Thursday, April 11, 2013

அம்மாவும், மூன்று லட்சமும், பின்னே நாங்களும் ----- 2

முதலில் என்ன நடந்துச்சுன்னா


சரின்னு ரிஷப்ஷனில் 20 ஆயிரம் கட்டினதும் ஐசியுவிற்கு உடனே அம்மாவை மாற்றினார்கள் அனெஸ்தட்டிஸ்டும்,சர்ஜனும் வந்து பார்த்துட்டு நாளை (மார்ச் 5) காலையிலேயே சர்ஜரி செய்து விடலாம் காலை 6.30க்கு சர்ஜரி என்று என்னிடம் சொல்லிவிட்டு போனார்கள்.ஓகே என்று என் கணவர்,தங்கையிடம் ஃபோனில் விஷயத்தை சொல்லி விட்டு ஐசியு வாசலில் காத்திருந்த போது ரிஷப்ஷனில் என் பெயரை ஏலம் விட்டு கொண்டு இருந்தார்கள்.

நான் தான் அமுதா அமுதா என்று அங்கு ஓடி போய் என்ன என்று கேட்ட போது நாளை காலை ஆபரேஷனுக்கு உடனடியாக 1.75 லட்சம் இப்போதே கட்டுங்கள் என்று சொன்னார்கள்.அவர்கள் சொன்ன போது இரவு 7.30 மணி.அந்நேரத்திற்கு அவ்வளவு பணத்திற்கு என்ன செய்றது உடனே சர்ஜனுக்கு திரும்ப கிச்சு கிச்சு தாம்பாளம்,,கீயா கீயா தாம்பாளம்.

சார் என்னது இப்ப நான் அவ்வளோ பணத்திற்கு எங்கே போவேன் காலை 10 மணிக்கு மேல் தான் பணம் கட்ட முடியும் என்று சொன்னதும் அவர் நோப்ராபளம்...நீங்க காலையிலேயே கட்டுங்கோ,,நான் ரிஷப்ஷனில் பேசி விடுகிறேன் என்று சொன்னார்.


சிறிது நேரத்தில் ரிஷப்ஷனில் திரும்ப என் பெயரை ஏலம் விடவும் என்னவென்று ஓடினால் காலை 10 மணிக்கு தான் சர்ஜரி நீங்க பணம் சீக்கிரம் கட்டி விடுங்க என்று சொன்னார்கள்.அட ராமா கையில காசு வாயில தோசை போல என்று சரியென்று கணவர், தங்கை, தம்பி ஹாஸ்பிட்டலுக்கு வந்ததும் வீட்டிற்கு இரவு 10 மணிக்கு வந்து விட்டோம்.


காலை 10 மணிக்கு பேங்கிற்கு போய் நகை அடகு வைத்து எடுத்து கொண்டு போறதுக்குள்ளே இன்னும் சர்ஜரிக்கு லேட் ஆக்குவார்கள் என்று இருக்கும் கிரடிட் கார்டு, டெபிட் கார்ட் கலெக்ட் செய்து தம்பி அவன் ஃப்ரெண்ட்களிடமும் பணம் வாங்கி கொண்டு காலை 9 மணிக்கு ரிஷப்ஷனில் பணம் கட்டிவிட்டான். பணம் கட்டும் முன்பாக எனக்கு ஃபோன் செய்து நீ மெதுவா பேங்க்கிற்கு போ நான் பணம் கட்ட போகிறேன் என்றான். சரியென்று நான் சொன்ன அடுத்த 10ஆவது நிமிடம் ஹாஸ்பிட்டலில் இருந்து எனக்கு ஃபோன் அம்மாவை தியேட்டருக்கு அழைத்து செல்கிறோம் பார்க்க வேண்டியவர்கள் வந்து பார்த்த்கோங்க என்று. என் ஃபோன் நம்பர் தான் ஹாஸ்பிட்டலில் கொடுத்து இருந்தேன். சரி 10 நிமிஷத்துல அட்டண்டர்ஸ் வருவாங்கன்னு சொல்லிட்டு என் தம்பி, தங்கைக்கு(இருவரும் ரிஷப்ஷனில் பணம் கட்டி விட்டு பில்லிற்கு காத்து இருந்தாங்க) ஃபோன் செய்தேன். உடனே மூணாவது மாடியில் இருக்கும் தியேட்டருக்கு ஓடுங்க அம்மா தியேட்டர் வாசலில் உங்களை பார்க்க காத்து இருக்காங்க என்றதும் பில் வந்து வாங்கிக்கிறோம் என்று இரண்டும் ஓடி இருக்காங்க. என்ன ஒரு பெர்பெக்‌ஷன்.. பணம் கட்டிய அடுத்த 8 நிமிடத்தில் அம்மா தியேட்டர் வாசலில்.

காலை 10 மணிக்கு ப்ளட் கொடுக்க வேண்டும் என்று நான், என் தங்கை, தம்பி, மகன் ரிஷி ப்ளட் பேங்கிற்கு போனோம். பெரிய மகனுக்கு காய்ச்சல் என்பதால் அவன் வரலை. என்னுடைய என் தங்கையுடைய ப்ளட் செக் செய்துட்டு ரிஜக்ட் செய்துட்டாங்க.(ஹீமோகுளோபின் கம்மியாம்) என் தம்பி மதுவும், ரிஷியும் ஓகே என்றார்கள். ரிஷி சின்னப்பையனா இருக்கானே என்றார்கள் இல்லை காலேஜ் ஃபைனல் இயர் சார் படிக்கிறார் என்றதும் வெயிட் பார்த்துட்டு ப்ளட் எடுக்க ரெடி செய்துட்டு எங்களை வெளியில் வெயிட் செய்ய சொன்னர்கள்.

ரிஷி வெற்றிகரமா ப்ளட் கொடுத்துட்டு ஜூஸெல்லாம் குடிச்சுட்டு காலேஜ் போறேன் என்று கிளம்பும் போது திடீரென்று என் தம்பி ப்ளட் கொடுத்து கொண்டு இருந்த ரூமிற்க்குள் 4 பேர் அவசர அவசரமாய் ஓடி போய் என் தம்பியை சுற்றி நின்று கொண்டார்கள் அனைவர் முகத்திலும் பதட்டம். என்னவென்று கேட்டதில் ப்ளட் கொடுத்து கொண்டிருந்த மது வேர்த்து லோ பிபி ஆகி மயக்கமாகி விட்டான். கொஞ்ச நேரத்தில் பயப்பட தேவையில்லை என்று சிரித்துக் கொண்டே வந்து சொன்னார்கள். சார் இரண்டு ஜூஸ் குடித்து, பிஸ்கெட் சாப்பிட்டு கொண்டே வெளியில் வந்தான். நாங்க எல்லாம் செம கிண்டல் அவனை. மதுவோ என் மகனிடம் மாப்ள உனக்கு ஒரு கையில் தானே ரத்தம் எடுத்தார்கள் எனக்கு இரண்டு கையிலும் ஒரே நேரத்துல எடுத்தார்கள் அதான் கொஞ்சம் கிர்ராகி போச்சு மாமாக்கு என்று சமாளித்தான்.

சரி சரி ஒத்துக்குறோம் நீ வீரன் தான் என்று சொல்லிட்டு மேல ரிஷப்ஷனுக்கு வந்தோம்.

காத்திருந்து காத்திருந்து மாலை 4.45 க்கு அம்மா பெயரை சொல்லி மைக்கில் ரிஷப்ஷனில் ஒருத்தர் மட்டும் ஐசியுவிற்கு வரலாம் என்று அழைக்கவும் இங்கி பிங்கி பாங்கி போட்டு நான் போனேன். எனக்கு வேற்று கிரகவாசி போல் ஒரு கோட்,ஒரு குல்லா, பிஞ்சுபோன ரப்பர் செருப்பு போட்டுட்டு உள்ளே போக சொன்னார்கள்.

போனா என் அம்மாவா மாதிரி தெரியுது ஆமாம் அம்மாவே தான் என்று பக்கத்தில் போனால் கன்னாபின்னாவென்று ட்யூப் மாயம்.இன்னும் 6 மணிநேரம் கழித்து தான் முழிப்பார்கள் இப்போ எல்லாம் மானிட்டர் செய்துட்டு இருக்கோம் எல்லாம் நார்மல் என்று கூறினார்கள். ஏதோ மிஷினில் கனெக்ட் செய்து வைத்திருந்தார்கள்.63...63... 63... நைசா அடுத்த பெட்களை பார்த்தேன்...சிலருக்கு 62, 65, 70 என்று  காண்பித்தது. சரி ஹார்ட் பீட்டாக இருக்கும் என்று நினைத்து கொண்டேன்.

சர்ஜன் கூப்பிடும் வரை காத்திருங்கள் என்றார்கள்.டாக்டர் சர்ஜரி சக்சஸ், 4 கிராஃப்ட் அம்மாக்கு செய்தாச்சு ஷி இஸ் ஆல்ரைட் என்று சந்தோஷமாய் சொல்லிட்டு போனார்.

மறுநாள் காலை 7 மணிக்கு தங்கை போய் பார்த்து வந்தாள். அம்மா முழித்து இருக்கிறார்கள் ரொம்ப டயர்டாக இருப்பதாய் சொன்னாள்.மூன்றாவது நாள் ரூமிற்கு மாற்றினார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் காயங்கள் ஆறியதும் 9 ஆம் நாள் டிஸ்சார்ஜ் செய்தார்கள்.எக்ஸ்ட்ரா  மெடிக்கல் பில் சேர்த்து மொத்தமாக 2,45,000 கட்டினோம்.

தினம் மூன்று வேளை இன்சுலின்,இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுகர் செக்கிங் என்று அம்மாவை குத்தி கொண்டு இருக்கிறேன். காலில் வெயின் எடுத்து ஹார்ட்டில் பைபாஸ் செய்து உள்ளார்கள்.வீட்டிற்கு வந்ததும் காலில் தையல் போட்ட இடத்தில் கொஞ்சம் வீக்கமும் கொஞ்சமாக நீரும் வந்து கொண்டு இருந்தது. டயபட்டாலஜிஸ்ட்டிற்கு ஃபோன் செய்து கேட்டதும் நீங்க அம்மாவை இங்கே கூப்பிட்டு வாங்க என்றார். இது சரி படாது என்று கிச்சு கிச்சு தாம்பாளம் என்று சர்ஜனை கூப்பிட்டு இப்படி அம்மாக்கு காலில் புண்ணாகிறது FUCID-ன்னு என்கிட்ட ஒரு ஆயிண்ட்மெண்ட் இருக்கு அதை அப்ளை செய்யவா என்று கேட்டதும் அவர் ஓகே குட் அந்த ஆயிண்மெண்டே போடுங்கள் பயப்பட வேண்டாம். இரண்டு நாளில் காய்ந்திடும்..இல்லைன்னா ஹாஸ்பிட்டல் வாங்களேன் என்றார். அதை அப்ளை செய்த இரண்டு நாளில் புண் சுத்தமாய் ஆறிடுச்சு.


மார்ச் 5-ல் சர்ஜரி செய்த அம்மா இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் ரெக்கவர் ஆகி பழைய AMMA-வாகி கொண்டே இருக்கிறார்கள்.  6 மணிநேரம் சர்ஜரி செய்த டாக்டர்களுக்கும் டென்ஷன் தான்.இல்லை என்று சொல்லவில்லை உடனே பணம் கட்டுங்க என்று சொல்லி படுத்தி வைத்ததில் ஹாஸ்பிட்டல் மேல் முதலில் கோபமாய் வந்தது. சந்தேகமாய் வந்தது. ஆனால், பணம் கொடுக்காமல் சிலர் படுத்தி வைப்பதாலும் சர்ஜரியில் இறந்து விட்டால் பணம் கொடுக்க பெரிய தகராறு செய்வதாயும் கேள்வி பட்ட போதும், அம்மாவின் இன்றைய நிலையினை பார்க்கும் போதும்  ஹாஸ்பிட்டல் மேல் இருந்த கோபம் காணாமல் போனது.

நிறைய சொத்து இருந்தும் நீ பாரு நான் பாரு என்று பெற்றோரை பார்த்து கொள்ள போட்டி போடும் இந்த உலகில் நான் நீ என்று நாங்கள் நால்வரும் எங்க அம்மாக்கு செய்ததில் சந்தோஷப்படுகிறோம்.


Wednesday, April 10, 2013

அம்மாவும்,மூன்று லட்சமும்,பின்னே நாங்களும்.........1

அம்மாவிற்கு செப்டம்பரில் ஒரு அட்டாக் வந்து ஆஞ்சியோ ப்ளாஸ்டி செய்து ஸ்டெண்ட் வைத்தார்கள்.இந்த மார்ச் 3-ல் திரும்ப ஒரு அட்டாக். இந்த முறை ரொம்ப வலியில்லை.  ஓடு ஓடுன்னு ரெகுலர் செக்கப் போகும் ஹாஸ்பிட்டலுக்கு போனா இசிஜி பார்த்து உடனே ஆஞ்சியோக்ராம் செய்ய சொல்லி அந்த ரிசல்ட் வந்ததும் பைபாஸ் சர்ஜரி செய்யணும் உடனே பெரிய ஹாஸ்பிட்டல் மூவ் ஆகணும் என்றதும் பைபாஸ் சர்ஜரிக்கு எவ்ளோ செலவு ஆகும் என்று கேட்க 1,60,000 ஆகும் என்று ஆஞ்சியோ செய்த டாக்டர் சொன்னார். உடனே, ஆம்புலன்சில் அம்மாவை காமாட்சி ஹாஸ்பிட்டலுக்கு ஷிஃப்ட் செய்தேன்.

சனி இரவு போய் திங்கள் மாலை அந்த ஹாஸ்பிட்டலுக்கு 36 ஆயிரம் கட்டி விட்டு காமாட்சிக்கு ஆம்புலன்சில் வந்தோம்.

இங்கே ஒரு முக்கிய தகவல்..சென்னையில் நான் பயணம் போகாதா வண்டி ஆம்புலன்ஸ் தான். அதிலும் பயணம் செய்தாச்சு!!!!

மார்ச் 4 ஆம் தேதி மாலை 5.30 க்கு காமாட்சி ஹாஸ்பிட்டலில் எமர்ஜென்சி வார்டில் அம்மாவை படுக்க வைச்சாச்சு. அங்கிருந்த டாக்டரிடம் சர்ஜனை மீட் செய்யணும் அவர் தான் இப்ப இங்க வரச் சொன்னார் என்று சொன்னதும், அவர் வருவார் நீங்க ரிஷப்ஷனில் கூப்பிடுறாங்க போய் பணம் கட்டிட்டு வாங்க என்றதும் போனேன். அங்கே உடனே 20 ஆயிரம் கட்டினால் தான் ஐசியுவில் அட்மிட் செய்ய முடியும் என்றார்கள்.சரி சர்ஜரிக்கு எவ்வளவு என்றதும் 3 பேக்கேஜ் இருக்கு 1,45,000 ன்னா ஜெனரல் வார்டு,1,75,000 ன்னா ரூம், 1,95,00 ன்னா ஏசிரூம்.9 நாட்கள் பேக்கேஜ் இதில் 30,000 வரை தான் மருந்து செலவு அடங்கும். இரண்டு நாள்கள் தான் ஐசியு வாடகை அடங்கும்...சர்ஜரிக்கு பிறகு டயாபடிஸ்,கிட்னி பிரச்சனை வந்தால் அந்த டாக்டருக்கு விசிட்டிங் சார்ஜ் தனி தனியே கொடுக்கணும் ஆக மொத்தம் 3 லட்சம் வந்திடும் என்று ரிஷப்ஷனில் இருப்பவர் சொன்னார். அப்புறம் எதற்கு பேக்கேஜ்??? உடனே சர்ஜனுக்கு ஃபோன் செய்தேன். (ரிங் டோன் -- கிச்சு கிச்சு தாம்பாளம் கீயா கீயா தாம்பாளம்) என்ன சாரே 1,60,000 ஆகும்னாங்க இப்ப இங்க டபுளா சொல்றாங்க என்றதும் இருங்கம்மா ரிஷப்ஷனுக்கு நான் பேசிட்டு உங்க லைன்னுக்கு வரேன் என்றார் சர்ஜன்.

பேசிட்டேன் 1,75 க்கு கூட 25 ஆயிரம் இல்லை 40 ஆயிரம் தான் வரும் அதற்கு மேலே வராது நான் பேச்சிட்டேன் நீங்க அம்மாவை ஐசியுவிற்கு மூவ் செய்யுங்கள் என்று சொன்னதும் ரிஷப்ஷன் ஆள் ஏம்மா உங்ககிட்ட தோராயமா 3 லட்சம் வரும் என்றேன்.ஏம்மா அந்த டாக்டர் கிட்ட என்னை போட்டு கொடுத்தீங்க நீங்க அப்போலோ போக போறதா அவர் என் கிட்ட கத்துகிறார் என்று வெடு வெடுன்னார்.நானும் பதிலுக்கு பாசமானேன்.
( நான் அப்போலோன்னு சொல்லவேயில்லையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்) .

ஓகோ அப்போலோவிலும் இந்த பணம் தான் வருமா ஓக்கேன்னு என் கஸினிற்கு (பெத்தாலஜிஸ்ட் இன் ராமசந்திரா) ஃபோன் செய்தேன்.ரிப்போர்ட்டை படித்து காண்பித்து அம்மாவின் நிலை இப்படி இருக்கு, இங்கேயோ பேரம் நடக்குதுடா என்ன செய்ய? அம்மாவை அப்படியே இன்னொரு ஆம்புலன்சில் ஏத்தி கொண்டு அப்போலோ இல்லைன்னா ராமசந்திரா வந்திடவா  என்று கேட்டேன். அவர் இல்லைக்கா நீங்க இருக்கும் ஹாஸ்பிட்டலில் அனெஸ்தடிஸ்ட் என் ஃப்ரெண்ட் தான் நான் பேசிட்டேன் சர்ஜன் நல்லா செய்றாராம் எனவே நீங்க ட்ராஃபிக்கில் இப்ப வேற ஹாஸ்பிட்டல் அலைந்தாலும் நேரம் தான் போய் கொண்டே இருக்கும் அதுவும் இல்லாமல் அங்கேயும் இந்த பணத்தை விட ஜாஸ்தி தான் ஆகும் நீங்க குழப்பிக்காம சர்ஜரிக்கு ஓக்கே சொல்லிடுங்க என்றான்.என் கணவருக்கு,தம்பிக்கு,தங்கைக்கு ஃபோனில் விஷயத்தை சொல்ல அவர்களும் குழம்ப வேண்டாம் ஓகே சொல்லிட்டு அம்மாவை ஐ.சி.யுவிற்கு மூவ் செய்திடு நாங்க எல்லோரும் வந்துட்டே இருக்கோம் என்றார்கள்.

                                                                                beating heart photo: beating heart lunapic-beating.gif