Wednesday, June 20, 2012

வீடு மாத்திக்கலாமா

டைட்டானிக் பொண்ணு நடிச்ச படம்னா ஆவென்று படம் பார்க்க உட்கார்ந்து விடுவேன். அப்படி சமீபத்தில் HBO-வில் உட்கார்ந்த படம் தான் THE HOLIDAY. காதலில் தோற்று போன இரண்டு பெண்கள் தங்கள் வீட்டினை ஹாலிடேயில் தங்குவதற்காக எக்சேஞ்ச் செய்து கொள்கிறார்கள். டைட்டானிக் பொண்ணு KateWinslet(ஐரிஷ்) Cameron Diaz (அமெண்டா) இருவரும் ஒரு நாள் வாழ்க்கையே வெறுத்து போய் Home exchange website -ல் சந்தித்து கொள்கிறார்கள். ஐரிஷ் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் அமெண்டாவின் மிக பெரிய வீட்டிற்கும், அமெண்டா ஐரிஷின் இங்கிலாந்தின் குளிர் பிரதேசத்தில் இருக்கும் ஒரு சிறிய வீட்டிற்கும் ஹாலிடேவிற்கு ஷிஃப்ட் ஆகிறார்கள். மனம் வெறுத்த நிலையில் இருக்கும் இருவருக்கும் ரொமான்ஸ் தேவை படுகிறது. அமெண்டாவிற்கு ஐரிஷின் சகோதரரருடனும், ஐரிஷிற்கு அமெண்டாவின் பக்கத்து வீட்டு பையனுடனும் ரொமான்ஸ் ஆகிறது. இங்கு நான் சொல்ல வந்தது அதை பற்றி அல்ல!!! Home Exchage என்று நிஜமாவே ஒரு வெப்சைட் இருக்கிறதா என்று பார்த்ததில் ஆஹா இருக்கிறது. இது சம்பந்தமாக ஒரு ப்ளாக்இருக்கிறது.

சரி இந்தியாவில் இருக்கிறதா என்று பார்த்ததில் அடடா இருக்குதே..

நாமும் காஷ்மீர்,கோவா,ஷில்லாங்,கேரளா போன்ற இன்னும் பிற இடங்களுக்கு லீவில் வீட்டை மாத்திக் கொண்டு போனால் ஆஹா நல்லாதான் இருக்கும். ஆனால், நான் இருக்கும் சென்னைக்கு யார் அப்படி விரும்பி வீடு மாத்தி வர போகிறார்கள்.இவையெல்லாம் படத்தில் மட்டுமே சாத்தியம் இல்லையா???


Wednesday, June 06, 2012

வெரைட்டி - 2012 (ஜூன்)

எங்களுக்கு தெரிந்த பெண் டூவீலரில் சோழிங்கநல்லூரிலிருந்து நாவலூர் போய் கொண்டு இருந்த போது சோழிங்க நல்லூர் தாண்டியதும் இருவர் தங்கள் வண்டியினை இவரின் டூவீலருக்கு முன்னால் க்ராஸ் செய்து  உள்ளார்கள்.இவர் வண்டியினை வேகம் குறைக்கும் முன்பு முன்னால் சென்ற வண்டியில் இருந்து ஏதோ ஒழுகி உள்ளது.அதில் இவர் வண்டி ஸ்லிப் ஆகி வண்டியினை நிறுத்தி என்னவென்று முன்னால் எட்டி பார்க்கவும் முன்னால் வண்டியில் சென்றவர்கள் மிக அருகாமையில் அவர்களின் வண்டியினை நிறுத்தி ஒருவன் கத்தியினை காட்டி கத்தாதே குத்திடுவேன் என மிரட்ட இன்னொருவன் தன் கையில் இருந்த கட்டிங் ப்ளேயரில் அவரின் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை கட் செய்து கொண்டு பறந்து விட்டார்கள்.

மிக தைரியமான அந்த பெண் ஓரமாய் நின்று கொஞ்ச நேரம் அழுது விட்டு தன் வீட்டிற்கு ஃபோனில் விபரத்தினை சொல்லி விட்டு கொஞ்ச தூரம் தள்ளி உள்ள கடையில் அமர்ந்து இருந்தாராம்.தாம்பரத்திலிருந்து அவரின் அப்பா அங்கு வரும் வரை அவர் உடல் நடுங்கி கொண்டே இருந்ததாம். எவ்வளவோ சொல்லியும் போலீசில் சொல்லவில்லை. தினமும் அந்த வழியில் செல்ல வேண்டி இருப்பதால் பயமாக இருக்கிறது என்று சொல்கிறார்.பழைய மகாபலிபுரம் சாலையில் நிறைய போலீசுகள் சுற்றி கொண்டே தான் இருக்கிறார்கள். இப்படி கம்ப்ளெயிண்ட் செய்யாதது தான் அந்த திருடர்களுக்கு சாதகமாய் போய் விடுகிறது. அந்த திருடர்கள் டிப் டாப்பாய் இருந்தார்களாம். கழுத்துக்கு அருகில் கத்தி வந்தால் நம் தைரியம் அவ்வளவு தான் போலிருக்கிறது.

+2,10த் ரிசல்ட் வந்தால் நான் தெரிந்தவர்கள் யாரும் எழுதி இருந்தாலும் ரிசல்ட் கேட்கவே மாட்டேன். ஆனாலும், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விபரம் அதுவா காத்து வாக்கில் நமக்கு வந்து சேரும்.
ஒருவர் தன் மகனுக்கு கோயம்புத்தூர் புகழ் பெற்ற காலேஜில் 12 லட்சம் கொடுத்து ஆட்டோமொபைல் கோர்ஸ் விலைக்கு வாங்கி உள்ளதை ஏதோ சாதித்து விட்டது போல் கூறினார்.அரசாங்கத்தில் 21 வருடம் வேலை பார்த்து கடைசியில் வரும் செட்டில்மெண்ட் கூட அவ்வளவு இருக்காதே.
ஒருவர் தன் மகனுக்கு ஒன்றரை லட்சம் கொடுத்து முகப்பேரில் ஒரு இண்டர்நேஷனல் பள்ளியில் ப்ரீ.கே.ஜி சீட் வாங்கி விட்டாராம். இந்த இரண்டில் எது பரவாயில்லை என்று “ஙே” முழி முழித்து கொண்டு நான்.சில பல வருடங்கள் கழித்து இவர்கள் என்னாவானார்கள் என்று மட்டும் விசாரிக்க வேண்டும்.

எப்பவும் குடும்பத்துடன் போகும் சம்மர் டூர் இந்த முறை போகவில்லை.புதியாதாய் வீடு கட்டி குடி புகுந்து 4 மாதங்கள் தான் ஆகிறது.நோ டப்பு. எனவே ஏற்கனவே போய் வந்த காஷ்மீர்,ஊட்டி டூர் ஃபோட்டாக்களை பார்த்து கொண்டு பொழுது போகிறது.



எல்லா வருடமும் போலவே இந்த வருடமும் வெயில் சென்னையில் வறுத்து எடுக்கிறது. எல்லா வருடமும் போலவே நாங்களும் ஆஹா என்ன அருமையான வெயில், எங்கே தொட்டாலும் எப்படி சுடுகிறது, கண்ணெல்லாம் எப்படி எரிகிறது,பாத்ரூம்,கிச்சன் குழாயில் எல்லாம் வெந்நீர் எப்படி அதுவா வருகிறது என்று அணு அணுவாய் ரசித்து கொண்டு இருக்கிறோம்.

போன மே மாதத்தில் வீட்டிற்கு வந்த ரியோ


இப்போ ரியோ

டெர்ரரா இருக்கான்.சேர்ந்த இடம் அப்படி.நகுல்,ரிஷி,விஷால் வரிசையில் இப்போ ரியோவுடன் பொழுது போகுது.