Wednesday, January 08, 2014

ஒளவையார் கொழுக்கட்டை

ஆடி,தை,மாசி மாதம் செவ்வாய் கிழமைகளில் ராத்திரி 10 மணிக்கு எங்கள் பாட்டியின் பெரிய வீட்டிற்கு தெரிந்த பெண்கள்,அருகில் இருக்கும் சொந்தகார பெண்கள் என்று ஒவ்வொருவராக வருவார்கள்.எனக்கு தூக்கம் தூக்கமாய் வந்தாலும் என் சித்திகளுடன் சேர்ந்து அந்த விரதத்திற்கு நானும் ரெடியாவேன்.

கிச்சனை இரவு 8 மணிக்கே சுத்தமாய் கழுவி, விறகு அடுப்பில் கோலம் போட்டு சும்மா பளிச்சென்று இருக்கும். வரும் பெண்கள் பச்சரிசி மாவு கொண்டு வருவார்கள். அனைவரின் மாவையையும் ஒன்றாக போட்டு உப்பு சேர்க்காமல் வெந்நீரில் பிசைந்து ஆளுக்கு கொஞ்சம் மாவு + கிண்ணத்தில் நல்லெண்ணெய் வைத்து கொண்டு எதோ கதைகள் பேசி கொண்டு அவர் அவர் விரும்பும் சைசில் உருண்டை,கிண்ணம் மாதிரி,சின்ன சின்ன துண்டுகள் மாதிரி,கூடை மாதிரி எண்ணெய் தொட்டு தொட்டு அழகாய் செய்வோம். நான் செய்வது எப்பவும் கோணிக் கொண்டே தான் இருக்கும். போட்டி போட்டி கொண்டு செய்வோம். என் சித்தி மாட்டு வண்டி மாதிரி, பூக்கூடை மாதிரி எல்லாம் செய்வார். அவ்வா அத்தனை கொழுக்கட்டைகளையும் கொதிக்கும் தண்ணீரில் போட்டு போட்டு வெந்ததும் எடுத்து அழகாய் ஒரு பெரிய பாத்திரத்தில் நிரப்புவார்.

வெள்ளை வெள்ளயென்று அப்பவே சாப்பிட தோன்றும் ஆனாலும் சாமி கண்ணை குத்தும் என்று பொறுமை காப்போம்.எல்லா கொழுக்கட்டையும் ரெடி ஆனதும் வயதான ஒரு பெண்மணி எல்லா வருடமும் எல்லா செவ்வாய்கிழமையும் சொன்ன ஒரு கதையினை ரகசியமாய் சொல்ல ஆரம்பிப்பார். அதற்கு உம், உம்,உம் என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டும். நான் அந்த கொழுக்கட்டையினை எப்போ சாப்பிடுவோம் என்று அதையே பார்த்துக் கொண்டு கதையே கேட்காமல் ம்,ம்,ம், என்று சாமியாடிக் கொண்டு இருப்பேன். கதை முடிந்ததும் எல்லா பெண்களும் அவர் அவர் கொண்டு வந்த தேங்காயை சாமிக்கு உடைத்து தீப ஆராதனை செய்வர். அதன் பின் உடைத்த தேங்காய் துண்டுகளை வைத்து கொண்டு ராத்திரி 12 - 1 மணிக்கு கொழுக்கட்டைகளை சாப்பிடுவோம்.கோணலாய் இருப்பதை எல்லாம் நீ செய்தது என்று என் சித்தி என்னை கிண்டல் செய்வார். தூக்கம் கண்களை சொக்க மீதமுள்ள கொழுக்கட்டைகளை அவர் அவர் வீட்டிற்கு எடுத்து போவர். மறுநாள் காலையில் சாப்பிடவும் நல்லாயிருக்கும்.அந்த கொழுக்கட்டைகளை ஆண்கள் சாப்பிட கூடாதாம்.பொதுவாய் மீதம் வைக்காமல் இரவே சாப்பிட வேண்டும் என்பது கட்டுப்பாடு. கதை ரகசியமாம். எனக்கு நினைவு இருக்கு. ஆனால் ஏரியாக்கு ஏரியா கதை மாறும் என்று நினைக்கிறேன்.

இப்பொழுதெல்லாம் எங்க வீட்டில் அந்த கதை சொல்ல ஆளும் இல்லை,அந்த விரதம் இருப்பதுமில்லை. ஆனால், ஆண்கள் பங்கு பெறாமல் அவர்களுக்கு கொடுக்காமல் எதோ ரகசியமாய் பெண்கள் மட்டும் ஸ்பெஷல் என்பது போல் செய்வது பயங்கர த்ரில்லிங்கா இருக்கும்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள்,உறவு பெண்களின் நட்பு வலுபட இப்படி விரதம் என்ற பெயரில் ஒன்று கூடி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். பேசாதவர்கள் கூட அன்று ஒருவருடன் ஒருவர் பேசி கொள்ள சான்ஸ் கிடைக்கும்.

செல்வத்தை அள்ளித்தரும்  என்ற நம்பிக்கை.

அப்படியே இதை பார்த்துட்டு போங்க.

ஆண்கள் மட்டும் இப்படி ராத்திரி ஒன்று கூடினால் என்ன செய்வார்கள் என்பதை நான் இங்கு சொல்ல வேண்டியதில்லை.

டிஸ்கி: அந்த பாட்டிற்கும் கொழுக்கட்டைக்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு நல்ல பாட்டு ரொம்ப நாளைக்கு அப்புறமா பார்த்தீங்க..இல்லையா.. அனுபவிக்கணும், ஆராய கூடாது ஆமா சொல்லிட்டேன்.

9 comments:

இராஜராஜேஸ்வரி said...

அக்கம் பக்கம் உள்ளவர்கள்,உறவு பெண்களின் நட்பு வலுபட இப்படி விரதம் என்ற பெயரில் ஒன்று கூடி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். பேசாதவர்கள் கூட அன்று ஒருவருடன் ஒருவர் பேசி கொள்ள சான்ஸ் கிடைக்கும்.

அருமையான அனுபவம்..!

திண்டுக்கல் தனபாலன் said...

ஏரியாக்கு ஏரியா கதை மாறுவது உண்மை தான்...

கோமதி அரசு said...

நானும் சிறு வய்தில் இந்த விரதம் இருக்க போவேன். பாட்டி கதை சொல்லும் போது உம் உம், கொட்ட வேண்டும் நீங்கள் சொன்னது போல்.
அதன் பின் திருமணம் ஆன் பின் விரதம் இருந்த தெரிந்தவர்கள் வீட்டில் சீக்கிரம் 10 மணிக்கே முடித்து விடுவார்கள் பாட்டி மாதிரி விரிவாய் கதை சொல்லாமல் விரைவாய் முடித்து விடுவார்கள்.
நீங்கள் சொல்வது போல ஊருக்கு ஊர் கதை மாறுகிறது.
மலரும் நினைவுகளை கிளறி விட்ட பதிவு.

ராஜி said...

எங்க ஊர்ப்பக்கம் இல்ல. ஆனா, நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ அம்மா மதுரை பக்கம் குடி இருந்தபோது இந்த திருவிழா கொண்டாடி இருக்காங்களாம். அம்மா சொல்லி இருக்காங்க,

”தளிர் சுரேஷ்” said...

அந்த கதையை ரகசியம்னு சொல்லாம விட்டுட்டீங்களே! இது என்ன விரதம்? எங்க பக்கத்தில் இல்லை?

unmaiyanavan said...

தங்களின் இந்த பதிவைப் படித்த பிறகு, எனக்கு என் அம்மா "செவ்வாய்க்கிழமை சாமி" கும்பிட்டது தான் உடனே நியாபகம் வந்தது.

நானும் என் தம்பியும் ஏமாந்து விடக்கூடாதுன்னு, எங்களுக்கு மட்டும் தனியாக "உப்புக்கொழுக்கட்டை" செய்துக்கொடுப்பார்கள்.

இந்த பதிவை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

தகவலுக்கு நன்றி.....

krishnan said...

thank for this message to hear new one for me

vulinarytours.blogspot.com said...

This post made me very nostalgic.
My aunt used to keep this avayaar viratham when we were little. We have to say "solama solu" (to make sure we don't fall sleep, I guess) when they narrate the story. By the way, My hometown is Tirunelveli too. Our house was in swami Sannadhi st(where Nalli store is now).

You have a nice blog.