Monday, March 21, 2011

2 B,காந்திநகர்,திருநெல்வேலி-8.


உலகத்திலேயே எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று நெல்லையில் இருந்த போது 5 வருடங்கள் வாழ்ந்த காந்தி நகர்.நான் அப்போது 7 ஆம் வகுப்பு முதல் 11 வரை அங்கிருந்து தான் படித்தேன்.  நெல்லை டவுணில் இருந்து லாலா சத்திர முக்கு,வழுக்கோடை வழியாக பழைய பேட்டை தாண்டி குற்றால ரோடில் சென்றால் வரும் ஒரு காலனி தான் காந்தி நகர்.நாங்கள் அப்ப இருந்த போது மொத்தமே 5 தெருக்கள் தான் அந்த நகரில்.நகரின் எதிரில் ராணி அண்ணா பெண்கள் கலை கல்லூரி இருக்கும். ஆடி மாதமானால் அடிக்கும் காற்றில் அம்மியும் பறந்து போகும்.குற்றால சீசன் வந்தாச்சுன்னு இங்கேயே தெரிந்திடும்.அப்படியே பறந்து போனால் கொஞ்ச தூரத்தில் நெல்லை ரேடியோ ஸ்டேஷன் இருக்கும்.

தனி தனியே தோட்டத்துடன் கூடிய வீடுகள்.16 செண்ட்டில் தோட்டமும் வீடும் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ரோஜா,டிசம்பர் பூக்கள், கனகாம்பரம், கொன்றைப் பூ,பால்ஸம், செம்பருத்தி, மருதாணி,வாழை,மாமரம்,வேப்பமரம் என்று பூத்துக் குலுங்கும்.தலையில் ரோஜா வைக்காமல் ஸ்கூல் சென்றதில்லை.நாங்கள் இரண்டாவது தெருவில் 2 B வீட்டில் வசித்து வந்தோம்.ரவுடி தெரு அது தான். அங்கு தான் ஒரு கிரவுண்ட் இருந்தது. அதில் இருந்த ஒரு பெரிய மரத்தின் கிளைகளில் ஏறி அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். மாலை 4-லிருந்து இருட்டும் வரை விளையாடுவோம். பிறகு அவர் அவர் வீட்டிற்கு மனசேயில்லாமல் படிக்க போய் விடுவோம். 6 மணிக்கு முன் வராவிட்டால் அம்மா வீட்டின் உள்ளே விட மாட்டார்கள். என் தம்பி, தங்கைகள் பயந்து கொண்டு போய் விடுவார்கள். நான் (மூத்த பெண்!!)நிறைய நாட்கள் 6 மணிக்கு பிறகு வந்து திட்டு வாங்குவேன். வெள்ளி மாலையில் அனைவரும் ஒன்றாக அங்கு இருந்த பிள்ளையார் கோயிலுக்கு போய் விடுவோம்.அன்று மட்டும் 6 மணி கணக்கு கிடையாது.

சனி, ஞாயிறுகளில் சாப்பிட்டு, சாப்பிட்டு விளையாட்டு தான்.பகல்  வேளைகளில் எல்லோரும் பசங்களிடம் சைக்கிள் ஓட்ட கத்துக் கொள்வோம். ஏன்னா அவர்களிடம் தான் சைக்கிள் இருக்கும்.என் சைக்கிள் புறப்படம்னா என் இடது கால் பக்கத்தில் ஒரு மேடு அல்லது கல் இருக்கணும். அதில் ஏறி தான் சைக்கிளில் உட்காருவேன்.

வீட்டின் இருந்த மாதுளை மரத்தில் அம்மா அணிலிடம் இருந்து மாதுளை பழங்களை காப்பதற்காக ஒவ்வொரு பழத்தினை சுற்றியும் வெள்ளை துணியினை கட்டி முடிச்சு போட்டு இருப்பார்கள்.காற்றில் அது ஆடிக் கொண்டு இருக்கும். இரவில் வீட்டிற்கு வரும்போது மரம் எல்லாம் சின்ன சின்ன ஜெகன் மோகினிகள் தொங்குவதாய் பயந்து கொண்டு அந்த பக்கம் பார்க்க கூடாது என்று நினைத்தாலும் பார்த்துக் கொண்டு பயந்து ஓடுவோம்.

என் பக்கத்து வீட்டில் இருந்த சுந்தரேஷன் என்பவர் ரேடியோ ஸ்டேஷனில் வேலை பார்த்தார். அவரிடம் எங்களுக்கு பிடித்த பாடல்களை சொல்லி விட்டு இப்படி ஒரு ரேடியோவில்  இரவில் கூட்டமாய் அமர்ந்து கேட்போம். ஒருத்தர் வீட்டில் மட்டுமே அப்ப டி.வி இருந்தது.இரவு இலங்கை ரூபவாகிணி ஒலிப்பரப்பும் அருத பழசு தமிழ் சினிமாவை பார்ப்போம். சில சமயம் இருட்டினதும் ஒரு வீட்டின் முற்றத்தில் அனைவரும் அமர்ந்து பேய் கதை, சினிமா கதை பேசிக் கொண்டு இருப்போம். சினிமாவில் வில்லன் என்றே சொல்ல தெரியாது, கொள்ள  கூட்ட தலைவன் என்றோ,பாஸ் என்றோ தான் சொல்வோம். பொங்கல் சமயம் கரும்பு தின்பதற்கு போட்டியே நடக்கும்.எதாவது ஒரு நாள் அம்மாக்கள் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக டவுணில் சினிமா பார்க்க போவோம்.

காந்திநகரில் தீப்பெட்டி தொழில்சாலை ஒன்று அப்போது அங்கு இருந்தது. அங்கு வேலைக்கு வரும் வயசு பிள்ளைகள் மாலையில் வீட்டிற்கு போகும் போது எங்காவது ஜோடியாய் நின்று பேசிக் கொண்டு இருந்தால் அதை கெடுப்பதற்காகவே  நாங்கள் அங்கு கூட்டமா சும்மாவாச்சும் போய் வருவோம்.அக்கா, அண்ணா என்று சும்மா பேச்சுக் கொடுத்து வருவோம். அவர்களை பார்க்கவே ஏனோ எங்களுக்கு வெட்கம் வெட்கமாய் இருக்கும். ஆனாலும், போவோம். மொட்டை மாடிக்கு போய் அப்படி யார் எங்கு நிற்கிறார்கள் என்று உளவு பார்ப்பது பசங்க வேலை.

முதல் தெருவில் தங்கம் இல்லம் என்று ஒரு வீடு இருக்கும். அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாய் நம்பினோம். பாதி நேரம் அந்த வீடு பூட்டியே இருக்கும். நெல்லையப்பர் தேர் திருவிழா, அரசு பொருட்காட்சி ஒன்றாய் போய் வருவோம்.

காந்திநகரில் வருடம் ஒரு நாள் ஆண்டுவிழா நடக்கும் அதற்கு டான்ஸ்,ட்ராமா, பாட்டு என்று கலக்குவோம்.சினிமா பாடல்களுக்கு கோரியாகிராஃப் செய்து ஆடினோம்(!).உஸ், அப்பாடா சொல்லும் போதே கண்ணை கட்டுதே.பெண் குழந்தைகள் ப்ராக்டிஸ் செய்யும் வீட்டிற்கு(தினம் ஒரு வீடு)வந்து கலாட்டா செய்யும் பசங்களை துரத்தி விட காவல் வைப்போம்.
தாயம்,பரமபதம்,கார்ட்ஸ்,பாண்டி,கல்லா-மண்ணா,கொ-கோ,பிசினஸ் கார்ட்ஸ், பல்லாங்குழி,கண்கட்டி விளையாடுவது,ஒளிந்து விளையாடுவது, கோலி, கேரம், ஊஞ்சல் ஆகா எத்தனை விளையாட்டுகள் விளையாடி இருக்கிறோம். மாலையில் செல்வி வீட்டு கோழி கூண்டிற்கு வரலைன்னா அதை தேடி போவோம். ஒரு கோழியினை 6 பேர் துரத்தி பிடிப்போம். மாலையில் பூக்கள் பறித்து அம்மாக்களிடம் கட்டுவதற்கு கற்றுக் கொள்வோம்.

சில வருடங்கள் கழித்து பார்த்தால் நாங்கள் சேர்ந்தே விளையாடிய ஆம்பளை பசங்களுடன் பேசுவது இல்லை. எப்ப பேச்சை நிறுத்தினோம் என்றே தெரியவில்லை.  எல்லாம் பெரிய மனுஷங்களாகி விட்டார்களாம்.பேச ஆசையாய் இருந்தாலும் பேசவில்லை.வெட்கத்துடன் குனிந்துக் கொண்டார்கள். போங்கடா நீங்களும் உங்கள் கலாச்சாரமும் என்று இருக்கும். அப்புறம் காந்திநகரில் அந்த வாடகை வீட்டினை விட்டு நாங்கள் டவுணில் எங்கள் சொந்த வீட்டிற்கு வந்தோம்.பள்ளி, கல்லூரி, கோயில்,சினிமா செல்வதற்கு மட்டுமே வெளியில் வருவோம். விளையாட இங்கு இடமில்லை, மனிதர்களுக்கு மனமுமில்லை.

சில வருடங்களுக்கு முன்னால் என் பசங்க இருவரையும் காந்திநகருக்கு கூட்டிச்சென்று பேய் வீடு தங்கம் இல்லம்,நாங்கள் விளையாடிய கிரவுண்ட், போன கோயில், தீப்பெட்டி தொழில்சாலை இருந்த வீடு என்று அனைத்தையும் காட்டி வந்தேன். இப்பவும் அவ்வப்போது என் பசங்களுக்கு காந்திநகர் கதையினை சொல்லிக் கொண்டே இருப்பேன்.இன்னைக்கு நீங்களெல்லாம் மாட்டினீங்க!!!!

26 comments:

துளசி கோபால் said...

அருமையான கொசுவத்தி !
ரசித்தேன் அமுதா!

சாந்தி மாரியப்பன் said...

நல்ல கொசுவத்தி.. அந்த நாட்களின் ஞாபகம் என்னிக்குமே இனிமையாத்தான் இருக்கு :-))

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. சிறுவயது நினைவுகளை நினைத்தாலே சந்தோஷமாய் இருக்கும்.

Ram said...

என் அம்மாவும் இதுபோல் அவர்களது சிறுவயது வாழ்க்கையை அடிக்கடி சொல்வார்கள்.. அவர்களது வாழ்க்கை மட்டுமின்றி தன்னை சுற்றி இருந்தவர் வாழ்க்கை அவர்கள் அடைந்த துன்பம் அதன் விளக்கம் எல்லாம் சொல்வார்கள்.. அது பல சமயத்தில் எனக்கு உதவியாய் இருந்திருக்கிறது.. இப்போதும் என் கிராமத்து நினைவுகளை தட்டி பார்க்கிறேன்.. சுகம் தானே

vanathy said...

நல்லா இருக்கு பழைய நினைவுகள். நானும் அடிக்கடி நினைப்பதுண்டு. வெளிநாட்டில் எப்போதும் இயந்திரம் போல வாழ்க்கை. அந்த நாட்கள் இனிமையானவை.

pichaikaaran said...

நல்ல பகிர்வு

Raja said...

Amudha Krishnan,
I felt touched reading your blog. You have written your blog with the proficiency of a great story teller. You have the talent to transform your childhood life, spent at Gandhi Nagar in the historically famous TIRUNELVELI, into a fascinating story. Choice of words, I think, comes handy to you. I do not know whether you still live there. By the by, I belong to TIRUNELVELI. My present place of living is Chennai. Reading your blog gives me a sense of sisterly affection on you. For me too there is nothing great when it comes to my birth place TIRUNELVELI. The backdrop of this comment is purely a sense of nativity.
Regards,

வெங்கட் நாகராஜ் said...

கொசுவத்தி நல்லா சுத்தி இருக்கீங்க! சிறு வயது நினைவுகள் என்றுமே இனியவைதான்!

நானானி said...

super mosquito coil. started and ended as a rapid fire round.

குறையொன்றுமில்லை. said...

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்
திரிந்த பறவைகளே. பாட்டு தான் நினை
வில் வரது.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி துளசி மேடம்.

ஆமாம் அமைதிச்சாரல்..

நன்றி கோவை2தில்லை..

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் பழைய நினைவுகள் சுகம் தான் தம்பிகூர்மதியன்.

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி வானதி..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி பார்வையாளன்.நானானி.லெக்‌ஷ்மி மேடம்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி சகோதரர் ராஜா.நான் இப்போது இருப்பது சென்னையில்.நன்றி உங்கள் நீண்ட பதிலுக்கு.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி வெங்கட் நாகராஜ்..

சி.பி.செந்தில்குமார் said...

கல்லா மண்னா? மட்டும் புதுசா இருக்கே? மண்ணை கூட்டி வெச்சு ஒரு கல்லை ஒளிச்சு வெச்சு 2 கையையும் கோர்த்து மணல்ல வெச்சு கண்டு பிடிக்கசொல்லும் விளையாட்டா/?

Raja said...

Sis Amudha Krishnan.
Probably, I think I have bored you with my lengthy comment!
Sorry!!
Regards,

அமுதா கிருஷ்ணா said...

இல்லை செந்தில் குமார். பிடிக்க வருபவர் மண் என்று சொல்லிட்டா எல்லோரும் கல், சிமெண்ட் தரை தேடி ஓடி அதில் நிற்கணும். கல் என்று சொல்லிட்டால் மண்ணை தேடி ஓடி மண்ணில் நிற்கணும். மாற்றி நின்றால் அல்லது அப்படி இடம் தேடி ஓடும் போது பிடிப்பட்டால் அவுட்.

அமுதா கிருஷ்ணா said...

இல்லை ராஜா..உங்கள் பதில் எனக்கு ஒரு என்கரேஜ்மெண்டாக தானே இருக்கும். எப்படி போர் அடிக்கும்?

ராம்ஜி_யாஹூ said...

கல்லணை மாநகராட்சி பள்ளிக்கூடமா நீங்கள்

மைதீன் said...

நானும் சில காலம் டவுனில் வாழ்ந்திருக்கிறேன்.பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள்

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் ராம்ஜி கல்லணையில் 2 வருடம் படித்தேன்..

நன்றி மைதீன்

சந்திர கிருஷ்ணா said...
This comment has been removed by a blog administrator.
அமுதா கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
jp said...

. எப்ப பேச்சை நிறுத்தினோம் என்றே தெரியவில்லை. எல்லாம் பெரிய மனுஷங்களாகி விட்டார்களாம்.பேச ஆசையாய் இருந்தாலும் பேசவில்லை.வெட்கத்துடன் குனிந்துக் கொண்டார்கள் -----Amutha neengha pesalainu sollungha ... Romba nalla narrate pannuringha.