Monday, November 29, 2010

பெண் மனதை சொல்லும் பாட்டு

பெண் மனதை பற்றி சொல்லும், பெண்களால் பாடப்பட்ட  10 பாடல்களை தேர்வு செய்ய சொல்லி சகோதரி ஆமினா கேட்டுக் கொண்டார். நன்றி ஆமினா. 


Thursday, November 25, 2010

அப்பா...உன் உடன் பிறந்தவர்கள் எல்லாம் 60+ வயதிலும் தெம்பாய் இருக்க..

நீ மட்டும் ஏன் 45 வயதிலேயே இந்த உலகத்தினை விட்டு போய் விட்டாய்?

சைக்கிள் மட்டுமே நீ ஓட்டி நான் பார்த்து இருக்கிறேன்..

இன்று கார் ஓட்டும் என் மகனை நீ பார்க்கவேயில்லையே?


உனக்கு உடல் நலமில்லை யாராவது வாருங்கள் என்று நம் வீட்டிற்கு வந்தார் உன் நண்பர்..

அவருடன் நானும் உன் மகனும் உடனே வந்தோம் நீ ஆசிரியராய் பணியாற்றிய பள்ளிக்கு..

நாங்கள் பள்ளியில் நுழைந்த போது உனக்கு மாலையிட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றினரே..

இப்பவும் அந்த நவம்பர் 26 சனிக்கிழமை கண்களிலே நிற்கிறது..

நீ எங்களை விட்டு போய் 22 வருடங்களா ஓடி விட்டன..


இப்பவும் நெல்லை சென்றால் நீ தினம் குளித்த குறுக்குத்துறை வட்ட பாறையினை பார்த்து வருகிறேன்..

ஆசிரியருக்கு ஒரு பிரச்சனை என்றால் அந்த பள்ளியினை ஒரு வழி செய்து விடுவாயே..

உன்னால் பிரச்சனை தீர்ந்த ஆசிரியர்கள் பிறகு எப்பவாது உன்னை நினைத்திருப்பார்களா?

உன் தங்கை, தம்பி என்று நீ வாழும் வரை அவர்கள் முன்னேற்றத்திற்காக உன்னை வருத்திக் கொண்டாய்..

இன்று நாங்கள் என்ன செய்கிறோம் என்று அவர்கள் யாரிடமும் விசாரிப்பது கூட இல்லையப்பா..

எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பது இல்லை

எனக்கு தாத்தா அவரின் 73 வயது வரை இருந்தார் என் பிள்ளைகளை கூட பார்த்துதான் மறைந்தார்..

ஆனால் என் பையன்களுக்கு தாத்தான்னு உன்னை ஃபோட்டோவில் தான் அறிமுகப்படுத்த முடிகிறது..

அம்மாவிற்காக சிறுது காலம் இருந்து இருக்கலாம் நீ..

என்ன தான் நாங்களெல்லாம் நன்றாக கவனித்தாலும் நீ இருந்தால் தானே அம்மாவிற்கு மகிழ்ச்சி..

நீ எங்காவது கூட்டத்தில் இருந்து வந்து விட மாட்டாயா என்று பெருங்கூட்டத்தில் உன்னை தேடி இருக்கிறேன்..

திடீரென்று வீட்டின் கதவினை தட்டுவது நீயாக இருக்க மாட்டீயா என்று கதவை திறக்கும் போதெல்லாம் நினைத்து இருக்கிறேன்..

தைரியம் விதைத்தாய்,பொறுப்பினை விதைத்தாய்,எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல படிப்பை தந்தாய்,உன்னை மறக்க மட்டும் சொல்லி தர மறந்தாய்..

நீ இறந்த போது வாழ்க்கையில் இனி சிரிக்கவே மாட்டோமோ என்று நினைத்தோம்..

ஆனால் உன் ஆசிர்வாதத்தால் சிரித்து வாழ்கிறோம்....

Wednesday, November 24, 2010

மேஸ்காட்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு லக்கி மேஸ்காட் (Mascot)தேர்ந்து எடுக்கப்படுகிறது.அதுவே அந்த விளையாட்டிற்கு விளம்பரத்திற்கும் பயன்படுகிறது.அது விளையாடும் நாடுகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாய் நம்பப் படுகிறது.

முதல் முறையாக 1982-ல் 9ஆவது ஏசியாட் டில்லியில் நடந்த போது அப்பு என்ற குட்டி யானை அதிர்ஷ்ட சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் முதல் முதலில் கலர் டெலிவிஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த விளையாட்டுக்கள் கலரில் ஒளிபரப்பபட்டது. குருவாயூரிலிருந்து ஸ்பெஷல் ட்ரையினில் 36 யானைகள் இந்த விளையாட்டு தொடக்க விழாவிற்கு டில்லி கொண்டு செல்லப்பட்டன.அப்பு என்ற அந்த யானையின் பெயர் குட்டி நாராயணன். இந்தியர் அனைவரையும் மிகவும் கவர்ந்தது இந்த 5 வயது அப்பு.
7 வயதில் செப்டிக் டேங்கில் விழுந்து அடிப்பட்டு அந்த புண்ணின் காரணமாகவே சிகிச்சை பெற்று 2005-ல் குருவாயூரில் இறந்தது.

1986-ல் கொரியாவில் நடந்த போட்டிக்கு கொரிய புலி தேர்ந்து எடுக்கப்பட்டது. இந்த போட்டியின் போது தான் பி.டி.உஷா 4 தங்கப்பதக்கங்களை வென்றார்.1 வெள்ளி பதக்கமும் வென்றார். தங்க மங்கை, பயோலி எக்ஸ்பிரஸ் எனப்பெயர் பெற்றார்.

11 ஆவது போட்டி சைனாவில் நடந்தது.PAN PAN எனப்பட்ட பாண்டா கரடி அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டது.

12ஆவது போட்டி 1994-ல் ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் நடந்தது. அப்போது இரண்டு வெள்ளை வாத்துக்கள் Poppo and Cuccu அமைதியினையும்,ஒற்றுமையையும் அறிவுறுத்த தேர்ந்து எடுக்கப்பட்டது.

13 ஆவது போட்டி 1998-ல் தாய்லாந்தில் நடைபெற்ற போது Chai-Yo என்ற யானை தேர்ந்து எடுக்கப்பட்டது. சந்தோஷத்தையும், வெற்றியினையும் திருப்தியினையும் குறிக்கிறது.

14 ஆவது போட்டி தெற்கு கொரியாவில் நடைப்பெற்றது. கடல் பறவை அதிர்ஷ்டமாக தேர்ந்து எடுக்கப்பட்டது.  துரியா என்று அழைக்கப்பட்டது.ஆசிய நாடுகளிடையே ஒற்றுமையினை ஏற்படுத்த தேர்ந்து எடுக்கப்பட்டது.


15 ஆவது போட்டிகள் கத்தாரில் தோஹாவில் நடத்தப்பட்டது. அப்போது orry எனப்படும் ஒரு வகை ஆடு தேர்ந்து எடுக்கப்பட்டது.


இந்த முறை 2010 -ல் 16 ஆவது ஏசியாட்டிற்கு படத்தில் உள்ள ஐந்து ஆடுகள் தான் அதிர்ஷ்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஆட்டின் பெயர் லீயாங் யாங் என்பதாகும்.அது தான் மற்ற ஆடுகளுக்கு தலைவராக விளங்குகிறது. ஐந்து ஆடுகள் உள்ள இந்த சின்னம் ஆசியாவில் நல்ல சுபிட்சத்தையும், ஏற்றத்தையும், அமைதியினையும், வெற்றியினையும், ஆசிய மக்களுக்கு சந்தோஷத்தினையும் ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைனாவில் ஆடு ஒரு லக்கியான மிருகமாக பார்க்கப்படுகிறது. ஏசியாட் எனப்படும் ஆசியன் கேம்ஸ் சைனாவில் க்வாங்ஷோ நகரில் 12 நவம்பர் தொடங்கியது.அந்த நகரமே சிட்டி ஆஃப் கோட்ஸ் எனப்படுகிறது. அங்கு பெரும் பஞ்சம் வந்த போது வானத்தில் இருந்து ஆடுகளில் வந்த தேவதைகள் அந்த பஞ்சத்தினை போக்கி மக்களுக்கு அரிசியை கொடுத்துச் சென்றதாக கதை உள்ளது.

இது வரை தாய்லாந்தில் 4 முறை இந்த விளையாட்டு நடத்தப்படுள்ளது. இந்தியாவில், ஜப்பானில் இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளன.இந்த விளையாட்டு போட்டியில் மொத்தம் 46 நாடுகள் கலந்துக் கொள்கின்றன. ஆனால், 9 நாடுகளில் மட்டுமே இந்த விளையாட்டுப் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.இஸ்ரேல் 1974 லிற்கு பின் இந்த அமைப்பில் இருந்து வெளியேறி விட்டது.

சில விளையாட்டுக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆண்டுகள்:
கபடி போட்டி - 1990.
கராத்தே போட்டி -1994.
டேக் வாண்டோ -1994.
கிரிக்கெட் போட்டி-2010.

17 ஆவது போட்டி 2014-ல் தெற்கு கொரியாவில் நடத்த முடிவு செய்ய பட்டுள்ளது. மூன்று seal இதற்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன. காற்றையும், ஆட்டத்தினையும், வெளிச்சத்தையும் குறிக்கும் வகையில் இவை தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Saturday, November 20, 2010

குzaரிஷ்..

புகழ் பெற்ற மேஜிக் நிபுணர் ஈதன்(ஹிரித்திக் ரோஷன்) ஒரு முறை மேஜிக் ஷோவின் போது எதிரி மேஜிக்காரரால் உயரத்திலிருந்து கீழே விழுந்து அடிப்பட்டு, முகத்தினை தவிர உடலின் அனைத்து பாகங்களும் இயங்காமல் 14 வருடங்களாய் படுத்த படுக்கை ஆகிறார். அவரை 12 வருடங்களாய் கவனித்துக் கொள்வது சோஃபியா.(ஐஸ்வர்யா ராய்).ரேடியோ ஜாக்கியாக ஈதன் தன் வீட்டிலிருந்தே ரேடியோவில் தன் நகைச்சுவை பேச்சினால் மக்களை கவர்ந்து வருகிறார்.

ஆனால், தேவயானி தத்தா என்ற வக்கீல் மூலம் ஈதன் தன்னை கொன்று விடுமாறு(மெர்சி கில்லிங்) கோர்ட்டில் மனு செய்கிறார். ஈத்னின் தாயாரும் இதற்கு சப்போர்ட் செய்கிறார்.இதற்கு நடுவில் ஓமர் என்ற இளைஞர் ஈதனிடம் மேஜிக் கத்துக் கொள்ள வருகிறார். ஒரு முறை ஈதனின் பழைய காதலியும் ஃபோனில் ஈதனுடன் பேசுகிறார்.

கோர்ட் ஈதனின் ரிக்வெஸ்ட்டை ஏற்றுக் கொண்டதா இல்லையா?? தெரியணுமா படத்தினை பார்க்கலாமே.

ரித்திக் ரோஷனுக்கு இப்ப அப்படியே அப்பா ராகேஷ் ரோஷன் ஜாடை தெரியுது.படத்தில் எல்லோரும் அருமையாக நடித்து உள்ளனர். இளம் மஞ்சள் நிறத்தில் அனைவரும் இருக்கிறார்கள். ஒரு வீட்டினுள் நடக்கிறது இந்த படம். உயரமான ஒரு மியூஸியம் மாதிரி இருக்கிறது வீடு.

ஒரு ராத்திரியில் மழைபெய்யும் போது ரித்திக் ரோஷனின் முகத்தில் சொட்டு சொட்டாக இரவு முழுவதும் கூரையிலிருந்து நீர் சொட்டுவதும், அவர் படும் அவஸ்த்தையும் டச்சிங்கா இருக்கு,

ஐஸ் ஹோட்டலில் ஆடும் ஊடி என்ற பாட்டிற்கு டான்ஸ் அசத்தல்.

ஒரு பெரிய ட்ரான்ஸ்பெரண்ட் பந்துடன் ரித்திக் ஆடும் ஒரு டான்ஸும் சூப்பர்.

நிஜமான தாடி வைத்துள்ளார் ரித்திக் ரோஷன்.கொஞ்சம் வளர்ந்த முடி.

ஐஸ்ஸின் ட்ரெஸ் வித்தியாசமாய் உள்ளது. ஒரு நீண்ட கவுன். அதன் மீது ஏப்ரான், நீண்ட கூந்தலில் ஒரு பெரிய மலர் சைடில் வைத்து வித்தியாச ஐஸ். எப்பவும் அடர்த்தியான சிவப்பான லிப்ஸ்டிக்.

லாயர் வெள்ளை காட்டன் சேலையில் முக்கால் கை ஜாக்கெட்டுடன் வளைய வருகிறார்.

படம் இந்தியாவில் நடப்பது போல் இருந்தாலும், உடைகள்,வீடு, மேஜிக் தியேட்டர் எல்லாம் அந்நியப்படுகின்றன.பழைய இங்கிலீஷ் படங்களில் வருவதனை போல் இருக்கின்றன.

ப்ளாக் என்ற அமிதாப் நடித்த படத்தினை டைரக்ட் செய்த சஞ்சய் லீலா பன்சாலி இந்த படத்தினை டைரக்ட் செய்து உள்ளார். ரொம்ப பொறுமைசாலி மனிதர் போல.

படம் கொஞ்சம் ஸ்லோ.ரித்திக், ஐஸ்ஸிற்கு பெயர் சொல்லும் படம்.

மிக அருமையான ஃபோட்டோகிராஃபி. ரித்திக் ரோஷனை நிறைய முறை பெரிய கண்ணாடியில் காண்பிக்கின்றனர்.

லொகேஷன்கள், செட்டுக்கள் அருமை.

Wednesday, November 17, 2010

கல்யாணம் அப்பாலிக்கா குடித்தனம்!!!

ஒரு ஜோடி சில வருடங்கள் ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்வது பிடித்து இருந்தால் திருமணம் செய்து கொள்வது.இல்லையெனில் பிரிந்து விடுவது. வெளிநாட்டு கலாச்சாரம் இப்பொழுது இந்தியாவில் பரவ ஆரம்பித்து உள்ளது.

வெளிநாட்டில்:

1. வெளிநாட்டில் அப்படி வாழ்ந்து பின் பிரிந்து விடுபவர்கள் அதற்கு பிறகு வேறு நபர்களை திருமணம் செய்து கொள்ளும் போது திருமணத்திற்கு முன் வாழ்க்கையினை பற்றி ரொம்ப பெரிசாய் அலட்டிக் கொள்வதில்லை.

2. முக்கியமாய் ஆண்கள் டேக் இட் ஈஸியாய் எடுத்துக் கொள்ளும் சமுதாய அமைப்பு அங்கு உள்ளது.

3. ஒரு ஜோடி உன் குழந்தை, என் குழந்தை, நம் குழந்தை என்று வாழ பழகி உள்ளார்கள்.

4. ஒரு பெண்ணோ, ஆணோ தன் முந்தைய காதலனை தைரியமாய் இந்நாள் பார்ட்னருக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்.

5. பரஸ்பரம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி பழைய நினைவுகளை, புகைப்படங்களை, வீடியோக்களை அழித்து விட்டு பிரிந்து விடுவார்கள். எங்கேனும் பார்த்தால் கூட ஒரு ஹாய் சொல்லி போவார்கள்.

6. அங்கு பெற்றவர்களும், உடன் பிறந்தவர்களும் பெரிசாய் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.

7. முக்கியமாய் அங்கு யாரும் யாரையும் தங்கள் வாழ்க்கை முறை மூலம் ஏமாற்றுவதில்லை.

8. சிறுவயதிலேயே செக்ஸ் கல்வி பெறுவதால் கர்ப்பம் தரிப்பதை அங்கு மேக்ஸிமம் தவிர்க்கிறார்கள்.

இந்தியாவில்:

1. திருமணம் நிச்சயம் ஆன நாளிலிருந்து ஃபோனில் பேச ஆரம்பிக்கும் போதே ஒரு வித சந்தேகத்துடனே ஒரு ஜோடி பேச ஆரம்பிக்கிறது. ஒரு வேளை எதாவது இருக்குமோ என்றே விஷயத்தினை நோண்டுவார்கள். அப்படி இருந்திருந்தால் என்ன? அது பிடிக்காமல் தானே நம்மை தேர்ந்து எடுத்து உள்ளார் என்ற மனோபாவம் இங்கு கிடையவே கிடையாது.

2.பெண்கள் ஆண்கள் எத்தனை கீப் வைத்துக் கொண்டாலும் அந்த கணவனை தன்னுடன் தக்க வைப்பதில் தான் பெண்ணிற்கு இங்கு பெருமை. போடா என்று தூக்கி எறியும் பக்குவத்தினை பொருளாதாரமும், சமூக அமைப்பும் தருவதில்லை.சில ஆண்கள் திருமணத்திற்கு முன்பிருந்த தன் காதலை பற்றி பெருமை வேறு பீற்றி கொள்வார்கள் தன் மனைவியிடம்.திருமணத்திற்கு பின்னால் தன் கணவன் சின்னவீடு வைத்துக் கொண்டாலே பெண்கள் அதனை பொறுத்து போகும் போது திருமணத்திற்கு முன் நீ எப்படி இருந்தால் என்ன இப்ப என் கூட மட்டும் வாழ் என்பது தான் பெரும்பான்மையான பெண்களின் நிலை.

ஆனால், மனைவிக்கு அப்படி ஒரு வாழ்க்கை திருமணத்திற்கு முன்பு இருந்தது தற்போதைய கணவனுக்கு தெரிய வரும் போது உடனே அந்த பெண்ணை டைவர்ஸ் செய்ய தான் முன்வருவான். அவனால் தாங்கி கொள்ளவே முடியாது. அதன் பின் அந்த பெண்ணை டைவர்ஸ் வரை ஒரு புழுவை போல் தான் நடத்துவான். பெண்ணின் படிப்பு, அழகு, குடும்பம் எல்லாம் மறந்து விடும். வெளிநாட்டிலே வாழும் ஆணாக இருந்தாலும் இப்படி தான் நம் இந்திய ஆண்கள் நடந்துக் கொள்வார்கள்.

3. ஒரு பெண் அக்கா, தங்கை குழந்தைகளை கொஞ்ச கூட புகுந்த வீட்டு ஒப்புதல் வேண்டும் இங்கே.
இதில் எங்கே உன் குழந்தை, என் குழந்தை, நம் குழந்தை.வெளங்கிடும்..

4. என் க்ளோஸ் ஃப்ரெண்ட் என்று ஒரு ஆணை பெண்ணால் தன் கணவனுக்கு அறிமுகப்படுத்துவது இங்கு கஷ்டம்.

5. இங்கு பழகிய நினைவுகளை அழித்து விடுறேன் என்பார்கள். ஆனாலும் அழிக்க மாட்டார்கள். பழி வாங்கும் நோக்கத்தில் அதனை பின்னாளில் பயன் படுமே என்று அப்படியே வைத்து இருப்பார்கள்.ஒரு வேளை லிவிங் டூ கெதரில் இருவரும் பரஸ்பரம் பேசி பிரியாமல், ஒருவருக்கு பிடிக்காமல் பிரிந்து இருந்தால் பிரிந்து போன அந்த பெண்ணையோ அல்லது ஆணையோ வாழவிட மாட்டார்கள். அதான் உன்னை பிடிக்கலை என்று சொல்லிட்டு போயச்சே ஏன் இன்னும் பின்னாடியே அலையணும்.குரூர புத்தி என்னை வேண்டாம் என்று சொல்லிட்டு போனீல இரு உன்னை என்ன செய்கிறேன் என்று சிலர் அலைவார்கள்.

6. அப்படி வாழ்வது தெரிந்தால் இங்கு கூட பிறந்தவர், பெற்றவர்கள் கொன்று போட்டுவிடுவார்கள் அந்த பெண்ணை.

7. எனவே, பெண்ணோ ஆணோ தாங்கள் அப்படி ஒன்றாக வாழ்வதை இங்கு எந்த சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்துவதில்லை. திருட்டுதனம் ஜாஸ்தி இருக்கும்.

8.இங்கு செக்ஸ் அறிவு எவ்வளவு படித்தவர்களுக்கும் கம்மி தான். எனவே, அப்படி வாழும் போது அபார்ஷன் செய்துக் கொண்டு திண்டாடுவார்கள்.

18 பட்டி பஞ்சாயத்து தீர்ப்பு என்னனா இந்தியாவில் முறைப்படி கல்யாணம் செய்துட்டு, மொய் பணம் எல்லாம் ஒழுங்கா வந்ததா என்று எண்ணி பார்த்துட்டு அப்பாலிக்கா ஒன்றாக வாழலாமே..

Tuesday, November 16, 2010

சீக்கிரம் கல்யாணம் செய்துக்கோங்க...

இப்பொழுதெல்லாம் எல்லா மதத்திலும், இனத்திலும் மாப்பிள்ளை, பெண் கிடைப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. சரி காதல் திருமணம் செய்யட்டும் என்று பார்த்தால் அதுவும் நிறைய குடும்பங்களில் ஒத்துக் கொள்வதில்லை. 32 வயதில் ஆணுக்கிற்கும், 28 வயது பெண்ணிற்கும் திருமணமாகிறது.திருமணம் முடிந்த உடன் குழந்தை பெற்றுக் கொள்வதும் இப்பொழுது நடைமுறையில் இல்லை. 30 வயதிற்குள் திருமணம் முடிந்தால் ஒரு இரண்டு வருடம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

10 ஜோடிகளுக்கு திருமணம் முடிந்தால் அதில் 5 ஜோடிகளுக்கு தான் குழந்தை எந்த பிரச்சனையும் இன்றி பிறக்கிறது. மற்றவர்களுக்கு குழந்தை உண்டாகாமல் போகிறது அல்லது குறை பிரசவம் ஆகிறது அல்லது அபார்ஷன் ஆகிறது. டிஸ்சார்ஜ் ரிப்போர்டில் காரணம் தெரியவில்லை என்றே எழுதுகிறார்கள். unknown reason - பெண்ணிற்கு அதிக வயது ஆகி இருக்கலாம், சுற்றுபுறம் ஒரு காரணமாக இருக்கலாம், வேலை டென்ஷனாக இருக்கலாம். இது தான் பிரச்சனை என தெரிந்தால் அதனை சரி செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் தெரியாத, அறிய முடியாத காரணங்களுக்கு என்ன செய்வது. மருத்தவமனையில் 10 பேருக்கு செயற்கை முறை கருத்தரிப்பிற்கு முயன்றால் அதில் 2 அல்லது 3 தான் வெற்றி அடைகிறது. மற்றவர்கள் திரும்ப திரும்ப அந்த வலி மிகுந்த சிகிச்சைக்கு முயல்கிறார்கள்.

இளவயதில் திருமணம் முடிப்பதால் எந்த பிரச்சனை இருந்தாலும் எந்த சிகிச்சை செய்வதற்கும் நமக்கு காலமும், வயதும், உடலில் பலமும் இருக்கும். அதுவே 30 வயதிற்கு மேல் செய்வதால் எல்லா சான்ஸும் குறைந்து விடுகிறது.

எனவே, பணம் சம்பாதித்து தான், வீடு வாங்கி தான், கார் வாங்கி தான் திருமணம் அப்படி இப்படி என்று காரணம் சொல்லி திருமணத்தினை தள்ளி போடும் அனைவரும் யோசிக்க வேண்டும். வீடு, கார், பணம் எல்லாம் திருமணத்திற்கு பிறகு இருக்கும். ஆனால் குழந்தை இருக்காது. அதுவும் ஃபாரின் போய் செட்டில் ஆகும் நண்பர்களுக்கு தெரியும் அங்கெல்லாம் ஹாஸ்பிட்டல் செலவு என்பது எவ்வளவு அதிகம் என்று.

நம் பெற்றவர்களும் விட மாட்டார்கள். விரதம் இரு, அந்த கோயில் போ, இந்த கோயில் போ என்று படுத்தி எடுப்பார்கள். கோயில் கோயிலாக அலைவது ஒரு புறம், உறவினர்களின் ஏளன பேச்சு ஒரு புறம், குழந்தை இல்லையே என்ற ஏக்கம் ஒரு புறமாக அலைக்கழிக்கும். மருத்துவர்களோ டிப்ரஷன் இருக்க கூடாது என்று சொல்வர்.ஆனால், அது மட்டும் தான் அதிகம் இருக்கும். மேலும் இப்பொழுது எல்லாம் 30 வயதிலேயே, ஒபிசிடி, சுகர், பி.பி,கொலஸ்ட்ரால் என்று அடுக்கடுக்காய் நோய் வேறு வருகிறது. அது இல்லாமல் ஆண்களின் சிகரெட், குடி பழக்கம் வேறு. சாப்பாட்டு முறை வேறு மாறி விட்டது, ஜங்க் ஃபுட் அதிகம், நேரம் தப்பி சாப்பாடு, ஒழுங்கான தூக்கம் கிடையாது என்று அனைத்தும் மாறிவிட்டது.

எனவே திருமணத்திற்கு காத்து இருக்கும் அனைவரும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்வது நல்லது. ஆண்களே உஷார். இந்தியாவில் இப்பொழுது மக்கட்தொகையில் பெண்கள் ஆண்களை விட குறைவாக இருக்கிறார்களாம். அது வேறு பெரிய சமுதாய பிரச்சனையாகப் போகிறது. 1000 ஆண்களுக்கு 880 பெண்கள் தான் இருக்கிறார்கள்.கருவிலேயே பெண் குழந்தைகளை அழித்ததால் தான் இந்த பிரச்சனை ஆரம்பித்தது.

பெண்ணை பெற்றவர்கள் சிலர் தங்கள் பெண்கள் சம்பாத்தியத்தினை விட முடியாமல் தங்கள் பெண்களின் திருமணத்தினை தாங்களே தாமாதமாக்கும் போக்கும் இப்பொழுது இருக்கிறது. ஆண்களை பெற்றவர்கள் தங்கள் மகனுக்கு எவ்வளவு வயதானாலும், மகள்களுக்கு திருமணம் முடித்து தான் மகனுக்கு என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.


Sunday, November 14, 2010

வெரைட்டி-15/11/10

ஒரு ஓல்ட் மேனை பற்றி பேசும் போது அந்த பழையவர் என்றார் என் மகனின் நண்பி. சிரித்ததற்கு ஓல்ட் என்றால் பழையது தானே அர்த்தம் என்கிறார்.. பக்கத்து வீட்டில் அவரைக்காய் அவுத்தாங்க (பறித்தாங்க) அதான் எங்க வீட்டில் இன்று அவரைக்காய் செய்தோம் இதுவும் அந்த நண்பியின் பொன்மொழிதான்.தமிழ் பேச நாம் தயங்கும் போது வட இந்திய நண்பர்கள் தான் தமிழை இது போல் வளர்க்கிறார்கள்.


இனி கொஞ்சம் சீரியஸ்:
ஆங்சான் சூகி மியான்மரில் 15 வருடங்களாக வீட்டுக்காவலில் இருந்த இந்த இரும்பு பெண்மணி சனியன்று (13 நவம்பர்) விடுதலை ஆனார். இவரது விடுதலையினை உலகமே எதிர்ப்பார்த்து இருந்தது.. ஆங்சான் சூகி பற்றி.
நம்ம ஊரு அரசியல்வாதிகளும் இருக்காங்களே.

இந்தியாவில் குழந்தைகள் தினம் இந்த மாதம் 14 கொண்டாடப்படுவது போல உலகம் முழுவதும் குழந்தைகள் தினம் நவம்பர் 20-ல் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கியநாட்டு சபை அறிவித்த தினம் ஆகும்.1959-ல் குழந்தைகளின் உரிமைகளை அறிவித்த தினமே குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
மிர்சி ரேடியோவில் குழந்தைகள் தினம் கொண்டாட குழந்தைகளை அழைத்து  ”எந்திரன்” தினம் கொண்டாடினார்கள். அனைத்துக் குழந்தைகளும் எந்திரன் பாட்டு, எந்திரன் வசனம் மனப்பாடமாய் சொன்னார்கள்.

ஹாம் ரேடியோ பயன்பாட்டாளர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்வதை ஒரு பொழுது போக்காக வைத்து இருக்கிறார்கள். ஒர் ஹாம்ஸ் FM ரேடியோவில் இண்டர்வியூ கொடுத்தார். ஜில் புயல் ஞாயிறு காலையிலேயே நம் சென்னையினை கடந்து விட்டதாகவும் எதற்கு மீட்டரலாஜிக்கல் டிபார்ண்மெண்ட் திங்கள் அன்று ஜில் கரையினை கடக்கும் என்று சொல்லியது என்பது தெரியவில்லை. அதனை நம்பி திங்கள் அன்று அரசு விடுமுறை விட்டது வேஸ்ட் என்றும் தெரிவித்தார். ஒரு சின்ன கருவியினை ( நாலயிரம் ரூபாய் தான் ஆகுமாம்) வைத்துக் கொண்டு அவர்கள் இப்படி நிச்சயமாக இயற்கையினை கணிக்கிறார்கள். மிஸ்டர் ரமணன் வேலை பார்க்கும் துறையில் எவ்வளவு பெரிய கருவிகள் இருக்கும். ஏன் இப்படி கணிப்பு தப்புகிறது. ரமணனுக்கு ஸ்கூல் படிக்கும் சின்ன பசங்க இருப்பாங்கம்மா, அந்த பசங்களுக்கு லீவு வேணும்னா ரமணன் சார் இப்படி செய்வார் போல இது என் மகன் நகுலின் கணிப்பு.

புதுக்கோட்டையில் இறந்து போனவரை வைத்திருக்கும் ஐஸ்பெட்டியினை தொட்டு அழுத இரண்டு பேருக்கு ஷாக் அடித்து இப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அட ராமா....


Thursday, November 11, 2010

இந்தியா ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகுமா??

ஒபாமா தன் இந்திய வருகையின் போது இந்தியா ஐக்கிய நாட்டு சபையின் உள்ள பாதுகாப்பு (செக்யூரிட்டி கவுன்சில்)சபையின் நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு தரப்போவதாக கூறி சென்று உள்ளார்.

ஐக்கிய நாட்டு சபையின் உறுப்பினர்கள் :191 நாடுகள்.

பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் :15 நாடுகள்

நிரந்தர உறுப்பினர்கள் :அமெரிக்கா,சீனா, ரஷ்யா,
இங்கிலாந்து, ஃப்ரான்ஸ்

தற்காலிக உறுப்பினர்கள் :  ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை 10 நாடுகள் தற்காலிக உறுப்பினராகின்றன.

இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓட்டெடுப்பின் மூலம் பாதுகாப்பு சபையில் உறுப்பினர் பதிவியினை பெற்று வருகின்றன.

ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் ஒவ்வொரு நாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது. இது வரை இந்தியா ஆறு முறை பாதுக்காப்பு சபையில் உறுப்பினராகி உள்ளது.1992க்கு பின் 19 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிற்கு இப்பொழுது தற்காலிக உறுப்பினர் சான்ஸ் கிடைத்து உள்ளது.

ஜனவரி 2011 லிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா,கொலம்பியா, ஜெர்மனி, போர்ச்சுகல்,சவுத் ஆப்பிரிக்கா தற்காலிக உறுப்பினர் பதவியினை பொறுப்பு எடுக்க உள்ளன.2010 டிசம்பருடன் ஏற்கனவே தற்காலிக உறுப்பினர் பதிவியில் இருந்த 5 நாடுகளின் பதவி காலம் முடிவடைகிறது.

உலக நாடுகளின் அமைதியினையும், பாதுகாப்பையும் மேற்பார்வை இடுவது, எல்லை பிரச்சனைகளின் தலையிடுவது, பாதுகாப்பிற்கு படையினை அனுப்புவது தான் இந்த பாதுகாப்பு சபையின் வேலை ஆகும்.இந்த சபையின் தலைவர் ஒவ்வொரு மாதமும் அந்த சபையின் உறுப்பு நாடுகளின் ஆங்கில எழுத்து வரிசைப்படி பொறுப்பு எடுக்கின்றன.

எந்த திட்டம் நிறைவேற வேண்டுமானலும் 5 நிரந்தர உறுப்பின நாடுகளின் ஓட்டும் மற்றும் 4 தற்காலிக நாடுகளின் ஓட்டும் தேவை.மொத்தம் 9 நாடுகளின் ஓட்டு கிடைத்தால் தான் அந்த திட்டம் நிறைவேற்றப்படும். 5 நிரந்தர நாடுகளுக்கு மட்டும் எந்த ஒரு திட்டத்தினையும் நிறைவேற்றாமல் தடுக்கும் வீட்டோ பவர் உண்டு.பாதுகாப்பு சபையில் எடுக்கும் தீர்மானத்தினை நிராகரிக்கும் அதிகாரம் தான் வீட்டோ அதிகாரம் ஆகும்.

தற்சமயம் பிரேஸில்,ஜெர்மனி,இந்தியா,ஜப்பான்(G-4 நாடுகள்) நிரந்தர உறுப்பினர் ஆக முயற்சித்து வருகின்றன.ஆப்பிரிக்கா, அரேபியாவும் முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் ஒபாமாவின் இந்த அறிக்கை இந்தியாவிற்கு நல்லதே.

இது வரை இல்லாத அளவில் இந்த முறை இந்தியா தற்காலிக உறுப்பினர் ஆவதற்கு அதிக ஓட்டுகளை பெற்று உள்ளது. 190 ஓட்டில் 187 நாடுகளின் ஓட்டினை பெற்று உள்ளது.இது ஒரு நல்ல அறிகுறி. நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும் இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்திய ஜனாதிபதி சீனா சென்று அதன் ஆதரவினை கேட்டு வந்துள்ளார். இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகும் பட்சத்தில் பாகிஸ்தானின் தீவிரவாதத்தில் இருந்து மீளமுடியுமா, காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Monday, November 08, 2010

அந்த 23 நாட்கள்...

அந்த 23 நாட்களை இந்த ஜென்மத்தில் மறக்க முடியாது. உன் பையனுக்கு மூளை காய்ச்சல் வந்திருக்கு எங்க உன்னுடைய டாக்டர் மாமா உடனே இன்னைக்கு அவரை வரச்சொல்லு அவரிடம் பேசணும் என்று கண்ணகி என்ற அந்த குழந்தை நல மருத்துவர் என்னிடம் சொன்னபோது அப்படியே அந்த ஆஸ்பத்திரியின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து விடுவோமா என்று தான் ஒரு கணம் தோன்றியது.

அழுது அழுது வீங்கிய கண்களுடன் கொதிக்க கொதிக்க இருந்த என் பையன் நகுலை இறுக்க அணைத்துக் கொண்டு என் மாமாவிற்கு விஷயத்தினை சொல்லி விட்டு அவர் வருகைக்காக காத்து இருந்தேன். குழந்தை மருத்துவரான அவர் திண்டுக்கல்லில் இருந்து சென்னை வர வேண்டும்.பச்சை தண்ணீரில் வெள்ளை துணியினை நனைத்து நனைத்து நகுலின் நெஞ்சு தவிர அனைத்து பகுதியிலும் துடைத்து விட்டு கொண்டே இருந்தேன்.ஒரு பக்கம் ட்ரிப் ஏறி கொண்டு இருந்தது. பிறந்து 15 நாட்களே ஆன என் நகுலுக்கு அன்று மட்டும் 20 முறை ஃபிட்ஸ் வந்தது. அது வரும் ஒவ்வொரு முறையும் கண்ட்ரோலே செய்ய முடியாத அளவிற்கு பயந்தது போல் அழுவான். ஃபிட்ஸ் வந்த பின்னாடி ஆக்சிஜன் மாஸ்க் வைக்க வேண்டும். நானும் கூடவே அழுதுக் கொண்டு அவனை கவனித்துக் கொண்டேன்.

பிறந்து 30 நாட்கள் மட்டுமே ஆன குழந்தைகள் மட்டும் உள்ள வார்டு அது. குழந்தை அதன் அம்மா மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுவர். ஏற்கனவே குழந்தை பிறந்து பயங்கர வீக்காகி போன உடம்பு, இப்ப மனதும் வீக்காகி போனது. எப்படியும் குழந்தையுடன் தான் வீட்டிற்கு போக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருக்கும்.

என் மாமா வந்ததும் அவருடன் டாக்டர்கள் பேசினார்கள்.மாமாவின் முகம் பார்க்கவே நல்லாயில்லை. என் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு நகுல் நன்கு பால் குடிக்கிறானா? எவ்வளவு குடிக்க வைக்க முடியுமோ அவ்வளவு குடிக்க வை.ஒன்றும் ஆகாது என்று சொல்லி சென்றார். மூன்றாவது முறையாக அவனது முதுகு தண்டுவடத்தில் ஒரு பெரிய ஊசியினை நுழைத்து தண்டுவட நீரை எடுத்து டெஸ்ட்டிற்கு அனுப்பினர். 3 நாட்களாக தூங்காமல் அழுதுக் கொண்டே இருந்தது வேறு எதோ ஒரு மிதக்கும் மயக்க நிலையில் நான் இருந்தேன். தனியே வேறு குழந்தையினை கவனித்துக் கொள்ள வேண்டும்.மறுநாள் ரிசல்ட் வந்தது.மூளைகாய்ச்சல் இல்லை என்று ரிப்போர்ட்டில் இருந்தது. அது வரை அனலாக சுட்டுக் கொண்டு இருந்த நகுலும் இப்போது மிதமானான்.

கால்ஷியம் குறைபாடும், தைராய்டுபிரச்சனையும் தான் ஃபிட்ஸ்க்கு காரணம் என்று அடுத்து செய்த இரத்த பரிசோதனையில் தெரிய வந்தது. உடனே என்டோகிரோனாலஜி டிபார்ட்மண்டின் டாக்டர் சுந்தர்ராமனை பார்க்க சென்றோம். அவரின் மிகுந்த அக்கறையான கவனிப்பால் என் நகுலின் ஃபிட்ஸ் 3 நாட்களில் மட்டுப்பட்டது. தினம் கால்ஷியம் ஷிரப்,விட்டமின் டி3 மாத்திரை ஒன்று, தினம் ஒரு எல்ட்ராக்ஸின்(தைராய்டிற்கு) என்று அவன் பிறந்த 22 நாளில் இருந்து கொடுக்க ஆரம்பித்தோம்.வாரம் ஒரு முறை கால்ஷியம் இன்ஜெக்‌ஷன் போடப்பட்டது.

அவன் பிறந்து 10 வது நாளில் அவனுடன் அந்த ஆஸ்பத்திரியில் நுழைந்த நான் அவனின் 33 வது நாளில் வெளியுலகை பார்த்தேன். 23 நாட்களில் ஒரு வாரம் மட்டுமே ஒழுங்காய் தூங்கி இருப்பேன்.23 நாட்களும் அவனுக்கு கை,காலில் எங்காவது ட்ரிப் ஏறிக் கொண்டு இருக்கும். ஃபிட்ஸ் வரும் போதெல்லாம் ஆக்ஸிஜன் வைக்க வேண்டும். ட்ரிப் ஏறிக் கொண்டு இருக்கும் இடத்தில் ஒரு கட்டையினை வைத்து பிளாஸ்டரால் ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் கை, காலை ஆட்டும் போது என் தலையில் தினம் 10 அடியாவது விழும்.ஏன் என்னை இப்படி கஷ்டப்படுத்துற என்று நகுல் என்னை அடிப்பதாய் நினைத்துக் கொள்வேன். ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு வந்த பின் முதுகில் கிராஸாய் சில நாட்கள் போடப்பட்டிருந்த ப்ளாஸ்டரால் அந்த இடத்தில் மட்டும் முடி இல்லமல் ஏதோ கிராஸாய் வரைந்தது போல் இருக்கும். கை, காலில் பொடி பொடி துளைகளாய் கண்ணிப்போய் இருக்கும்.நாட்கள் ஆக ஆக ஒவ்வொன்றாய் மறைந்தது.

மாதம் ஒரு முறை ஆஸ்பத்திரி போக வேண்டும். பிறக்கும் போது 4 கிலோவாய் இருந்த நகுல் குண்டு குழந்தையாக வளர்ந்தான். இரத்த பரிசோதனைக்கு இரத்தம் எடுக்க வெயின் கிடைக்காமல் எப்போதும் தொடை இடுக்கில் தான் இரத்தம் எடுப்பார்கள். காலை ஆட்டாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். பிடித்துக் கொண்டே அவனுடன் நானும் அழுவேன்.ஐந்து வயது வரை தினம் 10 கால்ஷியம் மாத்திரை கொடுக்க வேண்டும். மிக்ஸியில் 100 மாத்திரைகளை பொடி செய்து வைத்து தினம் 10 மாத்திரை அளவில் ஒரு சின்ன கிண்ணத்தில் அந்த பொடியினை எடுத்து தண்ணீரில் கெட்டியாக கலந்து வைத்து அவன் நாக்கில் அவ்வப்போது தடவி விட்டு விடுவேன்.

இப்பவும் தைராய்டு மாத்திரை மட்டும் ஒன்று சாப்பிடும் நகுல் அதை கையில் எடுத்து கொடுத்தால் தான் சாப்பிடுவான். மாதம் ஒரு முறை என்ற இரத்த பரிசோதனை அப்புறம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அப்புறம் வருடத்திற்கு ஒரு முறை என்று குறைந்தது.

இப்படி மறுபிறவி எடுத்து வந்தான் என் மகன் நகுல். இப்பவும் அந்த ஆஸ்பத்திரியினை கடக்கும் போது எல்லாம் இனம் புரியாத ஒரு பயம் எனக்கு வருகிறது.