Thursday, December 19, 2013

உயர்ந்த பயணம்

 ட்ரையினில் செல்ல  டாக்டர் சர்டிஃபிகேட் இருந்தால் தான் பயணம் செய்ய முடியும்.பயணம் செய்பவர்களுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் வழங்கப் படுகிறது. Xining,china -- Lhasha,Tibet 1956 km, இணைக்கும் Zang-2 ரயிலானது கடல் மட்டத்தில் இருந்து 5072 கி.மீ உயரத்தில் ஆளில்லா உலகிலேயே மிக உயரமான Tanqqula ரயில்வே ஸ்டேஷனை கடக்கிறது. ஆனால் இந்த ஸ்டேஷனில் ட்ரையின் நிற்கும் போது யாரும் இறங்கவோ ஏறவோ மாட்டார்கள்.எதிர் புறத்தில் வரும் ட்ரையின் க்ராஸ் ஆக மட்டுமே மற்ற ட்ரையின் இங்கு நிற்கும்.

 Fenghuoshan Tunnel உலகிலேயே உயரமானது. இதன் தூரம் 1338 மீட்டராம்.4010 மீட்டர் உலகிலேயே மிக நீநீநீளமானGuanjjiao tunnel இங்கு தான் இருக்கிறது. பெரும்பாலான இடங்கள் மிகவும் அபாயகரமானவை, வழியில்675 பாலங்கள்..45 ஸ்டேஷன்கள் அதில் 38 ஸ்டேஷன்களில் யாருமே கிடையாது.டாய்லெட்டில் தண்ணீர் சூடாக இருக்க வேண்டும்.இல்லையெனில் ஃப்ரீஸாகி விடும். ஒவ்வொரு ட்ரையினிலும் கட்டாயம் ஒரு டாக்டர் உண்டு.அந்த டாக்டர் ரொம்ப பாவம்பா.சைனாக்காரர்கள் மேஜிக் தான் செய்கிறார்கள் போல.இந்த ட்ரையினையும் பாதையையும் பற்றி படிக்கவே பயமாக இருக்கு. ஆனால், இந்த பாதையினை போட்ட சைனாக்காரர்களை என்னவென்று சொல்வது. மிக அருமையான அழகான ஏரிகள்,grass lands, இயற்கை எழில்கள் நிறைந்தது. ஆனா ரசிக்க தான் முடியாது ஏன்னா தலைசுற்றல்,மயக்கம்,வாந்தி,தூக்கமின்மை என்று எப்படா ட்ரையினை விட்டு இறங்குவோம் என்று ஆகிடும் அப்புறம் என்னத்த ரசிக்கிறது. அப்படியே பங்களாதேஷ்,இந்தியா வரை இந்த ரயில்வே லைன் எக்ஸ்டெண்ட் ஆக சான்ஸ் இருக்கிறது. அப்படி ஆச்சுன்னா ஒரு எட்டு போயிட்டு வந்துட வேண்டியது தான்.

Tuesday, November 26, 2013

நான் படிச்சா -3

          நான் படிச்சா --1 ...நான் படிச்சா-2

டிகிரி முடிச்சுட்டு PG படிக்க  யுனிவர்சிட்டி கேம்பஸிற்கு போன போதே தெரிஞ்சுடுச்சு இங்கேயும் கட்டாயம் வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்குவேன்னு.

என் கூட படிச்ச ராஜி கல்லிடைக்குறிச்சியிலிருந்து தினம் ட்ரையினில் வருவாள்.டிகிரி படிக்கும் போது முழு நாள் க்ளாஸ் முடித்து மாலையில் ட்ரையினில் போய் விடுவாள்.PGயில் முதல் வருடம் முழுவதும் பாதி நாள் தான் க்ளாஸ் இருக்கும்.மதியம் ட்ரையின் கிடையாது.

அதனால் மாலை நேர ட்ரையுனுக்காக  ஸ்டேஷனில் போய் ட்ரையினே வராத ப்ளாட்ஃபார்ம்களில் காத்து வாங்குவது,கடைகடையாய் ஒண்ணுமே வாங்காம சுத்துவது,லைப்ரரியில் போய் உட்கார்ந்து போறவரவுங்களை வேடிக்கை பார்ப்பது,ஒரு படம் விடாமல் மதிய வேளையில் தியேட்டர் போவது இல்லாட்டி எங்க வீட்டில் கொட்டம் அடிப்பது என்று சூப்பரா ஒரு இரண்டு மாதம் பொழுது அதுபாட்டுக்கு போய்கிட்டு இருந்துச்சு.

முதல் இண்டெர்னல் டெஸ்ட் எழுதி மார்க் வந்தது. எங்களுக்கு நான்கு மாஸ்டர்கள் க்ளாஸ் எடுத்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் கொஞ்சம் முரடாக இருப்பார். அவர் க்ளாசில் அனைவரிடமும் எல்லா பேப்பர் மார்க்கும் கேட்டு கொண்டே வந்தார். என்னையும் ராஜியையும் சேர்ந்து எழுந்து நிற்க சொன்னார். சரி நல்ல மார்க் தானே வாங்கி இருக்கோம் என்று சந்தோஷமாக எழுந்து நின்று எங்கள் மார்க்கை சொல்ல ஆரம்பிக்கோம். அவர் பாடத்து மார்க் கேக்கலை படத்து மார்க் கேக்கேன் என்று நக்கல் அடித்தார். முதல் நாள் மதியம் சினிமா போனதை எந்த சீனியர் பக்கியோ அவர்ட்ட போட்டு கொடுத்து இருக்கு. முதல் நாள் 5 சீனியர் பசங்களை தியேட்டரில் பார்த்து இருந்தோம்.

ராஜிக்கு கண்ணில் டேம் கட்டிடுச்சு. எனக்கோ பயங்கர கோபம்.சார்,,நாங்க வீட்டிற்கு தெரிந்து தான் சினிமாக்கு போனோம்,இனிமேலும் போவோம் என கொஞ்சம் ரஃப்பாக சொல்லிட்டு உட்கார்ந்து கொண்டேன்.  கன்னாபின்னான்னு அவமானம்+கோபம்.

வீட்டில் நைனாவிடம் போய் விஷயத்தை சொல்லி ராஜி அழுது விட்டதையும் சொல்லி நானும் கொஞ்சமா கண்ணை கசக்கினேன். அடுத்த INTERNAL டெஸ்ட்டில் நான் தான் அந்த பேப்பரில் கடைசி மார்க். எனக்கு முந்தைய மார்க் ராஜி. நாமெல்லாம் என்னைக்கு மார்க்குக்கு கலங்கி இருக்கோம். ஃபெயில் ஆகாம படித்தா போதுங்குற சங்கத்தை சேர்ந்தவுங்க.

ஆனா முதல் செமஸ்டருக்கு எக்சாம் எழுத ராஜி வரவேயில்லை. அத்தோடு காலேஜ் வருவதை நிறுத்தி கொண்டாள். நானும் ஒரு நல்ல ஃப்ரெண்டை இழந்தேன்.அந்த சார் அப்படி கேட்டதை மனசில் வச்சுகிட்டு க்ளாசில் ஒருத்தியும் இரண்டு வருடமும் சினிமாக்கே ஃப்ரெண்ட்ஸ்களுடன் போனதேயில்லை.

இரண்டு வருடமும் அவர் எடுக்கும் பேப்பரில் எழுதிய அனைத்து INTERNAL டெஸ்டிலும் நான் தான் கடைசி மார்க்.
ஆனால் வைச்சேன் பாருங்க ஆப்பு..EXTERNAL EXAM-ல் நான் தான் அந்த பேப்பரில் முதல் மார்க்.ஆனால் இரண்டையும் கூட்டும் போது என் மார்க் குறைஞ்சுடுச்சு.

என் நைனா நான் இரண்டாவது வருடம் படிக்கும் போது நவம்பர் 26-ல் இறந்து விட்டார். இரண்டு நாள் கழிச்சு காலேஜ் போன போது இன்னொரு ஆசிரியர் என்னிடம் வந்து என்னம்மா ஆச்சு என்று விசாரித்துவிட்டு ரொம்ப ஷார்ட் டெம்பரோ உங்கப்பா என்றும் கேட்டார். எப்படி சார் தெரியும் என்று கேட்ட போது உங்க அப்பா ஒரு நாள் மாலையில் நாங்க தங்கி இருந்த(4 ஆசிரியர்கள் ஒன்றாக தங்கி இருந்தார்கள்) வீட்டிற்கு வந்து பசங்களுக்கு முன்னாடி லேடிஸ் ஸ்டூண்ட்களிடம் எப்படி பேசுவது என்று ஒரு முறை இருக்கு அது தெரியாமல் நீங்க எல்லாம் எப்படி காலெஜிற்கு க்ளாஸ் எடுக்க வர்ரீங்க..அந்த பெண் பயந்து போய் தானே(ராஜி) காலேஜிற்கு வரலை.இனிமேல் எந்த பெண்ணிடமும் அப்படி பேசாதீங்க பேசினால் அப்புறம் நடப்பதே வேறு என்று மிரட்டி விட்டு இப்படி நான் வந்து பேசினதை என் மகளிடமும் சொல்ல கூடாது என்றும் சொல்லிட்டு வந்திருக்கார்.

அந்த நல்லாசிரியர் என்னிடம் இதை பற்றி எதுவும் கேக்கவேயில்லை. ஆனால் மார்க் குறைவாக போட்டு பழிவாங்கி உள்ளார்.


இன்று என் அப்பா இறந்து 25 வருடங்கள் ஆகிறது.

Thursday, November 21, 2013

நான் படிச்சா -2

நான் +2 படிச்ச போது திண்டுக்கல் போன என் அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்து அங்கேயே இரண்டு மாதங்கள் தங்க வேண்டியதாயிற்று. இதெல்லாம் +2 பாசாகுமா என்ற கவலை போல. ஹாஸ்ட்டல் இல்லாததால் நானும் என் தம்பிகளும் திநெவேலியிலிருந்து திண்டுக்கல் போனோம். என் தம்பிகள் இருவருக்கும் உடனே பள்ளியில் இடம் கிடைத்து விட +2 என்பதால் எனக்கு இடமே கிடைக்கவில்லை. அதுவும் நான் காமர்ஸ்,கெமிஸ்ட்ரி,பிஸிக்ஸ் மேக்ஸ் என்று  அவியல் மாதிரி ஒரு படிப்பை +1- ல் படித்து இருந்தேன்.திண்டுக்கல்லில் காமர்ஸ்க்கு பதிலாக பயாலஜி இருந்துச்சு. ஆனாலும் என் மாமாவின் ஃப்ரெண்ட் உதவியுடன் நானும் ஒரு ஸ்கூலில் செப்டப்மரில் +2 சேர்ந்தும் விட்டேன்.

சும்மாவே படிப்பில் புலியான நான் இப்போ சிங்கமாகி விட்டேன். சிங்கம் அமைதியா உட்கார்ந்து இருக்குமே அப்படி எடுத்தக்கணும். ஸ்கூல் போகவே பிடிக்கலை. முன்னெல்லாம் ஃப்ரெண்ட்ஸ் பார்க்க இண்ட்ரெஸ்ட்டாக..சினிமா கதை எல்லாம் பேச அப்படி இப்படின்னு ஸ்கூலிற்கு போவேன். இங்கோ ஒரு புள்ளையும் ஃப்ரெண்ட்ஸ் இல்லை. புது யூனிஃபார்ம் வேறு பிடிக்கவேயில்லை.சரியென்று ஒரு மாதிரி அட்ஜஸ்ட் ஆகி ஸ்கூலிற்கு போய் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் மதியம் பிசிக்ஸ் லேபில் என் மாஸ்டருக்கு (சின்ன வயதுக்காரர்) என்ன கோபமோ அங்கிருந்த ஒரு பெரிய ஸ்கேலால் என் தலையில் டேபிளின் அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு அடி அடித்து விட்டார். எனக்கு குபுக்குன்னு கண்ணில் அப்படி ஒரு தண்ணீர் டேம்.கூட இருந்த கடங்காரிகள் வேறு சிரிச்சுட்டாங்க. சம்பவம் நடந்தது மதியம் 3.30 மணி.வீடு போகும் வரை கண்ணில் கண்ணீர் டேம் உடையாமல் பார்த்து கொண்டு 4.30 மணிக்கு வீட்டிற்கு போனதும் நைனாவை பார்த்ததும் டேமை உடைத்து விட்டேன்.
 நைனா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்து 25 நாட்கள் இருக்கும்.

மறுநாள் ஸ்கூலிற்கு போனா அங்கிருந்த சிஸ்டர்கள் மூன்று பேர் மற்றும் பிசிக்ஸ் மாஸ்டர் மூணு க்ளாஸ் பொண்ணுங்களை ஒன்றாக உட்கார வைத்து யார் வீட்டில் போய் மாஸ்டர் அடித்ததாய் சொன்னது? யாருடைய சொந்தக்காரரோ அவர் வீட்டிற்கு வந்து மிரட்டி போனதாகவும் உண்மையை சொல்லாட்டி முட்டை,வெத்திலை மை வச்சு(???) யாரு அந்த பொண்ணு என்று உண்மையை கண்டுபிடிச்சு விடுவதாகவும் ஒரே ரகளை. ஒரு மூன்று நாட்கள் தினம் க்ளாஸ் மொத்தமும் மிரட்டலுக்கு உள்ளானது. நானும் மிரண்டு போய் மூச்சே விடாமல் ”ஙே”ன்னு முழிச்சுட்டு ஸ்கூல்,வீடுன்னு போயிட்டு வந்துட்டு இருந்தேன்.

அந்த மாஸ்டர் வீட்டிற்கு போய் பெண் குழந்தைகளை எப்படி அடிக்கலாம்,இனிமேலும் இப்படி அடித்தால் நடப்பதே வேறு என்று மிரட்டி வந்த அந்த சொந்தக்காரர் என் நைனா என்று எனக்கே ஒரு மாசம் கழித்து தான் தெரியும்.


Monday, November 11, 2013

சென்னை எக்ஸ்பிரஸ்ஸில் இளிச்சவாய் தமிழன்ஸ்

 மும்பையில் இருந்து திரும்ப வரும் போது நாங்க இருந்த கோச்சில்அடுத்த ஆறு கோச்சுகளில் டிடிஆர் என்று ஒருவர் இல்லவே இல்லை. ஆறு கோச் ஆடி ஆடி நடந்து போய் தேடி பார்த்துட்டு வந்து படுத்து விட்டேன். RAC டிக்கெட் என்பதால் அவரை தேடி போனேன். காலை 8 மணிக்கு திடீரென்று  SQUAD என்று ஒருவர் ஃபைல் சகிதம் வந்து ஒவ்வொரு 8 பேருக்கு ஒருத்தர் அல்லது இருவர் என்று ஃபைன் வசூலித்து ரசீதும் கொடுத்து கொண்டிருந்தார். தக்கலில் பதிவு செய்தவர்கள் பயணத்தின் போது கட்டாயம் ஒரிஜினல் ஐ.டி ஃப்ரூப் வைத்து இருக்க வேண்டும் என்பது ரயில்வே ரூல். அது தெரியாமல் தமிழர்கள் நிறைய பேர் டிக்கெட் எடுக்கும் போது ஒரிஜினல் கேட்கலை அதான் இப்போ ஜெராக்ஸ் வைத்து கொண்டிருக்கிறோம் என்று தண்டம் அழுது கொண்டிருந்தனர். என் எதிர் இருந்த ஒருவர் ஷிப்பில் வேலை ஒரு வருடம் முடித்து சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்.சின்ன பையனாக இருந்தான். அவனிடம் ஒரிஜினல் பாஸ்போர்ட் இருக்கு. ஆனால் தக்கல் ரிசர்வ் செய்த போது டிரைவிங் லைசன்ஸ் நம்பர் கொடுத்து விட்டு பயணத்தின் போது அதன் டூப்ளிகேட்டை காண்பிக்க ஒத்து கொள்ளவில்லை அவனிடம் 1000 ரூபாயும் இல்லை. அடுத்த ஸ்டேஷனில் இறங்கி ஃபைன் கட்ட சொல்லி கட்டாய படுத்திவிட்டார் அந்த SQUAD. என்னிடம் பரிதாபமாக பணம் இருக்கா என்று கேட்க நான் சென்னையில் வந்து பணம் பெற்று கொள்வதாய் சொல்லி அந்த பையனிடம் பணம் கொடுக்க அந்த பையன் தன் ஏ.டி.எம் கார்டை என்னிடம் கொடுத்து நீங்க சென்னை வந்து என்னிடம் கொடுங்கள் என்று சொல்கிறான். நான் ஏடிஎம் கார்ட் வேணாம்பா சென்னை வந்ததும் பணம் எடுத்து கொடு என்று சொல்லி விட்டேன்.

அந்த வசூல் ராஜா ஸ்குவாட் சோலாப்பூரில் காலை 9.30 க்கு இறங்கி விட்டார். டிடிஆர்  காலை 11 மணிக்கு ஆடி அசைந்து வருகிறார். அதற்குள் கோச் முழுவதும் அன் - ரிசர்வ்ட் மாதிரி ஒரே கூட்டம். அவர்களை டிடிஆர் ஒன்றுமே கேட்கவில்லை. ரூல் ரூல் என்று அவ்ளோ பணம் வசூலித்தீர்களே, ஆந்திரா மக்கள் இப்படி ரிசர்வ்டு கோச்சில் ஏறுகிறார்களே அவர்களிடம் ஃபைன் கேக்க மாட்டீங்களா என்றதற்கு நீங்கள் லெட்டரா எழுதி சென்னையில் ரயில்வேயில் கம்ப்ளெய்ண்ட்டாக கொடுங்க மேடம் என்று சொல்லி விட்டு அடுத்த கோச்சிற்கு போய் விட்டார். நான் கேட்டதும் மற்றவர்களும் கேட்க ஆரம்பித்தார்கள் அவர் ஏன் அங்கே நிற்கிறார். ஏற்கனவே தக்கல் என்றும் ஏஜெண்ட் என்றும் அதிக பணம் கொடுத்து இப்போ ஃபைன் வேறு கட்டி நிறைய பேர் புலம்பி கொண்டு இருந்தார்கள்.

டிஸ்கி: ஏடிஎம் கார்டை நம்பி கொஞ்சமாய் பணம் வைத்து கொண்டு நீண்ட தூர ரயில் பயணம் செய்ய வேண்டாம். பயணத்தின் போது ஐ.டி ஒரிஜினல் கட்டாயம் வைத்து கொள்ள வேண்டும்.
சென்னையில் இறங்கியதும் அந்த பையன் என்னிடம் வாங்கிய பணத்தை ஏடிஎம்-ல் எடுத்து கொடுத்து விட்டான்.

Thursday, October 31, 2013

சென்னை எக்ஸ்பிரஸ்

1. நான்:  தேவி,என்ன ஆள் எதுவும் மாட்டுச்சா?

தேவி : இல்லக்கா தேடிட்டே இருக்கேன். இது வரைக்கும் மாட்டலை.

நான்: தனியா வந்திருக்க ஆளாப்பாரு அவுங்க தான் கேட்டா ஒத்துக்குவாங்க..

தேவி : ஆமாக்கா அப்படிதான் கேட்டுட்டு இருக்கேன்.

நான்: கேளு, கேளு நானும் யாராவது மாட்டுறாங்களான்னு பாக்குறேன்.....

ஆஹா வேற ரூட்டுல்ல பேச்சு போற மாதிரி இருக்குதேன்னு திடீரென்று ஞானோதயம் வந்து சிரிச்சுட்டே பேச்சுக்கு ஒரு பெரிய புள்ளி வைத்தோம்.

மும்பை போன போது எங்களில் 3 பேர் ஒரு கோச்,4 பேர் இன்னொரு கோச் 2 பேருக்கு இன்னொரு கோச்.அதுவும் பக்கம் பக்கமாய் இடமில்லை. எனவே எங்களுடன் வந்த தேவி தனிதனியே வந்திருந்த ஆண்களாய் பார்த்து சீட் மாறி கொள்ள முடியுமா என்று கேட்டு கொண்டிருந்தார். நான் டிடிஆரை பார்த்து RAC சீட் கேட்க போன போது தான் மேலே உள்ள டயலாக்ஸ்.


2. மும்பையில் கடைக்காரர்கள் 1163 ரூபாய்க்கு பில் வருகிறது என்றால் நம் தமிழ்நாடென்றால் 3 ரூபாய் குறைத்து 1160 அல்லது 1150 ரூபாய் என்று ரவுண்டாக  வாங்கி கொள்வார்கள்.நான் சொல்வது மொத்த கடைகளில். ஆனால் மும்பையில் 3 ரூபாய் கூட குறைக்க மறுத்து விட்டார்கள். என்னுடன் வந்திருந்த ஒருவர் ஒவ்வொரு கடையிலும் அமொளண்ட்டை ரவுண்டாக்குங்க ரவுண்டாக்குங்க என்று தொண தொணவென்று கேட்டு கொண்டே இருந்தார். நான் ஒரு கடைக்காரரிடம் பில்லை வாங்கி பேனாவால் அமெண்ட்டை சுற்றி ஒரு ரவுண்ட் வரைந்து கொடுத்து விட்டேன். அந்த கடைக்காரருக்கு ஒரே சிரிப்பு. அப்புறம் ரவுண்டாக்கி ஒரு தொகை வாங்கி கொண்டார்.

4. காலை வேளையில் மும்பை லோக்கல் ட்ரையினில் லேடிஸ் கோச்சில் பயணித்த போது கவனித்தது. அல்ட்ரா மாடர்ன் ட்ரெஸ்,விரித்த முடி,லிப்ஸ்டிக் என்று இருக்கும் பெண் கூட கையில் சாமி ஸ்லோகம் புக் வைத்து கொண்டு முணுமுணுத்து கொண்டு இருந்தார்கள். மும்பையால் தான் ஹிந்துயிசம் வாழுகிறது என்று நினைத்து கொண்டேன்.

3. சென்னை திரும்பி வரும் போது சைட் பெர்த்தில் ஒரு அம்மா 45 வயதில்,ஒரு பையன் 21 வயதில் அப்புறமா ஒரு 3 மாத குழந்தை. அந்த பையனை பார்த்தா குழந்தைக்கு அப்பா மாதிரி தெரியலை.அந்த அம்மாவை அந்த 21 வயது பையன் மா,மா என்று வேறு அழைத்தான். குழந்தை வேறு ட்ரையின் ஏறியதில் இருந்து ஒரே அழுகை. தலையே வெடித்து விட்டது. அந்த பையனிடம் குழந்தை யாருன்னு கேட்டேன். தங்கை என்றான். ஆஹா அண்ணா தங்கைக்கிடையே இவ்ளோ கேப்பா இது புது மாதிரி இருக்கேன்னு ஙேன்னு நான் முழித்து கொண்டிருந்த போது இந்த பாப்பாவை அடாப்ட் செய்து இருக்கோம்  என்று சொன்னான். அவனின் சொந்த மாமாக்கு மூன்று பெண்களாம். நான்காவதாய் பிறந்த இந்த பெண் குழந்தையினை சென்னை செளகார்பேட்டையில் வளர்க்க ராஜஸ்தானில் இருந்து எடுத்து வருவதாக சொன்னான். அவனும் அவன் தம்பியும் பிடிவாதம் பிடித்து எடுத்து வருவதாக கூறினான். எங்க பிரின்சஸ் என்று அந்த குழந்தையினை ராப்பகலாய் தாங்கி கொண்டிருந்தான் காலேஜ் படிக்கும் அந்த பையன்...
வீட்டிற்கு வர சொல்லி அவுங்க அம்மா ஃபோன் நம்பர் எல்லாம் கொடுத்தாங்க. உடைந்த தமிழில் பேசினார்கள். 21,18 என்று இரண்டு அண்ணாக்கள் அந்த குழந்தைக்கு. குழந்தை நிஜமாவே கொடுத்து வைச்சு இருக்கு.

.

Tuesday, October 29, 2013

மும்பை - சென்னை எக்ஸ்பிரஸ்

மும்பை போகணும்னு முடிவு செய்ததும் சென்னை எக்ஸ்பிரசில் எனக்கும் என் ஃப்ரெண்ட் ஒருவருக்கும் டிக்கெட் ஆன் - லைனில் புக் செய்தாச்சு. மும்பையில் ஃப்ரெண்ட்டின்  சொந்தக்காரர் வீட்டில் 2  நைட் தங்குவதாய் ஏற்பாடு செய்தாச்சு. ட்ரையின் ஏற எக்மோர் போனா என்னுடன் வருவதாய் சொல்லி இருந்த அந்த பெண் தன்னோட  ஃப்ரெண்ட் அவரின் அம்மா,மகன்,இன்னொரு ஃப்ரெண்ட் என்று என்னையும் சேர்த்து பத்து பேர் ட்ரையினில்.இத்தனை பேர் வருவதாய் அவர் என்னிடம் சொல்லவேயில்லை.

இரண்டு பேர் போவதாய் சொல்லி 10 பேரா என்னடா இதுன்னு எனக்கு ஒரே குழப்பம்.  ஆஹா போவது “பிசினஸ் ட்ரிப்” ஆச்சே..இது என்ன டூர் மாதிரி ஒரே கும்பல் என்று எனக்கு மூட் ஆஃப் ஆகி போச்சு. மறுநாள் காலை மும்பாய் போயாச்சு. அங்கே தானேவில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாடகைக்கு எடுத்தாச்சு. ஆனா எல்லோரும் அந்த வீட்டை விட்டு கிளம்ப மதியமாச்சு. நம்ம பிசினஸ் போச்சுடா என்று எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. அன்னைக்கு ராத்திரி படுக்கும் போது என் மகனிடம் போன் செய்து அவனுடைய ஃப்ரெண்ட் நம்பர் வாங்கி  மறுநாள் காலை என் லக்கேஜுடன் தாதர் வந்து அங்கு ஸ்டேஷன் க்ளோக் ரூமில் என் லக்கேஜை வைத்து விட்டு CST ட்ரையினில் போய் அங்கிருந்து Craw Ford, Mangaldas, Bhuleswar மார்க்கெட் போய் சுத்திவிட்டு வாங்கிய துணிகளை ஒரு கடையில் வைத்து விட்டு இரவு மகனின் ஃப்ரெண்ட் வீட்டிற்கு போய் படுத்து கொண்டேன்.

மறுநாள் காலையில் கிளம்பி சித்தி விநாயகர்,மஹாலக்‌ஷ்மி கோயில் போய் விட்டு தாதரிலிருந்து வெஸ்டர்ன் லைன் ட்ரையினில் பாந்த்ராவில் இறங்கி Linking Road போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு பாந்த்ராவில் ட்ரையின் ஏறி மலாட் போய் Kurthy வாங்கி கொண்டு Malad to Dadar ட்ரையினில் வந்து கையில் இருந்த லக்கேஜ்களை க்ளோக் ரூமில் பூட்டி போட்டு விட்டு செண்ட்ரல் லைன் ட்ரையினில் ஏறி ஃப்ரெண்ட் வீட்டிற்கு நைட் போய் விட்டேன்.

மறுநாள் திங்கள் கிழமை காலையில் கிளம்பி CST நேராக போய் Fashion Street-ல் Jeans Tops வாங்கி முடிக்க மதியம் ஆச்சு முதல் நாள் சுடிதார்களை வைத்து இருந்த மங்கள்தாஸ் மார்க்கெட் போய் பாக்கி பணத்தை செட்டில் செய்து விட்டு பார்சலை எடுத்து கொண்டு டாக்சியில் தாதர் வந்து திரும்ப க்ளோக் ரூமில் பார்சலை வைக்கும் போது இன்சார்ஜ் ஆள் என்னை ஏன் தினமும் இங்கே வருகிறீர்கள் என்று சிரித்து கொண்டே கேட்டார். தூரமாய் தங்கி இருக்கிறேன் அதான், நாளையில் இருந்து நோ மோர் டிஸ்டர்பன்ஸ் என்று சொல்லி விட்டு அப்படியே தாதர் வெஸ்ட் வந்து ரோட்டோர ஷாப்பிங்கில் மூழ்கினேன்.


ஆச்சா, மாலையிலேயே டிஃபன் சாப்பிட்டு விட்டு ரோட்டோர ஷாப்பிங்கினை முடித்து கொண்டு தாதர் ஈஸ்ட் வந்து க்ளோக் ரூமில் வைத்து இருந்த அனைத்து பார்சல்களையும் எடுத்து கொண்டு சென்னை எக்ஸ்பிரசில் ஏறினேன்.

மும்பாய் போகும் முன்பு மும்பாய் பற்றி தெரிந்து கொள்ள நெட்டை நாடிய போது ஷாப்பிங் எங்கேயெல்லாம் இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். உள்ளூர் இருப்பவர்களுக்கே தெரியாத இடமெல்லாம் எனக்கு தெரிந்து இருந்தது!!!! இதை மகனின் ஃப்ரெண்ட் வீட்டில் சொன்னார்கள். லோக்கல் ட்ரையின் ரூட் எல்லாம் பேப்பரில் எழுதி வைத்து கொண்டேன். அங்கு டாக்சி,ஆட்டோ எல்லம் செம சீப்.ட்ரையினில் காலை 11 முதல் மாலை 3 வரை பயணிப்பதும் ஈசியாக இருந்தது. நான் அங்கு போன நேரம் தசரா என்பதால் மாலை வேளைகளில் தங்கி இருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த கோயில்களில் தாண்டியா பார்த்தேன்.

மக்களிடம் ஒரு ஒழுங்கு இருந்தது. பஸ்ஸில் ஆட்டோவில் எங்கும் ஏறுவதற்கு கியூ.தசராவில் தினம் ஒரு கலர் ட்ரெஸ் என்று பெண்கள் ட்ரையினில் கலக்கினார்கள்.

துணிகள் வாங்க

Fashion Street and Mangaldas Market :   From CST station Taxi for Rs. 25.

Linking Road                                : From Bandra Station Taxi for Rs.25.

Malad West S.V Road                 : From Malad Station by walk in west side here many whole sale markets                                                             for cloths.

Artificial Jewellery வாங்க

Bhuleswar Market                       : CST station taxi for 40 rs..

Dadar Plotform Market               : From Dadar station by walk in western side many shops available for                                                           jewellery and boys toys,dresses,nighties and 3/4th for gents.


Household Articles  பீங்கான் கப்புகள், கிச்சன் சாமான்கள்,மிதியடிகள் வாங்க  

Craw ford market                   :  From CST station Taxi for 25 rs.

Craw Ford market,Mangaldas Market,Bhuleswar Market,Fashion Street இவை நான்கும் CST ஸ்டேஷனில் இருந்து பக்கமாய் இருந்தது.

Linking Road இந்த ரோட் Bandra Staion-க்கு பக்கத்தில் இருந்தது.

Malad மொத்த வியாபார கடைகள் இங்கு தான் அதிகம் இருந்தது.

  வாங்கிய துணிகள்,ஜூவல்லரிகளை இந்த மாதம் SRM University and EA-Mall-ல் நடந்த தீபாவளி உத்சவில்- Stall போட்டேன்.

டீசண்டாக ஒரு தொகையும் கிடைத்தது. ஊரும் சுத்தியாச்சு.பிசியான பிசினஸ் வுமனாகவும் ஆகியாச்சு.பார்க்கலாம் இது செட்டாகுமா என்று.
புதிய அனுபவம்.இன்னும் புதிய புதிய இடங்களை பார்க்கும் ஆவலை தூண்டியது.



Friday, October 25, 2013

எங்க ஸ்டாலுக்கு எல்லோரும் வாங்க...



இந்த மாதம் 3லிருந்து 8 வரை மும்பாய் போயிட்டு வந்து SRM யுனிவர்சிட்டியில் தீபாவளிக்காக Oct 9,10-ல் நடந்த Exibition-ல் ஒரு ஸ்டால் போட்டேன்.ஸ்டாலில் Jeans Tops and Kurti sale செய்தோம். வாடகை கொடுத்தது போக ஒரு தொகை டீசண்டாக கிடைத்தது. பொழுதும் போச்சு. ஆச்சா..

இந்த மாதம் 26,27-ல் எக்ஸ்பிரஸ் அவன்யூவில் ஒரு ஸ்டால் போடுறீங்களான்னு ஒரு ஃப்ரெண்ட் கேட்டதும் ஓக்கே சொல்லிட்டேன். ஸ்டால் நம்பர் 43 புக் செய்துட்டு உடனே 21 மும்பாய் போயிட்டு வேண்டியதை எல்லாம் வாங்கிட்டு இன்னைக்கு சென்னை வந்தாச்சு.

ஸ்டால் நம்பர்: 43
ஸ்டால் பெயர்: Manasa
நாட்கள் : October 26th and 27th
டைம்: 10 AM to 8 Pm
நடக்கும் இடம்: E-Hotel 3rd Floor..Express Avenue Mall,Chennai.

அனைவரும் வருக...உங்கள் ஆதரவை தருக..



Tuesday, October 01, 2013

நான் படிச்சா


நான் 7 ஆப்பு படிச்ச போது தங்கை அதே பள்ளியில் ஐந்தாப்பூ படிச்சுட்டு இருந்தா.அந்த வருடம் தான் அந்த பள்ளியில் புதுசா நாங்க சேர்ந்து இருந்தோம். அங்கு கட்டாயம் மாரல் வகுப்பில் Bible படிக்க வேண்டும்.அதில் டெஸ்ட் வைச்சு மார்க்கையும் ரேங்கிற்கு சேர்ப்பார்கள்.எனவே, ஒரே படிப்ஸ்ஸான என் தங்கை அதையும் வீட்டில் விழுந்து விழுந்து படிப்பாள்.நானோ மற்ற பாடத்தையே படிக்க மாட்டேன். இதில் நல்ல போதனைகளையா படிக்க போகிறேன். இது என்னடா தேவையில்லாமல் இதில் டெஸ்ட் அது இதுன்னு. கிறிஸ்டியன்ஸ் பொண்ணுங்க நம்மை விட ரேங்கில் முந்திடுவாங்களேன்னு ஒரே குழப்பம்ஸ்.இல்லைன்னா மட்டும் முதல் ரேங்க் எடுத்துட்டு தான் மறுவேலை. தங்கை படிச்சதிலிருந்து  அடிக்கடி என்னை சாத்தான் என்று திட்ட ஆரம்பித்து இருந்தாள்.இரண்டு மூன்று கதைகளும் ஸ்கூல் போகும் போது எனக்கு சொன்னாள்.

எனவே,ஒரு நல்ல மாலையில் மார்ல் நோட்டை எடுத்து  படிக்க ஆரம்பித்தேன்.திடீரென்று என்னை புத்தக மூட்டையுடன் பார்த்த என் நைனாவிற்கு செம சந்தோஷம்.ஆஹா மூத்த புள்ளையும் படிக்க ஆரம்பிடுச்சே வாத்தியார் பிள்ளை மக்கில்லை என்ற புதுமொழி வந்துடுச்சேன்னு.

நானும் நைனாவின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்ததும் சத்தமாக படிக்க ஆரம்பித்தேன். என் நைனா முகம் கொஞ்சமாக மாற துவங்கியது. இரு இரு என்ன படிக்கிறே நீ என்று சொல்லி கொண்டே நோட்டை வாங்கி பார்த்தார். சரி இது படிச்சது போதும் வேறு பாடம் படின்னு சொல்லிட்டே அந்த நோட்டை அவரே வைச்சுக்கிட்டார்.

சில நாட்கள் கழித்து இந்து குழந்தைகள் மாரல் க்ளாசில் நோட்டில் எதுவும் எழுத வேண்டாம்.க்ளாசிலிருந்து வெளியில் போய் உட்கார்ந்து கொள்ளலாம் என்றும் ப்ரேயரில் ஹெட்மிஸ்டர் அறிக்கை வாசித்தார். இனிமேல் அந்த பாடத்தின் மார்க் ரேங்கிற்கு கிடையாது என்றும் சொன்னார்.

என் நைனா அப்போதைய முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செகரட்டரி. நைனா பள்ளிக்கு வந்தாலே நிறைய ஆசிரியைகள் நைனாவை சுத்தி நின்னுட்டு ஏதோ பேசிட்டே இருப்பார்கள். பள்ளியில் இப்படி Bible படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவது தவறு என்று கூறவும் பள்ளி கல்வி இயக்குனரிடம் சொன்னால் அது பிரச்சனை உண்டாக்கும் என்பதாலும் பள்ளி உடனடியாக எங்களை படிக்க வேண்டாம்னு சொல்லிடுச்சு. இது அம்மா பிறகு எங்களிடம் கூறினார்கள்.

பாருங்களேன் ஒரு நாள் தான் படிச்சேன். அதான் தினம் மற்ற எந்த பாடத்தையும் படிச்சதே இல்லை.




Tuesday, September 10, 2013

குறை ஒன்றும் இல்லை லட்சுமி அம்மா எங்கே இருக்கீங்க???


பதிவுலகில் நிறைய பயணத்தொடர் எழுதி கொண்டிருந்த http://echumi.blogspot.in/
லட்சுமி அம்மாவை (குறை ஒன்றும் இல்லை) கடந்த 9 மாதங்களாக பதிவுலகம் பக்கம் காணவில்லை.தனது சிங்கப்பூர் தொடரை போனவருடம் டிசம்பர் 31-ல் முடித்துள்ளார். பிறகு பதிவு எதுவும் எழுதவில்லை. தனது டிசம்பர் 31 பதிவில் பிப்ரவரி மாதம் பின்னூட்டத்திற்கு பதில் போட்டு இருக்கிறார். அதன்பிறகு அவர் யாருக்கும் பின்னூட்டம் போட்டாரா என்றும் தெரியவில்லை. அம்மா நன்கு உடல் நலத்துடன் இருப்பார் என்றே நினைக்கிறேன். 

Wednesday, September 04, 2013

தங்கமீன்கள்+தகர சுறாக்கள் இடையில் ஆசிரியர்கள்

அப்பா மகள் கதை என்பதை விட இன்றைய தனியார் பள்ளிகளின் நிலைமையை தன் தங்கமீன்கள் படத்தில் ராம் முக்கிய பிரச்சனையாக காண்பித்து இருக்கிறார்.படத்தில் கடைசியில் குறைந்த சம்பளத்திற்கு நன்கு உழைத்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி என்று போடும் கார்டோடு படம் முடிகிறது.தனியார் பள்ளியில் அதிக வேலைப்பளுவில் மிக குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும்,பார்த்த அத்தனை ஆசிரியர்களும் ம் என்று ஒரு பெருமூச்சு விட்டு கொள்ளலாம்.


தனியார் பள்ளியில் பணிபுரிந்த போது ஏன் தான் இந்த பெற்றோர் இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த பள்ளிகளை நம்பி ஏமாந்து போறாங்களோ என்று தோன்றும். கம்பியூட்டரே காண்பிக்காமல் கம்பியூட்டர் ஃபீஸ் வாங்குவார்கள். ஒழுங்காய் கற்பிக்கும் ஆசிரியர்களை ஓவர்லோட் ஏற்றி அவர்களின் வேலையில் ஒரு சலிப்பினை ஏற்படுத்தி விடுவார்கள்.30 பேர் இருக்கும் இடத்தில் 45,50 என குழந்தைகளுக்கு கற்பிக்கும் நிலைமை அதுவும் சில நிமிடங்கள் ப்ரேக் இல்லாமல்.

சில பள்ளிகளில் சேரில் ஆசிரியர் க்ளாசில் உட்காரவே கூடாது, ஒரு ஆசிரியர் கூட இன்னொரு ஆசிரியர் பேச கூடாது.கட்டாயம் கொண்டை போட வேண்டும்.அதனால் தலை வலி வந்து நாள் முழுவதும் அந்த தலை வலியோடே இருக்க வேண்டியது இருக்கும். ஸ்கூலில் டூர் என்று அழைத்து போவார்கள் அதற்கு கட்டாயம் அவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் போக வேண்டும்.அதற்கு பணமும் தர வேண்டும். எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவர்களை வெளியில் பார்த்தால் பெண் ஆசிரியைகள் அவர்களுடன் பேச கூடாது.

படத்தில் செல்லம்மா விரும்பும் கனவுப்பள்ளியை எந்த கல்யாணியாவது தொடங்க மாட்டாரா என்று தான் அனைவரும் ஏங்கி கொண்டிருக்கிறார்கள்.

அய்யோ இப்போ நினைத்தாலும் ஸ்கூல் போக பயப்படும் வெறுக்கும் குழந்தைகள் போலவே எனக்கும் இந்த தனியார் பள்ளிகளுக்கு வேலைக்கு போக வெறுப்பு தான் வருகிறது.

கணவரின் சம்பளம் குறைவாக இருப்பதாலோ இன்னும் பிற பொருளாதார சூழல் காரணமாகவோ தான் நிறைய ஆசிரியர்கள் நொந்து வெந்து போய் இந்த தனியார் பள்ளிகளில் வேலை பார்த்து  கொண்டிருக்கிறார்கள். இவ்ளோ ஃபீஸ் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யும் அரசு இவ்ளோ சம்பளம் கட்டாயம் ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் நிர்ணயம் செய்ய வேண்டும்.

வேளச்சேரி, அடையாறு போன்ற இடங்களில் ஒரு வீட்டிற்கு சமையல் வேலைக்கு வெறும் இரண்டு மணிநேரம் போகும் ஒரு சமையல்காரரை விட M.A.,Msc,M.Phil என படித்து விட்டு எட்டு மணிநேரத்திற்கும் அதிக நேரம் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் சம்பளம் குறைவு.


Tuesday, September 03, 2013

தங்க மீன்கள் - சூப்பர் ராம்

ஏதோ பேச முற்படும் மனைவி ஆனால் பேச விடாது மெளனத்தை ராத்திரி இருட்டை கிழித்து கொண்டு ஓடும் ட்ரையினின் அதிக ஓசை.அப்பா நான் வயசுக்கு வந்தா தப்பாப்பா என்று கேட்கும் குழந்தை,தாத்தா இந்த Bag ரொம்ப வெயிட்டா இருக்கு இதை காரில் கொண்டு போ என்று சொல்லிவிட்டு அப்பாவுடன் சைக்கிளில் போகும் செல்லம்மா,குழந்தைக்கு மட்டும் தான் கால் அமுக்கி விடுவீங்களா என்று கேட்கும் மனைவி,நான் வரமாட்டேன் என்று சொன்னேனா நீங்க கூப்பிட்டதும் வந்தேனே என்று ஃபோனில் அழுகையுடன் சொல்லும் மனைவி,கூட படிக்கும் பெண் தனக்கு பொம்மை தரவில்லை என்று வரப்போகும் நாய் பற்றி க்ளாசில் கதை விடும் செல்லம்மா,அந்த நாய் அவசியமா என்ற நம் கேள்விக்கு ராமின் தங்கையிடம் பேசுவதன் மூலம் பதிலும் சொல்லுகிறார்.அந்த நாய் இவ்ளோ விலைன்னு எனக்கே நாலு நாளைக்கு முன் தான் தெரியும் என்று கூறும் போதும்....ராம் சூப்பர் ராம்...

பூரி அடடா அந்த பூரியின் ரசிகையான அந்த குட்டி பெண்ணும் கலக்குது. எவிட்டா மிஸ் போல எல்லோருக்கும் கிடைக்க ஆசை வருது. சடங்கு வீட்டில் அம்மா இழுத்து செல்லும் போது அந்த கேசரியை வாயில் வைத்து கொண்டு போவது வாசலில் இருக்கும் ஜிகினா பேப்பரை கையோடு உருவி கொண்டு போவது அது ஜன்னலில் மாட்டி வைத்திருப்பது,ஏன்மா ஸ்கூல்ல அடுத்தவர்கள் சாமான்களை எடுத்த என்ற போது மிக பெருமையாய் தான் எடுத்த ஒவ்வொரு பொருளாய் ஜன்னலுக்கு வெளியில் காண்பிப்பது..ராம் சூப்பர் ராம்..

ஆனந்த யாழை மீட்டுகிறாய்..என்ன ஒரு வாய்ஸ்
சூப்பர் லொகேஷன்ஸ்..ஒரு ஹார்ட் ஷேப் குட்டி குளம்(வயநாடு) மலைஜாதியினரை தேடி போகும் போது வருதே அந்த குளம் தான். ஆனந்த யாழ் பாடல் அச்சன் கோயிலாம். படத்தில் வரும் இடங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு.ராம் சூப்பர் ராம்.

முதலில் அந்த குழந்தை ஓவர் ஆக்ட் செய்யுற மாதிரி தோணுது.ஆனா போக போக இயல்பாக உள்ளது. ராம் அடிக்கடி அழுதிருக்க வேண்டாம். எவிட்டா மிஸ் வரும் காட்சிகளை இன்னும் நிறைய வைத்திருக்கலாம். அந்த மோசமான மிஸ்ஸிற்கு நிறைய காட்சிகள் அப்ப தான் அந்த குழந்தை ஏன் அந்த பள்ளியை வெறுக்கிறது என்று நாம் உணருவோம் என்று இருக்கும் போல.பத்து பதினைந்து வருடமாய் ஜெயித்து விடவேண்டும் என்று இந்த சினிமா உலகில் போராடி வரும் ராமிற்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.எனவே தான் காட்சி அமைப்புகள் சூப்பரா இருக்கு.கரெக்டா ராம்.

                                     குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.என்ன இந்த
             நாய் கேட்டு நம் குழந்தைகளும் நம்மை படுத்த சான்ஸ் உள்ளது. ஏன்னா என்னுடைய 20 வயசு குழந்தை ஒரு வருடமாக என்னை படுத்தி கொண்டிருக்கிறான் இந்த நாயை கேட்டு!!!!

Monday, September 02, 2013

சுட சுட பதிவர் சந்திப்பு


ஞாயிறு காலை பல்லாவரத்தில் கிரஹப்பிரவேசம் நடந்த வீட்டிற்கு போய் விட்டு அப்படியே பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதாக ப்ளான் செய்து இருந்தேன். அதன் படி கிரஹப்பிரவேச வீட்டிற்கு காலை 7.30 மணிக்கு போனால் அங்கு சாப்பாடு ஆர்டர் செய்த இடத்திலிருந்து சாப்பாடு வர மிக லேட்டானதால் அங்கேயே ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக வெயிட் செய்து சாப்பிட்டு வர வேண்டியதாகி விட்டது. அப்புறம் என் சின்ன மகன் ரிஷியை கெஞ்சி அவனே காரில் கொண்டு வந்து என்னை வடபழனியில் விட்டு சென்றான்.

நான் சென்ற போது பதிவர்கள் அறிமுகம் மேடையில் நடந்து கொண்டிருந்தது. உள்ளே நுழையும் போதே தெரிந்த முகங்கள் எதுவும் இல்லை. சரி இனிமேல் எல்லோரையும் தெரிந்து கொள்ளலாம் என்று தென்றல் சசிகலா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் என் பெயரையும் மேடையில் அழைத்தார்கள்.மேடையில் அமர்ந்து இருந்த கேபிள் சங்கரிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு மைக்கில் என் பெயர் மற்றும் என் வலைபதிவை பற்றி சொல்லிட்டு மேடையை விட்டு இறங்கினேன். இறங்கி வரும் போது மோகன் குமார் சார் வந்து பேசினார்.அப்படியே திண்டுக்கல் தனபாலனை பார்த்து என் கணவரின் ஊரும் திண்டுக்கல் தான் நீங்கல் திண்டுக்கல்லில் எங்கே இருக்கீங்க என்று கேட்டு விட்டு அப்படியே கோவைடூடில்லி ஆதி லெஷ்மியிடம் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அங்கேயே அமர்ந்தேன். அவரின் கணவர் வெங்கட் நாகராஜ் சாரிடமும் பேசினேன். பக்கத்தில் இருந்த திருமதி ரேவதி சதிஷ் நானும் திருநெல்வேலி தான் என்று பேசினார்.அவரின் கணவர் சதிஷ் பதிவர் என்றும் அறிமுகப்படுத்தினார்.

பதிவர் ராஜியிடமும் பேசினேன். அவரிடம் பேசி கொண்டு இருக்கும் போதே செமையா தண்ணீர் தாகம் தண்ணீர் குடிக்க போனால் சங்கவி அங்கே நின்று கொண்டிருந்தார். அவர் தண்ணீர்  பிடித்து கொடுக்க அதை குடித்து விட்டு அப்படியே ஆரூர் மூனா செந்திலிடம் , கடல் பயணங்கள் சுரேஷ் குமாரிடம் நானே போய் பேசி விட்டு வந்து அமர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் வால்பையன் அருண்,மற்றும் மயிலனிடம் பேசி கொண்டிருந்தேன். வேர்த்து வேர்த்து அங்கே அதிக வேலை பார்த்து கொண்டிருந்த மாதிரி டயர்ட் ஆகி விட்டது. நிஜமா வேலை பார்த்து கொண்டிருந்த குழுவினர் டரியலாகி இருப்பாங்க. அப்படி ஒரு வேர்வை எல்லோருக்கும். அப்படியே அவனில் உள்ளே இருப்பது போல் ஒரு நிலைமை.

சுரேகா அருமையாக தொகுத்து வழங்கினார்.
பாமரனின் பேச்சு நன்றாக இருந்தது. மயிலனின் கவிதை முழுவதும் கேட்கவில்லை. சவுண்ட் எக்கோ அடித்ததால் யாருடைய பேச்சையும் கோர்வையாக கேட்க முடியாமல் போயிற்று.

மதியம் சாப்பிட வெளியில் சென்றால் சென்னையில் நேற்று தான் அதிக பட்ச வெயிலோ என்னவோ. எப்படா உள்ளே வருவோம் என்ற நிலைமையில் சாப்பிட்டு விட்டு உள்ளே ஓடோடி வந்தோம்.

ரஞ்ஜனி அம்மா வந்து என்னருகில் அமர்ந்தார்கள். அரசனிடம் ஒரு சிறிய தொகையினை நான்,மயிலன்,ரஞ்ஜனி அம்மா கொடுத்தோம்.திருப்பூர் ஜோதிஜி வந்து அருகில் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசி சென்றார். ஜாக்கி சேகர்,மணிஜி,அகநாழிகை பொன்வாசுதேவன் இவர்களுடன் சிறிது நேரம் பேசிகொண்டு இருந்து விட்டு அரங்கை விட்டு வெளியே வந்து 100 அடி ரோடிற்கு வந்து பல்லாவரம் பஸ் பிடித்து வீட்டிற்கு வந்தேன்.

பெண் பதிவர்கள் 15லிருந்து 20 வரை வந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

இனிமேல் சென்னையில் டிசம்பர் டூ பிப்ரவரி பதிவர் சந்திப்பு வைக்கலாம் என்பது என்னுடைய யோசனை. அந்த மூன்று மாதங்கள் தான் இப்படி அனலாய் சென்னை கொதிக்காது. மழையும் இருக்காது. சென்னைவாசிகளான எங்களுக்கே அந்த உஷ்ணம் மிக பாதிப்பை கொடுத்தது, கண்கள் எல்லாம் எரிந்தது என்றால் கோவை, பெங்களூர்வாசிகள் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்கள்.

பதிவர்கள் வருடம் ஒரு முறை ஒரு நல்ல தொகையினை கொடுத்து ஐ.டிக்காரகள் நடத்தும் கெட்-டு-கெதர் மாதிரி ஈ.சி.ஆரில் ஏதாவது ஒரு ரிசார்ட்டில் ஏசி ஹாலில் நடத்தினால் வியர்வை மழையில் இருந்து எல்லோரும் தப்பிக்கலாம் இன்னும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். அங்கே ஒரு நாள் சாப்பாடிற்கும் ஆர்டர் கொடுத்து வெளியூர் பதிவர்களை தங்க வைக்கவும் ரூம்கள் எடுக்கலாம்.சென்னைவாசிகளுக்கு பதிவர் சந்திப்பு எங்கே நடந்தாலும் ஒன்று தான்.எப்படியும் அவர்வர் வீட்டிலிருந்து வரப்போகிறார்கள். கொஞ்சம் அலைந்தால் நல்ல டீலிற்கு நிறைய ரிசார்ட்க்காரர்கள் நம்மிடம் இருக்கும் தொகைக்கு உட்பட்டு ஒத்து வருவார்கள்.இது கட்டாயம் இல்லை. வியர்த்த வியர்வையில் நேற்று உதித்த யோசனை இது.



Wednesday, August 21, 2013

வெரைட்டி ஆகஸ்ட்- 2013

இந்தியன் பேங்க் டெபிட் கார்ட்+ 100 ரூபாய் எடுத்து கொண்டு தி.நகர் ஷாப்பிங் போனேன். முதல் மூன்று ஏ.டி.எம்மில் க்யூவில் இருந்த யாருக்குமே பணம் எடுக்க முடியவில்லை. சரி என்று அடுத்த ஏ.டி.எம் போனால் அங்கேயும் அதே கதை.இந்தியன் பேங்க் ஏ.டி.எம் போனதும் தான் தெரிந்தது பேங்கில் தான் ஏதோ ப்ராப்ளம் என்று. தி.நகர் போயிட்டு 10 ரூபாய்க்கு மூன்று கட்டு கொத்தமல்லியும்,20 ரூபாய்க்கு 2 கவர் பூவும் வாங்கிட்டு வீட்டிற்கு அசுர பசியோடு வந்தேன். எப்பவும் இந்த ஏ.டி.எம் கார்டை நம்பி நான் பணம் இல்லாமல் எங்கேயும் போகவே மாட்டேன். அன்னைக்கு என்ன ராசியோ.


மாம்பலம் ரயிலடியில் அடுத்து எடுத்து வைக்கும் அடியே சரவணாதான் என்று சமந்தா விளம்பரம் பார்க்கும்/கேட்டும் போதெல்லாம் எரிச்சலாய் வரும். எரிச்சல் சமந்தா மேல் அல்ல. அந்த கடைக்காரர் மேல். மார்க்கெட் பகுதியில் அந்த புதுக்கடைக்கு சைடாய் இருந்த 30 காய்,பழக்கடைகளை எடுக்க சொல்லி கட்டாய படுத்தி எடுத்தும் விட்டார்கள். கடைக்கு சைடாய் இருக்கும் கேட் வழியாக கடைக்கு சரக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று சொல்லி இந்த அநியாயம் நடந்து உள்ளது. 40 வருடங்களாய் கடை வைத்து இருந்தவர்கள் யாரிடம் முறையிட்டும் பயனின்றி புலம்பி கொண்டு இருக்கிறார்கள். அந்த மார்க்கெட் ரோடு யார் வீட்டு சொத்து என்று தெரியவில்லை.நான் மாம்பலம் போகும் போதெல்லாம் பட்டர் பீன்ஸ் வாங்கும் கடைக்காரம்மா எதிரில் இருக்கும் அவரின் மச்சினர் கடையின் வாசலிலேயே தன் கடையினை தொடங்கி விட்டார். நாசமாதான் போவாங்க என்று வாழ்த்தி கொண்டே வியாபாரம் பார்த்து கொண்டு இருந்தார்.


பஸ்ஸில் வரும் போது பல்லாவரம் பஸ்-ஸ்டாண்டில் எங்கள் பஸ்ஸில் இருந்து இறங்கியவர்களிடம் வெடு வெடு என இருவர் டிக்கெட் செக் செய்தனர். அப்போது பஸ்ஸில் ஒருவர் ஏறிவிட்டார். இறங்கியவர்களிடம் செக்கிங் முடிந்ததும் ஏற போனவர்களை யாரும் ஏறவேண்டாம் என்று கொஞ்சம் லேட்டாக சொல்லி விட்டு அவர் ஏறி படி அருகில் இருப்பர்களை செக்கிங் செய்ய பல்லாவரத்தில் ஏறியவர் இப்ப தான் ஏறினேன் என்று சொல்ல சொல்ல கேட்காமல் செமையாக திட்ட ஆரம்பித்தார்.அவர் ஏறியதை  நிறைய பேர் பார்த்தும் யாரும் அவருக்கு சப்போர்ட் செய்யவில்லை. நான் அவர் இங்கே ஏறியதை நான் பார்த்தேன் என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருந்தவர்களுக்கு டோஸும் விட்டேன்.அதன் பின் செக்கிங் ஆள் கீழே இறங்கினார். நம் மக்கள் ஏனோ நியாயம் பேச கூட ரொம்ப தான் யோசிக்கிறார்கள்.

கடந்த 5 வருடங்களாக எனக்கு ஒரு பழக்கம். மெயில் பாஸ்வேர்ட்களை நான் என் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்று ஆசை படுகிறேனோ (நியாயமான ஆசை) அதையே வைத்து விடுவேன். நல்லதை நினைத்தால் அது நடக்கும் என்பார் என் அம்மா.

எனவே நல்லதை  நினைத்து கொண்டே டைப்பினாலும் நல்லதே நடக்கும் இல்லையா. ஒரு அக்கவுண்டிற்கு பாஸ்வேர்ட் காசி என்று வைத்தேன். கடந்த 5 வருடங்களில் 4 முறை காசி போயிட்டு வந்தாச்சு. இன்னொரு அக்கவுண்டிற்கு Own House என்பதே பாஸ்வேர்ட். கடந்த 3 வருடங்களாக வைத்து இருந்தேன். போன வருடம் புது வீடு கட்டி விட்டேன். அப்புறம் எப்பூடி?

Thursday, August 08, 2013

ஜார்ஜ் போட்ட சொக்கா (?)

பிரிட்டனில் போன மாதம் 22-ல் பிரின்ஸ் வில்லியம் - கேட் மிடில்டனுக்கு ஆண் குழந்தை பிறந்துச்சுல்ல.அதான் டயானாவோட பேரன். அந்த குழந்தை ஜார்ஜ் பிறந்த மறுநாள் ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியில் கொண்டு வந்த போது கேட் போட்டு இருந்த புளூ கலர் ட்ரஸ்ஸும்,குட்டிக்கு போர்த்தி கொண்டு வந்த வெள்ளை மஸ்லின் துணியும் உலக மக்களின் விருப்பமாகி விட்டது. அந்த வெள்ளி மஸ்லின் துணி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அந்த குழந்தையின் ஃபோட்டோ வெளியான 4 மணிநேரத்தில் அந்த துணி தயாரித்த கம்பெனியின் வெப்சைட் திண்டாடி விட்டதாம்.அடுத்த நாளும் தொடர்ந்து மக்கள் அந்த வெப்சைட்டில் ஆர்டர் கொடுத்த வண்ணம் இருந்தனராம். மொத்தம் 7000 பேர் அதே வகை துணியினை ஆர்டர் கொடுத்தார்களாம்.



ஆனால் கேட் அணிந்திருந்த இந்த உடை அவருக்காக மட்டும் தயாரானது என்று ஆர்டர் எதுவும் அந்த கம்பெனி எடுத்து கொள்ளவில்லை.(பிழைக்க தெரியாத புள்ளையோ).


இந்த இங்கிலாந்து ராஜவம்சத்தினர் எப்பவும் ட்ரெண்ட்-செட்டர்களாக தான் இருக்காங்க.ஜார்ஜ் இந்த இண்டர்நெட் யுகத்தில் பிறந்து இருப்பதால் 4 மணிநேரத்தில் அந்த துணிக்கு இவ்ளோ டிமேண்ட் ஆகி போச்சு.இந்த குட்டி வளர வளர எத்தனை கம்பெனி சம்பாதிக்க போகுதோ. ஜார்ஜ் போட்ட சொக்கா,டவுசர்,விளையாடிய குட்டி கார்,யூஸ் செய்ய போகும் பை அது இதுன்னு என்னென்ன மக்களுக்கு பைத்தியம் பிடிக்க போகுதோ.


Thursday, August 01, 2013

சென்னையில் பூரி ஜெகனாதர்

 நான்  நகுலிடம் நாளைக்கு காலை சீக்கிரமாய் எழுந்து ஈ.சி.ஆரில் இருக்கும் கோயில்களில் இரண்டு கோயில்கள் போய் வந்திடலாம் என்று சொல்லிட்டு படுத்தேன். காலையில் 6 மணியிலிருந்து 8 மணி வரை இங்கே செம மழை. ஆஹா வேண்டாம் மாட்டேன் என்று எல்லாம் சொல்லாமல் நகுல் கோயிலுக்கு உடனே சரி என்று சொன்னதால் தான் இந்த மழை என்று எங்க ப்ளானை மாலைக்கு ஒத்தி போட்டோம். எங்க வீட்டிலிருந்து 40 ஆவது நிமிஷத்தில ஜெகன்னாதர் கோயிலில் இருந்தோம். ஈ.சி.ஆர் டோல் கேட் தாண்டி மாயாஜாலிற்கு முன்னாடியே கானாத்தூர் என்ற ஊரில் லெஃப்டில் திரும்பி (மீன் மார்கெட்)நேராக போய் கடைசி ரைட்டில் திரும்பினால் அந்த ரோடின் கடைசியில் இந்த கோயில். மிக அமைதி.நோ கூட்டம். மாலை வெயில் இல்லாமல் அருமையான க்ளைமேட். 
புல்வெளி அருமையாக இருக்கிறது. சுற்று புறம் சின்ன இடமாக உள்ளது. பூரி கோயில் மிக பெரியது. அப்படியே பூரியில் உள்ளதை போல சிலை நடுவில் சுபத்ரா,பலராமன்,கிருஷ்ணர் என அம்சமாய் இருந்தனர்.



அப்புறம் அப்படியே வரும் போது அக்கரை இஸ்கான் கோயிலிற்கு போய் வந்தோம். இந்த கோயில் சோழிங்க நல்லூரிலிருந்து ஈ.சி.ஆர் ஜாயின் ஆனதும் லெஃப்டில் திரும்பி நேரா போய் கொண்டே இருந்தால் ஒரிரு கிலோமீட்டரில் லெஃப்டில் அக்கோயில் ஆர்ச் இருக்கும் இடத்தில் திரும்பி அவர்கள் வழி முழுக்க வைத்திருக்கும் தகவல் பலகையினை பார்த்து கொண்டே போக வேண்டியது தான். இங்கே கூட்டம் இருந்தது. முதல் கோயிலில் கிடைக்காத பூரி இங்கே கிடைத்தது. வெளியில் பூரி,சமோசா,கேசரி, சுண்டல் என்று விற்று கொண்டு இருந்தார்கள். சனி,ஞாயிறில் கூட்டம் அதிகம் வருமாம்.

Thursday, July 18, 2013

டிசைனர் குழந்தை

டெஸ்ட் டியூப் குழந்தைகள் ஒரு தம்பதிக்கு முதல் டெஸ்டிலேயே  கிடைத்து விடுவது இல்லை. சில சமயம் 5 முதல் 6 முறை முயற்சி செய்தே கிடைக்கிறது. உடலும் மனமும் வெறுத்து போய் கைகாசு எல்லாம் கரைந்து போய் விடுகிறது. அதற்கெல்லாம் ஒரு முடிவு வந்துள்ளது.

டெஸ்ட் டியூபில் உண்டாக்கப்படும் கருக்களை Genetic Engineering மூலம் ஆராய்ந்து நல்ல கருவினை மட்டும் பெண்ணின் கருப்பையில் வைக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. முதல்  குழந்தை இந்த வருடம் மேயில் அமெரிக்காவில் பிறந்து இருக்கிறது.
                                                   
                                                      முதல் டிசைனர் குழந்தை Connor Levy

இது தேவையில்லாத வேலை அது இது என்று புலம்பினாலும் குழந்தை இல்லாத ஏற்கனவே டெஸ்ட் டியூப் செய்தும் குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிக்கு இந்த முறை ஒரு வரப்பிரசாதமே.

80%  டெஸ்ட் டியூப் கருக்கள் பெண்ணின் கருப்பையில் வைத்த பிறகு குழந்தையாக மாறாமல் அழிந்தே விடுகின்றன. எனவே குரோமோசோம் அப்நார்மலாக இருக்கும் கருக்களை Genetic testing மூலம் கண்டறிந்து அதை விட்டு விட்டு நல்ல கருவினை மட்டும் கருப்பையில் வைப்பதால் அது குழந்தையாக வளரும் வாய்ப்பு அதிகம்.

தாயின் 40 வயதிற்கு மேலே பிறக்கும் குழந்தைகள்  Down's SyndromeTurner Syndrome நோய்களுடன் பிறக்க அதிக சான்ஸ் உள்ளது. குழந்தை இல்லாதவர்கள் இந்த வயதில் தான் டெஸ்-டியூப் குழந்தைக்கு ட்ரை செய்கிறார்கள். எனவே, இந்த நோய் இல்லாத குழந்தைகளை இந்த புதிய முறை மூலம் பெற்று கொள்ள முடியும்.

அது மட்டும் இல்லாமல் டெஸ்ட் செய்ய பட்டதில் நல்லதாக உள்ள ஒரே ஒரு  கருவை மட்டும் வைப்பதால்  டெஸ்ட்-டியூப் மூலம் இரண்டு,மூன்று, நான்கு குழந்தைகளை வயதான காலத்தில் பெற்று அவஸ்தை படவும் தேவையில்லை.


டெஸ்ட்-டியூப் முறையை நம்பி வரும் அனைத்து தம்பதிக்கும் குழந்தை கிடைக்க இந்த முறையில் அதிக சான்ஸ் உள்ளது.
எந்த வயதில் உள்ள தம்பதிகளுக்கு இந்த முறை ஏற்றது என்பது அதிக அளவில் இந்த முறையை பயன்படுத்தும் போது தான் தெரிய வருமாம்.

ராமாயணத்தில் ராமர் அவர் சகோதரர்களும் டிசைனர் பேபிகள் தானே. மகாபாரதத்தில் கர்ணன் ஒரு டிசைனர் பேபி தான்.

 நல்ல குண நலத்துடன் இருக்கும் டிசைனர் விந்துக்களை மக்கள் தேடுவார்களா, நல்ல கலர்,நல்ல கண்கள்,நல்ல உயரம் என்று தேடுவார்களா இரண்டும் கலந்து இருந்தாலும் நல்லது தானே.

ஆனால் சில  குறிப்பிட்ட டோனர்களே அதிகம் டொனேட்  செய்யும் நிலையும் வரும்.  ஏற்கனவே அமெரிக்காவில் ஒரு டோனர் 150 குழந்தைகளுக்கு தகப்பன் என்று படித்தது தான் நினைவிற்கு வருகிறது.

விந்து டோனர்கள் ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர்களாக வேண்டும் என்று இந்தியாவில் ஏற்கனவே விளம்பரம் வந்துள்ளதாம். எல்லா புது கண்டுபிடிப்பிற்கும் நல்லது கெட்டது என்று இரண்டு பக்கம் இருக்க தானே செய்யும்.

ஒரு Designer Sari எடுக்கவே கடை கடையாக ஏறி இறங்கும் அம்மணிகள் கிடைத்தது சான்ஸ் என்று ஏகத்தும் அலட்டுவார்களே ராமா எல்லோரையும் நீ தான் காப்பாத்தனும்.

Thursday, July 11, 2013

இந்த விதியை எப்படி மதியால் வெல்வது?

கெளசல்யா அம்மாவிற்கு மூன்று மகன்கள் ஒரு மகள்.மூத்தவன் ராமகிருஷ்ணன்,பரத்,ராகவன்.ராகவன் 6 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.மாலை டியூஷன் செல்ல பையை எடுத்து தோளில் மாட்டியவன் முதுகில் ஏதோ கடிக்கிறது வலி என்று சொல்லி கொண்டே பொத்தெனெ கீழே விழவும் பையை எடுத்து உதறினால் அதில் ஒரு கருந்தேள் இருந்ததாம்.முதுகில் தேள் கொட்டியதால் அடுத்த 10 நிமிடத்தில் இறந்து விட்டான்.

அடுத்த 5 வருடங்களில் பரத்திற்கு(2ஆவது மகன்) முகம்,கை காலெல்லாம் வீக்கம் வரவும் டாக்டர் போய் பார்த்தால் பரத்திற்கு கிட்னி ஃபெயிலியர் என்று சொல்லி விட்டார்கள். பரத்தின் அப்பாவே ஒரு கிட்னி கொடுத்து அதன் பிறகு 4 வருடங்கள் உயிருடன் இருந்தான். திடீரென்று ஒரு நாள் அவனும் இறந்து விட்டான்.

மூத்தவன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்காக தன் படிப்பை பாலிடெக்னிக்கோடு நிறுத்தி விட்டு சிங்கப்பூரில் அப்போது கிடைத்த சம்பளத்தில் தன் பெற்றோரையும் தங்கையையும் காப்பாற்றி தன் தங்கைக்கு மிக நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தன்னை காதலித்த அத்தை பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன் சொந்த ஊரிலேயே குடித்தனம் ஆரம்பித்தான்.

இப்போ விதி திரும்பவும் தன் கோர முகத்தை காண்பித்தது. திடீரென்று வயிற்றில் தாள முடியாத வலி வரவும் லோக்கலில் டாக்டரிடம் காண்பிக்க அவர் சென்னை ஸ்பெஷலிஸ்ட்டிடம் அனுப்பி வைத்தார். சென்னை வந்து ஒரே வாரம் குடல் கேன்சர் முற்றியதாய் சொல்லி ட்ரீட்மெண்ட்டில் இருந்த போதே தன் 33 ஆவது வயதில் தன் மனைவி,2 வயது பெண் குழந்தையையும் விட்டுட்டு இறந்து விட்டான்.

 ராமகிருஷ்ணன் என் கடைசி மாமாவின்  க்ளோஸ் ஃப்ரெண்ட். எங்கள் வீட்டிற்கு வந்து எங்கள் வீட்டு குழந்தைகளை அப்படி கொஞ்சி போவான். அவனுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். நாங்கள் குடும்பத்துடன் போகும் அனைத்து டூர்களுக்கும் எங்களுடன் வருவான். எங்கள் குடும்பத்தில் ஒருத்தனாகவே இருந்தான்.

மூன்று மகன்கள் பெத்து அந்த மூவரும் இப்படி இறந்துவிட யார் தேற்றுவது அந்த பெற்றோரை. அவனின் பெற்றோர் கிராமத்தில் செட்டில் ஆனதாய் கேள்வி பட்டேன். இந்த குடும்பத்தை மீட் செய்து 10 வருடங்கள் ஆயிற்று.ஊருக்கு போகும் போது விசாரித்து கொள்வேன். நேரில் அவர்களையும், அவன் மனைவியையும்(அவள் பெற்றோர் வீட்டில்) போய் பார்க்கும் மன நிலை இல்லை. அவர்கள் மறந்து கொண்டிருக்கும் நினைவுகளை நான் போய் கிளறி விட கூடாது என்பதால் போய் பார்க்க மிக ஆசைப்பட்டாலும் போறதேயில்லை.


இந்த விதியை மதியால் வெல்ல முடியுமா என்ன?????????




Tuesday, July 02, 2013

Faber --- வேஸ்ட் of money

வீடு கட்டும் போது அவசர அவசரமா Built-In-Hob வாங்கி அதை கிச்சன் மேடை போடும் போதே மேடையில் புதைக்க வேண்டுமே என்று ஒரு நாள் கொட்டும் மழையில் தி.நகர் போய் வாங்கி வந்து மேடையில் க்ரானைட்டினை கட் செய்து வைத்தோம். இப்ப அந்த ஸ்டவ்வையே புதைத்து விடலாமா என்று யோசித்து கொண்டு இருக்கேன்.

பார்க்க பார்க்க அழகாய் இருந்துச்சு.இப்ப பார்க்க பார்க்க அழுகையா இருக்கு.

வாரம் ஒரு முறை உளுந்து வடை,பசங்களுக்கு வாரம் இரண்டு முறை பூரி செய்து கொண்டிருந்த நான் இப்ப இது இரண்டையும் செய்யவே மறந்துட்டேன். ஏன்னா எண்ணெய் கொதிக்கவே கொதிக்காது. நான் தான் குதித்து கொண்டு இருப்பேன். இரண்டு பூரி சுட அவ்ளோ நேரம் ஆகும்.தேய்த்து நேரம் ஆவதால் பூரியும் எண்ணெய் குடிச்சுடும்.

சர்வீஸிற்கு வரும் பையன் சும்மா கழட்டி துடைத்து திரும்ப மாற்றி தருவான். அதை இப்ப நானே செய்து கொள்கிறேன்.

வாங்கி இன்னும் இரண்டு வருடம் கூட முடியவில்லை என்பதாலும்,கிரானைட் கட் செய்த இடத்தினை திரும்ப மூடி அந்த இடத்தில் சாதாரண ஸ்டவ் வைக்கணுமே என்றும் இது நாள் வரையில் இந்த Faber-டன் மல்லுக்கட்டி கொண்டு இருக்கேன். மூன்று பர்னரையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தவே முடியாது. ஒன்னுல செய்தாலே விளங்காது.

சமையல் வேலை முடிக்கவே முன்பை விட ஒரு மணிநேரம் அதிகம் ஆகிறது.

இப்ப தோசை சுட கூட முடியலை.நிலைமை ரொம்ப மோசம் ஆனதால் தூக்கி அவுங்க முகத்தில் எறிந்துட்டு (குப்பை தொட்டி) புதுசா ஒரு கேஸ் ஸ்டவ் வாங்கிவிட முடிவு செய்துட்டேன்.
                                 Faber Gas Hob (Model: GB 30 MT,Black Glass) Price:Rs. 9491


பாருங்க பார்க்க எவ்ளோ அழகா இருக்கு.

ஆனா,அனலே பத்தாது.எதுக்கு தான் இதை வாங்கினேனோ என்று தெரியாமல் ஞேன்னு முழிச்சுட்டு இருக்கேன்.தூக்கி போடு தூக்கி போடு என்று கணவரும் பசங்களும் சொல்லி சொல்லி அலுத்து போனார்கள்.இப்ப தூக்கி போட ஒத்து கொண்டதும் அடுத்து என்ன வாங்குவது என ஒரே குழப்பம்ஸ்.

ஒழுங்கு மரியாதையா இந்தியன் மேட்,சமைக்கிற லட்சணத்திற்கு இரண்டு பர்னர் இருக்கிறதா வாங்கினா போதும் என்று முடிவிற்கு வந்தாச்சு. வந்து படிச்சதுக்கு நல்லதா ஒரு ஸ்டவ் சொல்லிட்டு போங்க.இனிமேயாவது வடை,பூரி சுடணும்.

Thursday, June 20, 2013

ஸ்ரீலங்கா

சின்னவன் ரிஷி டிகிரி முடித்து மே மாதம் வேலை தேடி தேடி களைத்து போய் எங்காச்சும் வெளிநாட்டிற்கு ஒரு டூர் போகணும் வேலைக்கு போய்ட்டா எனக்கு ரொம்ப லீவெல்லாம் கிடைக்காது என்று என்னை நொய் நொய் என்றான். சரி பையன் எங்காச்சும் போய் வந்தால் அப்புறமா தீயாய் வேலை செய்வானே என்றால் பட்ஜெட் செம டைட். எனவே இருக்கும் பட்ஜெட்டில் எங்கே செல்லலாம் என்று யோசித்து சிலோன் போலாம் என்று முடிவு செய்தோம்.

கண்டி-மாத்தளை-ரத்தோட்டா மலை மேல் இருக்கும் ஃப்ரெண்டின் டீ எஸ்டேட்டில் இந்த வீட்டில் 6 நாட்கள்
கனடாவில் இருக்கும் லோகா அம்மாவின் கொழும்பு-வெள்ளவத்தை இந்த வீட்டில் 5 நாட்கள்
 டேரா போடலாம் என்று முடிவு செய்து இரண்டு பேரும் ஜூன் 3-ல் விடு ஜூட். 

எவ்வளவு பிரச்சனைகள் போர்,சுனாமி என்று ஆனா எங்கு போனாலும் ஒரு பிட் பேப்பர். குப்பை என்று கண்ணில் படவே இல்லை. இந்த விஷயத்தில் நிஜமாகவே பொறாமையாக இருந்துச்சு. பளிச் ரோடுகள்.



மட்டகளப்பு பீச்சில் கடலில் அலையே இல்லாமல் இப்படி ஒரு அமைதி.குளிக்க சூப்பரான இடம். 


பொலனருவாவில் பழைய நகரத்தை வெளிநாட்டவரிடம் அதிகமான நுழைவு சீட்டிற்கு பணம் வாங்குவதால் அழகாய் பராமரிக்கிறார்கள் போல்.



பண்டாரவெளையில் ரோட்டின் நடுவில் பெரிய ரோஜாக்கள் பூத்து குலுங்குகின்றன.மாடுகளோ, மனிதர்களோ அதை டிஸ்டர்ப் செய்றது இல்லை. 

சீதையை ராவணன் வைத்திருந்த இடம் ராவணஎல்லை

நுவரேலியா போறப்ப சூப்பரா வானம் தூவனமாய் எங்களை வா வா என்று இப்படி வரவேற்றது.

பொட்டானிக்கல் கார்டன் ஒரு மலை அடிவாரத்தில் 

பண்டாரவளையிலிருந்து நுவரேலியா போற வர வழி எல்லாம் இப்படி

கொழும்பு வெள்ளவத்தையில் தங்கி இருந்த வீட்டிற்கு பக்கத்தில் ரயில்வே ஸ்டேஷன்,ரயில்வே லைனுக்கு பக்கத்தில் கடல்

டீ ஏஸ்டேட்டில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு பின்னால் அவர்கள் இடத்திலேயே குட்டியாய் ஒரு அருவி
                          அருவியை தாண்டி இன்னும் போனால் இந்த இடம்

பிடிவாதம் செய்து என்னை கூட்டி போன ரிஷிக்கு தான் நன்றி சொல்லணும்.இங்கேயிருக்கும் படங்கள் எல்லாம் அவன் எடுத்தது. மிக விரைவில் அடுத்தும் போகணும் என்று முடிவோடு திரும்பினேன்.




Thursday, April 11, 2013

அம்மாவும், மூன்று லட்சமும், பின்னே நாங்களும் ----- 2

முதலில் என்ன நடந்துச்சுன்னா


சரின்னு ரிஷப்ஷனில் 20 ஆயிரம் கட்டினதும் ஐசியுவிற்கு உடனே அம்மாவை மாற்றினார்கள் அனெஸ்தட்டிஸ்டும்,சர்ஜனும் வந்து பார்த்துட்டு நாளை (மார்ச் 5) காலையிலேயே சர்ஜரி செய்து விடலாம் காலை 6.30க்கு சர்ஜரி என்று என்னிடம் சொல்லிவிட்டு போனார்கள்.ஓகே என்று என் கணவர்,தங்கையிடம் ஃபோனில் விஷயத்தை சொல்லி விட்டு ஐசியு வாசலில் காத்திருந்த போது ரிஷப்ஷனில் என் பெயரை ஏலம் விட்டு கொண்டு இருந்தார்கள்.

நான் தான் அமுதா அமுதா என்று அங்கு ஓடி போய் என்ன என்று கேட்ட போது நாளை காலை ஆபரேஷனுக்கு உடனடியாக 1.75 லட்சம் இப்போதே கட்டுங்கள் என்று சொன்னார்கள்.அவர்கள் சொன்ன போது இரவு 7.30 மணி.அந்நேரத்திற்கு அவ்வளவு பணத்திற்கு என்ன செய்றது உடனே சர்ஜனுக்கு திரும்ப கிச்சு கிச்சு தாம்பாளம்,,கீயா கீயா தாம்பாளம்.

சார் என்னது இப்ப நான் அவ்வளோ பணத்திற்கு எங்கே போவேன் காலை 10 மணிக்கு மேல் தான் பணம் கட்ட முடியும் என்று சொன்னதும் அவர் நோப்ராபளம்...நீங்க காலையிலேயே கட்டுங்கோ,,நான் ரிஷப்ஷனில் பேசி விடுகிறேன் என்று சொன்னார்.


சிறிது நேரத்தில் ரிஷப்ஷனில் திரும்ப என் பெயரை ஏலம் விடவும் என்னவென்று ஓடினால் காலை 10 மணிக்கு தான் சர்ஜரி நீங்க பணம் சீக்கிரம் கட்டி விடுங்க என்று சொன்னார்கள்.அட ராமா கையில காசு வாயில தோசை போல என்று சரியென்று கணவர், தங்கை, தம்பி ஹாஸ்பிட்டலுக்கு வந்ததும் வீட்டிற்கு இரவு 10 மணிக்கு வந்து விட்டோம்.


காலை 10 மணிக்கு பேங்கிற்கு போய் நகை அடகு வைத்து எடுத்து கொண்டு போறதுக்குள்ளே இன்னும் சர்ஜரிக்கு லேட் ஆக்குவார்கள் என்று இருக்கும் கிரடிட் கார்டு, டெபிட் கார்ட் கலெக்ட் செய்து தம்பி அவன் ஃப்ரெண்ட்களிடமும் பணம் வாங்கி கொண்டு காலை 9 மணிக்கு ரிஷப்ஷனில் பணம் கட்டிவிட்டான். பணம் கட்டும் முன்பாக எனக்கு ஃபோன் செய்து நீ மெதுவா பேங்க்கிற்கு போ நான் பணம் கட்ட போகிறேன் என்றான். சரியென்று நான் சொன்ன அடுத்த 10ஆவது நிமிடம் ஹாஸ்பிட்டலில் இருந்து எனக்கு ஃபோன் அம்மாவை தியேட்டருக்கு அழைத்து செல்கிறோம் பார்க்க வேண்டியவர்கள் வந்து பார்த்த்கோங்க என்று. என் ஃபோன் நம்பர் தான் ஹாஸ்பிட்டலில் கொடுத்து இருந்தேன். சரி 10 நிமிஷத்துல அட்டண்டர்ஸ் வருவாங்கன்னு சொல்லிட்டு என் தம்பி, தங்கைக்கு(இருவரும் ரிஷப்ஷனில் பணம் கட்டி விட்டு பில்லிற்கு காத்து இருந்தாங்க) ஃபோன் செய்தேன். உடனே மூணாவது மாடியில் இருக்கும் தியேட்டருக்கு ஓடுங்க அம்மா தியேட்டர் வாசலில் உங்களை பார்க்க காத்து இருக்காங்க என்றதும் பில் வந்து வாங்கிக்கிறோம் என்று இரண்டும் ஓடி இருக்காங்க. என்ன ஒரு பெர்பெக்‌ஷன்.. பணம் கட்டிய அடுத்த 8 நிமிடத்தில் அம்மா தியேட்டர் வாசலில்.

காலை 10 மணிக்கு ப்ளட் கொடுக்க வேண்டும் என்று நான், என் தங்கை, தம்பி, மகன் ரிஷி ப்ளட் பேங்கிற்கு போனோம். பெரிய மகனுக்கு காய்ச்சல் என்பதால் அவன் வரலை. என்னுடைய என் தங்கையுடைய ப்ளட் செக் செய்துட்டு ரிஜக்ட் செய்துட்டாங்க.(ஹீமோகுளோபின் கம்மியாம்) என் தம்பி மதுவும், ரிஷியும் ஓகே என்றார்கள். ரிஷி சின்னப்பையனா இருக்கானே என்றார்கள் இல்லை காலேஜ் ஃபைனல் இயர் சார் படிக்கிறார் என்றதும் வெயிட் பார்த்துட்டு ப்ளட் எடுக்க ரெடி செய்துட்டு எங்களை வெளியில் வெயிட் செய்ய சொன்னர்கள்.

ரிஷி வெற்றிகரமா ப்ளட் கொடுத்துட்டு ஜூஸெல்லாம் குடிச்சுட்டு காலேஜ் போறேன் என்று கிளம்பும் போது திடீரென்று என் தம்பி ப்ளட் கொடுத்து கொண்டு இருந்த ரூமிற்க்குள் 4 பேர் அவசர அவசரமாய் ஓடி போய் என் தம்பியை சுற்றி நின்று கொண்டார்கள் அனைவர் முகத்திலும் பதட்டம். என்னவென்று கேட்டதில் ப்ளட் கொடுத்து கொண்டிருந்த மது வேர்த்து லோ பிபி ஆகி மயக்கமாகி விட்டான். கொஞ்ச நேரத்தில் பயப்பட தேவையில்லை என்று சிரித்துக் கொண்டே வந்து சொன்னார்கள். சார் இரண்டு ஜூஸ் குடித்து, பிஸ்கெட் சாப்பிட்டு கொண்டே வெளியில் வந்தான். நாங்க எல்லாம் செம கிண்டல் அவனை. மதுவோ என் மகனிடம் மாப்ள உனக்கு ஒரு கையில் தானே ரத்தம் எடுத்தார்கள் எனக்கு இரண்டு கையிலும் ஒரே நேரத்துல எடுத்தார்கள் அதான் கொஞ்சம் கிர்ராகி போச்சு மாமாக்கு என்று சமாளித்தான்.

சரி சரி ஒத்துக்குறோம் நீ வீரன் தான் என்று சொல்லிட்டு மேல ரிஷப்ஷனுக்கு வந்தோம்.

காத்திருந்து காத்திருந்து மாலை 4.45 க்கு அம்மா பெயரை சொல்லி மைக்கில் ரிஷப்ஷனில் ஒருத்தர் மட்டும் ஐசியுவிற்கு வரலாம் என்று அழைக்கவும் இங்கி பிங்கி பாங்கி போட்டு நான் போனேன். எனக்கு வேற்று கிரகவாசி போல் ஒரு கோட்,ஒரு குல்லா, பிஞ்சுபோன ரப்பர் செருப்பு போட்டுட்டு உள்ளே போக சொன்னார்கள்.

போனா என் அம்மாவா மாதிரி தெரியுது ஆமாம் அம்மாவே தான் என்று பக்கத்தில் போனால் கன்னாபின்னாவென்று ட்யூப் மாயம்.இன்னும் 6 மணிநேரம் கழித்து தான் முழிப்பார்கள் இப்போ எல்லாம் மானிட்டர் செய்துட்டு இருக்கோம் எல்லாம் நார்மல் என்று கூறினார்கள். ஏதோ மிஷினில் கனெக்ட் செய்து வைத்திருந்தார்கள்.63...63... 63... நைசா அடுத்த பெட்களை பார்த்தேன்...சிலருக்கு 62, 65, 70 என்று  காண்பித்தது. சரி ஹார்ட் பீட்டாக இருக்கும் என்று நினைத்து கொண்டேன்.

சர்ஜன் கூப்பிடும் வரை காத்திருங்கள் என்றார்கள்.டாக்டர் சர்ஜரி சக்சஸ், 4 கிராஃப்ட் அம்மாக்கு செய்தாச்சு ஷி இஸ் ஆல்ரைட் என்று சந்தோஷமாய் சொல்லிட்டு போனார்.

மறுநாள் காலை 7 மணிக்கு தங்கை போய் பார்த்து வந்தாள். அம்மா முழித்து இருக்கிறார்கள் ரொம்ப டயர்டாக இருப்பதாய் சொன்னாள்.மூன்றாவது நாள் ரூமிற்கு மாற்றினார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் காயங்கள் ஆறியதும் 9 ஆம் நாள் டிஸ்சார்ஜ் செய்தார்கள்.எக்ஸ்ட்ரா  மெடிக்கல் பில் சேர்த்து மொத்தமாக 2,45,000 கட்டினோம்.

தினம் மூன்று வேளை இன்சுலின்,இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுகர் செக்கிங் என்று அம்மாவை குத்தி கொண்டு இருக்கிறேன். காலில் வெயின் எடுத்து ஹார்ட்டில் பைபாஸ் செய்து உள்ளார்கள்.வீட்டிற்கு வந்ததும் காலில் தையல் போட்ட இடத்தில் கொஞ்சம் வீக்கமும் கொஞ்சமாக நீரும் வந்து கொண்டு இருந்தது. டயபட்டாலஜிஸ்ட்டிற்கு ஃபோன் செய்து கேட்டதும் நீங்க அம்மாவை இங்கே கூப்பிட்டு வாங்க என்றார். இது சரி படாது என்று கிச்சு கிச்சு தாம்பாளம் என்று சர்ஜனை கூப்பிட்டு இப்படி அம்மாக்கு காலில் புண்ணாகிறது FUCID-ன்னு என்கிட்ட ஒரு ஆயிண்ட்மெண்ட் இருக்கு அதை அப்ளை செய்யவா என்று கேட்டதும் அவர் ஓகே குட் அந்த ஆயிண்மெண்டே போடுங்கள் பயப்பட வேண்டாம். இரண்டு நாளில் காய்ந்திடும்..இல்லைன்னா ஹாஸ்பிட்டல் வாங்களேன் என்றார். அதை அப்ளை செய்த இரண்டு நாளில் புண் சுத்தமாய் ஆறிடுச்சு.


மார்ச் 5-ல் சர்ஜரி செய்த அம்மா இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் ரெக்கவர் ஆகி பழைய AMMA-வாகி கொண்டே இருக்கிறார்கள்.  6 மணிநேரம் சர்ஜரி செய்த டாக்டர்களுக்கும் டென்ஷன் தான்.இல்லை என்று சொல்லவில்லை உடனே பணம் கட்டுங்க என்று சொல்லி படுத்தி வைத்ததில் ஹாஸ்பிட்டல் மேல் முதலில் கோபமாய் வந்தது. சந்தேகமாய் வந்தது. ஆனால், பணம் கொடுக்காமல் சிலர் படுத்தி வைப்பதாலும் சர்ஜரியில் இறந்து விட்டால் பணம் கொடுக்க பெரிய தகராறு செய்வதாயும் கேள்வி பட்ட போதும், அம்மாவின் இன்றைய நிலையினை பார்க்கும் போதும்  ஹாஸ்பிட்டல் மேல் இருந்த கோபம் காணாமல் போனது.

நிறைய சொத்து இருந்தும் நீ பாரு நான் பாரு என்று பெற்றோரை பார்த்து கொள்ள போட்டி போடும் இந்த உலகில் நான் நீ என்று நாங்கள் நால்வரும் எங்க அம்மாக்கு செய்ததில் சந்தோஷப்படுகிறோம்.


Wednesday, April 10, 2013

அம்மாவும்,மூன்று லட்சமும்,பின்னே நாங்களும்.........1

அம்மாவிற்கு செப்டம்பரில் ஒரு அட்டாக் வந்து ஆஞ்சியோ ப்ளாஸ்டி செய்து ஸ்டெண்ட் வைத்தார்கள்.இந்த மார்ச் 3-ல் திரும்ப ஒரு அட்டாக். இந்த முறை ரொம்ப வலியில்லை.  ஓடு ஓடுன்னு ரெகுலர் செக்கப் போகும் ஹாஸ்பிட்டலுக்கு போனா இசிஜி பார்த்து உடனே ஆஞ்சியோக்ராம் செய்ய சொல்லி அந்த ரிசல்ட் வந்ததும் பைபாஸ் சர்ஜரி செய்யணும் உடனே பெரிய ஹாஸ்பிட்டல் மூவ் ஆகணும் என்றதும் பைபாஸ் சர்ஜரிக்கு எவ்ளோ செலவு ஆகும் என்று கேட்க 1,60,000 ஆகும் என்று ஆஞ்சியோ செய்த டாக்டர் சொன்னார். உடனே, ஆம்புலன்சில் அம்மாவை காமாட்சி ஹாஸ்பிட்டலுக்கு ஷிஃப்ட் செய்தேன்.

சனி இரவு போய் திங்கள் மாலை அந்த ஹாஸ்பிட்டலுக்கு 36 ஆயிரம் கட்டி விட்டு காமாட்சிக்கு ஆம்புலன்சில் வந்தோம்.

இங்கே ஒரு முக்கிய தகவல்..சென்னையில் நான் பயணம் போகாதா வண்டி ஆம்புலன்ஸ் தான். அதிலும் பயணம் செய்தாச்சு!!!!

மார்ச் 4 ஆம் தேதி மாலை 5.30 க்கு காமாட்சி ஹாஸ்பிட்டலில் எமர்ஜென்சி வார்டில் அம்மாவை படுக்க வைச்சாச்சு. அங்கிருந்த டாக்டரிடம் சர்ஜனை மீட் செய்யணும் அவர் தான் இப்ப இங்க வரச் சொன்னார் என்று சொன்னதும், அவர் வருவார் நீங்க ரிஷப்ஷனில் கூப்பிடுறாங்க போய் பணம் கட்டிட்டு வாங்க என்றதும் போனேன். அங்கே உடனே 20 ஆயிரம் கட்டினால் தான் ஐசியுவில் அட்மிட் செய்ய முடியும் என்றார்கள்.சரி சர்ஜரிக்கு எவ்வளவு என்றதும் 3 பேக்கேஜ் இருக்கு 1,45,000 ன்னா ஜெனரல் வார்டு,1,75,000 ன்னா ரூம், 1,95,00 ன்னா ஏசிரூம்.9 நாட்கள் பேக்கேஜ் இதில் 30,000 வரை தான் மருந்து செலவு அடங்கும். இரண்டு நாள்கள் தான் ஐசியு வாடகை அடங்கும்...சர்ஜரிக்கு பிறகு டயாபடிஸ்,கிட்னி பிரச்சனை வந்தால் அந்த டாக்டருக்கு விசிட்டிங் சார்ஜ் தனி தனியே கொடுக்கணும் ஆக மொத்தம் 3 லட்சம் வந்திடும் என்று ரிஷப்ஷனில் இருப்பவர் சொன்னார். அப்புறம் எதற்கு பேக்கேஜ்??? உடனே சர்ஜனுக்கு ஃபோன் செய்தேன். (ரிங் டோன் -- கிச்சு கிச்சு தாம்பாளம் கீயா கீயா தாம்பாளம்) என்ன சாரே 1,60,000 ஆகும்னாங்க இப்ப இங்க டபுளா சொல்றாங்க என்றதும் இருங்கம்மா ரிஷப்ஷனுக்கு நான் பேசிட்டு உங்க லைன்னுக்கு வரேன் என்றார் சர்ஜன்.

பேசிட்டேன் 1,75 க்கு கூட 25 ஆயிரம் இல்லை 40 ஆயிரம் தான் வரும் அதற்கு மேலே வராது நான் பேச்சிட்டேன் நீங்க அம்மாவை ஐசியுவிற்கு மூவ் செய்யுங்கள் என்று சொன்னதும் ரிஷப்ஷன் ஆள் ஏம்மா உங்ககிட்ட தோராயமா 3 லட்சம் வரும் என்றேன்.ஏம்மா அந்த டாக்டர் கிட்ட என்னை போட்டு கொடுத்தீங்க நீங்க அப்போலோ போக போறதா அவர் என் கிட்ட கத்துகிறார் என்று வெடு வெடுன்னார்.நானும் பதிலுக்கு பாசமானேன்.
( நான் அப்போலோன்னு சொல்லவேயில்லையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்) .

ஓகோ அப்போலோவிலும் இந்த பணம் தான் வருமா ஓக்கேன்னு என் கஸினிற்கு (பெத்தாலஜிஸ்ட் இன் ராமசந்திரா) ஃபோன் செய்தேன்.ரிப்போர்ட்டை படித்து காண்பித்து அம்மாவின் நிலை இப்படி இருக்கு, இங்கேயோ பேரம் நடக்குதுடா என்ன செய்ய? அம்மாவை அப்படியே இன்னொரு ஆம்புலன்சில் ஏத்தி கொண்டு அப்போலோ இல்லைன்னா ராமசந்திரா வந்திடவா  என்று கேட்டேன். அவர் இல்லைக்கா நீங்க இருக்கும் ஹாஸ்பிட்டலில் அனெஸ்தடிஸ்ட் என் ஃப்ரெண்ட் தான் நான் பேசிட்டேன் சர்ஜன் நல்லா செய்றாராம் எனவே நீங்க ட்ராஃபிக்கில் இப்ப வேற ஹாஸ்பிட்டல் அலைந்தாலும் நேரம் தான் போய் கொண்டே இருக்கும் அதுவும் இல்லாமல் அங்கேயும் இந்த பணத்தை விட ஜாஸ்தி தான் ஆகும் நீங்க குழப்பிக்காம சர்ஜரிக்கு ஓக்கே சொல்லிடுங்க என்றான்.என் கணவருக்கு,தம்பிக்கு,தங்கைக்கு ஃபோனில் விஷயத்தை சொல்ல அவர்களும் குழம்ப வேண்டாம் ஓகே சொல்லிட்டு அம்மாவை ஐ.சி.யுவிற்கு மூவ் செய்திடு நாங்க எல்லோரும் வந்துட்டே இருக்கோம் என்றார்கள்.

                                                                                beating heart photo: beating heart lunapic-beating.gif
                       
                                                                                                   

Thursday, February 14, 2013

பேன் எடுக்க - பொறுக்கிகள்

கெமிக்கல் இல்லை,மெஷின் இல்லை,ஷாம்பூ இல்லை,இயற்கையான முறையில் வெறும் கையினை மட்டுமே பயன்படுத்துவோம். 2 வயதிலிருந்ந்து 92 வயது வரை உள்ளவர்களுக்கு இது வரை 5000 த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சேவை செய்து உள்ளோம்.இத்தொழிலில் கைதேர்ந்தவர்கள் மட்டுமே உங்கள் வீட்டிற்கே வருவார்கள்.

ஒரு மணிநேரத்திற்கு 200$ + ட்ராவலிற்கான பணமும் வசூலிக்கப்படும்.
2001-லிருந்து சேவை செய்து கொண்டிருக்கிறோம்.
95% - 100% ரிசல்ட் இருக்கும்.
தூரமாய் இருப்பவர்களுக்கு ஃபோனிலும் கன்சல்டேஷன் உண்டு.
$2 ஒரு நிமிஷத்திற்கு வசூலிக்கப்படும்.
இரண்டு மணிநேர செமினாருக்கு $300 வசூலிக்கப்படும்.
பள்ளிகளுக்கு சம்மர் கேம்ப்,போர்டிங் விசிட்,கல்லூரி விசிட் செய்யப்படும்.
அட பாவிகளா...என்னத்த சொல்றது.
இதுக்கு கூடவா காசு  Nit-Picker செண்டரை நடத்துபவர் Helen Hadley.அம்மணி சூப்பரா யோசித்து இருக்காங்க.

Monday, February 11, 2013

நெல்லை to சென்னை with ஒன்றுக்கும் உதவாதவன்

அ.முத்துலிங்கம் எழுதி உயிர்மை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள  புத்தகம் தான் ஒன்றுக்கும் உதவாதவன்.முத்துலிங்கம் சாரை பற்றி எதுவும் தெரியாது. புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை வாங்கியது என் தங்கை குமுதா.என்ன ஒரு நக்கல்.கரெக்டான ஆளாக பார்த்து தான் அதை படிக்க கொடுத்து இருக்கிறார். சரி  ஒன்றுக்கும் உதவாமல் வாழ்க்கையில் மேலும் முன்னேறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்னு திருநெல்வேலியிலிருந்து காலை 9 மணிக்கு கூட்டமே இல்லாத ஒரு பஸ்ஸில் மதுரைக்கு வரும் போது இந்த புத்தகத்தை எடுத்தால் 12.15க்கு மதுரை வந்ததே தெரியாமல் படித்து கொண்டே இருந்தேன்.

 நடுவில் கோவில்பட்டியில் 10ரூபாய்க்கு கடலை மிட்டாய், சாத்தூரில் 10 ரூபாய்க்கு வெள்ளரிக்காய் வாங்க மட்டும் தான் விரல்களுக்கிடையில் புத்தகத்தை வைத்து கொண்டே நிமிர்ந்ததாய் நினைவு.

அப்புறம் மதுரையிலிருந்து திண்டுக்கல் போகலாம் என்றிருந்த ப்ளானை தடாலடியாக கைவிட்டு ஆரப்பாளையம் மூத்திர ஸ்டாண்டை (மூக்கை மூட முடியாமல் இருகையிலும் பை) சுற்றி வந்து மாட்டு தாவணிக்கு பஸ் பிடித்து, சாப்பிட்டு பின் சென்னை பஸ் ஏறலாம் என்ற ப்ளானையும் கேன்சல் செய்து விட்டேன். சென்னைக்கு கிளம்ப தயாராய் இருந்த ப்ரைவேட் ஏ.சி பஸ்ஸை மிஸ் செய்து விட கூடாது என்று அவசரமாய் ஒரு ஜிகிர்தண்டா+தண்ணீர் பாட்டில் வாங்கி கொண்டு 1.30க்கு பஸ்ஸில் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன்.கைவிரல்களை மடக்கி இரண்டரை,மூன்றரை,
நாலரை என்று எட்டரைக்கு, ஒன்பதிற்கு தாம்பரம் போயிடலாம் என்று கணக்கு போட்டுவிட்டு புத்தகத்தில் இன்னும் 10 பக்கங்கள் மீதமிருந்தது அதையும் படித்து விடலாம் என்று புத்தகத்தை எடுத்தால் முகத்திற்கு நேரா யானை துரத்துகிறது.ஆனாலும் துரத்தும் யானையினை நான் கண்டுக்கொள்ளாமல் கும்கி மாணிக்கம் வந்து பார்த்து கொள்ளும் என்று மீதம் உள்ள பக்கங்களையும் படித்து விட்டு தான் நிமிர்ந்தேன்.

ஆஹா எப்படி ”ஆக” சிறந்த எழுத்தை இத்தனை நாட்கள் படிக்காத ஞான சூன்யமாக இருந்தோம் என்று தோன்றியது.படித்த பக்கங்களை திருப்பி திருப்பி படித்து கொண்டே இருந்தேன். திருச்சியும் வந்தது. இங்கே சாப்பாடு வாங்கி கொள்ளலாம் என்ற ப்ளானை கைவிட்டேன்.காரணம் பஸ் நிறுத்தி இருந்த இடத்தின் சைடில் காக்கா பிரியாணி போல விற்று கொண்டிருந்தார்கள்.பஸ் வேறு இப்பவோ அப்பவோ கிளம்பி விடும் போல ஊசலாடி கொண்டிருந்தது. பக்கத்தில் ஹோட்டல்களும் தெரியவில்லை. எனவே சரி கொஞ்சம் தூரம் போனால் இன்னொரு மூத்திர ஸ்டாண்டில் பஸ் நிறுத்தும் போது பிஸ்கெட் பாக்கெட் வாங்கி கொள்ளலாம் என்று தண்ணீர் மட்டும் குடித்து கொண்டேன்.

நீ எப்ப புள்ள சொல்ல போற ,எப்பொ,எப்போ,எப்பொ என்று பிரபு சார் பையன் உருகி கொண்டு இருந்ததை பார்க்க பார்க்க நான் எப்ப சாப்பிடுவது என்று பசியில் கொஞ்சம் அழுகையே வந்தது.  டக்குன்னு அடுத்த சீட்டிற்கு ஒரு குண்டு பெண் வந்து அமர்ந்தார்.ஒரு செவன் - அப்,ஒரு மாங்கோ ஜூஸ்,இரண்டு சிப்ஸ் பாக்கெட்,இரண்டு பிஸ்கெட் பாக்கெட்,அரைக்கிலோ திராட்சை,இரண்டு கொய்யா என்று சென்னை வரும் வரை சாப்பிடலாம் போல அமர்க்களமாய் வந்தமர்ந்தார்.ஆஹா கத்தி அழுதுவிடுவேன் போல் இருந்தது. கடனாய் ஒரு கொய்யா பழமாவது வாங்கலாமா என்று அல்ப்பமாய் யோசித்தேன். சீசீ அந்த பழம் புளிக்கும் என்று மனசு மாறியது.

கும்கி முடிந்து கலகலப்பு பார்க்கவும் கொஞ்ச நேரத்தில் பசி மறந்து விட்டது. அடுத்த நிறுத்தத்தில் ஒரு இளநீரும்,பிஸ்கெட்டும் சாப்பிட்டு அப்புறம் ஒரு வழியாக தாம்பரம் வந்து சேர்ந்தேன்.இப்ப சாப்பிட போறேன்.
ஒன்றுக்கும் உதவாதவன் பற்றி நாளைக்கு சொல்றேன் வரட்டா.

Tuesday, January 22, 2013

விடிய விடிய பேசணும்

எப்ப மீட் செய்தாலும் பார்த்து பல வருஷம் ஆன மாதிரி விடிய விடிய பேசி விடிந்ததும் காலை 6 மணிக்கு நான் எழுந்து வழக்கம் போல் என் வேலையினை பார்க்க தொடங்க எழுந்திருக்கவே முடியலைக்கா இனிமேல் உங்க கூட பேசவே கூடாது என்று ஒவ்வொரு முறையும் சிரித்துட்டே சொல்லுவாள்.

ஏனெனில் காலையில் கன்னாபின்னாவென எல்லோரிடமும் திட்டு வாங்குவோம். நாங்க இருவரும் திண்டுக்கல்லில் சுத்தாத இடம் கிடையாது.ஹைனட்டிக் ஹோண்டாவிற்கு அவள் தான் எப்பவும் ட்ரைவர்.மதிய வேளைகளில் திடீரென்று வீட்டில் யாருக்கும் தெரியாமல் தியேட்டருக்கு எஸ்ஸாகி விடுவோம். அப்புறம் வந்து மண்டகப்படி தான்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு,சோழவந்தான் திருவிழா, மதுரை என்று திடீரென்று பக்தி ரசம் சொட்ட சொட்ட ஒரே கோயில் சுற்று தான். 4 வருடங்கள் தொடர்ச்சியாக திருப்பதிக்கு 10 நாட்கள் ஸ்ரீவாரி சேவாக்கு சென்று அங்கு தினம் சேவை செய்வதை இருவரும் மிக விரும்பி செய்தோம்.எதற்கு சிரிக்கிறோம் என்று தெரியாது சிரித்து கொண்டே இருப்போம்.அங்கு சேவாக்கு வந்திருந்த ஒருவர் உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்குது சுத்தி போடுங்க மேடம் என்று ஒரு நாள் சொல்லி சென்றார். எங்கள் குலதெய்வம் ஐயர்மலை எப்ப மலை ஏறினாலும் ஒரு துண்டின் ஒரு முனையினை பிடித்து கொண்டு அவள் முன்னேற நான் இன்னொரு முனையினை பிடித்து கொண்டு பின்னேறுவேன்.அப்பவும் பேசிக் கொண்டே.

 என் மாமா  இருவரில் ஒருவர் ஆணாக இருந்தால் கல்யாணம் செய்து கொடுத்து இருப்பேன் என்பார் கிண்டலாக.  குடும்பத்தில் எதாவது திருமணம் என்றால் ஒரு 10 பேரின்(கஸின்ஸ்) நகைகளை ஒன்றாக்கி நீ இதை ரிஷப்ஷனுக்கு போட்டுக்கோ, இதை திருமணத்திற்கு போட்டுக்கோ என்று ஒரு பேப்பரில் லிஸ்ட் எழுதி வைத்து கொண்டு எல்லோருக்கும் மேக்கப் செய்து விட்டு நாங்கள் இருவரும் கடைசியில் தான் பேசி கொண்டே ரெடியாவோம்.

அவளுக்கு திருமணம் ஆனது. இரண்டு குழந்தைகள். 6 வயதில் பையனும்,5 வயதில் பெண்ணும்.  நாங்க முன்பு மாதிரி சுத்த முடிவதில்லை. ஆனாலும், பார்க்கும் போதெல்லாம் விடிய விடிய பேசுவது மட்டும் இன்னும் தொடர்கிறது.

ஜனவரி 18 ஆம் தேதி இரவு கை,கால் மரத்து போன மாதிரி உணரவும் அவள் கணவருடன் டூவீலரில் ஹாஸ்பிட்டல் போயிருக்கிறாள். போய் என்ன ஏதுவென்று டாக்டர்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே ஸ்ட்ரோக் வந்து வலது பக்கம் செயல் இழந்து விட்டது.20 ஆம் தேதி திருச்சியில் அவளை ஹாஸ்பிட்டலில் பார்த்த போது முதன் முதலாக இருவரும் பேசாமல் 20 நிமிடங்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை.பொங்கி வந்த அழுகையினை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு என்ன வித்யா இந்த வருடம் திருப்பதிக்கு ஸ்ரீவாரி சேவாக்கு ஏப்ரலில் போலாமா, மேயில் போலாமா என்று கேட்கவும் சின்னதாய் ஒரு சிரிப்பு அவள் முகத்தில்.ரொம்ப வீக்கா இருக்க அதான் பேச முடியலை.சீக்கிரம் எழுந்திருக்கும் வழியினை பாரு அப்படி இப்படின்னு தனியா நான் மட்டும் அவள் பதிலையே எதிர்பார்க்காமல் பேசிட்டு வந்திருக்கேன். ஹாஸ்பிட்டலில் டிஸ்சார்ஜ் செய்ததும் கேரளாவிற்கு சிகிச்சைக்கு போகலாம் என்று அவளின் டாக்டர் தம்பி முடிவு செய்து இருக்கிறான். யாரை நொந்து கொள்வது? பரம்பரையாக ஒரு நோய் வரும் என்றாலும் கூட 35 வயதில் இப்படி எல்லாம் நடக்குமா? அந்த இரண்டு குழந்தைகளும் என்ன பாவம் செய்தனர்?என்ன செய்தால் அவள் குணமடைவாள் என்று தெரியாமல் விதியினை நொந்து கொண்டு நாங்கள் இருக்கிறோம்.

வித்யா என் மாமாவின் பெண். என் கணவருக்கு அண்ணா பெண். சிறிய வயதில் நாங்க இருவரும் திண்டுக்கலில் தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்ததால் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம். நான் அத்தை பெண்,சித்தப்பா மனைவி என்றாலும் என்னை அக்கா என்றே கூப்பிடுவாள்.

வரும் மார்ச் மாதம் அவளுக்கு மிகவும் பிடித்த தொழிலான பியூட்டி பார்லர் ஆரம்பிக்க போவதாய் மிக நம்பிக்கையாய் நியூஇயர் விஷ் செய்த போது கூறினாள்.அவளின் ரொம்ப நாள் கனவு அது.

அவளின் நியாயமான கனவு நிறைவேற வேண்டும். யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லை.


கட்டாயம் நாங்களிருவரும் விடிய விடிய பேசுவோம் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்.

Wednesday, January 09, 2013

இதெல்லாம் நமக்கு சரிபடாதா?

காலை 7.30க்கு பள்ளி என்பது தமிழக அரசின் புது ஐடியா.

காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் வரும்.எனவே இரவில் எந்த டி.வி சீரியலில் மாட்டாமல் குழந்தைகள் சீக்கிரம் தூங்க பழகி விடுவார்கள்.பெற்றோரும் தான். இந்த அரசு பஸ்கள் காலையில்,முக்கியமாக மதியத்தில் குழந்தைகளுக்கு மட்டுமே என்பது போல் கூட்டம் இல்லாமல் ஃப்ரீயாக செல்லலாம். கண்டக்டர்களும் பள்ளிகளுக்கு அருகில் நிறுத்தி அமைதியான முறையில் ஏற்றி வருவார்கள். இப்போ மாதிரி குழந்தைகளை கண்டாலே பஸ்ஸை நிறுத்தாமல் ஓடுவதை போல் செய்ய மாட்டார்கள். சாலைகள் இந்த நேரத்தில் கொஞ்சம் ட்ராஃபிக் குறைவாக இருக்கும் என்பதால் மாணவர்கள் சைக்கிளில் சென்று வருவதை விரும்பி சைக்கிள் உபயோகம் அதிகமாக சான்ஸ் இருக்கே.

காலையில் கஞ்சி,ஜூஸ்,பால் போன்று நல்லா இரண்டு பெரிய க்ளாஸ் கொடுத்து,காலை சாப்பாட்டை கையில் கொடுத்து விடுவதால்(சப்பாத்தி,பூரி போன்று) குழந்தைகள் ஆரோக்யமாக இருக்குமே. மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு வந்து முழு சாப்பாட்டை சூடாக காய்கறி,கீரைகளுடன் சாப்பிடலாம்.ப்ரைமரியில் படிக்கும் குழந்தைகள் மதியம் வீட்டில் 2 மணிநேரம் தூங்கலாம்.

 பள்ளிகளில் மதிய சாப்பாட்டிற்கு பிறகு ஒரு மணிநேரம் எந்த விதத்திலும் குழந்தைகளை ஒரு பாடத்தின் மீது கவனம் செய்ய வைக்க முடியவே முடியாது. எப்படா பெல் அடிக்கும் என்ற மனநிலையில் தான் கட்டாயத்தின் பேரில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.அந்த நேரத்தில் பெரும்பாலும் போர்டில் எழுதி போடும் வேலை தான் பெரும்பாலும் ஆசிரியர்களின் வேலையாக இருக்கும். புதியதாக பாடம் சொல்லி தருவதை மதிய நேரத்தில் அவாய்ட் செய்து விடுவர்.

 இந்த நேரப்படி அம்மா வேலைக்கு போகாமலோ இல்லையென்றால் பாட்டி,தாத்தா அவர்கள் வீட்டிலோ இருக்க வேண்டும். அப்போதான் இந்த முறை நல்லாயிருக்கும்.எனவே கூட்டு குடும்பத்தின் அருமை மக்களுக்கு புரியும்.இல்லாட்டி ஏற்கனவே மாலை 4,5 மணியிலிருந்து வேலைக்கு போன அம்மாவிற்கு காத்து இருக்கும் குழந்தைகள் இப்போ மதியத்திலிருந்து காத்து கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். AFTER SCHOOL என்ற பள்ளிகள் அல்லது டியூஷன் செண்டர் புற்றீசல் போல் முழைத்து சம்பாதிக்க தொடங்கும். மேட்னி-ஷோக்கள் தியேட்டர்களில் கொடிக்கட்டும். டீன் - ஏஜ் குழந்தைகள் நன்கு சுத்த ஆரம்பிக்கும்.டைம் அதிகம் கிடைப்பதால் மாணவர்களின் நெட் உபயோகம் அதிகரிக்கும்.

 தனியார் பள்ளிகள் மாணவர்களை மதியம் விட்டால் கூட ஆசிரியர்களை மதியம் வீட்டிற்கு விட ரொம்ப யோசிப்பார்கள். ஆசிரியர்கள் 4 மணிவரை கட்டாயம் பள்ளியில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அவர்களுக்கும் வீடு மற்ற வேலைகள் இருக்குமென்ற கவலையே கொள்ள மாட்டார்கள்.இதில் பெரும் பாதிப்பு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தான். தனியார் பள்ளிகளில் 90% பெண்கள் தான் ஆசிரியராக பணியில் இருக்கிறார்கள். ஆசிரியர் பணியில் ஈடுபாடு இனி வரும் காலங்களில் இந்த நேர மாற்றத்தால் இளைஞர்களுக்கு குறைந்து விட வாய்ப்பு உள்ளது.


 என்ன செய்யலாம்?

3 கி.மீட்டருக்குள்ளே தான் வீடும் பள்ளியும் இருக்க வேண்டும் என்பதை அனைத்து பெற்றோரும் கட்டாயம் கடைபிடித்தாலே இந்த பிரச்சனை பெரிதும் தீரும்.சைக்கிளுக்கென்று சாலையில் தனி பாதை ஏற்படுத்தினால் இன்னும் நல்லாயிருக்கும்.சைக்கிளில் வரும் மாணவர்களுக்கு பள்ளியில் ஏதேனும் மார்க் உண்டு என்று கூறினால் சோம்பேறிகளாகி கொண்டு இருக்கும் மாணவ சமுதாயம் சைக்கிளை உபயோகப்படுத்த தொடங்கும்.தனியார் பள்ளிகள் சம்பாதிக்க வேண்டி வாங்கி வைத்திருக்கும் பேருந்துகளை தொலைவில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பயன் படுத்தலாம்.


 என் பையன்கள் இருவரும் தாம்பரம் கேந்திரிய வித்யாலயாவில் 10 வருடம் படித்தனர். அப்போது காலை 7.30-2 மணி வரை பள்ளி நேரம்.காலை 8.30க்கு டிஃபன் ப்ரேக். டவுண் பஸ்ஸில் 3 கி.மீட்டர் சென்று வந்தார்கள். காலை கூட்டம் இருந்தாலும் மதியம் அரசு பேருந்தில் அந்த பள்ளி மாணவர்கள் மட்டுமே சந்தோஷமாக வருவார்கள். அந்த பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களை விட மிக சுறுசுறுப்பாய் இருப்பார்கள் இதை நான் மற்ற பள்ளி ஆசிரியர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன்.நேரிலும் பார்த்து இருக்கிறேன். மதியத்திலிருந்து இரவு வரை நேரம் அதிகம் இருக்கும்.வீட்டு பாடங்கள் படிக்க செய்ய அதிக நேரம் இருக்கும்.மற்ற டியூஷ்னகளுக்கும் செல்ல நேரம் கிடைக்கும்.இந்தியாவில் இருக்கும் அனைத்து கேந்திரிய வித்யாலயாவும் இந்த நேரத்தில் தான் செயல்பட்டன. ஷில்லாங்,ஊட்டியில் இருக்கும் குழந்தைகளும் காலை குளிரில் இந்த நேரத்திற்கு பழக்கபட்டே இருக்கிறார்கள்.

நான் சிட்டியில் இருக்கும் பள்ளிகளை மட்டும் கருத்தில் கொண்டு இதை எழுதி இருக்கிறேன். கிராமத்து பள்ளிகளுக்கு இந்த டைம் சரி படுமா தெரியலை. எனினும் மதிய நேரத்தில் வீட்டிற்கு வருவதால் அவர்களுக்கும் பிரச்சனை இருக்காது என்றே நினைக்கிறேன். தூரமாய் இருக்கும் வீட்டிற்கு இருட்டும் முன்பே போகலாம் .இருட்ட ஆரம்பிக்கும் முன்பே பாடங்களை பாதியாவது படித்து முடிக்கலாம். (கரெண்ட் பிரச்சனை).பார்க்கலாம் என்ன டைம் அரசு முடிவு செய்கிறார்கள் என்று?