Thursday, March 11, 2010

பாவம் இந்த 10,+2 மாணவர்கள்....

+2 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு எப்போழுதும் இல்லாத அளவு இப்போது அதிக பிரஷர் ஸ்கூலில் இருக்கிறது. ஒரு பேப்பர் எழுதி அடுத்த பேப்பர் எழுத இருக்கும் இடைப்பட்ட நாட்களில் ஸ்கூலிற்கு வரசொல்லி கட்டாயப் படுத்தி வரவழைக்கிறார்கள். மதியம் அங்கு அமர்ந்து படிக்கும் போது ஒரேடியாக படித்துக் கொண்டே யாரும் இருக்க போவதில்லை. எனவே, எதோ இருக்கணுமே என்று கடமைக்கு இருந்து வரும் மாணவர்கள் வீட்டிற்கு வரும் போது ஏதோ போருக்கு போய் திரும்பி வர மாதிரி மிக களைப்பாக வருகிறார்கள்.

மதியம் கொண்டு போகும் உணவினை கூட இருக்கும் சில சாப்பாட்டு ராமன்கள் முழுவதும் சாப்பிட விடுவதில்லை. எனவே காலையில் 8 மணிக்கு போகும் குழந்தைகள் அடிக்கும் இந்த வெயிலில் அரைகுறை சாப்பாடு சாப்பிட்டு இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வருவதால் மிக டல்லாக வருகிறார்கள். அதன் பிறகு என்ன படிக்க முடியும். இதை புரிந்துக் கொள்ளாத பெற்றோர்களும் வீட்டிலும் படி படி என்று உயிரை எடுத்தால் என்ன தான் செய்வார்கள் மாண்வர்கள். நல்ல சத்துள்ளதாய் சாப்பிட்டால் தானே நன்கு படிக்க முடியும்.

நன்கு சிரத்தையாக படிக்கும் மாணவர்கள் பற்றியது அல்ல இந்த புலம்பல். சுமாராய் படிக்கும் ஆவரேஜ் மாணவர்கள் பற்றியது தான் இந்த புலம்பல்.வியாபாரம் ஆகிவிட்ட கல்விதுறையால் இந்த மாணவர்கள் உடல் நலம் மிக பாதிப்படைகிறது.

நன்கு படித்தால் மட்டும் தான் வாழ்க்கை.IT மட்டும் தான் வேலை என்ற மோகம் எப்பொழுது தான் மறையுமோ. சுமராய் படித்தும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று எப்பொழுது தான் இந்த பெற்றவர்கள் உணர்வார்களோ. பெற்றொர்கள் உணர்ந்தாலும் இந்த பள்ளிகள் விடுவதாயில்லை.

என் ஃப்ரெண்டுடைய பையன் இந்த வருடம் திருநெல்வேலியில் ஒரு பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வருகிறான். ஸ்டடி ஹாலிடேஸ் விடவில்லை என்பதால் இவளாக பையனை ஸ்கூலிற்கு அனுப்பாமல் 2 நாட்களாக வீட்டிலேயே படிக்க வைத்து இருக்கிறாள்.ஃபோன் செய்து ஸ்கூலில் அனுப்பும் படி சொல்கிறார்கள் என்று ஃபோனை கட் செய்து இருக்கிறாள். ஒரு நாள் காலை வேளையில் டீச்சரே வீட்டிற்கு வந்து விட்டார்களாம். இத்தனைக்கும் அந்த பையன 90% எடுக்கும் மாணவன். டீச்சர் வருவதை மாடியில் இருந்து பார்த்து விட்ட அந்த பையன் ஓடி போய் பாத்ரூமிற்குள் ஒழிந்து கொண்டான்.பையனுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவன் அப்பாவுடன் டாக்டரிடம் போய் உள்ளதாய் சொல்லி சமாளித்து அந்த டீச்சரை அனுப்பி இருக்கிறாள். ஹால் டிக்கெட்டினை இன்னும் கையில் கொடுக்காமல் இருப்பதால் ஸ்கூலிற்கு போகவே பயமாக இருக்கிறது என்று புலம்பி கொண்டு இருக்கிறாள்.மாணவர்களுக்கு படிப்பின் மீதே வெறுப்பு வரும் வகையில் உள்ளது இன்றைய பள்ளிகளின் நடத்தை.


Tuesday, March 09, 2010

வருடங்கள் கழித்து போன காலேஜ்!!

நேற்று என் மகன் நகுல் காலேஜில் இருந்து மதியம் வரும் போதே ஒரே டென்ஷனாய் வந்தான். நாளைக்கு என் H.O.D உங்களை காலேஜ் கூட்டி வர சொல்லி இருக்கிறார்மா.அட்டெண்டன்ஸ் 15 நாள் குறையுது இது வரை இப்படி ஆனது இல்லை என்பதால் தன்னை மட்டும் அம்மாவை கூட்டி வர சொன்னதாய் ஒரே புலம்பல். எனக்கு தெரிந்து 8 நாட்கள் தான் இந்த செமஸ்டரில் லீவு எடுத்து இருந்தான். என்க்கு தெரியாமல் லீவே போட்டது இல்லை. காலேஜ் கட் செய்து சினிமா போனாக்கூட என்னிடம் போனில் சொல்லி விடுவான்.எனவே, நான் காலேஜ் வர சங்கடப்படுவேனோ, அவனை தப்பாய் புரிந்துக் கொள்வேனோ என்று ஒரே டென்ஷன் அவனுக்கு. நான் ரொம்ப கூலாய் காலேஜ் நீ சேர்ந்த போது வந்தது. நல்லதாய் போச்சு இப்ப ஒரு சான்ஸ் உங்க தாம்பரம் MCC க்கு இனிமேல் எப்ப போக முடியும் அதனால் நான் வரேண்டா என்று கூலாக சொல்லிவிட்டேன்.

காலேஜிற்கு இன்று காலையில் அவனுடன் போய் அவன் ஆசிரியரை சந்தித்து வந்தேன். நன்கு படிக்கும் பையன் இத்தனை நாட்கள் லீவ் எடுத்தது பெற்றவர்களுக்கு தெரிவிக்கவே இப்படி அழைத்து வர சொன்னோம் என்று அவர் கூறினார். நானும் இல்லை இவன் எனக்கு தெரியாமல் லீவு எடுத்தது கிடையாது. வேறு ஏதோ பிரச்சனை ஆகி உள்ளது என்று சொல்லிட்டு மார்ச் 19 அவனுக்கு ஒரு நாள் லீவு தேவை உள்ளது என்று அவரிடம் அப்படியே சொல்லி விட்டேன். அப்புறம் அவன் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து கேண்டின் போய் ஒர் வெட்டு வெட்டிட்டு க்ளாஸ் ரூமெல்லாம் சுத்தி பார்த்துட்டு. காடு போல் உள்ள அந்த காலேஜுக்குள் வெயிலே தெரியாத அந்த சூழ்நிலையை அனுபவித்து விட்டு, ஏண்டா மூன்று வருடம் படிக்கிறே மூன்றே மூன்று கேர்ள்ஸ் தான் ஃப்ரெண்ட்ஸா என்று அதட்டிவிட்டு வந்து விட்டேன்.

Sunday, March 07, 2010

பாவம் இந்த தமிழர்கள்...!!!

20 நாட்களுக்கு $6,120, இந்திய மதிப்பில் ரூபாய் மூன்று லட்சம். மூன்று வேளை நல்ல கல்யாண சாப்பாடு,தங்க நல்ல அறை,தினம் இரண்டு வேளை பால், காலை மாலை என இரண்டு மணிநேரம் சொற்பொழிவு, ஒரு மணி நேரம் யோகா க்ளாஸ் என இரண்டு மாதத்திற்கு ஒரு 20 நாட்கள் இந்த ப்ரொக்ராம் அந்த ஆசிரமத்தில் நடத்தப்படும். ஒரு குழுவில் 100 பேர்கள்.இதில் கலந்துக் கொள்பவர்கள் அதிகம் பேர் கனடா,இங்கிலாந்து,அமெரிக்காவில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்கள்.
அவருக்கு பாத பூஜை செய்ய 25 ஆயிரம் ரூபாய் தனியே கட்டவேண்டும். அந்த இருபது நாட்களும் தினம் ஒரு 50 பேராவது 5 பேர்கள் அடங்கிய ஒரு குழுவாக சேர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி தாம்பாளத்தில் பாத பூஜை செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.

அகதிகளாய் வாழ போன மக்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் கொடுக்கும் மாத முதியோர் பென்ஷனை இப்படி வேஸ்டாக இந்த ஆசிரமத்திற்கு கொடுத்து ஏமாறுகிறார்கள். எங்கு தான் பிரச்சனை இல்லை. யார் தான் இப்பொழுது நாடு விட்டு நாடு போய் தங்கள் வேர்களை தொலைப்பதில்லை. அவர்கள் பிரச்சனையை தீர்க்க இவரை விட்டால் ஆள் இல்லை என்பதனை போல நன்கு மூளை சலவை செய்யப்பட்டவர்கள். அந்த நாடுகளுக்கு சொற்பொழிவிற்கு போகும் போது எல்லாம் ஒரு வீட்டிற்கு அந்த ஆசிரம சாமியார் விசிட் செய்ய 4 லட்சம் ரூபாய் ஃபீஸாம். தினம் 5 வீடுகளாவது இவர் விசிட்டுவது உண்டாம்.
அவர் பாதம் நம் வீட்டில் பட்டால் நம் பாவங்கள் போய்விடுமாம். அதற்கும் வெயிட்டிங் லிஸ்ட் உண்டு.இதில் பாதி பேர் இலங்கையிலும் அரசாங்க வேலை பார்த்து அந்த அரசாங்கத்திலும் பென்ஷ்ன் வாங்குபவர்கள். அனாமத்தாய் பணம் வந்தால் அதனை இப்படி தான் நாசம் செய்வார்கள் போலும். இந்த வருடம் இலங்கைய்யின் புது அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்துக் கொண்டு இலங்கையில் பென்ஷன் வாங்குபவர்களை ஒழுங்கு படுத்த மற்ற நாட்டு அரசுடன் பேச்சு வார்த்தை தொடங்கி உள்ளது.அதாவது பென்ஷனை நிறுத்துவது இல்லையென்றால் அந்த நாட்டு பென்ஷ்ன் தொகையை குறைப்பது.

தமிழில் பேச்சு வல்லமை உடைய இவரின் குறி வெளி நாட்டில் வாழும் பணக்கார இலங்கை தமிழ் மக்களே. இவர் ஆசிரமத்திற்கு இப்படி 20 நாட்கள் வந்து தங்குபவர்கள் இவர்கள் தான் அதிகம். ஏற்கனவே, மன அமைதி இழந்து தவிக்கும் இந்த மக்கள் சன் சேனல் வீடியோ காட்சியினை எப்படி எடுத்துக் கொள்வார்களோ, 2009 டிசம்பர், ஜானவரி மாத ப்ரோகாமில் இவர்களில் ஒருவராய் இருந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த நடிகையை தினம் பார்த்து பேசிய அந்த குழு உறுபினர்கள் இதனை எப்படி ஜீரணித்து கொள்வார்களோ. இனியாவது பணத்தினை வீணாக்காமல் நல்ல காரியங்களுக்கு செலவிடலாம் இல்லை அவர்கள் வம்சத்திற்காவது சேர்த்து வைக்கலாமே.


பிரச்சனைகள் இவர்களை இப்படி பணம் செலுத்த தூண்டுகிறதா. இல்லை.ஒரு பெரிய ப்ரெஸ்டீஜ் இந்த மக்களை இப்படி பணம் கட்ட தூண்டுகிறது.நீ போனீயா இரு இந்த வருடம் நானும் போய் வருகிறேன் என்ற ஒரு போட்டி மனப்பான்மையால் ஆசிரமத்திற்கு அமோக வாழ்வு. போய் வந்தவர்களை பார்த்து நிறைய பேர் இந்த ஆசிரமத்திற்கு குடும்பம் குடும்பமாக வந்து மூன்று மாதங்கள் எல்லாம் தங்கி செல்கிறார்கள். 20 நாட்களுக்கு 3 லட்சம் என்றால் கணக்கு பார்க்கவும்.

மூன்றே லட்சத்தினை மூன்று மாணவர்கள் படிக்கக் கொடுக்கலாம். இல்லையென்றால் மூன்று ஏழைப் பெண்களின் கல்யாணத்திற்கு உதவலாம். இல்லையென்றால் யாருக்கேனும் ஆபரெஷனுக்கு உதவலாம். இல்லையென்றால் அவர்கள் நாட்டில் இருக்கும் அனாதை ஆசிரமத்திற்கு கொடுக்கலாம்.

இல்லை என்றால் நன்கு ஊர் சுற்றி இந்தியாவின் வளமையான கோயில்களையும், இயற்கையையும் ரசித்துப் போகலாம். இப்படி எத்தனையோ இல்லையென்றால் இருக்கும் போது எப்படி தான் இப்படி பணத்தினை வீணாக்குவார்களோ தெரியவில்லை. எங்கேயும் கிடைக்காத நிம்மதி மூன்று லட்சம் செலவு செய்து 20 நாட்களில் ரெடிமேடாக வாங்கி செல்ல முடியுமா?

அந்த சாமியாராவது வாங்கிய பணத்திற்கு ஒழுங்கு முறையாக இருந்து இருக்கலாம். இல்லை ஜாக்கிரதையாக ரூமில் கேமிரா இருக்கிறதா என்று செக் செய்து இருக்கலாம்.

ஏற்கனவே மனக்கவலையில் அல்லது மன நோயில் இருக்கும் அந்த மக்களுக்கு பெரிய துரோகத்தினை செய்து விட்டார்.