Tuesday, February 01, 2011

அம்மா

எப்பவும் ஏன் உன் கூடவே அம்மா இருக்காங்க உன் உடன் பிறந்தவர்களுக்கும் அவர்கள் அம்மா தானே? ஏன் அவர்கள் வீட்டிற்கு போனால் உடனே ஓரிரு நாட்களில் திரும்ப வந்து விடுகிறார்கள் என்று சமயங்களில் யாரேனும் என்னிடம் கேட்கிறார்கள்.கொஞ்சம் யோசித்ததில் அங்கெல்லாம் போனால் ஒரு விருந்தாளி போல் தான் அவர்களால் இருக்க முடிகிறது என்று புரிந்தது.

காலையில் சீக்கிரம் எழுந்து பாத்ரூம் போகும் போதே ஹீட்டர் போட்டு விட்டு வருவாங்க. பிறகு பால் காய்ச்சி அதை அப்படியே கொண்டு போய் சாமி ரூமில் வைத்து கும்பிட்டு வருவதில் ஆரம்பிக்கும் அம்மாவின் ஒரு நாள்.

குளித்து விட்டு வந்து சூடாக ஒரு காஃபி குடிச்சுட்டு அப்படியே தோட்டத்தில் துளசி மாடத்தில் பூ போட்டு, சுத்து சுத்திட்டு சாமி அறைக்குள் நுழைந்தால் ஒரு மணிநேரம் பொழுது போகும்.

வந்து காலை டிபன் சாப்பிட்டு விட்டு என் பசங்க, தன் தம்பியான என் கணவரிடம் பேசி கொண்டே தமிழ் பேப்பர் படித்து கொண்டு இருப்பார்கள்.

அப்புறம் கிச்சன் வந்து நான் நறுக்கி வைத்து இருக்கும் காய்கறிகளை செய்வார்கள் அல்லது ரசம் புளிப்பு கொஞ்சம் தூக்கலாய் வைப்பார்கள்.

காய்கறி சூப் செய்து ஒரு க்ளாஸ் குடித்து விட்டு என் பசங்களையும் குடிக்க செய்வார்கள்.

பின் காலை 11 மணிவரை ஏதேனும் புத்தகம் ஆன்மீகம், ஆலயம், பாலஜோதிடம், துக்ளக் என்று படிப்பார்கள். டாணென்று 11 மணிக்கு சன் சேனலில் சீரியல் ஆரம்பம்.

12.30 க்கு மதியம் காக்காவும், அம்மாவும் சாப்பிடுவார்கள்.சாப்பிட்டு விட்டு ஒரு மணிநேரம் படுக்கையில் படுத்துக் கொண்டே புத்தகம் வாசித்தல். பிறகு 2.30 மணிக்கு டி.வியில் திருப்பதி சேனல் பார்த்துக் கொண்டே,எதாவது எம்பிராய்டரி,தையல் வேலை, டைரியில் சாமி ஸ்தோத்திரம் எழுதுதல்.நடு நடுவே தன் சின்ன வயது நிகழ்வுகளை, தான் பட்ட கஷ்டங்களை, தன் அம்மாவின் கதையினை என்னிடம் கூறுதல். நிறைய முறை இது ரிப்பீட்டு கதையாக இருக்கும்.மதியம் வீட்டில் இருக்கும் எதாவது ஒரு பொருளை கணக்கு வைத்து வெயிலில் காய வைத்து எடுத்து வைப்பார்கள். தூள் வகைகள்,காய்ந்த பூக்கள்,தலையணை, பெட்ஷீட் உட்பட எதாவது வெயிலில் தினம் ஒன்றாய் காயும்.

மாலை 5 மணிக்கு ஒரு டீ குடித்து விட்டு கோயில். நடந்த மாதிரியும் இருக்கும்,சாமி கும்பிட்ட மாதிரியும் இருக்கும்.6 மணிக்கு வீட்டிற்குள் வருவார்கள்.திரும்ப சாமி ரூமில் கொஞ்ச நேரம்.7.30க்குள் ராத்திரி டிபன் முடித்து விடுவார்கள்.9 மணிவரை டி.வி இல்லையெனில் புத்தகம்.கீரை எதுவும் இருந்தால் அதை சுத்தம் செய்து வைத்து விடுவார்கள்.அவர்களின் காய்ந்த துணிகளை மடித்து வைப்பார்கள்.நடு நடுவில் மற்ற மகன், மகள்களுடன் ஃபோனில் பேச்சு.

டாண்ணு 9 மணிக்கு தூக்கம்.இது தான் அம்மாவின் ஒரு நாள்.

யாருக்கும் ஒரு தொந்தரவு இல்லாமல் தன் வேலையினை தானே முடித்து கொள்ளுதல்.வாரம் இரண்டு முறை பூண்டு,இஞ்சி தட்டிப்போட்டு காய்ச்சிய நல்ல எண்ணெய் குளியல், சீயக்காய் பொடியினை சோற்று கஞ்சியுடன் சேர்த்து தலைக்கு தேய்ப்பார்கள்.அரைத்த வெந்தயம், முட்டை, மருதாணி என்று எதாவது தலைக்கு வைத்து குளிப்பார்கள். உடலுக்கு தானே செய்து வைத்துள்ள வாசனை பொடி+பயத்தம் மாவு போட்டு குளியல்.

வரமிருமுறை இஞ்சி சாறு குடித்தல்.காய்கறி சூப் குடித்தல்.ஏதேனும் பழச்சாறு குடித்தல். சத்துமாவு கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி குடித்தல்.

வாரம் ஒரு முறை அடை,உளுந்து வடை,வெண்பொங்கல்,பணியாரம்,ஆப்பம், இடியாப்பம், புட்டு,அப்பம் கட்டாயம் செய்து விடுதல்.

வெள்ளிக்கிழமை, மற்ற நல்ல நாட்களில் வாசல் அடைத்து காவி கோலம் இடுதல்.சலிக்காமல் அம்மா செய்ற இந்த வேலைகளுக்கு என் வீடு தான் வசதி. அவர்களுக்கு வேண்டிய அனைத்து சாமான்களும் இங்கு தான் உள்ளன.50 வருடங்களாக அவர்கள் கும்பிடும் சாமி படங்கள் என் வீட்டில் தான் உள்ளன.

பழைய புத்தகங்கள், டைரிகள்,எம்பிராய்டரி துணிகள்,நூல்கள்,மருந்து பொடி,தேன்,காய்ச்சிய எண்ணெய்கள்(கீழாநல்லி,மருதாணி, அருகம்புல்,கடுக்காய்), வாசனை பொடிகள்,சாமி படங்கள்,தினம் பார்க்கும் காக்கா என்று அனைத்தும் இங்கு தான்.  இங்கு தான் அம்மா வசதிக்கு செய்வதை உபயோகப் படுத்த முடிகிறது. அதான் அம்மா இங்கேயே இருக்காங்க.பி.பி செக் செய்ய போகும் டாக்டர் இங்கு வீட்டு பக்கத்தில்.
இறந்து போன அப்பாவின் பெரிய ஃபோட்டோ இங்கு தான்.துளசி பறித்து பெரிய மாலை கட்டி பெருமாளின் பெரிய ஃபோட்டாக்கும், அப்பாவிற்கு ஒரு சிறிய பூ மாலையும் அவ்வப்போது பளிச்சுன்னு போடப்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக வேலைக்கு போகாத நான் அம்மாவின் துணைக்கு.

 நான் பிறந்ததில் இருந்து என் கூடவே இருக்கும் என் அம்மாவிற்கு இன்று பிறந்த நாள்.


25 comments:

Chitra said...

அம்மாவுக்கு, பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இந்த பதிவை வாசித்ததும் மிகவும் நெகிழ்ந்தேன். என் அம்மாவை தேட வைத்து விட்டது.

சாந்தி மாரியப்பன் said...

அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.. அருமையான வாழ்க்கைமுறை உங்க அம்மாவோடது!!

ஸ்வர்ணரேக்கா said...

அமுதா...

ஒன்று சொல்லட்டுமா...

//அவர்களுக்கு வேண்டிய அனைத்து சாமான்களும் இங்கு தான் உள்ளன.50 வருடங்களாக அவர்கள் கும்பிடும் சாமி படங்கள் என் வீட்டில் தான் உள்ளன பழைய புத்தகங்கள், ரிகள்,எம்பிராய்டரி துணிகள்,நூல்கள்,மருந்து பொடி,தேன்,காய்ச்சிய எண்ணெய்கள்(கீழாநல்லி,மருதாணி, அருகம்புல்,கடுக்காய்), வாசனை பொடிகள்,சாமி படங்கள்,தினம் பார்க்கும் காக்கா என்று அனைத்தும் இங்கு தான்//

--- உங்கம்மா உங்களுடன் இருப்பதற்கு இவைகளெல்லாம் காரணமில்லை.. நீங்களும் மற்றவர்களும் அவர்களுடன் அணுசரனையாய் இருப்பதே காரணம். சாமானங்களும் , படங்களும் அல்ல...

ஆயிரம் வசதிகள் இருந்தாலும், அணுசரனையும், அன்பும் இல்லாத இடத்தில் நீண்ட நாள் தங்க முடியாது...

அம்மாவிற்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்கள்...

அமுதா கிருஷ்ணா said...

நன்றி சித்ரா.அம்மாவை நல்லா தேடட்டும்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி அமைதிச்சாரல்..ஆமாம், டைம்டேபிள் போட்ட மாதிரி,தினம் ஒரே மாதிரி..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ஸ்வர்ணரேக்கா..அம்மாவிற்கு என் தம்பிகளும், தங்கையும் மிக அனுசரணையாக தான் இருப்பார்கள்.இருக்கிறார்கள்.ஆனால், இது தான் சொந்த வீடு மாதிரி இருக்கிறது அம்மாவிற்கு.

R.Gopi said...

அமுதா....

அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

பரஸ்பர எதிர்பார்ப்பு ஏதுமின்றி அம்மா நமக்கு அளித்த அன்பு தான் அவர்களை என்றென்றும் வாழ்வில் நினைக்க வைக்கிறது...

அனைவருக்கும் அவரவர் தாயை பற்றிய நினைவூட்டிய இந்த பதிவு அபாரம்...

ஹுஸைனம்மா said...

பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களுக்கும் பாராட்டுகள் அம்மாவுக்கு அலுக்காமல் இருக்க வைப்பதற்கு.

//தன் தம்பியான என் கணவரிடம் //
இதுவும் ஒரு முக்கியக் காரணம் இல்லையா?

Nagasubramanian said...

அம்மாவாக இருத்தல்
அவ்வளவு சுலபமில்லை.
ஆனாலும்
அம்மா அம்மாவாகத் தான் இருக்கிறாள்.

எங்கோ படித்த கவிதை.
அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி கோபி..

நன்றி ஹீஸைனம்மா..பாயிண்ட்டை பிடிச்சுடீங்கப்பா..அருமையான தம்பி என் அம்மாவிற்கு..

நன்றி நாகசுப்ரமணியன்..

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Anonymous said...

Unkal ammavirkku valththukkal...

GEETHA ACHAL said...

அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

அமுதா நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க...ரொம்ப பொறாமையாக இருக்கு...

Ram said...

ஆஹா.. அம்மா உங்க பிறந்த நாளுக்கு வாழ்த்த வயதில்லாட்டியும் இவ்வளவு நல்ல பழக்கம் இருக்குற உங்களது ஆசி எனக்கு வேண்டும்.. உங்கள மாதிரி ஒரு விசயத்திலாவது இருக்க ட்ரை பண்றன்.. இது உங்களுக்கு இல்ல அமுதா.. அம்மாவுக்கு..

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் கீதா என்னை அறிந்தவர்கள் எல்லாருக்கும் என் மீது இந்த விஷயத்தில் பொறாமை தான். வருகைக்கு நன்றி கீதா ஆச்சல்.

அமுதா கிருஷ்ணா said...

தம்பி கூர்மதியான் இந்தாங்க ஆசி..அம்மாக்கிட்ட இருந்து வாங்கி தான் தரேன்ப்பா..

Vidhya Chandrasekaran said...

எனது வாழ்த்துகளையும் தெரிவியுங்கள் சிஸ்டர்:)

Anonymous said...

Ammavuku Piranthanal valthukal..
Ammavudan irupadu oru thani sugam

Saravana

ஆயிஷா said...

அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ஆயிஷா..

குறையொன்றுமில்லை. said...

ஆண்டவன் எல்லாஇடங்களிலும் ஒரே நேரத்தில் வரமுடியாதென்று அம்மாவைப்படைத்தானாம். என்றுமே அம்மா, அம்மாதான்.

ஜோதிஜி said...

அம்மாவிற்கு எங்களின் பிறந்த நாள் வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

என் அம்மாவும் இப்படித்தான் வேலை செய்து கொண்டே இருப்பார்கள்.

துணி எடுத்தவுடன் மடித்தால் தான் அழகு என்பார்கள். கைவேலை, பின்னல், என்று. எல்லாம் என் அம்மாவை நினைவூட்டுகிறது உங்கள் பதிவு.
நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி நீங்க.. அமுதா..!!

உங்கள் அம்மாவிற்கு.. பணிவான வணக்கங்கள்..

ரொம்ப சந்தோசமா இருந்தது.. உங்க பதிவை படிக்கும் போது.. நன்றிங்க.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி லக்‌ஷ்மி அம்மா..

நன்றி கோமதி அரசு, ஜோதிஜி, ஆனந்தி.