Friday, February 25, 2011

ஒரே டெர்ரரா இருக்கே..

ம்மா டெர்ரர் ஃபேமிலி ஒரு கடை ஆரம்பிச்சு இருக்காங்கம்மா. மாலையில் வீட்டிற்குள் வரும் போதே நகுல் சொல்லிக் கொண்டே வந்தான். டெர்ரர் ஃபேமிலி?

எங்கள் தெருவின் கார்னர் வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் குண்டாக(குண்டாக இருப்பவர்கள் எல்லாம் திட்டாதீங்கப்பு) இருப்பார்கள். ஒவ்வொருவரும் எப்போதும் ஒரு 15 அல்லது 20 பவுன் நகை போட்டிருப்பார்கள். தண்டி தண்டியாக செயின், ப்ரேஸ்லெட், மோதிரம் என்று ஆண்களும் நகை போட்டு இருப்பார்கள்.அந்த வீட்டு ஆண்கள் எல்லாம் மிக பெரிய மீசை வைத்து இருப்பார்கள். அவர்கள் குடும்பத்திற்கு நகுல் வைத்த பெயர் தான் டெர்ரர் ஃபேமிலி.அடுத்த நாள் இந்த முட்டைகள் டெர்ரர் கடையில் வாங்கி வந்தான்.


ஐயோ, இன்னைக்கு டெர்ரர் குழம்பா நான் வெளியில் சாப்பிட்டுக்றேம்மா. இது ரிஷி.டெர்ரர் குழம்பு-புளிக்குழம்பு. கலர் பார்க்க டெர்ரரா இருக்காம்.                                இப்படி இரண்டு டெர்ரர்களிடம் மாட்டிக் கொண்ட நான் கீழே நடுவில்.


10 வருடங்களுக்கு முன்னால் இந்த இரண்டு டெர்ரரும் சேர்ந்து ஒரு கருப்பு குட்டி நாயினை தெருவில் இருந்து தூக்கி வந்துச்சுங்க. டாக்டரிம் கூட்டி போய் ஊசி போடும் போது தான் அந்த நாய் பெண் என்றே தெரிந்தது. கார்டில் பெயர் எழுத நாய் பெயர் டாக்டர் கேட்டால், ஓ பெயரே இன்னும் முடிவு செய்யலையே.ஆனால், உடனே ஒரு பெயர் வைச்சுதுங்க. 
RINA..RI for Rishi..Na for Nagul.
ஆனால் இப்போ இப்ப மருவி ரீனாவாகி போச்சு. அதிலும் ரிஷி அதற்கு R.ரினா என்று வைக்கணும் என்று ஒரே வம்பு. அவன் பெயர் தான் இன்ஷியலாம். தல அப்ப ப்ரைமரி ஸ்கூலில் இருந்தார். 

Monday, February 21, 2011

உத்திரகோசமங்கை

புறப்படும் போதே நகுல் சொன்னான் இந்தியா மேப்பிலேயே இல்லாத ஊருக்கு அவ்வாவும், நீங்களும் கிளம்பிடுவீங்களே என்று. என் அம்மா பார்க்க ஆசைப்பட்ட அந்த கோயிலுக்கு போகணுமே என்று கிளம்பியாச்சு.

இந்த மாதம் 14-ல் மதுரையில் கார் எடுத்துக் கொண்டு காலை 7 மணிக்கு உத்திரகோசமங்கை கிளம்பினோம்.
மதுரை-திருபுவனம்-மானாமதுரை-பரமக்குடி-வழியாக இராமநாதபுரம் காலை 9.30க்கு போயாச்சு.அங்கு ஒரு ஆட்டோ ட்ரைவரிடம் உத்திரகோசை மங்கைக்கு எப்படி போகணும் என்று விசாரித்தால் அவர் ட்ரைவரிடம் ஏம்பா ராமநாதபுரம் வந்த? 20 கி.மீ திரும்பி போ விளக்கு ரோடு வழியே லெஃப்ட்டில் ரயில்வே லைன் க்ராஸ் செய்து 10 கி.மீ போகணும் என்று ரொம்ப அன்பா(!) வழி சொன்னார். சரியென்று வந்த வழியே திரும்பினோம். எனக்கு எதுக்கும் இன்னொரு ஆளிடம் கேட்கலாம் என்று தோன்றவே கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு ஆட்டோக்காரரிடம் கேட்க அவர் ராமநாதபுரத்திலிருந்து போகலாமே ஏன் திரும்பி போறீங்க இப்படியே கீழக்கரை ரோடுல ஒரு 8 கி.மீ போனீங்கன்னா திருப்புலானி வரும், அங்கிருந்து 8 கி.மீட்டரில் உத்திரகோசமங்கை வரும் என்று சொல்லவும் வண்டியினை திருப்பினோம்.


திருப்புலானியில் பெருமாளுக்கு ஹலோ சொல்லிட்டு உத்திரகோசமங்கை நோக்கி பயணம். நாங்கள் மட்டும் தான் போய் கொண்டிருந்தோம் அந்த ரோட்டில். ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மற்றும் யாரேனும் சைக்கிளில் போய் கொண்டு இருந்தார்கள். நடுவில் களரி என்று ஓர் ஊர் மட்டும் வந்தது. அதன் பிறகு உத்திரகோசமங்கை வந்தது. தனி தனி சன்னதிகள் மங்களநாதர்(லிங்கம்), மற்றும் மங்களேஷ்வரிக்கு. மரகத நடராஜருக்கு தனி சன்னதி. சிதம்பர கோயிலுக்கு முன்பே தோன்றியது. எனவே, ஆதி சிதம்பரம் என்கின்றனர். 

அம்மனுக்கு பிரணவம்(வேதம்) ரகசியமாய் உபதேசித்த இடமாம்.உத்திரம் எனில் உபதேசம்,ஓசம் எனில் ரகசியம்.மங்கைக்கு ரகசியமாய் உபதேசித்த இடமானதால் உத்திரகோசமங்கை எனப்பெயராம். ஈசன் உமையவளுக்கு மட்டும் ஆடி காட்டியதும் இங்கு தான். மாணிக்கவாசகர் இந்த ஸ்தலம் பற்றி 9 பாடல்கள் பாடி இருக்கிறார்.
.
                                          வெளி கோபுரம்


 பெரிய தெப்பகுளம். வருடம் முழுவதும் வற்றாத தண்ணீர் சிறிது உப்பாக இருந்தது.          கோயில் கோபுரங்கள் இப்படி பளிச்சென்று இருந்தன.இது உள்ளே உள்ள கோபுரம்.                                                             போனவருடம் கும்பாஷேகம் நடந்துள்ளது. மார்கழி திருவாதிரை நாளில் இங்கு இருக்கும் மரகத நடராஜர் ஆருத்ர தரிசனம் மிகவும் ஃபேமஸ். அச்சமயம் இங்கு லட்சகணக்கில் மக்கள் வருவார்களாம். நாங்கள் போன போது நாங்கள் மட்டுமே.


வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டு இருக்கும் நடராஜருக்கு மார்கழி திருவாதிரை அன்று மட்டும் சந்தனம் கழையப்பட்டு அபிஷேகம் நடக்கும். ஐந்தரை அடி உயரமுள்ள மரகத நடராஜர் சிரித்த முகமாய் இருந்தார்.எப்பவும் சந்தனம் பூசப்பட்டு இருந்ததால் தான் ஆங்கிலேயர்கள் அது மரகதம் என்று தெரியாமல் தங்கள் ஊருக்கு கடத்தாமல் இருந்தார்கள் போலும். இல்லையெனில் கோஹினூர் வைரம் போல் இப்போது லண்டன் மியூசியத்திற்கு இந்த சிலையும் பறந்து இருக்கும். உலகத்திலேயே பெரிய மரகத கல் இதுவாக தான் இருக்கும்.


இராவணன் மனைவி மண்டோதரி இங்கு வந்து வழிப்பட்டதாய் சொல்கிறார்கள்.3000 ஆண்டுகள் பழமையான இலந்த மரம் இங்கு .மரத்தின் அடி இப்படி உள்ளது. சகஸ்ரலிங்கத்திற்கு ஒரு சன்னதி.
                                           இலந்த மரம்ஒரு மணிநேரம் அங்கு இருந்து விட்டு அங்கிருந்து இராமநாதபுரம் வராமல் 10 கி.மிட்டரில் இருக்கும் சத்திரக்குடி என்ற ஊரின் வழியே பரமகுடி வந்து மதுரை வந்தடைந்தோம்.வரும் வழியில் உப்பளங்கள் நிறைய இருந்தன. 


கோயில் வெளியில் இருந்த ஓர் போர்டு.இதோ கோயிலுக்கு மேப் இருக்குடா என்று நக்கல் செய்யும் நகுலுக்காக எடுத்தேன் இந்த படத்தை.  


Wednesday, February 16, 2011

நான் சாதித்தது(சும்மா ஒரு விளம்பரம் தான்)

விக்னேஷ் 10 ஆவது வகுப்பு 2009-ல் அவனின் ஊரில் ஒரு லூஸ் நடத்தும் ஸ்கூலில் படித்து வந்தான். 2008 டிசம்பர் மாதம் விக்னேஷுடன் சேர்த்து 20 மாணவர்களை டி.சி வாங்கி கொண்டு போகும் படி சொல்லியது பள்ளி நிர்வாகம். அனைவரும் one digit மார்க் எடுக்கும் கண்மணிகள். எனக்கு ஏனோ இந்த மாணவர்களை தான் மிகவும் பிடிக்கும்.

9 ஆவது படிக்கும் போது ஃபெயில் ஆக்கினால் அடுத்த வருட ஃபீஸ் வசூலிக்க முடியாது என்பதால் பெற்றோரிடம் என் மகனின் டிசியினை நான் விருப்பபட்டு வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த மாணவர்கள் 9 ஆவது படிக்கும் போதே கையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டார்கள். 10 ஆவது ஃபீஸினை மொத்தமாக வாங்கி கொண்டு பொது பரிட்சைக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் டிசி வாங்க சொல்லி வற்புறுத்தினார்கள். 2009 டிசம்பரில் விக்னேஷ் எனக்கு ஃபோன் செய்து என்னை ஸ்கூலிற்கு இனிமேல் வர வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கூறவும் அடித்து பதறி நான் ஸ்கூலிற்கு சென்று அந்த லூஸை சந்தித்தேன். கலெக்டரை கூட உடனே சந்திக்க முடியும் போல. அந்த லூசினை நான் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பிறகு சந்தித்தேன்.

விக்னேஷின் படிக்காத அம்மாவிடம் வாங்கி வைத்து இருந்த கடிதத்தினை என்னிடம் காண்பித்து டிசி வாங்கி கொண்டு செல்லுங்கள், அவனின் தாய் ஒத்துக் கொண்டதற்கு பிறகு நீங்கள் யார் என்று என்னை கேட்டார்கள். நான் தான் அவனுக்கு ஃபீஸ் கட்டுகிறேன் அந்த உரிமையில் கேட்கிறேன். அவனை இந்த மூன்று மாதத்தில் நான் படிக்க வைக்கிறேன்.ஸ்கூலில் வைத்து கொள்ளுங்கள் என்று கேட்டதற்கு முடியவே முடியாது என்று மறுக்கவும், தனி தேர்வர்கள் அப்ளை செய்வதற்கு 10 நாட்களே இருக்கும் நேரத்தில் என் குடும்பத்தினை விட்டு வேறு ஊரில் போய் இருந்து அந்த லூஸ்களிடம் போராட முடியாது என்ற நிலையில் வேறு வழியில்லாமல் டிசி வாங்கிக் கொண்டு அவனை 300 மார்க் வாங்க வைத்து காண்பிக்கிறேன் (என்ன என் தன்னம்பிக்கை) என்று சவால் விட்டு என் வீட்டிற்கு சென்னைக்கு கூட்டி வந்தேன். ஜனவரி 10-ல் என்னுடம் மவுனமாக வந்த அவனுக்கு அந்த வருட ஏப்ரல் 5-ல் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு.

சென்னை வந்த உடன் தமிழக அரசியல், ஜூனியர் விகடன் புத்தக அலுவலகத்திற்கு அந்த ஸ்கூல் பற்றி ஃபோனில் கூறினேன். அவர்களும் அந்த ஊர் நிருபர்கள் மூலமாய் ஒரு பக்கத்திற்கு அந்த ஸ்கூல் பற்றி அடுத்த மாதமே தங்கள் புத்தகத்தில் எழுதினார்கள்.எழுதி ஒரு வெங்காயமும் இல்லை. எதோ எனக்கு ஒரு திருப்தி.

அவனை திட்டாமல், கடிந்துக் கொள்ளாமல், ஒரேடியாய் படி படியென்று தொணத்தாமல், அவமானத்தால் பேசவே கூச்சப்பட்டு கொண்டிருந்த அவனை சிரிக்க வைத்து, நடு நடுவில் டிவி, சினிமா என பார்க்க வைத்து, கடைசி 20 நாட்கள் அவனின் ஊருக்கு கூடவே சென்று, எக்சாம் சமயம் கூடவே இருந்து, அவனை கூலாய் எக்சாம் எழுத வைத்து, அப்பாடி 248 மார்க் வாங்க வைத்தேன்.

இத்தனைக்கும் நான் பத்தாம் வகுப்பிற்கு ஆசிரியாராய் பணியாற்றியது இல்லை.எனக்கு அந்த சிலபஸ் புதிது. ஆனால் மிக எளிமையான அந்த ஸ்டெட் போர்ட் சிலபஸினை கூட பாஸ் செய்ய வைக்க முடியாமல் அந்த லூஸ்கள் எதற்கு ஸ்கூல் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.ஜெயில் வைத்து நடத்த தகுந்த நபர்கள்.அவன் ஸ்கூலில் இருந்த போது தினம் கீழே தான் உட்கார வேண்டுமாம்.பெரிய பிரம்பால் அடி அடிக்கடி வாங்கி இருக்கிறான். அவனே ஸ்கூலிற்கு வர மாட்டேன் என்று சொல்ல மாட்டானா என்னும் விதமாய் தினம் திட்டி இருக்கிறார்கள். 6 அடி உயரம் உள்ளவன் அவன். நான் பார்க்கும் போது அவமானத்தால் யாரிடமும் பேசுவதையே நிறுத்தி இருந்தான்.என்னிடம் சொல்ல வெட்க பட்டு கொண்டு அனைத்தையும் பொறுத்து உள்ளான்.நீ கட்டாயம் பாசாவே விக்கி என்று தினம் மந்திரம் ஓதி அவனை பாசாக வைத்தேன்.

ஊரில் படிக்க சென்ற கடைசி 20 நாட்கள் கூட டிசி வாங்கிய மற்ற மாணவர்களையும் அழைத்து வாடா படிக்கலாம் ஜஸ்ட் பாசாக்கலாம் என்றால் அந்த பசங்க வெட்க பட்டு கொண்டு படிக்க வரவில்லை.

என்னை மாதிரி திறமை(நிஜமா!!) உள்ள ஆசிரியர்களுக்கு இந்த அரசு ஆசிரியர் வேலை கொடுக்காமல் 20 வருடங்களாய் காக்க வைத்துள்ளது.தனியார் பள்ளிகளில் கொத்தடிமை வேலை பார்க்க பிடிக்காமல் என் திறமையினை வீணடித்து வருகிறேன்.


விக்னேஷின் அப்பா 12 வருடங்கள் முன்பு இறந்து விட்டார். அவர் என் கணவரின் தம்பி ஆவார். விக்னேஷ் இப்போது அரியர்ஸ் வைத்து இரண்டாவது வருடம் பாலிடெக்னிக் படித்து வருகிறான். ஒழுங்காய் டியூஷன் கிடைக்காமல் மேத்சில் அரியர்ஸ் வைத்துள்ளான்.அவன் அம்மாவிற்காக, கூட பிறந்த இரண்டு சகோதரிகளுக்காக எப்படியும் படிக்க வேண்டும் என்று வராத படிப்புடன் போராடிக் கொண்டு இருக்கிறான்.நிச்சயம் படிப்பான்,வேலைக்கு போவான் என்ற நம்பிக்கையுடன் நாங்களும் இருக்கிறோம். கஷ்டப்படுபவர்கள் எப்பவும் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட கடவுள் விடமாட்டார் என்ற நம்பிக்கையுடன். ஆனால் இந்த காலம் பணப்பேய்களான அந்த லூஸ்களுக்கான காலமாய் இருக்கிறது. அந்த ஸ்கூலில் படித்த காரணத்தால் சரளமாய் யாரிடமும் உரையாட முடியாமல் பயந்து போய் தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கிறான்.ஆனாலும், நம்பிக்கையுடன் இருக்கிறோம்Friday, February 04, 2011

ரிசல்ட் வந்துடுச்சு

29,ஜனவரி சனி இரவு

நான்: டே, நாளைக்கு எண்ட்ரன்ஸ் இருக்கு, மறந்துறாத.

ரிஷி: எத்தனை மணிக்கும்மா.

நான்: காலையில ஒன்பதுக்குடா.

ரிஷி: சரி, சரி சண்டே வேற சரி சீக்கிரம்ம்மா எழுப்புங்கம்மா.கூட்டிட்டு போறேன்.

சண்டே காலை 8 AM

நான்: பத்திரம்டா.பாத்து வண்டி ஓட்டுடா.இந்தா இந்தா ஒரு டம்ளர் பாலாச்சும் குடிச்சுட்டு போங்கடா.

ரிஷி: சரிம்மா.

சண்டே காலை 11 AM

நான்: எண்ட்ரன்ஸ் எக்ஸாம் பற்றி எதுவும் கேட்கக் கூடாதுன்னு மனசுக்குள் நினைத்துக் கொண்டே என்னடா ரொம்ப கூட்டமா எக்ஸாமுக்கு.

ரிஷி: ம்.

நான்: எவ்ளோ பேருடா வந்தாங்க.

ரிஷி: 800 இல்லை 1000 பேர்மா.

நான்: ஓ, கிடைச்சுடும்மா.

ரிஷி: ம்.

நான்: ரிசல்ட் இன்னைக்கேவாடா.

ரிஷி: ம்.

நான்: நெட்லே தானே பார்க்கணும்.

ரிஷி: ம்.

மாலை 6 மணி.நெட் யூஸ் செய்துக் கொண்டிருந்த ரிஷியிடம்.

நான்: டேய் நெட்ல அந்த ரிசல்ட் வரும் சைட்டை ஓபன் செய்தாச்சாடா..1000 பேரும் ஓப்பன் செய்து ஹாங்க் ஆக போகுது.இப்பவே ஓபன் செய்திடு.

ரிஷி: ஹா.ஹா.ஹா.ஹா(சிரிக்கிறாராம்)..ம்.

நான்: வந்துருச்சா

ரிஷி: இல்லைம்மா.

நான்: அய்யோ பெயர் இல்லையா.

ரிஷி: ம்மா (நற.நற) இன்னும் ரிசல்ட் வரலை.

அதற்குள் ஒரு ஃபோன் எனக்கு என் தங்கையிடமிருந்து. இல்லை இன்னும் ரிசல்ட் வரலை ரிஷி பார்த்துட்டு இருக்கான் வந்ததும் சொல்றேன்.

இன்னொரு ஃபோன் கொடைக்கானல் போயிருந்த நகுலிடமிருந்து.இல்லைடா ரிசல்ட் வந்ததும் சொல்றேண்டா.

இன்னொரு ஃபோன் சித்தி பெண்ணிடமிருந்து இல்லைப்பா இன்னும் வரலை.

மணி: மாலை 7 ஆச்சு.

சரி அம்மு நான் கிளம்புறேன். ரிசல்ட் வந்தா பார்த்துட்டு ஃபோனில் சொல்லு என்று என் தம்பி தன் மகன்களை கூட்டிக் கொண்டு அவன் வீட்டிற்கு கிளம்பினான்.

மணி: 7.30

ரிஷி:  ரிசல்ட் வந்தாச்சும்மா. விஷால் பெயர் லிஸ்ட்டில் இருக்கு.பிப்ரவரி 17-ல் ஃப்ர்ஸ்ட் டெர்ம் ஃபீஸ் கட்டணுமாம்.

நான்: ஓ, சரி, சரி. கொள்ளைடா ஜூன் ஸ்கூலுக்கு இப்பவே ஃபீஸாடா. கலிகாலம்டா.ஒண்ணாப்புக்கு இப்படி எண்ட்ரன்ஸ் எக்சாம் வைச்சு.அதுலேயும் நாமும் சேர்க்கிறோமே.பேசாமா ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கலாம்டா.

ரிஷி: பாவம்ம்மா விஷால். ஆரம்பிச்சுடுச்சு ரோதணை.இன்னும் 12 வருடத்திற்கு ஒரே ஓட்டம் தான் அவனுக்கு.

ஃபோன் செய்து தங்கைகள்,மகனிடம் விஷால் ”ஒண்ணாப்பு” படிக்க செலக்ட் ஆனதை சொன்னேன்.

விஷால் என் தம்பி மகன் காலை 9 மணியிலிருந்து 10 வரை நடந்த ஒண்ணாப்பு எண்ட்ரன்ஸ் எக்ஸாமிற்கு என் மகன் ரிஷியுடன் போய் வந்தான். மற்ற பசங்க 10, 10.15க்கு எல்லாம் எக்ஸாம் முடித்து வெளியில் வர நம்ம தல 10.30 வரை எக்ஸாம் எழுதினாராம்.(ஒரு வேளை அவுட் ஆப் சிலபசில் கேள்வி வந்துச்சு போல.அதான் தல யோசிச்சு எழுதி இருக்கு) வந்து சொல்லும் போது ரிஷிக்கு ஒரே சிரிப்பு. என்னத்த தல எழுதுச்சோ தெரியலை.Maths 86, English - 88 எடுத்துள்ளார்.


விஷால் ஸ்கூலில் இருந்து வரும் போது மம்மி ஸ்கூலில், க்ரீம் பிஸ்கெட்டும்,பாலும் தந்தாங்கன்னு சந்தோஷமாய் சொன்னான்.அப்ளிகேஷன் ஆயிரம் ரூபாய்டா (என்னுடைய மைண்ட் வாய்ஸ் பிரியாணியே தரலாம்.)

கூலாய் விஷால்

இது எண்ட்ரன்ஸ் என்றோ, புது ஸ்கூலிற்கு போகப்போவது பற்றியோ அதுக்கு எதுவும் தெரியலை. ஜாலியா ரிஷிகூட வண்டியில் போக பிடித்து போய் வந்தான். நாங்களும் அன்றைய முழுநாள் சிரித்துக் கொண்டே இருந்தோம். அவனின் அம்மா மட்டும் கொஞ்சம் டென்ஷன் ஆஃப் இண்டியாவில். ஆனால்,பிள்ளைகளை இப்படி கஷ்டப்படுத்துகிறோமே என்று மனம் கஷ்ட பட்டது.அப்பப்ப நாங்கள் படித்த லட்சணங்களை பட்டியலிட்டு சிரித்துக் கொண்டிருந்தோம்.

Thursday, February 03, 2011

எகிப்தில் என்ன நடக்கிறது?

புரட்சியாளர்கள் யார்?

ஏப்ரல் 6 யூத் மூவ்மெண்ட் என்ற அமைப்பினை சேர்ந்தவர்கள் முஸ்லீம் சகோதரத்துவ கட்சியுடன் சேர்ந்து புரட்சியினை ஜனவரி 25, 2011-ல் ஆரம்பித்தனர். இந்த அமைப்பு எல் மஹாரா-எல் குப்ரா என்ற மிக பெரிய தொழில் நகரில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 2008, ஏப்ரல் 6-ல் ஸ்ட்ரைக் செய்வதற்காக ஏற்படுத்த பட்டது.

புரட்சியாளர்களை பற்றிய ஒரு முன்னுரை:

அகம்மது மஹர், அகம்மது சலா என்ற இருவர் ஃபேஸ் புக்கில் இந்த யூத் மூவ்மெண்டினை ஆரம்பித்தனர். ஏப்ரல் 6 அன்று கருப்பு ஆடை அணிந்து வீட்டிலேயே இருக்கும் படி பணிநிறுத்தம் செய்பவர்களிடம் ப்ளாக், facebook, ட்விட்டர், ஃப்லிக்கர் போன்ற சமுதாய வலைதளங்களில் அறிவித்துக் கொண்டனர்.
இதற்கு முன் அரசியலில் ஈடுபடாத சுமார் 70,000 படித்த மக்கள் இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.பேச்சு சுதந்திரம், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி பற்றி எழுச்சி மிகு கட்டுரையினை எழுதினர்.  செர்பியாவில் 2000த்தில் நடந்த புரட்சியினை தங்களுக்கு முன்னுதாரணமாய் கொண்டனர்.  2008-ல் அஹம்மது மஹர் கைது செய்ய பட்டார். சமுதாய வலைதளங்கள் தடை செய்யப் பட்டன. ப்ளாக்கர்களும்,கவிஞர்களும், பத்திரிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஏப்ரல் -6 அமைப்பினரே இப்போது புரட்சியினை எகிப்தில் ஏற்படுத்தி உள்ளனர். எகிப்தில் ஏற்பட்டுள்ள இந்த புரட்சிக்கு லோட்டஸ் புரட்சி என்று பெயர்.டுனிஷியாவில் நடந்த ஜாஸ்மின் புரட்சி தான் இந்த லோட்டஸ் புரட்சிக்கு முன் உதாரணம்.

காலித் சைத் (28) என்ற இளைஞன் போலீஸ் அத்து மீறலை, ஊழலை இணையத்தில் வெளியிட்டதால் ஒரு மாதம் முன்பு அவன் போலீசாரால் கொல்ல பட்டான்.அவன் போதை மருந்து சாப்பிட்டு இறந்தான் என்று போலீஸ் சொல்வதை மக்கள் நம்பவில்லை. காலித்தின் மரணத்தினை எகிப்து மக்கள் மன்னிக்க, மறக்க தயாராக இல்லை. காலித் சைத்தின் இணையம்

தற்சமயம் நீதிபதிகளும், இராணுவத்தினரும் இப்போராட்டத்தில் பங்கு பெற்று வருகின்றனர். இராணுவத்தினர் இது வரை எந்த நாட்டிலும் புரட்சியாளர்களுடன் கைகோர்த்தது இல்லை. பொது மக்களும் புரட்சியில் பங்கேற்று வருகின்றனர்.

புரட்சிக்கு காரணம் என்ன?

எந்த நேரத்திலும் யாரையும் விசாரணையின்றி கைது செய்யும் போலீசின் அடக்கு முறை, குறைந்த சம்பளம், ஊழல், வேலையின்மை இவைகளை எதிர்த்தும்,பொதுத் தேர்தலை நடத்தக் கோரியும்,பேச்சு சுதந்திரம் கேட்டும் இந்த விலைவாசி ஏற்றத்தினை எதிர்த்தும் புரட்சி வெடித்து உள்ளது. எமர்ஜென்சி சட்டத்தினை எதிர்த்தும் இந்த புரட்சி. தலைநகர் கெய்ரோவிலும், சூயஸ்,அலெக்ஸாண்டிரியா என்ற நகரத்திலும் புரட்சி ஏற்பட்டுள்ளது.

முக்கியமாய் அதிபர் ஹோஸினி முபாரக்கினை பதவி விலக கோரியே இந்த புரட்சி ஏற்பட்டுள்ளது.


யாரை எதிர்த்து புரட்சி? இதோ இவரை தான்.முகமது ஹோஸினி சையது முபாரக்(82) எகிப்தில் 1981-லிருந்து 2011 வரை 30 வருடங்கள் ஜனாதிபதியாக இருக்கிறார்.அதற்கு முன்னால் எகிப்தின் ஏர்ஃபோர்சில் பணியாற்றியவர். ஜனாதிபதியான இவர் 6 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியவர். நம் இந்தியா போல் அல்லாது இங்கு ஜனாதிபதிக்கு தான் அதிக பவர்.பாராளுமன்ற ஜனநாயகம் போல் இந்த அரசு இல்லை. தான் ஆட்சிக்கு வந்ததும் 1958-ன் எமர்ஜென்சி சட்டத்தினை தவிர்க்காமல் அதை இன்னும் இறுக்கமாக்கினார். இவருடைய இளைய மகன் கேமல் முபாரக்(47)லண்டனுக்கு பறந்து விட்டார் என்று செய்தி.அப்பா மண்டையை போட்டால் அடுத்த ஜனாதிபதி ஆகலாம் என்ற கனவுடன் இருந்தவர். மூத்த மகன் ஆலா முபாரக் அரசியலில் விருப்பம் இல்லாதவர். 

புரட்சியின் விளைவுகள்:

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் அதனை அங்குள்ள இராணுவத்தினர் நடை முறை படுத்தவில்லை. 
இந்த புரட்சியில் ஜனவரி 30 வரை 150 பேர் இறந்ததும், 1500 மனிதர்கள் காயமடைந்தும், 750 போலீசார் காயமடைந்தும் உள்ளனர்.

ஹாசினி முபாரக், உளவு துறை தலைவர் ஓமர் சுலைமான்(74 வயது) என்பவரை ஜனவரி 29-ல் துணை ஜனாதிபதியாக்கி உள்ளார்.இந்த தாத்தா இதற்கு முன்னால் இலாகா இல்லாத மந்திரியாகவும், உளவுத்துறை டைரக்டராய் இருந்தவர்.  பவர்ஃபுல் ஸ்பை என்று பெயர் வாங்கியவர்.

ஹோசினி முபாரக், அஹம்மது சாபிக்(69) என்பவரை அரசு அமைக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். சஃபிக் பிரதம மந்திரியாக ஜனவரி 31-ல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் எகிப்தின் ஏர்ஃபோர்ஸ் கமாண்டராக இருந்தவர். பிறகு ஏவியேஷன் மந்திரியாக இருந்தவர்.எகிப்தின் ஏர்போர்ட்டுகளை மிகவும் மாடர்னாக மாற்றியவர்.

இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை எகிப்தில் இருந்து திரும்பி அழைத்துக் கொண்டு உள்ளன. யாரும் எகிப்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டன.

எகிப்து அரசு இணையத்தினையும், செல்ஃபோன் பயன்பாட்டினையும் சரியாக பயன்படுத்த முடியாத படி முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஆனால்
Hacktivism மூலமாக எகிப்தியர்கள் இவை இரண்டினையும் உபயோகப்படுத்த முடிகிறது. 

முபாரக் அடுத்த செப்டம்பர்,2011 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும், அரசியலமைப்பில் சில மாறுதல்கள் செய்ய இருப்பதாகவும் பிப்ரவரி 1-ல் அறிவித்து உள்ளார். இந்த எகிப்தின் மண்ணில் தான் தான் சாக விரும்புவதாகவும்,இந்த நாட்டை விட்டு செல்ல மாட்டேன் என்றும் அறிவித்து உள்ளார். ஆனால், புரட்சியாளர்கள் உடனே முபாரக் பதவி விலக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பிப்ரவரி 2 மதியம் முபாரக்கின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதில் 13 பேர் இறந்தும், 600 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர். 9 நாட்களாக புரட்சி நடந்து வருகிறது. பிப்ரவரி 2-ல் புது திருப்பமாக முபாரக்கின் ஆதரவாளர்கள் 20 ஆயிரம் பேர் களத்தில்.

லிபியா,அல்ஜீரியா,ஏமன் முதலிய நாடுகளில் புரட்சி வெடிக்கலாம் என தெரிகிறது. பெட்ரோலின் விலை இன்னும் ஏறுவதற்கு சாத்தியங்கள் உள்ளன.தினம் 2.4 மில்லியன் பேரல் ஆயில் எகிப்தில் இருக்கும் சூயஸ் கால்வாய் வழியாக வருவதால் புரட்சி நீடித்தால் இன்னும் விலையேற்றம் ஏற்படும்.

வெள்ளிக் கிழமைக்குள் பிப்ரவரி 4,அதிபர் பதவி விலக வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள். நேற்று ஏற்பட்ட மோதல் காரணமாக ராணுவம் போராட்டக்காரர்களை போராட்டத்தினை கைவிட கோரி அழைப்பு விடுத்துள்ளது. 

அடுத்த தலைவர் யார்?

முகம்மது முஸ்தஃபா எல்பராடி(68):

ஜனவரி 27-ல் தஹ்ரிர் ஸ்கொயரில் நடந்த புரட்சியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றி உள்ளார். பிப்ரவரி 1-ல் ஒரு மில்லியன் மக்கள் இந்த ஸ்கொயரிலும், அடுத்து உள்ள தெருக்களிலும் கூடி உள்ளனர். அடுத்து அமைய போகும் புதிய அரசிற்கு மக்கள் விரும்பினால் தலைமை தாங்குவதாய் அறிவித்து உள்ளார்.முஸ்தஃபா எல்பராடி ஒரு வக்கீல் ஆவார். இவர் 2005 அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.அனாதை இல்லங்களுக்கு தான் பெற்ற தொகையினை கொடுத்து விட்டார்.

ஐக்கிய நாட்டு சபையின் இண்டர்நேஷனல் அட்டாமிக் எனர்ஜி ஏஜன்சியின்(IAEA) டைரக்டராய் பணி புரிந்தவர்.மூன்று முறை இந்த பதவியினை வகித்தார். (1997-2009).உலக அளவில் நோபல் பரிசினை தவிர உலக அளவில் 18 பரிசுகளை வாங்கி உள்ளார்.இவரின் மகள் லண்டனில் வக்கீலாகவும், மகன் கெய்ரோவில் ஐடி மேனஜராகவும் இருக்கிறார்கள். வியன்னாவில் வசித்து வந்தார். பெரும்பான்மையான வருடங்கள் இவர் கெய்ரோவில் இருக்கவில்லை என்பது இவரது பலகீனம்.நேஷனல் அசோஷியேசன் ஃபார் சேன்ஞ் என்ற அமைப்பினை ஏற்படுத்தி உள்ளனர்.தடை செய்யப்பட்ட இயக்கமான முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி, அராப் லீக் இயக்கிதனரினை இவர் சந்தித்து இருக்கலாம் என்று செய்தி.இவர் ஜனவரி 30-லிருந்து இப்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

அமெரிக்கா ஒரு பக்கம் முபாரக்கினை ஆதரித்துக் கொண்டே புரட்சியாளர்களை ஊக்குவிப்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் ஆதாரங்களை வெளியிட்டு உள்ளது.செப்டம்பர் தேர்தலுக்கு முன்பாகவே முபாரக்கினை பதவி விலகிட செய்யுமாறு அமெரிக்கா நினைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டு உள்ளது.எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகம் புரட்சியாளர்களுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்பு வைத்துள்ளதாக கூறுகிறது.
 20 முதல் 35 வயதுடைய ஏறத்தாழ 1,60,000 எகிப்து ப்ளாகர்கள் அரேபிய மற்றும் ஆங்கிலத்தில் முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக எழுதி வந்துள்ளனர்.

இந்தியாவும், எகிப்தும்:  நாசர்-நேரு காலத்தில் இருந்தே இரு நாட்களும் நட்புறவுடன் பொருளாதார மேம்பாட்டுக்காக உடன்படிக்கை செய்த வண்ணமே உள்ளன. 2008 நவம்பரில் ஹோஸ்னி முபாரக் இந்தியாவிற்கு வருகை தந்து மன்மோகன் சிங்கினை சந்தித்து பேசினார். அணிசேரா நாடுகளின் அமைப்பில் இரு நாடுகளும் உறுப்பினர்கள். எகிப்தில் நடந்த அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் கலந்துக் கொள்ள 2009-ல் மன்மோகன் சிங் எகிப்திற்கு சென்றார்.எகிப்து இந்தியாவிற்கு 3.30 மணிநேரம் பின்னால் இருக்கிறது. சர்க்கரை,பருத்தி ஆடைகள், பருத்தி நூல்களை,சணல்,பிளாஸ்டிக், ரப்பர், கெமிக்கல்ஸ் முதலியன இந்தியா எகிப்திற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் ஓபராய் ஹோட்டல் கெய்ரோவில் உள்ளது.ஏசியன் பெயிண்ட்ஸ்,ரான்பாக்ஸி,டாட்டா மோட்டார்ஸ், அசோக் லேய்லாண்ட்,யூனிட் ட்ரஸ்ட் ஆப் இந்தியா,டாபர் இந்தியா போன்ற கம்பெனிகள் எகிப்தில் உள்ளன.

நம் பதிவர் துபாய் ராஜாவிடம், அவர் எகிப்தில் இன்னும் இருந்தால் மற்ற செய்திகளை எதிர்ப்பார்க்கலாம்.

Tuesday, February 01, 2011

அம்மா

எப்பவும் ஏன் உன் கூடவே அம்மா இருக்காங்க உன் உடன் பிறந்தவர்களுக்கும் அவர்கள் அம்மா தானே? ஏன் அவர்கள் வீட்டிற்கு போனால் உடனே ஓரிரு நாட்களில் திரும்ப வந்து விடுகிறார்கள் என்று சமயங்களில் யாரேனும் என்னிடம் கேட்கிறார்கள்.கொஞ்சம் யோசித்ததில் அங்கெல்லாம் போனால் ஒரு விருந்தாளி போல் தான் அவர்களால் இருக்க முடிகிறது என்று புரிந்தது.

காலையில் சீக்கிரம் எழுந்து பாத்ரூம் போகும் போதே ஹீட்டர் போட்டு விட்டு வருவாங்க. பிறகு பால் காய்ச்சி அதை அப்படியே கொண்டு போய் சாமி ரூமில் வைத்து கும்பிட்டு வருவதில் ஆரம்பிக்கும் அம்மாவின் ஒரு நாள்.

குளித்து விட்டு வந்து சூடாக ஒரு காஃபி குடிச்சுட்டு அப்படியே தோட்டத்தில் துளசி மாடத்தில் பூ போட்டு, சுத்து சுத்திட்டு சாமி அறைக்குள் நுழைந்தால் ஒரு மணிநேரம் பொழுது போகும்.

வந்து காலை டிபன் சாப்பிட்டு விட்டு என் பசங்க, தன் தம்பியான என் கணவரிடம் பேசி கொண்டே தமிழ் பேப்பர் படித்து கொண்டு இருப்பார்கள்.

அப்புறம் கிச்சன் வந்து நான் நறுக்கி வைத்து இருக்கும் காய்கறிகளை செய்வார்கள் அல்லது ரசம் புளிப்பு கொஞ்சம் தூக்கலாய் வைப்பார்கள்.

காய்கறி சூப் செய்து ஒரு க்ளாஸ் குடித்து விட்டு என் பசங்களையும் குடிக்க செய்வார்கள்.

பின் காலை 11 மணிவரை ஏதேனும் புத்தகம் ஆன்மீகம், ஆலயம், பாலஜோதிடம், துக்ளக் என்று படிப்பார்கள். டாணென்று 11 மணிக்கு சன் சேனலில் சீரியல் ஆரம்பம்.

12.30 க்கு மதியம் காக்காவும், அம்மாவும் சாப்பிடுவார்கள்.சாப்பிட்டு விட்டு ஒரு மணிநேரம் படுக்கையில் படுத்துக் கொண்டே புத்தகம் வாசித்தல். பிறகு 2.30 மணிக்கு டி.வியில் திருப்பதி சேனல் பார்த்துக் கொண்டே,எதாவது எம்பிராய்டரி,தையல் வேலை, டைரியில் சாமி ஸ்தோத்திரம் எழுதுதல்.நடு நடுவே தன் சின்ன வயது நிகழ்வுகளை, தான் பட்ட கஷ்டங்களை, தன் அம்மாவின் கதையினை என்னிடம் கூறுதல். நிறைய முறை இது ரிப்பீட்டு கதையாக இருக்கும்.மதியம் வீட்டில் இருக்கும் எதாவது ஒரு பொருளை கணக்கு வைத்து வெயிலில் காய வைத்து எடுத்து வைப்பார்கள். தூள் வகைகள்,காய்ந்த பூக்கள்,தலையணை, பெட்ஷீட் உட்பட எதாவது வெயிலில் தினம் ஒன்றாய் காயும்.

மாலை 5 மணிக்கு ஒரு டீ குடித்து விட்டு கோயில். நடந்த மாதிரியும் இருக்கும்,சாமி கும்பிட்ட மாதிரியும் இருக்கும்.6 மணிக்கு வீட்டிற்குள் வருவார்கள்.திரும்ப சாமி ரூமில் கொஞ்ச நேரம்.7.30க்குள் ராத்திரி டிபன் முடித்து விடுவார்கள்.9 மணிவரை டி.வி இல்லையெனில் புத்தகம்.கீரை எதுவும் இருந்தால் அதை சுத்தம் செய்து வைத்து விடுவார்கள்.அவர்களின் காய்ந்த துணிகளை மடித்து வைப்பார்கள்.நடு நடுவில் மற்ற மகன், மகள்களுடன் ஃபோனில் பேச்சு.

டாண்ணு 9 மணிக்கு தூக்கம்.இது தான் அம்மாவின் ஒரு நாள்.

யாருக்கும் ஒரு தொந்தரவு இல்லாமல் தன் வேலையினை தானே முடித்து கொள்ளுதல்.வாரம் இரண்டு முறை பூண்டு,இஞ்சி தட்டிப்போட்டு காய்ச்சிய நல்ல எண்ணெய் குளியல், சீயக்காய் பொடியினை சோற்று கஞ்சியுடன் சேர்த்து தலைக்கு தேய்ப்பார்கள்.அரைத்த வெந்தயம், முட்டை, மருதாணி என்று எதாவது தலைக்கு வைத்து குளிப்பார்கள். உடலுக்கு தானே செய்து வைத்துள்ள வாசனை பொடி+பயத்தம் மாவு போட்டு குளியல்.

வரமிருமுறை இஞ்சி சாறு குடித்தல்.காய்கறி சூப் குடித்தல்.ஏதேனும் பழச்சாறு குடித்தல். சத்துமாவு கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி குடித்தல்.

வாரம் ஒரு முறை அடை,உளுந்து வடை,வெண்பொங்கல்,பணியாரம்,ஆப்பம், இடியாப்பம், புட்டு,அப்பம் கட்டாயம் செய்து விடுதல்.

வெள்ளிக்கிழமை, மற்ற நல்ல நாட்களில் வாசல் அடைத்து காவி கோலம் இடுதல்.சலிக்காமல் அம்மா செய்ற இந்த வேலைகளுக்கு என் வீடு தான் வசதி. அவர்களுக்கு வேண்டிய அனைத்து சாமான்களும் இங்கு தான் உள்ளன.50 வருடங்களாக அவர்கள் கும்பிடும் சாமி படங்கள் என் வீட்டில் தான் உள்ளன.

பழைய புத்தகங்கள், டைரிகள்,எம்பிராய்டரி துணிகள்,நூல்கள்,மருந்து பொடி,தேன்,காய்ச்சிய எண்ணெய்கள்(கீழாநல்லி,மருதாணி, அருகம்புல்,கடுக்காய்), வாசனை பொடிகள்,சாமி படங்கள்,தினம் பார்க்கும் காக்கா என்று அனைத்தும் இங்கு தான்.  இங்கு தான் அம்மா வசதிக்கு செய்வதை உபயோகப் படுத்த முடிகிறது. அதான் அம்மா இங்கேயே இருக்காங்க.பி.பி செக் செய்ய போகும் டாக்டர் இங்கு வீட்டு பக்கத்தில்.
இறந்து போன அப்பாவின் பெரிய ஃபோட்டோ இங்கு தான்.துளசி பறித்து பெரிய மாலை கட்டி பெருமாளின் பெரிய ஃபோட்டாக்கும், அப்பாவிற்கு ஒரு சிறிய பூ மாலையும் அவ்வப்போது பளிச்சுன்னு போடப்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக வேலைக்கு போகாத நான் அம்மாவின் துணைக்கு.

 நான் பிறந்ததில் இருந்து என் கூடவே இருக்கும் என் அம்மாவிற்கு இன்று பிறந்த நாள்.