Wednesday, February 17, 2010

ஓ, அதான் இந்த டைரி பத்திரமாய் இருக்கிறதா!!!

எல்லோரும் டைரியில் உள்ளது பற்றி எழுதிகிறார்களே..நாமும் தேடுவோம் என்று பழைய புத்தக குவியலில் தேடினேன்,தேடினேன் கடைசியில் ஒரு சின்ன டைரி கிடைத்தது.டைரியின் வருடம் 1987. முதல் பக்கத்தில் Miss.R.Amutha(B.A Third Year) என எழுதி, என் வீட்டின் அட்ரஸ் எழுதி, வீட்டின் டெலிபோன் நம்பர் 24449 (இத்தூண்டா) என்று எழுதி,weight 42 kg என எழுதி வைத்துள்ளேன்.

ஜனவரி முழுவதும் வாரம் ஒரு நாள் நான் பார்த்த படங்களின் பெயர்களும், நான் கட்டிய புது உடைகளை பற்றியும் இருக்கின்றது. ராஜமரியாதை,பூ விழி வாசலிலே,சிறைப்பறவை,காதல் பரிசு,வெளிச்சம்,சிப்பிக்குள் முத்து என்று ஒரு மாதத்தில் ஆறு படங்கள் பார்த்து உள்ளேன். திருநெல்வேலியில் படங்களை விட்டால் வேறு வழி கிடையாது.இன்று ரோஸ் கலர் சுடிதார் போட்டேன்,லைட் மஞ்சள் காட்டன் புடவை என்று ஒரு நான்கு நாட்கள் உடைகள் பற்றி எழுதி உள்ளேன். காலேஜ் விட்டதும் வீட்டிற்கு வராமல் என் ஃப்ரெண்ட்ஸ்களுடன் அரட்டை அடித்து உள்ளேன் வாரத்தில் இரண்டு நாட்கள். யார் யாருடன் அரட்டை,என்ன பேசினோம் என்று எழுதவில்லை.

பிப்ரவரி : ஒரு ஃப்ரெண்டு கல்யாணத்திற்கு போனதும் அங்கே பழைய ஃப்ரெண்ட்ஸை சந்தித்ததும் எழுதி உள்ளேன். பிப்ரவரி 13-ல் பக்தவச்சலம் இறந்து உள்ளார். காலேஜ் லீவ் என்பதால் அன்று சொல்வதெல்லாம் உண்மை என்ற படத்திற்கு ஃப்ரெண்ட்ஸுடன் போய் இருக்கிறேன். பிப்ரவரி 17-ல் என் பிறந்த நாள் அன்று க்ளாசில் எல்லோரும் மேஜர் சாரி ஒரே மாதிரி கட்டி உள்ளோம். (ரோஸ் கலர்). இதற்கு இடையில் அவ்வப்போது நடந்த இண்டெர்னல் பரீட்சை பற்றி, அதனில் எடுத்த மார்க் பற்றி உள்ளது.

மார்ச்: பல் வலி வந்து ரொம்ப கஷ்ட பட்டு இருக்கிறேன். சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு ஆனால், அதனை பற்றி டைரியில் எழுதி இருக்கிறேன்.வரலாறு மிக முக்கியம். 3 நாட்கள் காலேஜுற்கு மட்டம். டெல்லி கணேஷ் ட்ராமா ஜங்ஷன் சங்கீத சபாவில் பார்த்து இருக்கிறேன். மாத கடைசியில் ஒரு காலேஜ் டூர் போய் இருக்கிறேன். கொடைக்கானல், மதுரை, வைகைடேம் மூன்று நாட்கள். வந்து சின்னதம்பி பெரிய தம்பி,முத்துக்கள் மூன்று ரெட்டைவால் குருவி பார்த்து உள்ளேன்.

ஏப்ரல்: ஊரிலிருந்து என் அத்தை வந்து உள்ளார்கள் இரண்டு நாட்கள். அவர்கள் திரும்பி போன நாளில் ரொம்ப கவலையாக இருந்தது என்று எழுதி வைத்து உள்ளேன். ரொம்ப பாசக்கார பிள்ளை நான். அதற்கு அடுத்த பக்கங்களில் என் க்ளாஸ்மேட்ஸ்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கி இருக்கிறேன். மொத்தம் 30 பேர்கள் என்னை பற்றி எழுதி இருக்கிறார்கள் ஆகஸ்ட் மாதம் வரை உள்ள பக்கங்களில் அவர்கள் எழுதி கொடுத்தது இருக்கிறது. ஓ அதான் இந்த டைரி பத்திரமாய் இருக்கிறதா?? கொஞ்சப்பக்கங்களுக்கு பின்னால் ஒரு பக்கத்தில் மேத்தாவின் இந்த கவிதையை எழுதி இருக்கிறேன்.

கத்தி மாதிரிக்
கண்கள் என்றேன்
என்
இதயத்தின் மீதுதான்
தீட்டிப் பார்க்கப்போகிறாய்
என்பதை
தெரிந்து கொள்ளாமல்

அதன் பின் உள்ள பக்கங்களில் ஒன்றும் எழுதப்படாமல் இருக்கிறது.

ஒரு உண்மை டைரி இது.கலப்படம் இல்லாதது.

3 comments:

settaikkaran said...

நல்ல பதிவுங்க...நாம் எழுதின டைரியை பல வருடம் கழித்து நாம் படிக்கிற போது சில சமயம் சிரிப்பும் சில சமயம் அழுகையும் சேர்ந்து வரும்.

லதானந்த் said...

இப்பவும் அவ்வளவு சினிமாப் பாக்கறீங்களா? இன்று வரை வருஷத்துக்கு 2 அல்லது மூணு சினிமாவுக்கு மேல் நான் பார்த்ததில்லை! அடோ சாமி நெம்பப் படம் பாத்திருக்கீங்க!

ஆதி மனிதன் said...

//ஒரு மாதத்தில் ஆறு படங்கள் பார்த்து உள்ளேன்//

வீட்டுக்கு தெரிஞ்சா தெரியாமலா? சொல்லவே இல்ல?