Friday, April 11, 2014

அழிக்க நினைத்தவன் அசத்துகிறான் -3

அசத்துகிறான் -1
அசத்துகிறான் -2

டாக்டர் அங்கிட்டு இங்கிட்டு போகும் போது என்னப் பிள்ளை வலி வந்துச்சா இல்லையா..எங்க ட்ரிப் ஏத்தி ஏத்தி கைதான் வலிக்குதுன்னு சொல்வேன்.10 ஆம் தேதி இரவு எங்கூட்டு ஆளுங்க + டாக்டர்கள் சதி திட்டம் தீட்டி 11 ஆம் தேதி காலையில 4 மணிக்கு சிசேரியன் செய்தாங்க.என்ன சார் வெளியில வரவே இஷ்டம் இல்லையான்னு சொல்லிக்கிட்டே ஒரு தடிப்பயலை வெளியில் எடுத்தாங்க பாருங்க நான் அழுக ஆரம்பிச்சுட்டேன். ரூமில் வந்து என்னை போடவும் என் பையனை என் பக்கத்திலேயே தான் போடணும் நான் அவனை பார்த்துட்டே இருப்பேன்னு தூங்கவேயில்லை.கொட்ட கொட்ட முழிச்சுட்டே இருந்தேன்.பையனுக்கு ஃபிட்ஸ் வருதா வருதான்னு செக்கிங்.மயக்கமா இருந்துச்சு ஆனா முழிச்சே இருந்தேன்.ஹெவி டோஸ் தூக்கத்துக்கு மருந்து கொடுத்திருக்கு இப்படி கொட்ட கொட்ட முழிச்சுட்டு இருக்காளேன்னு கண்ணை மூடி தூங்கு இல்லைன்னா உனக்கு பிராந்தி தான் கொடுக்கணும் என்று சொல்லிட்டு டாக்டர் சிரிச்சுட்டே போயிட்டாங்க.

                                            
மாமாவே குழந்தை நல மருத்துவர் தான். அவர் பையனை செக் செய்துட்டு நார்மலா இருக்கான்னு சொல்லிட்டு போனார்.ராத்திரிதான் தூங்கினேன்.7ஆவது நாள் தையல் பிரிக்கணும் என்று டாக்டர் சொல்லிட்டு காலை 11 மணிக்கு வருவோம்னு சொன்னாங்க.தையல் பிரிச்சா வீட்டிற்கு ஓடிடலாம்னு இருக்கும் போது கரெக்டா காலை 7 மணிக்கு பையனுக்கு ஃபிட்ஸ் வந்திடுச்சு.போச்சா இப்ப நான் அழுகவேயில்லை. என்ன என்ன மாத்திரை எவ்ளோ டோஸ் கொடுக்கணும்,விட்டமின் டி-3,கால்ஷியம் இவைகள் தான் தேவை என்று எனக்கு தான் தெரியுமே.
ஹாஸ்பிட்டலுக்கு வந்த என் கணவரை உடனே ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் அன்றிரவு எந்த ட்ரையினில் டிக்கெட் கிடைக்குதோ அதற்கு சென்னைக்கு டிக்கெட் வாங்கி வர சொல்லி அவர் முத்துநகரில் எமர்ஜன்சி கோட்டாவில் வாங்கி வந்தார். இன்னைக்கே போகணுமா உன்னால் முடியுமா முடியுமா என்று பாவம் கேட்டு கொண்டே இருந்தார். எவ்வளவு சீக்கிரம் போறோமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியுமே.

மறுநாள் காலையில் 10 மணிக்கெல்லாம் எக்மூர் சில்ண்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டலில் அட்மிஷன் போட்டு வந்த டாக்டரிடம் என்ன என்ன ப்ளட் செக்கப் செய்ய வேண்டும் என்று நானே முந்திரிக் கொட்டையாய் சொல்லி பெரியவனின் கேஸ் ஹிஸ்டரி முழுவதும் ஒப்பித்து கால்ஷியம் லெவல், தைராய்டு லெவல் அடுத்த நான்கு நாட்களில் தெரிந்து கொண்டு 5 ஆவது நாளில் இன்று கட்டாயம் என்னை டிஸ்சார்ஜ் செய்து விடுங்கள் என்று நானே கேட்டு கொண்டு ஹாஸ்பிட்டலை விட்டு ஓடி வந்தேன்.பெரியவனுக்கு 23 நாட்கள் பட்ட துன்பத்தை இவனுக்காக 5 நாட்கள் மட்டும் அனுபவித்தேன். அதன் பிறகு ரொட்டீன் செக்கப் அது இது என தொடர்ந்த கவனிப்பால் இன்று இரண்டும் வளர்ந்து விட்டன.
                                           


பொறுமையாக வெளியில் வராமல் 20 நாட்கள் எக்ஸ்ட்ராவாக  வயிற்றிலேயே  இருந்த ரிஷி மிக பொறுமைசாலி.

அதிர்ந்தே பேசாது.வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிய என்னிடம் தான் மிக க்ளோஸ்.மிக பொறுமையாக பறவைகள்,விலங்குகள் என படம் எடுத்து அசத்துகிறான்.இன்று ரிஷிக்கு பிறந்த நாள்.சில மாதங்களாக கர்நாடகா காடுகளில் சுற்றி கொண்டிருக்கிறான்.இந்த துறையில் எவ்ளோ தூரம் சாதிக்க முடியும் என்று தெரியவில்லை. எனினும் சின்ன வயதில் ஒரு முயற்சி செய்யட்டுமே என்று அவன் விரும்பிய துறைக்கு செல்ல ஓக்கே சொல்லிட்டோம்.

அழிக்க நினைத்தவன் அசத்துகிறான் -2


அசத்துகிறான் - 1

முதலில் பையனா பிறந்ததால் தான் அவனுக்கு அப்படி ஆச்சு. இது பொண்ணா இருந்தா அந்த மாதிரி வரவே வராது.சயின்ஸ் படி அது சாத்தியமே இல்லை.xx,yy,xy,yx-ன்னு வரலாறு படித்த சயின்ஸ் பிடிக்கவே பிடிக்காத என்னை குழப்பினார்கள். அதுவுமில்லாமல் சமத்தா உன் பெரிய பையனை எப்படி வளர்த்து வர பாரு.அவன் தனியா இருப்பானா.நம்ம ஃபேமிலி எவ்ளோ பெரிசு பாரு.(என் கணவர் எட்டாவது குழந்தை) அவன் மட்டும் தனியாளா வளரணுமா அப்படி இப்படின்னு ப்ரையின் வாஷ் செய்து பயமுறுத்தி,போராடி என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.யாருமே என் கட்சியில் இல்லை.

                                                 
சரி நடப்பது நடக்கட்டும் என்று ஊருக்கும் ரிடர்ன் வந்துட்டேன். இங்கே வந்து 4வது மாதத்தில் ஸ்கேன் செய்தால் நீ அசையவே கூடாது..குழந்தை பொஸிஷன் சரியில்லை.நான் என் தம்பியுடன் ஸ்கேன் செண்டர் போயிருந்தேன். பெரியவுங்க யாரையும் அழைச்சுட்டு வரலையா என்று ஏகமா பயமுறுத்தினாங்க. ஆஹா அடுத்த யுத்தம் ஆரம்பமா போச்சுடான்னு வீட்டிற்கு எலக்ட்ரிக் ட்ரையின் ஏறி வந்தேன்.என்னோட அம்மா பயந்து போய் என்னை திண்டுக்கல்லிற்கே அனுப்பி விட்டார்கள்.அங்கே போய் ஸ்கேன் செய்து பார்த்தா அதே பல்லவி. சரியென்று வேலை எதும் செய்யாமல் ஜம்முன்னு டாக்டர் பார்ப்பது மட்டும் வேலைன்னு இருந்துக் கொண்டேன்.

                                     

மார்ச் 23 டேட் கொடுத்து இருந்தார்கள்.வலியே வராது ஆனாலும் ஹாஸ்பிட்டல் வந்துடுன்னு சொன்னதும் 22 தேதியே ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனேன். 23 சிசேரியன் செய்துடலாம் என்று ப்ளான். எதுக்கும் 22 ஆம் தேதி இரவு ஒரு ஸ்கேன் செய்யலாம் என்று பார்த்தால் 9 மாதமாக பொஸிஷன் சரியில்லை சரியில்லை என்று இருந்த குழந்தையின் பொஸிஷன் அன்னைக்கு திடீரென்று சரியாகி விட்டது. மறுநாள் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். வலி வரும் அப்ப வா.சிசேரியன் வேண்டாம்னு.சரின்னு வீட்டிற்கு வந்தாச்சு.வலி வந்துச்சா,வரலை,வந்துச்சா,வரலை.இது சரிபட்டு வராதுன்னு ஏப்ரல் 9 ஆம் தேதி என் அம்மா ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போயிட்டாங்க.ஏப்ரல் 14-ல் சித்திரை பிறக்குமே அவுங்க கவலை அவுங்களுக்கு. வலி வர 9,10 ஆம் தேதி ட்ரிப் ஏத்தினாங்க.      
                                        

வலி வந்துச்சா வரலியே..............


Thursday, April 10, 2014

அழிக்க நினைத்தவன் அசத்துகிறான் - 1

 பெரியவனுக்கு ஒரு வயதும் 3 மாதங்களும் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று ஒரு நாள் ஒரு டவுட்.என் அம்மா தன் கடைசி தம்பியின் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய திண்டுக்கல் ஒரு மாதம் முன்பே போய் இருந்தார்கள்.கல்யாண நெருக்கத்துக்கு போலாம் என்று நாங்க ப்ளான் செய்து இருந்தோம்.ஆனால், நான் எனக்கு அந்த டவுட் வந்தவுடனே திண்டுக்கல் போகணும் என்று சொல்லவும் என் கணவரும் என் கூடவே கிளம்பி விட்டார்.அங்கே போனதும் காலை 9 மணிக்கெல்லாம் என் சித்தி டாக்டர் காஞ்சனாவை பார்க்க ஓடி விட்டேன். எஸ் என்னுடைய டவுட் கரெக்ட் தான். இரண்டாவது குழந்தை 50 நாட்கள் வயிற்றில். தெரிந்ததும் சந்தோஷம் வரலை. அழுகை தான் வந்தது. எனக்கு இந்த குழந்தை வேண்டவே வேண்டாம். வேண்டாம் என்றதற்கு காரணம் இது தான். எனக்கு அபார்ஷன் செய்துடுங்க என்று ஒரே அழுகை.அம்மா,கணவர் எல்லோரும் வேண்டாம் என்று சொல்ல சொல்ல  அழுகை.


 டாக்டர் சரி செய்துடலாம். இன்னும் 6 நாட்களில் வீட்டில் கல்யாணம் இருக்கும் போது நீ மட்டும் ஹாஸ்பிட்டலில் இருப்பியா.எல்லாம் என்ன எதுக்கு என்று கேப்பாங்க, கல்யாணம் முடியட்டும் செய்துடலாம் என்று சொல்லி கல்யாணத்துக்கு புது புடவை எல்லாம் எடுத்தியா?ப்ளவுஸ் எல்லாம் தைச்சாச்சா?ஊரிலிருந்து வரும் போது நகை எல்லாம் எடுத்து வந்தியா? இப்படி மிக முக்கியமான கேள்வி எல்லாம் கேட்டு,பெரியவன் இப்ப எப்படி இருக்கான் என்று பேசி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.
சரி இன்னும் 5 நாட்கள் தானே அதுக்கு அப்புறம் ஹாஸ்பிட்டல் வரலாம் என்று கல்யாண மூடில் வீட்டிற்கு போய் விட்டேன். கல்யாணமும் முடிந்தது. மறுநாள் டாணென்று ஹாஸ்பிட்டலுக்கு ஒரே ஓட்டம்.பார்த்தா என்னுடைய டாக்டர் மாமா,காஞ்சனா டாக்டர் அவர்களின் இன்னும் இரண்டு டாக்டர் ஃப்ரெண்ட்ஸ்.
ஒரு  டாக்டர் இருந்தாலே வயத்த கலக்கும். இதில் நான்கு டாக்டர்கள். இந்தோ பாரும்மா..அபார்ஷன் செய்தால் ரொம்ப ரத்தம் லாஸ் ஆகும்.நீ அண்டர் வெயிட்(44கிலோ) எனவே உன் உடம்பு தாங்காது. இல்லை நான் நல்லா சாப்பிட்டு உடம்ப பாத்துப்பேன். திண்டுக்கல்லிலே இருந்து தினம் பிரியாணி(தாத்தா ஹோட்டல் வைத்து இருந்தார்) மட்டன் அப்படி சாப்பிட்டு வெயிட் ஏத்திக்கிறேன். எனக்கு அபார்ஷன் வேண்டாம்னு சொல்லிடாதீங்கன்னு திரும்ப அழுவாச்சி.

அழுவாச்சி என்னாச்சு நாளைக்கு.....