Tuesday, January 22, 2013

விடிய விடிய பேசணும்

எப்ப மீட் செய்தாலும் பார்த்து பல வருஷம் ஆன மாதிரி விடிய விடிய பேசி விடிந்ததும் காலை 6 மணிக்கு நான் எழுந்து வழக்கம் போல் என் வேலையினை பார்க்க தொடங்க எழுந்திருக்கவே முடியலைக்கா இனிமேல் உங்க கூட பேசவே கூடாது என்று ஒவ்வொரு முறையும் சிரித்துட்டே சொல்லுவாள்.

ஏனெனில் காலையில் கன்னாபின்னாவென எல்லோரிடமும் திட்டு வாங்குவோம். நாங்க இருவரும் திண்டுக்கல்லில் சுத்தாத இடம் கிடையாது.ஹைனட்டிக் ஹோண்டாவிற்கு அவள் தான் எப்பவும் ட்ரைவர்.மதிய வேளைகளில் திடீரென்று வீட்டில் யாருக்கும் தெரியாமல் தியேட்டருக்கு எஸ்ஸாகி விடுவோம். அப்புறம் வந்து மண்டகப்படி தான்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு,சோழவந்தான் திருவிழா, மதுரை என்று திடீரென்று பக்தி ரசம் சொட்ட சொட்ட ஒரே கோயில் சுற்று தான். 4 வருடங்கள் தொடர்ச்சியாக திருப்பதிக்கு 10 நாட்கள் ஸ்ரீவாரி சேவாக்கு சென்று அங்கு தினம் சேவை செய்வதை இருவரும் மிக விரும்பி செய்தோம்.எதற்கு சிரிக்கிறோம் என்று தெரியாது சிரித்து கொண்டே இருப்போம்.அங்கு சேவாக்கு வந்திருந்த ஒருவர் உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்குது சுத்தி போடுங்க மேடம் என்று ஒரு நாள் சொல்லி சென்றார். எங்கள் குலதெய்வம் ஐயர்மலை எப்ப மலை ஏறினாலும் ஒரு துண்டின் ஒரு முனையினை பிடித்து கொண்டு அவள் முன்னேற நான் இன்னொரு முனையினை பிடித்து கொண்டு பின்னேறுவேன்.அப்பவும் பேசிக் கொண்டே.

 என் மாமா  இருவரில் ஒருவர் ஆணாக இருந்தால் கல்யாணம் செய்து கொடுத்து இருப்பேன் என்பார் கிண்டலாக.  குடும்பத்தில் எதாவது திருமணம் என்றால் ஒரு 10 பேரின்(கஸின்ஸ்) நகைகளை ஒன்றாக்கி நீ இதை ரிஷப்ஷனுக்கு போட்டுக்கோ, இதை திருமணத்திற்கு போட்டுக்கோ என்று ஒரு பேப்பரில் லிஸ்ட் எழுதி வைத்து கொண்டு எல்லோருக்கும் மேக்கப் செய்து விட்டு நாங்கள் இருவரும் கடைசியில் தான் பேசி கொண்டே ரெடியாவோம்.

அவளுக்கு திருமணம் ஆனது. இரண்டு குழந்தைகள். 6 வயதில் பையனும்,5 வயதில் பெண்ணும்.  நாங்க முன்பு மாதிரி சுத்த முடிவதில்லை. ஆனாலும், பார்க்கும் போதெல்லாம் விடிய விடிய பேசுவது மட்டும் இன்னும் தொடர்கிறது.

ஜனவரி 18 ஆம் தேதி இரவு கை,கால் மரத்து போன மாதிரி உணரவும் அவள் கணவருடன் டூவீலரில் ஹாஸ்பிட்டல் போயிருக்கிறாள். போய் என்ன ஏதுவென்று டாக்டர்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே ஸ்ட்ரோக் வந்து வலது பக்கம் செயல் இழந்து விட்டது.20 ஆம் தேதி திருச்சியில் அவளை ஹாஸ்பிட்டலில் பார்த்த போது முதன் முதலாக இருவரும் பேசாமல் 20 நிமிடங்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை.பொங்கி வந்த அழுகையினை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு என்ன வித்யா இந்த வருடம் திருப்பதிக்கு ஸ்ரீவாரி சேவாக்கு ஏப்ரலில் போலாமா, மேயில் போலாமா என்று கேட்கவும் சின்னதாய் ஒரு சிரிப்பு அவள் முகத்தில்.ரொம்ப வீக்கா இருக்க அதான் பேச முடியலை.சீக்கிரம் எழுந்திருக்கும் வழியினை பாரு அப்படி இப்படின்னு தனியா நான் மட்டும் அவள் பதிலையே எதிர்பார்க்காமல் பேசிட்டு வந்திருக்கேன். ஹாஸ்பிட்டலில் டிஸ்சார்ஜ் செய்ததும் கேரளாவிற்கு சிகிச்சைக்கு போகலாம் என்று அவளின் டாக்டர் தம்பி முடிவு செய்து இருக்கிறான். யாரை நொந்து கொள்வது? பரம்பரையாக ஒரு நோய் வரும் என்றாலும் கூட 35 வயதில் இப்படி எல்லாம் நடக்குமா? அந்த இரண்டு குழந்தைகளும் என்ன பாவம் செய்தனர்?என்ன செய்தால் அவள் குணமடைவாள் என்று தெரியாமல் விதியினை நொந்து கொண்டு நாங்கள் இருக்கிறோம்.

வித்யா என் மாமாவின் பெண். என் கணவருக்கு அண்ணா பெண். சிறிய வயதில் நாங்க இருவரும் திண்டுக்கலில் தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்ததால் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம். நான் அத்தை பெண்,சித்தப்பா மனைவி என்றாலும் என்னை அக்கா என்றே கூப்பிடுவாள்.

வரும் மார்ச் மாதம் அவளுக்கு மிகவும் பிடித்த தொழிலான பியூட்டி பார்லர் ஆரம்பிக்க போவதாய் மிக நம்பிக்கையாய் நியூஇயர் விஷ் செய்த போது கூறினாள்.அவளின் ரொம்ப நாள் கனவு அது.

அவளின் நியாயமான கனவு நிறைவேற வேண்டும். யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லை.


கட்டாயம் நாங்களிருவரும் விடிய விடிய பேசுவோம் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்.

11 comments:

Yaathoramani.blogspot.com said...


கட்டாயம் நாங்களிருவரும் விடிய விடிய பேசுவோம் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன். //

நிச்சயமாக தங்கள் நம்பிக்கை நிறைவேறும்
அடுத்த புத்தாண்டுக்கு ஸ்ரீவாரி ஸேவைக்கும்
நிச்சயம் இருவரும் செல்வீர்கள்
உயரிய நல்ல நம்பிக்கைகள் வீண்போவதில்லை
வாழ்த்துக்களுடன்

சேக்காளி said...

//யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லை.
கட்டாயம் நாங்களிருவரும் விடிய விடிய பேசுவோம் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்//
நிச்சயமாக நீங்களிருவரும் விடிய விடிய பேசுவீர்கள்.அப்படி பேசும் போது கான்பரன்ஸ்ல என்னையும் சே(ர்)த்துக்காங்க.

”தளிர் சுரேஷ்” said...

உங்கள் தோழி விரைவில் குணமடைந்து அவர் கனவு நினைவாக இறைவனை ப்ரார்த்திக்கிறேன்! நெகிழ்ச்சியான பகிர்வு! நன்றி!

ADHI VENKAT said...

நிச்சயம் தங்கள் நம்பிக்கை வீண் போகாது. தோழியின் உடல்நலன் சீர் பெற நாங்களும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

ஹுஸைனம்மா said...

35 வயசிலேவா... அதிர்ச்சியா இருக்கு. என் பிரார்த்தனைகள்.

k.muthurajan said...

உங்கள் தோழி விரைவில் குணமடைந்து அவர் கனவு நினைவாக இறைவனை ப்ரார்த்திக்கிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

எனது மனமார்ந்த பிரார்த்தனைகள். விரைவில் அவர்கள் குணம் பெறட்டும்....

அமுதா கிருஷ்ணா said...

வித்யா என் தோழி அல்ல. என் மாமா பெண்.பின்னூட்டம் செய்த அனைவருக்கும் நன்றி

சாந்தி மாரியப்பன் said...

35 வயசுல இப்படியொரு நிலை வந்துருக்கக்கூடாது. என்னுடைய பிரார்த்தனைகளும்.

Dubukku said...

படிக்கும் எங்களுக்கே வருத்தமாய் இருக்கும் போது உங்கள் வருத்தம் புரிகிறது.
//
கட்டாயம் நாங்களிருவரும் விடிய விடிய பேசுவோம் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன். //

கண்டிப்பா பேசுவீங்கங்க.. எங்கள் பிரார்த்தனைகளிலும் சேர்த்துக் கொள்கிறோம்.

குட்டன்ஜி said...

உங்கள் நம்பிக்கை நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்