Thursday, March 24, 2011

ஸ்க்ரூ ட்ரைவர் குடிச்சு இருக்கலாமோ??

2009, மே 16, நள்ளிரவு 12 மணிக்கு மலேஷியா போக ஃப்ளைட் எனக்கு. தாம்பரத்திலிருந்து பக்கத்தில் தானே திரிசூலம் ஏர்போர்ட் என்று பெரியவன் நகுலுடன் டூவீலரில் இரவு 9 மணிக்கு ஏர்போர்டிற்கு கிளம்பினேன். திரிசூலம் பாலத்திற்கு பக்கத்தில் போகும் போது திடீரென்று எதிர்பாராத பெரிய மழை. செம மழை. பாலத்தின் அடியில் கொஞ்ச நேரம் நின்று பார்த்தோம். மழை விடுவதாயில்லை. சரி என்று ஒரு ஆட்டோவில் ஏறி ஏர்போர்ட் கேட்டில் இருந்து இண்டர்நேஷனல் ஃப்ளைட் புறப்படும் இடம் போக ரூபாய் 40 தண்டம் அழுது விட்டு வெற்றிகரமாய் உள்ளே நுழைந்து விட்டேன்.

செக்கிங் எல்லாம் முடித்து ஒரு அரை மணிநேரம் கழித்து நகுலுக்கு ஃபோன் செய்தால் அம்மா இங்கேயே தான் நிற்கிறேன் என்றான். மழைக் கொட்டுது. வீட்டிற்கு ஃபோன் செய்தால் அங்கு மழையே இல்லை என்கிறான் சின்னவன் ரிஷி.11 மணிக்கு திரும்ப நகுலுக்கு ஃபோன் செய்தால் இப்ப தான் மழை கொஞ்சம் விட்டது வீட்டிற்கு கிளம்பிட்டேன் என்றான். சரி என்று நிம்மதியாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் என் விமானத்திற்க்கான அழைப்பு வந்ததால் அதில் ஏறி உட்கார்ந்து விட்டேன். முதல் வெளிநாட்டு பயணம் என்று சந்தோஷம் இருந்தாலும் மகன்கள் இருவரையும் விட்டு செல்கிறோமே என்று ஃபீலிங்கும் இருந்தது. அன்று முழு நாளும் வெளியில் சுற்றியதால் விமானத்தில் ஏறி அமர்ந்ததும் தூங்கி விட்டேன். ஒரு மணிநேரம் கழித்து ஏதோ சத்தம் என்று முழித்து பார்த்தால் விமானம் அங்கேயே நிக்குது. கல்கத்தா விமானம் மழையால் லேட்டாய் வந்ததால் அந்த பயணிகளுக்காக நாங்கள் அங்கேயே ஒரு மணிநேரம் காத்து இருந்து இருக்கிறோம். எல்லாம் முடிந்து ஒன்றரை மணி நேரம் லேட்டாய் தட தடவென்று எங்கள் விமானம் ஏதோ கார்ப்பரேஷன் வண்டி போல் ரன்வேயில் ஓட ஆரம்பத்தது.

நான் திரும்பி தூங்க முயன்றேன். 20 நிமிஷத்தில் சாப்பாடு வேண்டுமா என்று எழுப்பி விட்டார்கள். அட நிம்மதியா தூங்க விடமாட்டார்கள் போல, சரி சத்தாய் மலேஷியா போய் இறங்கலாம் என்று சாப்பிட கொடுத்தில் ஃப்ரூட் சாலட்ட்டும், ஒரு கேக்கும் நடு ராத்திரியில் சாப்பிட்டேன். பக்கத்தில் இருந்த ஒரு வட இந்திய பெண்மணி ஸ்க்ரூ ட்ரைவர் என்ற ஒரு வஸ்துவை வாங்கி வாங்கி குடித்துக் கொண்டு இருந்தார். தூக்க கலக்கத்தில் ஜூஸ் பெயர் நல்லாயிருக்கே, அது கொடுக்கப்பட்ட க்ளாஸும் நல்லாயிருக்கே நாமும் ஒரு க்ளாஸ் வாங்கி அடிக்கலாமா என்றால் கொஞ்சம் ஆல்கஹால் ஸ்மெல் வரவும் நன்கு முழித்துக் கொண்டு வேண்டாம் என்று சொல்லி விட்டேன்( தமிழ் பெண் கலாச்சாரம் என்னாவது?)

ஆச்சு தூங்கியும் தூங்காமலும் காலை 6.30க்கு மலேஷியா போய் விட்டேன்.என் கணவர் அவர் இருக்கும் இடத்தில் இருந்து கோலாலம்பூர் வர வேண்டும் என்றால் தான் ரொம்ப தூரம் அலைய வேண்டும் என்பதால் வெளியே வந்து ஒரு டாக்சி வைத்து வீட்டிற்கு தனியே வந்து விடு வந்துடுவேல்லே, இல்லை நான் ஏர்போர்ட் வரணுமா என்று இரண்டு முறை அழுத்தி கேட்டார். நான் இல்லப்பா நானே வந்துடுவேன் என்று சொல்லிட்டேன்.  அவர் அனுப்பிய அவர் தங்கியிருந்த வீட்டிற்கு செல்லும் வழியின் வரைபடத்தை பிரிண்ட் எடுத்து கையில் வைத்து இருந்தேன்.

மலேஷியா ஏர்போர்ட்டை பார்த்ததும் நான் பட்டிக்காட்டாண் பட்டிணம் லுக் விட்ட மாதிரி லுக் விட்டுட்டே, ஜாக்கிரதையா அந்த ஸ்க்ரூ ட்ரைவர் பெண்+என் விமானத்தில் இருந்து வெளிவந்த கூட்டத்தை தொடந்து தேமேன்னு இந்த ட்ரையினில் ஏறி போனேன். வெளியே லாபியில் இமிகிரேஷனுக்கு ஒரு பெரிய கியூ இருக்கவே நானும் அதில் நின்று கொண்டேன். அங்கு 5 கவுண்டர்கள் இருந்தது. அதில் ஒரு பெண் நெற்றியில் விபூதியுடன் இருந்தார்.ஆகா தமிழ் பெண் அல்லவா, அவரிடம் தான் நான் செக் செய்ய வேண்டும் என்று ஏழுக்கொண்டலவாடாவை வேண்டி கொண்டு வேண்டும் என்றே அவரிடம் போவதற்காக கியூவில் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து விபூதி பெண் கவுண்டர் காலியானதும் அவரிடம் சென்றேன். தேவையில்லாமல் தேவுடாவை டிஸ்டர்ப் செய்த பாவத்தை பின்னர் அனுபவித்தேன். மற்ற கவுண்டர்களில் ஆண்கள் செக் செய்து கொண்டு இருந்தனர்.

அந்த பெண் என் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு எதற்காக மலேஷியா வந்திருக்கீங்க என்றார். டூரிஸ்ட்டாக வந்து இருக்கிறேன் என்றேன்.எவ்வளவு பணம் ஹாண்ட்பேக்கில் இருக்கிறது என்றார். என்னிடம் சென்னை ஏர்போர்டில் ரூபாய் 5000க்கு மாற்றிய 335 ரிங்கட்  இருந்தது. அதை எடுத்து காண்பிக்க சொன்னார். இதில் எப்படி டூர் போக முடியும் என்றார். நான் என் கணவர் இங்கு இருப்பதாய் சொன்னேன்.அவர் இருக்கும் வீட்டில் தங்க போகிறேன் என்றேன். அவர் நேராய் ஒரு இமிகிரேஷன் ஆஃபிசர் ரூமை காண்பித்து அங்கு போய் நீங்க செக் செய்துட்டு போகணும் என்று உன் வழி தனி வழி என்று சொல்லி விட்டார். அங்கே போனால், பல நாட்டுக்காரர்களும் அங்கு சந்தேகத்தின் பேரில் பிடித்து உட்கார வைக்கப்பட்டு இருந்தனர்.அந்த கூட்டத்தில் நான் மட்டும் தான் பெண். ஒரு முரட்டு மலேஷிய பெண்மணி மிக அலட்டலாக அங்கு இருந்தார்.என்னை வெயிட் செய்ய சொன்னார். அங்கிருந்த சேரில் சுற்றிலும் ஒரு சுற்றி பார்த்துட்டு பாவமாய் உட்கார்ந்து கொண்டேன்.அவர் என் முறை வந்ததும் என்னை அழைத்தார். ஒரு ஃபோன் நம்பரை கொடுத்து இந்த நம்பருக்கு உன் கணவரை ஃபோன் செய்ய சொல் அப்ப தான் உன்னை வெளியில் விடுவோம் என்று சொல்லி விட்டார். அங்கேயே காயின் போட்டு செய்யும் ஃபோன் இருந்தது. ஆனால், என்னிடம் மலேஷியா காய்ன் இல்லை. அந்த பெண் லாபியில் இருக்கும் கடைகளில் சில்லறை வாங்கி வா என்று சொல்லி விட்டு என் பாஸ்போர்ட்டை தன் பக்கத்தில் ஒரு ட்ராயரில் போட்டு பூட்டிவிட்டார்.

 சரி என்று என்னிடம் இருந்த மலேஷிய பணத்திற்கு சில்லறை கேட்டு சென்றேன், சென்றேன்,ஏர்போர்டின் இறுதிக்கே சென்றேன்.அங்கு அதிக புஷ்டியுடன் இருந்த இரு கருப்பு நாய்களை பிடித்துக் கொண்டு அதே போல் புஷ்டியாய் இருவர் நின்று போற வரவங்களை கண்ணால் எக்ஸ்ரே எடுத்துக் கொண்டு இருந்தனர். திரும்ப ஏழுக்கொண்டலவாடுவை நினைத்துக் கொண்டு இந்தியா வந்ததும் ஏழுமலை நடந்தே ஏறி வருகிறேன். பிரச்சனை இல்லாமல் என்னை ஊருக்குள் விட்டுவிடு என்று வேண்டிக் கொண்டேன். சில்லறை எங்கும் கிடைக்கலை.

ஆனது ஆவட்டும் என்று யாரும் சில்லறை கொடுக்க மாட்டேங்கிறாங்க என்று அந்த பெண்ணிடமே நேரே சென்று சில்லறை கேட்டேன். என்னை ஒரு மாதிரி லுக் விட்டுட்டு அந்த பெண் அணிந்து இருந்த கோட்டில் கை விட்டு கொஞ்சம் சில்லறை எடுத்துக் கொடுத்தார். அந்த காசை வைத்து என் கணவருக்கு ஃபோன் செய்தால் முதல் இரண்டு முறை கட் ஆகி விட்டது. என்னிடமோ 4 காசுகள் தான் இருந்தது. அது எவ்வளவு என்றும் பதட்டத்தில் தெரியவில்லை. நல்லவேளை என் கணவர் திரும்ப அந்த நம்பருக்கு ஃபோன் செய்யவும் விஷயத்தினை சொல்லி அந்த பெண்ணின் நம்பர் கொடுத்தேன். அவர் ஃபோனில் சிரிக்கிறார். மகனே இரு உன்னை வந்து கவனித்து கொள்கிறேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பாவமாய் முகத்தினை வைத்துக் கொண்டு,கையில் இருந்த மீதி காசை என் பக்கத்தில் இருந்த என்னை மாதிரி ஒரு பாவப்பட்ட நண்பருக்கு கொடுத்து, அவருக்கு எப்படி அந்த ஃபோன் யூஸ் செய்யணும் (கவனிக்கவும், இங்கே கூட உதவி!) என்று சொல்லி தந்து விட்டு, அவரின் நன்றிக்கு தலையசைத்துக் கொண்டு அந்த பெண்ணை பார்க்காதது மாதிரி பார்த்துக் கொண்டு இருந்தேன். அசால்ட்டாய் இருப்பது மாதிரி. அந்த பெண் தன் பக்கத்தில் இருந்த ஒரு ஃபோன் அட்டெண்ட் செய்ததும் என்னை கூப்பிட்டு என் பாஸ்போர்டை என்னிடம் கொடுத்து இப்ப நீங்கள் வெளியில் போகலாம் என்றார். தேவுடா விட்டது சனியென்று லக்கேஜ் இருக்கும் இடத்தில் அனாதையாக கிடந்த என் சூட்கேஸை எடுத்துக் கொண்டு, அந்த விபூதி பெண் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்ததை, என்ன சிரிப்பு வேண்டி இருக்குது என எரிச்சலுடன் பார்த்துக் கொண்டே,டாக்ஸி ஸ்டாண்டிற்கு வந்து டாக்ஸியின் சைனாக்கார ட்ரைவரிடம் சைகையில் சூப்பராய் பேசி, என் கையில் இருந்த வரைப்படத்தினை காண்பித்து ஏறி உட்கார்ந்தேன். 100, 120 அடுத்து 150 என்ற ஸ்பீடில் அவர் போனார். நான் அதன் பிறகு எவ்வளவு ஸ்பீடு என்று பார்க்கவில்லை. ஏனெனில், இனி அதை பார்த்தால் திரும்ப சாமி கும்பிடணும்.எப்படியோ என்னை கொண்டு போய் என் கணவர் இருக்குமிடம் சேர்த்தால் போதும் என்று வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

இப்படியெல்லாம் பணம் செக் செய்வார்கள் என்று தெரியாது. இல்லையெனில் இன்னும் ரிங்கட் கையில் எடுத்து வர சொல்லி இருக்க மாட்டேனா என்று சொன்னார். என் பசங்களிடம் ஃபோனில் மலேஷியா போறேன்னு, மலேஷியா ஏர்ப்போர்ட் மட்டும் பார்த்து வந்து இருப்பேண்டா, நல்ல வேளை அந்த பெண் என்னை உள்ளே விட்டாள் என்று சொன்னால் சத்தமா சிரிக்குது இரண்டும்.இரண்டும் அவர்களின் அப்பாக்கு அம்மாவை ஏர்போர்டில் போய் கூப்பிடும் படியாக சொல்லி இருக்குதுங்க எனக்கு தெரியாமல்.(பாசக்கார பையபிள்ளைக).

ஊரில் இருந்து கிளம்பும் முன்னால், ஆத்தா நான் பாசாயிட்டேன் ரேஞ்சில்! ஒரு 20 பேரிடமாவது மலேஷியா, சிங்கப்பூர் போறேன் என்று ஃபோனில் சொல்லிட்டு கிளம்பினோமே. இப்ப இப்படி ஒரு மணிநேரம் ஏர்போர்டிலேயே சுற்றுகிறோமே என்று தான் ஒரே கவலையாய் இருந்தது. (கண்ணு போட்டுட்டாங்க).அடுத்து எங்காச்சும் ஃபாரின் போகும் முன்னால் திருப்பதி மலை நடந்து போய்டுங்கம்மா இல்லைன்னா சாமி அங்கும் ஏர்போர்டில் பழி வாங்கும் என்று சொல்லிட்டே இருக்குதுங்க பசங்க.
முன்னால் வேண்டுதலே இல்லாமல் நிறைய முறை நடந்து ஏறி இருக்கிறேன். மலேஷியா போய் வந்த பின் ஏனோ போக முடியவில்லை. ஆனால், கட்டாயம் போயிடணுப்பா.

டிஸ்கி: பக்தியாய் விபூதி, ஏழுக்கொண்டலவாடான்னு நான் போனால் இப்படி ஒரு சோதனை. அந்த ஸ்க்ரூ ட்ரைவர் பெண்ணும் தனியாய் தான் வந்திருந்தார். அவரை யாரும் சந்தேகப்படலையே? பேசாமா நானும் ஒரு பெக் ஸ்க்ரூ ட்ரைவர் போட்டு இருக்கணும் போல.

26 comments:

Chitra said...

பேசாமா நானும் ஒரு பெக் ஸ்க்ரூ ட்ரைவர் போட்டு இருக்கணும் போல.


....அதனால் என்ன? அடுத்த முறை ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது, கொஞ்சம் வோட்கா சேர்த்துக்கிட்டா போச்சு.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

குறையொன்றுமில்லை. said...

முதல் மலேஷியா ட்ரிப்ப அசத்தலா சொல்லி இருக்கிங்க. நல்லா இருக்கு.

Ram said...

உங்க முகத்துலயே தெரிஞ்சிருக்கு பாருங்களேன்..

வெங்கட் நாகராஜ் said...

”எச்சூஸ்மி! ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் ப்ளீஸ்” அப்படின்னு கேட்டுருக்கலாம் நீங்க! நன்றாக இருந்தது உங்கள் பயண அனுபவம்.

CS. Mohan Kumar said...

நல்லா இருந்தது. பயண கட்டுரை எழுதறீங்கன்னு ப்ளாகை பாலோ செய்ய ஆரம்பிச்சிட்டேன். மலேசியா பற்றி மேலும் எழுதுவீங்களா?

ஹுஸைனம்மா said...

சே, சே, உங்க லெவலுக்கு நீங்க ஸ்க்ரூ ட்ரைவர்லாம் எடுக்கலாமா? டிரில்லிங் மெஷின், ஸ்விஸ் ஆர்மி நைஃப் இப்படி பெரிசா எடுத்தாத்தான் உங்க அந்தஸ்துக்கு சரி!! :-))))

சாந்தி மாரியப்பன் said...

நல்ல பயண அனுபவம்.. ரங்க்ஸை ஒண்ணுமே சொல்லலியா :-))))))))))

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் சித்ரா பழகிக்கணும்.
நன்றி லக்‌ஷ்மி மேடம்..

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா தம்பிகூர்மதியன்.

அமுதா கிருஷ்ணா said...

இனிமேல் அப்படி தான் கேட்டு வாங்கணும் வெங்கட் நாகராஜ்

அமுதா கிருஷ்ணா said...

தாங்ஸ் மோகன் குமார். ஏற்கனவே நான் டூர் என்ற தலைப்பில் காஷ்மீர் பயணகட்டுரை எழுதி உள்ளேன்.மலேஷியா பற்றியும் எழுதி உள்ளேன்.

அமுதா கிருஷ்ணா said...

என்னது இப்படியெல்லாம் கூடவா ட்ரிங்ஸ் இருக்கு ஹூஸைனம்மா?

அமுதா கிருஷ்ணா said...

நம்பை நம்பி ஒரு ஆத்மா வர சொல்லியிருக்கு எதற்கு திட்டிக் கொண்டு அமைதிச்சாரல்.

Vidhya Chandrasekaran said...

:)))))))

அடுத்த ட்ரிப்ல நீங்களும் ஸ்குரூ ட்ரைவர் குடிங்க. ஆனா மறக்காம அவர வந்து கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க:))

மைதீன் said...

ரசிக்கும்படியான எழுத்து நடை, படித்ததும் ஒரு புன்னகை என் முகத்தில் ஒட்டிக் கொண்டது. அதற்க்கு என் நன்றிகள்.

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வித்யா, மைதீன்..

ADHI VENKAT said...

வித்தியாசமான அனுபவம். அடுத்த முறை ஸ்க்ரூ ட்ரைவர் ஒரு பெக் எடுத்துக்கோங்க. :)

R. Gopi said...

\\கவனிக்கவும், இங்கே கூட உதவி!\\


\\நான் அதன் பிறகு எவ்வளவு ஸ்பீடு என்று பார்க்கவில்லை. ஏனெனில், இனி அதை பார்த்தால் திரும்ப சாமி கும்பிடணும்\\

விழுந்து விழுந்து சிரித்தேன். தரைல சில டைல்ஸ் கூட உடைஞ்சி போச்சி:-)

தீபிகா said...

இத மெனக்கெட்டு படிச்சதுக்கு நானும் அதையே குடிச்சிருக்கலாம்..

ராஜ நடராஜன் said...

//(கண்ணு போட்டுட்டாங்க)//

சிரிப்பு வந்துடுச்சு.ஆனால் நான் வந்தது அதுக்கில்ல:)

ஸ்க்ரூ ட்ரைவர் ஒரு காக்டெய்ல்!அட!சித்ரா மேடம் முதல் பின்னூட்டத்துல உதவிக்கு வாராங்க பாருங்க!

கூடுதல் தகவல் இது பெண்கள் பானம்:)

ஆதி மனிதன் said...

Chitra said...
//....அதனால் என்ன? அடுத்த முறை ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது, கொஞ்சம் வோட்கா சேர்த்துக்கிட்டா போச்சு.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... //

ஒ ஓகே. அரஞ்சு ஜூஸ் + வோட்கா தான் ஸ்க்ரூ டிரைவரா? அனுபவமோ? //சும்மா தமாசு//

ஆதி மனிதன் said...

ஆமா என்ன ஒரே ஏர்போர்ட் சம்பந்தப்பட்ட பதிவா வருது?

ஆதி மனிதன் said...

ஹுஸைனம்மா said...

//சே, சே, உங்க லெவலுக்கு நீங்க ஸ்க்ரூ ட்ரைவர்லாம் எடுக்கலாமா? டிரில்லிங் மெஷின், ஸ்விஸ் ஆர்மி நைஃப் இப்படி பெரிசா எடுத்தாத்தான் உங்க அந்தஸ்துக்கு சரி!! :-)))) //

சத்தியமா எனக்கு இந்த பிரண்டு நேமலாம் தெரியவே தெரியாது. ஹ்ம்ம்..அக்கா தங்கச்சியெல்லாம் எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்காங்க!

jothi said...

முத‌லில் இருந்து க‌டைசி வ‌ரை ந‌கைச்சுவை.

இருந்தாலும் உங்க‌ளுக்கு ரொம்ப‌தான் தைரிய‌ம். ஏதோ பொள்ளாச்சிக்கு கிள‌ம்பி போற‌மாதிரி கிள‌ம்பி போயிருக்கீங்க‌??

"விபூதி பொம்ப‌ளை"

வெளி நாடுக‌ளில் ந‌ம‌க்கு ஆப்பு வைக்கிற‌து ந‌ம்ம‌ ஆட்க‌ள்தான்.

vanathy said...

ரசிக்கும் படி, சூப்பரா எழுதி இருக்கிறீங்க. வெளிநாடு போகும் போது நான் எப்போதும் வெள்ளை இமிகிரேஷன் அதிகாரிகளிடமே போவேன். குடைச்சல் குறைவாக இருக்கும். இதே எங்கள் கலரில் இருக்கும் ஆட்களிடம் போனால் தாவு தீர்ந்து விடும்.

ஹுஸைனம்மா said...

//இது பெண்கள் பானம்//

//என்னது இப்படியெல்லாம் கூடவா ட்ரிங்ஸ் இருக்கு ஹூஸைனம்மா?//

//சத்தியமா எனக்கு இந்த பிரண்டு நேமலாம் தெரியவே தெரியாது. ஹ்ம்ம்..அக்கா தங்கச்சியெல்லாம் எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்காங்க! //

அவ்வ்வ்வ்வ்.... அடிச்சுச் சொல்றேன் (யாரை வேணும்னாலும்)... எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ‘நிஜ’ ஸ்க்ரூ டிரைவர், ‘நிஜ’ டிரில்லிங் மெஷின், ‘நிஜ’ ஸ்விஸ் ஆர்மி நைஃப் மட்டுமே... சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்...