Wednesday, August 18, 2010

என்னைப் பற்றி

இந்த தொடரை என்னை எழுத அழைத்த பாலா அவர்களுக்கு நன்றி.75 பதிவுகள் எழுதி இருந்தும் இது தான் என்னுடைய முதல் தொடர் பதிவு. என்னை அழைத்ததற்கு நன்றி பாலா.


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அமுதா கிருஷ்ணா..

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர் அமுதா.ஏற்கனவே பதிவுலகில் ஒரு அமுதா இருந்ததால் அமுதா கிருஷ்ணாவானேன். கிருஷ்ணமூர்த்தி என்ற என் கணவரின் பெயரில் கிருஷ்ணாவை மட்டும் எடுத்துக் கொண்டேன். அப்பாவி அமுதா,அடாவடி அமுதா,அழுமூஞ்சி அமுதா,அக்கடா அமுதா,அடிதடி அமுதா  இப்படி ஒரு பெயர் வைக்கலாம் என்று தான் யோசித்தேன். 
.
3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

மார்ச் மாதம் 2008-ல் காலடி எடுத்து வைத்து ஒரு மாதம் மட்டுமே எழுதினேன்.நெட் கனெக்‌ஷன் வீட்டில் இல்லாததால் அப்புறம் ஒரு வருடம் கழித்து 2009- ஏப்ரலில் இருந்து திரும்ப எழுத ஆரம்பித்தேன்.  எழுத சொன்னது எனக்கு பதிவுலக்த்தை தெரியபடுத்தியது நண்பர் திரு.முத்துராமன் .கிழக்கு பதிப்பகத்தில் அப்போது சப் எடிட்டராக வேலை செய்து வந்தார். தற்சமயம் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸிஸ் செய்துக் கொண்டு உள்ளார்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?


முடிந்த போது மற்ற் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டு செல்கிறேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
 
வலைப்பதிவு நான் எழுதுவது என் வீட்டில் யாருக்கும் தெரியாது. சொந்த கதை,சோக கதை, சந்தோஷ கதை என்று எழுதி வந்தேன். ஏப்ரல் 2010 தேவதை இதழில் என் ப்ளாக் பற்றியும் , என்னுடைய சில பதிவுகளும் வெளிவந்தன. அந்த இதழில் வெளிவந்த பதிவுகள் அமுதா இது உனக்கு தேவையா?, முன் மாதிரி அம்மா, ஆட்டோகிராஃப்  இதை வீட்டில் அனைவரும் படித்து விட்டனர். டோட்டல் டேமேஜ் ஆனேன் வீட்டில்.ஙே என்று முழித்தேன். 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதுபோக்கு மட்டுமே.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

மூன்று.  இங்கிலிஃபிஷ் ப்ளாக், அம்மாக்களின் வலைப்பூக்கள் ஆனால் இதில் எல்லாம் எழுதி ஒரு வருடமாகிறது.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை நன்கு எழுதும் பல பதிவர்களின் பதிவுகளை படிக்கும் போது வந்து தொலைக்கிறது. கோபம்  பெண்கள் என்றால் இப்படி இருக்க கூடாது, இப்படி தான் இருக்க வேண்டும் என்று அலட்டும் சிலரின் பதிவுகளை படிக்கும் போது வருகிறது. அவர் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் வாழ முடிகிறது. ஒரு பொதுவான அளவுகோல் வைத்து அதன்படி நடப்பது தான் புத்திசாலிதனம் போல் எழுதும் சிலரின் பதிவுகள் கோபத்தினை ஏற்படுத்தும். ஆனால் அது அவர்களின் அறியாமை என்றும் தோணும்.


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
 
சந்தோஷ்...என் முதல் பதிவிற்கு வந்த ஒரே பின்னூட்ட்ம் இவருடையது.அடுத்த பதிவிற்கும் பின்னூட்டம் எழுதினார். ஒரு வருடம் நான் எழுதாததால் அப்புறம் இவரின் பின்னூட்டம் வரவில்லை.சில மாற்றங்கள் என் ப்ளாக்கில் செய்ய சொன்னார்.நன்றி சந்தோஷ்..

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

இதுவே போதுமே. இன்னும் என்னத்தை சொல்வது என்று தெரியவில்லை.

இந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்


1.ஜோக்கிரி- R.Gopi
2.கொல்லான்
3.ஸ்வர்ணரேகா
4.சந்தோஷ்பக்கங்கள்- சந்தோஷ்






















<

Tuesday, August 17, 2010

வெரைட்டி

சுதந்திர தின விழாவினை கொண்டாட எங்கள் வீட்டின் பின்னால் இருக்கும் க்ரவுண்ட் மாதிரி ஒரு இடத்தினை எங்கள் தெருவினை சேர்ந்த ரிட்டயர்ட் பெரிசுகள் சிலர் தேர்ந்தெடுத்து 14 தேதி மாலையில் சுத்தம் செய்தனர். ஆனால், நின்று கொண்டு இருந்த மரத்தின் கிளைகளை அகற்றியது எனக்கு பெரும் கோபத்தினை ஏற்படுத்தியது. அந்த கிளைகளின் அடியில் நின்று தான் ஒரு தாத்தா பாட்டி தினம் துணி அயர்ன் செய்கின்றனர். வேண்டும் என்றே அதனை மொட்டை அடித்து விழா கொண்டாடினர். இப்படி கொண்டாட விட்டால் என்ன மோசம் என்று தோன்றியது. சும்மாவே நட்புடன் ஒரு சிரிப்பு கூட சிர்க்காத அந்த பெரிசுகளுடன் நான் எதுவும் பேசவில்லை. நான் இருப்பது வாடகை வீடு. பெரிசுகள் அனைவரும் வசிப்பது சொந்த வீடு.

தி.நகரில் இருந்து கிழக்கு தாம்பரத்திற்கு 5A ஏஸி பஸ் புதியதாய் விடப்பட்டுள்ளது. அதில் போன வாரம் ஒரு நாள் பகல் வேளையில் வேளச்சேரியில் இருந்து தாம்பரம் வரை நான் மட்டுமே பயணம் செய்தேன்.
பகல் பொழுதில் அந்த பஸ் அவசியமா??

கொஞ்ச நாட்கள் முன்னாடி என்னுடன் பணியாற்றிய ஒரு ஆசிரியையை 5 வருடங்கள் கழித்துப் பார்த்தேன். பேசிக் கொண்டு இருந்த 2 மணிநேரமும் தன் ஒரே பெண்ணை பற்றி தான் பேசினார். பெண் இஞ்சினியரியங் முடித்து, சாப்ட்வேரில் பணியில் இருக்கிறார். திருமணம் முடித்து ஒரு குழந்தை இருக்கிறது. வேறு எதை பற்றியும் பேசவே இல்லை அந்த பெண்.பாப்பா, பாப்பா என்று ஒரே பாப்பா (25 வய்து) புராணம் தான். வீட்டிற்கு வந்து என் இரண்டு மகன்களிடம் கூறினேன் உங்களை பற்றி என்னால் ஒரு 10 நிமிடம் கூட தொடர்ந்து பேச முடியாதுடா என்று. ஒரே பெண் என்பதால் அவர் அப்படியா அல்லது எனக்கு பாசம் பத்தலையா என்று ஒரே கில்டியாய் போச்சு.

கோத்தகிரியில் இருக்கும் அம்மாவின் கொடநாடு வீட்டிற்கு அம்மா வரும் போதெல்லாம் அங்கு இருக்கும் அரசாங்க ஆஸ்பத்திரியின் டாக்டர் குழுமம் ஆம்புலன்சில் அவரின் வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டுமாம். ஆனால், அவர்களை எதோ காவல்காரன் மாதிரிதான் அந்த வீட்டில் இருப்பவர்கள் மதிப்பார்களாம். கூடவே ஒரு டாக்டர்கள் குழு சென்னையிலிருந்து அம்மாவுடன் வருமாம். ஆனாலும், இவர்கள் தேமே என்று காத்து இருப்பார்களாம்.

காஞ்சிபுரம் ஏ.எஸ்.பாபுஸா என்ற பட்டுப்புடனை கடை மிக ஃபேமசானது. போன மாதம் அந்த கடைக்கு போன போது கர்நாடகாவில் இருந்து வந்திருந்த ஒரு குடும்பம் 6 பெண்கள் துணைக்கு இரண்டு ஆண்கள் பில் போட்ட புடவைகளின் எண்ணிக்கை 80 இருக்கும். குடும்பத்தில் கல்யாணமாம். காலையில் இருந்து எடுத்துக் கொண்டு இருந்தனர். நாங்கள் இரவு 8 மணிக்கு அந்த கடையில் இருந்தோம்.எடுத்து வைத்த மொத்த புடவையையும் கீழே வைத்து சுத்தி அமர்ந்து பில் போட்டதால் எண்ணிக்கை தெரிந்தது. கர்நாடகா, ஆந்திரா மக்கள் வேன், கார் என்று வந்து இங்கு அள்ளுகிறார்கள். நாம் தான் தி.நகர் மட்டும் போகிறோம்.மொத்தமாய் எடுத்தால் விலை குறைகிறது இங்கு.

என் மகன் ரிஷியும் ஆக்டோபசும் ஒன்று. மெரி ப்ரவுனிற்கு உலக கோப்பை கால்பந்தாட்டம் நடந்துக் கொண்டு இருக்கும் போது போய் இருக்கிறான். அப்போது ஸ்பெயின் தான் ஜெயிக்கும் என்று கூப்பன் எழுதிப் போட்டு வந்து உள்ளான். அதற்கு பரிசாக 500 ரூபாய் மதிப்புள்ள ஃபுட் கூப்பனும், MGM நுழைவு டிக்கெட்டும் கூரியரில் அனுப்பி உள்ளார்கள்.

Monday, August 16, 2010

சந்தோஷ் சிவனின் தஹான்..

தஹான் என்ற 8 வயது காஷ்மீர் சிறுவனின் கதை. அவன் வளர்க்கும் பீர்பாலா என்னும் கழுதை மீது தஹானுக்கு உயிர். அவன் தந்தை 3 வருடங்களாய் காணவில்லை. தாய், சகோதரி மற்றும் தாத்தாவுடன் காஷ்மீரில் ஒரு மலை கிராமத்தில் சிறிய வீட்டில் வசித்து வருகிறான்.
தாத்தா இறந்ததும் அவனின் அம்மா கடன் சுமையால் வீட்டில் இருக்கும் பொருட்களுடன் சேர்த்து கழுதையையும் வட்டிக்காக கொடுத்து விடுகிறார். அதை பெற்றுக் கொண்டவன் கழுதையை ஒரு வியாபாரியிடம் விற்று விடுகிறான் .
அந்த சிறிய வியாபாரியிடம் கழுதையை கேட்டு போராடும் தஹானுக்கு, நடுவில் இட்ரிஸ் எனப்படும் ஒரு டெரரிஸ்டிடம் பழக்கம் ஏற்படுகிறது. இட்ரிஸ் தனக்கு ஒரு உதவி செய்தால் தான் கழுதையினை பெற்று தருவதாக கூறவே அதற்கு தஹான் ஒத்துக் கொள்கிறான். தஹான் அவன் தரும் வெடியினை செக்பாய்ண்டில் தூக்கி எறிந்து வெடிக்கும் படி செய்ய ஒப்பு கொள்கிறான்.
அதை தூக்கி எறிய முற்படும் போது தன் தந்தையினை மிலிட்டரி ஆட்கள் கூட்டி செல்வதை பார்க்கிறான். வெடியினை தூக்கி எறியும் போது மனம் மாறி அதை மிக பயத்துடன் ஒரு ஆற்றில் எறிகிறான். அது தண்ணீருக்குள் வெடித்து சிதறுகிறது. தன் ஊமை தாயிடம் தான் மலையில் தந்தையினை பார்த்தாதாய் கூறுகிறான். வியாபாரியின் பேரனுடன் நட்பு ஏற்படுகிறது. அந்த பேரன் தன் தாத்தாவிடம் பீர்பாலை தஹானுக்கே திரும்ப தரும்படி கூறவே பீர்பால் தஹான் வீட்டிற்கு வந்து விடுகிறது. தஹான் பெரும் மகிழ்ச்சி அடைகிறான்.
தஹானாக பூரவ் பாந்தரே, வியாபாரியாக அனுபம் கெர், ஊமை தாயாக சரிகா, கடன் கொடுத்தவராக ராகுல் கன்னா வாழ்ந்து உள்ளார்கள்.
18 வருடங்களுக்கு பின் காஷ்மீரில் படபிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பஹல்காம் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடத்தும் போது அங்கிருந்த சிறுவர்கள் துப்பாக்கியினை பார்த்து ஆச்சரியப் படவில்லையாம். காஷ்மீரின் அமைதியான அழகு நமக்கு ஒரு பயத்தினை ஏற்படுத்துகிறது.
அந்த அமைதியினை கெடுக்கும் விதமான துப்பாக்கி சத்தம் காரணமாய் இருக்கலாம்.

காஷ்மீரின் பனிபடர்ந்த பிரதேசத்தினை மிக அருமையாய் சிவன் படம் பிடித்து உள்ளார். காஷ்மீர் போய் வந்தது போல் ஒரு எண்ணம் வருகிறது.

Thursday, August 12, 2010

கோத்தகிரி+ஊட்டி

கோத்தகிரியில் என் மகன் ரிஷி சுட்ட மலர்கள்..

இந்த மாதம் குற்றாலம் போகலாம் என்று 13 பேருக்கு டிக்கெட் எடுத்து வைத்து இருந்தோம். சித்திப் பொண்ணு இது வரை ஊட்டி பார்த்தது இல்லை என்று சொல்லவும், வெள்ளி இரவு 7 ஆம் தேதி கோயமுத்தூருக்கு ஸ்பெஷல் ட்ரையின் என்ற செய்தியினை பார்த்ததும் கோயம்புத்தூருக்கு டிக்கெட் போட்டு குற்றாலம் ட்ரிப்பினை கேன்சல் செய்தோம். கூட்டம் இல்லாத ஊட்டி பார்க்க மிக அழகாக இருந்தது. ஒரு நாள் மட்டும் கொஞ்சம் மழை. மற்ற மூன்று நாட்களும் அழகு. கோத்தகிரி+ஊட்டியில் நம்ம கூட்டத்துடன் லூட்டி தான். என் கணவரின் நண்பர் டாக்டர்.விஷ்ணு மோகன் அவரின் ஃப்ரெண்ட்ஸ்களுக்காக கோத்தகிரியில் கட்டி வைத்து இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் 4 நாட்களும் டேரா போட்டோம்.

பைக்காரா படகு பயணம் மிக குளிராய் இருந்தது.
 

பைக்காராவிலும் இப்படி தண்ணீர் ஓடிக் கொண்டு இருந்தது.

 


மிக அருமையான ஊட்டி பொட்டானிக்கல கார்டன்...

கோத்தகிரியில் உள்ள கொடநாட்டில் அம்மாவின் தேயிலை தோட்டம்.. வேன் டிரைவர் சொன்னார் என்று வேலி போட்ட அந்த தோட்டத்தில் கதவு திறந்து இருக்கவே உள்ளே நுழைந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டு இருக்கும் போது இரு வாட்ச்மேன்கள் வந்து இதன் உள்ளே அனுமதி இல்லாமல் நுழைய கூடாது என்று சொல்லவும் போங்கடா இங்கே தேயிலை தோட்டத்திற்கா பஞ்சம் என்று வெளியேறினோம்.


அப்படியே கொடநாடு வியூ பாய்ண்ட் போனோம்.

பவானி ஆறும், டேமும், வீரப்பன் நடமாடிய காடும் அங்கிருந்து தெரிகிறது.

அங்கிருந்து திரும்பும் போது பைசன்கள் காட்சி கொடுத்தனர்.