ஞாயிறு காலை பல்லாவரத்தில் கிரஹப்பிரவேசம் நடந்த வீட்டிற்கு போய் விட்டு அப்படியே பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதாக ப்ளான் செய்து இருந்தேன். அதன் படி கிரஹப்பிரவேச வீட்டிற்கு காலை 7.30 மணிக்கு போனால் அங்கு சாப்பாடு ஆர்டர் செய்த இடத்திலிருந்து சாப்பாடு வர மிக லேட்டானதால் அங்கேயே ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக வெயிட் செய்து சாப்பிட்டு வர வேண்டியதாகி விட்டது. அப்புறம் என் சின்ன மகன் ரிஷியை கெஞ்சி அவனே காரில் கொண்டு வந்து என்னை வடபழனியில் விட்டு சென்றான்.
நான் சென்ற போது பதிவர்கள் அறிமுகம் மேடையில் நடந்து கொண்டிருந்தது. உள்ளே நுழையும் போதே தெரிந்த முகங்கள் எதுவும் இல்லை. சரி இனிமேல் எல்லோரையும் தெரிந்து கொள்ளலாம் என்று தென்றல் சசிகலா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் என் பெயரையும் மேடையில் அழைத்தார்கள்.மேடையில் அமர்ந்து இருந்த கேபிள் சங்கரிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு மைக்கில் என் பெயர் மற்றும் என் வலைபதிவை பற்றி சொல்லிட்டு மேடையை விட்டு இறங்கினேன். இறங்கி வரும் போது மோகன் குமார் சார் வந்து பேசினார்.அப்படியே திண்டுக்கல் தனபாலனை பார்த்து என் கணவரின் ஊரும் திண்டுக்கல் தான் நீங்கல் திண்டுக்கல்லில் எங்கே இருக்கீங்க என்று கேட்டு விட்டு அப்படியே கோவைடூடில்லி ஆதி லெஷ்மியிடம் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அங்கேயே அமர்ந்தேன். அவரின் கணவர் வெங்கட் நாகராஜ் சாரிடமும் பேசினேன். பக்கத்தில் இருந்த திருமதி ரேவதி சதிஷ் நானும் திருநெல்வேலி தான் என்று பேசினார்.அவரின் கணவர் சதிஷ் பதிவர் என்றும் அறிமுகப்படுத்தினார்.
பதிவர் ராஜியிடமும் பேசினேன். அவரிடம் பேசி கொண்டு இருக்கும் போதே செமையா தண்ணீர் தாகம் தண்ணீர் குடிக்க போனால் சங்கவி அங்கே நின்று கொண்டிருந்தார். அவர் தண்ணீர் பிடித்து கொடுக்க அதை குடித்து விட்டு அப்படியே ஆரூர் மூனா செந்திலிடம் , கடல் பயணங்கள் சுரேஷ் குமாரிடம் நானே போய் பேசி விட்டு வந்து அமர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் வால்பையன் அருண்,மற்றும் மயிலனிடம் பேசி கொண்டிருந்தேன். வேர்த்து வேர்த்து அங்கே அதிக வேலை பார்த்து கொண்டிருந்த மாதிரி டயர்ட் ஆகி விட்டது. நிஜமா வேலை பார்த்து கொண்டிருந்த குழுவினர் டரியலாகி இருப்பாங்க. அப்படி ஒரு வேர்வை எல்லோருக்கும். அப்படியே அவனில் உள்ளே இருப்பது போல் ஒரு நிலைமை.
சுரேகா அருமையாக தொகுத்து வழங்கினார்.
பாமரனின் பேச்சு நன்றாக இருந்தது. மயிலனின் கவிதை முழுவதும் கேட்கவில்லை. சவுண்ட் எக்கோ அடித்ததால் யாருடைய பேச்சையும் கோர்வையாக கேட்க முடியாமல் போயிற்று.
மதியம் சாப்பிட வெளியில் சென்றால் சென்னையில் நேற்று தான் அதிக பட்ச வெயிலோ என்னவோ. எப்படா உள்ளே வருவோம் என்ற நிலைமையில் சாப்பிட்டு விட்டு உள்ளே ஓடோடி வந்தோம்.
ரஞ்ஜனி அம்மா வந்து என்னருகில் அமர்ந்தார்கள். அரசனிடம் ஒரு சிறிய தொகையினை நான்,மயிலன்,ரஞ்ஜனி அம்மா கொடுத்தோம்.திருப்பூர் ஜோதிஜி வந்து அருகில் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசி சென்றார். ஜாக்கி சேகர்,மணிஜி,அகநாழிகை பொன்வாசுதேவன் இவர்களுடன் சிறிது நேரம் பேசிகொண்டு இருந்து விட்டு அரங்கை விட்டு வெளியே வந்து 100 அடி ரோடிற்கு வந்து பல்லாவரம் பஸ் பிடித்து வீட்டிற்கு வந்தேன்.
பெண் பதிவர்கள் 15லிருந்து 20 வரை வந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
இனிமேல் சென்னையில் டிசம்பர் டூ பிப்ரவரி பதிவர் சந்திப்பு வைக்கலாம் என்பது என்னுடைய யோசனை. அந்த மூன்று மாதங்கள் தான் இப்படி அனலாய் சென்னை கொதிக்காது. மழையும் இருக்காது. சென்னைவாசிகளான எங்களுக்கே அந்த உஷ்ணம் மிக பாதிப்பை கொடுத்தது, கண்கள் எல்லாம் எரிந்தது என்றால் கோவை, பெங்களூர்வாசிகள் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்கள்.
பதிவர்கள் வருடம் ஒரு முறை ஒரு நல்ல தொகையினை கொடுத்து ஐ.டிக்காரகள் நடத்தும் கெட்-டு-கெதர் மாதிரி ஈ.சி.ஆரில் ஏதாவது ஒரு ரிசார்ட்டில் ஏசி ஹாலில் நடத்தினால் வியர்வை மழையில் இருந்து எல்லோரும் தப்பிக்கலாம் இன்னும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். அங்கே ஒரு நாள் சாப்பாடிற்கும் ஆர்டர் கொடுத்து வெளியூர் பதிவர்களை தங்க வைக்கவும் ரூம்கள் எடுக்கலாம்.சென்னைவாசிகளுக்கு பதிவர் சந்திப்பு எங்கே நடந்தாலும் ஒன்று தான்.எப்படியும் அவர்வர் வீட்டிலிருந்து வரப்போகிறார்கள். கொஞ்சம் அலைந்தால் நல்ல டீலிற்கு நிறைய ரிசார்ட்க்காரர்கள் நம்மிடம் இருக்கும் தொகைக்கு உட்பட்டு ஒத்து வருவார்கள்.இது கட்டாயம் இல்லை. வியர்த்த வியர்வையில் நேற்று உதித்த யோசனை இது.