Tuesday, March 29, 2011

இந்த “க” படும் பாடு

நம் தமிழில் சில சொற்களை பேசும் போது நம்மை அறியாமல் உபயோகப்படுத்தும் எழுத்துகளில் இந்த “க”விற்கு முக்கிய பங்கு உண்டு.

சம்பளம்,கிம்பளம்- சம்பளம் சரி, கிம்பளம்-லஞ்சம் என்றாகிறது. ஆனால் எதற்கு கி? சிம்பளம் ஆகி இருக்கலாமில்ல?

இங்க டப்பா,கிப்பா ஒன்றையும் காணோம் என்போம் எதாவது தேடும் போது.

பாத்து போ பஸ்ஸில,கிஸ்ஸில அடிப்பட்டுட போற? என்போம்.பஸ்ஸில சரி, கிஸ்ஸில அடி எப்படி படும்?

குழந்தை நோட்டு,கீட்டை கிழிச்சிட போகுது.நோட்டு சரி.அது என்ன கீட்டு.

பாத்துப்போ பள்ளம்,கிள்ளம்,மேடு,கீடு இருக்கப்போகுது.வாட் கிள்ளம்,கீடு.

பாத்து டேபிளை நகர்த்து.டீவியை,கீவியை உடைச்சுட போற. பாருங்க மக்களே டிவி என்ற ஆங்கில வார்த்தைக்கே கீ போடுறோம் நாம. இன்னைக்கு ஃபோன்,கீன் வந்துச்சா இல்லையா?


எக்ஸாமுக்கு போறியா பேனா,கீனா,ரப்பர்,கிப்பர் இருக்கா செக் செய்தியா?

இப்படியே யோசித்து இதை மாதிரியே பின்னூட்டம்,கின்னூட்டம் போட்டுட்டு போங்க..Monday, March 28, 2011

வெரைட்டி-பங்குனி-2011

நேற்று எலக்ட்ரிக் ட்ரையினில் மாம்பலம் போகும் போது ரொம்ப நாள் கழித்து சந்தித்த நண்பர் பேசிக் கொண்டு இருக்கும் போது என்னிடம் நீங்க என்ன கார் வைத்திருக்கீங்க என்று கேட்க நான் சொன்ன பதில் கடைசியில்.

எப்பவும் ஏப்ரல், மே மாதங்களில் சென்னையில் நாங்கள் இருக்கும் நாட்கள் குறைவு.குடும்பத்துடன் எங்காச்சும் 10 நாட்கள் எஸ்ஸாயிடுவோம்.ஆனால், இந்த முறை இங்கு தான் வேறு வழியே இல்லை. வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறோம்.  சோ டப்பு நஹி ஃபார் ஊர் சுத்தல்.

போனவாரம் வடபழனி கமலா தியேட்டர் வழியாக நடந்து சென்ற போது தியேட்டர் வாசலில் வாங்க வாங்க லத்திகா ஃப்ரீ ஷோ படம் பார்க்க வாங்க என்று ஒரே அழைப்பு. கொஞ்சம் அசந்தால் தூக்கிட்டு போய் தியேட்டர் உள்ளே விட்டுவிடுவார்களோ என்று அரண்டு பறந்து அந்த இடத்தினை வேகமாய் க்ராஸ் செய்தேன்.இந்த வாரம் அந்த பக்கம் போகணும். இம்முறை பணமும் கொடுத்து படமும் ஃப்ரீயாய் இருக்குமோ என்னவோ. ரூட்டை மாற்றி போகணும்.என்ன கொடுமை ஸ்ரீநிவாசா?

வடிவேலுவிற்கு அழகிரி பெரிய ரசிகர் போலும்.திருவாரூர் முதல் பிரச்சாரத்தில் வடிவேலு பேச பேச அழகிரி சிரித்துக் கொண்டே இருந்தார். இப்பொழுது எல்லாம் ஒவ்வொரு கட்சிக்கும் வில்லன்,கதாநாயகன் மட்டுமின்றி நிஜ காமெடியனும் அவசியம் போலும்.

மே மாதம் 27-என் பசங்களின் பெரியப்ப மகன் டாக்டர்.சுசுருதன் திருமணம்.பெண்ணும் எம்.டி கைனாகலிஜிஸ்ட்.சென்னையில் திருமணம்.என் இரு பசங்களும் அண்ணா(மாப்பிள்ளை) எப்ப எப்ப ட்ரஸ் மாத்துவாரோ அப்போதெல்லாம் மாற்ற போகிறார்களாம்.முதல் நாள் வெயிஸ்ட் கோட், திருமணம் அன்று பட்டு வேஷ்டி,சட்டை என்று செலவு வைக்கிறார்கள். கேட்டால், நாங்கள் பெண்ணாய் பிறந்து இருந்தால் எத்தனை பவுன் செய்திருக்கணும் என்று பதில் கேள்வி கேட்கிறார்கள்.

5 வயதில் என் சின்ன பையன் ரிஷி பெரியவனாகி என்ன செய்ய போகிறாய் என்று கேட்டால் 6 ஆப்பு படிச்சுட்டு மினிஸ்டர் ஆவேன் என்பான். மினிஸ்டர் சரி அதற்கு 6 ஆப்பு போதும் என்று யார் சொல்லி கொடுத்தார்கள் என்பது இன்று வரை மர்மமாய் இருக்கு! வீட்டில் வாங்கும் ஜூனியர்விகடன், துக்ளக் புக் எடுத்து வைத்து நூ(மூ)ப்பனார், சசிக்கலா, ஜெயலலிதா, ஸ்டாலின் என்று கரெக்டா படம் பார்த்து பெயர் சொல்லுவான்.பயந்து போய் அந்த புத்தகங்கள் வாங்குவதை நிறுத்தி விட்டேன்.பேசாமல் அந்த புத்தகங்கள் வாங்கி இருந்தால் ஜி.கே வளர்ந்து அவனும் அரசியல்வாதியாகி இருப்பானோ.சே,தப்பு செய்துட்டேனே.

வீட்டுக்கார்! எப்பூடி? நண்பர் பதிலே சொல்லாமல் வேற சீட்டிற்கு மாறி போய் உட்கார்ந்து கொண்டார்.

Thursday, March 24, 2011

ஸ்க்ரூ ட்ரைவர் குடிச்சு இருக்கலாமோ??

2009, மே 16, நள்ளிரவு 12 மணிக்கு மலேஷியா போக ஃப்ளைட் எனக்கு. தாம்பரத்திலிருந்து பக்கத்தில் தானே திரிசூலம் ஏர்போர்ட் என்று பெரியவன் நகுலுடன் டூவீலரில் இரவு 9 மணிக்கு ஏர்போர்டிற்கு கிளம்பினேன். திரிசூலம் பாலத்திற்கு பக்கத்தில் போகும் போது திடீரென்று எதிர்பாராத பெரிய மழை. செம மழை. பாலத்தின் அடியில் கொஞ்ச நேரம் நின்று பார்த்தோம். மழை விடுவதாயில்லை. சரி என்று ஒரு ஆட்டோவில் ஏறி ஏர்போர்ட் கேட்டில் இருந்து இண்டர்நேஷனல் ஃப்ளைட் புறப்படும் இடம் போக ரூபாய் 40 தண்டம் அழுது விட்டு வெற்றிகரமாய் உள்ளே நுழைந்து விட்டேன்.

செக்கிங் எல்லாம் முடித்து ஒரு அரை மணிநேரம் கழித்து நகுலுக்கு ஃபோன் செய்தால் அம்மா இங்கேயே தான் நிற்கிறேன் என்றான். மழைக் கொட்டுது. வீட்டிற்கு ஃபோன் செய்தால் அங்கு மழையே இல்லை என்கிறான் சின்னவன் ரிஷி.11 மணிக்கு திரும்ப நகுலுக்கு ஃபோன் செய்தால் இப்ப தான் மழை கொஞ்சம் விட்டது வீட்டிற்கு கிளம்பிட்டேன் என்றான். சரி என்று நிம்மதியாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் என் விமானத்திற்க்கான அழைப்பு வந்ததால் அதில் ஏறி உட்கார்ந்து விட்டேன். முதல் வெளிநாட்டு பயணம் என்று சந்தோஷம் இருந்தாலும் மகன்கள் இருவரையும் விட்டு செல்கிறோமே என்று ஃபீலிங்கும் இருந்தது. அன்று முழு நாளும் வெளியில் சுற்றியதால் விமானத்தில் ஏறி அமர்ந்ததும் தூங்கி விட்டேன். ஒரு மணிநேரம் கழித்து ஏதோ சத்தம் என்று முழித்து பார்த்தால் விமானம் அங்கேயே நிக்குது. கல்கத்தா விமானம் மழையால் லேட்டாய் வந்ததால் அந்த பயணிகளுக்காக நாங்கள் அங்கேயே ஒரு மணிநேரம் காத்து இருந்து இருக்கிறோம். எல்லாம் முடிந்து ஒன்றரை மணி நேரம் லேட்டாய் தட தடவென்று எங்கள் விமானம் ஏதோ கார்ப்பரேஷன் வண்டி போல் ரன்வேயில் ஓட ஆரம்பத்தது.

நான் திரும்பி தூங்க முயன்றேன். 20 நிமிஷத்தில் சாப்பாடு வேண்டுமா என்று எழுப்பி விட்டார்கள். அட நிம்மதியா தூங்க விடமாட்டார்கள் போல, சரி சத்தாய் மலேஷியா போய் இறங்கலாம் என்று சாப்பிட கொடுத்தில் ஃப்ரூட் சாலட்ட்டும், ஒரு கேக்கும் நடு ராத்திரியில் சாப்பிட்டேன். பக்கத்தில் இருந்த ஒரு வட இந்திய பெண்மணி ஸ்க்ரூ ட்ரைவர் என்ற ஒரு வஸ்துவை வாங்கி வாங்கி குடித்துக் கொண்டு இருந்தார். தூக்க கலக்கத்தில் ஜூஸ் பெயர் நல்லாயிருக்கே, அது கொடுக்கப்பட்ட க்ளாஸும் நல்லாயிருக்கே நாமும் ஒரு க்ளாஸ் வாங்கி அடிக்கலாமா என்றால் கொஞ்சம் ஆல்கஹால் ஸ்மெல் வரவும் நன்கு முழித்துக் கொண்டு வேண்டாம் என்று சொல்லி விட்டேன்( தமிழ் பெண் கலாச்சாரம் என்னாவது?)

ஆச்சு தூங்கியும் தூங்காமலும் காலை 6.30க்கு மலேஷியா போய் விட்டேன்.என் கணவர் அவர் இருக்கும் இடத்தில் இருந்து கோலாலம்பூர் வர வேண்டும் என்றால் தான் ரொம்ப தூரம் அலைய வேண்டும் என்பதால் வெளியே வந்து ஒரு டாக்சி வைத்து வீட்டிற்கு தனியே வந்து விடு வந்துடுவேல்லே, இல்லை நான் ஏர்போர்ட் வரணுமா என்று இரண்டு முறை அழுத்தி கேட்டார். நான் இல்லப்பா நானே வந்துடுவேன் என்று சொல்லிட்டேன்.  அவர் அனுப்பிய அவர் தங்கியிருந்த வீட்டிற்கு செல்லும் வழியின் வரைபடத்தை பிரிண்ட் எடுத்து கையில் வைத்து இருந்தேன்.

மலேஷியா ஏர்போர்ட்டை பார்த்ததும் நான் பட்டிக்காட்டாண் பட்டிணம் லுக் விட்ட மாதிரி லுக் விட்டுட்டே, ஜாக்கிரதையா அந்த ஸ்க்ரூ ட்ரைவர் பெண்+என் விமானத்தில் இருந்து வெளிவந்த கூட்டத்தை தொடந்து தேமேன்னு இந்த ட்ரையினில் ஏறி போனேன். வெளியே லாபியில் இமிகிரேஷனுக்கு ஒரு பெரிய கியூ இருக்கவே நானும் அதில் நின்று கொண்டேன். அங்கு 5 கவுண்டர்கள் இருந்தது. அதில் ஒரு பெண் நெற்றியில் விபூதியுடன் இருந்தார்.ஆகா தமிழ் பெண் அல்லவா, அவரிடம் தான் நான் செக் செய்ய வேண்டும் என்று ஏழுக்கொண்டலவாடாவை வேண்டி கொண்டு வேண்டும் என்றே அவரிடம் போவதற்காக கியூவில் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து விபூதி பெண் கவுண்டர் காலியானதும் அவரிடம் சென்றேன். தேவையில்லாமல் தேவுடாவை டிஸ்டர்ப் செய்த பாவத்தை பின்னர் அனுபவித்தேன். மற்ற கவுண்டர்களில் ஆண்கள் செக் செய்து கொண்டு இருந்தனர்.

அந்த பெண் என் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு எதற்காக மலேஷியா வந்திருக்கீங்க என்றார். டூரிஸ்ட்டாக வந்து இருக்கிறேன் என்றேன்.எவ்வளவு பணம் ஹாண்ட்பேக்கில் இருக்கிறது என்றார். என்னிடம் சென்னை ஏர்போர்டில் ரூபாய் 5000க்கு மாற்றிய 335 ரிங்கட்  இருந்தது. அதை எடுத்து காண்பிக்க சொன்னார். இதில் எப்படி டூர் போக முடியும் என்றார். நான் என் கணவர் இங்கு இருப்பதாய் சொன்னேன்.அவர் இருக்கும் வீட்டில் தங்க போகிறேன் என்றேன். அவர் நேராய் ஒரு இமிகிரேஷன் ஆஃபிசர் ரூமை காண்பித்து அங்கு போய் நீங்க செக் செய்துட்டு போகணும் என்று உன் வழி தனி வழி என்று சொல்லி விட்டார். அங்கே போனால், பல நாட்டுக்காரர்களும் அங்கு சந்தேகத்தின் பேரில் பிடித்து உட்கார வைக்கப்பட்டு இருந்தனர்.அந்த கூட்டத்தில் நான் மட்டும் தான் பெண். ஒரு முரட்டு மலேஷிய பெண்மணி மிக அலட்டலாக அங்கு இருந்தார்.என்னை வெயிட் செய்ய சொன்னார். அங்கிருந்த சேரில் சுற்றிலும் ஒரு சுற்றி பார்த்துட்டு பாவமாய் உட்கார்ந்து கொண்டேன்.அவர் என் முறை வந்ததும் என்னை அழைத்தார். ஒரு ஃபோன் நம்பரை கொடுத்து இந்த நம்பருக்கு உன் கணவரை ஃபோன் செய்ய சொல் அப்ப தான் உன்னை வெளியில் விடுவோம் என்று சொல்லி விட்டார். அங்கேயே காயின் போட்டு செய்யும் ஃபோன் இருந்தது. ஆனால், என்னிடம் மலேஷியா காய்ன் இல்லை. அந்த பெண் லாபியில் இருக்கும் கடைகளில் சில்லறை வாங்கி வா என்று சொல்லி விட்டு என் பாஸ்போர்ட்டை தன் பக்கத்தில் ஒரு ட்ராயரில் போட்டு பூட்டிவிட்டார்.

 சரி என்று என்னிடம் இருந்த மலேஷிய பணத்திற்கு சில்லறை கேட்டு சென்றேன், சென்றேன்,ஏர்போர்டின் இறுதிக்கே சென்றேன்.அங்கு அதிக புஷ்டியுடன் இருந்த இரு கருப்பு நாய்களை பிடித்துக் கொண்டு அதே போல் புஷ்டியாய் இருவர் நின்று போற வரவங்களை கண்ணால் எக்ஸ்ரே எடுத்துக் கொண்டு இருந்தனர். திரும்ப ஏழுக்கொண்டலவாடுவை நினைத்துக் கொண்டு இந்தியா வந்ததும் ஏழுமலை நடந்தே ஏறி வருகிறேன். பிரச்சனை இல்லாமல் என்னை ஊருக்குள் விட்டுவிடு என்று வேண்டிக் கொண்டேன். சில்லறை எங்கும் கிடைக்கலை.

ஆனது ஆவட்டும் என்று யாரும் சில்லறை கொடுக்க மாட்டேங்கிறாங்க என்று அந்த பெண்ணிடமே நேரே சென்று சில்லறை கேட்டேன். என்னை ஒரு மாதிரி லுக் விட்டுட்டு அந்த பெண் அணிந்து இருந்த கோட்டில் கை விட்டு கொஞ்சம் சில்லறை எடுத்துக் கொடுத்தார். அந்த காசை வைத்து என் கணவருக்கு ஃபோன் செய்தால் முதல் இரண்டு முறை கட் ஆகி விட்டது. என்னிடமோ 4 காசுகள் தான் இருந்தது. அது எவ்வளவு என்றும் பதட்டத்தில் தெரியவில்லை. நல்லவேளை என் கணவர் திரும்ப அந்த நம்பருக்கு ஃபோன் செய்யவும் விஷயத்தினை சொல்லி அந்த பெண்ணின் நம்பர் கொடுத்தேன். அவர் ஃபோனில் சிரிக்கிறார். மகனே இரு உன்னை வந்து கவனித்து கொள்கிறேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பாவமாய் முகத்தினை வைத்துக் கொண்டு,கையில் இருந்த மீதி காசை என் பக்கத்தில் இருந்த என்னை மாதிரி ஒரு பாவப்பட்ட நண்பருக்கு கொடுத்து, அவருக்கு எப்படி அந்த ஃபோன் யூஸ் செய்யணும் (கவனிக்கவும், இங்கே கூட உதவி!) என்று சொல்லி தந்து விட்டு, அவரின் நன்றிக்கு தலையசைத்துக் கொண்டு அந்த பெண்ணை பார்க்காதது மாதிரி பார்த்துக் கொண்டு இருந்தேன். அசால்ட்டாய் இருப்பது மாதிரி. அந்த பெண் தன் பக்கத்தில் இருந்த ஒரு ஃபோன் அட்டெண்ட் செய்ததும் என்னை கூப்பிட்டு என் பாஸ்போர்டை என்னிடம் கொடுத்து இப்ப நீங்கள் வெளியில் போகலாம் என்றார். தேவுடா விட்டது சனியென்று லக்கேஜ் இருக்கும் இடத்தில் அனாதையாக கிடந்த என் சூட்கேஸை எடுத்துக் கொண்டு, அந்த விபூதி பெண் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்ததை, என்ன சிரிப்பு வேண்டி இருக்குது என எரிச்சலுடன் பார்த்துக் கொண்டே,டாக்ஸி ஸ்டாண்டிற்கு வந்து டாக்ஸியின் சைனாக்கார ட்ரைவரிடம் சைகையில் சூப்பராய் பேசி, என் கையில் இருந்த வரைப்படத்தினை காண்பித்து ஏறி உட்கார்ந்தேன். 100, 120 அடுத்து 150 என்ற ஸ்பீடில் அவர் போனார். நான் அதன் பிறகு எவ்வளவு ஸ்பீடு என்று பார்க்கவில்லை. ஏனெனில், இனி அதை பார்த்தால் திரும்ப சாமி கும்பிடணும்.எப்படியோ என்னை கொண்டு போய் என் கணவர் இருக்குமிடம் சேர்த்தால் போதும் என்று வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

இப்படியெல்லாம் பணம் செக் செய்வார்கள் என்று தெரியாது. இல்லையெனில் இன்னும் ரிங்கட் கையில் எடுத்து வர சொல்லி இருக்க மாட்டேனா என்று சொன்னார். என் பசங்களிடம் ஃபோனில் மலேஷியா போறேன்னு, மலேஷியா ஏர்ப்போர்ட் மட்டும் பார்த்து வந்து இருப்பேண்டா, நல்ல வேளை அந்த பெண் என்னை உள்ளே விட்டாள் என்று சொன்னால் சத்தமா சிரிக்குது இரண்டும்.இரண்டும் அவர்களின் அப்பாக்கு அம்மாவை ஏர்போர்டில் போய் கூப்பிடும் படியாக சொல்லி இருக்குதுங்க எனக்கு தெரியாமல்.(பாசக்கார பையபிள்ளைக).

ஊரில் இருந்து கிளம்பும் முன்னால், ஆத்தா நான் பாசாயிட்டேன் ரேஞ்சில்! ஒரு 20 பேரிடமாவது மலேஷியா, சிங்கப்பூர் போறேன் என்று ஃபோனில் சொல்லிட்டு கிளம்பினோமே. இப்ப இப்படி ஒரு மணிநேரம் ஏர்போர்டிலேயே சுற்றுகிறோமே என்று தான் ஒரே கவலையாய் இருந்தது. (கண்ணு போட்டுட்டாங்க).அடுத்து எங்காச்சும் ஃபாரின் போகும் முன்னால் திருப்பதி மலை நடந்து போய்டுங்கம்மா இல்லைன்னா சாமி அங்கும் ஏர்போர்டில் பழி வாங்கும் என்று சொல்லிட்டே இருக்குதுங்க பசங்க.
முன்னால் வேண்டுதலே இல்லாமல் நிறைய முறை நடந்து ஏறி இருக்கிறேன். மலேஷியா போய் வந்த பின் ஏனோ போக முடியவில்லை. ஆனால், கட்டாயம் போயிடணுப்பா.

டிஸ்கி: பக்தியாய் விபூதி, ஏழுக்கொண்டலவாடான்னு நான் போனால் இப்படி ஒரு சோதனை. அந்த ஸ்க்ரூ ட்ரைவர் பெண்ணும் தனியாய் தான் வந்திருந்தார். அவரை யாரும் சந்தேகப்படலையே? பேசாமா நானும் ஒரு பெக் ஸ்க்ரூ ட்ரைவர் போட்டு இருக்கணும் போல.

Wednesday, March 23, 2011

18 வருடமாய் ஏர்போர்ட்டில்

அரை மணிநேரம் ரயில்வே ஸ்டேஷனில் வெயிட் செய்யணும் என்றாலே லொள், லொள்ளுன்னு கூட இருப்பவர்கள் யாரிடமாவது எறிந்து விழுவோம். மேலே இருக்கும் இந்த மனிதர் பாரீஸில் இருக்கும் Charles de Gaulle  ஏர்போர்ட்டில் 1988-லிருந்து 2006 வரை வாழ்ந்து  இருக்கிறார். Mehran Karimi Nasseri என்ற இந்த மனிதர் லண்டனில் வாழ்வதற்காக ஃப்ரான்ஸ் வழியாக ஈரானிலிருந்து செல்லும் போது அவருடைய சூட்கேஸை தவறவிட்டார்.அதில் அவருடைய பாஸ்போர்ட்டும், ஐக்கிய நாட்டு சபை அளித்து இருந்த அகதிக்கான ஐடியும் இருந்தது.

பெல்ஜியத்தில் வாழ்வதற்காக அவருக்கு அகதி அட்டை வழங்கப்பட்டிருந்தது. அவருக்கு லண்டனில் வாழதான் விருப்பம். ஃப்ரான்ஸ் ரயில்வே ஸ்டேஷனில் பெட்டியினை தவற விட்ட இவர் இங்கிலாந்திற்கு எப்படியோ சென்றும் இருக்கிறார். ஆனால், பாஸ்போர்ட் இல்லாததால் ஃப்ரான்ஸிற்கு திரும்ப அனுப்பி உள்ளனர். முதலில் ஃப்ரென்ச் போலீஸ் இவரை கைது செய்தது. அதன்பிறகு இவர் ஏர்போர்ட்டிற்கு நுழைந்தது குற்றமில்லை என்று விடுவித்தது. ஈரானுக்கு திரும்பி செல்ல முடியாததால் ஏர்போர்ட்டிலேயே தங்கி விட்டார். கிட்டதட்ட 18 வருடங்கள். கோர்ட்டும் இவர் ஃப்ரான்ஸ் உள்ளே நுழைய தடை விதித்தது.

ஜூலை 2006-ல் அவர் உடல்நிலை சரியில்லாமல் போகவே ஒரு வருடம் ஃப்ரான்சில் ஹாஸ்பிட்டலில் இருந்து இருக்கிறார். அதன் பிறகு எம்மாஸ் என்ற ஃப்ரான்ஸின் சமூக அமைப்பில் இருந்து இருக்கிறார்.ஏர்போர்ட்டில் இருந்த போது அவரது லக்கேஜ்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுதுவது, படிப்பது என்று பொழுது போக்கி உள்ளார். சாப்பாடு, புத்தகங்கள் ஏர்ப்போர்ட்டில் வேலை செய்பவர்கள் தந்து உள்ளனர்.
சர் ஆல்ஃப்ரெட் என்றும் அழைக்க படுகிறார்.
1999-ல் இவருக்கு ஃப்ரான்ஸில் தங்குவதற்கு அடையாள அட்டை வழங்க பட்டது.

Lost in transit என்ற ஃப்ரென்ச் படமும்(1993), The Terminal(2004) என்ற ஆங்கில படமும் இவரின் கதையினை போல எடுக்கப்பட்ட படங்கள். டெர்மினல் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் எடுத்து உள்ளார்.

The Terminal படத்தை z-studio சானலில் இந்த வாரம் பார்த்து விட்டு ஃபோட்டாவிற்க்காக நெட்டில் தேடிய போது இது உண்மை கதை என்று தெரிந்தது. Cast Away, Forrest Gump படங்களில் நடித்த Tom Hanks இதில் நடித்து உள்ளார். நகைச்சுவை கலந்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. க்ரோகோச்லேவியா (கற்பனை நாடு) என்ற ஐரோப்பிய நாட்டிலிருந்து நியூயார்க் JF Kennedy ஏர்போர்ட்டிற்கு வருகிறார் நாவோஸ்கி (டாம்). அவர் விமானத்தில் இருக்கும் போது அவரின் நாட்டில் கலவரம் ஏற்பட்டு அவரின் நாடு தனிமை படுத்தப்படுகிறது. அங்கிருந்து வருபவர்களை அமெரிக்கா உள்ளே நுழைய தடை விதிக்கிறது. ஆங்கிலம் தெரியாமல் அவர் கஷ்டப்படுவதை நகைச்சுவையாக காண்பித்து உள்ளனர். கேட் 64-ல் தங்கிக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்.  விமான பயணிகளுக்கு உதவி செய்து கிடைக்கும் சில்லறையில் உணவு வாங்கி உண்கிறார். தன் நாட்டினை பற்றி டிவி வாயிலாக அறிந்து கொள்கிறார். ஒரு காதல் ஜோடிக்கு காதல் தூதுவராய் பணிசெய்கிறார். அதில் பணமும் கிடைக்கிறது.

மேலதிகாரியாக Stanley Tucci அருமையான நடிப்பு. 
ஒரு விமான பணிபெண்ணின் கதையினை கேட்டு அவருக்கு காதலும் வருகிறது. பணியாளர்கள் இவரை CIA என்று சந்தேகப்படுகிறார்கள். ஏர்போர்ட்டின் மேலதிகாரியினை தவிர அனைவரிடமும் நண்பராகிறார். ஏர்போர்டினை விட்டு ஒரு முறையும் தப்பிக்க ஹீரோ நினைப்பதில்லை. இன்னும் அருமையான காட்சிகள் படம் முழுவதும். எதற்காக அமெரிக்கா வந்தார், வந்த வேலையினை அதன் பின் முடித்தாரா?

முடிவினை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

டாமின் அசத்தலான நடிப்பிற்க்காக இதை இன்னொரு முறை டிவியில் பார்க்கணும். திரும்ப ஒலிப்பரப்பாகும். நீங்களும் பாருங்கள். 9 மாதங்கள் இவர் ஒரு டெர்மினலில் காலம் தள்ளுவதாய் கதை.

ஆனால், ஒருவர் நிஜத்தில் எப்படி 18 வருடங்கள் ஏர்போர்டில் காலம் தள்ளினார் என்று நினைத்தாலே கலக்கமாய் உள்ளது.

Monday, March 21, 2011

2 B,காந்திநகர்,திருநெல்வேலி-8.


உலகத்திலேயே எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று நெல்லையில் இருந்த போது 5 வருடங்கள் வாழ்ந்த காந்தி நகர்.நான் அப்போது 7 ஆம் வகுப்பு முதல் 11 வரை அங்கிருந்து தான் படித்தேன்.  நெல்லை டவுணில் இருந்து லாலா சத்திர முக்கு,வழுக்கோடை வழியாக பழைய பேட்டை தாண்டி குற்றால ரோடில் சென்றால் வரும் ஒரு காலனி தான் காந்தி நகர்.நாங்கள் அப்ப இருந்த போது மொத்தமே 5 தெருக்கள் தான் அந்த நகரில்.நகரின் எதிரில் ராணி அண்ணா பெண்கள் கலை கல்லூரி இருக்கும். ஆடி மாதமானால் அடிக்கும் காற்றில் அம்மியும் பறந்து போகும்.குற்றால சீசன் வந்தாச்சுன்னு இங்கேயே தெரிந்திடும்.அப்படியே பறந்து போனால் கொஞ்ச தூரத்தில் நெல்லை ரேடியோ ஸ்டேஷன் இருக்கும்.

தனி தனியே தோட்டத்துடன் கூடிய வீடுகள்.16 செண்ட்டில் தோட்டமும் வீடும் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ரோஜா,டிசம்பர் பூக்கள், கனகாம்பரம், கொன்றைப் பூ,பால்ஸம், செம்பருத்தி, மருதாணி,வாழை,மாமரம்,வேப்பமரம் என்று பூத்துக் குலுங்கும்.தலையில் ரோஜா வைக்காமல் ஸ்கூல் சென்றதில்லை.நாங்கள் இரண்டாவது தெருவில் 2 B வீட்டில் வசித்து வந்தோம்.ரவுடி தெரு அது தான். அங்கு தான் ஒரு கிரவுண்ட் இருந்தது. அதில் இருந்த ஒரு பெரிய மரத்தின் கிளைகளில் ஏறி அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். மாலை 4-லிருந்து இருட்டும் வரை விளையாடுவோம். பிறகு அவர் அவர் வீட்டிற்கு மனசேயில்லாமல் படிக்க போய் விடுவோம். 6 மணிக்கு முன் வராவிட்டால் அம்மா வீட்டின் உள்ளே விட மாட்டார்கள். என் தம்பி, தங்கைகள் பயந்து கொண்டு போய் விடுவார்கள். நான் (மூத்த பெண்!!)நிறைய நாட்கள் 6 மணிக்கு பிறகு வந்து திட்டு வாங்குவேன். வெள்ளி மாலையில் அனைவரும் ஒன்றாக அங்கு இருந்த பிள்ளையார் கோயிலுக்கு போய் விடுவோம்.அன்று மட்டும் 6 மணி கணக்கு கிடையாது.

சனி, ஞாயிறுகளில் சாப்பிட்டு, சாப்பிட்டு விளையாட்டு தான்.பகல்  வேளைகளில் எல்லோரும் பசங்களிடம் சைக்கிள் ஓட்ட கத்துக் கொள்வோம். ஏன்னா அவர்களிடம் தான் சைக்கிள் இருக்கும்.என் சைக்கிள் புறப்படம்னா என் இடது கால் பக்கத்தில் ஒரு மேடு அல்லது கல் இருக்கணும். அதில் ஏறி தான் சைக்கிளில் உட்காருவேன்.

வீட்டின் இருந்த மாதுளை மரத்தில் அம்மா அணிலிடம் இருந்து மாதுளை பழங்களை காப்பதற்காக ஒவ்வொரு பழத்தினை சுற்றியும் வெள்ளை துணியினை கட்டி முடிச்சு போட்டு இருப்பார்கள்.காற்றில் அது ஆடிக் கொண்டு இருக்கும். இரவில் வீட்டிற்கு வரும்போது மரம் எல்லாம் சின்ன சின்ன ஜெகன் மோகினிகள் தொங்குவதாய் பயந்து கொண்டு அந்த பக்கம் பார்க்க கூடாது என்று நினைத்தாலும் பார்த்துக் கொண்டு பயந்து ஓடுவோம்.

என் பக்கத்து வீட்டில் இருந்த சுந்தரேஷன் என்பவர் ரேடியோ ஸ்டேஷனில் வேலை பார்த்தார். அவரிடம் எங்களுக்கு பிடித்த பாடல்களை சொல்லி விட்டு இப்படி ஒரு ரேடியோவில்  இரவில் கூட்டமாய் அமர்ந்து கேட்போம். ஒருத்தர் வீட்டில் மட்டுமே அப்ப டி.வி இருந்தது.இரவு இலங்கை ரூபவாகிணி ஒலிப்பரப்பும் அருத பழசு தமிழ் சினிமாவை பார்ப்போம். சில சமயம் இருட்டினதும் ஒரு வீட்டின் முற்றத்தில் அனைவரும் அமர்ந்து பேய் கதை, சினிமா கதை பேசிக் கொண்டு இருப்போம். சினிமாவில் வில்லன் என்றே சொல்ல தெரியாது, கொள்ள  கூட்ட தலைவன் என்றோ,பாஸ் என்றோ தான் சொல்வோம். பொங்கல் சமயம் கரும்பு தின்பதற்கு போட்டியே நடக்கும்.எதாவது ஒரு நாள் அம்மாக்கள் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக டவுணில் சினிமா பார்க்க போவோம்.

காந்திநகரில் தீப்பெட்டி தொழில்சாலை ஒன்று அப்போது அங்கு இருந்தது. அங்கு வேலைக்கு வரும் வயசு பிள்ளைகள் மாலையில் வீட்டிற்கு போகும் போது எங்காவது ஜோடியாய் நின்று பேசிக் கொண்டு இருந்தால் அதை கெடுப்பதற்காகவே  நாங்கள் அங்கு கூட்டமா சும்மாவாச்சும் போய் வருவோம்.அக்கா, அண்ணா என்று சும்மா பேச்சுக் கொடுத்து வருவோம். அவர்களை பார்க்கவே ஏனோ எங்களுக்கு வெட்கம் வெட்கமாய் இருக்கும். ஆனாலும், போவோம். மொட்டை மாடிக்கு போய் அப்படி யார் எங்கு நிற்கிறார்கள் என்று உளவு பார்ப்பது பசங்க வேலை.

முதல் தெருவில் தங்கம் இல்லம் என்று ஒரு வீடு இருக்கும். அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாய் நம்பினோம். பாதி நேரம் அந்த வீடு பூட்டியே இருக்கும். நெல்லையப்பர் தேர் திருவிழா, அரசு பொருட்காட்சி ஒன்றாய் போய் வருவோம்.

காந்திநகரில் வருடம் ஒரு நாள் ஆண்டுவிழா நடக்கும் அதற்கு டான்ஸ்,ட்ராமா, பாட்டு என்று கலக்குவோம்.சினிமா பாடல்களுக்கு கோரியாகிராஃப் செய்து ஆடினோம்(!).உஸ், அப்பாடா சொல்லும் போதே கண்ணை கட்டுதே.பெண் குழந்தைகள் ப்ராக்டிஸ் செய்யும் வீட்டிற்கு(தினம் ஒரு வீடு)வந்து கலாட்டா செய்யும் பசங்களை துரத்தி விட காவல் வைப்போம்.
தாயம்,பரமபதம்,கார்ட்ஸ்,பாண்டி,கல்லா-மண்ணா,கொ-கோ,பிசினஸ் கார்ட்ஸ், பல்லாங்குழி,கண்கட்டி விளையாடுவது,ஒளிந்து விளையாடுவது, கோலி, கேரம், ஊஞ்சல் ஆகா எத்தனை விளையாட்டுகள் விளையாடி இருக்கிறோம். மாலையில் செல்வி வீட்டு கோழி கூண்டிற்கு வரலைன்னா அதை தேடி போவோம். ஒரு கோழியினை 6 பேர் துரத்தி பிடிப்போம். மாலையில் பூக்கள் பறித்து அம்மாக்களிடம் கட்டுவதற்கு கற்றுக் கொள்வோம்.

சில வருடங்கள் கழித்து பார்த்தால் நாங்கள் சேர்ந்தே விளையாடிய ஆம்பளை பசங்களுடன் பேசுவது இல்லை. எப்ப பேச்சை நிறுத்தினோம் என்றே தெரியவில்லை.  எல்லாம் பெரிய மனுஷங்களாகி விட்டார்களாம்.பேச ஆசையாய் இருந்தாலும் பேசவில்லை.வெட்கத்துடன் குனிந்துக் கொண்டார்கள். போங்கடா நீங்களும் உங்கள் கலாச்சாரமும் என்று இருக்கும். அப்புறம் காந்திநகரில் அந்த வாடகை வீட்டினை விட்டு நாங்கள் டவுணில் எங்கள் சொந்த வீட்டிற்கு வந்தோம்.பள்ளி, கல்லூரி, கோயில்,சினிமா செல்வதற்கு மட்டுமே வெளியில் வருவோம். விளையாட இங்கு இடமில்லை, மனிதர்களுக்கு மனமுமில்லை.

சில வருடங்களுக்கு முன்னால் என் பசங்க இருவரையும் காந்திநகருக்கு கூட்டிச்சென்று பேய் வீடு தங்கம் இல்லம்,நாங்கள் விளையாடிய கிரவுண்ட், போன கோயில், தீப்பெட்டி தொழில்சாலை இருந்த வீடு என்று அனைத்தையும் காட்டி வந்தேன். இப்பவும் அவ்வப்போது என் பசங்களுக்கு காந்திநகர் கதையினை சொல்லிக் கொண்டே இருப்பேன்.இன்னைக்கு நீங்களெல்லாம் மாட்டினீங்க!!!!

Monday, March 14, 2011

என்ன பாவம் செய்தாள்?

கலா போன வருடம் பார்த்த போதும் இளைத்து தான் காணப்பட்டாள்.அவளின் பெண் குழந்தை அவளிடம் அமுதா என்னோட ஃப்ரெண்ட், உனக்கு ஃப்ரெண்ட் இல்லை என்ற போது ஆமாம், ஆமாம் நான் உன்னோட ஃப்ரெண்ட் தான் நந்தினி என்று அவசரமாய் தலையாட்டி வைத்தேன்.இல்லைனா எனக்கு அடி விழும் என்ற பயம் தான்.

13 வயது ஆகும் நந்தினி வயதிற்கு மீறிய வளர்ச்சியுடன் இருந்தாள்.என்னை நன்கு தெரிகிறது. நீ அமுதா தானே என்று கேட்கும் போது சந்தோஷமாய் இருந்தது.நந்தினி தூங்கியதும் கலா சொன்னது கேட்டு மிக கவலையாய் இருந்தது.சொந்தக்கார லேடி டாக்டர் நந்தினியின் யூட்ரஸை இன்னும் ஒரிரு வருடங்களில் ஆபரேஷன் செய்து எடுத்து விடலாம் என்று சொல்லி இருக்கிறார்.

இதை என்னிடம் சொல்லிட்டு அழுத கலாவினை என்னால் சமாதானம் செய்ய இயலவில்லை. கடவுள் மேல் கோபமாய் வந்தது. கலா பார்ட்டைம் வேலையாக ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்கிறார்.நந்தினியினை ஹாலில் டி.வி போட்டுட்டு ஹாலோடு அட்டாச் ஆக இருக்கும் டாய்லெட்டை ஓபன் செய்துட்டு, ரூம், கிச்சனை பூட்டி விட்டு, ஹாலின் வெளி கதவினை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விடுவாள்.4 மணிநேரம் கழித்து வரும் போது நந்தினி டி.வி. பார்த்து விட்டு ஏனோ தானோ என்று படுத்து தூங்கி இருப்பாள். டி.வி ஓடிக் கொண்டே இருக்கும். இப்படி தான் கடந்த 5 வருடங்களாக நடக்கிறது. சின்ன குழந்தையாக இருக்கும் வரை வேறு பிரச்சனைகள் இல்லை.இனிமேல் வயதிற்கு வந்து விட்டால் வரகூடிய பிரச்சனைகளை சமாளிப்பது கஷ்டம் என்று அந்த டாக்டர் இப்படி கூறி இருக்கிறார். ஏற்கனவே இரண்டு கண்களிலும் ஆபரேஷன் செய்து அவளை ஆஸ்பத்திரியில் வைத்து சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டதையும் சொன்னாள். கலாவிற்கு ஏனோ இப்ப டாக்டர் கருத்துடன் ஒத்துப் போக முடியவில்லை.

நந்தினிக்கு வயதிற்கு வருவதை பற்றியும், எப்படி பேட் யூஸ் செய்யணும் என்றும் அந்த வயதுகளில் பெண் குழந்தைகள் வைத்திருக்கும் அம்மாக்கள் போலவே தன் குழந்தைக்கும் தினம் தினம் சொல்லி சொல்லி புரிய வைத்து விட்டாள்.நான் போய் வந்த அடுத்த மாதத்திலேயே அந்த குழந்தை பெரிய மனுஷியும் ஆகிவிட்டாள்.முதல் 3 மாதங்கள் பாடாய் படுத்தி விட்டு இப்பொழுது பழகி விட்டது. ஆனால், மிகவும் கஷ்டப்படுகிறது.ரொம்ப முரடாகி வருகிறது.

இந்த வாரம் கலாவினை ஃபோனில் கூப்பிட்ட போது மிகவும் முரடாக இருக்கும் அவளை அடக்க எனக்கு சக்தியே இல்லை அமுதா என்ற போது என்ன பாவம் செய்தாள் கலா என்று எனக்கு இயலாமையாக இருந்தது.

இப்ப முன்னேற்றம் என்ன என்று கேட்ட போது இப்ப தமிழ் எழுத்து கூட்டி படிக்க தெரிகிறது. ஏற்கனவே, பணம் பற்றி கூறி கொஞ்சம் புரிகிறது அந்த குழந்தைக்கு, 100 ரூபாய் வரை தெரிகிறது. அதற்கு மேல் அவளிடம் கொடுப்பதில்லை. சில சமயங்களில் கிழித்து விடுவாள். பக்கத்து கடைகளுக்கு பேப்பரில் சாமான் பெயர்களை எழுதி அவளை அனுப்பி வாங்கி வந்ததை இப்ப வயதிற்கு வந்ததும் நிறுத்திக் கொண்டேன் என்றாள். சில சமயம் பிடித்தவர்களை ஆணோ, பெண்ணோ அணைத்து கட்டிக் கொள்கிறாள். எனவே, நான் இல்லாமல் அவளை வீட்டின் வாசப்படி தாண்ட விடுவதில்லை என்றாள்.

என் மாமா பெண் திருமணம் மதுரையில் நடந்த போது அவளை வரச்சொன்னேன் நந்தினியுடன். நந்தினிக்கு கல்யாண சாப்பாடு, இலை போட்டு பந்தியில் உட்கார்ந்து சாப்பிட பிடிக்கும் என்ற ஒரு காரணத்திற்க்காகவே. சாப்பிடும் போது நந்தினி முகத்தில் அப்படி ஒரு வெட்கம். பட்டுப் பாவாடை கட்டி,அதனை ஒரு கையால் முழங்கால் வரை தூக்கிக் கொண்டு வந்தாள் அந்த செல்லக்குழந்தை. மேடம் பாவாடை பாழாகாமல் பத்திரமாய் இருக்காங்களாம்.

இவளுக்காகவே இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று கலா மறுத்து விட்டாள்.எத்தனையோ பேர் அட்வைஸ் செய்தும் மிக பிடிவாதமாய் மறுத்து விட்டாள்.

அவளின் கணவர் அவளுக்கு சொந்தம் கிடையாது.கணவர் வீட்டில் யாரும் இப்படி குறையுடன் இல்லை. இவளின் சொந்தத்திலும் இப்படி யாரும் இல்லை. திருமணம் முடிந்து 5 வருடங்கள் கழித்து நந்தினி பிறந்தாள்.அந்த பெண் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கும் வரை பிரச்சனை எதுவும் தெரியவில்லை.அதன் பிறகு தான் அந்த குழந்தையின் நடவடிக்கை வைத்து MR (mental retardation) என டாக்டர் கூறினார்.

கலாவை, நந்தினியினை எப்ப மதுரை போனாலும் சந்தித்து வருவேன். வெளியூரில் யார் வீட்டிற்கும் அவளை அழைத்து போவதில்லை. மதுரையில் யார் வீட்டிற்கு போனாலும் இரவு அவர்கள் தங்குவதில்லை.நான் எப்ப மதுரை போனாலும் மூவரும் மீனாட்சி கோயிலுக்கு,இரவு சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு விசிட் செய்வது வழக்கமாய் வைத்து இருக்கிறோம்.
நான் தவறாமல் அவளை பார்க்கப்போவது கலாவிற்கு மிக மகிழ்ச்சி. இதை தவிர வேறு எந்த மகிழ்ச்சியும் என்னால் கலாவிற்கு தர முடியவில்லை.

Friday, March 11, 2011

பெயர்

இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்தவர் சுசி. அவருக்கு என்னுடைய நன்றிகள்.

என் அப்பா தான் எனக்கு பெயர் வைத்தார். ஒரு ரைமிங்காக இருக்கும் என்று என் தங்கைக்கு வைத்த பெயர் குமுதா.நிறைய உறவுகள் என்னை குமுதா என்றும் அவளை அமுதா என்றும் மாற்றி மாற்றி சொல்வார்கள். இல்லை என்று மறுக்காமல் உம் போட்டு வருகிறோம். அமுதா என்பது தமிழ் பெயர். நிறைய பழைய தமிழ் படங்களில் இந்த பெயர் வருகிறது. ஆந்திராக்காரங்க என் பெயரை அமிர்தாவா என்பார்கள். அன்பே அமுதா நீ பாலமுதா, சுவை தேனமுதா என்று ஒரு பாடல் சிலோன் ரேடியாவில் அடிக்கடி ஒலிப்பரப்பாகும். டி.எம் செளந்தர்ராஜன் பாடியது. எனக்கு ஏனோ அந்த பாடலை கேட்டதில் இருந்து என் பெயர் பிடிக்கவில்லை அப்போது.என் அப்பா அமுதா தேவி என்று என் பெயரை மாற்றிக் கொள்ள சொன்னார். அவரின் பாட்டியின் பெயர் ஸ்ரீதேவி. அப்பவே எப்படி மாடர்ன் பெயர் என்று பெருமை அடித்துக் கொள்வார்.என் அத்தையின் பெயர் தேவி என்பதால் ரிப்பீட்டுக்கு நான் அந்த பெயரை இணைத்துக் கொள்ள ஒத்துக்கொள்ளவே இல்லை.

என்னுடைய சின்ன வயதில் ரொம்ம்ப சேட்டை செய்வேன்.  அடங்கா பிடாரி, குறத்தி, டிங்கு ராணி,வாயாடி,பத்ரகாளி,ராட்சசி எனவும் கூப்பிடப்பட்டேன். ஆனாலும், அப்படி கூப்பிட்டவர்களை போங்கடா என்று சொல்லிட்டு நான் செய்ற சேட்டைகளை தான் செய்வேன்.அப்புறம் காலப்போக்கில் எல்லோருக்கும் அம்முவானேன்.  என்னுடைய மகன்கள் கூட பேச ஆரம்பிக்கும் போது அம்மு என்றே அழைத்தனர். அப்புறம் தான் அம்மா, மம்மி என்று மாறினர். என் உடன்பிறப்புகள் யாரும் அக்கா என்று என்னை ஒரு நாளும் அழைத்ததே இல்லை.

திருநெல்வேலியில் என்னுடன் படித்த பெண்கள் வடிவு, கோமதி, ஆவுடையம்மாள், காந்திமதி, மீனாட்சி, சரஸ்வதி, லெக்‌ஷ்மி என்று அம்மன்களாக தான் இருப்பர். எனவே என்னுடைய பெயர் அங்கே மாடர்னாக இருந்தது. பையன்கள் என்றால் சுப்ரமணி, மணிகண்டன், நாதன்,திருநாவுக்கரசு,குமார் என்று சைவப்பெயர்கள் தான் அதிகம் இருக்கும். என் தம்பிகளின் பெயர் மதுசூதனன், பிரபு என்று மாடர்னாக இருக்கும்.

மேலும் திருநெல்வேலியில் பாட்டி, தாத்தா பெயர் தான் வழி வழியாக வைப்பார்கள். திண்டுக்கல்லில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தான் இன்னொரு R.அமுதாவுடன் மோதிக் கொண்டேன். இருவரும் ஒரே செக்‌ஷன். இருவருக்கும் ஆர் தான் இன்ஷியல், எனவே,அந்த வருடம் மட்டும் அவள் அமுதா ரத்தினமாகவும், நான் அமுதா ராமசாமியாகவும் அப்பாவின் பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்டோம்.

அதன் பின் என் பெயரோடு மோதிக் கொண்டது இந்த பதிவுலகத்தில் தான். அமுதா என்று இன்னொரு பதிவர் இருந்ததால் நான் முதலில் அப்பாவி அமுதா என்று தான் பெயர் வைத்தேன். யோசித்ததில் எப்பவும் அப்பாவியாக நான் இருப்பது இல்லை சில சமயம் அடிப்பாவி! என்னும் படியாகவும் இருப்பதால் அந்த அப்பாவியினை கடாசி விட்டு கணவரின் பெயரில் (கிருஷ்ணமூர்த்தி-அவர் எட்டாவதாய் பிறந்ததால் அவருக்கு இந்த பெயர்) கிருஷ்ணாவினை சேர்த்து அமுதா கிருஷ்ணாவானேன். அமுதா.K.மூர்த்தி (அமுதாக்கே மூர்த்தி!) என்றும் சில இடங்களில் சொல்லி இருக்கிறேன்.

அம்மு என்பது அமுதா என்பதின் சுருக்கம் என்றே நினைத்து வந்தேன். ஒரு முறை என் தம்பிக்கு பெண் பார்க்க போன போது என் அம்மா என்னை அம்மு என்று எதற்கோ எதார்த்தாமாய் அழைக்க அந்த பெண்ணின் அம்மா பதறி போனார். என்னுடைய பெண்ணையும் அம்மு என்று தான் அழைப்போம்.( அவரின் பெயர் அமுதா இல்லை) நீங்கள் எல்லோரும் இவரை(என்னை சுட்டிக்காட்டி)அம்மு என்று தான் கூப்பிடுவீர்களா என்று தேவை இல்லாமல் ஓவராய் பதறினார். அதாவது அவர் மகளை மட்டும் தான் இனி அம்மு என்று நாங்கள் அழைக்க வேண்டும் என்று நேரடியாக சொல்லாமல் ஒரு உத்தரவு போட்டார்.
அதுவும் இல்லாமல் துபாயில் அப்போது நல்ல வேலையில் இருந்த என் தம்பியினை திருமணத்திற்கு பிறகு கட்டாயம் இந்தியா வர வேண்டும் என்றும் கூறினார். இத்தனைக்கும் அந்த பெண்ணின் சம்பளம் கம்மி தான். எங்களுக்கு அந்த பெண் ரொம்ம்ம்ப குண்டாக வேறு இருந்ததால் முதலிலேயே பிடிக்கவில்லை. இதில் இப்படி ஒரு தேவையில்லாத பிரச்சனை வேறு. அம்மா தாயே நீங்களே அம்மு,அம்முன்னு சொல்லிக்கோங்க என்று ஓடி வந்து விட்டோம். இந்த அம்மு பிரச்சனைக்காக ஓடி வரவில்லை மக்களே.அவர்கள் சொன்ன கண்டிஷன்கள்+குண்டு பிடிக்காமல் வந்தோம்.

 ஸ்கூல், காலேஜில் எப்பவும் அட்டெண்ட்டெண்சில் முதல் பெயர் என்னுடையது தான்.(படிப்பில்? என்ன கேட்டீங்க காதில் சரியாய் விழலைப்பா?)

AMUTHA என்று தான் எழுதுவேன் யாராவது AMUDHA என்று எழுதினால் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் மாதிரி தோணும்.

யாரை மாட்டிவிடலாம்??

பிரபு எம்

அன்புடன் அருணா

கீதா ஆச்சல்

மங்குனி அமைச்சர்


Wednesday, March 09, 2011

பிடித்து சுட்டது


சிங்கப்பூர் சிங்கம் தண்ணீ துப்புவதில் கவனமா இருக்கே! திரும்புவதற்குள் ஒரு ஃபோட்டோ அப்பாடா சுட்டாச்சு!!!


தண்ணீ அடிக்கும் யானை?
குருவாயூர்


தாஜ்மகாலுக்கு கோபமா லைட்டா லெஃப்ட்ல ஒதுங்கிடுச்சு.


அடுத்த தடவை அந்த உச்சிக்கு போயிடணும். ஜில்லுன்னு காஷ்மீர் சோன்மார்க்


தாம்பரம் ரயில்வே காலனியில் நாங்கள் இருந்த வீடு.


ஒரு போட் மட்டும் கோபமாய் போகுதே.  ஊட்டி பைக்காரா.


போ(ர்)ட் மீட்டிங்கா?காஷ்மீர் தால் ஏரி.என்னிடம் சுட்ட மேங்கோ ஜீஸுடன். குடிச்சுட்டு கொடுத்தா மூடி திறந்து குடிக்கலாம்னு இருந்தேன்.ஆனா, மிஸ்டர் ஃபுல்லா குடிச்சுட்டு தான் பாட்டிலை கடாசினார்.ஜம்மு வைஷ்ணவி தேவி கோயில் போகும் வழி.


Friday, March 04, 2011

தூத்துக்குடி ஆயின

உறவுகள் நல்லது கெட்டதுன்னு ஒன்னு கூடும்போது அதற்கு வந்திருக்கும் சிலரை பெயர் இல்லாது நம் வீட்டு பெரியவர்கள் இப்படி மற்றவர்களிடம் சொல்வதுண்டு.எங்கள் வீட்டில் எப்படின்னா? தூத்துக்குடி ஆயின, வாங்கல் ஆயின,திருச்சி ஆயின,மதுரை ஆயின,மெட்ராஸ் ஆயின. ஆயின தெலுங்காம்!!. முறையே தூத்துக்குடிக்காரர், வாங்கல்காரர்,திருச்சிக்காரர்,மதுரைக்காரர், மெட்ராஸ்காரர்.

அவர்களுக்கு என்ன பெயர் என்றே தெரியாது. அந்த ரூமில திருச்சி ஆயின உட்கார்ந்து இருப்பார் அவரை கொஞ்சம் இங்க வர சொல்லு என்றதும் அவரிடம் சென்று எங்க தாத்தா கூப்பிடுறாங்க என்று சின்ன வயதில் சொல்லி சென்றதுண்டு.அவர் பெயர் என்ன என்று தெரிந்துக் கொள்ள முயன்றதில்லை. எப்பவும் அவர் திருச்சி ஆயின தான். திருச்சி மாமா என்று சின்னவர்களும், திருச்சி ஆயின என்று பெரியவர்களுக்கும் பழக்கம். என்னவோ அவர் ஒருவர் தான் திருச்சியில் இருப்பது மாதிரி.

அப்பொழுதெல்லாம் தெரியாத உறவுகளில் ஆண் என்றால் மாமா,பெண் என்றால் அத்தை என்று தான் சொல்றது வழக்கம். இப்ப ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

ஒரு முறை கருமாதி பத்திரிக்கை பார்த்து அதில் இருந்த ஃபோட்டோ பார்த்து தான் தூத்துக்குடிக்காரர் பெயர் ராமகிருஷ்ணன் என்றே எனக்கு தெரியும். அவர் செத்த பிறகு தான் அவரின் பெயர் தெரிந்துக் கொண்டோம்.

ஊரின் பெயரை தங்களுடன் விரும்பி இணைத்து கொண்டவர்கள் உண்டு.அரசியல்வாதிகள் தான் பெரும்பாலும் அப்படி செய்வார்கள். ஆனால், உறவுக்காரர்களால் ஒரு அடையாளத்திற்கு வைக்கப்பட்டு பிறகு அதுவே நிலைத்தும் விடுகிறது. திருச்சியில் இருந்து 4 உறவுக்காரர்கள் வந்தாலும் அது ஏனோ ஒருவருக்கு மட்டுமே திருச்சிக்காரர் என்ற பெயர் வைக்கப்படுகிறது.பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டும் தான் வைக்கப்படுகிறது.இன்னும் சிலர் அவர் வேலை செய்யும் இடத்தினை வைத்து அழைக்கப்படுவதும் உண்டு.ரயில்வேக்காரர், பேங்க்காரர்,மிலிட்டரிக்காரர் இப்படி.

உங்கள் உறவுகளில் இப்படி ஒருவர் நிச்சயம் இருப்பார் என்ற நம்பிக்கையுடன்.