என் கணவரின் அண்ணா 5 வருடங்களுக்கு முன் அவரது 50 ஆவது வயதில் இறந்து விட்டார்.அவருக்கு ஒரே பெண். என் கணவர் அவரின் அண்ணா இல்லாததால் திருமணத்தினை இங்கே சென்னையில் நடத்தலாம் என்றார். திருமணம் ஆகஸ்ட் 20-ல் செய்யலாம் என மாப்பிள்ளை வீட்டாரும் கூறவே அந்த தேதியும் முடிவானது. புதியதாக கட்டப்பட்ட எங்கள் வீட்டிற்கு 18 ஆம் தேதி காலையில் இருந்தே சொந்தங்கள் வர ஆரம்பித்தனர்.
சமையல் செய்ய எங்கள் தூரத்து சொந்தக்காரர் நாகலெஷ்மியும் அவரின் அம்மா ஜெயாம்மாவும் 17 ஆம் தேதியில் திண்டுக்கல்லிலிருந்து வைகையில் சென்னை வந்தனர். சனி,ஞாயிறு,திங்கள்,செவ்வாய் என்று நான்கு நாட்களும் வீட்டில் 35லிருந்து 40 ஆட்கள் வரை தங்கியிருந்தோம். அந்த கால திருமணம் போல சொந்தக்காரர்கள் ஒரே வீட்டில் தங்கி இருந்து திருமணம் செய்தது பெண்ணின் அப்பா இல்லாத குறையினை போக்கியது. திருமணத்திற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு ECR-ல் உள்ள
IG RESORT -ற்கு இரு வேன்கள்,மூன்று கார்களில் சொந்தங்கள் கிளம்பினார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மதியமே ரிசார்டிற்கு வந்து விட்டார்கள். இரவு நிச்சயதார்த்தம் முடித்து ரிசார்ட்டில் அருமையான டின்னர்.
மறுநாள் காலை அங்கிருந்த நீச்சல் குளத்தில் ஆண்களும், குழந்தைகளும் இஷ்டம் போல ஆட்டம் போட்டனர்.
காலை உணவு முடித்து திருவிடந்தை கோயில் அருகில் இருக்கும் சின்ன திருமண மண்டபத்தில் ”வைத்து” (நான் திநெவேலி ஆக்கும்) திருமணம் முடித்தோம்.
இங்கே ஒரு சின்ன
திருவிடந்தை கோயிலில் திருமண தேதி பற்றியும், திருமணத்திற்கு என்ன நடைமுறை என்பது பற்றியும் விசாரிக்க, போன மாத தொடக்கத்தில் 2 முறை போனேன். திருமணத்திற்கு 10 நாட்கள் முன்பு தான் அப்ளிகேஷன் கொடுப்போம் அதை நிரப்பி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம்( Gazetted officer) கையெழுத்து வாங்கி திருமணத்திற்கு 5 நாட்கள் முன்பு கோயில் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்று மற்ற விபரங்கள் எதுவும் கூறாமல் அங்கிருந்த பெண் அலுவலர் ஏறக்குறைய விரட்டியே விட்டார்.அவர் காலை மடக்கி சம்மணம் போட்டு சேரில் ரெஸ்ட்டாக அமர்ந்து ஃபேன் சூப்பர் ஸ்பீடில் சுத்த யாரோ ஒருவருடன் அலுவலக ஃபோனில் பேசி கொண்டிருந்த போது இதை விசாரிக்க போனது எனது தப்பு.பெண்ணும், பையனும் வெளியூர் எனவே கொஞ்சம் முன்னாடி அப்ளிகேஷன் கொடுக்க கூடாதா என்று
”பயந்து” கொண்டே கேட்டதற்கு இங்கே பெங்களூர், ஹைதையில் இருந்தெல்லாம் வந்து திருமணம் செய்கிறார்கள் அவர்களுக்கே 10 நாட்கள் முன்னாடி தான் எல்லாம் என்று சொல்லி அப்பவும் அந்த ஃபோனை என் மீதான கோபத்தில் கூட கீழே வைக்கவில்லை அந்த புண்ணியவதி.
சரி என்று திருவிடந்தை கோயிலில் திருமணம் என்று பத்திரிக்கை அடித்து எல்லாருக்கும் கொடுத்தாச்சு. திருமணத்திற்கு 10 நாட்கள் முன்பாக எங்கள் வீட்டிற்கு திருமண பத்திரிக்கை வைக்க வந்த கல்யாண பெண் அவர் அம்மாவுடன் அப்ளிகேஷன் வாங்க கோயில் ஆஃபிசிற்கு சென்ற போது தான் அந்த கோயிலில் காலை 6- 7.30 மணி முகூர்த்தம் மட்டுமே திருமணம் செய்ய அனுமதி என்று தெரிந்தது. அட தேவுடா இது என்ன கொடுமை என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் கோயில் கூறும் முகூர்த்தத்தில் திருமணம்
”வைத்து” கொள்ளலாமா என்று கேட்டால்.அவர்கள் நீங்கள் ஏன் முதலிலேயே முகூர்த்த நேரம் பற்றி
விசாரிக்கவில்லை, சாரிக்கவில்லை,ரிக்கவில்லை,வில்லை,லை என்று கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டார்கள். (பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் அவர்களுக்கு வேணுமாம்.)
சரி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே கோயில் பக்கத்தில் இருந்த ஒரு சின்ன மண்டபத்தினை பிடித்து உடனே பணத்தினை கொடுத்து புக் செய்து கொண்டோம். உடனே மண்டப அலங்காரம்,ஐயர்,மேளம் என்று அனைவரையும் பிடித்து அட்வான்ஸ் கொடுத்து விட்டோம்.
எனவே,9-10.30 என குறித்த நேரத்திலேயே மண்டபத்திலே கல்யாணம் முடித்து திருவிடந்தை கோயிலிற்கு பெண் மாப்பிள்ளையினை சாமி கும்பிட அனுப்பி வைத்தோம். திரும்ப ரிசார்ட்டிற்கு வந்து மதிய சாப்பாடும் (அது முக்கியம் இல்லையா) சாப்பிட்டோம்.கோயில்,ரிசார்ட் தூரம் 5 கி.மீ. திங்கள் மாலை 4 மணியளவில் என் வீட்டிற்கு இப்போது மாப்பிள்ளை வீட்டார் சிலரும் சேர்ந்து வந்தோம்.
சொதப்பல்கள்:
1.திருமண நாளை மட்டும் குறிப்பிட்டு பத்திரிக்கை அடியுங்கள் என்று கரடியாய் கத்தியும் முதல் நாள் இரவு நிச்சயதார்த்தம் என்று பெண்ணின் தாய் ரிசார்ட் பெயரை பத்திரிக்கையில் அடித்து விட்டார். முதலிலேயே இது பற்றி டிஸ்கஸ் செய்யவில்லை. அவரின் சென்னை சொந்தங்கள் அந்த ரிசார்ட்டிற்கு முதல் நாள் இரவு வந்து விட்டார்கள்.அந்த ரிசார்ட் மெயின் ரோடில் இல்லை. எனவே, அங்கு இரவில் வந்த கார்களுக்கு என் தம்பிகள் வழி சொல்லியே நொந்து விட்டார்கள். வந்தவரில் ஒரு பெரியவர் யாருப்பா இந்த ரிசார்ட் ஐடியா கொடுத்தது என்று மிகவும் திட்டி இருக்கிறார்.இருட்டில் வழி தெரியாமல் அலைந்த எரிச்சல். என் தம்பி ஆமாம் சார் நானும் இங்கே வர ரொம்ப கஷ்டப்பட்டேன் யாரோட ஐடியாவோ தெரியலை என்று எனக்கு அவரோடு சேர்ந்து அர்ச்சனை செய்தானாம்.பிறகு சிரித்து கொண்டே என்னிடம் வந்து சொன்னான்.எக்ஸ்ட்ராவா வந்தவர்களுக்கும் சாப்பாடு போட்டு ரிசார்ட் மேனேஜர் எங்களை டேமேஜ் ஆக்காமல் மேனேஜ் செய்து விட்டார்.
2. பத்திரிக்கை அடிக்கும் முன் பெண்ணின் அம்மாவிடமும்,கோயில் பெண்ணிடமும் டிஸ்கஸ் செய்யாததால் கடைசி நேர டென்ஷன் ஆஃப் பல்லாவரம் ஆனேன். முருகன்,சிவன் கோயில்களில் காலை எந்நேரமும் முகூர்த்தம் இருக்கும். பெருமாள் கோயிலில் அப்படி இல்லை என்று தெரிந்து கொண்டோம்.
3. முன்று நாட்களும் பகல், இரவு என கிட்டத்தட்ட 12 ஃபேன்கள் என் வீட்டில் ஓடியதாலும், மதிய நேரங்களில் முழுவதும் ஒரு ஏ.சி ஓடியதாலும் சிங்கிள் ஃபேஸ் மட்டுமே இருக்கும் என் வீட்டில் திருமணத்தன்று நடுராத்திரி 2 மணியளவில் கரண்ட் போய் விட்டது.
4.மறுநாள் காலை 5 மணிக்கு என் மாமா மகன் கயிற்றில் வாளியினை கட்டி சம்ப்பிலிந்து தண்ணீர் கிணத்தில் இறைப்பது போல இறைத்து இரண்டு பெரிய ட்ரம்களில் என் உதவியுடன் நிரப்பினான். நான் தான் கயிறும்,வாளியும் எடுத்து கொடுத்தேனாக்கும்.மேலே டேங்கில் இருந்த தண்ணீரை டாய்லெட்டிற்கு மட்டும் யூஸ் செய்யுமாறு வந்திருந்த மக்களுக்கு ரூம்,ரூமாக என் கையெத்துடன் சர்க்குலர் அனுப்பினோம்.
5. பக்கத்து வீட்டிற்கு மிக்சியுடன் சென்று தேங்காய்,தக்காளி சட்னி செய்தோம். கல்யாணத்தில் சட்னி இல்லை என்று யாரும் குறை சொல்லிட கூடாது இல்லையா. மதிய சமையலுக்கு தேங்காய் போட்டு வைத்து கொண்டோம்.காலையில் ரவா புட்டு,இட்லி,தோசை,இரண்டு வகை சட்னி+ சாம்பார். உளுந்த வடை கேன்சலானது அனைவருக்கும் வருத்தமாயிருந்தது. இந்த கடங்கார கரண்ட்டால் வடை போச்சே....
10 மணியளவில் எலக்ட்ரீஷியன் வந்தார். மெயின் ஃபோர்டில் ஒரு வயர் நன்கு எரிந்து போய் இருந்ததை இரண்டே நிமிடத்தில் மாற்றி கொடுத்து காலை டிஃபன் திருப்தியாய் சாப்பிட்டு சென்றார்.
6.இந்த திருமண வைபவத்தால் கஷ்டப்பட்டது சத்தியமாய் நான் இல்லை. வந்திருந்தவர்களை பார்த்து மிரண்டு கஷ்டப்பட்டது ரீனாவும், ரியோவும் தான். பாவம் எப்பவும் வெராண்டாவில் கட்டுண்டு கிடந்தார்கள்.
7.மாலை ஆர்டர் கொடுத்த தாம்பரம் பூக்கடைக்கு ஞாயிறு காலையிலிருந்தே மூன்று முறை ஃபோன் செய்தேன். ஆமாம்மா.”
மாலைக்கு, மாலை” 4.30 க்கு வந்திடுங்கள் என்று சொன்னார். அதை நம்பி காரில் தாம்பரம் பாலத்தடியில் இருக்கும் பூக்கடைக்கு என் மகனுடன் போனால் அப்போது தான் ஒரு கூட்டமே திருமண மாலையினை தள்ளாடியவாறே கட்டி கொண்டு இருக்கிறார்கள். ஒரு மணி நேரம் எங்களை காக்க வைத்து பிறகு மாலையினை கொடுத்தார்.இனிமேல் நானே மாலை கட்டி கொள்வேன்.அவ்வ் ஒரு மணிநேரத்தில் அவர்களின் தொழில் சீக்ரெட்டை கத்துக் கொண்டேன். இவ்ளோ சம்பாதித்தும் அனைத்தையும் டாஸ்மார்க்கிற்கே கொடுப்பார்கள் போல. கன்னா,பின்னாவென்று குடிகாரா மாலைக்காரருடன்
குடிக்காத நான் சண்டை போட்டேன்.
திருமணத்திற்கு பிறகு:
என்னருமை மகன்கள் அடித்த கமெண்ட்: ஏம்மா, நம் வீட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும் மனுஷங்க தானே.ஊரில இருந்து தானே வந்தாங்க. மார்ஸிலே இருந்து வரலையே.எதற்கு இவ்ளோ டென்ஷன்,இவ்ளோ காம்ப்ளிகேஷன்? என்று சிறிதும் அலட்டிக்காமல் கேட்டார்கள்.இருவரும்,முக புத்தகம்,செல்ஃபோன் என எதையும் இந்த 4 நாட்களில் மிஸ் செய்யவில்லை.
நாங்கள் எடுத்த முடிவு: நானும், என் கணவரும் இந்த இரு மகன்களும் அவுங்க கல்யாணம் எங்கே என்று எங்களிடம் சொல்லிட்டு செஞ்சாங்கன்னா???? அங்கே நேரே போய் அட்டெண்ட் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம்.
நன்றி: IG ரிசார்ட்டின் மானேஜர் மிக குறைந்த வாடகை வாங்கி கொண்டு நீங்கள் அட்ஜஸ்ட் செய்தால் எத்தனை பேர் வேண்டுமானாலும் தங்கி கொள்ளலாம் என்ற அனுமதி கொடுத்தார். இரவு கூட்டம் அதிகம் வந்த போதும் சாப்பாட்டிற்கு திண்டாட்டம் இல்லாமல் செய்தார்.
நீதி: சமையல் செய்ய வந்த ஜெயாம்மா ஆகஸ்ட் 31 திடீரென்று மாரடைப்பால் திண்டுக்கல்லில் இறந்து விட்டார். வயது 65.இங்கே 10 நாட்கள் முன்பு சுறுசுறுப்பாக எங்கள் வீட்டில் வேலை செய்த அந்த ஜீவன் இன்று இல்லை என்பதை நினைக்கவே முடியவில்லை. யாருக்கும் எதுவும் எப்பவும் நடக்கலாம்.
எனக்கு கிடைத்த பல்பு:
இந்த கல்யாணம் காதல் கல்யாணமாம்.அதை பெண்ணோ, அவளின் அம்மாவோ கடைசி வரை என்னிடம் கூறவில்லை.
காதல் சொதப்பவில்லை.கல்யாணம் தான் கொஞ்சம் சொதப்பி கடைசியில் சூப்பரா நடந்துடுச்சு.
அட போங்கப்பா எங்கே இருந்தாலும் நல்லாயிருங்க.
அடுத்து யாருக்காவது திருமணம் நடத்தி வைக்க வேண்டுமா? என்னை அணுகவும்.
இப்படிக்கு வெட்டிங் ப்ளானர்