Showing posts with label நெல்லை நொறுக்ஸ். Show all posts
Showing posts with label நெல்லை நொறுக்ஸ். Show all posts

Tuesday, June 17, 2014

நானும் திநெவேலி அல்வாவும்

நெல்லையில் அவசர ஒரு நாள் வேலை. இங்கே பெருங்களத்தூர் சென்று நேரா நெல்லை போற பஸ்ஸில் ஏறியாச்சு.காலை நெல்லைக்கு 7 மணிக்கு போயாச்சு.நேரா ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டு காலை 9 மணிக்கு வள்ளியூர் அங்கேயிருந்து ராதாபுரத்திற்கும் ஸ்டாண்டிங்கில் போய் 2 அவரில் போன வேலையினை முடித்து விட்டு திரும்ப நெல்லை வந்த போது 6 PM.

ஃப்ரெண்ட் வீட்டிற்கு ஓடோடி போய் பேக்கை எடுத்து கொண்டு ஜங்ஷனில் அல்வா,ஓமபொடி,காராச்சேவு வாங்கிட்டு பஸ்-ஸ்டாண்டில் சென்னை பஸ்ஸிற்கு நின்ற போது தான் தெரிந்தது நமக்கு சென்னைக்கு பஸ் கிடைக்காதென்று.15 ப்ரைவேட் பஸ்ஸில் விசாரிச்சாச்சு. நோ சீட்ஸ். சரி வா போகலாம் என்று நெல்லை புது பஸ்-ஸ்டாண்டிற்கு போனாக்கா சென்னை பஸ் நஹி. சரி கிடைச்ச பஸ்ஸில் போகலாம் என்று திருச்சி பஸ் தேடினால் ஃபுல்.அட ராமா என்னடா இது சோதனை என்று நினைத்த போதே அதோ

 கிடைச்ச ஒரு  மதுரை பஸ்ஸில் ஏறி கிடைச்ச சீட்டில் இப்ப என்ன 9 ஆ நைட் 12,30க்குள்ளே மதுரை போனாக்கா சென்னை ப்ஸ்ஸில் ஏறினாக்கா காலை 8 குள்ளே நம்சென்னைவீட்டுக்கே போயிடலாம் என்று குன்சா கணக்கு போட்டு கொண்டு உட்கார்ந்தாச்சு. காலையிலிருந்து உட்காரவேயில்லை. ஆஹா உட்கார்ந்தா இவ்ளோ சுகமா இன்று தானே இது தெரிஞ்சுதுன்னு நினைச்சுகிட்டே முகத்தில் மோதும் காற்றோடும்  நைட் சாப்பிடாத வயிற்றோடும், காதில் இளையராஜாவோடும் அப்படியே ஐக்கியமானேன்.

எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்தது. ஆஹா பசிக்கிற மாதிரி இருக்கே அல்வாவாச்சும் சாப்பிடலாமா என்று நினைத்து பையில் கையை விட குனிந்தால் டமால்னு ஒரு சத்தம் போய் கொண்டிருந்த பஸ் அப்படியே நின்னிருச்சு. பஸ் டயர் பணால்.எல்லோரும் கீழே இறங்கி என்ன என்று பார்த்து கொண்டிருக்கும் போது நாம அல்வா தின்னாக்கா நல்லாயிருக்காதுன்னு நானும் கீழே இறங்கினேன். கோவில்பட்டியே இன்னும் வரலை பஸ் இதுக்கு மேலே போகாது பேக்கை எல்லாம் எடுத்துட்டு இறங்குகோங்கன்னு கண்டக்டர் சொல்லிட்டார். நினைவா அல்வா பேக்கையும் எடுத்துட்டு கும்மிருட்டில் மக்களோடு மக்காய் நின்று கொண்டேன். அடுத்த அரைமணிநேரத்தில் அங்கே வந்த ஒரு டவுண் பஸ்ஸில் கண்டக்டர் ஏறுங்க ஏறுங்கன்னு சொன்னதும் கூட்டத்தோடு என்ன ஏதுன்னு யோசிக்காம ஏறி ஜன்னலில் இடம் பிடித்தேன். அது தானே முக்கியம்.

அடுத்த அரை மணிநேரத்தில் கண்டக்டர் இந்த பஸ் ஷெட்டிற்கு போகுது எல்லோரும் இறங்குங்கன்னு சொன்னதும் தான் ஓஹோ இந்த டவுண் பஸ் மதுரைக்கு போகாது போலன்னு அடுத்த கும்மிருட்டில் நடுரோட்டில் இறங்கி கொண்டோம். அல்வா பத்திரம்னு மனசு சொல்லுச்சு.

நெல்லையிலிருந்து வரும் பஸ்களில் தான் சீட்டே இருக்காதுன்னு எனக்கு முன்பே தெரியுமே.சீட் இருந்தாக்கா கூப்பிடுங்கன்னு சொல்லிட்டு ரோட்டோரமாய் இருந்த ஒரு பாலத்தில் வசதியா உட்கார்ந்து சரி இப்பவாச்சும் அல்வா சாப்பிடலாமான்னு யோசித்து கொண்டிருக்கும் போதே அங்கே இருந்த ஒன்றிரண்டு மகளிரும் என் கூட உட்கார இடம் தேடி அந்த கும்மிருட்டிலும் வந்து விட்டார்கள். நைட் 11.30க்கு அல்வா தின்னா சிரிப்பாங்களேன்னு கம்முன்னு அம்மா தண்ணீ மட்டும் குடித்து விட்டு உட்கார்ந்து கொண்டேன். ஒரு பத்து பஸ்ஸாவது கண்டக்டர் நிறுத்தி இருப்பார். அவை எல்லாமே ஸ்டாண்டிங்கில் போயிட்டுருக்கு. ஃபுட்ஃபோர்ட்டில் மதுரை வரை போய் பழக்கமில்லைன்னு நான் எந்த பஸ்ஸிற்கும் அலையவில்லை.

திருப்பூர் பஸ் ஒன்று வந்தது.கண்டக்டர் தனியே வந்த  லேடிஸ் முதல்ல போயிருங்கன்னு அந்த பஸ்ஸில் கொஞ்ச பேரை கெஞ்சி ஏத்தி விட்டார். பஸ்ஸில் ஏறினாக்கா பஸ் ஃபுல்லா தூங்கி கொண்டிருந்தார்கள். நைசா கீழே தள்ளிவிட்டா கூட தெரியாத மாதிரி தூங்கிட்டுருந்த ஒரு ஆளை கண்டு பிடித்து அவருக்கு பக்கத்தில் இருந்த ஒரு கம்பியில் முட்டு கொடுத்து 12 AM -ல் ஸ்டாண்டிங்.தேவுடா, எங்காச்சும் சீட் கிடைக்காதான்னு யோசிச்சுகிட்டே நின்றேன். அல்வா பொட்டணத்தை திறந்தாக்க வாசத்தில் எல்லோரும் எழுந்திருச்சு பங்கு கேட்டாக்கா என்ன செய்றதுன்னு திறக்கலை.

ஒன்றரை மணிநேரம் ஸ்டாண்டிங்..சாத்தூர், விருதுநகர்,திருமங்கலம் கும்மிருட்டில் என்ன அழகுன்னு ரசிச்சுட்டே வந்தாக்கா..கோவில்பட்டியில் ஏறுனவுங்க எல்லோரும் திருமங்கலத்தில் இறங்கிகோங்கன்னு கண்டக்டர் சவுண்ட் விட்டார். பஸ் பை-பாஸில் போகுது மதுரைக்குள்ளே போகாதுன்னு அடுத்த சவுண்ட் விட்டார்.

அடபாவிகளான்னு நொந்து கொண்டே திருமங்கலத்தில் இறங்கி மதுரை வந்த அடுத்த பஸ்ஸில் ஏறினா சீட் கிடைச்சிருச்சு. நைட் 1.30 மணி.அடுத்த முக்கால் மணிநேரத்தில் மதுரை வந்தாச்சு. அங்கே அலங்காரமாய் நின்று இருந்த ஒரு மினி சென்னை பஸ்ஸை பார்த்ததும் உயிரே வந்துச்சு. ஏறு உட்கார்ந்தால் 700 ரூபாய் சென்னைக்கு.
லேடிசுக்கு முன்னாடி சீட் என்று கொடுக்கவும் அப்பாடா திரும்ப ஜன்னல் சீட்டுடான்னு உட்கார்ந்த அடுத்த நிமிஷம் அல்வாவையும், ஒடைஞ்ச டீவியில் ஓடி கொண்டிருந்த ஒரு அந்து போன சினிமா சத்ததையும் மறந்து தூங்க ஆரம்பித்தேன். 2 மணிக்கு யாருடா சினிமா பார்ப்பாங்க?

காலை 10 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தாக்கா கால் இரண்டும் வீங்கி போயிருந்தன. என் பசங்க இரண்டும் அம்மா உனக்கு வயசாகிடுச்சுன்னு ஒரே கிண்டல். அதெல்லாம் இல்லை ஸ்டாண்டிங்கில் வந்ததால் தான் இப்படி ஆகி போச்சுன்னு அதுங்க கூட கத்திட்டு  11AM-லிருந்து 6PM வரை அப்படி ஒரு தூக்கம். மாலை ஆறு மணிக்கு எழுந்து அல்வாவை சூடு செய்து ஜமாய்க்கலாம் என்று தேடினால் வாங்கி வந்திருந்த அல்வா என் பசங்க சாப்பிட மாட்டார்கள் என்று என் அம்மா தன் மகன் வீட்டிற்கு கொடுத்து விட்டார்களாம். போச்சுடா நாம அல்வா சாப்பிட நினைத்தது அவ்ளோ தப்பா???
இனிமே அல்வா வாங்க நெல்லை போவேன்??

Wednesday, January 18, 2012

நெல்லையின் சில மனிதர்கள்

நெல்லை டவுணில் எங்க வீட்டிற்கு பக்கத்து வைக்கப்பிள்ளை வழவில் என்றைக்கும் வழக்கம் போல அண்ணன் தம்பி சண்டை. இருவருக்கும் ஒரே அப்பா.அம்மாக்கள் வேறு.அவர்களின் அப்பா அப்போது மிக புகழ்பெற்ற வக்கீல்.அவர்களுக்கு 3 வீடுகள் அந்த வழவுக்குள் இருந்தது. எனவே வக்கீல் பிள்ளை வழவு என்று ஆனது.காலப்போக்கில் வைக்கப்பிள்ளை வழவு என்றாகியது.

இன்னொரு வீட்டில் ஒரு 10 வயது பையன் நாதன் தினம் புட்டார்த்தி அம்மன் கோயிலுக்கு போகாமல் இருக்க மாட்டான். அவன் நெற்றியில் தினம் துன்னூரு சும்மா பளிச்சுன்னு இருக்கும். சே, சின்ன வயதில் இப்படி ஒரு பக்தியா. நானும் என் அம்மா சொல்வது போல் காலேஜிற்கு போகும் போது ஷாட் ரூட்டில் போக வழியிருந்தும் புட்டார்த்தி அம்மன் கோயிலை ஒரு சுற்று சுற்றிட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு போவேன்.ஒரு நாள் காலையில் அப்படி போகும் போது அவனை பிடித்து வைத்து சிலர் கண்டித்துக் கொண்டு இருந்தனர்.அவன் பாக்கெட்டில் இருந்து காசுகளை எடுத்துக் கொண்டும் இருந்தனர். விஷயம் இது தான் சார்வாள் தினம் கோயிலுக்கு போனதே அங்கு பூசாரி தட்டில் இருக்கும் காசுக்களை எடுக்கதான். அவனை பிடித்து இழுத்துக் கொண்டு அவன் தாயிடம் போய் ஒப்படைக்கையில் அவன் அம்மா சொன்னது தான் டாப்.கறிவேப்பிலை கொழுந்தாட்டம் ஒன்னே ஒன்னு பெத்து வைச்சுருக்கேன்.என் மகனுக்கு புட்டார்த்தி கொடுக்குறா அது பொறுக்கலையா என்று அந்த கோயில் ஆட்களை பார்த்து கேட்டார்.வந்தவர்கள் அந்த சூப்பர் அம்மாவையும் சேர்ந்து அர்ச்சனை செய்துட்டு போனார்கள்.

இன்னொரு வீட்டில் மாரியப்பன் என்ற ஒரு 10 வயது வாண்டு.கரகாட்டக்காரன் படத்தை 10 தடவை பார்த்தது. சரியான செந்தில் கோட்டி. வாழைப்பழ ஜோக்கிற்காகவே அந்த படத்தினை அப்ப பாப்புலர் தியேட்டரில் 10 தடவை பார்த்தது.

கறிவேப்பிலை கொழுந்து நாதனும், வாழைப்பழ மாரியப்பனும் இப்ப எப்படி இருப்பாங்க? ஒருமுறை நெல்லை போகும் போது தேடி பார்க்கணும்.அப்படியே வைக்கப்பிள்ளை வழவில் சண்டை பற்றி விசாரிக்கணும்.