இந்த வருடம் கோடையில் காஷ்மீர் போகலாம் என்று முடிவு செய்ததும்.அதை பற்றி தெரிந்தவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தேன். காஷ்மீரா வாழ்ந்து முடித்தது போதுமா,இன்னும் வாழ ஆசை இல்லையா என்றே சிலர் பயமுறுத்தினார்கள்.விசாரணையின் முடிவில் ஃப்ரெண்டு மிஸ்டர். பொன்ராஜ் குடும்பத்துடன் போன வருடம் காஷ்மீர் போய்விட்டு நல்லபடியாய் ஊருக்கு திரும்பி இருந்ததை அறிந்து, நாங்கள் 13 பேர் நம்பி காஷ்மீருக்கு கிளம்பினோம்.
சென்னை டு ஆக்ரா: ஏப்ரல் 24-ல் ஏழைகளின் ரதத்தில் (கரீப் ரத் முழு ஏசி ட்ரையின்) காலை 6 மணிக்கு 13 பேர் அடங்கிய படை கிளம்பியது. மறுநாள் காலை 8 மணிக்கு ஆக்ரா போனதும் தாஜ்மகாலை சுட்டு எரித்த வெயிலில் வியர்க்க வியக்க பார்த்து விட்டு,ஆக்ரா ஃபோர்ட்டை பரக்க பரக்க சுற்றி விட்டு அன்று மாலை 4 மணிக்கு அம்ரிட்சர் என்ற அமிர்தசரஸிற்கு ட்ரையின் ஏறினோம்.
ஆக்ரா டு அமிர்தசரஸ்: மறுநாள் காலை அமிர்தசரஸ் சென்றோம். பொற்கோயில்,ஜாலியன் வாலாபாக்,வாகா பார்டர் பார்த்து விட்டு அன்றைய தினம் அர்த்த ராத்திரியில் ஜம்முவிற்கு ஜம்முன்னு ட்ரையின் ஏறினோம்.
காலையில் ஜம்முவினை பார்த்து விட்டு என் படை குழுவினர் என்னை முறைத்தனர். முறைப்பிற்கு காரணம் சென்னையில் எங்களுடன் கிளம்பிய வெயில் இன்னும் எங்களுடன் பயணம் செய்தது தான். மனம் தளர கூடாது மக்களே, வெயில் நம்மை விட்டு நிச்சயம் இன்று மதியத்திற்குள் விலகும் என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் அறிவிப்பு செய்து விட்டு ஸ்ரீநகர் நம்மை ஏமாற்றாது என்று சமாதானம் செய்து கொண்டு ஏற்பாடு செய்து இருந்த விங்கர் காரில் துண்டு போட்டு சீட் பிடித்து அமர்ந்தோம். சும்மாவாச்சும் வாந்தி வருதுன்னு ஒரு பிட்டினை போட்டு முன்னாடி டிரைவருக்கு பக்கத்து சீட்டினை நான் பிடித்துக் கொண்டேன்.
ஸ்ரீநகர் நோக்கி படை முன்னேற தொடங்கியது. குழந்தைகளுக்கு கந்தசாமியின் மியாவ் மியாவ் பாட்டு பிடிக்கும் என்று ஒரு 10 தடவையாவது போட்டிருப்போம்.கடைசியில் அது தவறு என்று உணர்ந்தோம். ஏனெனில்,காரின் ஹிந்தி டிரைவருக்கு அந்த பாட்டு மிக பிடித்துப் போய் நாங்களும் சிடியும் கதற கதற அந்த பாட்டை பின்னாட்களில் அவர் அடிக்கடி வைத்துக் கொண்டே இருந்தார்.அவரை கார் எடுக்க கூப்பிடவே மியாவ் மியாவ் என்று தான் நம் படையினர் அழைத்தனர்.
பாட்னிடாப் என்ற இடம் வரும் வரை மிஸ்டர் வெயில் நம்மை விட்டு அகலாமல் இருந்தார். 120 கி.மீ சென்றதும் மெல்லிய குளிர் எட்டி பார்க்க துவங்கியது. மதியம் சாப்பாட்டு கடையை முடித்து எப்ப வரும் ஸ்ரீநகர் என்று ஆவலுடன் எதிர் பாத்து இருந்தோம். பனி மலை ஒன்று கூட தெரியவில்லை. பச்சை மலைகள் சுற்றிலும். ஒரு பக்கம் தாவி தாவி தாவி நதி ஓடிக் கொண்டு இருந்தது. நம் மக்கள் பனியினை காண்பிக்காவிட்டால் என்னை வண்டியினை விட்டு இறக்கி விடும் மூடில் இருந்தனர். அதோ பனி இதோ ஐஸ் என்று இதை காண்பித்தால் ஒருவரும் நம்பவேயில்லை.
பனி பெய்து ரொம்ப நாளானால் இப்படி தான் உறைந்து போகும் என்று சொன்னால் அது உருகி தான் போகும் இப்படி உறைந்து போகாது என்று ஒரே அடம். சரி என்று கண்களை கூர்மை ஆக்கி மிக அலார்ட்டாக அமர்ந்து கொண்டேன். எங்காவது மலை உச்சியில் பனி தெரிகிறதா அதை மக்களுக்கு அறிமுகம் படுத்தலாமே என்று. நடுவில் 3 கி.மீட்டருக்கு ஜவஹர் டன்னல் வந்தது. எதிரில் வரும் வாகங்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்து நம்மை விடுகிறார்கள். அதை விட்டு வெளியில் வந்தோமோ இல்லையோ எதிரில் தெரிந்த மலை எல்லாம் உச்சியில் பனி படர்ந்து காணப்பட்டது. நான் ஐஸ் ஐஸ்,பனி பனி என்று கத்திய கத்தில், பட்டிக்காட்டான் மிட்டாய் பார்த்த மாதிரி இருந்திருக்குமோ என்னவோ மியாவிற்கு அப்படி ஒரு சிரிப்பு. காரை நிறுத்தி விட்டார். எல்லோரும் இறங்கி கொஞ்ச நேரம் ரசித்தோம்.ஐயோ சான்சே இல்லை,கொடுத்த காசிற்கு ஐஸ் பார்த்தாச்சு..
ஜம்முவிலிருந்து 8 மணிநேர பயணத்திற்கு பிறகு இரவு 8 மணிக்கு என் படையினை ஸ்ரீநகரில் நாங்கள் தங்க போகும் இந்த போட் ஹவுஸில் கொண்டு நலத்துடன் மியாவ் சேர்த்தார்.
இன்னும் வரும்.....
1 comment:
படங்களுடன் பயண பதிவு அருமை.
Post a Comment