Monday, August 25, 2014

அம்மாவும் ஃப்ளைட்டும்



2011-ல் அம்மா பிறந்தநாள் அன்னைக்கு அம்மாவை ஃப்ளைட்டில் காசி கூப்பிட்டு போலாம் என்று ஜெட்-ஏர்வேஸில் டிக்கெட் போட்டு இருந்தேன். அம்மாக்கு முதல் ஃப்ளைட் பிரயாணம். எனக்கு அம்மாவை ஃப்ளைட்டில் கூட்டிப்போற பெருமை.

என் அம்மா எங்காச்சும் ட்ரையினில் பஸ்ஸில் போனால் ஹோட்டலில் வாங்கி சாப்பிட விரும்பவே மாட்டாங்க.எங்களையும் விடமாட்டாங்க.

அவர்கள் வராமல் நாம் மட்டும் போனால் கூட கடலை வறுத்து போட்ட சூப்பரான  புளியோதரை(முதல் நாளே காய்ச்சி வச்சது) அல்லது எலுமிச்சை சாதம்,வடகத்துவையல்,உருளைக்கிழங்கு ரோஸ்ட்,கொஞ்சம் வத்தல் என்றும் என் பசங்க வந்தா சுருங்க சுருங்க வறுத்த மட்டன்...காலைக்கு வெண்பொங்கல் அல்லது + சிறுபருப்பு சாம்பார்(நெய் பாட்டிலில் ஊத்தி வச்சுடுவாங்க)+வறுத்த தேங்காயில் கெட்டி சட்னி அல்லது குட்டி குட்டியாய் தோசை+ நல்லெண்ணெயில் மிதக்கும் தக்காளி சட்னி என்று வகைத்தொகையாய் செய்து பேக்கிங் ஆரம்பிச்சுவாங்க.வேணாம்மான்னு சொன்னாலும் கம்முன்னு இரும்மான்னு சொல்லிட்டு சத்தமில்லாமல் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.

சில சமயம் கோயம்புத்தூர் என் பசங்க கூட காலை 6.30 மணி ட்ரையினிற்கு தாம்பரத்திலிருந்து செண்ட்ரல் போகும் போது அம்மா சத்தமில்லாமல் செய்து வச்சிருந்த மட்டன் பிரியாணி எடுத்துட்டு போவோம். முத நாள் நைட்டே பிரியாணிக்கு தாளிச்சு கறியை வேக வச்சுடுவாங்க.அது நெய்யில் ஊறிட்டு இருக்கும். காலையில் நாங்க குளிச்சு கிளம்பும் போது அதில் தண்ணீர் ஊத்தி கொதிச்சதும் அரிசி போட்டு இரண்டு விசிலில் பிரியாணி ரெடி.

இப்படி பார்த்து பார்த்து செய்து தரும் அம்மாவை முதல் முறையாக ஃப்ளைட்டில் கூப்பிட்டு போகும் போது என் பசங்க இன்னைக்கு வேலை எதுவும் செய்யாமல் அவ்வாவை கூட்டி போங்கம்மான்னு ஆர்டர் போட்டுடாங்க...

அவ்வா 6.30 மணி ஃப்ளைட்..அதில் சாப்பாடு தருவாங்க..அது பிடிக்கலைன்னா கூட 9 மணிக்கு டில்லியில் நீங்க சாப்பிடலாம்னு ஐடியா கொடுத்து கட்டாயம் எதுவும் செய்ய கூடாதுன்னு சொல்லிடுச்சுங்க..என் அம்மாவும் மனசேயில்லாம சரின்னு சொல்லிட்டாங்க.சரின்னு காஃபி மட்டும் வீட்டில் குடிச்சுட்டு 10 நிமிஷத்தில் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஏர்ப்போர்ட்டிக்கு காலை 5க்கு போயாச்சு.பாவம் அம்மா அப்பவே பசியிருக்கும் போல ஆனா ஒன்னுமே சொல்லலை.காலையில் சீக்கிரம் எழுந்து குளிச்சதால் பசி கட்டாயம் வந்திருக்கும்.

6.30க்கு ப்ளைட் கிளம்பியாச்சு.ஏர் ஹோஸ்டஸ் அங்கேயும் இங்கேயும் போறாங்க வராங்க ஒன்னுமே சாப்பிட தரலை.கொஞ்ச நேரம் கழிச்சு ப்ரெட்.பன்,பட்டர்,ஜாம்,வித்தாங்க.எங்க அம்மாக்கு அது பிடிக்காது. அதனால் 9 மணிக்கு டில்லியில் சாப்பிட்டுக்கலாம்னு சொல்லிடாங்க.நானும் சரின்னு விட்டுட்டேன்.  ரெண்டு நாய் பிஸ்கெட்டும் ஒரு தண்ணீ டீயும் ஃப்ரீயா கொடுத்தாங்க.கடனேன்னு அதை வாங்கி வேறு வழியில்லாமல் சாப்பிட்டோம். 9 மணிக்கு டில்லியில் ஃப்ளைட் இறங்காமல் டில்லி மேலேயே சுத்து சுத்துன்னு சுத்திட்டே இருக்கு. செம பனி அதனால் இறங்க முடியாதுன்னு ஒரு மணிநேரம் சுத்திட்டு FUEL தீர்ந்துடும்னு சொல்லிட்டு ஃப்ளைட் ஜெய்ப்பூர் போயிடுச்சு.

ஜெய்பூர் போனதும் நம்ம ஃப்ளைட் வெயிட்டிங்கில் 14ஆவது ஃப்ளைட்.13 ஃப்ளைட் டில்லி போனதும் நம்ம ஃப்ளைட் கிளம்பும்னு சொல்லிடாங்க.சரி ஒரு மணிநேரத்தில் போயிடலாம்னு நாங்க நினைச்சோம். எங்களுக்கு 11 மணிக்கு கனெக்டிங் ஃப்ளைட் காசிக்கு டில்லியிலிருந்து புறப்படும். ஒரே கம்பெனி ஃப்ளைட் அதனால் நமக்கு வெயிட் செய்வான்னு நம்பிக்கை. மெல்ல பசியெடுக்க ஆரம்பிச்சது. ஃப்ளைட்டில் எல்லோரும் கத்த ஆரம்பிச்சாங்க.ஏர் ஹோஸ்டஸ் ஒரு கலர் தண்ணிய எல்லோருக்கும் கொடுத்துச்சு.அப்புறமும் கத்த ஆரம்பிக்கவும் வெளியே போய் கொஞ்சம் நாய் பிஸ்கெட் வாங்கி வந்து ஆளுக்கு இரண்டு.கொலைப்பசி.என் அம்மாவை நான் நிமிந்தே பார்க்கலை. அம்மா பாவம் கண்ணை மூடிட்டு உட்கார்ந்து இருந்தாங்க. வெளியே விடுங்கடா நாங்க போய் சாப்பிட்டு வர்ரோம்னு சொல்லி பார்த்தா அது முடியாதுன்னு சொல்லிட்டாங்க. .என் சீட்டிற்கு முன்னாடி இருந்த ஒரு தமிழ்க்காரர் தன் ஃப்ரெண்டிற்கு மதியம் 1 மணிக்கு ஃபோன் செய்தார். அந்த பக்கம் ஃபோன் எடுத்ததும் என்னடா சாப்பிட்டாச்சான்னு கேள்வி கேட்டார்,அவர் ஆமாம்னு சொல்லவும் இவர் என்னடா சாப்பிட்டன்னு கேட்டார். அவர் சொல்ல சொல்ல இவர் சத்தமாக..என்னது மட்டன் பிரியாணியா,சிக்கன் சுக்காவா,என்ன ப்ரான் ரோஸ்ட்டா,அப்புறம் முட்டை ஆம்லெட்டான்னு சத்தமா எல்லோருக்கும் கேக்குற மாதிரி சொல்லிட்டு சரிடா நான் ஃபோனை வைக்கிறேன். நல்லாயிருப்படா நீன்னு சத்தமா சொல்லிட்டு ஃபோனை வச்சார். இதையெல்லாம் கேக்கவும் எல்லோரும் பசியை மறந்து சிரிச்சோம். ஆனா இதை கேக்கவும் எனக்கு ரொம்ப பசி வந்திடுச்சு.ஒரு ஏர் ஹோஸ்ட்டஸும் எங்க பக்கத்துல வர்லை. ஜன்னல் வழியா நான் ஒவ்வொரு ஃப்ளைட்டா எண்ணி கொண்டிருந்தேன். 13 ஃப்ளைட்டிற்கு அப்புறமா எங்க ஃப்ளைட் கிளம்பி மதியம் 3 மணிக்கு டில்லி வந்தோம். . . டில்லிக்கு வந்தா காசி ஃப்ளைட் எங்களை விட்டுட்டு போயிடுச்சு


காசி போறவுங்க நாளை காலை 9 மணிக்கு அனுப்பபடுவார்கள்னு சொல்லி கூட்டமா ஒரு இடத்தில் வெயிட் செய்ய சொல்லவும் கூட்டத்தை விட்டு அங்கேயிங்கே போக முடியலை.நாம் சாப்பிட போனா எங்க நம்மை விட்டுட்டு போயிடுவாங்கன்னு அவர்கள் சொன்ன இடத்தில் காத்துகிடந்தோம்.டில்லி ஏர்ப்போர்ட் வெளியே மாலை வேலையில் அப்படி ஒரு குளிர்.பனி மூஞ்சியில் அடிக்குது. அதை வேற சாமாளித்து அப்புறமா ஒரு பஸ்சில் ஏத்தி ஒரு 3 ஸ்டார் ஹோட்டலுக்கு அனுப்பினார்கள்.  6 மணிக்கு ஹோட்டல் வந்ததும் ரிஷப்ஷனில் மாலை 7 மணிக்கு டின்னர்ன்னு சொன்னாங்க..தேவுடான்னு இருந்துச்சு.ரூமிற்கு போய் ரிஃப்ரெஷ் செய்துட்டு டைனிங் ஹாலுக்கு ஓடி போய் .6.30 மணிக்கே உட்கார்ந்து கொண்டோம்.


அங்க பார்த்தா பஃபே.....ஆவி பறக்க எண்ணெய் ஒட்டாத பூரி,சப்ஜி,ஃப்ரைட் ரைஸ்,பனீர் மசாலா,சீஸ் பரோட்டா,குலோப் ஜாமூன்,கேரட் அல்வா, பட்டர் நான், பாயாசம்,ஐஸ்கிரீம்,ஃப்ரூட் சாலட் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமல் ஒரு வெட்டு வெட்டிட்டு நிமிர்ந்தோம். காலை 5 மணியிலிருந்து பசி பசின்னு இருந்து மாலை 7 மணிக்கு அப்படி ஒரு சாப்பாடு. சாப்பாட்டின் அருமை புரிந்தது. என் அம்மாவை ஓட்டும் என் பசங்கக்கிட்ட ஃபோனில் ஜெய்பூரிலிருந்து  விஷயத்தை சொன்னா விழுந்து விழுந்து சிரிக்குதுங்க. அச்சச்சோ பாவம்மா அவ்வான்னு அப்புறம் சாரி சொல்லிச்சுங்க.விதவிதமா சமைத்து தரும் அம்மாவை ஃப்ளைட்டுல போறோம்னு ஒரு நாள் முழுசும் பட்டினி போட்ட கொடுமைக்காரி நான்.


8 comments:

”தளிர் சுரேஷ்” said...

நம்முடைய வீட்டுச்சாப்பாடு வெளியில்கிடைக்காது! உணவின் அருமை பசியில்தான் தெரியும் என்பது உங்கள் பதிவில் நன்றாக புரிகிறது!

இராஜராஜேஸ்வரி said...


"அம்மாவும் ஃப்ளைட்டும்"

நினைச்சது ஒண்ணு
நடந்தது ஒண்ணு..!

ஹுஸைனம்மா said...

பல சமயம் இப்படித்தான் ஜம்பமா (கஷ்டத்தைக் குறைக்கலாம்னு நெனச்சு) எதாவது செய்யப்போய், இடக்கு மடக்கா ஆகிப்போவும். அதுவும் குறிப்பா அம்மா-அப்பா அல்லது மாமியார்கிட்ட தான் இப்படி ஆகிப்போகும். நமக்கு தர்ம சங்கடம்.

அமுதா கிருஷ்ணா said...

சரியா சொன்னீங்க தளிர் சுரேஷ்...

அமுதா கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் ரொம்ப வசதியா கூட்டி போறோம்னு நினைச்சு வசமா மாட்டிக் கொண்டோம்..இராஜராஜேஸ்வரி

அமுதா கிருஷ்ணா said...

ஹூசைனம்மா நாமெல்லாம் வாங்குற பல்புக்கு அளவு இருக்கா என்ன??

arputharaju.blogspot.com said...

அம்மா வராமல் நீங்கள் போகும் பயணத்துக்கு, அம்மா பார்த்து பார்த்து செய்து தரும் சமையல் அயிட்டங்களிலேயே நாக்கில் எச்சில் உற ஆரம்பித்து விடுகிறது...

அதிகாலை 04:00 மணிக்கு காபி மட்டும் குடித்த அம்மாவை, டில்லி – ஜெய்ப்பூர் என வானவெளியை சுற்றி சுற்றி காண்பித்த பின் , 11:00 மணிக்கு மெல்லவா பசி எடுக்கும்? பாவம் அம்மா... முன் சீட்டு அசாமி வேறு பிரியாணி, சிக்கன் சுக்கா என்று போனில் பேசி அசுர பசியை வேறு கிளப்பி விட்டுள்ளார்...
எப்படியோ டெல்லியில் மாலை 07:00 மணிக்கு 3 * ஓட்டலில் ஒரு வெட்டு வெட்டுன பிறகுதான் படித்த எனக்கும் நிம்மதியாச்சு...

அன்றைய தின நிகழ்வுகள் உங்களை கொடுமைக்காரி ஆக்கினாலும் அம்மாவின் காசி பயணம் அவர்களுக்கு கண்டிப்பாக மன நிறைவை உண்டாக்கியிருக்கும்.