Thursday, September 24, 2009

ஆட்டோகிராஃப்....

என் டீன் ஏஜ் தொடக்கத்தில் பக்கத்து வீட்டிற்கு பக்கத்து வீட்டில்(ஒரு வீடு தள்ளி) என்னோடு ஸ்கூல் மேட் சங்கரி வீடு. அவர்கள் வீட்டில் பெரிய மழழை பட்டாளமே இருக்கும். மூன்று அண்ணன் தம்பிகள் ஒரே குடும்பமாக இருந்தார்கள்.கமிஷன் மண்டி வைத்து இருந்தார்கள்.

எல்லா சாயங்காலமும், விடுமுறை நாள்களிலும் நான் அங்கே தான் பழியாய் கிடப்பேன். கல்லா - மண்ணா, சீட்டுக்கட்டு, தாயம், ஒளிந்து விளையாடுதல், கண்ணாமூச்சி, டான்ஸ் ப்ராக்டிஸ், ஊஞ்சல், கேரம், இன்னும் பெயர் மறந்து போன அனைத்து விளையாட்டும் அங்கே தான். சங்கரியின் கோமதிஅத்தை தான் பார்த்த எல்லா படங்களின் கதைகளையும் சொல்லி விடுவார், நேரில் பார்த்த மாதிரி இருக்கும். பேய் கதை எல்லாம் கேட்டால் தனியே வீட்டிற்கு போக பயமாய் இருக்கும். பெரிய முற்றம் வைத்த வீடு அது.

சாயங்காலம் 6 மணிக்கு மேலே வீட்டிற்கு வந்தால் அம்மா கதவை பூட்டி விடுவார்கள். ஏன் தான் 6 மணி ஆகுதுன்னு இருக்கும். போ உன் அப்பா வந்ததும் வா என்று அம்மா பிடிவாதமாய் சொல்லி விடுவார்கள். வாரம் இரண்டு நாள் ஆவது வாசலிலே நின்று கொண்டு இருப்பேன்.திரும்ப சங்கரி வீடு போக இருட்டு பயம். அப்பா வந்ததும் எல்லாம் நீங்கள் கொடுக்கும் செல்லம் என்று அம்மா அப்பாவை திட்டிக் கொண்டே கதவு திறந்து விடுவார்.ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, ஆச்சு பத்தாவது க்ளாஸும் வந்தாச்சு. சங்கரியின் தம்பி, அண்ண்ன் எல்லாம் எனக்கும் அப்படியே.

அம்மா போகாதே போகாதே என்று திட்டி கொண்டே இருப்பார்கள். ஆனாலும், கொஞ்சம் போவதை குறைத்தேனே தவிர சுத்தமாய் கட் செய்யவில்லை. அப்பா சின்ன பெண் தானே என்று பெர்மிஷன் கொடுத்து விடுவார். பத்தாவது படிக்கும் போது தமிழ் கோனார் உரை அப்பா வாங்கி வர மறந்து மறந்து போனார். எனவே, வருட ஆரம்பத்தில் தமிழ் கோனார் உரை சங்கரியின் அண்ணனிடம் வாங்கி வாங்கி படித்து கொள்வேன்.

சேகர் என்ற அந்த அண்ணன் எனக்கு ஒரு வருடம் சீனியர்.ஆனால்,வயது அதிகம் இருக்கும். தமிழ், இங்கிலிஷில் பத்தாவது பெயில் ஆகி அக்டோபரில் மறுபடியும் தேர்வு எழுத படிக்கிற மாதிரி பாவனை செய்துக் கொண்டு இருந்தான். அதனால், அக்டோபருக்கு பிறகு அந்த கோனார் உரையை எனக்கே தந்து விடுவதாய் அந்த வீட்டில் சொல்லப்பட்டது. ஓசியில் ஒரு நோட்ஸ் கிடைக்கப் போவதாய் நானும் சரி என்று சொல்லி விட்டேன்.

ஆகஸ்டில் ஒரு மாத பரீட்சை வந்தது. சங்கரி வீட்டிற்கு ஓடினேன் நோட்ஸிற்காக. அவசரமாய் வெளியில் வந்த சேகர் என் கையில் வாசலிலேயே நோட்ஸை கொடுத்து விட்டு ஒரு வித்தியாசமான் லுக் விட்டுட்டு போனான். வீட்டிற்கு வந்து நோட்ஸை திறந்தால் 10 பக்கத்திற்கு ஒரு பக்கம் மேலே “I LOVE YOU AMUDHA" என்று பென்சிலால் எழுதப் பட்டிருக்கு. ஆயிரம் தாமரை மொட்டுகளே ---ன்னு எனக்கு பாட்டெல்லாம் வரலை. அழுகையாய் வந்தது. என்னோட பெயரை Amutha- னு “T" போட்டு தான் எழுதுவேன். இந்த “D" எனக்கு பிடிக்கவே இல்லை.. முதலில் இதுதான் தோன்றியது.

அப்புறம் தான் அடடா, இப்படியா மேட்டர்னு புரிந்தது. படிக்கவே இல்லை. என்னடா செய்யலாம் என்று மனசுக்குள் ஒரே கேள்வி. மறு நாள் பஸ்ஸிற்கு நிற்கும் போது சைக்கிளில் அங்கும் இங்கும் போய் கொண்டே இருந்தான் சேகர். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த உடன் சங்கரியிடம் விஷயத்தை போட்டு கொடுத்து விட்டு, அழி லப்பர் எடுத்து அனைத்தையும் அழித்து விட்டு கோனாருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு பத்திரமாய் அவளிடம் கொடுத்து விட்டேன். பாவம், அவனுக்கு வீட்டில் என்ன அர்ச்சனை விழுந்ததோ.அவனோடு பேசுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன். அடிக்கடி நான் +2 படிக்கும் வரை பார்த்து கொண்டோம். ஒரு முறைப்போடு சரி. அவன் கூட்டமாய் பசங்களோடு வந்தால் பயமாய் இருக்கும். அப்புறம் வீடு மாற்றி விட்டோம்.

ஆனால், அதன் பிறகு அம்மாவே விஷேஷத்திற்கு பலகாரம் கொடுக்க போக சொன்னால் கூட அந்த வீட்டிற்கு போகவே மாட்டேன். கொஞ்ச நாளில் அடுத்த தெரு செல்வியிடம் அவளும் என்னோட கிளாஸே அந்த கோனார் நோட்ஸை பார்த்தேன். ஆனால், அவளிடம் இசகு பிசகாய் கேள்வி எதுவும் கேட்கவில்லை..என்னை முதலில் லவ்விய அந்த சேகரை அந்த பெயரில் யாராவது, எங்காவது பார்க்கும் போது, கேட்கும் போது நினைத்து கொள்வேன்.

5 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

சரியான தலைப்பு தான்

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம்...சின்ன வயசு ஞாபகங்கள் நல்லா தொகுத்து இருக்கிறீர்கள் பாவம் இப்போ அவன் இருந்திருந்தா நாய் சேகர்ன்னு பேர் வச்சுருப்பீங்களோ

:)

:)

:)

யாழினி said...

Ha...Ha...Ha... Nice Autograph :))

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு. பொதுவாக நம் சூழலில் எல்லாப் பெண்களுக்கும் இதுபோன்ற ஒரு ஃஆட்டோகிராஃப் நிச்சயம் இருக்கும். பகிர்ந்ததற்கு நன்றி. உங்கள் எழுத்தின் நடை சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி வர்ஷினி அம்மா,வசந்த், யாழினி, சரவணக்குமார்.,.