Wednesday, May 23, 2012

கவுன்சிலிங் - பெற்றோருக்கு தேவை

ஒவ்வொரு வருடமும் இதே திருவிழா தான். அதான் 10,12 ஆம் வகுப்பு ரிசல்ட் வரும் திருவிழாவினை தான் சொல்கிறேன். பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் அவர்களால் என்ன படிக்க முடியும் என்பது கட்டாயம் அவர்களை பெற்றவர்களுக்கு தெரிந்து இருக்கும். இருந்தும் பெரும்பாலான பெற்றோர்கள் பாசாங்கு செய்கிறார்கள். ஏன் இந்த பாசாங்கு. ஒவ்வொரு தாய் தந்தையும் தங்கள் பிள்ளைகளின் மார்க் சீட்டினை எடுத்து தங்கள் மார்க் சீட்டுடன் ஒப்பிட்டு பார்த்து கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு, மாமன் வீட்டு மார்க் சீட்டுகளுடன் ஒப்பிடவே கூடாது. எதை விதைக்கிறோமோ அது தானே அறுவடை செய்ய முடியும்.


இன்று இரண்டு பாடங்கள் ஃபெயில்
ஆகி இருக்கும் ஒரு மாணவியின் பெற்றோர் போன மாதம் முழுவதும் தன் ஒரே பெண்ணை மெடிக்கல் சேர்க்க 20 லட்சங்களை எப்படி புரட்டுவது வீட்டினை விற்பதா, நிலத்தினை விற்பதா என்று குழம்பி கொண்டு விலையும் பேசி கொண்டு இருந்தார்கள். கடந்த 4 வருடங்களாக அவர்கள் நாமக்கல் பள்ளிக்கு மட்டும் 5 லட்சங்கள் செலவு செய்து இருப்பார்கள்.முதல் ராங்க் வாங்கியிருக்கும் அதே நாமக்கல்லில் தான் அவர்களின் பெண்ணும் படித்தது. கடந்த ஒரு மாதமாக இருக்கும் எல்லா மெடிக்கல் எக்ஸாம்களையும் அந்த பெண் எழுதி கொண்டு இருந்தது. இப்போ பார்த்தா இரண்டு பாடங்களில் ஃபெயில்!!!! 

ஆயிரத்திற்கு மேல் எடுத்திருக்கும் இன்னொரு மாணவனின் பெற்றோர் இரண்டு தினங்களாய் கோயம்புத்தூரில் புகழ் பெற்ற காலேஜ் வாசலில் அப்ளிகேஷன் வாங்க ரூம் போட்டு காத்து இருந்து இன்று 1150க்கு மேல் மார்க் வராததால் ஏமாந்து போய் அவர்களின் ஊருக்கு திரும்பி பயணம் செய்கின்றனர்.

இன்னொரு உறவினர் பெண் ஃபோனில் ஒரே அழுகை. 1056 மார்க் எடுத்த தன் மகள் 1150 வரும் என்று இருந்தாளாம். அந்த பெண் உம்மென்று இருக்கிறது. அம்மாக்கள் தான் ஒரே அழுகை. 1056 எடுத்தாலும் அதே இஞ்சினியரிங் தானே சேர்க்க போகிறார்கள். என்ன சேரப் போகும் காலேஜ் இரண்டாவது தர வரிசையில் இருக்கும். எப்படியும் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை கிடைக்க போகிறது. ஆனால்,எதற்கு இந்த பெற்றோர்கள் இவ்வளவு அலட்டி கொள்கிறாகள். எதற்கு இவ்ளோ மெண்டல் ப்ரஷர்.

இந்த இஞ்சினியரிங்,மெடிக்கலை விட்டால் வேறு படிப்பு இருப்பது பெரும்பாலான பெற்றோருக்கு ஒரு படிப்பாகவே தோன்றவில்லை. போன வருடம் 50 ஆயிரம் இஞ்சினியர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்கிறது நியூஸ். முதல் பத்து இடங்களை பிடிக்கும் மாணவர்கள் அடுத்த பத்து வருடங்களில் என்ன ஆனார்கள் என்றால் அப்படி ஒன்றும் சொல்லி கொள்வது மாதிரி இல்லையாம். +2வில் அதிக மார்க் எடுக்கும் மாணவர்களே அரியர்ஸ் வைத்து கொண்டு கஷ்டப்படுகிறார்களாம்.

இந்த முறை பிசிக்ஸ் அப்ளிகேஷன் ஓரியண்ட் முறையில் கேள்வி அமைந்ததால் நாமக்கல் மாவட்டத்தில் பிசிக்ஸில் தேர்ச்சி பெற்றவர்கள் எடுத்து இருக்கும் மார்க்குகள் கம்மி தானாம். இவர்களில் ஒருவர் கூட IIT-தேர்ச்சி பெறுவதில்லையாம்.

10 ஆம் வகுப்பில் 300லிருந்து 400 வரை வாங்கும் மாணவர்கள் பெரும்பாலும் +2வில் 850லிருந்து 950 தான் மார்க வாங்குகிறார்கள். பெற்றோர்களுக்கு இஞ்சினியரிங் பேய் பிடித்து ஆட்டுவதால் வேறு குருப்பில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதே இல்லை. படிக்க முடியுமா இல்லையா என்று யோசிப்பதே இல்லை. அவன் படிச்சிட்டான், இவன் படிச்சுட்டான் நம் பிள்ளையும் படிக்க வேண்டும் என்ற பேராசை மட்டுமே இருப்பதால் முதல் க்ரூப்பில் சேர்த்து விட்டு அதன் பிறகு +2 மார்க் பார்த்து விட்டு ஒரே புலம்பல் தான்.

இஞ்சினியரிங் படித்து விட்டு கால் சென்டர் வேலை எத்தனை பேர் பார்க்கிறார்கள்.டூரிசம்,மேனஜ்மெண்ட்,ஹோட்டல் இண்டஸ்ட்ரிஸ் என எத்தனையோ வாய்ப்புக்கள். பெரும்பாலானவர்கள் அத்தகைய படிப்புகளை முதலில் மதிப்பதே இல்லை. முதல் இரண்டு வருடங்கள் இஞ்சினியரிங்கில் நிறைய அரியர்ஸ் வைத்து விட்டு அதன் பிறகு ஆர்ட்ஸ் காலேஜில் ஏதோ ஒரு கோர்ஸ் சேர்க்கிறார்கள். எவ்வளவு பணம், எத்தனை வருடங்கள் வேஸ்ட்? படிக்க முடியவில்லை என்றால் அதற்கு ஏற்ற மாதிரி கோர்ஸ்களில் குழந்தைகளை சேர்த்து விட்டு முன்னேற வழி செய்வது தான் பெற்றவர்களுக்கு அழகு.ஆனால்,பெருமைக்காக,நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிலுமே பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

தெரிந்த ஒருவர் +2வில் ஃபெயில். இளங்கலை,முதுகலை,எம்.பில் வரலாறு படித்து விட்டு இன்று அரசாங்க காலேஜில் புரொஃபசர். இன்னொருவர் காலேஜில் படித்த பட்டத்தினை வாங்கவே இல்லை. ஆனால் இன்று காலேஜில் ஃப்ரெஞ்ச் புரொஃபசர்.என்னவோ போங்க இந்த இஞ்சினியர் மாயை என்று தான் ஒழியுமோ.பெற்றோருக்கு தான் டாக்டர்களிடம் கவுன்சிலிங் அவசியம்.

Monday, May 07, 2012

பெயரால் ஒரு காமெடி

திண்டுக்கல்லில் இருக்கும் எங்கள் குடும்ப நண்பர் இந்திரா அவருக்கு தெரிந்தவர்களின் பெயர்களை பெரும்பாலும் சுருக்கமாக தான் கூப்பிடுவார்.அமுதான்ன்னா அம்மு,கீதான்னா கீ, நிவேதிதான்னா நிவி,சுகன்யா எனில் சுகி இப்படி.சரியான சுறுசுறுப்பு.அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஜாம், ஜூஸ் செய்து தருவது தன் சகோதரர்களுக்கு வத்தல்,வடாம்,கஞ்சி மாவு அது இது என்று அவர் உடல் உழைப்பால் செய்ததை பார்சல் செய்து கொடுத்துட்டே இருப்பார்.நாம் போனால் கூட எதாவது வீட்டிலே செய்தது என்று பார்சல் கொடுக்காமல் இருக்க மாட்டார். 

ஒரு முறை அவரின் தம்பி மனைவியின் வயதான அம்மா இறந்து விட்டார்.அதன் பிறகு வந்த நாட்களில் அவ்வப்போது அவர்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு எதாவது சாப்பாடு பார்சல் இவர் வீட்டில் இருந்து தான். ஒரு நாள் அவசரமாய் மதுரை போக வேண்டி இருக்கவே பச்சை மொச்சை,முருங்கைக்காய்,கறி, கோலா உருண்டை போட்டு நல்ல காரசாரமாய் குழம்பு செய்து அதை ஒரு பெரிய தூக்கு சட்டியில் ஊற்றி வீட்டு வேலைக்காரரிடம் இதை இழவு வீட்டில கொடுத்துடு நான் மதுரை போகிறேன் என்று சொல்லி கிளம்பி போய் விட்டார்.

இழவு வீட்டில் சாதம் மட்டும் செய்து விட்டு 1 மணியாச்சு,2 மணியாச்சு,2.30 ஆச்சு பசி பொறுக்காமல் என்ன இந்திரா குழம்பு கொடுத்து விடுறேன்னு சொன்னியே எங்க குழம்பு என்று கேட்க இவர் உடனே வீட்டிற்கு ஃபோன் செய்து கேட்கவும் ஆமாக்கா நான் இளவக்கா வீட்டில் 12.30 மணிக்கே கொடுத்துட்டேனே என்று வேலைக்காரர் சொல்லி இருக்கிறார். என்னது இழவு அக்கா வீடா?? என்னடா சொல்ற? அக்கா நீங்க தானே இளவக்கா வீட்டில் கொடுக்க சொன்னீங்க என்று சொல்லவும் தன் தவறை உணர்ந்தார்.இவர் கொடுக்க சொன்னது இழவு வீடு.அவர் கொடுத்ததோ இளா வீடு என்ற இளவரசி வீடு.

இதில் காமெடி என்னவென்றால் அந்த இளவரசி வீட்டில் இருப்பது அவரும் அவர் அம்மா மட்டும் தான் என்னடா இது ஒரு சட்டி நிறைய குழம்பு எதற்கு என்று அவருக்கு கொஞ்சமும் டவுட் வரலை இந்திரா மதுரை போறதால் 2 நாட்களுக்கு சேர்த்து கொடுத்துட்டு போனதாய் நினைத்து நன்கு மூக்கு பிடிக்க சாப்பிட்டு விட்டு மீதியினை ஃப்ரிட்ஜில் பத்திரபடுத்தி வைத்தார்களாம். ஆஹா சுருக்கமாய் பெயர்களை சொல்வதால் வந்த பிரச்சனையா? இழவு வீட்டிற்கு வேலைக்காரர் செய்த தவறை சொல்லவும் மதியம் 3 மணியானதால் ஹோட்டலில் சாப்பாடு தீர்ந்து போனதால் வெறும் தயிர்,ஊறுகாய் வைத்து சாப்பிட்டார்களாம்.