அ.முத்துலிங்கம் எழுதி உயிர்மை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள புத்தகம் தான் ஒன்றுக்கும் உதவாதவன்.
முத்துலிங்கம் சாரை பற்றி எதுவும் தெரியாது. புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை வாங்கியது என் தங்கை குமுதா.என்ன ஒரு நக்கல்.கரெக்டான ஆளாக பார்த்து தான் அதை படிக்க கொடுத்து இருக்கிறார். சரி ஒன்றுக்கும் உதவாமல் வாழ்க்கையில் மேலும் முன்னேறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்னு திருநெல்வேலியிலிருந்து காலை 9 மணிக்கு கூட்டமே இல்லாத ஒரு பஸ்ஸில் மதுரைக்கு வரும் போது இந்த புத்தகத்தை எடுத்தால் 12.15க்கு மதுரை வந்ததே தெரியாமல் படித்து கொண்டே இருந்தேன்.
நடுவில் கோவில்பட்டியில் 10ரூபாய்க்கு கடலை மிட்டாய், சாத்தூரில் 10 ரூபாய்க்கு வெள்ளரிக்காய் வாங்க மட்டும் தான் விரல்களுக்கிடையில் புத்தகத்தை வைத்து கொண்டே நிமிர்ந்ததாய் நினைவு.
அப்புறம் மதுரையிலிருந்து திண்டுக்கல் போகலாம் என்றிருந்த ப்ளானை தடாலடியாக கைவிட்டு ஆரப்பாளையம் மூத்திர ஸ்டாண்டை (மூக்கை மூட முடியாமல் இருகையிலும் பை) சுற்றி வந்து மாட்டு தாவணிக்கு பஸ் பிடித்து, சாப்பிட்டு பின் சென்னை பஸ் ஏறலாம் என்ற ப்ளானையும் கேன்சல் செய்து விட்டேன். சென்னைக்கு கிளம்ப தயாராய் இருந்த ப்ரைவேட் ஏ.சி பஸ்ஸை மிஸ் செய்து விட கூடாது என்று அவசரமாய் ஒரு ஜிகிர்தண்டா+தண்ணீர் பாட்டில் வாங்கி கொண்டு 1.30க்கு பஸ்ஸில் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன்.கைவிரல்களை மடக்கி இரண்டரை,மூன்றரை,
நாலரை என்று எட்டரைக்கு, ஒன்பதிற்கு தாம்பரம் போயிடலாம் என்று கணக்கு போட்டுவிட்டு புத்தகத்தில் இன்னும் 10 பக்கங்கள் மீதமிருந்தது அதையும் படித்து விடலாம் என்று புத்தகத்தை எடுத்தால் முகத்திற்கு நேரா யானை துரத்துகிறது.ஆனாலும் துரத்தும் யானையினை நான் கண்டுக்கொள்ளாமல் கும்கி மாணிக்கம் வந்து பார்த்து கொள்ளும் என்று மீதம் உள்ள பக்கங்களையும் படித்து விட்டு தான் நிமிர்ந்தேன்.
ஆஹா எப்படி ”ஆக” சிறந்த எழுத்தை இத்தனை நாட்கள் படிக்காத ஞான சூன்யமாக இருந்தோம் என்று தோன்றியது.படித்த பக்கங்களை திருப்பி திருப்பி படித்து கொண்டே இருந்தேன். திருச்சியும் வந்தது. இங்கே சாப்பாடு வாங்கி கொள்ளலாம் என்ற ப்ளானை கைவிட்டேன்.காரணம் பஸ் நிறுத்தி இருந்த இடத்தின் சைடில் காக்கா பிரியாணி போல விற்று கொண்டிருந்தார்கள்.பஸ் வேறு இப்பவோ அப்பவோ கிளம்பி விடும் போல ஊசலாடி கொண்டிருந்தது. பக்கத்தில் ஹோட்டல்களும் தெரியவில்லை. எனவே சரி கொஞ்சம் தூரம் போனால் இன்னொரு மூத்திர ஸ்டாண்டில் பஸ் நிறுத்தும் போது பிஸ்கெட் பாக்கெட் வாங்கி கொள்ளலாம் என்று தண்ணீர் மட்டும் குடித்து கொண்டேன்.
நீ எப்ப புள்ள சொல்ல போற ,எப்பொ,எப்போ,எப்பொ என்று பிரபு சார் பையன் உருகி கொண்டு இருந்ததை பார்க்க பார்க்க நான் எப்ப சாப்பிடுவது என்று பசியில் கொஞ்சம் அழுகையே வந்தது. டக்குன்னு அடுத்த சீட்டிற்கு ஒரு குண்டு பெண் வந்து அமர்ந்தார்.ஒரு செவன் - அப்,ஒரு மாங்கோ ஜூஸ்,இரண்டு சிப்ஸ் பாக்கெட்,இரண்டு பிஸ்கெட் பாக்கெட்,அரைக்கிலோ திராட்சை,இரண்டு கொய்யா என்று சென்னை வரும் வரை சாப்பிடலாம் போல அமர்க்களமாய் வந்தமர்ந்தார்.ஆஹா கத்தி அழுதுவிடுவேன் போல் இருந்தது. கடனாய் ஒரு கொய்யா பழமாவது வாங்கலாமா என்று அல்ப்பமாய் யோசித்தேன். சீசீ அந்த பழம் புளிக்கும் என்று மனசு மாறியது.
கும்கி முடிந்து கலகலப்பு பார்க்கவும் கொஞ்ச நேரத்தில் பசி மறந்து விட்டது. அடுத்த நிறுத்தத்தில் ஒரு இளநீரும்,பிஸ்கெட்டும் சாப்பிட்டு அப்புறம் ஒரு வழியாக தாம்பரம் வந்து சேர்ந்தேன்.இப்ப சாப்பிட போறேன்.
ஒன்றுக்கும் உதவாதவன் பற்றி நாளைக்கு சொல்றேன் வரட்டா.