Monday, June 27, 2011

திருப்பதி தேவஸ்தானத்தின் காட்டுமிராண்டிதனம்

போன சனியன்று திருப்பதி-திருமலை போய் வந்தேன். ஏழுகொண்டலவாடாக்கு மக்கள் மேல் என்ன கோபமோ தெரியலை.
கோயிலிற்கு செல்பவர்கள் சக்கை பிழிந்து அனுப்ப படுகிறார்கள். நான் போன அன்று செம கூட்டம்.கோயில் உள்ளே மெயின் கோபுரம் நுழைந்ததும்,உள்ளே தரிசனம் முடித்தவர்கள் வெளியே வரவும் இரண்டாவது கேட்டில் கட்டி வைத்துள்ள கயிறினை இழுத்து கியூவில் வரும் நம்மை உள்ளே அப்படியே தள்ளுகிறார்கள்.ஆடு,மாடு மந்தைகள் போல ஒரு 700 முதல் 1000 பேர் கியூ எதுவும் இல்லாமல் அப்படியே தப தபெவென்று கோயில் உள்ளே ஓடுகிறார்கள்.இதில் கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்,வயதானவர்கள் எல்லோரும் இருக்கிறோம்.

உள் பிரகாரத்தில் ஒரே அடிதடி கோயில் உள்ளே கருடாழ்வார் இருக்கும் இடத்தில் நுழைவதற்கு.நன்கு பலசாலிகளாய் இருப்பவர்கள் அடித்து பிடித்து உள்ளே நுழைய அவர்களுடன் மாட்டி கொண்ட நாமும் அப்படியே இழுத்து செல்ல படுகிறோம்.அப்பாடி உள்ளே போயாச்சு அதோ ஏழுகொண்டலவாடா தெரிகிறார் என பார்த்து கொண்டே செல்லும் போது உள்ளே தடிதடியாய் உள்ள தேவஸ்தான ஆட்களும், கல்லூரியில் படித்து கொண்டே இங்கே சேவைக்காக வந்துள்ள புளூ யூனிஃபார்மில் இருக்கும் பசங்களும் (Guide) (என்ன சாப்பாடு சாப்பிடுகிறார்களோ) ஒரு வரைமுறையின்றி அகப்பட்ட பக்தர்கள் முதுகில் இரண்டு கை வைத்து கன்னாபின்னாவென்று தள்ளுகிறாகள்.
தள்ளப்பட்டவர்கள் அடுத்தவர்களில் மீது மோதி அவர்களையும் தள்ளுகிறார்கள்.துண்டை காணோம்,துணியை காணோம் என்று வெளியில் வீசி எறிய படுகிறோம்.சாமி கும்பிட போன இடத்தில் கெட்ட வார்த்தைதான் வாயில் வந்தது.

300 ரூபாய் சீக்கிர தரிசனத்திற்கு தர்ம தரிசனத்திற்கு வரும் கூட்டம் வருகிறது. செம கலெக்‌ஷன்.அடைக்கப்பட்டிருக்கும் கேஜில் இருந்து கோயில் சைடில் இருக்கும் மரப்பாலத்தில் பக்தர்கள் வரும் முன்னர் 50 ரூபாய்,300 ரூபாய், மற்றும் தர்ம தரிசனத்திற்கு வரும் அனைவரும் ஒரே பாதையில் இணைத்து விடுகிறார்கள்.


இவ்வளவு பணம் வைத்துள்ள தேவஸ்தானம் டெக்னாலஜி இவ்வளவு வளர்ந்தப்பிறகும் இப்படி காட்டு மிராண்டிதனமாய் நடந்து கொள்வது எதற்காக? மனிதனை இப்படி விலங்குகளை போல் எதற்கு நடத்த வேண்டும்.
அமைதியான முறையில் அங்கு தரிசனம் செய்ய வழியே இல்லையா? அதற்கு நம் அறிவியல் நமக்கு உதவாதா? தேவஸ்தானத்தில் ஐ.ஏ.எஸ் படித்தவர்கள் கூட வேலை செய்கிறார்கள்.அவர்கள் படிப்பு இதற்கு உதவாதா?

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தை வைத்திருக்கும் குடும்பம் கோயில் உள்ளே செல்வதற்கு ஒரு ஸ்பெஷல் வரிசை உள்ளது. உள்ளே நுழையும் போது அந்த கைக்குழந்தையின் கையில் புளூமையால் ஒரு வாரத்திற்கு அழியாத அடையாளம் வைக்கப்படுகிறது!!!

லட்டு கொடுக்கும் இடம் மிக பெரியதாய் கட்டப்பட்டு லட்டு சீக்கிரம் வழங்குகிறார்கள்.ஒரு இடத்தில் இங்கு காலாணிகள் வைக்கும் இடம் என்று இருந்தது.பார்த்து சிரித்துக் கொண்டே வந்தோம்.இடுக்கண் வருங்கால் நகுக...

Tuesday, June 21, 2011

போன ஜென்மத்தில் காட்டுவாசி

இவனை என்ன செய்றதுன்னே தெரியலை.ஆறு மாதங்களாக சென்னை ட்ரக்கிங் கிளப்பில் சேர்ந்துட்டு இவன் செய்ற அலம்பல்களை பொறுத்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

வாரவாரம் ட்ரக்கிங் போறேன்னு இவன் செய்ற அலம்பல்கள். வெள்ளி காலையிலேயே போவதற்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு வேலைக்கு செல்கிறான். இல்லைன்னா வெள்ளி கிழமை மட்டும் வொர்க் ஃப்ரெம் ஹோம் என்கிறான்.காட்டில் படுத்துக் கொள்வதற்கு ஒரு ஸ்லீப்பிங் பேக்,சாப்பிடுவதற்கு ஒரு கிண்ணம்,ஒரு ஸ்பூன்,ஒரு செட் அழுக்கு ட்ரெஸ்.ரெடியாய் எந்நேரமும் தயாராக இருக்கிறது. ஆந்திராவில் நாகலாபுரம்,கர்நாடகாவில் ஷராவதி, ஊட்டி முதுமலை காட்டில் அனிமல் சென்சஸ்,கொடைக்கானல் டூ பழனி நடை,மூணாறு என்று வாரம் ஒரு இடம்.

கடந்த ஆறு மாதங்களில் இவன் போன இடங்கள் தான் மேலே சொன்னவை. எப்பவும் அதே பேச்சு. போகும் முன்னாடி எங்கே போகிறோம் என்று லொட லொட. போயிட்டு வந்த பிறகு என்ன பார்த்தோம் என்று லொட லொட. ஒவ்வொரு முறை போகும் போதும் அம்மா போகட்டுமா என்று ஒரு சம்பிரதாய கேள்வி.உன் அப்பாக்கிட்ட கேட்டுக்கோ என்பேன் வழக்கமாய். நான் நேற்றே டாடிக்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டேன் என்று போகிற போக்கில் எனக்கு ஒரு பல்பு. சும்மா நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று ஒரு மைக் டெஸ்டிங் என்று சொல்லி விட்டு என் கையில் அகப்படாமல் ஒரே ஓட்டம்.

எதாவது சொன்னால், சீக்கிரம் படித்து சீக்கிரம் வேலைக்கு போயாச்சு ஏன் இப்படி திட்டிக்கிட்டே இருக்கீங்க என்று கேள்வி கேட்கிறது.பொண்டாட்டி வந்தா விடமாட்டா நீங்க என் செல்லம்ல என்று ஒரே ஐஸ்.நகுல் இந்த வாரம் ஹிமாலயாவில் ரூப்கண்ட் போயிருக்கான்.

Thursday, June 16, 2011

"வந்து” படும் பாடு

வந்து நான் ஒரு பதிவு போடணும் என்று நினைத்தேன்.எங்க வந்து என்றெல்லாம் கேட்க கூடாது.

என்னுடைய பேட்டி டிவியில் ”வந்தால்” இப்படி தான் இருக்கும்.

சமச்சீர் கல்வி பற்றி:

புதிய அரசு வந்து சமச்சீர் கல்வி வேண்டாம் என்கிறார்கள்.வந்து, போன அரசு அதை செயல்படுத்தியது தான் காரணமா,தெரியலை.வந்து இப்ப வந்து பார்த்தீங்கண்ணா,புதிய அரசு எப்படி சில நாட்களுக்குள் சமச்சீர் கல்வி சரியில்லை என்று கண்டுபிடித்தது? வந்து எல்லா ஸ்டேட்ஸ்லேயும் இரண்டே முறை கல்வி தான் உள்ளது.அது வந்து சி.பி.எஸ்.சி, மற்றும் அந்த அந்த ஸ்டேட் ஃபோர்ட் மட்டும் தான் உள்ளது. வந்து இங்க தமிழ் நாட்டில் மட்டும் தான் வந்து பார்த்தீங்கண்ணா இத்தனை கல்வி முறைகள். எனவே, இது ஒன்றும் இந்தியாவிற்கு புதிய கல்வி முறை இல்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பற்றி:

உலகத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் வந்து ஆப்கானிஸ்தான் தான் இதில் முதல் இடம் வகிக்கிறது. அதன் பிறகு வந்து பார்த்தீங்கன்ணா வந்து காங்கோ வருது லிஸ்ட்ல. மூணாவதா பார்த்தீங்கண்ணா வந்து பாகிஸ்தான் வருது. வந்து மருத்துவ வசதி இல்லாததால் வந்து இங்கு தான் அதிக பெண்கள் வந்து இறக்கிறார்கள்.நான்காவதாக வந்து வருத்தத்துடன் இந்தியா அப்புறமா சோமாலியா.
வந்து பிரசவத்தில் இறப்பு,
வந்து படிப்பறிவு கம்மி,
வந்து கட்டாய திருமணம்,
பெண்கள் பலவந்தமாக கற்பழிக்கப்படுதல்,
குழந்தை உண்டான பெண்கள் சோகைநோயுடன் இருத்தல்,
பெண்கள்,பெண்குழந்தைகள் விபச்சாரத்திற்காக கடத்தப் படுதல்,
18 வயதிற்கு முன்பே திருமணம் செய்வித்தல்,
கருவிலே கொல்லுதல் இப்படி கணக்கெடுத்து தான் இப்படி வந்து ரேங்கிங் செய்து இருக்காங்க.

மூணாறு பற்றி:

2010-ல் ஆசியாவிலேயே மூணாறு தான் இரண்டாவது பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்டா செலக்ட் ஆகி இருக்கு.வந்து இங்க பார்த்தீங்கண்ணா மலை முழுவதும் தேயிலை செடிகளாக இருக்கும். 19ஆவது நூற்றாண்டு இறுதியில் தான் இங்கு தேயிலை பயிரிடப்பட்டதாம்.வந்து டோக்கியோ முதல் இடமாம்.வந்து online travel guide TripAdvisor 8 வருடங்களாக தேர்ந்தெடுக்கிறது.


வேறு ஒன்றும் இல்லை. டிவியில் யாரேனும் நம் தமிழ்க்காரங்க பேட்டி கொடுத்தாங்கண்ணா இப்படி வந்து வந்து என்று அடிக்கடி சொல்றோம். வந்து ஒரு பாயிண்ட் சொல்லும் போது அடுத்த பாயிண்டை யோசிக்க இந்த வந்துவை உபயோகப்படுத்துகிறோம் போல.

Tuesday, June 07, 2011

ஊர் தான் காரணமா?

போன வாரம் நான் கலந்து கொண்ட திருமணத்தில் மனம் நொந்து போயிருந்த மூன்று பெற்றோர்களை சந்தித்தேன்.அவர்கள் அவர்களின் மகன்/ளால் மனம் நொந்து போய் இருந்தார்கள்.அவர்களின் மகன்/ள் அவர்களாகவே திருமணம் செய்து கொண்டு விட்டது தான் காரணம்.இல்லை ஓடிப்போய்விட்டது தான் காரணம்.

நான் பார்த்த மூன்று பெற்றவர்களும் குறை சொன்னது சென்னையை தான்.சென்னைக்கு படிக்க அனுப்பினேன்,வேலைக்கு அனுப்பினேன் ஓடி போயிட்டான்/டாள்.என்னமோ சென்னையில் தான் பிள்ளைகள் தினம் ஓடிப் போவதை போல்.

சென்னையிலேயே பிறந்து வளரும் குழந்தைகளை காட்டிலும் தமிழ்நாட்டின் உள்நகரகங்களில்,கிராமங்களில் இருந்து வேலைக்காக, படிப்பதற்காக சென்னை வருபவர்களே இப்படி காதலில் சிக்கி கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது.சென்னையில் காதல் செய்வது மிக சுலபம்.சொந்தக்காரர்கள் அதிகம் இருப்பதில்லை. தெரிந்தவர்கள் கண்களில் படாமலே நல்லா ஊர் சுற்றலாம்.வேலைக்கு வரும் போது அனுபவிக்கும் திடீர் சுதந்தரம் மிகுந்த தைரியத்தினை தருகிறது.பெற்றவர்களை தலை குனிய செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது.சர்வ சாதாரணமாய் அபார்ஷன் செய்து கொள்கின்றனர்.ஒரு குழந்தைக்கு எத்தனை ஜோடிகள்,எத்தனை வருடங்கள் உண்மையாய் தவம் இருக்கின்றனர்.இப்படி வேண்டாதவர்களுக்கு குழந்தை உண்டாவதும், வேண்டியவர்கள் காத்து கிடப்பதும் கொடுமை.

இன்னொரு கொடுமை என்னவென்றால் ஜாதி பார்ப்பதால் தன் பெண்ணை கட்டாயப்படுத்தி தங்கள் ஊருக்கு அவள் காதல் கணவனிடமிருந்து பிரித்து அழைத்து சென்று வேறு ஒருவருக்கு திருமணம் செய்விப்பது.ஊரில் அந்த குடும்பத்தில் அப்படி நடந்தது இந்த குடும்பத்தில் இப்படி நடந்தது என்று அவர்களே சொல்ல கேட்டப்போது எங்கே இருக்கிறது நம்ம கலாச்சாரம் என்று தேடி கொண்டு இருக்கிறேன். கலாச்சாரம் என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாத்தி கொள்வதற்கு உண்டான ஒரு பேத்தல் வார்த்தை என்று புரிந்தது. இதில் சிலர் திரும்பவும் வீட்டில் எல்லோரையும் ஏமாற்றி விட்டு ஓடி போன கதைகளும் உண்டு.

சென்னையில் இருக்கும் பெற்றோர் தங்கள் மகன்/மகள் காதல் செய்வது தெரிந்தால் ஒத்துக் கொண்டு திருமணம் முடித்து வைக்கின்றனர்.ஆனால், கிராமங்களில் ஜாதி காரணமாய் அதனை ஒத்துக் கொள்வது இல்லை. எனவே, சொல்லாமல், கொள்ளாமல் ஓடி விடுகின்றனர்.

இங்கு சென்னை சமூகத்திலும் காதல் கல்யாணத்திற்கு உடனே பெற்றோர் ஒத்துக் கொள்வதில்லை. அந்த ஜோடிக்கு சொல்லி பார்க்கிறார்கள். கேட்கவில்லை எனில் டீசண்டாய் திருமணம் செய்விக்கின்றனர்.ஆனால், ஊரிலோ வறட்டு கெளரவம் பார்த்து கொண்டு ஓட விட்டு அப்புறம் தேடுகின்றனர் அல்லது புலம்புகின்றனர்.

ஊரில் ஆண், பெண் பேசவே கூடாது என்று வளர்க்கப்படும் சூழலில் திடீரென்று வேலைக்கு அல்லது மேற்படிப்பு படிக்க வரும் போது சென்னையில் இருக்கும் சுதந்திர சூழ்நிலையில் எதிர்பாலிடம் சாதாரணமாய் பேசும் போது கூட காதல் என்று மிக எளிதில் விழுந்து விடுகின்றனர்.ஆண்,பெண் நட்பு என்பது புரிவதில்லை.

சென்னையில் மகளை/னை வளர்க்கிறார்கள் கட்டாயம் காதல் திருமணம் தான் செய்வார்கள் என்று ஊரில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். சாதாரண ஆண்,பெண் நட்பினை கொச்சை படுத்தி பேசுவார்கள்.சும்மா ஒரு முறை டூவீலரில் யாருடனவாது அவசரத்திற்கு போனாலே காதல் என்று கதை கட்டுவார்கள்.

இங்கேயே பிறந்து வளரும் குழந்தைகள் தெளிந்த சிந்தனையுடன் இருக்கிறார்கள்.ஆண்-பெண் நட்பினை சாதாரணமாய் எடுத்துக் கொள்கிறார்கள்.அதை பெற்றவர்களும் புரிந்துக் கொள்கிறார்கள். இங்கு நான் சொல்வது எல்லாமே மிடில் க்ளாஸ் மக்களை பற்றி.

ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. இனிமேல் திருமணத்திற்கு ஆணோ அல்லது பெண்ணோ பார்க்க போகும் போது காதல் எதுவும் முன்னாடி இருக்கா என்று சம்பந்தப்பட்டவர்களையே நேரில் விசாரித்து திருமணம் முடிப்பது அனைவருக்கும் நல்லது. இல்லையெனில் ஓடிபோனவன்/ள்,திரும்ப வந்தவள்/ன்,திரும்ப ஓடிப்போக ப்ளானில் இருப்பவன்/ள் என்று யாராவது நம் வீட்டிற்கு வர சான்ஸ் உள்ளது.

எப்பவும், எங்கேயும் ஓடி போகிறவர்கள் இருப்பார்கள்.ஊர் என்ன செய்யும்? என் அம்மா ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே காதல் திருமணம் நடந்து இருக்கிறது. 1960-களில்.என்னவோ இப்பதான் கலிகாலம் முத்திவிட்டது என்பது போல் புலம்பவது தானே நம்ம ஸ்டைல்.


Friday, June 03, 2011

திரும்பவும் ஒண்ணாப்பு

ஏற்கனவே 3 முறை ஒண்ணாப்பு படிச்சாச்சு.ஒன்று எனக்காக நானே படிச்சது.திரும்ப படிச்சது என் இரண்டு பசங்களுக்காக.இப்ப நான்காவது முறையாக ஒண்ணாப்பு படிக்க போவது என் தம்பி மகன் விஷாலுடன்.போன வாரம் திடீரென்று என் தம்பிக்கு பெங்களூர் ட்ரான்ஸ்ஃபர்.இங்கே விஷாலுக்கு ஏப்ரலிலேயே ஸ்கூல் அட்மிஷன் எல்லாம் முடித்து ஜூன் 3-ல் ஸ்கூல் ஓப்பனிங்கிற்காக காத்து இருக்கையில் பெங்களூர் ட்ரான்ஸ்ஃபர்.அதனால், விஷால் இனிமேல் இங்கே என் வீட்டில்.ஆகவே இந்த வருடம் படிப்பு எனக்கு ஜாஸ்தி இருக்கும். அதிக பதிவுகளை எழுத முடியாது என்றே நினைக்கிறேன்.(அப்பாடி நிம்மதி என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது)

போன ஜூனில் தான் நான் மிக சந்தோஷமாய் இருந்தேன்.அப்பாடி என் சின்ன மகனும் ஸ்கூல் முடித்து காலேஜ் போகிறான் என்று.யாரோ கண்ணு போட்டுடாங்க.இன்னையிலிருந்து ஸ்கூல் திரும்ப ஆரம்பம்.விஷால் சேர்ந்து இருக்கும் ஸ்கூலில் நோ யூனிஃபார்ம்,நோ ஷூ, நோ டை எனவே நிம்மதி என்று நினைத்தேன்.ஆனால்,காலையில் செம பல்பு, கலர் ட்ரெஸ் பெரிய டெரர் போல அந்த ட்ரெஸ் வேண்டாம் இந்த ட்ரெஸ் வேண்டாம் என்று காலையில் சார் செம ட்ரில்.கடைசியில் அவருக்கு பிடித்த ஒரு ட்ரஸ்ஸில் ஸ்கூல் போனார்.

ஒண்ணாப்பில் இப்பவும் அ ஃபார் அம்மா தானா? நான் அத்தைன்னு சொல்லி தரப்போகிறேன்.நான் வளர்த்த என் இரண்டு பசங்களை பார்த்த பிறகும் என்னை நம்பி தன் மகனை என்னிடம் விட்டு போகும் என் தம்பியின் தைரியம் யாருக்கு வரும்.