Tuesday, June 15, 2010

தமிழ்நாட்டு அம்மாக்கள் (1950,60களில்)

அம்மிக்கல்,ஆட்டுக்கல்,அருவாமனை,அண்டா,குண்டா,விளக்குமாறு...பயப்படாதீங்க மக்களே! அப்போ அம்மாக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் வீட்டில் பயன்படுத்திய கருவிகளை தான் ஒரு லிஸ்ட் போட்டேன். காலையில் எழுந்து வீட்டு வாசலினை சுத்தப்படுத்தி கோலம் போடுவதில் ஆரம்பிக்கும் உழைப்பு அய்யோடா எழுதவே மலைப்பாய் இருக்கே.

நாத்தனார்கள்,ஓர்படிகள்,மதினிகள்,அண்ணி,பெரிய பாட்டி,சின்னப்பாட்டி, மாமியார்,மாமனார் கொழுந்தனார்,மச்சினர்,கணவனின் ஒண்ணுவிட்ட சித்தப்பா,அந்த அம்மா பெத்த மகராசன்கள்,மகராசிகள்..வயக்காடு வேலைக்கு வரும் ஆட்கள் அல்லது அப்பாவின் கடையில் வேலை பார்க்கும் ஆட்கள் என்று அப்படி இப்படி என்று தினம் தினம் 25 பேருக்கு வடித்துக் கொட்டணும். ஒவ்வொருவரும் அன்று தான் புதியதாய் சாப்பாட்டை பார்த்ததை போல் சாப்பிடுவார்கள்.

வீடு என்று ஒன்று இருக்கும். ஆனால்,வசதி என்று ஒன்றும் இருக்காது.பெரிய திண்ணையும்,பெரியதாய் ஹாலும், எலி பொறி மாதிரி ஒன்று இரண்டு ரூம்களும் சாமான்கள் அடைத்து இருக்கும். பெட்ரூமா அப்படினா? அப்புறம் எப்படி இத்தனை பிள்ளைகள்? கடவுள் தந்தது மூச்..குறைந்தது ஐந்து முதல் 10 வரை பிள்ளைகள் இருக்கும்.அப்புறம் குறை பிரசவம், பிறந்து ஜன்னியால் இறந்தது, அம்மையால் போனது என ஒரு நான்கு வேறு தனியாய் லிஸ்ட் போடலாம்.

காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணிவரை ஓய்வு இல்லாமல் பம்பரமாய் சுத்துவார்கள்.எது சமைத்தாலும் அப்பாக்கு என்று எடுத்து வைப்பார்கள். நாத்தனார்களை தன் மகள் மாதிரி பார்த்து கொள்வார்கள். வாய்க்கு ருசியாய் சமைக்கவே பிறந்தவர்கள் மாதிரி மாய்ந்து மாய்ந்து சமைப்பார்கள்.எண்ணெய் வைத்த தலை முடியினை சாட்டை மாதிரி சடை பின்னி நிறைய பூ வைத்து,மஞ்சள் பூசிய முகமும்,குங்குமம் வச்ச நெத்தியும், மூக்கு குத்தாத அம்மாக்கள் குறைவு.கொழுந்தனார்,மாமானார்களை நேரில் பர்த்து பேச மாட்டார்கள். மாமானார் வீட்டில் நடக்கும் போது உட்காரமாட்டார்கள்.

கீழே உட்கார்ந்து மோர் கடைவது,வடாம் இடுவது,பூக் கட்டுவது,பெண்களுக்கு தலை பின்னுவது,எப்பவும் கை எதாவது வேலை செய்து கொண்டே இருக்கும். கருப்பு உளுந்து ஊறவைத்து அதை தினம் அரை மணிநேரம் கழுவி பின் அதை ஆட்டுரலில் ஆட்டி வைப்பது மதிய நேரத்தில் வேலை. எப்பவாவது ரேடியோவில் தொடர் நாடகம் கேட்பது உண்டு வீட்டு ஆம்பிளைகள் இல்லாத நேரத்தில். நல்ல நாட்களுக்கு குடும்பத்துடன் கோயில் போவது தான் ஒரே ஒரு அவுட்டிங். அடுத்த வீட்டு அம்மாக்களுடன் அரட்டை அதுவும் ஆண் பிள்ளைகள் இல்லாத நேரத்தில் தான். அதிகம் படிக்கவில்லை ஐந்தாவது அல்லது எட்டாவது உடன் படிப்பினை நிறுத்தி இருப்பர்.(அப்போது வயதுக்கு வந்ததால்). .

எம்.ஜி.ஆர், பிடித்தாலும் வெளியில் சொல்ல முடியாது.சிவாஜி ரொம்ப பிடிக்கும் என சொல்லி கொள்ளலாம்.சாவித்ரி,சரோஜா தேவி,அஞ்சலி தேவி பிடிக்கும்.ஆனால், அவர்கள் போல் மெல்லிய சேலைகள் கட்ட முடியாது.வாத்து,தாமரை பூ,அன்னம் டாலர் செயினும்,காதில் பெரிய தோடும்,காசு மாலையும்,ரெட்டை வட செயினும் அம்மாக்கள் போடுவார்கள்.எப்பவும் சேலை மட்டும் தான் உடை.

தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட கைவைத்தியம் செய்து கொள்வார்.தன் தேவைகளை கணவரிடம் கேட்க தெரியாது.கணவர்களோ அதை விட மோசம்.சின்ன வயதில் கல்யாணம் செய்து இருப்பார். தன் மனைவி மற்றவர்கள் முன்னாடி தன்னுடன் பேசுவதையே விரும்ப மாட்டார்.பேசவே பேசாத அப்பா செயலில் மட்டும் கருத்து இல்லைனா எப்படி 10 பிள்ளைகள்!!!தன் அப்பா அம்மா பேச்சு தான் தாரக மந்திரம்.வாங்கும் சம்பளத்தினை அப்படியே தங்கள் அப்பாக்களிடம் கொடுத்து விட்டு தினம் 1 ரூபாய் தன் கைசெலவிற்கு வாங்கி போகும் அசடுகள்.

ஆனாலும் அம்மாக்கள் சந்தோஷமாய் இருந்தார்கள்.எப்படி என்று தான் தெரியவில்லை. வீட்டு வேலை செய்வதை கஷ்டமாய் நினைக்கவில்லை. அடிமை போல் வாழ்கிறோம் என்று நினைத்தது இல்லை. இப்படி தான் இது தான் வாழ்க்கை என்று இருந்தார்கள். இந்த 50’,60’ க்களின் அம்மாக்கள் இப்பொழுது சில வீடுகளில் ஃபோட்டோக்களிலும், பல வீடுகளில் பாட்டிகள் ஆகவும் மாறி இருப்பார்கள்.முதியோர் இல்லத்திலும் இருப்பார்கள். அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தவர்கள் தங்களுக்கும் ஒரு இல்லத்தினை இப்போதே ரிசர்வ் செய்து வைக்கவும்.பின்னாடி தேவை படும்..

14 comments:

Vidhya Chandrasekaran said...

நாம இப்போ??!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான் சின்ன வயசா இருக்கும்போது எங்க வீடும் இப்படித்தான் இருந்தது. அருமையா எழுதி இருக்கீங்க, நல்ல நடை!

கொல்லான் said...

//அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தவர்கள் தங்களுக்கும் ஒரு இல்லத்தினை இப்போதே ரிசர்வ் செய்து வைக்கவும்.பின்னாடி தேவை படும்..//
மிகச் சரியான வார்த்தை.

Anonymous said...

எங்க அம்மா அப்பா எல்லாம் தனிக்குடித்தனம் தான். :)

விக்னேஷ்வரி said...

ரொம்பக் கவனிச்சு எழுதிருக்கீங்க. நல்லாருக்கு அமுதா.

அமுதா கிருஷ்ணா said...

இப்போ அம்மாக்களையும் எழுதணும் வித்யா..
நிறைய தமிழ்வீடுகள் இப்படிதான் ராமசாமி,,
நன்றி கொல்லான்..
நன்றி சின்ன அம்மிணி,விக்னேஷ்வரி..

பனித்துளி சங்கர் said...

வார்த்தைகளின் ரசனை மாறாத எழுத்து நடை . நல்ல எழுதி இருகிறீகள் . ரசித்தேன் . பகிர்வுக்கு நன்றி

ஜோதிஜி said...

ஐயோ என்ன எழுதுவதுன்னு தெரியலைங்க. என்னுடைய எங்களுடைய தொடக்க கூட்டுக்குடுத்தன வாழ்க்கையை மறுபடியும் நேரில் பார்த்தது போல் உங்களுடைய இயல்பான எழுத்து நடை. அவஸ்யம் சென்ற வருடம் ஜுலை ஆகஸ்ட் மாத பதிவுகளை சமயம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். http://texlords.wordpress.com

நீங்கள் சொல்லி உள்ள அதே கேள்வியை இன்றும் அம்மாவிடம் கேட்டுக்கொண்டே தான் இருக்கின்றேன்.

இத்தனை பேருக்கு ஆக்கிப்போட்டு எப்படியம்மா சந்தோஷமாயிருந்தாய்?

கேட்கும் ஒவ்வொரு முறையும் மனைவி பின்னால் போய் விடுகிறாள்?

அமுதா கிருஷ்ணா said...

நன்றி சங்கர்..ஜோதிஜி

R.Gopi said...

அட...

எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கே...

கூடவே நன்கு கவனித்து எழுதி இருப்பதும்...

வாழ்த்துக்கள் அமுதா...

goma said...

நல்லா இருக்கே....இல்லாம எப்படி நம்ம நெல்லை தந்த முல்லையாச்சே..கேக்கணுமா?

”தளிர் சுரேஷ்” said...

அருமையான நினைவுகள்! வலைச்சரத்தில் உங்கள் பதிவு அறிமுகம் ஆகியுள்ளது வாழ்த்துக்கள்!

ஹுஸைனம்மா said...

இத எப்படி மிஸ் பண்ணேன்? ஆமா, நானும் யோசிப்பதுண்டு. எங்க அம்மா வீடும் இப்படித்தான் இருந்துது. இப்போ நான் நாலு பேருக்கு சமைக்கும்போதே மூச்சு வாங்குது. ஆனா, அப்ப உள்ளவங்களுக்கு உடலும் உறுதியா இருந்துது, உதவிக்கு ஆட்களும் ஏராளம் இருந்தாங்க. கலப்படமில்லா உணவு, காற்று, தண்ணீர், மருந்தும்கூட... அப்போ. இப்போ...??!!

Anonymous said...

very humorous style of writing.touched.it reveals the bloggers keen observation and her concern over elders.congrats...