Friday, March 04, 2011

தூத்துக்குடி ஆயின

உறவுகள் நல்லது கெட்டதுன்னு ஒன்னு கூடும்போது அதற்கு வந்திருக்கும் சிலரை பெயர் இல்லாது நம் வீட்டு பெரியவர்கள் இப்படி மற்றவர்களிடம் சொல்வதுண்டு.எங்கள் வீட்டில் எப்படின்னா? தூத்துக்குடி ஆயின, வாங்கல் ஆயின,திருச்சி ஆயின,மதுரை ஆயின,மெட்ராஸ் ஆயின. ஆயின தெலுங்காம்!!. முறையே தூத்துக்குடிக்காரர், வாங்கல்காரர்,திருச்சிக்காரர்,மதுரைக்காரர், மெட்ராஸ்காரர்.

அவர்களுக்கு என்ன பெயர் என்றே தெரியாது. அந்த ரூமில திருச்சி ஆயின உட்கார்ந்து இருப்பார் அவரை கொஞ்சம் இங்க வர சொல்லு என்றதும் அவரிடம் சென்று எங்க தாத்தா கூப்பிடுறாங்க என்று சின்ன வயதில் சொல்லி சென்றதுண்டு.அவர் பெயர் என்ன என்று தெரிந்துக் கொள்ள முயன்றதில்லை. எப்பவும் அவர் திருச்சி ஆயின தான். திருச்சி மாமா என்று சின்னவர்களும், திருச்சி ஆயின என்று பெரியவர்களுக்கும் பழக்கம். என்னவோ அவர் ஒருவர் தான் திருச்சியில் இருப்பது மாதிரி.

அப்பொழுதெல்லாம் தெரியாத உறவுகளில் ஆண் என்றால் மாமா,பெண் என்றால் அத்தை என்று தான் சொல்றது வழக்கம். இப்ப ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

ஒரு முறை கருமாதி பத்திரிக்கை பார்த்து அதில் இருந்த ஃபோட்டோ பார்த்து தான் தூத்துக்குடிக்காரர் பெயர் ராமகிருஷ்ணன் என்றே எனக்கு தெரியும். அவர் செத்த பிறகு தான் அவரின் பெயர் தெரிந்துக் கொண்டோம்.

ஊரின் பெயரை தங்களுடன் விரும்பி இணைத்து கொண்டவர்கள் உண்டு.அரசியல்வாதிகள் தான் பெரும்பாலும் அப்படி செய்வார்கள். ஆனால், உறவுக்காரர்களால் ஒரு அடையாளத்திற்கு வைக்கப்பட்டு பிறகு அதுவே நிலைத்தும் விடுகிறது. திருச்சியில் இருந்து 4 உறவுக்காரர்கள் வந்தாலும் அது ஏனோ ஒருவருக்கு மட்டுமே திருச்சிக்காரர் என்ற பெயர் வைக்கப்படுகிறது.பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டும் தான் வைக்கப்படுகிறது.இன்னும் சிலர் அவர் வேலை செய்யும் இடத்தினை வைத்து அழைக்கப்படுவதும் உண்டு.ரயில்வேக்காரர், பேங்க்காரர்,மிலிட்டரிக்காரர் இப்படி.

உங்கள் உறவுகளில் இப்படி ஒருவர் நிச்சயம் இருப்பார் என்ற நம்பிக்கையுடன்.


8 comments:

MANO நாஞ்சில் மனோ said...

எங்கள் வீடு உப்பளம் பக்கம் இருப்பதால், எங்கள் குடும்பத்தார் எங்களை அளத்தான்கரை வீடு என்றுதான் குறிப்பிடுவார்கள்....

Vidhya Chandrasekaran said...

ஊர் பேர் சொல்லி அடையாளம் காட்டப்படும் உறவுகள் எங்கள் பக்கமும் உண்டு:)

அன்புடன் அருணா said...

என்னை எங்க வீட்டுலே ஜெய்ப்பூர்க்காரின்னுதான் சொல்வாங்க!

Chitra said...

பதிவுக்காரவுக ...நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...

pudugaithendral said...

ஓ மீர் தெலுகா... :))

ஹுஸைனம்மா said...

ஆமா ,எங்க ஊர்லயும் இப்படி வீட்டுப் பெயர்கள் உண்டு. சிலது தமாஷா இருக்கும்!!

மாதேவி said...

இங்கு ஊர் பேர் சொல்லி அழைக்கும் பழக்கம் முன்பெல்லாம் இருந்தது.

இப்பொழுது இல்லை என்றே சொல்லலாம்.

Anonymous said...

செங்கோட்டை கோனார்களுக்கு ‘கோனார்கள்’ என்ற ஜாதிப்பெயர் கிடையாது. ‘கரையாளர்கள்’ என்றே பெயர். அதுவே அவர்கள் ஜாதிப்பெயராகி விட்டது.

அவர்கள் தங்கள் பெயருடன் இணைத்துச்சொல்வார்கள் official ஆக.

இப்படி: நடராஜ கரையாளர். சண்முக கரையாளர் என்று.

கரையாளர் என்பது செங்கோட்டை கேரளாவை ஒட்டி இருப்பதால்.

இடப்பெயரே ஜாதிப்பெயாரகி விட்டது.

இப்படிக்கு

ஒரு தூத்துக்குடி ஆயின