Tuesday, September 29, 2009

நான் சந்தித்த பதிவர்கள்!!!

லக்கிலுக்கிற்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் போன் செய்து பதிவர் சந்திப்பிற்கு யாராவது பெண் பதிவர்கள் வருகிறார்களா என்று கேட்டேன். வரலாம்,நீங்க வாங்க மேடம் என்று கூறினார்.சரி நடக்கிறது நடக்கட்டும் என்று 3.30க்கு எல்லாம் தாம்பரத்திலிருந்து டி.வியே கதியென்று என்று இருந்த என்னருமை கணவர்+மகன்களுக்கு டாட்டா சொல்லிட்டு குடை ஒன்றினை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். காந்தி சிலை அருகே சிக்னலில் பஸ் நிற்கும் போது பஸ்ஸிலிருந்து குதித்து 5 மணிக்கெல்லாம் காந்தி சிலை பின்னாடி நின்று கொண்டு இருந்த சில பதிவர்களுக்கு பக்கமாய் போய் நின்று கொண்டேன். லக்கிலுக் வாங்க வாங்க என்று வரவேற்பு கொடுத்தார்.கேபிள் சங்கர், முரளிகண்ணன்,நர்சிம்,அதிஷாவும் ஒரு பெரும் புன்னகையுடன் வரவேற்றனர். யாராவது பெண்கள் அந்த பக்கமாய் வந்தால் பதிவராக இருக்குமோ என்று பார்த்து கொண்டு இருந்தேன். யாரும் பெண் பதிவர்கள் வரவேயில்லை. சரி என்று லக்கிலுக் கொடுத்த புதிய தலைமுறை காம்ப்ளிமெண்டரி புக்கை படித்துக் கொண்டு இருந்தேன்.

நான் எதிர்பார்த்த ஆதி,கார்க்கி இன்னும் வரவில்லை. அதியமான் சார் என்னிடம் பழைய பதிவர் சந்திப்பினை பற்றி பேசிக் கொண்டிருந்தார். நான் கொஞ்சம் சகஜ நிலைமைக்கு வந்தேன். கொஞ்சம் திமிர் பிடித்தவர் என்று நான் நினைத்த நர்சிம் தான் அப்படி இல்லை என்ற எண்ணத்தினை எனக்கு ஏற்படுதினார். ஏனோ அவரினை சந்திக்கும் வரை அப்படிதான் நினைத்து இருந்தேன். ஒவ்வொருவராக அறிமுகம் செய்யும் படலம் நடந்தது. மழையும் தன்னை அறிமுகம் செய்ய ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் 200 பேராவது தஞ்சம் செய்தோம். நான் குடை வைத்து இருந்ததால் குடைக்குள் மழை இல்லை. குடை எடுத்து வந்து டீச்சர் என்று நிரூபித்து விட்டீர்கள் என்று நர்சிம் கலாய்த்தார்.

வளர்மதி என்னுடன் குடைக்குள் நின்று கொண்டார். வீட்டில் தூங்கி கொண்டு இருந்தேன். என்னை எழுப்பி குளிக்க வைத்து, வேறு உடை அணியவைத்து இங்கு கொண்டு வந்து என்னை திரும்ப குளிக்க வைக்கிறீங்களே என்று புலம்பி கொண்டு இருந்தார். பொன் வாசுதேவன் போங்கடா போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்கடா, ஏண்டா இப்படி பதிவு, கூட்டம் என்று அலைறீங்கனு சொல்லிட்டு இருந்தார். மரத்தடியிலேயே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தோம். திடீரென்று பார்த்தால் நான் மிகவும் எதிர்பார்த்த ஆதி. மழையும் கொஞ்சம் விட்டது. நான் அவர் அருகில் சென்று பேசினேன். நிறைய பதிவர்களின் பதிவுகளை படிக்க நேரமில்லை என்றும் ஆனால், புதியதாய் ஒன்று படிக்க ஆரம்பித்து பிடித்தால் தொடர்ந்து படிப்பதாயும் சொன்னார். கார்க்கி வரவில்லையா என்று கேட்டேன். வந்து உள்ளார், ஆனால் வரவில்லை என்று என்று ஒரு சின்ன டிபன்பாக்ஸ்+சார்ஜர் கையில் வைத்துக் கொண்டு சொன்னார். மழை என்பதால் பக்கத்தில் ஒரு டீக்கடையில்(புட்டிக்கடையா) இருப்பதாய் கூறினார். அந்த டிபன்பாக்ஸில் ரமா கொடுத்து அனுப்பிய சுண்டலா ஆதி????. சரி நான் புறப்படுவதாய் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். நர்சிம், ஆதி எப்படி போவீர்கள் என்று என்னை கேட்டதிற்கு நானாக பஸ்ஸில் போய் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அது தவறு என்று அப்புறம் உணர்ந்தேன்.

நடக்கிறேன் நடக்கிறேன் நடந்து கொண்டே இருந்தேன். கண்ணகி சிலை வரை என்னுடைய பஸ்ஸிற்கு நடக்க வேண்டி இருந்தது. மழை சுத்தமாய் நின்று விட்டிருந்தது. ஒரு பையன் 20 to 25 வயது இருக்கும் என்னுடன் ஏதோ பேச முயன்று கூடவே நடந்தான்.அவன் போனான் ஒரு 45 வயதுள்ள ஒருவர் என்னுடன் நடக்க ஆரம்பித்தான். வாங்களேன் உள் ரோடில் நடக்கலாம் என்று கேட்டான். கொஞ்சம் நின்று நீ முன்னாடி போறீயா, நான் மட்டும் நடந்துக் கொள்கிறேன் என்று கொஞ்சம் சத்தமாய் சொல்லவும் என் முன்னால் வேகமாக நடக்க ஆரம்பித்தான். ட்ராபிக் இருந்தது. ஆனால், பிளாட்பார்மில் நிறைய ஆட்கள் இல்லை. நான் நடையை வேகப் படுத்தினேன். என் பையன்களுடன் வந்திருந்தால் ஏகாந்தமாய் நடந்து இருக்கலாம். அருமையான மாலை மழையுடன், சாரலுடன். ஆனால்,ஒரு திகிலுடன் பஸ் நிறுத்தம் வந்து பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். அப்பாடா என்று இருந்தது. பீச் ரோட்டில் அந்த நேரத்தில் தனியே நடப்பது எந்த வயதுள்ள ஒரு பெண்ணிற்கும் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தேன். மழை என்பதால் பீச்சில் கூட்டம் இல்லை. எனவே, அடுத்த சந்திப்பினை ஒரு நல்ல இடமாய் வைக்கலாமே. பதிவர்களுக்கு இந்த வேண்டுகோள். பதிவர்கள் சிலர் புகைப்பிடிப்பதினை பார்த்தேன். வேண்டாமே. இத்தனை நாள் புகைத்தது போதுமே. நீங்க எல்லோரும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஒரு சகோதரியாய், நண்பியாய் எனக்கு ஒரு ஆசை. 50 வயதிலேயே வைகுண்டத்திற்கு டிக்கெட் வாங்க ஏன் ஆசை படுகிறீர்கள்?? கட்டாயம் விட்டு விடுங்களேன். கொஞ்சம் கொஞ்சமாய் விட முடியாது. மனசு வைத்தால் உடனே விட முடியும். 50 வயதிலேயே இந்த நாசமா போன சிகெரெட்டால் குடும்பத்தினை தவிக்க விட்டுட்டு போன நிறைய பேரை எனக்கு தெரியும். பதிவர்கள் வாழ்க வளமுடன்....

Thursday, September 24, 2009

ஆட்டோகிராஃப்....

என் டீன் ஏஜ் தொடக்கத்தில் பக்கத்து வீட்டிற்கு பக்கத்து வீட்டில்(ஒரு வீடு தள்ளி) என்னோடு ஸ்கூல் மேட் சங்கரி வீடு. அவர்கள் வீட்டில் பெரிய மழழை பட்டாளமே இருக்கும். மூன்று அண்ணன் தம்பிகள் ஒரே குடும்பமாக இருந்தார்கள்.கமிஷன் மண்டி வைத்து இருந்தார்கள்.

எல்லா சாயங்காலமும், விடுமுறை நாள்களிலும் நான் அங்கே தான் பழியாய் கிடப்பேன். கல்லா - மண்ணா, சீட்டுக்கட்டு, தாயம், ஒளிந்து விளையாடுதல், கண்ணாமூச்சி, டான்ஸ் ப்ராக்டிஸ், ஊஞ்சல், கேரம், இன்னும் பெயர் மறந்து போன அனைத்து விளையாட்டும் அங்கே தான். சங்கரியின் கோமதிஅத்தை தான் பார்த்த எல்லா படங்களின் கதைகளையும் சொல்லி விடுவார், நேரில் பார்த்த மாதிரி இருக்கும். பேய் கதை எல்லாம் கேட்டால் தனியே வீட்டிற்கு போக பயமாய் இருக்கும். பெரிய முற்றம் வைத்த வீடு அது.

சாயங்காலம் 6 மணிக்கு மேலே வீட்டிற்கு வந்தால் அம்மா கதவை பூட்டி விடுவார்கள். ஏன் தான் 6 மணி ஆகுதுன்னு இருக்கும். போ உன் அப்பா வந்ததும் வா என்று அம்மா பிடிவாதமாய் சொல்லி விடுவார்கள். வாரம் இரண்டு நாள் ஆவது வாசலிலே நின்று கொண்டு இருப்பேன்.திரும்ப சங்கரி வீடு போக இருட்டு பயம். அப்பா வந்ததும் எல்லாம் நீங்கள் கொடுக்கும் செல்லம் என்று அம்மா அப்பாவை திட்டிக் கொண்டே கதவு திறந்து விடுவார்.ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, ஆச்சு பத்தாவது க்ளாஸும் வந்தாச்சு. சங்கரியின் தம்பி, அண்ண்ன் எல்லாம் எனக்கும் அப்படியே.

அம்மா போகாதே போகாதே என்று திட்டி கொண்டே இருப்பார்கள். ஆனாலும், கொஞ்சம் போவதை குறைத்தேனே தவிர சுத்தமாய் கட் செய்யவில்லை. அப்பா சின்ன பெண் தானே என்று பெர்மிஷன் கொடுத்து விடுவார். பத்தாவது படிக்கும் போது தமிழ் கோனார் உரை அப்பா வாங்கி வர மறந்து மறந்து போனார். எனவே, வருட ஆரம்பத்தில் தமிழ் கோனார் உரை சங்கரியின் அண்ணனிடம் வாங்கி வாங்கி படித்து கொள்வேன்.

சேகர் என்ற அந்த அண்ணன் எனக்கு ஒரு வருடம் சீனியர்.ஆனால்,வயது அதிகம் இருக்கும். தமிழ், இங்கிலிஷில் பத்தாவது பெயில் ஆகி அக்டோபரில் மறுபடியும் தேர்வு எழுத படிக்கிற மாதிரி பாவனை செய்துக் கொண்டு இருந்தான். அதனால், அக்டோபருக்கு பிறகு அந்த கோனார் உரையை எனக்கே தந்து விடுவதாய் அந்த வீட்டில் சொல்லப்பட்டது. ஓசியில் ஒரு நோட்ஸ் கிடைக்கப் போவதாய் நானும் சரி என்று சொல்லி விட்டேன்.

ஆகஸ்டில் ஒரு மாத பரீட்சை வந்தது. சங்கரி வீட்டிற்கு ஓடினேன் நோட்ஸிற்காக. அவசரமாய் வெளியில் வந்த சேகர் என் கையில் வாசலிலேயே நோட்ஸை கொடுத்து விட்டு ஒரு வித்தியாசமான் லுக் விட்டுட்டு போனான். வீட்டிற்கு வந்து நோட்ஸை திறந்தால் 10 பக்கத்திற்கு ஒரு பக்கம் மேலே “I LOVE YOU AMUDHA" என்று பென்சிலால் எழுதப் பட்டிருக்கு. ஆயிரம் தாமரை மொட்டுகளே ---ன்னு எனக்கு பாட்டெல்லாம் வரலை. அழுகையாய் வந்தது. என்னோட பெயரை Amutha- னு “T" போட்டு தான் எழுதுவேன். இந்த “D" எனக்கு பிடிக்கவே இல்லை.. முதலில் இதுதான் தோன்றியது.

அப்புறம் தான் அடடா, இப்படியா மேட்டர்னு புரிந்தது. படிக்கவே இல்லை. என்னடா செய்யலாம் என்று மனசுக்குள் ஒரே கேள்வி. மறு நாள் பஸ்ஸிற்கு நிற்கும் போது சைக்கிளில் அங்கும் இங்கும் போய் கொண்டே இருந்தான் சேகர். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த உடன் சங்கரியிடம் விஷயத்தை போட்டு கொடுத்து விட்டு, அழி லப்பர் எடுத்து அனைத்தையும் அழித்து விட்டு கோனாருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு பத்திரமாய் அவளிடம் கொடுத்து விட்டேன். பாவம், அவனுக்கு வீட்டில் என்ன அர்ச்சனை விழுந்ததோ.அவனோடு பேசுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன். அடிக்கடி நான் +2 படிக்கும் வரை பார்த்து கொண்டோம். ஒரு முறைப்போடு சரி. அவன் கூட்டமாய் பசங்களோடு வந்தால் பயமாய் இருக்கும். அப்புறம் வீடு மாற்றி விட்டோம்.

ஆனால், அதன் பிறகு அம்மாவே விஷேஷத்திற்கு பலகாரம் கொடுக்க போக சொன்னால் கூட அந்த வீட்டிற்கு போகவே மாட்டேன். கொஞ்ச நாளில் அடுத்த தெரு செல்வியிடம் அவளும் என்னோட கிளாஸே அந்த கோனார் நோட்ஸை பார்த்தேன். ஆனால், அவளிடம் இசகு பிசகாய் கேள்வி எதுவும் கேட்கவில்லை..என்னை முதலில் லவ்விய அந்த சேகரை அந்த பெயரில் யாராவது, எங்காவது பார்க்கும் போது, கேட்கும் போது நினைத்து கொள்வேன்.

Wednesday, September 23, 2009

சவாரிகள்

குதிரை சவாரி : மெரினா பீச்சுல்ல,கொடைக்கானல்ல போயிருப்போம். கேதார்நாத் போன போது ஆசைக்கு கொஞ்ச நேரம் போய் வந்தேன்.


யானை சவாரி:

சின்ன வயதில் கோயில் யானை மேலே நாம் அழ அழ உட்கார வைக்க பட்டிருப்போம். ஆனால், முதுமலையில் யானை சவாரி மறக்கவே முடியாது. ஒரு யானையில் நான்கு பேர் அமர முடியும். ஏறியதும் அது காட்டு பகுதியில் போகுது. யானை பாகன் நம்முடன் அமர்ந்து இருக்க. இன்னொரு பாகனும் உடன் நடந்து வருகிறார். ஒத்தையடி பாதையில் யானை சகதியிலும் சேரிலும் படாமல் நடந்து வர கீழே நடப்பவர் உதவுகிறார். எதிரில்
யானை ஒன்றை ஒன்று பார்த்து கொண்டால் சண்டை போட்டுக் கொள்ளும் என்று சொல்லி பீதியினை கிளப்புகிறார். (விநாயகா நேரிலே வராதப்பா) வேறு ரூட் மாற்றிக் கொள்கிறார்கள் எதிரில் யானை வருவது தெரிந்தால். கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்து பின் பயணம் தொடர்கிறது. முதுமலையில் தமிழக அரசுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் தங்கினோம்.

ரூம் ஒன்று ஒரு நாள் வாடகை 300 ரூபாய். அங்கு வேலை பார்ப்பவர்கள் தங்கும் காலனி சிறிதாக இருந்தது. ரூமிற்கு முன்னால் சிற்றோடை. மாலையில் யானைகள் நீர் குடிக்க, குளிக்க வருகின்றன. ரூமிற்கு பின்னால் மான்களும், மயில்களும் ஆடி கொண்டு இருந்தன. சாப்பாடு என்ன சொல்கிறோமோ செய்து தருகிறார்கள். சப்பாத்தி,சிக்கன்,சாதம் என்று புகுந்து விளையாடினோம். நைட் படுக்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தது. எதுவும் மிருகம் ரூம் பக்கம் வந்து விடுமோ என்று.

ஒட்டக சவாரி: ராஜஸ்தானில் ஜெய்சால்மர் என்னும் இடத்தில் உள்ள பாலைவனத்தில் செய்த ஒட்டக சவாரி சூப்பராக இருந்தது. கீழே உட்கார்ந்த பின் அதன் முதுகில் இரண்டு பக்கம் காலை போட்டு உட்கார வைக்கப் படுகிறோம். அது மெல்ல எழுந்திருக்கும் போது தான் அடடா தப்பு செய்து விட்டோமோ என்று எண்ண தோன்றுகிறது.
பாகன் முன்னாடி கயிற்றினை பிடித்து கொண்டு மிக வேகமாக நடக்கிறார்.இல்லை ஓடுகிறார். ஒட்டகமும் ஓட ஓட நமக்கு அங்கிருந்து கீழே விழுந்தால் என்ன ஆகும் என்ற பயம் வருகிறது. மெல்ல போகுமாறு சொன்னாலும் பாகன் கேட்பதில்லை.
நான் வேறு நல்ல உயரமான பெரிய ஒட்டகத்தினை செலக்ட் செய்து இருந்தேன். இப்படி ஓடும் என்று தெரிந்தால் சின்னதாய் ஒரு ஒட்டகம் பிடித்து இருப்பேன். ஒட்டக சவாரி முடிந்தவுடன் sand dunes-ல் அமர்ந்து சூரிய அஸ்தமனம் பார்க்கவும், வரிசையாக செல்லும் மற்ற ஒட்டகங்களை பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை. அனைவரும் மணற்பரப்பின் மேலிருந்து கீழே உருண்டு உருண்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். நேரம் ஆக ஆக குளிர ஆரம்பித்தது.

Tuesday, September 22, 2009

அமுதா இது உனக்கு தேவையா???


மலேஷியாவில் லங்காவி என்னும் தீவிற்கு போன போது அங்கு இருக்கும் பீச்சில் சிவனே என்று என்னவருடன் உட்கார்ந்து போக வர இருந்த ஜோடிகளை ஆன்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த போது ஹனிமூனுக்கு வந்திருந்த ஒரு இளம் ஹிந்தி ஜோடி நேராக என்னிடம் வந்து தங்களை சில ஃபோட்டாக்கள் எடுத்து தரும்படி கேட்டுக் கொள்ள நானும் அழகாய் எடுத்துக் கொடுத்தேன். அழகான் ஜோடி அதனால் ஃபோட்டாவும் அழகாய் தான் இருக்கும்.

அத்தோடு விட்டிருக்கலாம்.விதி யாரை விட்டது. கடலில் போட்டிங் போனீர்களா என்று நான் கேட்க அவர்கள் water bike,parasailing, என்று அனைத்தும் போனோம். நல்லா இருந்தது நீங்கள் போகலையா என்று கேட்டார்கள். ஸ்விம்மிங் தெரியாது அதனால் போகலை என்று சொல்ல ..ஓ, அதெல்லாம் ஒன்றும் தெரிய வேண்டாம். டோண்ட் மிஸ் திஸ் சான்ஸ் என்று சொல்லிவிட்டு மிக கட்டாய படுத்தி விட்டு சென்றார்கள். ஆசை யாரை விட்டது.

இதுவே வயசாகி விட்டது. இன்னொரு பிறவி உண்டா இல்லையா தெரியவில்லை. இந்த சான்ஸை மிஸ் செய்ய கூடாது.எனவே parasailing போக வேண்டியது தான் என நான் மட்டும் முடிவு செய்து விட்டேன். என்னவர் மொட்டை மாடிக்கு போனாலே தலை சுத்தும் கேஸ். எனக்கோ லிப்ட்டில் ஏறினாலே எப்பவாவது தலை சுத்தும்.

சரி சுத்துறது சுத்தட்டும் என்று ஏழுக் கொண்டலுவாடாவினை நினைத்துக் கொண்டு parasailor-டம் பேரம் பேசி (பேரம் பேசலைனா தமிழ்நாட்டுக்கு இழுக்கு) அவர் சொன்னதிற்கெல்லாம்(பாஷை தெரியாமல்) குத்து மதிப்பாய் புரிந்துக் கொண்டு லைஃப் ஜாக்கெட்டெல்லாம் போட்டுக் கொண்டு ரெடியானேன். என்னவர் அப்பாடி தொல்லை நம்மை விட்டு தொலைந்தது என்ற படி நிம்மதியாக மற்ற ஜோடிகளை வேடிக்கைப் பார்க்க தொடங்கினார். நானா விடுவேன்.. நான் பறப்பதை அழகாய் படமும் வீடியோவும் எடுக்கும் படி அவரிடம் ஆர்டர் போட்டுக் கொண்டு இருக்கும் போதே என் இடுப்பை சுற்றி பெல்டும் ஒரு கயிறு சுற்ற பட்டது ஒரு புறம் பாராசூட்டிலும், மறு புறம் ஒரு போட்டிலும் நடுவில் நானும். ஃபுல்லா வீடியோ எடுங்கப்பா என்று என்னவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் இழுத்து செல்ல பட்டேன். கொஞ்ச தூரம் நான் பீச் மணலில் ஓடினேன், ஓடினேன், பீச்சின் ஓரத்திற்கே ஓடினேன். ஓடும் போது எதற்கோ தடுக்கி விழுந்து என் முழங்காலில் கொஞ்சம் வலியுடன் தான் ஓடினேன் ..காலில் தண்ணீர் தட்டுபடும் முன் மேலே இழுத்துச் செல்லப் பட்டேன். முன்னிருக்கும் கயிறு ஒரு போட்டுடன் கட்டப் பட்டிருக்கிறது அது ஸ்பீடு எடுத்தவுடன் நாம் மேலே செல்கிறோம்.

ஓ, இது என்ன எனக்கு முதலில் வயிற்றில் வலி இல்லையே, இப்ப வலிக்கிறதே, கையை எப்படி வைத்து கொள்ள என்று கேட்கவில்லையே, இப்படியே உயர்த்தி பிடித்து கொள்ளவா இல்லை நார்மலாகவா, கையை எடுத்தால் விழுந்து விடுவோமா, கீழே பார்த்தால் தண்ணீர், தண்ணீர், இங்கே இருந்து விழுந்தால் ரொம்ப ஆழத்திற்கு போய் விடுவோமோ, காற்று ஏன் இப்படி சத்தம் போடுகின்றது, பீச்சில் யாரெல்லாம் இருக்கிறார்கள், நம்மை பார்த்து யாராவது சிரிக்கிறார்களா, சிரிக்கட்டும் கீழே வந்து கவனித்துக் கொள்ளலாம், நான் ஒரு பெல்டில் உட்கார்ந்து இருக்கிறேனா இல்லை தொங்கி கொண்டு இருக்கிறேனா?? என்னவர் பீச்சில் இருக்கிறாரா..இல்லை இது தான் சாக்கு என்று சரக்கு வாங்க எஸ்கேப்பா, (அங்கே சரக்கு எல்லாம் மலிவோ மலிவு, வாங்கணும் என்று சொல்லிட்டு இருந்தார்) ஃப்ளைட் பிடிக்க எஸ்கேப்பா.. இத்தைனையும் மீறி அமுதா இது உனக்கு தேவையா??? எஸ்கலேட்டரில் ஏறவே ஆயிரம் முறை யோசிக்கும் உனக்கு இது தேவையா என்று இருந்தது.

ஆனால், மறக்கவே முடியாத இன்னொரு முறை போகவே ஆசை வராத ஒரு எக்ஸ்பீரியன்ஸ்..கொஞ்ச நேரம் சென்ற பின் பீச்சில் இருப்பவர்கள் சிலர் பச்சை துணியை ஆட்டி ஆட்டி கத்தி கத்தி சைகை காண்பிக்க நான் என் வலது கைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிகப்பு ரிப்பன் கட்டப்பட்டிருக்கும் ஒரு கயிறை பலம் கொண்ட மட்டும் காற்றை எதிர்த்து இழுக்க, இழுக்க ஹையா பீச்சிற்கு பக்கமாய் இறங்க ஆரம்பித்தேன்,..ஓடி வந்து கொஞசமாய் கொஞ்சமாய் ஓடி ஸ்டடியாய் நிற்க என் parasailing பயணம் இனிதே முடிந்தது. parasailing owner--என்னை good, good என்று மிக பாராட்டினார். ஏனெனில், நிறைய பேர் அவர் கூறும் இன்ஸ்ட்ரெக்‌ஷனை கவனிக்காமல் நேராய் கடலில் போய் விழுந்து வாரி சுருட்டி மண்ணும் தண்ணீருமாய் முகமெல்லாம் பேஸ்தடித்து வந்தார்கள். பாராசூட் தண்ணீரில் நனைந்தால், அந்த துணி காய்ந்து அடுத்து போவதற்கு நேரமாகும். என்னவர் முகம் கொஞ்சம் வருத்ததில் இருந்த மாதிரி தெரிந்தது( நான் திரும்பி வந்ததாலா!)

Tuesday, September 15, 2009

பச்சை நிறமே பச்சை நிறமே கடவுள் நிறமும் பச்சை நிறமே..

கேதார்நாத் போன போது இப்படி தான் தோன்றியது.எங்கு பார்த்தாலும் பச்சை நிறமே. இயற்கை தான் கடவுள் என உணர முடிந்தது. அவசியம் பார்க்க வேண்டிய இடம். ஆனால்,பார்க்க வருபவர்களோ 55+ மக்களே.பாவம் அவர்களுக்கு ஆயிரம் உடல் உபாதைகள். எல்லோரும் நான் இப்பவே வந்ததிற்கு பாராட்டினார்கள்.என் பசங்களை என் அம்மா வீட்டில் பார்த்துக் கொண்டதால் தான் நான் போக முடிந்தது.அம்மாவிற்கு நன்றி.
ஏனென்றால், நான் மட்டும் தான் (யூத்!) நன்கு அனுபவித்தேன்.மழை,குளிர்,பனி என்று எங்கும் அமைதி. கேதார்நாத் ரிசிகேஷிலிருந்து 15 மணி நேரம் மினி பஸ்ஸில் பயணம்.ஏப்ரல் முதல் நவம்பர் முதல் வாரம் மட்டுமே இங்கு போக முடியும். அதன் பின்னால் முழு ஊரையும் பனி மூடிவிடும்.


போகும் வழியெல்லாம் இப்படி ஒரு பக்கம் அதாள பாதாளத்தில் மந்தாகினி (நதி) மிக கோவமாக ஓடிக் கொண்டு இருந்தாள். ஒரு பக்கம் மலை, ஆங்காங்கே அருவி என இயற்கை விருந்து.


கெளரிகுண்ட் என்ற இடத்தில் இருக்கும் வெண்ணீர் ஊற்றில் குளிருக்கு இதமாக ஒரு குளியல். எங்காவது குழாய் வழியே தண்ணீர் வருகிறதா என்று ஆராய்ச்சி செய்தேன். அதிசயமாய் இருந்தது. எப்படி இப்படி ஒரு வெந்நீர் இங்கு என்று.அங்கிருந்து காலை 6 மணிக்கு கேதார்நாத் பயணம்.(14 km)


டோலி,குதிரை அல்லது
நடைபயணம். நான் டோலியில் போனேன். நம்மை எடை போட்டு அதற்கு ஏற்றார் போல பணம் வாங்குகிறார்கள்.எனக்கு 2500 ரூபாய் வாங்கினார்கள். என்னை தூக்க நான் நீ என்று ஒரே போட்டி( 50 kg tajmahal!! நிஜமா)

நேபாளி பசங்க நாலு பேர் நம்மை தூக்கி சுமக்கிறார்கள். 19,20 வயது பசங்க. செம குளிர். மழை வேறு பெய்து கொண்டு இருந்தது.குடையை வைத்துக் கொண்டு டோலியில் உட்கார்ந்து கொண்டேன் அவர்கள் ஸ்கின் ஸ்ட்ராங் போல தங்களை பாதுகாத்து கொள்ள எதுவும் வைத்து கொள்ளவில்லை நல்ல ஷீக்களை தவிர .நம்மை அருமையாக கவனித்து கொள்கிறார்கள்.

6 மாதம் இந்த வேலைக்கு வந்து விடுவார்களாம். நேபாளில் ஒரு தொழிலும் கிடையாதாமே. ஷாருக்கான் தான் பிடித்த ஹீரோ என்றார்காள் ஹிந்தி பாட்டுக்களை பாடி கொண்டே வந்தார்கள்.. ரெஸ்ட் ரூம் பக்கத்தில் இறக்கி விடுவதிலிருந்து, டீக்கடையில் குளிருக்கு இதமாய் நாம் ரெஸ்ட் எடுக்க வைப்பது வரை நம்மை நன்கு கவனிக்கிறார்கள்.அவர்கள் அந்த கேப்பில் கடலை வித் நேபாளி பெண்கள்(டீக்கடை ஓனர்ஸ் இந்த பெண்கள் தான் அவ்வளவு அழகு).அடுப்பில் கைவைத்து சூடாக்கி கொள்ள வேண்டும்.டீதான் ஃபுல் டே உணவு. நூடுல்ஸ்,பிஸ்கெட்ஸ் கிடைத்தது. கோயிலை அடைந்து பின் கீழே மாலை 6 மணிக்குதான் வரமுடியும். நான் நடுவில கொஞ்ச நேரம் நடந்து வந்தேன். முடியவில்லை. மூச்சு விட (யூத்திற்கே) மிக சிரமமாக இருந்தது.(3584m above sea level) இறங்கிய பின் 500 ரூபாய் ஒவ்வொரு பையனுக்கும் கொடுத்து வந்தேன்.எவ்வளவு கொடுத்தாலும் தகும்


கோயிலுக்கு போகும் வழியெல்லாம் இருக்கும் மலை எல்லாம் பச்சை,,பச்சைனு இருக்க..
கோயிலுக்கு பின்னால் இருக்கும் மூன்று மலை மட்டும் பனி போர்த்தி இருந்தது.சொர்க்கம் அதுதானா.12 ஜோதிர்லிங்கத்தில் இதுவும் ஒன்று. எருதின் முதுகு பகுதி போல லிங்கம் வடிவம் இருந்தது.


குதிரை சவாரி செய்தவர்கள் முதுகில் வழி ஏற்பட்டதாக சொன்னார்கள்.1000 ரூபாய் அதற்கு சார்ஜ்.குதிரை திடீரென்று புல் (க்ராஸ்) தண்ணீர் சாப்பிட ஓரமாக போகுது.பார்க்கும் நமக்கு உயிரே போகுது. போகும் வழியெல்லாம் அழகான நாய்கள் அமைதியாக இருந்தன. மகாபாரத்தில் தருமருக்கு சொர்க்கம் வரை துணனக்கு போனதாம் இந்த நாய்கள். கட்டாயம் அவசியம் முடிந்தவர்கள் இங்கு போய் வரலாம். ரிசிகேசிலிருந்து போக வர கார் வாடகைக்கு கிடைக்கும். தங்கும் விடுதிகள் குறைந்த வாடகை தான். அப்புறம் அப்படியே பத்ரிநாத் போனோம். அது இன்னொரு சொர்க்கம்.

Friday, September 11, 2009

சினிமாக்களில் பார்த்து பார்க்க ஆசைப் பட்ட இடங்களும் பார்த்த இடங்களும்....


அத்திரபள்ளி அருவி : புன்னகை மன்னனில் என்ன சத்தம் இந்த நேரம்...இந்த பாட்டை பார்த்த நாள் முதல் சாலக்குடி அருவியை பார்க்கவேண்டும் என்று ஆசை. பார்த்தாச்சு. கொச்சினிலிருந்து 2 மணி நேரம் திருச்சூர் நோக்கி பயணம். சாலக்குடி என்ற ஸ்டேஷன் உள்ளது. இங்கிருந்து அத்திரபள்ளி அருவி போக வர டவுண் பஸ் உள்ளது. காரில் போக வர 700 ரூபாய் ஆகும்.
போகும் போது தூரத்திலேயே அருவி தெரிகிறது. ஏப்ரல், மே தவிர மற்ற மாதங்களில் நல்ல தண்ணீர் உள்ளது. கீழே போவதற்கு நல்ல வழி கிடையாது. ஆனாலும் பாறைகளில் இறங்கி போய் வரலாம். சாரல் அடித்தே நனைந்து போய் விடுவோம். மேலே நதி போல் வரும் நீரில் குளிக்கலாம்.


பத்துமலை முருகனும் முருகன் பின்னால் இருக்கும் மலையும்:
மலேசியாவில் இருக்கும் இந்த மலை நிறைய படத்தில் பார்த்து இருப்போம். தமிழ் நாட்டில் கூட இது மாதிரி பெரிய சிலை முருகனுக்கு இல்லை. செங்குத்தாய்
இருக்கும் ஒரு 200 படிகளில் மேலே போனால் முருகன் சன்னதியில் சின்னதாய் இருக்கிறார். மழை பெய்தால் உள்ளே கோயிலில் தண்ணீர் விழும்.இயற்கையாகவே அமைந்து இருக்கும் மலையும்,சிகரங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியும் மிக நன்றாக உள்ளது.ரீசண்டாக பில்லா(அஜித்) படத்திலும் வரும்.மிக அருமையான மலை.


லங்காவி ஸ்கை பிரிட்ஜ்: இதுவும் பில்லா படத்தில் வரும். நிலத்திலிருந்து 700 மீட்டர் உயரமுள்ள இந்த பிரிட்ஜிற்கு கேபிள் காரில் போய் பின்னர் படிகளில் இறங்கி போக வேண்டும். அதிலிருந்து பார்த்தால் பக்கத்தில் கடலும்,தீவுகளும் தெரிகிறது. இந்த பிரிட்ஜ் நேராக இல்லாமல் வளைந்து உள்ளது.மிகஅருமையான இயற்கை எழில் கொஞ்சும் இடம்.


சிங்கப்பூர் சிங்கம்:
நினைத்தாலே இனிக்கும்(கமல்) படத்தினை பார்க்கும் போதெல்லாம் பார்க்க நினைத்தது.சிங்கப்பூர் சிங்கம் வாயில் தண்ணீர் வருவதை குழந்தை போல் ரசிச்சாச்சு.

தாஜ்மஹால்+இந்தியா கேட்: இது மெளன ராகம், மற்றும் ஆசை படம் பார்த்ததில் இருந்து பார்க்க ஆசை பட்டது. தாஜ் மகாலை இரண்டு தடவை பார்த்தும் ஒரு முறையாவது பெளர்ணமி அன்று பார்க்க ஆசை.ஆனால் நம் மக்கள் மும்தாஜின் சமாதியில் ஏன் சில்லறை காசை போடுகிறார்கள் என்பது புரியவில்லை.

ஈ - டிக்கெட்டால் அழுத பெண்.....

நேற்று வைகை ட்ரெயினில் திண்டுக்கல்லில் இருந்து குடும்பத்துடன் வந்துக் கொண்டு இருந்த போது அரியலூரில் ஒரு இருபது வயது பெண் ட்ரெயினில் ஏறியது.வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கையில் வைத்து இருந்துச்சு. அதனுடைய கெட்ட நேரம் கரெக்டாக ஸ்குவாட் டீம் அதே கோச்சில் ஏறினார்கள்.இந்த பெண்ணிடம் ஃபைன் 350 ரூபாய் கேட்டார்கள். பெண் வைத்து இருந்ததோ ஈ டிக்கெட், பணத்தை எடுத்து வைமா நாங்கள் அடுத்த கோச் போய் வருகிறோம் என்று சென்று விட்டார்கள். பணம் இல்லையென்றால் சென்னை போனதும் கோர்ட்டிற்கு போக வேண்டும் இன்னும் அதிக பணம் கட்ட வேண்டும் என்று சொல்லிப் போனார்கள். தீடீரென்று பார்த்தால் அந்த பெண் அழுதுக்கொண்டு இருந்தது. என்ன என்று கேட்டால் கையில் பணம் இல்லை.டெபிட் கார்டுதான் இருப்பதாய் கூறியது. எங்கு வேலை பார்க்கிறாய் என்று கேட்டால் cts என்று கூறியது. நான் உடனே என் தம்பியை கொடுக்கும் படி கூறினேன். அவனும் அந்த கம்பெனியே .

என் மகனிடம் இன்று சனி பெயர்ச்சி அதான் இந்த பெண் கஷ்ட படுது என்று கமெண்ட் அடித்து கொண்டு இருந்தான். நான் பணத்தை அவனை கொடுக்க சொன்னதும் பார்த்தியா சனி என்னையும் சோதிக்கிறது என்று சொல்லிக் கொண்டே பணத்தினை கொடுத்து விட்டான். (ஏதோ நம்மால் ஆன உதவி!!!) திருப்பி கொடுக்க அந்த பெண்ணிற்கு ஈசியாக இருக்கும் என்று அவனை கொடுக்க சொன்னேன்.

பணம் கொடுத்த பின் அந்த பெண்ணிற்கு அழுதது ரொம்ப வெட்கமாய் போய் விட்டது. டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு வைத்து கொண்டு கஷ்டபட வேண்டியாகி விட்டது. அவ்வளவு பணம் செலுத்திய பின்னும் சீட் கிடையாது.எங்களுடன் உட்கார வைத்துக் கொண்டோம். அரியலூர் சென்னை 87 ரூபாய் தான் ஓபன் டிக்கெட் பாவம்...ஈ-டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலைனா ட்ரெயினில் ஏற கூடாது என்ற விபரம் தெரியாமல் ஏறிவிட்டது அந்த பெண்.