Tuesday, June 07, 2011

ஊர் தான் காரணமா?

போன வாரம் நான் கலந்து கொண்ட திருமணத்தில் மனம் நொந்து போயிருந்த மூன்று பெற்றோர்களை சந்தித்தேன்.அவர்கள் அவர்களின் மகன்/ளால் மனம் நொந்து போய் இருந்தார்கள்.அவர்களின் மகன்/ள் அவர்களாகவே திருமணம் செய்து கொண்டு விட்டது தான் காரணம்.இல்லை ஓடிப்போய்விட்டது தான் காரணம்.

நான் பார்த்த மூன்று பெற்றவர்களும் குறை சொன்னது சென்னையை தான்.சென்னைக்கு படிக்க அனுப்பினேன்,வேலைக்கு அனுப்பினேன் ஓடி போயிட்டான்/டாள்.என்னமோ சென்னையில் தான் பிள்ளைகள் தினம் ஓடிப் போவதை போல்.

சென்னையிலேயே பிறந்து வளரும் குழந்தைகளை காட்டிலும் தமிழ்நாட்டின் உள்நகரகங்களில்,கிராமங்களில் இருந்து வேலைக்காக, படிப்பதற்காக சென்னை வருபவர்களே இப்படி காதலில் சிக்கி கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது.சென்னையில் காதல் செய்வது மிக சுலபம்.சொந்தக்காரர்கள் அதிகம் இருப்பதில்லை. தெரிந்தவர்கள் கண்களில் படாமலே நல்லா ஊர் சுற்றலாம்.வேலைக்கு வரும் போது அனுபவிக்கும் திடீர் சுதந்தரம் மிகுந்த தைரியத்தினை தருகிறது.பெற்றவர்களை தலை குனிய செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது.சர்வ சாதாரணமாய் அபார்ஷன் செய்து கொள்கின்றனர்.ஒரு குழந்தைக்கு எத்தனை ஜோடிகள்,எத்தனை வருடங்கள் உண்மையாய் தவம் இருக்கின்றனர்.இப்படி வேண்டாதவர்களுக்கு குழந்தை உண்டாவதும், வேண்டியவர்கள் காத்து கிடப்பதும் கொடுமை.

இன்னொரு கொடுமை என்னவென்றால் ஜாதி பார்ப்பதால் தன் பெண்ணை கட்டாயப்படுத்தி தங்கள் ஊருக்கு அவள் காதல் கணவனிடமிருந்து பிரித்து அழைத்து சென்று வேறு ஒருவருக்கு திருமணம் செய்விப்பது.ஊரில் அந்த குடும்பத்தில் அப்படி நடந்தது இந்த குடும்பத்தில் இப்படி நடந்தது என்று அவர்களே சொல்ல கேட்டப்போது எங்கே இருக்கிறது நம்ம கலாச்சாரம் என்று தேடி கொண்டு இருக்கிறேன். கலாச்சாரம் என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாத்தி கொள்வதற்கு உண்டான ஒரு பேத்தல் வார்த்தை என்று புரிந்தது. இதில் சிலர் திரும்பவும் வீட்டில் எல்லோரையும் ஏமாற்றி விட்டு ஓடி போன கதைகளும் உண்டு.

சென்னையில் இருக்கும் பெற்றோர் தங்கள் மகன்/மகள் காதல் செய்வது தெரிந்தால் ஒத்துக் கொண்டு திருமணம் முடித்து வைக்கின்றனர்.ஆனால், கிராமங்களில் ஜாதி காரணமாய் அதனை ஒத்துக் கொள்வது இல்லை. எனவே, சொல்லாமல், கொள்ளாமல் ஓடி விடுகின்றனர்.

இங்கு சென்னை சமூகத்திலும் காதல் கல்யாணத்திற்கு உடனே பெற்றோர் ஒத்துக் கொள்வதில்லை. அந்த ஜோடிக்கு சொல்லி பார்க்கிறார்கள். கேட்கவில்லை எனில் டீசண்டாய் திருமணம் செய்விக்கின்றனர்.ஆனால், ஊரிலோ வறட்டு கெளரவம் பார்த்து கொண்டு ஓட விட்டு அப்புறம் தேடுகின்றனர் அல்லது புலம்புகின்றனர்.

ஊரில் ஆண், பெண் பேசவே கூடாது என்று வளர்க்கப்படும் சூழலில் திடீரென்று வேலைக்கு அல்லது மேற்படிப்பு படிக்க வரும் போது சென்னையில் இருக்கும் சுதந்திர சூழ்நிலையில் எதிர்பாலிடம் சாதாரணமாய் பேசும் போது கூட காதல் என்று மிக எளிதில் விழுந்து விடுகின்றனர்.ஆண்,பெண் நட்பு என்பது புரிவதில்லை.

சென்னையில் மகளை/னை வளர்க்கிறார்கள் கட்டாயம் காதல் திருமணம் தான் செய்வார்கள் என்று ஊரில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். சாதாரண ஆண்,பெண் நட்பினை கொச்சை படுத்தி பேசுவார்கள்.சும்மா ஒரு முறை டூவீலரில் யாருடனவாது அவசரத்திற்கு போனாலே காதல் என்று கதை கட்டுவார்கள்.

இங்கேயே பிறந்து வளரும் குழந்தைகள் தெளிந்த சிந்தனையுடன் இருக்கிறார்கள்.ஆண்-பெண் நட்பினை சாதாரணமாய் எடுத்துக் கொள்கிறார்கள்.அதை பெற்றவர்களும் புரிந்துக் கொள்கிறார்கள். இங்கு நான் சொல்வது எல்லாமே மிடில் க்ளாஸ் மக்களை பற்றி.

ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. இனிமேல் திருமணத்திற்கு ஆணோ அல்லது பெண்ணோ பார்க்க போகும் போது காதல் எதுவும் முன்னாடி இருக்கா என்று சம்பந்தப்பட்டவர்களையே நேரில் விசாரித்து திருமணம் முடிப்பது அனைவருக்கும் நல்லது. இல்லையெனில் ஓடிபோனவன்/ள்,திரும்ப வந்தவள்/ன்,திரும்ப ஓடிப்போக ப்ளானில் இருப்பவன்/ள் என்று யாராவது நம் வீட்டிற்கு வர சான்ஸ் உள்ளது.

எப்பவும், எங்கேயும் ஓடி போகிறவர்கள் இருப்பார்கள்.ஊர் என்ன செய்யும்? என் அம்மா ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே காதல் திருமணம் நடந்து இருக்கிறது. 1960-களில்.என்னவோ இப்பதான் கலிகாலம் முத்திவிட்டது என்பது போல் புலம்பவது தானே நம்ம ஸ்டைல்.


11 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்லா சொன்னீங்க... ரெம்பவும் அடக்குமுறையில் வளரக்கபடும் பிள்ளைகள் தான் இப்படி திடீர் சுதந்திரத்தில் நட்பு / காதல் வித்தியாசம் புரியாமல் சிக்குவது. அதன் பின் பிரிவதும் மற்ற பிரச்சனைகளும். பெற்றோர் பிள்ளைகளுடன் மனம் விட்டு எல்லாமும் பகிர்ந்து கொள்ளும் வீட்டில் பெரும்பாலும் இது போல் நடப்பதில்லை

தமிழ் உதயம் said...

திருமணத்திற்கு பிறகு ஓடிப் போதல், எத்தனை பேரை கண்ணீரில் ஆழ்த்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை

A.R.ராஜகோபாலன் said...

மிக நல்லப் பதிவு
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இடைவெளி கொடுக்காமல் தாயின் பாசத்தையும், தந்தையின் அரவணைப்பையும் , நண்பனின் சுதந்திரத்தையும் கொடுத்தால் இது போன்ற செயல்கள் நடக்காது என்பது என் கருத்து

Yaathoramani.blogspot.com said...

நல்ல பதிவு
சமீபத்தில் இதுபோன்ற நிகழ்வுகள்
அதிகம் காதில் படுகிறது
குறைந்த வயதில் அதிகம் சம்பாதிித்தலும்
நமக்கான சூழலை நாமே வடிவமைத்துக்கொள்ள முடியும் என
நம்பிக்கையூட்டும் நண்பர்கள் குழாமும்
இதில் முக்கிய பங்கு வகிப்பதாக உணர்கிறேன்
சிந்திக்கத் தூண்டும் நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சகோ. நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. ஊர் என்ன செய்யும்....

Aravinthan said...

ஓடிப் போகிறவர்களின் பிள்ளைகள் பிற்காலத்தில் ஓடிப்போகும் போது தான் பெற்றோர்களின் வலி இவர்களுக்கு புரியும்

RVS said...

நல்ல கள ஆய்வு. ;-))

CS. Mohan Kumar said...

வித்யாசமான பார்வையாக உள்ளது

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_10.html

ஹுஸைனம்மா said...

நல்ல புரிந்துணர்வோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் எந்த ஊர் போனாலும் பெற்றோரின் மனம் கோணாமல் நடப்பார்கள்.

எனினும், சென்னை குறித்து நீங்க சொல்றதும் மிக உண்மை.

சென்னை பித்தன் said...

முதல் வருகை!சரியான கோணத்தில் பார்த்து எழுதிய பதிவு!முன்பும் காதல் இருந்தது.குறைவாக இருந்தது.ஆனால் அப்போது ஒரு தெளிவும் இருந்தது. இன்று காதல் மிக எளிதாக வந்து விடுகிறது.கொஞ்சம் சிக்கலான பிரச்சினையே!