Tuesday, September 22, 2009

அமுதா இது உனக்கு தேவையா???


மலேஷியாவில் லங்காவி என்னும் தீவிற்கு போன போது அங்கு இருக்கும் பீச்சில் சிவனே என்று என்னவருடன் உட்கார்ந்து போக வர இருந்த ஜோடிகளை ஆன்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த போது ஹனிமூனுக்கு வந்திருந்த ஒரு இளம் ஹிந்தி ஜோடி நேராக என்னிடம் வந்து தங்களை சில ஃபோட்டாக்கள் எடுத்து தரும்படி கேட்டுக் கொள்ள நானும் அழகாய் எடுத்துக் கொடுத்தேன். அழகான் ஜோடி அதனால் ஃபோட்டாவும் அழகாய் தான் இருக்கும்.

அத்தோடு விட்டிருக்கலாம்.விதி யாரை விட்டது. கடலில் போட்டிங் போனீர்களா என்று நான் கேட்க அவர்கள் water bike,parasailing, என்று அனைத்தும் போனோம். நல்லா இருந்தது நீங்கள் போகலையா என்று கேட்டார்கள். ஸ்விம்மிங் தெரியாது அதனால் போகலை என்று சொல்ல ..ஓ, அதெல்லாம் ஒன்றும் தெரிய வேண்டாம். டோண்ட் மிஸ் திஸ் சான்ஸ் என்று சொல்லிவிட்டு மிக கட்டாய படுத்தி விட்டு சென்றார்கள். ஆசை யாரை விட்டது.

இதுவே வயசாகி விட்டது. இன்னொரு பிறவி உண்டா இல்லையா தெரியவில்லை. இந்த சான்ஸை மிஸ் செய்ய கூடாது.எனவே parasailing போக வேண்டியது தான் என நான் மட்டும் முடிவு செய்து விட்டேன். என்னவர் மொட்டை மாடிக்கு போனாலே தலை சுத்தும் கேஸ். எனக்கோ லிப்ட்டில் ஏறினாலே எப்பவாவது தலை சுத்தும்.

சரி சுத்துறது சுத்தட்டும் என்று ஏழுக் கொண்டலுவாடாவினை நினைத்துக் கொண்டு parasailor-டம் பேரம் பேசி (பேரம் பேசலைனா தமிழ்நாட்டுக்கு இழுக்கு) அவர் சொன்னதிற்கெல்லாம்(பாஷை தெரியாமல்) குத்து மதிப்பாய் புரிந்துக் கொண்டு லைஃப் ஜாக்கெட்டெல்லாம் போட்டுக் கொண்டு ரெடியானேன். என்னவர் அப்பாடி தொல்லை நம்மை விட்டு தொலைந்தது என்ற படி நிம்மதியாக மற்ற ஜோடிகளை வேடிக்கைப் பார்க்க தொடங்கினார். நானா விடுவேன்.. நான் பறப்பதை அழகாய் படமும் வீடியோவும் எடுக்கும் படி அவரிடம் ஆர்டர் போட்டுக் கொண்டு இருக்கும் போதே என் இடுப்பை சுற்றி பெல்டும் ஒரு கயிறு சுற்ற பட்டது ஒரு புறம் பாராசூட்டிலும், மறு புறம் ஒரு போட்டிலும் நடுவில் நானும். ஃபுல்லா வீடியோ எடுங்கப்பா என்று என்னவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் இழுத்து செல்ல பட்டேன். கொஞ்ச தூரம் நான் பீச் மணலில் ஓடினேன், ஓடினேன், பீச்சின் ஓரத்திற்கே ஓடினேன். ஓடும் போது எதற்கோ தடுக்கி விழுந்து என் முழங்காலில் கொஞ்சம் வலியுடன் தான் ஓடினேன் ..காலில் தண்ணீர் தட்டுபடும் முன் மேலே இழுத்துச் செல்லப் பட்டேன். முன்னிருக்கும் கயிறு ஒரு போட்டுடன் கட்டப் பட்டிருக்கிறது அது ஸ்பீடு எடுத்தவுடன் நாம் மேலே செல்கிறோம்.

ஓ, இது என்ன எனக்கு முதலில் வயிற்றில் வலி இல்லையே, இப்ப வலிக்கிறதே, கையை எப்படி வைத்து கொள்ள என்று கேட்கவில்லையே, இப்படியே உயர்த்தி பிடித்து கொள்ளவா இல்லை நார்மலாகவா, கையை எடுத்தால் விழுந்து விடுவோமா, கீழே பார்த்தால் தண்ணீர், தண்ணீர், இங்கே இருந்து விழுந்தால் ரொம்ப ஆழத்திற்கு போய் விடுவோமோ, காற்று ஏன் இப்படி சத்தம் போடுகின்றது, பீச்சில் யாரெல்லாம் இருக்கிறார்கள், நம்மை பார்த்து யாராவது சிரிக்கிறார்களா, சிரிக்கட்டும் கீழே வந்து கவனித்துக் கொள்ளலாம், நான் ஒரு பெல்டில் உட்கார்ந்து இருக்கிறேனா இல்லை தொங்கி கொண்டு இருக்கிறேனா?? என்னவர் பீச்சில் இருக்கிறாரா..இல்லை இது தான் சாக்கு என்று சரக்கு வாங்க எஸ்கேப்பா, (அங்கே சரக்கு எல்லாம் மலிவோ மலிவு, வாங்கணும் என்று சொல்லிட்டு இருந்தார்) ஃப்ளைட் பிடிக்க எஸ்கேப்பா.. இத்தைனையும் மீறி அமுதா இது உனக்கு தேவையா??? எஸ்கலேட்டரில் ஏறவே ஆயிரம் முறை யோசிக்கும் உனக்கு இது தேவையா என்று இருந்தது.

ஆனால், மறக்கவே முடியாத இன்னொரு முறை போகவே ஆசை வராத ஒரு எக்ஸ்பீரியன்ஸ்..கொஞ்ச நேரம் சென்ற பின் பீச்சில் இருப்பவர்கள் சிலர் பச்சை துணியை ஆட்டி ஆட்டி கத்தி கத்தி சைகை காண்பிக்க நான் என் வலது கைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிகப்பு ரிப்பன் கட்டப்பட்டிருக்கும் ஒரு கயிறை பலம் கொண்ட மட்டும் காற்றை எதிர்த்து இழுக்க, இழுக்க ஹையா பீச்சிற்கு பக்கமாய் இறங்க ஆரம்பித்தேன்,..ஓடி வந்து கொஞசமாய் கொஞ்சமாய் ஓடி ஸ்டடியாய் நிற்க என் parasailing பயணம் இனிதே முடிந்தது. parasailing owner--என்னை good, good என்று மிக பாராட்டினார். ஏனெனில், நிறைய பேர் அவர் கூறும் இன்ஸ்ட்ரெக்‌ஷனை கவனிக்காமல் நேராய் கடலில் போய் விழுந்து வாரி சுருட்டி மண்ணும் தண்ணீருமாய் முகமெல்லாம் பேஸ்தடித்து வந்தார்கள். பாராசூட் தண்ணீரில் நனைந்தால், அந்த துணி காய்ந்து அடுத்து போவதற்கு நேரமாகும். என்னவர் முகம் கொஞ்சம் வருத்ததில் இருந்த மாதிரி தெரிந்தது( நான் திரும்பி வந்ததாலா!)

9 comments:

நன்மனம் said...

//....ஆனால், மறக்கவே முடியாத இன்னொரு முறை போகவே ஆசை வராத ஒரு எக்ஸ்பீரியன்ஸ்......//

:-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

சுவாரசியமும் கொஞ்சம் நகைச்சுவையும் கலந்து நல்லாவே இருக்கு உங்க எக்ஸ்பீரியன்ஸ்

வல்லிசிம்ஹன் said...

ரொம்பத் தேவை.ஆனா சிகப்புக் கயிறைச் சரியான நேரத்தில நீங்க இழுத்ததுதான்
சூப்பர்.

அ. நம்பி said...

//என்னவர் முகம் கொஞ்சம் வருத்ததில் இருந்த மாதிரி தெரிந்தது( நான் திரும்பி வந்ததாலா!)//

அப்படி எல்லாம் இருக்காது; இருக்காது என்று நம்புங்கள்!

எப்போது மலேசியாவுக்கு வந்தீர்கள் அம்மா?

எங்கள் நாடு அழகிய நாடு; அதிலும் லங்காவியின் அழகைச் சொல்லி விளக்குதல் கடினம்.பார்த்தால்தான் தெரியும்.

கிளியனூர் இஸ்மத் said...

உங்கள் அனுபவம் ரொம்ப அருமையாக இருக்கு....நானும் என்னவளுடன் லங்காவி போனேங்க...அவங்களும் ஏத்திவிட ரொம்ப ஆசைப்பட்டாங்க(சனியன் தொலையட்டுமேன்னு) நான் போகலையே.... நீ வேணும்னாப்போன்னு(இனியாவது நிம்மதியா இருக்கலாம்னு) ரொம்ப உசாரா இருந்துட்டேன்....

க.பாலாசி said...

//இல்லை இது தான் சாக்கு என்று சரக்கு வாங்க எஸ்கேப்பா, (அங்கே சரக்கு எல்லாம் மலிவோ மலிவு, வாங்கணும் என்று சொல்லிட்டு இருந்தார்) //

பறந்துகிட்டு இருக்கும்போது எங்க நம்ம புருஷன் சந்தோஷமா இருந்துடுவாரோன்னு உங்களுக்கு கவலை இருந்திருக்கு..குட் இப்படித்தான் இருக்கணும்...(பாவம் உங்க வீட்டுகாரர்)

நல்லாருக்கு உங்க அனுபவப்பதிவு....சில இடங்களில் வார்த்தை ஜாலம் பலிச்சிடுகிறது....

அமுதா கிருஷ்ணா said...

நம்பி சார்..2009 மே-ஜூனில் மலேஷியா வந்தோம்...இஸ்மத் சார் உங்களுடைய பதிவில் இந்த அனுபவம் அதான் வரவில்லையா??நன்றி பாலாஜி சார்..
நன்றி நன்மனம், வர்ஷனி அம்மா,வல்லி சிம்ஹன்..

துபாய் ராஜா said...

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பத்த்த்த்த்த்த்த்தான் தைரியம் உங்களுக்கு..... :))

தமிழ் அமுதன் said...

அனுபவம்...! சொன்னவிதம் சுவாரஸ்யம்...!