Tuesday, October 23, 2012

S ஆக பார்த்தேன்

சின்ன s :  சாப்பிடுறோமோ இல்லையோ தினப்படி சமையல் செய்து செய்து அலுத்து போய் இதிலிருந்து ஒரு இரண்டு நாளாவது எஸ் ஆவது எப்படின்னு தீவிரமாய் யோசித்து திருப்பதிக்கு எஸ் ஆகலாம் என்று உடனே திட்டம் போட்டு என் மகன்களும்,கணவரும் அந்த கூட்டதிற்கு நாங்கள் வரலை என்று எஸ் ஆக என் சித்தி, அவரது பெண்,என் தம்பி அவரின் மனைவி,என் தங்கை என்று ஒரு படையுடன் திருமலைக்கு போன புதன் கிழமை(17) எஸ் ஆனேன்.புதனன்று திருமலையில் கூட்டமே இல்லை. பத்தோடு பதினோரு ஆளாக நின்று 600 ரூபாய்க்கு ரூம் போட்டு, நந்தகம் என்ற புத்தம் புது ரூமில் நாங்கள் தான் பால் காய்ச்சி குடியேறினோம்.ரூம் இருந்தது புதிய அன்ன பிரசாத பில்டிங் பக்கத்தில். இரவு தர்ம தரிசனம் 10 மணிக்கு போனால் 12 மணிக்கெல்லாம் சாமி கும்பிட்டு வெளியில் வந்து லட்டு வாங்கி ரூமிற்கு வர 1 மணி ஆனது.

என் சித்தி பெண் கட்டாயம் அங்க பிரதட்சணம் செய்யணும் இது வரை செய்ததே இல்லைக்கா என்று கூறவும் சரியென்று அப்படியே தூங்காமல் புஷ்கரணி சென்று இரண்டு முங்கு போட்டுட்டு(இரவு 1.30க்கு) அங்கபிரதட்சண கியூவில் நின்று கொண்டோம்.செம குளிர். அங்கபிரதட்சணம் செய்து இன்னொரு முறை சாமி தரிசனம் செய்து ரூமிற்கு காலை 4.30 க்கு வந்து பிறகு தூங்கினோம்.எதற்கும் இருக்கட்டும் என்று அங்கபிரதட்சண் டோக்கன் முதல் நாள் இரவு 7 மணிக்கே வாங்கி வைத்திருந்தோம். அடுத்த நாள் பிரம்மோத்ஸ்வம் காலை மாலை பார்த்து விட்டு மறுநாள் வெள்ளி காலை சென்னை வந்தோம். இப்படி இரண்டு நாள் குடும்ப பொறுப்பிலிருந்து மிக ஆனந்தமாய் எஸ் ஆனேன். வந்து பார்த்தால் இங்கே பெய்து கொண்டிருந்த பயங்கர மழையிலிருந்தும் எஸ் ஆகி இருக்கிறேன்.

பெரிய S: என் கணவருடன் வேலை பார்க்கும் முருகன் என்பவரின் திருமணத்திற்கு பெரம்பலூர் செல்லலாம் என்று நண்பரின் Vento காரில் சனியன்று (20th) மதியம் 3 மணிக்கு நானும் என் கணவரும் அவரின் இரண்டு நண்பர்களும் கிளம்பினோம். குரோம்பேட்டை ப்ரிட்ஜ் பக்கம் போகும் போது எருமை மாடு கூட்டம் ரோடை க்ராஸ் செய்யவே மிக பொறுமையாக வண்டியினை ஓட்டி அப்படியும் ஒரு எருமை மாட்டின் பின்புறம் கொஞ்சமாய் காரின் முன்பகுதியில் இடித்து கார் ஜெர்க் ஆகி மேலும் நிதானமாக காரை ஓட்டினார் நண்பர் சேகர். திண்டிவனம் பக்கமாய் போய் கொண்டிருந்த போது ரோடில் எங்களுக்கு முன்னாடி சென்ற லாரியும், அதற்கு முன்னாடி சென்ற கார்களும் மிக மெதுவாக செல்லவே நாங்களும் வலது பக்கமாய் மெதுவாக சென்று கொண்டே என்னவோ ஆக்ஸிடெண்ட் போல இருக்கே என்னது என்று இடது பக்கமாய் பார்த்து கொண்டே பேசி கொண்டே போன போது டமால் என்று எங்கள் காரின் வலது பக்க பின்பகுதியில் ஒரு மாருதி முரட்டு தனமாய் மோதி எங்கள் கார் கன்னாபினாவென்று இடது பக்க ரோட்டோரமாய் போய் நிறுத்தப்பட்டது.நான் ட்ரைவர் சீட்டிற்கு பின்னால் இருந்தேன்.

தலை முன்னாடி சீட்டில் மோதி முதுகு நான் இருக்கும் சீட்டிலே மோதி அப்படி இப்படி குழுங்கி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. போச்சு போச்சு என்று காரை விட்டு மூவரும் இறங்கி காரின் பின்னாடி ஓடி சென்று பார்க்கும் போது நான் காரை விட்டு இறங்காமல் வலது பக்கமாக திரும்பி பார்க்கிறேன் எங்களை வந்து மோதிய மாருதி அப்பளமாய் முன் பகுதி நொறுங்கி நின்று கொண்டு இருக்கிறது. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. காரில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை.ஒரு அரை மணிநேரம் கழித்து 6 மணிக்கு கொஞ்சம் மனம் அமைதியானவுடன் நான் எதிரில் சென்னை போகும் பஸ்சில் ஏறி வீட்டிற்கு வந்து விட்டேன். என் கணவர் அவர் நண்பர்கள் போலீஸ் அது இதுவென்று அல்லாடி காலையில் வீடு வந்தனர். காரை க்ரேன் வச்சு தான் தூக்கி போனார்களாம்.அந்த சமயம் எங்காச்சும் வலிக்குதா என்று தலையினை கை கால்களை தடவி தடவி பார்த்து கொண்டோம். எனக்கு முதுகில் வலது பக்கம் மட்டும் கொஞ்சமாய் வலி இருக்கிறது.நண்பர் ஒருவருக்கு கழுத்தில் வலிக்கிறதாம்.எப்படி இப்படி எஸ் ஆனோம் என்பதே ஆச்சரியமாய் இருக்கிறது.

 எங்களுக்கு முன்னால் சென்ற ஒரு ப்ரைவேட் பஸ்ஸை எதிரில் வந்த ஒரு லாரி மீடியன் தாண்டி நேராக இடித்து தள்ளி பஸ் ட்ரைவர் இறந்து விட மற்றவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டிருந்த போது தான் 15 வண்டிகளுக்கு பின்னாடியே சென்ற எங்கள் கார் இப்படி ஆனது. மாருதி ஸ்பீட் கண்ட்ரோல் செய்யமுடியாமல் எங்கள்  மீது மோதி விட்டது.

எருமை மாட்டினை இடிக்கும் போதே பயணத்தை ரத்து செய்திருக்கணுமோ.ஒரு பிராத்தனையும் இல்லாமல் திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்தது தான் காப்பாற்றியதோ,வீட்டு வேலைகளிலிருந்து எஸ் ஆக நினைத்து உலகத்தை விட்டே எஸ் ஆக பார்த்தேனே என்று ஏகமாய் குழப்பங்கள்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னங்க... இப்படியா பயமுறுத்துறது...? (பெரிய S)

அனைவரும் விரைவில் குணமாகட்டும்...

CS. Mohan Kumar said...

நெடுந்தூர பயணங்கள் காரில் செல்லாமல் இருப்பது மிக நல்லது

நலமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன் டேக் கேர்.

வெங்கட் நாகராஜ் said...

ஓ... பயணம் பல சமயங்களில் ஆபத்தானதாய் தான் இருக்கிறது.

அனைவரும் விரைவில் குணம்பெற எனது பிரார்த்தனைகள்...

குறையொன்றுமில்லை. said...

தலைக்கு வந்தது தலைபாவோட போனதேன்னு சமாதான படுத்திக்க வேண்டியடுதான்

Vetirmagal said...

படிக்கும் போதே மனசு திடுக்குட்டது.உங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்கும்! சாலை நிகழ்வுகள், நம் கையில் இல்லை.கடவுள் அருள், எல்லோரும் தப்பியது.

ஆல் த பெஸ்ட்.

ADHI VENKAT said...

எல்லோரும் விரைவில் குணமாக பிரார்த்தனைகள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பெரிய எஸ்கேப்புக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் மோகன் குமார் கருத்து எனக்கும் உடன்பாடானது.