Wednesday, January 09, 2013

இதெல்லாம் நமக்கு சரிபடாதா?

காலை 7.30க்கு பள்ளி என்பது தமிழக அரசின் புது ஐடியா.

காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் வரும்.எனவே இரவில் எந்த டி.வி சீரியலில் மாட்டாமல் குழந்தைகள் சீக்கிரம் தூங்க பழகி விடுவார்கள்.பெற்றோரும் தான். இந்த அரசு பஸ்கள் காலையில்,முக்கியமாக மதியத்தில் குழந்தைகளுக்கு மட்டுமே என்பது போல் கூட்டம் இல்லாமல் ஃப்ரீயாக செல்லலாம். கண்டக்டர்களும் பள்ளிகளுக்கு அருகில் நிறுத்தி அமைதியான முறையில் ஏற்றி வருவார்கள். இப்போ மாதிரி குழந்தைகளை கண்டாலே பஸ்ஸை நிறுத்தாமல் ஓடுவதை போல் செய்ய மாட்டார்கள். சாலைகள் இந்த நேரத்தில் கொஞ்சம் ட்ராஃபிக் குறைவாக இருக்கும் என்பதால் மாணவர்கள் சைக்கிளில் சென்று வருவதை விரும்பி சைக்கிள் உபயோகம் அதிகமாக சான்ஸ் இருக்கே.

காலையில் கஞ்சி,ஜூஸ்,பால் போன்று நல்லா இரண்டு பெரிய க்ளாஸ் கொடுத்து,காலை சாப்பாட்டை கையில் கொடுத்து விடுவதால்(சப்பாத்தி,பூரி போன்று) குழந்தைகள் ஆரோக்யமாக இருக்குமே. மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு வந்து முழு சாப்பாட்டை சூடாக காய்கறி,கீரைகளுடன் சாப்பிடலாம்.ப்ரைமரியில் படிக்கும் குழந்தைகள் மதியம் வீட்டில் 2 மணிநேரம் தூங்கலாம்.

 பள்ளிகளில் மதிய சாப்பாட்டிற்கு பிறகு ஒரு மணிநேரம் எந்த விதத்திலும் குழந்தைகளை ஒரு பாடத்தின் மீது கவனம் செய்ய வைக்க முடியவே முடியாது. எப்படா பெல் அடிக்கும் என்ற மனநிலையில் தான் கட்டாயத்தின் பேரில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.அந்த நேரத்தில் பெரும்பாலும் போர்டில் எழுதி போடும் வேலை தான் பெரும்பாலும் ஆசிரியர்களின் வேலையாக இருக்கும். புதியதாக பாடம் சொல்லி தருவதை மதிய நேரத்தில் அவாய்ட் செய்து விடுவர்.

 இந்த நேரப்படி அம்மா வேலைக்கு போகாமலோ இல்லையென்றால் பாட்டி,தாத்தா அவர்கள் வீட்டிலோ இருக்க வேண்டும். அப்போதான் இந்த முறை நல்லாயிருக்கும்.எனவே கூட்டு குடும்பத்தின் அருமை மக்களுக்கு புரியும்.இல்லாட்டி ஏற்கனவே மாலை 4,5 மணியிலிருந்து வேலைக்கு போன அம்மாவிற்கு காத்து இருக்கும் குழந்தைகள் இப்போ மதியத்திலிருந்து காத்து கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். AFTER SCHOOL என்ற பள்ளிகள் அல்லது டியூஷன் செண்டர் புற்றீசல் போல் முழைத்து சம்பாதிக்க தொடங்கும். மேட்னி-ஷோக்கள் தியேட்டர்களில் கொடிக்கட்டும். டீன் - ஏஜ் குழந்தைகள் நன்கு சுத்த ஆரம்பிக்கும்.டைம் அதிகம் கிடைப்பதால் மாணவர்களின் நெட் உபயோகம் அதிகரிக்கும்.

 தனியார் பள்ளிகள் மாணவர்களை மதியம் விட்டால் கூட ஆசிரியர்களை மதியம் வீட்டிற்கு விட ரொம்ப யோசிப்பார்கள். ஆசிரியர்கள் 4 மணிவரை கட்டாயம் பள்ளியில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அவர்களுக்கும் வீடு மற்ற வேலைகள் இருக்குமென்ற கவலையே கொள்ள மாட்டார்கள்.இதில் பெரும் பாதிப்பு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தான். தனியார் பள்ளிகளில் 90% பெண்கள் தான் ஆசிரியராக பணியில் இருக்கிறார்கள். ஆசிரியர் பணியில் ஈடுபாடு இனி வரும் காலங்களில் இந்த நேர மாற்றத்தால் இளைஞர்களுக்கு குறைந்து விட வாய்ப்பு உள்ளது.


 என்ன செய்யலாம்?

3 கி.மீட்டருக்குள்ளே தான் வீடும் பள்ளியும் இருக்க வேண்டும் என்பதை அனைத்து பெற்றோரும் கட்டாயம் கடைபிடித்தாலே இந்த பிரச்சனை பெரிதும் தீரும்.சைக்கிளுக்கென்று சாலையில் தனி பாதை ஏற்படுத்தினால் இன்னும் நல்லாயிருக்கும்.சைக்கிளில் வரும் மாணவர்களுக்கு பள்ளியில் ஏதேனும் மார்க் உண்டு என்று கூறினால் சோம்பேறிகளாகி கொண்டு இருக்கும் மாணவ சமுதாயம் சைக்கிளை உபயோகப்படுத்த தொடங்கும்.தனியார் பள்ளிகள் சம்பாதிக்க வேண்டி வாங்கி வைத்திருக்கும் பேருந்துகளை தொலைவில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பயன் படுத்தலாம்.


 என் பையன்கள் இருவரும் தாம்பரம் கேந்திரிய வித்யாலயாவில் 10 வருடம் படித்தனர். அப்போது காலை 7.30-2 மணி வரை பள்ளி நேரம்.காலை 8.30க்கு டிஃபன் ப்ரேக். டவுண் பஸ்ஸில் 3 கி.மீட்டர் சென்று வந்தார்கள். காலை கூட்டம் இருந்தாலும் மதியம் அரசு பேருந்தில் அந்த பள்ளி மாணவர்கள் மட்டுமே சந்தோஷமாக வருவார்கள். அந்த பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களை விட மிக சுறுசுறுப்பாய் இருப்பார்கள் இதை நான் மற்ற பள்ளி ஆசிரியர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன்.நேரிலும் பார்த்து இருக்கிறேன். மதியத்திலிருந்து இரவு வரை நேரம் அதிகம் இருக்கும்.வீட்டு பாடங்கள் படிக்க செய்ய அதிக நேரம் இருக்கும்.மற்ற டியூஷ்னகளுக்கும் செல்ல நேரம் கிடைக்கும்.இந்தியாவில் இருக்கும் அனைத்து கேந்திரிய வித்யாலயாவும் இந்த நேரத்தில் தான் செயல்பட்டன. ஷில்லாங்,ஊட்டியில் இருக்கும் குழந்தைகளும் காலை குளிரில் இந்த நேரத்திற்கு பழக்கபட்டே இருக்கிறார்கள்.

நான் சிட்டியில் இருக்கும் பள்ளிகளை மட்டும் கருத்தில் கொண்டு இதை எழுதி இருக்கிறேன். கிராமத்து பள்ளிகளுக்கு இந்த டைம் சரி படுமா தெரியலை. எனினும் மதிய நேரத்தில் வீட்டிற்கு வருவதால் அவர்களுக்கும் பிரச்சனை இருக்காது என்றே நினைக்கிறேன். தூரமாய் இருக்கும் வீட்டிற்கு இருட்டும் முன்பே போகலாம் .இருட்ட ஆரம்பிக்கும் முன்பே பாடங்களை பாதியாவது படித்து முடிக்கலாம். (கரெண்ட் பிரச்சனை).பார்க்கலாம் என்ன டைம் அரசு முடிவு செய்கிறார்கள் என்று?

11 comments:

அன்புடன் அருணா said...

இங்கே ஜெய்ப்பூரில் இதே முறைதான் 7:30 to 2:15. எங்களுக்கு மிகவும் பிடித்தும் வசதியாகவும் இருக்கிறது!!

பூந்தளிர் said...

காலையில் பள்ளி நேரத்தை வைத்திருப்பது நல்ல விஷயம் தான் ஆனா எத்தனை குழந்தைகள் காலையில் எழும் பழக்கம் உள்ளவர்களாக இருக்காங்க. பழக்கப்படுத்தவேண்டியதுதான். நல்ல பகிர்வு.

வெங்கட் நாகராஜ் said...

தில்லியின் பெரும்பாலான பள்ளிகளில் இந்த நேரம் தான்... ஆனால் குளிர் காலத்தில் இது ரொம்ப கஷ்டம்....

ஹுஸைனம்மா said...

(அபுதாபி)இங்கும் இதே நேரம்தான். மாலையில் அதிக நேரம் கிடைக்கிறது. அதிகாலை நேரம் தூக்கத்தில் வீணாகாது. குளிர் காலத்தில் சிரமமே. எனினும், பிடிச்சிருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

எங்கூர்லயும் இதே டைம்தான். காலேஜுக்கு வந்தப்புறமும்கூட இதே டைம்டேபிள்தான் கடைப்பிடிக்கப்படுது.

எங்கூரைப்பொறுத்தவரை எலிக்கேஜி முதல் நாலாம் வகுப்பு வரை ஒரு ஷெட்யூலாகவும் அஞ்சாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை இன்னொரு ஷெட்யூலாகவும் செயல்படுது. பொதுவா அஞ்சுலேர்ந்து பத்து வரைக்கான வகுப்புகள் காலை ஷிப்டில் நடக்கும். இதனால் மதியம் வீட்டுக்கு வந்து கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு பாடங்களைப் படிச்சு முடிச்சுடலாம். அதே சமயம் சின்னக்குழந்தைகளுக்கு மதியம்தான் வகுப்புங்கறதால அடிச்சுப்பிடிச்சு விடியக்காலமே எழுந்துக்கணும்ன்னு அவசியமில்லை. காலை பத்து மணிக்கு எழுந்தாக்கூட போதும் :-))

pudugaithendral said...

எங்களுக்கு எப்பவுமே இப்படித்தான். 2.45க்கு பசங்க வீட்டுக்கு வந்திடறாங்க. மற்ற சிபிஎஸ்சி பாடத்திட்ட பள்ளிகள் 3.30க்குள்ள வீட்டுக்கு வந்திடுவாங்க.

பிள்ளைகளை இரவு சீக்கிரம் தூங்க பழக்கப்படுத்தி காலையில் சீக்கிரம் எழ இது நல்ல யுக்தி. சொன்னா மாதிரி சாப்பாடும் முறையா நடக்க வாய்ப்பு இருக்கு. 6.30க்கேன்னாலும் சரி காலைஉணவை கண்டிப்பா சாப்பிட வெச்சு அனுப்பவதுதான் பெஸ்ட்.

கட்டி கொடுத்தா விளையாட்டு மும்மரத்துல சாப்பிடாம இருந்தாலும் இருக்கும் பிள்ளைக. பசங்க தானே.

அமுதா கிருஷ்ணா said...

ஓ ஜெய்ப்பூரில் இந்த டைமிங்கா.தகவலுக்கு நன்றி அருணா.

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்,பூந்தளிர்...

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா ஹூஸைனம்மா அங்கேயும் இதே டைமிங் தானா? தமிழ்நாட்டில் ஒரு மாதம் மட்டுமே குளிர்காலம்.சோ, சமாளித்துவிடலாம்.

அமுதா கிருஷ்ணா said...

இந்த ஷிப்டிங் கூட நல்ல ஐடியா தான் அமைதி சாரல்.

அமுதா கிருஷ்ணா said...

புதுகைத் தென்றல் நீங்க சொல்றதும் சரிதான். ஆனால், ஆசிரியைகள் அவர்கள் ஒழுங்கா சாப்பிட்டார்களா என செக் செய்வார்கள்.எனவே காலையில் நாம் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்.