Monday, May 05, 2014

பெற்றோர்களே தாய்மார்களே!!

வரப்போகுது ரிசல்ட் திருவிழா.சொந்தக்காரர்கள்,நண்பர்கள் கூட்டத்தில் நிச்சயம் யாராச்சும் +2 எழுதி இருப்பார்கள். என்ன மார்க் எடுத்த என்று யார் கிட்டேயும் கேட்க கூடாது என்று இந்த வருடமும்  நினைத்து கொண்டுள்ளேன். யார் எவ்ளோ எடுத்தா நமக்கென்ன என்ற எண்ணம் இல்லை. இப்படி நாம் கேட்போம் என்பதற்காகவே அந்த மாணவி/மாணவன் மேல் அவர்களின் பெற்றோர்கள் வைக்கும் பிரஷர் இருக்கே.பாவம் அந்த கண்மணிகள். ஆனாலும் காத்தோடு சில விஷயங்கள் சில வருடங்கள் கழித்து கேட்டு தொலைக்க வேண்டியிருக்கே.

இப்படியும் நடக்கலாம்:

1. என்னுடன் முதுகலை படித்த ஒருவர் +2வில்,டிகிரியில் ஃபெயில்.முதுகலை வந்து நன்கு படித்து பிறகு M.phil படித்து இப்போ அரசு கல்லூரியில் H.O.D.

2. என் கணவருடன் படித்த ஒருவர் ஸ்கூலில் மிக சுமாராக படித்தவர். இப்போ அவர் இருக்கும் ஊரில் மிக நல்ல டாக்டர்.

3.  +2வுடன் படிப்பை விட்டு விட்ட ஒரு நண்பர் ஒருவர் தற்சமயம் தன் பெண்ணிற்கு 100 பவுன் நகை போடும் அளவிற்கு தன் காய்கறி பிசினசில் பணம் சேர்த்து உள்ளார்.

4. +2-வில் ஃபெயில் ஆன ஒருவர் தான் பாஸ் என்று தன் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்துட்டு தன் சித்தி வீட்டிற்கு டில்லிக்கு ஓடி விட்டார். இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். இப்போ சென்னையில்  கேட்டரிங் பிசினசில் கொடிக்கட்டி பறக்கிறார்.

இப்படியும் நடக்கலாம்:

1.9 ஆம் வகுப்பில் இருந்து தன் ஒரே பெண்ணை நாமக்கல் ப்ராய்லர் பள்ளியில் தன் தகுதிக்கு மீறி செலவு செய்து படிக்க வைத்தார். +2வில் போன வருடம் ஃபெயில்.

2. இதே போல் இன்னொருவர் தன் மகளையும் அந்த பள்ளியில் சேர்த்தார்.+2-வில் மிக சுமாரான மார்க்.ஆனாலும் விடாமல் பணம் கொடுத்து போனவருடம் இஞ்சினியரிங் சேர்த்தார். ஒரு வருடம் மட்டும் தான் அந்த மாணவி கல்லூரிக்கு போனார். இப்பொ படிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வீட்டில் இருக்கிறார். இந்த வருடம் கலைகல்லூரியில் சேர்க்க உள்ளார்கள்.
கலைக்கல்லூரியில் சேர்பவர்கள் எல்லோரும் மக்கு என்பது இவரின் பெற்றோர்கள் என் காதுபடவே சொல்லி உள்ளார்கள்.

3.இன்னொரு சொந்தக்காரர் தன் ஒரே மகனை ரிசல்ட் வரும் முன்னரே 15 லட்சம் கொடுத்து ஒரு கல்லூரியில் சேர்த்து விட்டார். இது தவிர வருடம் ஒன்றரை லட்சம் ஃபீஸ்.இரண்டு வருடங்கள் கழித்து போன மாதம் அந்த பையன் நான் காலேஜ் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து இப்போ கலைக்கல்லூரியில் சீட் தேடுகிறார்கள். 12 அரியர்ஸாம்.

4.இன்னொருவர் மகன் 6 வருடங்களாக இஞ்சினியரிங் படித்து கொண்டேயிருக்கிறார்.

5. சிதம்பரம் காலேஜில் பணம் கொடுத்து சேர்த்த ஒருவரின் மகன் அங்கே தண்ணீ,போதை என்று பழகி இப்போ ட்ரீட்மெண்ட்டில் இருக்கிறார்.

6. சொந்தக்காரரின் மகள் +2வை பாதியில் விட்டுவிட்டு மனநல மருத்துவரை இப்போ பார்த்து கொண்டு இருக்கிறார். அவர்கள் தங்கள் மகளை டாக்டருக்கு படிக்க சொல்லி ஏகப்பட்ட பிரஷர்.

7. ஐந்து வருடம் முன்பு பெரியகுளத்தில்  +2 படித்த பெண் தூக்கு போட்டு கொண்டாள். பெற்றோருக்கு ஒரே பெண்.

8. தெரிந்த பெண் மருத்துவம் சீட் கிடைக்காமல் சூசைடு அட்ம்ட். பிறகு வெட்னரி படித்து திருமணம் முடித்து அமெரிக்கா போனார். இன்று வரை ஹவுஸ்-வைஃப்.

இப்படி நம்மை சுற்றி நிறைய கதைகளை கேட்டு இருப்போம். இதை எதையும் நம் குழந்தைகள் மீது திணிக்காமல் அவன்/அவளால் என்ன செய்ய முடியும். என்பதை யோசித்து கோர்ஸ் செலக்ட் செய்ய வேண்டும் .நிச்சயம் படித்த பெற்றோர்களால் அதை அளவிட முடியும். இதை படிக்கிறேன் என்று சொன்னதும் அய்யோ அதை படிச்சு என்ன செய்ய போற என்ற கேள்வி தான் நிறைய பெற்றோரிடம். எதையும் விரும்பி படித்தால் அந்த துறையில் உருப்படலாம் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை.புரிவதில்லை.

அவன் அமெரிக்கா போயிட்டான்,இவன் லண்டன் போயிட்டான் என்று  மட்டுமே பெற்றோர் கண்ணுக்கு தெரியுது. எத்தனை பேர் பி.ஈ படிச்சுட்டு 5000, 7000 என்று சம்பளம் வாங்குகிறார்கள் அதுவும் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவே மாட்டேங்குது. இதில இன்னும் கொடுமை வேலை கிடைக்கவில்லை என்பதற்காக பணம் கொடுத்து M.E சேருகிறார்கள். ஏதாவது கல்லூரியில் ஆசிரியர் வேலையாச்சும் கிடைக்கும் என்பது தான் காரணம். வேறு வேலை கிடைக்கலை அதான் டீச்சரானேன் என்ற கதை நம் ஊரில் மட்டும் தான் நடக்கும்.

தெற்கே பைன்களை விட பெண்கள் தான் நிறைய பி.ஈ படிக்கிறார்கள். வேலைக்கும் போறதில்லை. கல்யாண பத்திரிக்கையில் ஏதாவது டிகிரி போட்டுக்க முன்பெல்லாம் பெண்கள் படிச்ச மாதிரி இப்ப பி.ஈ இருந்தா தான் கல்யாணம் நடக்கும் போல.

அமெரிக்காவிற்கு கணவருடன் போகும் போது சில விசாக்களில் அங்கே போய் 6 வருடங்கள் வரை வேலைக்கு போக முடியாமல் சும்மா இருக்க போவதற்கு எதற்கு பி.ஈ என்று தெரியவில்லை.

பி.ஈ படிச்ச பைன்கள் பி.ஈ படிச்ச பெண்கள் தான் வேண்டும் என்பது எழுதாத சட்டம் ஆகி போச்சு. கலைக்கல்லூரியில் பெண்கள் PG படிச்சு இருந்தாலும் மதிப்பதில்லை. அதனாலேயே எப்பாடு பட்டாவது பெண்களை பி.ஈ படிக்க வைச்சுடுறாங்க.

+2 படிக்கும் வரைக்கும் நம் சொன்ன பேச்சை கேட்கும் நிறைய குழந்தைகள் காலேஜ் போனதும் கேட்கவே மாட்டார்கள். +2 வரை ஆட்டு மந்தைகள் போல தலையாட்டும் இவர்கள் ஒரு வருடம்,இரு வருடம் கழித்து தைரியம் பெற்று பிடிவாதம் செய்ய தொடங்குகிறார்கள். அதன் பிறகு வருடங்களும் வேஸ்ட்,பணமும் வேஸ்ட். 17 வருடங்கள் வளர்த்த நமக்கே தெரிவதில்லை நம் பிள்ளை இதை செய்யுமா இல்லையா என்று.


ஆகவே பெற்றோர்களே தாய்மார்களே,பி.ஈ என்ற படிப்பில்லாமலும் இந்த சமூகத்தில் நாம் வாழ முடியும்.கட்டாயம் கல்வி அவசியம் தான் ஆனால் கல்வி என்றாலே அது பி.ஈ மட்டும் தான் என்று தொங்கி கொண்டே இருக்க வேண்டுமா???

என் இரு மகன்களையும் பி.ஈ படிக்க வைக்கவில்லை என்று நாங்கள் மிகப்பெருமையாக சொல்லி கொள்கிறோம். நிறைய பேர் என்ன இப்படி செய்தீட்டீங்க என்று ஆச்சரியப் படுகிறார்கள். நாங்கள் என்னவோ தப்பு செய்துட்ட மாதிரி. இரண்டும் மக்கு போல அதான் பி.ஈ படிக்க வைக்கலை என்றும் நினைத்து கொள்வார்கள். நினைச்சுக்கட்டுமே. ஒவ்வொருவரின் நினைப்பையும் நாம் மாற்ற முடியாது.

ட்ரக்கிங், ரயில் பயணங்கள்,காட்டில் விலங்குகள் சென்சஸ், போட்டோகிராபி என்று அடிக்கடி இருவரும் செல்கிறார்கள்.  இந்த உலகை புரிந்து கொள்கிறார்கள். வாழ்க்கையில் சந்தோஷம் என்பது பி.ஈயில் மட்டும் இல்லை என்று நாங்கள் புரிந்து கொண்டோம்.  யாரோ சம்பாதிக்க அவர்கள் நடத்தும் காலேஜிற்கு லட்சங்களை கொட்டி கொடுக்க துணிந்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எது சந்தோஷம் என்பதை அறிந்து அதற்காக சில ஆயிரங்கள் செலவு செய்ய அதிகம் யோசிக்கிறார்கள்.

20 ஆயிரம் சம்பளம் வாங்கும் இடத்தில் கலைக்கல்லூரியில் படிச்சவன் 10 ஆயிரம் வாங்கட்டுமே. டென்ஷன் இல்லாமல் இருக்கட்டுமே. நம் ஆசைகளை அவர்கள் மீது ஏன் திணிக்க வேண்டும். அவர்கள் வாழப்போகும் ஒரே ஒரு வாழ்க்கையினை அவர்களின் ஆசைப்படி வாழட்டுமே. எத்தனை சாஃப்ட்ஃபேர்க்காரர்கள் மன நிம்மதியோடு இருக்கிறார்கள்??


நான் புரிந்து கொண்டு என் பையன்களுக்கு அறிவுறுத்தியது..

யாரிடம் என்ன பேசணுமோ அதை ஒழுங்கா பேசி புரிய வைப்பது.
இரண்டுக்கும் மேல் பட்ட மொழியினை தெரிந்து கொள்வது.
உலக வரலாறு,புவியியல், நாடுகள் பற்றி அதிகம் தெரிந்து கொள்வது..
சின்ன வயதில் இருந்தே தினம் பேப்பர், புத்தகம் படிக்க தூண்டியது...
கார்ட்டுனுடன் சேர்ந்தே நியூஸ் பார்க்க தூண்டியது..
கிரிக்கெட் தாண்டியும் உள்ள நிறைய விளையாட்டுகளை பார்க்க தூண்டியது..
சின்ன வயதிலேயே நீச்சல்,சைக்கிள்,பைக்,கார் ஓட்ட கத்து கொடுத்தது..
இது எல்லாம் தன்னம்பிக்கையை தூண்டும் என்று நம்பினேன்.


இதற்கெல்லாம் மிக பெரிய வசதி தேவை இல்லை. ஒரு நாளும் பணத்தை ட்யூசனுக்கு செலவு செய்யலை. இப்படி உபயோகமாக செலவு செய்தோம். ஆனால் அப்படி அமைந்தாலும் பெரும்பாலான பெற்றோர்கள் அதை பயன்படுத்துவதில்லை. கீ கொடுத்த பொம்மைகளாக தான் தன் குழந்தைகளை நினைக்கிறார்கள். சமுதாயத்தில் ஸ்டேடஸ் உயர தன் குழந்தைகளை பணயம் வைக்கிறார்கள்.

இப்போ நம் தமிழக பெற்றோர்களுக்கு தான் அவசியம் நல்ல கவுன்சலிங் தேவை.

14 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

யாரிடம் என்ன பேசணுமோ அதை ஒழுங்கா பேசி புரிய வைப்பது.
இரண்டுக்கும் மேல் பட்ட மொழியினை தெரிந்து கொள்வது.
உலக வரலாறு,புவியியல், நாடுகள் பற்றி அதிகம் தெரிந்து கொள்வது..
சின்ன வயதில் இருந்தே தினம் பேப்பர், புத்தகம் படிக்க தூண்டியது...
கார்ட்டுனுடன் சேர்ந்தே நியூஸ் பார்க்க தூண்டியது..
கிரிக்கெட் தாண்டியும் உள்ள நிறைய விளையாட்டுகளை பார்க்க தூண்டியது..
சின்ன வயதிலேயே நீச்சல்,சைக்கிள்,பைக்,கார் ஓட்ட கத்து கொடுத்தது..
இது எல்லாம் தன்னம்பிக்கையை தூண்டும் என்று நம்பினேன்.

நல்ல அறிவுரை.

முனைவர் இரா.குணசீலன் said...

நான் என் மாணவர்களிடம் அறிவுறுத்துவது..

http://www.gunathamizh.com/2013/02/blog-post_6016.html

அமுதா கிருஷ்ணா said...

நன்றி குணசீலன்..நான் வளர்த்த விதம் தான் பெஸ்ட் என்று வாதிடவில்லை.ஆனா என்ன படித்தாலும் உருப்படலாம் என்று வாதிடுவேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

தாங்கள் சொல்வது சரிதான்.

GANESAN said...

சரியாக சொல்லியுளிர்கள். உங்கள் கருத்துக்களுடன்
முழுவதும் உடன்படுகிறேன். ஆனால் எத்தனை பேருக்கு இது புரிய போகிறது?. -கணேசன்

GANESAN said...

சரியாக சொல்லியுளிர்கள். உங்கள் கருத்துக்களுடன்
முழுவதும் உடன்படுகிறேன். ஆனால் எத்தனை பேருக்கு இது புரிய போகிறது?. -கணேசன்

Ranjani Narayanan said...

//இப்போ நம் தமிழக பெற்றோர்களுக்கு தான் அவசியம் நல்ல கவுன்சலிங் தேவை.// நல்லா சொன்னீங்க! பாவம் குழந்தைகள்!

உங்கள் அறிவுரைகள் நிறைய சிந்தனையைத் தூண்டுகின்றன.

மனத்தில் இருப்பதை அப்படியே எழுதி இருக்கிறீர்கள். அந்தத் துணிவை பாராட்டுகிறேன்.

ஹுஸைனம்மா said...

நல்ல பதிவு அமுதா. நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

மிக சரியான நேரத்தில் தேவையான பதிவு! பெற்றோர்கள் தங்களின் விருப்பங்களை பிள்ளைகள் மீது திணிக்க கூடாது!

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி கணேஷன்.r.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ஹூஸைனம்மா,ரஞ்சனி மேடம்..

Siva said...

Migavum arpudhamana padhivu. Nandri...

வெங்கட் நாகராஜ் said...

சரியான நேரத்தில் சரியான பதிவு. பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ரொம்பவே கஷ்டப் படுத்துகிறார்களோ என்ற எண்ணம் தோன்றும்.....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல உதாரணங்களை எடுத்துக் காட்டி இருகிறீர்கள். மதிப்பெண்கள் வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை என்பதை பெற்றோர் உணரவேண்டும்.
பெட்ரோல் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்துக்கள்