Monday, June 07, 2010

எப்படி இருக்க என் அருமை மனைவியே???

காவ்யா பத்தாவது படிக்கும் போது துரத்த ஆரம்பித்தது,காலேஜ் முதல் வருடம் படிக்கும் போது தான் என்னுடைய லவ்வை ஓகே சொன்னாள் காவ்யா.ஆனால், என் அம்மா என்னுடைய காதலுக்கு மறுப்பு தெரிவிக்கவே அவர்கள் சம்மததிற்கு அடுத்த 4 வருடங்கள் காத்து இருக்க வேண்டி இருந்தது. அதற்குள் காவ்யா முதுகலை பட்டமும் பெற்று ஒரு வருடமும் ஓடி விட்டது. காதலிக்க ஆரம்பித்து 10 வருடங்கள் கழித்து தான் காவ்யாவினை திருமணம் முடிக்க முடிந்தது.

மிக மிக அருமையாக எங்கள் திருமண வாழ்க்கை சென்றது. அடுத்த வருடமே எனக்கு ஒரு மகள் பிறந்தாள். மகளின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது என் மனைவி இரண்டாவது முறையாக கருவுற்று இருந்தது தெரிந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியினை கொடுத்தது. நான் செய்து வந்த பிஸினெஸூம் ஓகோ என்று இருக்க என் மனைவி அவள் உள்ளூரில் இருக்கும் தன் தாய் வீட்டிற்கு சென்று வர ஒரு விலை உயர்ந்த கார் பரிசளித்தேன். வீட்டில் அவளுக்கு ஒத்தாசையாக இருக்க இரண்டு வேலையாட்கள் நியமித்தேன். மிக பெரிய வீட்டினை அவள் இஷ்டத்திற்கு உள் அலங்காரம் செய்து தருவித்தேன். பட்டும், நகையும் போதும் போதும் என்று வாங்கி கொடுத்தேன். அவளுடைய தேவை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தேன்.

பிஸினெஸ் விஷயமாக ஊருக்கு செல்லும் போதெல்லாம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை போனில் பேச வேண்டும் என் மனைவிக்கு. அப்படியே பகல் பொழுதில் செய்தேன்.
என் அம்மாவிற்கு தனி வீடு, என் மனைவிற்கு தனி வீடு என்று தனி தனியே அனைத்து வசதிகளும் செய்து தந்தேன். என் மனைவி இரண்டாவது குழந்தை வயிற்றில் 4 மாதமாக இருக்கும் போது என் ஃப்ரெண்டு ஒருவர் கார் ஓட்ட சென்னையில் இருந்து பிஸினெஸை முடித்து விட்டு இரவு 9 மணிக்கு என் சொந்த ஊரினை நோக்கி பயணம் செய்துக் கொண்டு இருந்தேன்.

கார் நன்கு தான் போய் கொண்டு இருந்தது. தாம்பரம் வரும் போது என் காவ்யாவிற்கு ஒரு முறை போன் செய்து மகள் தூங்கி விட்டாளா? காலையில் 4 அல்லது 5 மணிக்கு வந்து விடுவேன் என்று சொன்னேன். மதுராந்தகம் செல்லும் போது திடீரென்று கார் ரோடை விட்டு ஓரத்தில் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. கார் போன ஸ்பீடில் ஒரு மூன்று முறை பல்டி அடித்தது தான் தெரியும். 32 வயதான என்னை எமன் வந்து அழைத்த போது வர மாட்டேன் என்று தான் சொன்னேன். ஆனால், கட்டாயம் வர வேண்டும் என்று என்னை அழைத்துக் கொண்டான் நான் மறுக்க மறுக்க அப்படியே என்னை அள்ளிக் கொண்டான். கார் ஓட்டி கொண்டு வந்த என் நண்பனை சில நிமிடங்களில் காணவில்லை.

என் உடம்பை காரை உடைத்து எடுத்த போலீஸ்காரர்கள் ஒரு காயமும் இல்லாமல் இருந்த என் உடம்பை பார்த்து அசந்து போனார்கள். என் நண்பனுக்கு காலில் பலத்த அடி என்றும் செங்கற்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்து வந்த ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினார்கள். என் உடம்பில் ஒரு காயமோ, இரத்தமோ இல்லை. எமனிடம் என்னை திரும்ப என் உடம்பிற்குள் புக அனுமதி கேட்டு மன்றாடினேன். ஒத்துக் கொள்ளவில்லை. என் சட்டையிலிருந்து இருந்து செல் போனையும், மற்றும் பணத்தினையும் எடுத்த போலீஸ் சென்னையில் இருக்கும் என் மாமவினை அழைத்து விஷயம் சொன்னார்கள். என்னை அப்படியே மதுராந்தகம் அரசு மருத்தவமனை மார்ச்சுவரியில் போட்டு விட்டார்கள். அப்போது இரவு 1 மணி.

என் மாமா வந்து யார் யாரையோ பிடித்து காலையில் என் மார்பில் மட்டும் ஒரு கட் செய்து கொஞ்சம் தையல் போட்டு விட்டு என் சொந்தம் வரும் வரையில் வெறும் தரையில் என் உடலை போட்டு விட்டார்கள்.பணத்தினை போலீசார் என் மாமாவிடம் ஒப்படைத்த போது அவர் பெரும் குரல் எடுத்து அழுது விட்டார். காலையில் என் சொந்த ஊருக்கு என்னை கொண்டு செல்ல சரியான ஆம்புலன்ஸ் அன்று ஞாயிறு என்பதால் கிடைக்காமல் மார்ச்சுவரியில் கிடந்தேன். காலை ஒரு 11 மணிக்கு என் அருமை மனைவியும் என் அம்மாவும் ஓடி வந்தார்கள். என் மனைவியிடம் நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உள்ளேன் என்று சொல்லி கூட்டி வந்தார்கள் போல. அழுது வீங்கிய கண்களுடன் ராத்திரி சரியாக தூங்காத கண்களுடன், தொந்தரவு செய்துக் கொண்டு இருந்த என் ஒரு வயது மகளை அணைத்த படி,வயிற்றில் 4 மாத கருவுடன் அப்படியே வாசல் படியில் அமர்ந்து இருந்தாள். என்னை தூக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றும் போது தான் நான் இறந்து விட்டேன் என்று உணர்ந்து அழக்கூட தெரியாமல் வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வேண்டாம் வேறு சாதி என்று மறுத்தவளை நான் தான் துரத்தி துரத்தி காதலித்து இப்படி இந்த நிலமைக்கு கொண்டு வந்தேன். கடவுள் இருக்கிறாரா? யாருக்கும் ஒரு தீங்கும் செய்யவில்லையே. என்னிடம் பணிசெய்த ஒரு 100 பணியாட்களுக்கும் ஒரு நண்பன் போலவே தான் நான் இருந்தேன். என் அம்மாவிற்கு நான் ஒரே பையன். இரண்டு சகோதரிகளுக்கு ஊரே மெச்ச திருமணம் செய்வித்தேன். அம்மாவிற்கு நல்ல பையனாய், சகோதரிகளுக்கு நல்ல சகோதரனாய் இருந்தேன்.

என் அருமை மனைவியே நான் உன்னை விட்டு போன 6 மாததில் இன்னொரு பெண்ணையும் பெற்று எடுத்து உன் 27 வயதில் தனியே இரண்டு பெண் குழந்தைகளுடன் எப்படி இருக்கிறாய்???

4 comments:

ஜோதிஜி said...

ஏதாவது நமக்கு முடிந்த அளவில் அடுத்தவர்களுக்கு உதவி செய்யனும் என்ற எண்ணம் எப்பொழுதும் மனதில்...போறப்போ என்னத்தக் கொண்டுப் போகப் போகிறோம்....

வேறு என்ன வார்த்தைகள் வேண்டும்?? இந்த குழந்தைப்படத்துக்கே ஒவ்வொரு முறையும் உள்ளே வர வேண்டும் போல் இருக்கு.

அமுதா கிருஷ்ணா said...

மிக்க நன்றி ஜோதிஜி...

Raj said...


எப்படி இருக்க என் அருமை thambi ???"

seems to my own brother

அமுதா கிருஷ்ணா said...

ஓ இதுவும் ஒரு உண்மை கதை தான் ராஜ்...