பேச அப்படி இப்படின்னு ஸ்கூலிற்கு போவேன். இங்கோ ஒரு புள்ளையும் ஃப்ரெண்ட்ஸ் இல்லை. புது யூனிஃபார்ம் வேறு பிடிக்கவேயில்லை.சரியென்று ஒரு மாதிரி அட்ஜஸ்ட் ஆகி ஸ்கூலிற்கு போய் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் மதியம் பிசிக்ஸ் லேபில் என் மாஸ்டருக்கு (சின்ன வயதுக்காரர்) என்ன கோபமோ அங்கிருந்த ஒரு பெரிய ஸ்கேலால் என் தலையில் டேபிளின் அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு அடி அடித்து விட்டார். எனக்கு குபுக்குன்னு கண்ணில் அப்படி ஒரு தண்ணீர் டேம்.கூட இருந்த கடங்காரிகள் வேறு சிரிச்சுட்டாங்க. சம்பவம் நடந்தது மதியம் 3.30 மணி.வீடு போகும் வரை கண்ணில் கண்ணீர் டேம் உடையாமல் பார்த்து கொண்டு 4.30 மணிக்கு வீட்டிற்கு போனதும் நைனாவை பார்த்ததும் டேமை உடைத்து விட்டேன்.
 நைனா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்து 25 நாட்கள் இருக்கும்.

மறுநாள் ஸ்கூலிற்கு போனா அங்கிருந்த சிஸ்டர்கள் மூன்று பேர் மற்றும் பிசிக்ஸ் மாஸ்டர் மூணு க்ளாஸ் பொண்ணுங்களை ஒன்றாக உட்கார வைத்து யார் வீட்டில் போய் மாஸ்டர் அடித்ததாய் சொன்னது? யாருடைய சொந்தக்காரரோ அவர் வீட்டிற்கு வந்து மிரட்டி போனதாகவும் உண்மையை சொல்லாட்டி முட்டை,வெத்திலை மை வச்சு(???) யாரு அந்த பொண்ணு என்று உண்மையை கண்டுபிடிச்சு விடுவதாகவும் ஒரே ரகளை. ஒரு மூன்று நாட்கள் தினம் க்ளாஸ் மொத்தமும் மிரட்டலுக்கு உள்ளானது. நானும் மிரண்டு போய் மூச்சே விடாமல் ”ஙே”ன்னு முழிச்சுட்டு ஸ்கூல்,வீடுன்னு போயிட்டு வந்துட்டு இருந்தேன்.

அந்த மாஸ்டர் வீட்டிற்கு போய் பெண் குழந்தைகளை எப்படி அடிக்கலாம்,இனிமேலும் இப்படி அடித்தால் நடப்பதே வேறு என்று மிரட்டி வந்த அந்த சொந்தக்காரர் என் நைனா என்று எனக்கே ஒரு மாசம் கழித்து தான் தெரியும்.


Monday, November 11, 2013

சென்னை எக்ஸ்பிரஸ்ஸில் இளிச்சவாய் தமிழன்ஸ்

 மும்பையில் இருந்து திரும்ப வரும் போது நாங்க இருந்த கோச்சில்அடுத்த ஆறு கோச்சுகளில் டிடிஆர் என்று ஒருவர் இல்லவே இல்லை. ஆறு கோச் ஆடி ஆடி நடந்து போய் தேடி பார்த்துட்டு வந்து படுத்து விட்டேன். RAC டிக்கெட் என்பதால் அவரை தேடி போனேன். காலை 8 மணிக்கு திடீரென்று  SQUAD என்று ஒருவர் ஃபைல் சகிதம் வந்து ஒவ்வொரு 8 பேருக்கு ஒருத்தர் அல்லது இருவர் என்று ஃபைன் வசூலித்து ரசீதும் கொடுத்து கொண்டிருந்தார். தக்கலில் பதிவு செய்தவர்கள் பயணத்தின் போது கட்டாயம் ஒரிஜினல் ஐ.டி ஃப்ரூப் வைத்து இருக்க வேண்டும் என்பது ரயில்வே ரூல். அது தெரியாமல் தமிழர்கள் நிறைய பேர் டிக்கெட் எடுக்கும் போது ஒரிஜினல் கேட்கலை அதான் இப்போ ஜெராக்ஸ் வைத்து கொண்டிருக்கிறோம் என்று தண்டம் அழுது கொண்டிருந்தனர். என் எதிர் இருந்த ஒருவர் ஷிப்பில் வேலை ஒரு வருடம் முடித்து சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்.சின்ன பையனாக இருந்தான். அவனிடம் ஒரிஜினல் பாஸ்போர்ட் இருக்கு. ஆனால் தக்கல் ரிசர்வ் செய்த போது டிரைவிங் லைசன்ஸ் நம்பர் கொடுத்து விட்டு பயணத்தின் போது அதன் டூப்ளிகேட்டை காண்பிக்க ஒத்து கொள்ளவில்லை அவனிடம் 1000 ரூபாயும் இல்லை. அடுத்த ஸ்டேஷனில் இறங்கி ஃபைன் கட்ட சொல்லி கட்டாய படுத்திவிட்டார் அந்த SQUAD. என்னிடம் பரிதாபமாக பணம் இருக்கா என்று கேட்க நான் சென்னையில் வந்து பணம் பெற்று கொள்வதாய் சொல்லி அந்த பையனிடம் பணம் கொடுக்க அந்த பையன் தன் ஏ.டி.எம் கார்டை என்னிடம் கொடுத்து நீங்க சென்னை வந்து என்னிடம் கொடுங்கள் என்று சொல்கிறான். நான் ஏடிஎம் கார்ட் வேணாம்பா சென்னை வந்ததும் பணம் எடுத்து கொடு என்று சொல்லி விட்டேன்.

அந்த வசூல் ராஜா ஸ்குவாட் சோலாப்பூரில் காலை 9.30 க்கு இறங்கி விட்டார். டிடிஆர்  காலை 11 மணிக்கு ஆடி அசைந்து வருகிறார். அதற்குள் கோச் முழுவதும் அன் - ரிசர்வ்ட் மாதிரி ஒரே கூட்டம். அவர்களை டிடிஆர் ஒன்றுமே கேட்கவில்லை. ரூல் ரூல் என்று அவ்ளோ பணம் வசூலித்தீர்களே, ஆந்திரா மக்கள் இப்படி ரிசர்வ்டு கோச்சில் ஏறுகிறார்களே அவர்களிடம் ஃபைன் கேக்க மாட்டீங்களா என்றதற்கு நீங்கள் லெட்டரா எழுதி சென்னையில் ரயில்வேயில் கம்ப்ளெய்ண்ட்டாக கொடுங்க மேடம் என்று சொல்லி விட்டு அடுத்த கோச்சிற்கு போய் விட்டார். நான் கேட்டதும் மற்றவர்களும் கேட்க ஆரம்பித்தார்கள் அவர் ஏன் அங்கே நிற்கிறார். ஏற்கனவே தக்கல் என்றும் ஏஜெண்ட் என்றும் அதிக பணம் கொடுத்து இப்போ ஃபைன் வேறு கட்டி நிறைய பேர் புலம்பி கொண்டு இருந்தார்கள்.

டிஸ்கி: ஏடிஎம் கார்டை நம்பி கொஞ்சமாய் பணம் வைத்து கொண்டு நீண்ட தூர ரயில் பயணம் செய்ய வேண்டாம். பயணத்தின் போது ஐ.டி ஒரிஜினல் கட்டாயம் வைத்து கொள்ள வேண்டும்.
சென்னையில் இறங்கியதும் அந்த பையன் என்னிடம் வாங்கிய பணத்தை ஏடிஎம்-ல் எடுத்து கொடுத்து விட்டான்.